பேராசிரியர் நா.வானமாமலையின் முதன்மை மாணாக்கர்களுள் ஒருவரும், சிறந்த நாட்டார் வழக்காற்றியல் ஆய்வறிஞருமான பேராசிரியர் ஆ.சிவசுப்பிர மணியன் தற்கால நாவல் இலக்கியத்தின் மீது கொண்டிருக்கும் ஆர்வத்தைப் புலப்படுத்தும் விதமாக ‘இனவரைவியலும் தமிழ் நாவலும்’ என்ற இந்த நூல் வெளிவந்துள்ளது. மானுடவியலின் ஒரு பிரிவாக வளர்ந்திருக்கும் இனவரைவியல், குறிப்பிட்ட மக்கட் பிரிவினரின் சமுதாய அமைப்பை, கலாசாரத்தை அறிவியலடிப்படையில் விவரிக்கின்ற ஒரு துறையாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவான இத்துறை, மக்களின் தோற்றம் மற்றும் புற இயற்கைச் சூழல் நிலை, சமுதாய நிலை (பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் முதலானவை), அறிவு மற்றும் கலாசார நிலை ஆகியவற்றை ஆராய்வதில் கவனம் செலுத்தியது. கள ஆய்வையும் அனுபவ வாதத்தையும் அடிப்படையாகக் கொண்ட இன வரைவியல், காலனியத் தோற்றகாலப் பயணியர் மற்றும் மிஷனரிமார்களின் எழுத்துக்களினூடே வளர்ந்தது. இத்துறை, சமூக பண்பாட்டு மானுடவியல் துறை சார்ந்தது என்றாலும் அவ்வறிவுத்துறை எல்லையைக் கடந்து சமூகவியல், வரலாறு, தகவல், தொடர்பியல், மொழியியல், பண்பாட்டு ஆய்வியல், நாட்டார் வழக்காற்றியல் ஆகிய பல துறைகளில் பயன்படுத்தப்படுகிற பல்வேறு அறிவுப் புலங்களைக் கடக்கிற ஓர் ஆய்வு அணுகுமுறையாக விளங்குகிறது.

அண்மைக்கால நாவல் இலக்கியத் திறனாய்வில் நாட்டார் வாழ்வியல் அனுபவங்களை மையப்படுத்தி எழுதப்பட்ட நாவல்களை ‘இனவரைவியல் நாவல்’ என வரையறுக்கும் போக்கு காணப்படுகிறது. குறிப்பிட்ட மக்கள் குழுவினரின் இனவரைவியல் கூறுகளை வாழ்வியல் அனுபவங்களுடன் இணைந்து ஒரு நாவலை உருவாக்குகிற பொழுது அது ‘இன வரைவியல் நாவலாகிறது. இன வரைவியல் நாவல், இயல்புநெறிவாதம், யதார்த்தவாதம் ஆகிய இலக்கியப் படைப்பாக்க முறைகளுடன் தொடர் புடையது. ஆங்கிலத்தில் டேனியல் டிஃபோ, கென்கெஸே, பால் ஜெஃபரி சான், நெல்சன் அல்க்ரன் ஆகியோர் உடைய சில நாவல்கள் இனவரைவியல் நாவல்களாக அடையாளப் படுத்தப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவினரின் வாழ்க்கையை, வேறொரு சமூகப் பிரிவைச் சார்ந்த படைப்பாளி உற்றுநோக்கி நாவலாக்கலாம். அவ்வாறின்றி, தான் வாழ்கின்ற, தான் சார்ந்த சமூகத்தின் வாழ்வியல் அனுபவங்களை இனவரைவியல் நோக்குடன் ஒரு படைப் பாளி நாவலாக்குகின்றபொழுது அது ‘தன்வரலாற்று இனவரைவியல் நாவல்’ ஆகின்றது.

தமிழில் இனவரைவியலோடு நாவல் இலக்கியத்தைத் தொடர்புபடுத்தி முதன்முதலில் எழுதியவர் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் ஆவார். இவருடைய ‘இனவரை வியலும் தமிழ் நாவலும்’ என்ற கட்டுரை நாவலின் ஆராய்ச்சி 1995 ஜனவரி இதழில் வெளிவந்தது. விரிவு படுத்தப்பட்ட இக்கட்டுரையினை நூலின் முதல் கட்டுரை யாக்கி ஸ்ரீதரகணேசன், சிவகாமி, பாமா, சு.வெங்கடேசன் ஈழத்து நாவலாசிரியர் செ.யோகநாதன் ஆகியோரது நாவல்கள் மீதான பல்வேறு இதழ்களில் வந்த எட்டு விமர்சனக் கட்டுரைகளை அதன் பின்னர் வைத்து இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இன வரைவியலும் தமிழ் நாவலும் என்கிற முதன்மைக் கட்டுரை ‘இன வரைவியல்’ ஆய்வு முறையியலை மிக விரிவான முறையில் அறிமுகம் செய்கிறது. மட்டுமின்றி இன வரைவியலுக்கும் இலக்கியத் திற்குமான உறவை எடுத்துக்காட்டுகின்ற பொழுது தொல்காப்பியரின் திணைக் கோட்பாட்டோடு (முதல், கரு, உரி) இனவரைவியல் கூறுகளைப் பொருத்திக் காட்டியுள்ளமை மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.

தொடக்ககால நாவலாசிரியர்களான இராஜம் ஐயர், மாதவையா தொடங்கி எம்.வி. வெங்கட்ராம், நீலபத்ம நாபன், கி.ராஜநாராயணன், இராஜம் கிருஷ்ணன், ஹெப்சிபாஜேசுதாசன், சி.எம். முத்து, சிவகாமி அண்மைக் கால நாவலாசிரியர்கள் சூரங்குடி முத்தானந்தம் (நல்லம்மா) எஸ்.அர்ஷியா (ஏழரை பங்காளி வகையறா) வரையிலுமான நாவலாசிரியர்களின் நாவல்களில் காணப்படும் இன வரைவியல் கூறுகளை இக்கட்டுரை மிக விரிவாக எடுத்துக் காட்டுகின்றது. இனவரைவியலுக்கும் நாவலுக்குமான தொடர்பு, இனவரைவியல் நாவலாக்கமுறை, இன வரைவியல் நாவலுக்கும் வட்டார நாவலுக்குமான தொடர்புகள், இனைவரைவியல் நாவலின் மொழி என இன வரைவியல் நாவல் குறித்த பல்வேறு அம்சங்களை இக்கட்டுரையில் பேராசிரியர் விவாதித்துள்ளார்.

‘பாமாவின் தன் வரலாற்று நாவல்கள்’ என்ற கட்டுரை பாமாவின் கருக்கு, சங்கதி ஆகிய இரண்டு நாவல்களும் நாவலாசிரியரின் சொந்த அனுபவங்களின் அடிப்படையில் எவ்வாறு தலித்திய நாவல்களாகக் கட்டமைக்கப் பட்டுள்ளன என்பதை விளக்குகின்றது. “தலித்துகளின் அனுபவங்களை, இன்ப துன்பங்களை, வாழ்க்கை பிரச்சினைகளை, கலகக் குரலை இந்நாவல்கள் வெளிப் படுத்துவதால், இவை நாவல் என்ற எல்லையைத் தாண்டி சமூக வரலாறாகவும், சமூக ஆவணமாகவும் திகழ்கின்றன” என்கிற மதிப்பீட்டையும் பேராசிரியர் வழங்கியுள்ளார். இதே போன்று சிவகாமியின் ‘பழையன கழிதலும்’ நாவலில் தலித் விடுதலையென்பது அனுதாபங்கள், சீர்திருத்தங்கள், சலுகைகள் என்ற நிலைகளை எல்லாம் தாண்டி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான் என்ற கருத் தோட்டம் இடம்பெற்றுள்ளமையை மிக நுட்பமாகச் சுட்டிக்காட்டுகின்றார்.

ஸ்ரீதரகணேசனின் வாங்கல், சந்தி ஆகிய இரண்டு நாவல்கள் குறித்த தனித்தனியான விமர்சன கட்டுரைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. தூத்துக்குடி பெரிய தாழைப் பரதவ சமூகத்திற்குள் நிலவும் உள்முரண்பாடு களையும் பரதவர் ஓ நாடார், பரதவர் ஓ பறையர் என்ற வேறுபட்ட சமூகங்களின் புறமுரண்பாடுகளையும் அதன் விளைவாக நிகழ்ந்த போராட்டங்களையும் ‘வாங்கல்’ நாவல் பதிவு செய்துள்ள விதத்தினையும் சமூகவியல் நோக்கில் பேராசிரியர் வாசிப்புச் செய்துள்ளார். சந்தி நாவலில் முன்னுரையாக அமைந்த இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரை, தமிழில் தலித் நாவல் உருவான வரலாற்றை முன்பகுதியில் விளக்குகிறது. பின்னர் தூத்துக்குடி நகரின் கடந்தகால சமூக நிகழ்வுகளோடு

தலித் மக்கள் இயங்கிய வரலாற்றினை ‘சந்தி’ நாவல் பதிவு செய்துள்ள விதத்தினை ஆராய்ந்துள்ளார். வகை மாதிரியான பாத்திரப் படைப்பும் புறவயமான யதார்த்த உலகச் சித்திரிப்பும் இந்த நாவலை யதார்த்த நாவல் வரிசையில் நிறுத்தியிருப்பதாகப் பேராசிரியர் மதிப்பிடுகிறார்.

அறிவழகனின் ‘கழிசடை’ நாவல், பூமணியின் ‘பிறகு’, மாற்குவின் ‘யாத்திரை’, பெருமாள் முருகனின் ‘கூள’ மாதாரி என்கிற வரிசையில் அருந்ததியரின் இனவரை வியலைப் பதிவு செய்யும் நாவலாக அமைந்துள்ளது. ஆயின் ஏனைய மூன்று நாவல்கள் கிராமப்புறத்து அருந்ததியர் வாழ்வைப் பதிவு செய்ய, ‘கழிசடை’ நகராட்சித் துப்புரவுத் தொழிலாளிகளாய்ப் பணிபுரியும் அருந்ததியர் வாழ்வை முதன் முதலாகப் பதிவு செய்து உள்ளதாகக் கூறும் பேராசிரியர், இந்நாவல் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான பரிவுணர்ச்சியை ஏற்படுத்துகிறதன்றி எதிர்க் குரலைச் சித்திரிக்கவில்லையென மதிப்பிடுகிறார்.

மேற்காட்டிய ஆறு தலித் நாவல்களைப் பற்றிய மதிப்பீட்டிற்குப் பின், ஈழத்து நாவலாசிரியர் செ.யோக நாதனின் ‘கிட்டி’, “நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே...” ஆகிய இரண்டு நாவல்களைப் பற்றிய விமர்சனக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. ‘கிட்டி’ நாவல், குரு விக்கல் பகுதியில் வாழும் பழங்குடிகளின் இனவரைவியலை வெளிப்படுத்தும் ஆவணமாக விளங்குவதோடு சுரண்டல் சமூகத்தின் முரணை எடுத்துக்காட்டுவதாக பேராசிரியர் விளக்குகின்றார். 514 பக்கங்களைக் கொண்ட ‘நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே’, என்னும் நாவல், 19ஆம் நூற்நாண்டு யாழ்ப்பாணத் தமிழ்ச் சமூகத்தின் இனவரைவியலை மிக நுணுக்கமாகப் பதிவு செய்துள்ளதை விளக்கும் பேராசிரியர், ஈழத்து வரலாற்று நாவல்களுள் இதற்குத் தனியிடமுண்டென மதிப்பிடுகிறார்.

பல்வேறு விமர்சனங்களுக்குட்பட்ட சு.வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’ நாவல் பற்றிய விமர்சனக் கட்டுரை இந்நூலின் இறுதியில் இடம் பெற்றுள்ளது. மாலிக்காபூர் படையெடுப்பு தொடங்கி, நாயக்கராட்சியின் தோற்றம், கிறித்தவத்தின் வருகை, காலனிய ஆதிக்கம் எனத் தொடர்ந்து மதுரையில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளை மையப்படுத்தி அக்காலச் சமூக கலாசார அரசியல் வரலாற்றை மாறுபட்ட கோணத்தில் வரலாற்று நாவலாக்கியிருக்கும் விதத்தினை விளக்கும் பேராசிரியர், தாதனூர் கள்ளர் குறித்த இனவரைவியல் செய்திகள் நாவல் முழுவதும் விரவிக் கிடக்கும் விதத்தினையும் எடுத்துக் காட்டுகின்றார். மேலும், ‘காலனியத்தின் தாக்குதலுக்கு ஆளான ஒரு மக்கள் பிரிவு மீதான தற்சார்புநிலையை நாவலில் ஆசிரியர் இழையோட விட்டுள்ளார்’ எனவும் மதிப்பிடுகின்றார்.

இவ்வாறாக பெரும் வாசகத்திரளின் கவனத்திற்குட்படாத தலித் நாவல்களையும், ஈழத்து நாவல்களையும் இனவரைவியல் நோக்கில் இந்நூல் நமக்கு அறிமுகப்படுத்துகின்றது. நாவல் இலக்கியத்தைக் கதைக்கரு, பாத்திரப் படைப்பு, பின்னணி என்ற வழக்கமான கல்விப்புலச் சார்பான வாசிப்புக்குட் படுத்தாமல், சமூகவியல் அடிப்படை சார்ந்தும் மார்க்சிய அடிப்படை சார்ந்தும் நாவலை ‘சமூக ஆவணமாக’ கருதி மதிப்பிடும் போக்கு இந்நூலில் மேலோங்கியிருக்கின்றது. இனவரைவியல் ஆய்வு முறை அடிப்படையில் தமிழ் நாவலை பார்ப்பதற்கான ஒரு சாளரத்தை இந்நூல் திறந்துவிட்டிருக்கிறது. இச்சாளரத்தின் வழி காண்பதற்கு எல்லையற்ற தமிழ் நாவல் பெரு வெளி காத்துக் கொண்டு இருக்கிறது.

‘இனவரைவியலும் தமிழ் நாவலும்’

பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்

பரிசல் வெளியீடு,

சென்னை, டிசம்பர் 2009

பக்கம் : 112, விலை : ரூ.60.00

Pin It