திருநெல்வேலி மாவட்டம் சாம்பூர் வடகரை யிலிருந்து கிளாங்காடு ஜமதக்னீஸ்வரர் கோவிலுக்குப் போகும் வழியில் ஆலமரங்கள் நிறைந்த சாலை ஓரத்தில் சதிக்கல் ஒன்றைப் பார்த்து காரை நிறுத்தச் சொன்னார் செந்தீ நடராசன். அந்தக் கல் வழிபடு தெய்வமாகவும் இருந்தது.

சதிக்கல் தெய்வத்தை அடுத்த பகுதியில் ஆலமரச் சோலையின் நடுவே ஒரு கோவில் இருந்தது. கோவில் தெய்வத்தின் பெயர் பிணமாலை சூடும் பெருமாள். பெயரைக் கேட்டதும் முழுக்கவும் இது நாட்டார் தெய்வம் என்று கணிக்கக்கூடாது என்பதற்கு இது உதாரணம். உண்மையில் இக்கோவிலின் முக்கிய தெய்வம் விஷ்ணு, கல்விக் கிரகம்; அமர்ந்த கோலம்; ஜடாமகுடம்; ஒருகை அபய முத்திரை காட்டுகிறது. இன்னொரு கையில் கதை; முகத்தில் பெரிய மீசை உண்டு.

இந்தத் தெய்வம் விஷ்ணுவாகப் புனையப்பட்ட கதை உருவான காலம் தெரியவில்லை. ஆனால் இதற்கென்று ஒரு நிகழ்ச்சியைக் கதையாகக் கூறுகின்றனர்.

திருவிதாங்கூர் நாட்டின் கீழே களக்காட்டுப் பகுதி அடங்கி இருந்த காலம். திருவிதாங்கூர் அரச குடும்பத்து இளவரசி ஒருத்தி சாம்பூர் வடகரை ஊருக்கு வந்துவிட்டு களக்காட்டுக்குப் போய்க் கொண்டிருந்தாள். ஏதோ காரணத்தால் வழியில் இறந்துவிட்டாள். உடன் வந்த அரசன் அவள் உடலை அந்தப் பகுதியிலேயே அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தான். எல்லாம் முறைப்படி நடந்து கொண்டிருந்தபோது சித்தன் ஒருவன் வந்தான். அவன் திருவரங்கத்திலிருந்து குடிபெயர்ந்து வருவதாகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

அந்தச் சித்தன் “இறந்த பெண்ணை எழுப்பித் தருகிறேன்; அவளை எனக்கு மணம் செய்விக்க வேண்டும்; முடியுமா? இது நிபந்தனை” என்றான். அரசன் யோசிக்கவில்லை; சம்மதித்துவிட்டான். சித்தன் அலங்காரங்களுடன் மயானக் குழியில் கிடந்த பெண்ணை எழுப்பி உட்கார வைத்தான். பிறகு அந்தப் பிணத்துக்கு மணமாலை சூட்டினான். சித்தனுக்கு மனைவியாக அவள் ஆன பின்பு மந்திர நீரை அவள் மேல் தெளித்தான். உடனே அந்தப் பெண் எழுந்து நின்றாள். சித்தன் இன்று முதல் இவள் பூரணவல்லி என அழைக்கப்படுவாள் என்றான்.

இதன் பிறகு சித்தன் பூரணவல்லியை அழைத்துக் கொண்டு மாயமாகிவிட்டான். அப்போதுதான் சித்தனாக வந்தவன் திருவரங்கத்திலிருந்து குடி பெயர்ந்து வந்த ரங்கன் எனத் தெரிந்தது. இச்செய்தி மணமாலை சூடும் பெருமாள் கதையில் முனைப்புடன் கூறப்படுகிறது. ரங்கனின் குடிப்பெயர்ச்சி தென் மாவட்டங்களில் பரவலாக வழங்குகிறது.

ஒடுக்கப்பட்ட மக்கள் சிலரிடம் வழக்கில் உள்ள திருவரங்கன் காஞ்சிபுரத்திலிருந்து குடிபெயர்ந்த கதை குருபரம்பரைப் பிரபாவம், திவ்ய சூரி சரிதை போன்ற வைஷ்ணவ சரித்திரங்களில் இல்லை. ஆனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நாட்டார் தெய்வக் கோவில் களுடன் தொடர்புடைய ஒன்பது வில்லிசைப் பாடல்களில் வருகிறது.

இந்தக் கதைப் பாடல்களில் பெருமாள் சாமி கதை1 (பதிப்பு 1961, 1971, 1992) குருகேந்திரன் கதை (1991) பத்திரகாளி கதை (1980) முப்பிடாகி கதை (1995) ஆகியன அச்சில் வந்துவிட்டன. சோமாண்டி கதை, பூதத்தான் கதை, சாபாலச்சாரி கதை, வண்டி மலையன் கதை ஆகியன ஏட்டு வடிவில் உள்ளன. கருமறத்தி கதை வாய்மொழியாக உள்ளது. இக் கதைகளில் பெருமாள் சாமி கதை, சோமாண்டி கதை, பூதத்தாள் கதை ஆகியன ஸ்ரீரங்கன் குடிபெயர்ந்த செய்தியை நேரடியாகக் கூறுகின்றன. பிற கதைகளில் இச்செய்தி மேற்கோளாகக் காட்டப் படுகிறது.

இந்தக் கதைகளுக்கு எல்லாம் அடிப்படையான கதை பெருமாள் சாமி கதை. இது பெரும்பாலும் 19 ஆம் நூற்றாண்டில் புனையப்பட்டிருக்கலாம்.2

திருவரங்கம் கோவில் பூசகர்களில் ஒருவன் தர்ம சிந்தனை உடையவனாக இருந்தான். அவனது நேர்மை மற்ற பூசகர்களுக்குப் பிடிக்கவில்லை. அவர்களுக்கு அவன் மேல் பொறாமை வந்தது; அவனை அவர்கள் இம்சித்தார்கள். அதனால் அவன் திருவரங்கத்திலிருந்து தென் தமிழ்ப் பகுதிக்குக் குடிபெயரப் போவதாக முறையிட்டான். ரங்கன் அப்படியானால் நாம் இருவருமே செல்லலாம் என்றார். பூசகரும் ரங்கனும் திருவரங்கம் விட்டு மெல்ல நடந்து திருநெல்வேலிக்கு முதலில் வந்து தங்கினர்.

ரங்கன் தென் மாவட்டங்களில் பயணம் செய்த போது சில ஊர்களில் தங்கி இளைப்பாறினான். அப்போது அந்த ஊர் மக்கள் அவனுக்குப் பெருமாள்சாமி எனப் பெயர் கொடுத்து வழிபாடு நடத்தினர்.3 இறுதியாக அவன் திருவளத்தில் நிலையாகத் தங்கினான்.4 இக்கதை சில மாறுதல் களுடன் சோமாண்டி கதைப் பாடலில் வருகிறது.

கைலைமலையில் வேள்வியில் சங்கிலிபூதம், சேத்திரபாலபூதம், ஈஸ்வரபாலபூதம் என்னும் பூதங்கள் பிறந்தன. கைலைப் பணியாளர்களால் பூசகர்களுக்குச் சாப்பாடு போட்டுக் கட்டுப்படி யாகவில்லை. அதனால் சிவன் மூவரையும் திருவரங்கத்துக்கு அனுப்பிவிட்டான். இந்தச் சமயத்தில்தான் ரங்கன் தென் மாவட்டத்துக்குப் பயணம் செய்யப் புறப்பட்டுக்கொண்டிருந்தான்.

மூன்று பூதங்களும் “நீ எங்கே செல்கிறாய்? நீ இல்லாத இடத்தில் நாங்களும் இருக்கமாட்டோம் எங்களையும் உன்னுடன் அழைத்துச் செல்வாய்” என்றன. ரங்கன் “பூதங்களே என் பக்தன் ஒருவனை இந்த நாட்டு அரசன் விரட்டிவிட்டான். அதனால் தான் நானும் அவனுடன் குடிபெயர்ந்து திருவிதாங் கூருக்குச் செல்கிறேன். என்னுடன் நீங்களும் வரலாம்” என்றான்.5

ரங்கனும் பூதங்களும் மதுரை, திருச்சி எனப் பல தலங்களைக் கடந்து திருக்குறுங்குடி வந்தனர். அப்போது ரங்கன் “நீங்கள் இங்கேயே தங்கிவிடுங்கள்; உங்களை அழைத்துக்கொண்டு திருவனந்தபுரம் செல்ல முடியாது; நீங்கள் அங்கே வந்தால் அவ்வூர் மக்கள் என்னைப் பழிப்பார்கள்” என்றான்.6 அதனால் பூதங்கள் மூன்றும் குறுங்குடி மலையில் குடிகொண்டன. ரங்கன் தன் பயணத்தைத் தொடர்ந்தான்.

அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு நூலில் திருவரங்கம் கோவிலின் பூசைகளின் மாறுபாட்டால் ரங்கன் குடிபெயர்ந்ததாக ஒரு நிகழ்ச்சி வருகிறது.7

தென் மாவட்டங்களில் வாய்மொழியிலும் கதைப் பாடல்களிலும் நாட்டார் வழிபாட்டு முறைகளிலும் காணப்படும் வைணவத் தாக்கத்தின் ஒரு கூறுதான் ரங்கனின் குடிப்பெயர்ச்சி.

பொதுவாக தென் மாவட்ட நாட்டார் தெய்வ வழிபாட்டுக் கூறுகளில் சைவச் சார்பு அதிகம் என்றாலும் வைணவம் தொடர்பான கதைப் பாடல்கள் கிடைத்துள்ளன.8 தென் மாவட்ட நாட்டார் நிகழ்த்து கலைகளில் (எ.கா : தோல் பாவைக்கூத்து, கண்ணன் ஆட்டம், ஒயிலாட்டம்) ராமாயண பாரதத் தாக்கம் உண்டு. 

ராமானுஜர் திருவிதாங்கூருக்கு வந்தார் என்றும், அங்குள்ள வைணவக் கோவில்களின் பூஜை முறைகளை மாற்றியதால் நம்பூதிரிகள் அவரைத் தென் திருவிதாங்கூரில் உள்ள (இன்றைய கன்னியாகுமரி மாவட்டம்) திருவெண் பரிசாரத்து ஊர்ப் பாறையில் (திருப்பதிசாரம்) கிடத்தினர்9 என்றும் அவர் இங்கே சூத்திரர்களையும் சூத்திரர் அல்லாத ஒடுக்கப்பட்ட சாதியினர் சிலரையும் வைணவர்களாக்கினார் என்றும் கூறும் வாய் மொழி மரபுகள் உள்ளன. முப்புரிநூல் அணிந்தவர் (சாத்தியவர்) நூல் அணியாதவர் (சாத்தாதவர்) என்னும் வைணவப் பிரிவும் இக்காலத்தில் ஏற்பட்டது என்பர்.

திருவரங்கத்திலிருந்து தென் மாவட்டத்திற்கு ரங்கன் குடிபெயர்ந்த கதை திருமழிசை ஆழ்வாருடன் தொடர்புடையது.

ஆழ்வார்களில் திருமழிசை ஆழ்வாருக்குத் தனி இடம் உண்டு. இவர் பாமர மக்களின் மனதில் இடம் பிடித்தவர். திருமழிசை என்ற ஊரில் பிறந்தவர்; மலைக்குறவன் ஒருவனால் காட்டில் கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டவர்; இவர் பார்க்கவ மகரிஷிக்கும் கனகாங்கி என்னும் அப்சர அழகிக்கும் பிறந்தவர்; பெற்றோரால் பிறந்த உடனேயே கைவிடப்பட்டவர் என்றும் பல்வேறு கதைகள் இவரைப் பற்றி வழங்குகின்றன. ஆனால் இவரோ “குலங்களாய ஈரிரண்டில் ஒன்றில் பிறந்திலேன்” என்கிறார்.10

திருமழிசை ஆழ்வார் நான்கு வருணத்தில் அடங்காத கீழ்க்குலத்தில் பிறந்தார்; இவர் வளர்ந்த குலமும் ஒடுக்கப்பட்டது என்னும் கதைகள் உள்ளன. இவர் தன் வளர்ப்புத் தந்தையான குறவனின் சாதித் தொழிலைச் செய்தவர்; பல ஊர்களில் அலைந்து திரிந்து அனுபவத்தைத் தேடிக் கொண்டவர். சித்தராகி பேயாழ்வாரைக் கண்டு ஞானம் பெற்று பக்திகாரர் என்னும் பெயரைப் பெற்றவர். முதலாழ்வார்கள் இவரைக் கண்டு உரையாடினர்.11

திருமழிசை ஆழ்வார் தன் குருவான பொய் கையாரின் ஊரான காஞ்சிபுரத்தில் கொஞ்ச நாள் இருந்தார். அங்கே இவருக்கு கணிகண்ணன் என்ற சீடன் இருந்தான்;12 அவன் பாடல் இயற்றுபவன்; காஞ்சிபுரத்தில் ஆழ்வாரின் பாடல்களில் ஈடுபாடு கொண்ட தாசி ஒருத்தி இருந்தாள். அவள் ஆழ்வாரைப் பற்றியும் கணிகண்ணனைப் பற்றியும் காஞ்சிப் பல்லவனிடம் சொன்னாள்.

காஞ்சி அரசன் கணிகண்ணனை அழைத்தான். என்னைப் புகழ்ந்து ஒரு பாட்டுப் பாடும்படி உன் குருவிடம் சொல்வாய் என்றான். கணிகண்ணனோ நானே நாக்கொண்டு மானிடம் பாடமாட்டேன் என் குருநாதர் எப்படிப் பாடுவார் என்றான்.

மன்னனுக்குக் கோபம். உன்னைத் தேசப் பிரஷ்டம் செய்கிறேன் என்றான். கணிகண்ணன் ஆழ்வாரிடம் நடந்த விஷயங்களைச் சொன்னான். அப்படியா செய்தி. நீ இல்லாத ஊர் எனக்கு வேண்டாம் என்றார் திருமழிசை. இருவரும் ஊரைவிட்டுப் பெயர முடிவு செய்தனர். திருமழிசை கோவிலுக்குப் போய், “கணிகண்ணன் போகின்றான்; காமருபூங்கச்சி மணிவண்ணா நீ கிடக்க வேண்டா - துணிவுடைய செந்நாப் புலவனும் செல்கின்றேன்; நீயும் உன்தன் பைந்நாகப்பாய் சுருட்டிக் கொள்” என்று பாடிவிட்டு சீடனைப் பின் தொடர்ந்தார். பெருமாளும் பாயைச் சுருட்டிவிட்டு ஆழ்வாரின் பின்னே நடந்தார். இதைப் பார்த்த பக்தர்களும் ஊரைவிட்டுக் கிளம்ப ஆரம்பித்தனர். மன்னன் இச்செய்தியைக் கேள்விப்பட்டான்; கணிகண்ணனிடம் வந்தான். தன் செயலுக்கு மன்னிப்பு கேட்டான். ஆழ்வார் உடனே,

கணிகண்ணன் போக்கொழிந்தான்; காமருபூங் கச்சி

மணிவண்ணா நீ கிடக்க வேண்டும் - துணிவுடைய

செந்நாப் புலவனும் செல்லொழிந்தேன்; நீயும் உன்தன்

பைந்நாகப் பாய் படுத்துக் கொள்.

என்று பாடிவிட்டுக் காஞ்சிபுரம் திரும்பினார்.

இதன் பின்னர் திருமழிசை ஆழ்வார்

கும்பகோணம் சென்றார். வழியில் பெரும்புவியூர் என்ற ஊரில் தங்கினார். அங்கே இருந்த பிராமணர்கள் இழிகுலத்தவரான இவரைப் பார்த்து ஒதுங்கினார்கள். ஆனால் அவர்களுக்கு வேதங்கள் மறந்தன; ஆழ்வாருக்குச் செய்த அவமரியாதையே அதற்குக் காரணம் எனத் தெரிந்ததும் பிராமணர்கள் திருமழிசையிடம் மன்னிப்பு கேட்டனர். இதன் பின்னர் ஆழ்வார் வேறு பிராமணர்களாலும் துன்புறுத்தப்பட்டார்; அங்கிருந்து கும்பகோணம் சென்றார். அங்கேயே சமாதி ஆனார்.

இப்படியாக இலக்கிய மரபு கூறும் திருமழிசையின் கதையும் நாட்டார் வழக்காற்றுப் பெருமாள் சாமி கதையும் தென் மாவட்டங்களில் பல்வேறு வடிவங்களில் வழங்கின.

திருமழிசை ஆழ்வார் தொடர்பான வைஷ்ணவ மரபு திருமால் காஞ்சிபுரத்திலிருந்து குடியேறியதாகக் கூறும். வாய்மொழி மரபு திருவரங்கத்திலிருந்து குடியேறியதாகக் கூறும். ஆழ்வார்களின் இலக்கிய மரபின்படி அரசனிடம் கோபித்த அடியவருக்காகத் திருமால் குடிபெயருகிறான். அரசன் தவறுக்கு வருந்தியதும் திருமால் மறுபடியும் காஞ்சிபுரத்துக்குப் போய்விடுகிறான். கதைப்பாடல் மரபின்படி திருவரங்கம் பூசாரி கொண்ட மாறுபாட்டால் ஊர் விட்டுப் பெயருகிறான். திருமால் மறுபடியும் திருவரங்கம் திரும்பவில்லை. திருவனந்தபுரத்திலேயே தங்கிவிடுகிறான். திருவரங்கத்தில் இருப்பது திருமாலின் மாயையே.

நாட்டார் மரபின்படி திருமாலின் குடிப் பெயர்ச்சி, வழிபாட்டு முறைகள், தொடர்பான தகவல்கள், கதைகள் எல்லாம் சூத்திரர் அல்லாத சாதியினரிடமே வழங்குகின்றன.

காஞ்சிபுரம், திருவரங்கம் ஆகிய இரு ஊர் களிலிருந்தும் தென் மாவட்டங்களில் குறிப்பாகத் தென் திருவிதாங்கூருக்கு வைணவர்களும் குறுநிலத் தலைவர்களும் பெயர்ந்து வந்ததற்கு வாய்மொழிக் கதைகள் உண்டு.13 இந்தக் குடிப்பெயர்ச்சி அரசியல் சார்பானதல்ல. மதத்தின் உள்பிரிவுகளுக்கிடையே உள்ள மோதலால் (தென் கலை வடகலை சைவ வைணவம்) பெயர்ந்திருக்கின்றனர். இப்படிக் குடிபெயர்ந்தவர்கள் எல்லோருமே சூத்திரர் அல்லாதவர் என்பதுதான் இதில் குறிப்பிடத் தகுந்த செய்தி.

அடிக்குறிப்புகள்

1.     தென் மாவட்டங்களில் திருமால் வழி பாட்டை மையமாகக் கொண்ட கதைப் பாடல்கள் வேறு உள்ளன. இரணிய சம்ஹாரம், கிருஷ்ணசாமி கதை இரண்டும் அச்சில் வந்துள்ளன. இவற்றில் பெருமாள் சாமி கதையின் செல்வாக்கு உண்டு.

2.     அ.கா.பெருமாள், நாஞ்சில் நாட்டு வில்லிசைப் பாடல்கள், அச்சில் வராத பிஎச்டி ஆய்வேடு, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், 1986 ப.86.

3.     பெருமாள் சாமி வழிபாடு கன்னியாகுமரி. தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட சில ஊர்களில் உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டம் இலந்த விளை கிராமத்தில் பெருமாள் சாமிக்குத் தனிக்கோவில் உள்ளது. இக்கோவிலின் தெய்வம் 40செ.மீ. உயரமுள்ள பஞ்சலோகத்தால் ஆனது. இதன் பின் இரு கைகளில் சங்கு சக்கரமும் முன் கைகளில் அபய வரத முத்திரையும் உள்ளன. ஆனால் இதன் வழிபாடு முழுக்க நாட்டார் சமயத் தாக்கம் உடையது. பிராமணர் அல்லாதார் இதற்குப் பூசை செய்கிறார். பங்குனி மாத இறுதியில் இக்கோவிலில் நடக்கும் விழாவில் ஆடு பலி கொடுக்கப்படுகிறது. இதுபோன்று கோவில்கள் வேறு இடங்களிலும் உள்ளன (புல்லு விளை)

4.     திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலின் தலபுராணம் இலுப்பை மரக்காட்டில் குடியிருந்த கிருஷ்ணன் பத்ம நாபனாக உருமாறினான் எனக் கூறும். இது தொடர்பான மலையாள வாய்மொழிக் கதையும் உண்டு.

அனந்தன் காட்டில், கிலுகிலுப்பைத் தோப்பில் புலைச்சி ஒருத்தி விறகு பொறுக்கச் சென்றாள். அப்போது மரங்களின் நடுவே அழகான குழந்தை ஒன்று ஓடி விளையாடுவதைக் கண்டாள். அவள் குழந்தையின் அருகே சென்றாள்; எடுத்து மார்போடு அணைத்தாள். குழந்தை புலைச்சியின் முலையில் வாயை வைத்துப் பாலைக் குடித்தது. புலைச்சியின் முகம் பார்த்துச் சிரித்தது; அவள் குழந்தையைத் தரையில்விட்டாள். உடனே அது 5 தலைப் பாம்பாக மாறியது. புலைச்சி அதைக் கண்டு பயந்து அப்புறம் போனாள்.

இந்த அதிசயத்தைக் கணவனிடம் சொன்னாள் புலைச்சி. அவள் மனைவியை அழைத்துக்கொண்டு அந்த இடம் வந்தான். அங்கே ஒரு சயன படிமத்தைப் பார்த்தான். அவர்கள் அதை வணங்கி விட்டு ஒரு சிரட்டையில் (கொட்டாங்கச்சி) பாலும் சாதமும் படைத்து வழிபட்டனர்.

அன்று இரவு அனந்தங்காட்டுப் பகுதியை ஆண்ட அரசன் கனவு கண்டான். அதில் கிருஷ்ணன் வட தமிழ் நாட்டிலிருந்து அனந்தங்காட்டில் குடியேறி சயனப் பெருமாளாகக் கிடப்பதையும் புலைச்சி வழிபடுவதையும் கண்டான். உடனே அந்த இடத்தை அடையாளம் கண்டு சென்றான். கோவில் கட்டினான்.

கிருஷ்ணனுக்கு முதலில் வழிபாடு செய்த புலைச்சிக்கு வெகுமதி கொடுத்தான்; பயிர் செய்ய நிலம் கொடுத்தான்; அந்த நிலம் புத்தரிக் கண்டம் என்னும் பெயரில் 19 ஆம் நூற்றாண்டு இறுதி வரை வழங்கப்பட்டது. இந்த வயலில் உள்ள நெல்லையே திருவனந்தபுரம் பத்ம நாப சுவாமி கோவில் நிறைக்குக் கொண்டு செல்லும் வழக்கம் இருந்திருக்கிறது. பிற்காலத்தில் இக்கோவில் வில்வமங்கலம் நம்பூதிரியுடன் தொடர்பு கொண்ட பிறகு சில வழக்கங்கள் மாறியிருக்கின்றன.

5.     அச்சில் வராத சோமாண்டி கதையில் வரும் திருவரங்கன் பூதங்களுடன் உரையாடும் வரிகள் கீழ்வருமாறு

பூதங்கள் மாயனைத் தொழுதுமே நிற்க

புகழுடன் மாயன் இனிதாய் இருக்க

பல நாளும் மும்முறை பூசை நடத்தி

பார்ப்பார்கள் தானும் இனிதாயிருக்க

இன்றைய முறை என்முறை என்றொரு மறையோன்

இனிதாகவே பூசை தானுமே செய்ய

தள்ளுண்டு ஒரு கூறு பூசித்த மறையோன்

ராசாவொரு அணிய முரைத்தான்.

--     -- -- --

ராசனுமே என்முறை கேட்கவில்லை

கன்மமிது என்று ஒரு கூறு மறையோன்

ஸ்ரீரங்க நாதருடன் --  -- --

சேவித்து நிற்கிற வேளையிலே மாயன்

செப்புவானந்த மறையவளோடு

தட்சணா பூமியாம் திருவனந்தபுரத்துக்கு

சீக்கிரம் போகிறேன் திடமுடனே வா நீ

அங்கு வந்தால் திருமுன்பு உனக்கு

அடைக்கலம் தருகிறேன் என்று உரைத்து

ஸ்ரீரங்கம் விட்டுத் திருமாலும் போனான்.

6.     சீரான மலை நாட்டிலே திருவனந்தபுர மதிலே

நேராக நான் போறேன்

நீங்கள் அங்கே வந்த துண்டால்

நல்லோர்கள் நமை நகைப்பார்

சோமாண்டி கதை ஒரு

7.     திருவரங்கம் கோவிலின் பூசகர்கள் நெறி முறை தவறினர்; ஒருவன் மட்டும் ஒழுங்காக முறைப்படி பூசை செய்தான். இதனால் அவனை மட்டும் அழைத்துக் கொண்டு ரங்கன் தென் தமிழ் பகுதிக்குக் குடிபெயர்ந்தான் என அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு கூறும்.

8.     தென் தமிழ் மாவட்ட நாட்டார் தெய்வங் களில் மிகப் பெரும்பாலான சிவனிடம் வரம் வாங்கியோ சிவனின் அம்சமாக இருந்தோ வழிபாடு பெறுபவை. இத்தெய்வங்களின் வழிபாட்டுக்

கூறுகளிலும், வழிபாடு தொடர்பான சொற் களிலும் சைவச் சார்பைப் பார்க்கலாம். இப் பகுதியில் நாட்டார் தெய்வங்களின் வழிபாடுகளிலும், நிகழ்த்து கலைப் பாடல்களிலும் வைணவத் தாக்கம் குறைவு. என்றாலும் விஷ்ணு வழிபாட்டில் தீவிர மானவர்களும் உள்ளனர் என்பதற்குச் சில சான்றுகள் கூறமுடியும்.

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டம் புதூர் பஞ்சாயத்தில் உள்ள புதூர் என்ற ஊரில் குருகுல மக்கள் கோவில் உள்ளது. இக் கோவில் குறிப்பிட்ட சில குடும்பத்தினருக்கு உரியது. இக்கோவிலில் உள்ள முக்கிய தெய்வம் திருமால்; ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்ட கோலம். முக்கிய தெய்வம் இருக்கும் அறைச் சுவரில் தருமர், குந்தி, திரௌபதி, திருதுராஷ்டிரன், காந்தாரி, பீமன், அர்ஜுனன் ஆகியோரின் ஓவியங்கள் உள்ளன.

இக்கோவிலின் வழிபாடும் அவை தொடர்பான பிற செய்திகளும் இதை நாட்டார் தெய்வக் கோவிலாகக் காட்டுகின்றன. திருமாலுக்கும் பஞ்ச பாண்டவருக்கும் சாமியாடுகின்றவர் உள்ளனர். இக்கோவில் தொடர்பான வில்லிசைக் கதைப் பாடல் உள்ளது. இதில் பீமனே முக்கிய பாத்திரமாக உள்ளான். வில்லிசை நிகழ்ச்சியில் சாமியின் அருள் கூடுவதற்குப் பாடுகின்ற வாழ்த்துப் பாடலில் காந்தாரி பாண்டவர்களைக் கொல்ல அனுப்பி வைத்த பூமாலை என்ற பெண்ணை பீமன் கவர்ந்து செல்லும் கதை நிகழ்ச்சி பாடப்படும்.

இக்கோவிலுடன் தொடர்புடையவர்கள் தங்களை வட தமிழ் நாட்டிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் என்று கூறுகின்றனர்.

9.     வெங்கடாசலம், திருவாழிமார்பன் (திருப் பதிசாரம் தலபுராணம்) கோட்டாறு, 1912.

10.    குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன்

நலங்களாய நற்கலைகள் நாவிலும் நவின்றிலேன்

புலன் களைந்தும் வென்றிலேன்

 பொறியிலேன் புனிதரின்

இலங்குபாத மன்றிமற்றோர் பற்றிலெனம்

 ஈசனே (திருச்சந்த விருத்தம்)

11.    பூதத்தாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் திருமழிசையாழ்வாரின் சமகாலத்தவர்.

12.    திருமழிசை ஆழ்வாரின் நண்பனின் மகன் கணிகண்ணன் என்ற கதையும் உண்டு. திருமழிசை ஆழ்வார், தன் வீட்டின் முற்றத்தைப் பெருக்கி மெழுகிய கிழவியின் வேண்டுகோளுக்கிணங்கி இளம்பெண்ணாக வரம் கொடுத்தார். இதை அறிந்த காஞ்சி மன்னவன் கணிகண்ணனை அழைத்து தன்னை வாலிபனாக்கும்படி திருமழிசை ஆழ்வாரிடம் சொல்லும்படி கட்டளை இட அவன் மறுத்தான் என்ற கதை உண்டு.

13.    கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டம் இரவிபுதூரில் உள்ள காடராசன் கோவில் தொடர்பான வில்லிசைக் கதை உண்டு. இதில் காஞ்சிபுரத்திலிருந்து தென் திருவிதாங்கூருக்கு வந்த ஒரு குறுநிலத் தலைவன், வேறு சாதிப் பெண்ணை விரும்பியதன் காரணமாகக் கொல்லப் பட்ட நிகழ்ச்சி வருகிறது.

Pin It