தமிழ் அச்சுப் பண்பாடு - தொடர் கட்டுரை – 8

அச்சுப் பண்பாடு உருப்பெறுவதில் பல்வேறு அடிப்படைத் தன்மைகள் செயல்படுகின்றன. ஐரோப்பியப் புத்தொளி மரபால் உருவான இப் பண்பாடு, நமது அச்சுப் பண்பாடாக உருப்பெறுவதில், 1930-1950 இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்தவைகளை நமது புரிதலுக்காகக் கீழ்க்காணும் முறையில் தொகுத்துக் கொள்ளலாம்.

-அச்சு மரபில் உருவான தமிழ் இதழியல் துறை, நிறுவனமாக உருப்பெறும் சூழல் உருவானது.

-முழு நேரமாக எழுத்துத் துறையில் ஈடுபட்டு, புதிய புதிய ஆக்கங்களை நவீனத் தன்மையுடன் உருவாக்குவோர் உருவாயினர்.

-1930களில் உலகம் முழுவதும் உருவான நெருக்கடி சார்ந்து, இரண்டாம் உலகப் போர் உருவான சூழலில், ‘தமிழ் அச்சிடுதல் துறை புதிய பரிமாணங்களை உள்வாங்கிச் செயல்படத் தொடங்கியது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலங்களில் பருவ இதழியல்துறை தமிழில் உருவானது. மாத அளவில் இதழ்களைக் கொண்டு வரத் தொடங்கினர். இவ்விதம் வெளிவந்தவை பெரிதும் சமயம் சார்ந்த உரையாடல்களே இடம் பெற்றன. சமயக் கருத்தாக்கங்களைத் தத்துவம் என்னும் நோக்கத்திலும் பல்வேறு உரையாடல்கள் இவ்விதழ்களில் இடம்பெற்றன. புதிதாக உருவான நிறுவனம் சார்ந்த கல்வி முறை சார்ந்தும் பல்வேறு பருவ இதழ்கள் இக்காலங்களில் உருப்பெற்றன. கிறித்தவச் சமயச் சார்பில் தான் மேற்குறித்த செயல்பாடுகள் விரிவாக நடைபெற்றன. இதனை எதிர்கொள்ள வைதீகச் சமயத்தவர்களும் இவ் வகையான இதழியல் பணியில் இந்நூற்றாண்டில் செயல்பட்டனர். கிறித்தவ சமயம் தொடர்பான இதழ்களே பெரிதும் தொடர்ச்சியாக வந்திருப்பதை அறிகிறோம். 1870 - 1900 என்ற காலப் பகுதியில், மேற்குறித்த வகையில் சுமார் ஐம்பது இதழ்கள் வெளிவந்தன என்று கூறமுடியும். இவ்விதழ்களில் ‘ஜனவிநோதினி’ என்ற இதழ் நீண்ட காலம் வெளி வந்த இதழ். இதில் பல்வேறு வெகுசனப் பண்பாட்டுக் கூறுகள், இதழியல் துறை சார் பண்புகளோடு இடம்பெற்றிருப்பதைக் காண்கிறோம்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இதழியல் பரவலாகும் வாய்ப்பு உருவானது. கிறித்தவ நிறுவனங்கள் உருவாக்கிய பள்ளிக் கூடங்களைப் போலவே, பிரித்தானிய அரசும் பள்ளிக் கூடங்களை உருவாக்கத் தொடங்கியது. எழுத்துப் பயிற்சி பரவலாகும் வாய்ப்பு கூடியது. இதனால் வாசிப்புப் பழக்கம் பரவலாகும் சூழல் உருவானது. விறுவிறுப்புச் சுவையுடன் கதை வாசிக்கும் பழக்கம் உருவானது. இதன் உச்ச வளர்ச்சியாக 1915-1930 இடைப்பட்ட காலங்களில் தமிழில் மிகுதியான மர்ம நாவல்கள் வெளிவந்தன. 1920களில் ‘நாவல் டெப்போக்கள்’ செயல்பட்டு வடுவூர் துரைசாமி அய்யங்கார், ஆரணி குப்புசாமி முதலியார் உருவாக்கிய விவரண முறையில் அமைந்த கதைகளை வெளியிட்டன. 1920களுக்கு முன்பு தமிழில் சுமார் இருபது பெண் எழுத்தாளர்கள் செயல்பட்டனர். இவர்களது ஆக்கங்கள், பெரும் பகுதி நேர்க்கோட்டுக் கதைசொல்லல் மரபில்தான் உருப்பெற்றன. இம்மரபு 1930களில் மடைமாற்றம் பெறத் தொடங்கியது.

1920களின் இறுதிக் காலங்களில், ஐரோப்பிய நாடுகளில் செயல்பட்ட, செய்தி நிறுவனங்களின் (சூநறள ஹபநnஉல) தொடர்புகள் இந்தியச்சூழலில், குறிப்பாகத் தமிழ்ச்சூழலில் ஏற்பட்டன. தந்தி வழிச் செய்திகள் பெறும் வாய்ப்பு உருவானது. இவ்வகையான செய்தி நிறுவனம் ஒன்றில் திரு சா. சதானந்தன் என்பவர் பம்பாயில் பணிபுரிந்தார். ‘விவேக சிந்தாமணி’ இதழை இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடத்திய திரு. சாமிநாத அய்யரின் மகன் இவர். செய்தி நிறுவனத்தில் பணியாற்றும் அனுபவப் பின்புலத்துடன், தமிழில் இதழ்களை நடத்தும் திட்டங்களைநடைமுறைப்படுத்தியவர் இவர். ‘தினமணி’, ‘மணிக்கொடி’, ‘தமிழ்நாடு’, ‘பாரத தேவி’ ஆகிய பல்வேறு இதழ்களுக்கும் (1930-1945) இவருக்கும் தொடர்புண்டு. இதழியல் துறை ‘கம்பெனிச் சட்டங்கள்’ என்னும் நடை முறைகளை மேற்கொண்டு, பணியாளர்களை வேலைக்கு அமர்த்திச் செயல்பட்டனர். மாத ஊதியம் பெறும் பத்திரிகைத்துறைப் பணியாளர்கள் உருவாயினர். இதழியலில் விளம்பரம் என்பது தொழிலாக வடிவம் பெற்றது. விளம்பரம் சேகரிக்கும் முகவர்கள் (ஹபநவேள) உருவாயினர். இவ்வகையில் இதழியல்துறை நிறுவனமாக உருப்பெற்றது. ஒரு நிறுவனம் பல இதழ்களை நடத்தும் சங்கிலித் தொடர் இதழியல் முறை தமிழில் உருவானது.

1930களில் உருவான மேற்குறித்த தன்மைகள், தமிழ் அச்சுப் பண்பாட்டில் பல்வேறு புதிய போக்குகள் உருப்பெற வழிகண்டதாகக் கூற முடியும். இவ்விதம் உருவான தமிழ் இதழியல் வெறும் வாசிப்பு நோக்கியதாகச் செயல்பட வில்லை. மாறாகப் பல்வேறு புதிய ஆக்கங்கள், இதழியலுக்குத் தேவைப்பட்டன. வீட்டில் இருந்து கதைவாசிக்கும் பிரிவினர் உருவாயினர். குறிப்பிட்ட சாதிப் பிரிவினர் அதிகம் வாசிக்கும் பழக்கம் உடையவர்களாக உருப்பெற்றனர். அச்சுவழிப் பிரிவினர் மொழி மற்றும் நம்பிக்கைகள் சார்ந்து இதழ் ஆக்கங்கள் உருவாயின. இத்தன்மை தமிழ் அச்சுப்பண்பாட்டில் புதியது. இதழியல் நிறுவனங்களை நடத்திய முதலாளிகளில் ஒருவராகிய எஸ்.எஸ். வாசன் அவர்களின் செயல்பாடுகளை அறிவதின் மூலம், தமிழில் புதிதாக உருவான நிறுவனம் சார்ந்த இதழியல் பண்பாட்டைப் புரிந்துகொள்ளமுடியும். இவ்விதம் உருவான அச்சுப் பண்பாடு, தமிழ் வெகுசன இதழியல் அச்சுப் பண்பாடாக இன்றுவரை தொடர்கிறது என்று கூறமுடியும்.

1920களின் இறுதிக் காலங்களில் நுகர்வுப் பண்பாடு வெகுசனத் தளத்தில் விரிவானது. அழகு சாதனப் பொருட்கள் புதிது புதிதாக அறிமுகமாயின. பெண்கள் பயன்படுத்தும் கூந்தல் தைலங்கள் மற்றும் உடல்நலம் சார்ந்த மருந்துகள் என்று அறிமுகப்படுத்தப்பட்டன. இவ்வகையில் வெளி வரும் பொருட்களின் பட்டியல் ஒன்றை நுகர் வோருக்கு அனுப்பி, அதில் அவர் விரும்பும் பொருள் தேர்வு செய்யப்பட்டது. இவ்விதம் பட்டியலை அனுப்பி நுகர்வுப்பொருட்களை விற்பனை செய்யும் முகவர்கள் உருவாயினர். திரு. எஸ். எஸ். வாசன் இவ்வகையான முகவராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அச்சு ஊடகத்தின் மூலம், இவ்வகையான பட்டியலை வெளிப் படுத்துவது எளிதாகியது. எனவே, இதழ்களில் இவ்வகையான பட்டியலை வெளியிட்டு, நுகர்வுப் பொருள் வணிகம் நிகழத் தொடங்கியது. இவ் வணிகத்தில் ஈடுபட்டிருந்த வாசன், ‘ஆனந்த விகடன்’ என்னும் இதழை வைத்தீஸ்வர அய்யர் என்பவரிடமிருந்து 1928இல் வாங்கினார். பின்னர் அவ்விதழ் 1930களில், வெகுசன வாசிப்புப் பண்பாட்டுக் கட்டமைக்கும் இதழாக வடிவம் பெற்றது. மனிதர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதாகக் காட்டும், அவ்விதழின் படம், வெகுசனப் பண்பை அடிப்படையாகக் கொண்ட வாசிப்புப் பழக்கத்திற்கு வித்திட்டது.

குறிப்பிட்ட சாதி மொழி மற்றும் அச்சாதியின் பண்புகளைக் காட்டும் கோட்டுருவப் படங்கள் மற்றும் கருத்துப் படங்கள் ஆகியவற்றை வடிவமைத்து அவ்விதழ் செயல்படத் தொடங்கியது. 1930களில் தமிழ் அச்சுப் பண்பாட்டின் புதிய தன்மை இதுவாகும். இத்தன்மையிலிருந்தே, தமிழ் வெகுசன வாசிப்பு இதழியல் உருவானது. இவ்விதழில் பயிற்சி பெற்றவர்களே பின்னர் தாங்களாகவே இதழ் நடத்தத் தொடங்கினர். ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி இவ்வகையில் உருவானவர். 1940களில் ‘கல்கி’ உருவாக்கிய வாசிப்புப் பழக்கம், தமிழ் அச்சுப் பண்பாட்டில் நிலையான இடத்தைப் பெற்றது. இத்தொடர்ச்சி, 1920களில் உருவான துப்பறியும் கதை வாசிக்கும் பழக்கத்தின் வேறு பரிமாணமாக அமைந்தது என்று கூறமுடியும். இவ்வகையான அச்சுப்பண்பாடு 1930களில் உருப் பெற்று, 1940களில் நிலைபேறு கொண்டதாகக் கருதமுடியும், இவ்வகையில், தமிழ் இதழியல் நிறுவனமாக உருப்பெறவும் அதனைச் சார்ந்த தமிழ் அச்சுப் பண்பாடு உருப்பெற்றமையும் புரிந்து கொள்ள முடியும்.

1930களில் முழுநேர எழுத்தாளர்கள் தமிழில் உருவாயினர். இதழ்களை நடத்துவது அல்லது இதழ்களில் வேலை செய்வது என்ற அடிப்படையில், எழுதுவதை தமது முழுநேரப் பணியாகக் கருதும் எழுத்தாளர்கள் உருவாயினர். ஐரோப்பியப் புத்தொளி மரபின் செல்வாக்கிற்குட்பட்ட படைப்பாளர்கள், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலம் முதல் தமிழில் செயல்படத் தொடங்கினர். புத்தொளி மரபு, நமது பாரம்பரிய மரபு என்ற இருநிலைகளில் செயல்பட்ட தமிழ்ச்சூழலில், படைப்பாளி எதைத் தேர்வு செய்வது? என்ற ஒருவகையான குழப்பச்சூழலே 1930கள் வரை தமிழ்ப்படைப்புச் சூழலில் நிலவியது என்று கூற முடியும். இவ்வகையான சூழலை அடிப்படையாகக் கொண்டு, தமிழ் அச்சுப் பண்பாட்டைப் புரிந்து கொள்ளுதலும் குழப்பமாகவே இருந்தது எனலாம். 1930களில் இத்தன்மையில் மடைமாற்றம் ஏற்பட்டது என்று கூறமுடியும்.

முழுநேரப் படைப்பாளிகளாக இருந்த புதுமைப்பித்தன், க.நா. சுப்பிரமணியம் ஆகிய பலர் செயல்பட்ட தமிழ் அச்சுச் சூழல், இதற்கு முன் இருந்த பண்பாட்டுச் சூழலிலிருந்து வேறுபட்ட தாகவே செயல்படத் தொடங்கியது. புதுமைப் பித்தன் உருவாக்கிய ஆக்கங்கள், ஐரோப்பியப் புத்தொளி மரபின் தொடர்ச்சியாக அமைந்த அதே வேளையில், தமிழின் புதிய மரபாக உருவானது. புதுமைப்பித்தன் புனைவுகள், தமிழில் இதுவரை இல்லாத, புதிய மொழியை அறிமுகப்படுத்தியது. எழுத்தறிவு பெற்றவர்களின் வாசிப்புப் பழக்கம் சார்ந்து புனைவுடன் உருவாயின. வாசிப்பவர் களுக்காகப் புனைவுகள் உருவாக்கப்படும் தமிழ்ச் சூழல் இருந்தது. இதுவே தமிழின் அச்சுப் பண் பாடாகவும் இருந்தது. ஆனால், புதுமைப்பித்தன் போன்றவர்கள், வாசிப்புப் பழக்கத்தை நோக்கி தமது ஆக்கங்களை உருவாக்கவில்லை; மாறாக புதிய ஆக்கங்களை உருவாக்கினர். இதனை வாசிக்கும் இன்னொரு புதிய வாசிப்பு மரபு தமிழில் உருப்பெற்றது என்று கூறமுடியும். இவ்வகையான பண்பு, தமிழ் அச்சுப்பண்பாட்டின் புதிய முகமாகக் கருத இயலும். இதனால், தமிழில் ஆக்கங்கள் என்பவை முதல்முறையாக, தமிழ் மரபு சார் ஆக்கங்களாக உருப்பெற்றன. இப்புனைவுகள் தமிழுக்கேயுரிய புதிய தன்மைகளைக் கொண்ட வையாக வடிவம் பெற்றன. இதனைத் தமிழ் அச்சுப்பண்பாட்டின் புதிய பரிணாமமாகக் கருத இயலும்.

மணிக்கொடி இதழில் முதன் முறையாகச் செயல்பட்ட டி.எஸ். சொக்கலிங்கம், வ.ரா., மற்றும் சீனிவாசன் ஆகியோர் எழுத்தாளர்களாய் இருந்து கொண்டு பத்திரிகையாளராகச் செயல்பட்டனர். புதுமைப் பித்தன், பி.எஸ். இராமையா, க.நா.சு.,

சி.சு.செல்லப்பா என்று மேற்குறித்த பின்புலத்தில் செயல்படுவோர் எண்ணிக்கை பெருகத் தொடங்கியது. புதிய வாசிப்பை நோக்கி இவர்களது ஆக்கங்கள் உருப்பெற்றன. வெகுசன மரபில் உருவான வாசிப்புப் பழக்கம், இவர்களது ஆக்கங்களை எவ்வகையில் எதிர்கொண்டது? என்ற உரையாடல் முக்கியம். கல்கி அவர்களுக்கும் மேற்குறித்த படைப்பாளர் களுக்கும் இடையில் நடைபெற்றதாகக் கருதப்படும் உரையாடல் இதனைப் புரிந்துகொள்ள உதவும். இதழியல் சார்ந்த வாசிப்புப் பழக்கம் சார் பண் பாட்டைக் கல்கி முன்னெடுக்கும்போது, க.நா.சு. உள்ளிட்ட குழுவினர், புதிய ஆக்கங்களை உருவாக்கி, புதிய வாசகர்கள் உருவாக வழி கண்டனர். இவ் வகையில் 1930களில் உருவான இத்தன்மைதான், தமிழ்ப் புனைவின் புத்தொளியாக அமைகிறது. இப்பின்புலத்தில் புதிய தமிழ் அச்சுப்பண்பாடு உருப்பெற்றது. புதுமைப்பித்தன் உள்ளிட்ட படைப் பாளர்கள் சேர்ந்து, தங்களுக்கான வெளியீட்டு நிறுவனம் ஒன்றை உருவாக்கினர். இதன் மூலம் தமிழில் புதிய அச்சுப் பண்பாடு உருவாக வழி கண்டனர். இந்தப் பண்பாடு, பிற்காலத்தில் தமிழ்ச் சிறுபத்திரிகைப் பண்பாடாக உருவானது என்று கருத முடியும்.

அச்சுத் துறைசார்ந்த நிறுவனங்கள் உருவாகி, அதன்வழி உருவாகும் அச்சுசார் ஆக்கங்களுக்கு மாற்றாக, இன்னொரு வகை ஆக்கங்களை உருவாக்க வேண்டும் என்னும் உரையாடல் இக்காலங்களில் உருவானது. இப்பண்பைத் தமிழின் புதிய அச்சுப் பண்பாட்டு மரபாகக் கருதமுடியும். இப்பண்பாட்டின் மூலம்தான், பிற்காலங்களில் மாற்றுத்தமிழ் அச்சுப் பண்பாடு தமிழில் உருவானது. தமிழின் நவீனகால மூல ஆக்கங்கள் இவ்வகையான செயல் பாட்டின் விளைவுகளாக உள்ளன.

புதிய இதழியலும் புதிய எழுத்தாளர்களும் உருவான இரண்டாம் உலகப்போர் சார்ந்த தமிழ் அச்சுச் சூழலில், தென்கிழக்காசிய நாடுகளிலிருந்து நாட்டுக்கோட்டைச் செட்டியார் என்னும் வணிக மரபினர், தமிழகத்தில் மீண்டும் குடியேறினர். 1940களில் இப்பிரிவினர் தமிழ் அச்சிடுதல் துறையில் கவனம் செலுத்தத் தொடங்கினர். புத்தக வாசிப்பு மற்றும் புத்தகச் சேகரிப்பு ஆகியவற்றில் இவ்வணிக மரபினர் இயல்பாகவே ஆர்வம் உடையவர்களாக இருந்தனர். தங்கள் வீடுகளில் சொந்த நூலகத்தை உருவாக்கும் பண்பும் இவர்களிடம் இன்றும் தொடர்வதைக் காணலாம். ரோஜா முத்தையா ஆய்வு நூலகம் உருவாக அடிப்படையாக அமைந்த ரோஜா முத்தையா செட்டியாரின் நூல்சேகரிப்பை இப்பின்புலத்தில் புரிந்துகொள்ள முடியும். மறைமலையடிகள் நூலகத்திற்குள் பல அரிய இதழ்கள், செட்டிநாட்டுப்பகுதியிலிருந்துதான் திரட்டப்பட்டன.

பர்மா, மலேசியா, இலங்கை ஆகிய பகுதிகளி லிருந்து தமிழகம் திரும்பிய நாட்டுக்கோட்டைச் செட்டியார் மரபினர் 1940களில் தமிழ் நூல் வெளியிடும் துறையில் ஈடுபடத் தொடங்கினர். தமிழில் இன்று செயல்படும் பாதிக்குமேற்பட்ட, நூல்வெளியீட்டு நிறுவனங்கள் இப்பின்புலத்தில் உருப்பெற்றவைதான். இம்மரபைப் புரிந்துகொள்ள சக்தி.வை. கோவிந்தன் அவர்களின் தமிழ் அச்சுச் செயல்பாட்டை, இங்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளவும்.

திரு. வை. கோவிந்தன் ‘சக்தி’ என்னும் இதழை 1939 முதல் நடத்தினார். 1940களில் தொடங்கி 1950களின் தொடக்கம் வரை சக்தி வெளியீடுகள் என்று சுமார் நூறுவெளியீடுகளைக் கொண்டு வந்துள்ளார். இவர் மூலம் உருவான வெளியீடுகள், தமிழின் புதிய அச்சுப்பண்பாட்டு மரபை உருவாக்கியுள்ளது என்று கருத முடியும். இதழ் நடத்துவதின் தொடர்ச்சியாகவே நூல் வெளியீட்டை இவர் கட்டமைத்தார். இன்று இப்பண்பு, இதழ்களில் வருவதைத் தொகுத்து நூலாக்குவது என்ற பரிமாணத்தில் இதழ் நடத்துபவர்களால் கைக் கொள்ளப் பெறுகிறது. தாம் வெளியிடும் நூலின் கருத்தியல் சார்ந்த அக்கறை உடையவராக இருந்தார். எந்தத் துறையில், எப்படியான நூலை, எந்த வடிவத்தில் வெளியிடுவது என்பது குறித்த அக்கறையுடன் செயல்பட்ட முதல் தமிழ் வெளி யீட்டாளர் என்று சக்தி வை. கோவிந்தன் அவர் களைக் கூறமுடியும்.

1930களின் இறுதி 1940களில், ‘தினமணிப் பிரசுரம்’ என்ற பெயரில் பல சிறுசிறு நூல்களை தினமணிப் பிரசுராலயம் வெளியிட்டது. இவை பல்துறை சார்ந்த நூல்கள். இந்த மரபில் சக்தி வெளியீடுகள், பல்துறை சார்ந்த நூல் வெளியீட்டு வரிசைக்கு முன்னோடியாக அமைந்திருப்பதைக் காணமுடியும். தமிழ் அச்சுப் பண்பாட்டை மிகச் சிரத்தையான பணியாகத் தலைமேல் போட்டுக் கொண்டு செயல்பட்டவர் சக்தி. வை.கோவிந்தன் ஆவார். இவரே தமிழில் புதிய அச்சுப் பண் பாட்டை 1940களில் உருவாக்கியவர். பின்னர் வெளிவந்த ‘வாசகர் வட்டம்’ வெளியீடுகளை முன்னோடியாக சக்தி வெளியீடுகளைக் கொள்ள முடியும். இரண்டாம் உலகப் போரின் விளைவால், தாள் நெருக்கடி ஏற்பட்ட சூழலிலும் மேற்குறித்த வகையில் செயல்பட்டவர் வை. கோவிந்தன். இக்காலகட்டத்தின் ஒரு குறியீடாக இவரைக் கருத முடியும். இவரைப் பின்பற்றி சமகாலத்திலும் பின்னரும் தமிழ் நூல்வெளியீட்டில் புதிய மரபை பலர் உருவாக்கினர். இம்மரபை உருவாக்கி, தமிழில் புதிய அச்சுப் பண்பாட்டை உருவாக்கிய வராக வை. கோவிந்தன் அவர்களைத் தமிழ் அச்சுப் பண்பாட்டு வரலாறு நினைவில் கொள்வது தவிர்க்க இயலாது. இவ்வகையில் 1930-50 கால கட்டம் என்பது புதிய தமிழ் அச்சுப் பண்பாட்டு உருவாக்க காலமாக அமைகிறது.

Pin It