“சூரியனுக்குக் கீழேயுள்ள எதுவும் கவிதைக்கு அந்நியமானதல்ல” - ஓ.என்.வி.குறுப்பு

நீங்கள் யாருடைய கவி? என்ற கேள்விக்கு நான் இயற்கையைக் காதலிக்கும் கவி, அழகின் கவி, தூய காதலின் கவி, மனித துக்கத்தின் கவி, புரட்சியின் கவி எனப் பதிலிறுக்கும் மலையாள முற்போக்குக் கவிஞர் ஓ.என்.வி. குறுப்பிற்கு இந்தியாவின் உயர்ந்த இலக்கிய விருதான ‘ஞானபீட’ விருது அண்மையில் கிடைத்துள்ளது. 2007-ஆம் ஆண்டிற்கான 43 ஆவது ஞானபீட விருதைப் பெறும் குறுப்பு, இவ் விருதைப் பெறும் ஐந்தாவது மலையாளப் படைப்பாளி. முதல் ஞானபீட விருதைப் பெற்ற கவிஞர் ஜி. சங்கரகுறுப்பு (‘ஓடக்குழல்’-1965), 1980ஆம் ஆண்டிற்கான ஞானபீட விருதைப் பெற்ற எஸ்.கே. பொற்றேக்காடு (‘ஒரு தேசத்தின் ஹகத’& நாவல்), 1984 ஆம் ஆண்டிற்கான ஞானபீட விருதைப்பெற்ற தகழி சிவசங்கரபிள்ளை (‘கயறு’- நாவல்), 1995ஆம் ஆண்டிற்கான ஞானபீட விருதைப் பெற்ற எம்.டி. வாசுதேவன் நாயர் (‘ராண்டாமூழம்’-நாவல்) என்ற விருது வரிசையில் ஐந்தாவதாய் மலையாளத்திற்கு அணிசேர்த்துள்ளார் ஓ.என்.வி. குறுப்பு. “முற்போக்கு எழுத்தாளர், சமூக சித்தாந்தச் சார்பினை எப்போதும் விட்டுத்தராத பண்பட்ட மனிதநேயர்” என ஞானபீட விருதுக்குழு இவருக்குச் சான்று வழங்கியுள்ளது.

ஒற்றய்லாக்கல் நீலக்கண்டன் வேலு குறுப்பு என்னும் முழுப்பெயரைக் கொண்ட ஓ.என்.வி., 1931ஆம் ஆண்டு மே 27ஆம் நாள், கொல்லம் அருகிலுள்ள சவற என்னும் கிராமத்தில் பிறந்தார். இளங்கலைப் பட்டப் படிப்பில் பொருளாதாரமும் முதுகலைப் பட்டப் படிப்பில் மலையாளமும் பயின்ற குறுப்பு எறணாகுளம் மகாராஜா கல்லூரியில் மலையாள விரிவுரை யாளராகத் தனது பேராசிரியப் பணியைத் தொடங்கினார். திருவனந்தபுரம், கோழிக்கோடு, தலசேரி எனப் பல்வேறு

நகரக் கல்லூரிகளில் பல்கலைக்கழகங்களில் பணியாற்றி 1986-இல் பேராசிரியப் பணிக்கு ஓய்வு கொடுத்தார். பேராசிரியராகப் பணியாற்றினாலும் இடதுசாரி அரசியலில் ஈடுபாடுமிக்கவராக இருந்தார். 1989இல் திருவனந்தபுரம் பாராளுமன்றத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக நின்றார். பேராசிரியர், கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர், விமர்சகர், அரசியல்வாதி எனப் பல்வேறு பரிமாணங்கள் கொண்டது ஓ.என்.வி.யின் ஆளுமை.

சங்கம்புழயின் வழியில் அவல சுரத்தில் அவ நம்பிக்கையுடன் சோகராகம் இசைத்துக்கொண்டிருந்த மலையாளக் கவிதையை, மனித வாழ்க்கை மாயமல்ல; யதார்த்தமானது;மனித ஆற்றலினால் சமத்துவமற்ற சமூகம் மாறும் எனப்பாடி நடப்பியல் பாணிக்கு அழைத்துச் சென்ற இடசரி கோவிந்தன் நாயர், பி.பாஸ்கரன், வயலார் ராமவர்மா ஆகிய புரட்சிகர இடதுசாரிக் கவிஞர்களின் வரிசையில் நிற்பவரே ஓ.என்.வி. உள்ளூர் இதழ் ஒன்றில் 1946-இல் வெளிவந்த ‘முன்னோட்டு’ (முன்கெல்) என்னும் கவிதையே ஓ.என்.வி.யின் முதல் கவிதை. 1949-இல் கேரள முற்போக்கு இலக்கியப் பேரவையின் ‘சங்ஙம்புழ விருது’ பெற்ற ‘அரிவாளும் ராக்குயிலும்’ என்னும் கவிதையின் மூலம் பரந்த மலையாள இலக்கிய உலகிற்குக் குறுப்பு அறிமுகமானார். இதே ஆண்டில் இவரது ‘போராடுந்ந சௌந்தர்யம்’ (பேராடுகின்ற அழகு) என்னும் முதல் தொகுப்பு வெளியானது. 1956-இல் வெளிவந்த ‘தாஹிக்குந்ந பானபாத்ரம்’ (தாகமெடுக்கின்ற மண்பாண்டம்) என்ற தொகுப்பின் மூலம் குறுப்பு மலையாளக் கவிதையுலகில் புகழ்பெற்றார்.

ஓ.என்.வி. பொதுவுடைமை இயக்கத்தோடு நேரடியாகத் தொடர்பு கொண்டவர் என்பதால் அவரது ஆரம்பகால கவிதைகள் மக்களின் புரட்சியுணர்வுக்கு வீறுதருகின்ற போராட்டக் கவிதைகளாகவே அமைந்தன. உலக அரங்கில் பொதுவுடைமை அரசியல் ஏற்படுத்திய மாற்றங்கள், மே தினம், புரட்சி, ஸ்டாலின் மரணம் போன்றவை தான் ஓ.என்.வி.யின் தொடக்ககாலக் கவிதைகளுக்குரிய விஷயங் களாகப் பெரிதும் அமைந்திருந்தன. இக்காலகட்டத்தில் தோப்பில்பாசி முன்னின்று நடத்திய கேரள மக்கள் கலையரங்கோடும் (ரிறிகிசி) குறுப்பு தொடர்புவைத்திருந்தார். 1952-இல் அரங்கேற்றப்பட்ட தோப்பில் பாசியின் ‘நீங்கள் என்னை கம்யூனிஸ்டாக்கினீர்கள்’ நாடகத்தில் இடம்பெற்ற இவரது,

“நாம் அறுவடை செய்யும் வயல்களெல்லாம்

 நம்முடையவையாகும் பைங்கிளியே”

என்னும் பாடலடிகள் அன்றைய கேரளத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தின. 1942-இல் வயலாரில் நடந்த நிலத்தொழிலாளர் போராட்டத்தை ‘கேரளத்தின் பாரிஸ் கம்யூன்’ என்று வருணித்த ஓ.என்.வி.யின் புரட்சியுணர்வில் 1965-க்குப் பின் சோகம் இழையோடுகிறது. இந்தியாவின் மீதான சீனப்படையெடுப்பு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட பிளவு, உலக அரங்கில் பொதுவுடைமை இயக்கத்திற்கு ஏற்பட்ட நெருக்கடிகள் இவையெல்லாம் ஓ.என்.வி.யை ஆழமாகப் பாதித்தன. ஆயினும் மனிதனையும் அவன் வாழ்கின்ற பிரபஞ்சத்தையும் நேசிக்கின்ற மனிதநேய கவிஞனாகவே குறுப்பு தொடர்ந்து பயணம் செய்து வருகிறார். ‘அக்னி சலபங்கள்’ (நெருப்புப் பட்டாம் பூச்சிகள் - 1971) ‘அக்ஷரம்’ (எழுத்து - 1974) கருத்தபக்ஷியுவடபாட்டு (‘கருப்புப் பறவையின் பாடல் - 1977) உப்பு (1980) பூமிக்கொரு சமர கீதம் (பூமிக்கோர் இரங்கற்பா - 1984) உஜ்ஜயினி (1994) என்பன ஓ.என்.வி.யின் பிற்காலப் படைப்புகளில் முதன்மை யானவை; புகழ்பெற்றவை; விருதுகள் பெற்றவை. ‘அக்னி சலபங்கள்’ 1971-ஆம் ஆண்டிற்கான கேரள சாஹித்ய அக்காதெமி விருதுபெற்றது, ‘உப்பு’ 1982-ஆம் ஆண்டிற்கான வயலார் ராமவர்மா விருதினைப் பெற்றது.

இக்கவிதை நூற்களில் அதிகார வர்க்கத்தினரால் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு வறுமை, பசி, ஏழ்மை ஆகிய துன்பங்களைச் சுமந்து வாழும் கேரளத்து, இந்திய மனிதர்களின் சோகச் சித்திரங்களைக் காணமுடிகின்றது. பேருந்து கூட்ட நெரிசலில் உருண்டு சிதறிய தனது உணவுப் பாத்திரத்தி லிருந்து விழுந்த கப்பக்கிழங்குகளை மற்றவர் கண்டுவிட்டதை எண்ணி நாணி வருந்தும் கேரளத்து ஏழைச் சிறுமியின் சோகத்தைக் காட்டும் ஓ.என்.வி., ‘கோததும்பு மணிகள்’ (கோதுமை மணிகள்) என்ற கவிதையில் பெயர்தெரியாத வட இந்தியக் கிராமத்து இளம் பெண்ணொருத்தியின் வாழ்க்கை அவலத்தையும் பின்வரும் அடிகளில் தீட்டுகிறார்.

“கையில் வளையல் இல்லை

காலில் கொலுசு இல்லை

மேனியில் அலங்காரமில்லை

ஏறிவரும் இளமையை மூடிமறைக்க

கிழியத் தொடங்கிய சேலை”

அவளை மணப்பெண்ணாக்கி அலங்கரிக்கப் பொன்னில்லை; பூவில்லை. அவள் தன் பாட்டி சொன்ன பழைய சொற்களை நினைத்துப் பார்க்கிறாள்.

“நாம் பார்த்து வளர்க்கும் கோதுமையும்

 நாமும் ஒன்றுபோலத்தான் மகளே!

 நாற்று நட்டு யாரோ வளர்க்கின்றார்

 கதிர்களை யாரோ அறுவடை செய்கின்றார்

 பொன்னின் மணிகளாகும்போது அவை

 எங்கெங்கோ போய்த் தொலைகின்றன”

சுரண்டலும் பாட்டாளி மக்களின் துயரமும் இந்தியா முழுமைக்கும் பொதுமையானதெனக் காட்டும் குறுப்பு, மொழி, இனம், நாடு ஆகிய எல்லைகளைக் கடந்து மனிதனது பிரச்சினைகளை உலகப் பொதுவானதாகப் பார்க்கின்றார். துஞ்சன் பறம்பிலுள்ள எட்டி மரத்தினையும் (எழுத்தச்சன்), விஸ்வ பாரதியிலுள்ள மாமரத்தையும் (தாகூர்), யாஸ்யை பல்யானாவிலுள்ள பாப்ளர் மரத்தையும் (தல்ஸ்தோய்),

ஒரே குடும்பத்தாராகக் கருதும் ஓ.என்.வி. சோவியத் யூனியனிலுள்ள திப்லீஸ் நகரத்தில் ஓடும் குறாநதியைப் பார்த்து இப்படிப் பாடுகிறார்.

“இந்தநதி மார்கழிமாத கேரளநிலாநதியைப்

 போன்றது - இதன்

 இருகரைகளிலும் விளைகின்ற

 கனிகளும் தானியங்களும்

 வேறுபட்டவையென்றாலும் விதைக்கின்ற

 கை ஒன்று போலத்தான்

 வியர்வையில் முளைக்கின்ற

 பசுமை ஒன்றுபோலத்தான்’ (என் ‘கவித’)

வியட்நாம் போராளிக்குக் கவிதையில் கைகுலுக்கி மகிழும் ஓ.என்.வி., (‘ஹஸ்ததானம்’, அக்ஷரம்), நீக்ரோக்களின் விடுதலையைப் பாடிய பால்ராப்ஸனைப் பற்றியும் கவிதை புனைந்துள்ளார்.

“அடிமைகள் எங்களுக்குப் பகல் வெளிச்சத்தின்

 அமுதத்தினை மறுக்கின்றவர்களே!

 உயிரும் புகைந்துபோகும் இருட்டுச்

 சுரங்கத்தில் சிந்தியுருளும் இக்குருதியிலிருந்து

 ஒரு தீப்பொறி ஊதியூதி ஒளிர்ந்து

 ஒரு சூரிய ஜுவாலை உதிக்கும்

 அப்போது இச்சிலுவையில் அறைபட்டவரின்

 சுதந்திரச் சூரியன் உயிர்த்தெழும்!”          (கறுத்த பக்ஷியுடெபாட்டு)

நெருப்பை மாற்றத்திற்கான புத்துயிர்ப்பிற்கான புரட்சிக்கான குறியீடாக குறுப்பு பல கவிதைகளில் கையாண்டுள்ளார்.

“அக்னி என்னிலும் என் இறப்பிலும்

 என் எழுத்துக்களிலும் உண்டு!

 கடைந்தால் அது சுடர்விடும்” (‘அக்னி’, உப்பு)

‘சூரியனுக்குக் கீழேயுள்ள எதுவும் கவிதைக்கு அந்நியமானதல்ல’ எனக் கூறும் ஓ.என்.வி., பூமிக்கொரு சமர கீதம், சூரியகீதம் ஆகிய கவிதைகளில் மனிதன் தனது சுற்றுச்சூழலுக்கு விளைக்கும் நாசத்தைக் கண்டு கண்ணீர் சிந்துகிறார். ‘பூமிக்கோர் ஓர் இரங்கற்பா’ கவிதையில் பூமியின் முலைப்பாலைக் குடித்த மனிதனுக்கு, இன்று அவளது இதயக் குருதியைக் குடிக்கும் தாகம் ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார். ஓசோன் படலத்தின் கிழிசலை, இயற்கை மீதான மனித இனத்தின் அத்துமீறலை இப்படிக் கவிதையாக்குகிறார்:

“விரும்பிய மணப்பெண்ணாம்

 நினக்கு சூரியன் சூட்டியன

 பூந்துகில் மேலாடையைக் கிழித்தனர்

 அறியாது பெற்ற தாயையே மணந்த யவனவீரன்

 ஒடிபஸின் கதை எவ்வளவு பழகிப் போய்விட்டது

 புதிய கதை எழுதுகின்றனர் பூமியின் பிள்ளைகள்

 பூமியின் துளிலுரிக்கின்றனர்”

‘நேசிப்பேன் என் அயலானை என்பது சத்தியம் நேசிப்பேன் இந்த மண்ணின் ஒவ்வொரு புல் பூண்டினை என்பது சத்தியம்’; என்றும் ஓ.என்.வி.யின் வாக்குமூலம் அவரது எல்லாக் கவிதைகளிலும் எதிரொலித்துக் கொண்டு தானிருக்கிறது.

கேரள மக்கள் கலைமன்றம் தயாரித்த ‘காலம் மாறுந்து’ (1950) என்ற திரைப்படத்திற்குப் பாடல் எழுதத் தொடங்கிய ஓ.என்.வி., 232 படங்களுக்கு 900 திரைப்பாடல்கள் எழுதியுள்ளார். இதற்காக 1973 முதல் 2008 வரை 13 முறை கேரள திரைப்பட விருதினைப் பெற்றுள்ளார். ‘வைஷாலி’ படத்திற்கு எழுதிய பாடல்கள் மூலம் தேசிய திரைப்பட விருதினை 1984 இல் பெற்றார். 1998இல் பத்மஸ்ரீ விருதினையும் பெற்றுள்ளார். குழந்தைகளுக்காகவும் ஏராளமான பாடல்கள் எழுதியுள்ளார். அவை ‘வளப்பொட்டுகள்’ என்னும் தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளன.

‘கவிதையிலே ஸமாந்த்ர ரேககள்’ (கவிதையில் இணை நிலைக்கோடுகள்), ‘கவிதயிலே ப்ரதிசந்திகள்’ (கவிதையில் நெருக்கடிகள்), ‘எழுத்தச்சன் ஒரு படனம்’ (எழுத்தச்சன் ஓர் ஆய்வு), ‘புஷ்கின் ஸ்வாதந்த்ர்ய போதத்தின்றெ துரந்த கத (புஷ்கின் விடுதலையுணர்வின்.... கதை) என்பன குறுப்பின் விமர்சன நூல்கள். குறுப்பின் கவிதைகளைக் குறித்து ஏராளமான கட்டுரைகளும் விமர்சன நூல்களும் வெளி வந்துள்ளன.

மலையாளக் கவிஞர், இந்தியக் கவிஞர் என்ற நிலையில், ஓ.என்.வி., சோவியத் யூனியனுக்கு, இருமுறை சென்றுள்ளார். 1981இல் சோவியத் நாடு நேரு விருது பெற்றார். தல்ஸ்தோயின் 150ஆவது பிறந்தநாள் விழாவில் பங்கேற்றுள்ளார். யூகோஸ்லோவியா, சிங்கப்பூர், ஜெர்மன் ஆகிய நாடுகளில் நடைபெற்ற பன்னாட்டு இலக்கிய விழாவில் பங்கேற்றுள்ளார். சாகித்திய அக்காதெமியின் செயற்குழு உறுப்பினர். கேரள கலாமண்டலத்தின் தலைவர் எனப்பல உயர்பதவிகளை வகித்த ஓ.என்.வி.க்கு கேரளப் பல்கலைக் கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது இருபத்தொரு கவிதைகளுக்கும் ஏராளமான விருதுகளுக்கும் சொந்தக்காரரான ஓ.என்.வி. யின் ‘உஜ்ஜயினி’ கவிதைக் காப்பியத்தைக் கவிஞர் சிற்பி தமிழில் மொழி பெயர்த்து உள்ளார். உஜ்ஜயினி பெருவேந்தன் விக்ரமாதித்யனின் அவைப் புலவனான காளிதாசன் காப்பியங்களின் உணர்ச்சி இழைகளையும், அவனது வாழ்க்கை இழைகளையும் இணைத்துக் குறுப்பு நெய்துள்ள கவிதை நெசவுதான், உஜ்ஜயினி. இக்கட்டுரையாளர் ஓ.என்.வி.யின் கவிதைகள் சிலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். சான்றுக்கு ஒன்று:

கண்ணகி

“வருகிறாள் கண்ணகி

       வருகிறாள் தன் சிலம்பு

 ஒரு கையில் உயர்த்திப்

       பிடித்து, தீக்கனல்

 உதிரும் கண்களால்

       விழித்து நெஞ்சில்

 அடித்தலறி சாபமொழி

       உரைத்து, மின்னலும்

 இடியும் மழையும்

       புயற்காற்றும் சேர்ந்த

 ஓர் ஐப்பசிமாத அமாவாசையின்

       உறைந்த இருட்டைப்போல்

 வருகிறாள் கண்ணகி

       இருபுறமும் கூந்தல்

 கலைந்து பறக்கிறது

       நெருப்பை எறிந்ததுபோல்

 அவள் கேட்கிறாள்:

       எங்கே என் தலைவன்

 எங்கே-? அவனுயிரைப் பறிப்பதற்கு

       குற்றமென்ன செய்தானவன்?

 அரிசி பருப்பு வாங்குதற்கு உடுத்தும்

       துணி வாங்குதற்கு தாலி

 கட்டிய மனைவியின்

       சிலம்பு விற்பதற்குவேண்டி

 இங்கே வந்தானன்றோ?

       பசித்துச் செத்தாலும்

 இருந்து வாழ்தற்கு

       அறியாதோர், மானம்

 துறந்து வாழ்தற்கு

       இயலாதோர் முதுகு

 எலும்பு ஒடிய உழைத்து

       வியர்வையினால் உப்பு

 இட்ட கஞ்சியைப் பால்

       அமுதென்று நினைப்போர்!

 சொல்லுக! எதற்கு

       இன்றவனை என்னுயிரின்

 உயிரானவனைக் கொல்ல

       ஆணையிட்டாய்! கொடுமையாய்க்

 கொன்றாய்-? பின்னர் சிலம்பை

       அடித்துடைத்தாள் அவள்

 தரையெங்கும்

       சிதறிய மாணிக்கப்

 பரல்களில் சுட்டு

       விரலூன்றி, மறு

 கரத்தைத் தலைமீது வைத்து

       உரக்க சாபமுரைத்தாள்

 எரிகிறது பற்றி

       எரிகிறது பெரு

 நகரமும் நெடு

       வயல்வெளிகளும் அரசு

 கூடங்களும் மாடமாளிகை

       வரிசைகளும் படை

 வீடுகளும் நேரும்

       நெறிகெட்ட சிம்மா

 சனங்களும் பற்றி

       எரிகிறது; ஜுவாலை

 படர்கிறது - மீண்டும்

       இளங்கோவாம் - திரு

 வடிகளே, வாரீர்! நின்

       திரு எழுத்தாணியில்

 இவளது எரியும்

       வார்த்தைகளை எழுதுவீர்

 இவள் எரிக்கும் இக்

       கோட்டைகளைப் பாரீர்!