என்னைச் சந்தித்த நண்பர் ஒருவர் அய்யா நல்லகண்ணு, அய்யா நம்மாழ்வார் இருவரும் அண்ணன், தம்பியா? என்று கேட்டார். இந்த கேள்விஎன்னை யோசிக்க வைத்துவிட்டது. அவரிடம் அவ்வாறு ஒரு கேள்வி எழுவதற்கு எது காரணம்? அவர்கள் இருவரின் தோற்றம் தான் காரணம். எளிய தோற்றம். நேர்மையான விவசாயியைப் பார்த்த மனநிறைவை, சந்தித்த ஒரு நிமிடத்தில் இருவருமே தமக்குள் உருவாக்கிவிடுகிறார்கள்.

தோற்றத்தில் மட்டுமல்ல, கொள்கை நிலையிலும் இருவருக்கும் இடையில் நெருக்கத்தையும், ஒற்றுமையையும் பார்க்க முடிகிறது.இதை ஒட்டி இருவருக்கும் இடையில், நேரடி சந்திப்பு, தொடர்பு உண்டா? என்ற கேள்வியும் எழுகிறது. இதன் பின்னணியை அறிந்துகொள்ள, நம்மாழ்வார் ஆரம்ப காலத்தில் பணியாற்றிய கோவில்பட்டி, களக்காடு ஆகிய பகுதிகளின் தொடர்புகளை ஆராய்வது அவசியமாகிறது.

கோவில்பட்டியில், இந்த காலகட்டத்தில் தான், அதாவது 1963ஆம் ஆண்டில் நம்மாழ்வார், புஞ்சைப் பயிர் ஆய்வு மையத்தில் தனது அரசுப் பணியை வேளாண்துறை ஆய்வாளராகத் தொடங்கியிருந்தார். இந்த அரசுத்துறை ஆய்வு, இவருக்குக் கசப்பைத் தந்துவிட்டது. வானம் பார்த்துவிவசாயம் செய்யும் கரிசல் காட்டு மண் அது. பருத்தி, சோளம் கூடுதலாகப் பயிரிடப்படும். பாரம்பரிய விவசாயமுறையை இயற்கைநேசம் மாறாமல் அந்த மக்கள் செய்து வந்தார்கள். கால்நடைகளின் கழிவுகள் இலை, தழைகள் உரத்தால் விவசாயம் அங்கு நடை பெறுகிறது. ராசாயன உரத்தை இதில் பயன்படுத்துதல் பற்றி ஆய்வு நடைபெற வேண்டும். இந்த ஆய்வுக்கான சாத்தியங்கள்மறுக்கப்படுவதை இவரால் பொறுத்துக் கொள்ள இயவில்லை. ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர். அந்த நிறுவனத்தைவிட்டு வெளியேறுகிறார்.

அமைதித் தீவு அறக்கட்டளை இவர் பணியைத் துறப்பதற்கு ஒருவிதத்தில் காரணமாக அமைந்து விட்டது, களக்காடு பகுதியில் செயல்பட்டுவந்த இந்த அறக்கட்டளையைத் தொடக்கியவர் பெல்ஜியம் நாட்டைச் சார்ந்த அருள் தந்தை டொமினியன் பியர் அடிகளார் ஆவார். 1958 ஆம்ஆண்டில் தனக்கு கிடைத்த நோபல் பரிசுத் தொகையை ஆதாரமாகக் கொண்டு உலகம் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தன்னம்பிக்கையை உருவாக்கும்

புரட்சிகர சேவையைப் பணியாகத் தொடங்கினார். களக்காடு ஒன்றியத்தில், விவசாயிகளின் வறுமைஅகற்றும் பணியில் இந்த அறக்கட்டளை ஈடுபட்டிருந்தது.

அமைதி அறக்கட்டளைப் பணியில் சேரும் போது, நிரந்தரமான பெரும் தொகையை ஊதியமாகப் பெற்று வரும் நீங்கள், குறைந்த ஊதியத்தில் எங்கள் நிறுவனத்தில் சேருவது பொருத்தமாக இல்லை. பணம் இல்லை என்றால் மூன்று ஆண்டுகளில் கூட நாங்கள் நிறுவனத்தை மூடிவிடுவோம், அதற்குப் பின்னர், நீங்கள் வருமானத்திற்கு என்ன செய்வீர்கள் என்று நம்மாழ் வாரிடம் கேட்கிறார்கள். எனக்கு ஊரில் நிலம் இருக்கிறது. அதை வைத்து என்னால் விவசாய சோதனைகளையும் செய்ய முடியும். வாழ்க்கைத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ளமுடியும் என்கிறார். இந்த மண் தந்த துணிவு தான் அய்யா நம்மாழ்வார் என்பதை நாம் உணரவேண்டும். மரணம் வரை இவரிடம் இந்தத் துணிவு தொடர்ந்து சென்று கொண்டேயிருந்தது.

களக்காடு தான், அமைதித் தீவு அறக்கட்டளையின் தலைமையகம்.

அரசாங்கத்திற்கு எதிராகச் சதி செய்தார் என்று குற்றம் சாட்டி தோழர் நல்லகண்ணு அவர்கள் தீவிரமாக தேடப்பட்டதும், ஓராண்டுதலைமறைவு வாழ்க்கையில் கைது செய்யப்பட்டதும் இந்த களக்காடு பகுதியில் தான். நீண்ட சிறை வாழ்க்கைக்குப் பின்னர் விவசாயி களிடம் களப்பணிகளைச் செய்து நிலமற்ற விவசாயி களுக்கு நிலத்தைப் பெற்றுத் தரும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். இதில்கோயில் மடங்களுக்கு எதிரான போராட்டங்கள் இதில் முதலில் கோயில்பட்டியில் தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்களுடன் அய்யா நம்மாழ்வாருக்குத் தொடர்பு கிடைக்கிறது, இது களக்காட்டில் விரிந்து வலுப்பெறுகிறது. நல்லகண்ணு அவர்களின் தலைமறைவு வாழ்க்கையிலும் அரசியலிலும் பங்கெடுத்த தோழர்கள் நடராஜன், முத்துமாணிக்கம் ஆகியோருக்கும் நம்மாழ்வாருக்கும் களப்பணியில் ஆழமான உறவு அமைகிறது. இதைத் தவிர அர்ப்பணிப்பு மிக்கப் பேராசிரியர் நா. வானமாமலை புகழ்மிக்க நெல்லை ஆய்வு வட்டம் ஒன்றை இங்குத் தொடர்ந்து நடத்தி வந்தார்.

நெல்லை ஆய்வு வட்டம் தான் நல்லகண்ணு, நம்மாழ்வார் இருவருக்குமிடையே. கொள்கை ரீதியான கருத்துப் பகிர்வு ஏற்படுத்தும் களமாக அமைந்திருந்தது. தமிழகம் முழுவதிலும் உள்ள அறிவுப் புலம் முழுமையாக அன்றை நெல்லை ஆய்வு வட்டத்தோடு தொடர்பு கொண்டு இயங்கியது. பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியம் இந்தத் தொடர்பு எத்தகைய வலிமையுடன் வளர்ந்தது என்பதைக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார், “அந்த காலத்தில் அரைகால் சட்டையும், காலில் கேன்வான்ஸ் ஷ§ வும் போட்டிருப்பார். புல்லட் மோட்டார் பைக்கில், அவர் செல்லும் அழகே தனியானது. நெல்லை ஆய்வு வட்டத்தில் அவரது தொடர்பு 15 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்தது. தலைவர் நல்ல கண்ணுடனான தொடர்பு வலிமைபெற்றது என்கிறார்.

மூன்று மாதங்களுக்கு முன்பு, ஈரோடு நகரில் 21ஆம் நூற்றாண்டில் சோசலிசம் என்னும் தலைப்பில், கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்திருந்தோம் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில். அதில் விவசாயிகள் பிரச்சினை பற்றிப் பேசிய, நம்மாழ்வார், நல்லகண்ணு அவர்களுடன் தனக்குள்ள ஆழ்ந்த தொடர்பைக் குறிப்பிட்டு, விவசாயிகளின் வாழ்க்கைத் துயரத்தைக் கிண்டல் கலந்த கதையை நல்லகண்ணு கூறியதாகக் கூறினார்.

ஓரளவுற்கு நிலமுள்ள விவசாயி தான் என்ற போதிலும், இன்றைய காலத்தின் விவசாயிகள் மீதான சுரண்டல் காரணமாக, அவருக்குக் கட்டியிருக்கும் வேட்டியை தவிர, தோளில் துண்டு கூட இல்லை. கால் நடையாக வழிப்பயணம் செல்கிறார் விவசாயி. எதிர்பாராமல் கோடை மழை பெய்கிறது. ஒதுங்க இடமில்லாத புஞ்சைக்காடு. அருகில் திரும்பிப் பார்க்கிறார். பாழடைந்த கோயில் ஒன்று இருக்கிறது. அந்தக் கோயிலுக்குள் செல்கிறார். நனைந்துவிட்ட, உடலைத் துடைக்க வேட்டியை அவிழ்த்து தலையைத் துவட்டுகிறார். கோவணத்தோடு நிற்கும் தனது நிலையை நினைத்து சிறிது வெட்கம் கொள்கிறார். இது தான், இன்றைய விவசாயியின் நிலை என்று சொல்லிக் கொள்கிறார். அருகில் ஒரு சிலை நிர்வாண கோலத்தில் இருக்கிறது. ‘நாம் அரை நிர்வாணம். சாமி முழு நிர்வாணம்’ அது சமணர்களின் வழிபாட்டுத் தெய்வம். ‘சாமி நம்மை விடப் பெரிய விவசாயி போலத் தெரியுது’ அதனால் தான் இவர் நிர்வாண சிலையாயிட்டார் என்று விவசாயி நினைத்துக் கொண்டதாகக் கதையில் கூறப்படுகிறது.

இயற்கை வளப் பாதுகாப்பில் அண்மைக் காலங்களில் இருவருக்கும் இடையில் போராட்ட ஒற்றுமையிருந்தது. தாமிரபரணி மணல் கொள்ளை போராட்டத்திற்குப் பின்னர் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில், வெண்ணாற்றில் ஆற்றுமணல் கொள்ளையை எதிர்த்து நல்லகண்ணு, நம்மாழ்வார் ஆகிய இருவரும் இணைந்து போராட்டத்தை நடத்தினார்கள்.

கருத்து ரீதியாகவும், செயல் ரீதியாகவும் தமிழ் மண் சார்ந்த தலைவர்கள் நம்மாழ்வாரும் நல்லகண்ணும் ஆகிய இருவருமாவார் என்பதை இந்த நேரத்தில் ஞாபகப்படுத்திப் பார்க்கத் தோன்றுகிறது.