இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நில அளவை செய்யப்பட்ட நகரம் மதுரை என்பதை“புலவர் பாடாது வரைக என் நிலவரை” என்ற புறநானூற்றின் 72வது பாடலால் அறியலாம். தலை யாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழிய பாண்டியன் காலத்தில் நிலம் சர்வே செய்யப் பட்டதாக இப்புறப்பாடல் கூறுகிறது.

வேலூரை வெயில் நகர், நெல்லை அல்வா நகர், சேலத்தை மாங்கனி நகர், கோவையைப் பஞ்சாலை நகர், தஞ்சாவூர் நெற்களஞ்சியம், தூத்துக்குடியை முத்து நகர், காஞ்சிப்பட்டு என்னும் போது மதுரையை மட்டும் கோவில் மாநகர் என்றே தமிழ்நாடு அழைக்கிறது. இந்தியாவில் வேறு எந்த நகருக்கும் இப்பெயர் கிடையாது. கிழக்கு நாடுகளின் ஏதென்ஸ் என்று கி.மு.3ஆம் நூற்றாண்டில் மெகஸ்தனிஸ் குறிப்பிடுகிறார்.

மதுரையின் நகர அமைப்பு வேறு எந்த நகருக்கும் இல்லை. மதுரையைப் போல வேறு எந்த நகருக்கும் இலக்கியச் சிறப்பும் மொழிச் சிறப்பும் கிடையாது. தாய்மொழிக்காகவும் இலக்கிய வளர்ச்சிக்காகவும் மதுரை மாதிரி எங்கும் தமிழ்ச் சங்கங்கள் இருந்ததில்லை. உலக நீதி நூலான திருக்குறள் நூல் மதுரையில் தான் அரங்கேற்றப் பட்டது. தமிழகத்தை உலுக்கிய இந்தி எதிர்ப்புப் போர் 1965-இல் மதுரையில் தான் துவங்கியது.

மதுரைக் காஞ்சி, சிலப்பதிகாரம், புறநானூறு, புராணங்கள் மதுரையின் பெருமை கூறுபவைகள். பரிபாடல் என்ற இலக்கிய நூல் மதுரை நகரின் நகரமைப்பு பற்றிக் கூறும் போது தாமரை மலரை உதாரணம் காட்டுகிறது.

“மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரை

பூவோடு புரையும் சிறுஊர், பூவின்

இதழகத்து அனைய தெருவம், இதழகத்து

அகும்பொருட்டு அனைத்தே அண்ணல் கோயில்

தாதின் அனையர் தண்தமிழ்க் குடிகள்....”

என்பது பரிபாடல் இலக்கியத்தின் பகர்வு.

கி.பி.1513 முதல் நாயக்க மன்னர்கள் காலத்தில் அமைச்சர் தளவாய் அரியநாதர் முதலியார் என்பவர் மதுரையை நிர்வாக வசதிக்காக 12 பாளையங் களாகப் பிரித்தார் என்பது ஆவணங்களாக உள்ளன. இதன் மூலம் நிர்வாகம் எளிமை பெற்றது. பாண்டிய நாட்டை 72 பாளையப்பட்டுக்களாகவும் இவரே பிரித்தார் என்பர். மதுரை நகரம் பிரிக்கப்பட்ட பாளையங்கள் இன்றும் அதே பெயரில் வழங்கப் படுகின்றன.

“கான்பாளையம்    கோரிப்பாளையம்

குயவர்பாளையம் முனிசிபாளையம்

ருக்மினிபாளையம்          மகபூப்பாளையம்

கிருஷ்ணாபாளையம்      கட்றாபாளையம்

ஆரப்பாளையம்     பிள்ளையார்பாளையம்

மேலநாப்பாளையம்

கீழநாப்பாளையம்

என்ற பெயர்கள் இன்றும் உள்ளதைக் காணலாம்.

மதுரை விளக்குத்தூண் காவல் நிலையம் கொத்தவால் சாவடியாகவும் இருந்ததை இன்றும் நிலைய வாசலில் நாவல் மரத்தின் பின்புறம் கல்வெட்டு மூலம் காணலாம். இரண்டுக்கு ஒன்று என்ற அளவில் கல்வெட்டு சுவரில் உள்ளது. தற் போது பழமை இடிக்கப்பட்டுப் புதிதாகக் கட்டடம் எழுகிறது.

ஆறு கிடந்தன்ன அகல் நெடுவீதிகளும், ஓடை வழிந்தன்ன குறுகிய தெருக்களும், உள்ள மதுரை எப்போதும் வேத முழக்கங்கள் ஒலிக்கிற கோவில் களும் வானளாவ எழுந்து மணம் பரப்பும் வேள்விப் புகைகளும் நிறைந்து மதுரை நகரைப் பிற நகரங் களினின்றும் வேறுபடுத்திக் காட்டுவதாகப் புராணங் களும் இதிகாசங்களும் பாராட்டிப் பேசுகின்றன. சீதையைத் தேடி அனுமன் புறப்பட்டபோது” தென் திசையில் தமிழ் பேசுவோர் இருப்பர். அத்தமிழில் மயங்கி நின்றுவிடாதே” என்று ஜாம்பவான் கூறி யதாகக் கதை உண்டு.

மதுரைக்குப் புராண அடிப்படையில் கடம்ப வனம் என்ற பெயரும் உண்டு. தனஞ்செயன் என்ற வணிகனே கடம்பமரங்கள் சூழ்ந்த வனத்தில் மீனாட்சி யம்மன் சிலையும் லிங்கமும் இருப்பதைக் கண்டு பிடித்து அரசனிடம் கூறியதாகத் திருவிளையாடற் புராணம் கூறுகிறது. கோவிலைக் கண்டுபிடித்த தனஞ்செய வணிகனும் கோவிலை விரித்துக் கட்டிய பாண்டிய மன்னனும் பொற்றாமரைக் குளத்தின் வடக்குக் கரையில் இரண்டு தூண்களில் எதிரெதி ராகப் பார்த்தபடி சிலையாக நிற்கின்றனர்.

மதுரை நகரில் வெளி வீதிகள் அனைத்தும் கோட்டைச் சுவர்களாக இருந்தன. இதை “எவ்வளவுக்கு எவ்வளவு இடிக்கிறார்களோ அந்த அளவு இடம் இடிப்பவருக்கே சொந்தம் “என்றதால் மக்களே கோட்டைச் சுவர்களை இடித்தனர். இதனை அமுல்படுத்திக் கண்காணித்த பெருமாள் மேஸ்திரி பெயரும் துணை ஆட்சியர் மாரட் என்பவரின் பெயரும் மட்டுமே வீதிகளுக்குச் சூட்டப்பட்டுள்ளன. இப்படிச் செய்து மதுரையின் பழமையை மாற்றியவர் பர்ன் என்ற கலெக்டராவார்.

நாயக்கர் காலத்தில் ஓவியர்கள் வாழ்ந்த தெரு சித்திரக்காரத்தெரு, இசைக்கலைஞர்கள் வாழ்ந்த தெருவிற்கு நவபத்கானா தெரு, மெட்டுக்காரத் தெரு, அரண்மனை வீரர்களும், மக்களும், பந்து அடித்து விளையாடிய இடம் பந்தடி என்றும் அரண் மனைக்காக மஞ்சனம் அரைத்துக் கொடுத்த வர்கள் இருந்த இடம் மஞ்சனக்காரத் தெரு, மதுரையின் கோட்டை கொத்தளங்கள் இருந்ததின் அடையாளமாக நான்கு வாயில்கள் இருந்த பகுதி கீழவாசல், மேலவாசல், தெற்குவாசல், வடக்கு வாசல் என்று இன்றளவும் அழைக்கப்படுகின்றன.

மதுரை சக்திரீதியாக வலிமையோடு மன்னர்கள் ஆண்டதை அறிவது போல பக்திரீதியாகவும் வழிபாடுகளும் கோவில்களும் நிறைந்து இன்றும் உயிர்ப்புடன் தனது வாழ்வைத் தொடர்கிறது. உலகப்புகழும் பின் தொடர்கிறது.

ஆதியில் மதுரை எப்படிக் கோவில்களும் பூசனைகளும் நிறைந்திருந்ததோ அந்தத் தொன்மம் இன்றும் தொடர்கிறது. பெருந்தெய்வக் கோவில் களான மீனாட்சி, சிவன், திருமால், பிள்ளையார், முருகன் கோவில்களைப் போலச் சிறு தெய்வங் களான பத்திரகாளி, மாரியம்மன், வீரபத்திரன், பேச்சியம்மன், முனீஸ்வரன் இடைநிலைத் தெய்வ மான பைரவர் கோவில்களிலும் பூசனைகள் நித்தமும் நடைபெறுகின்றன.

சிறு தெய்வங்கள் நாட்டார் வழக்கியல்படி கிராமத் தெய்வங்களாகும். நகர்ப்புறம் நோக்கிப் புலம்பெயர்ந்த கிராம மக்கள் தங்களுடன் இத் தெய்வ வழிபாடுகளையும் எடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இம்மாதிரியான சிறு தெய்வங்கள் குடும்பத் தெய்வங்கள், குலதெய்வங்கள், ஊர்மக்கள் அல்லது அப்பகுதிகளில் உள்ளவர்கள் தோற்றுவித்த ஊர்த் தெய்வ வழிபாட்டுக் கோவில்கள் என்று பலவகை களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஊரின் நடுவே உள்ள கோவில்கள் மந்தைக்கோவில்கள் எனப்படும்.

ஒவ்வொரு சாதியிலும் பல குலப்பிரிவினைகள் உள்ளன. ஒவ்வொரு குலத்துக்கும் இடுகுறியாக அல்லது அடையாளப்படுத்துவதாகப் பல பெயர்கள் உண்டு. மதுரை மட்டுமல்லாது தமிழகத்தில் பல பகுதிகளிலும் வாழ்கிற சௌராஷ்டிர இனமக்கள் தங்கள் குடும்பப் பெயர்களாக லகுடுவா, குட்டுவா, கந்தாள்ளு, சித்து, போன்ற பெயர்களைக் கொண் டிருப்பதைக் காணலாம்.

பலகுலங்களில் ஒவ்வொரு குலத்திற்கும் தனித்தனியாக வழிபடு குல தெய்வங்கள் உண்டு. இம்மாதிரி ஒரே குல தெய்வத்தை வணங்குகிறவர்கள் பங்காளிகள் என்று அழைக்கப்படுவார்கள்.

“அஞ்சுவயதில் அண்ணன் தம்பி

பத்துவயதில் பங்காளிகள்”

என்ற பழமொழியே உண்டு.

ஒரே குலதெய்வத்தை வழிபடுவோர் தங்களுக்குள் மணஉறவு கொள்ள மாட்டார்கள்.

சில இடங்களில் செல்வாக்கு மிக்கவர்கள் தோற்றுவித்த குலதெய்வக் கோவில்கள் ஊராருக்கே வழிபாட்டுக் கோவில்களாக மாறுவதும் உண்டு.

இம்மாதிரியான கோவில்கள் ஊரின் நடு மையத்தில் அமைந்து விடும்போது எல்லா மக்களும் வழிபடுகிற பொதுக்கோவில் நிலையைப் பெற்று விடுகின்றன. மதுரை, தெற்குமாசி வீதி, தலையாரி குருநாதன் கோவில், வடக்குமாசி வீதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவில் போன்றவை இதற்கு உதாரணங்களாகும்.

சிறு தெய்வ வழிபாட்டில் பெண் தெய் வங்கள் நிறைய உண்டு. காளி, மாரி, சீலைக்காரி, தொட்டிச்சி, ராக்காயி, பேச்சியம்மன், சாமுண்டீஸ்வரி, ஒச்சாண்டம்மன், மகமாயி அம்மன், மந்தையம்மன் என்று பல தெய்வங்கள் உண்டு.

ஆனால் பெருந்தெய்வ வழிபாட்டில் பார்வதி, லட்சுமி, சரஸ்வதி என்ற பெயருடையவர்கள் மட்டும் உண்டு. இவைகளை முப்பெருந்தேவியர் என்று கூறுகின்றனர். இதில் பார்வதியை, துர்க்கை, வராஹி, வைஷ்ணவி என்று பல பெயர்களில் வணங்குகின்றனர். அண்மைக் காலமாக பைரவி, பவித்ரா என்று வடமொழிப் பெயர்கள் அதிகம் வழங்கப்படுகின்றன. இவைகள் வேதங்கள் கூறுகிற படி நடக்கும் கோவில்களாகும். பிள்ளையார் வழிபாடு கி.பி. 640-இல் தான் தமிழகத்துக்கு வந்தது.

சிறு தெய்வ வழிபாட்டில் பெண் தெய்வங் களுக்குத் திருமணச் சடங்குகள் கிடையாது. ஆனால் பெருந்தெய்வ வழிபாட்டில் பெண் தெய்வங்களுக்கு ஆண்டுதோறும் திருமணம், வளைகாப்பு முதலிய வைபவங்கள் நடைபெறுகின்றன. இந்தத் திருமணங் களில் பக்தர்கள் காணிக்கையை “மொய்” என்ற பெயரில் வழங்குகின்றனர். இம்மாதிரி திருமணங் களில் ஆண் கடவுளான சிவனோ, திருமாலோ, முருகனோ சம்பந்தப்பட்ட பெண் தெய்வங்களான பார்வதி, லெட்சுமி, தேவயானை அல்லது வள்ளி ஆகியவர்களுக்குத் தாலி கட்டுவார்கள். பிள்ளை யாருக்கும் தற்போது மணவிழாக்கள் நடைபெறு கின்றன. புராணப்படி பிள்ளையார் பிரம்மச்சாரி.

இதில் முருகன் தெய்வயானை, வள்ளி இரு மனைவியருக்கும் தாலி கட்டுவது குறிப்பிடத்தக்கது.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சிறு தெய்வங்களான பத்திரகாளி, வீரபத்திரர் ஆகியவர் களுக்குத் தனி சன்னதி இருந்தாலும் இவர்களுக்குத் திருமணச் சடங்குகள் கிடையாது. பத்திரகாளியும், வீரபத்திரரும் சகோதர முறை என்பார்கள்.

பெருந்தெய்வக்கோவில்களில் அபிஷேகம் ஆராதனை முதலிய பூஜைகளை பிராமணர்கள் மட்டுமே மேற்கொள்கிறார்கள். இவர்களுக்கு குருக்கள், சாஸ்திரிகள், பட்டர்கள் என்ற பெயர்கள் உண்டு.

ஆனால் சிறு தெய்வ வழிபாட்டில் இத்தெய் வங்கள் எந்த சமுதாயத்தைச் சார்ந்தவர்களால் நிறுவப்பட்டதோ அந்தச் சமூகத்தவரே பூசனை செய்கிறவர்களாக இருக்கிறார்கள். தலித் கோவிலில் ஒரு தலித் சமூகப் பெரியவரும். விஸ்வகர்மா கோவில் களில் ஆசாரி சமூகத்தவரும் இதுபோல பூசாரிகளும் இருப்பார்கள். இச்சமூகத்தினர் வீட்டு விசேஷங் களில் இப்பூசாரிகளே முதலிடம் பெறுவார்கள். இவர்கள் பிராமணரல்லாத சமூகத்தவர் ஆவார்கள். இவர்கள் கோவில்களில் அருளாடிகளாக இருந்து ஆரூடம், குறி சொல்வதும் உண்டு.

அரசர்களும், அதிகாரிகளும் பெருந்தெய்வக் கோவில் விழாக்களைப் பிறர் மூலம் நடத்தும் போது சிறு தெய்வக் கோவில்களில் மக்களே முன் நின்று விழா வேலைகளைப் பங்கீடு செய்து நடத்துகின்றனர்.

பெருந்தெய்வக் கோவிலில் படையலாக பிரசாதம் என்று சைவ உணவே பரிமாறப்படும் போது சிறு தெய்வ வழிபாட்டில் சைவம் அசைவம் (இறைச்சி) உணவுகள் பரிமாறப்படும். பெருந் தெய்வக் கோவில்களில் பிரசாதம் தயாரிக்க மடப் பள்ளிகள் என்ற தனியாகச் சமையல் கூடம் உண்டு.

சிறு தெய்வங்களுக்கு வரலாறும் ஜெனனமும் மரணமும் உண்டு. சாமி வந்து அருளாடி ஆசி வழங்குதல் நிகழ்கிறது. ஆனால் பெருந்தெய்வ வழிபாட்டில் சிவனோ, கிருஷ்ணனோ, பிள்ளை யாரோ அல்லது பெண் கடவுளரான பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோர் எவர் மீதும் அருள் வந்து ஆடியதாக வரலாறு கிடையாது.

பெருந்தெய்வங்களுக்கு ஸ்தல புராணம், புராண வரலாறு, வேதக் கதைகள் உண்டு. ஆனால் சிறு தெய்வங்களுக்கோ செவி வழி (கர்ணபரம்பரை)க் கதைகள், நாட்டுப் புறப்பாடல்கள் நிறைய உண்டு. இவைகளின் மூலமாக அக்காலச் சமுதாய வரலாறு களையும் நாட்டார் வழக்குகளையும் தொன்மம் குறித்த செய்திகளையும் நிறைய அறியலாம்.

பெருந்தெய்வக் கோவில்கள் ஆகமம், சாஸ்திரம், சிற்ப சாஸ்திரம், சகுன வகைகள் அறிந்த பிறகே பூஜை புனஸ்காரங்கள் செய்தபின் எழுப்பப்படும்.

ஆனால் சிறு தெய்வக் கோவில்கள் வடிவமற்றகல், மரத்தின் வேர்கள், மாடங்கள், சதுரமான பீடங்கள், மண் உருவம், கல்சிற்பம், செம்பு, வெண்கலப் படிவங் களால் செய்யப்பட்டு ஊர்ப் பெரியவர்கள் முன்னி லையில் நிறுவப்படும்.

இம்மாதிரி நிறுவப்படுகின்ற நிலை இருந்தாலும் கூட வழிபடும் கிராமத் தெய்வங்களுக்கு இதுதான் இருப்பிடம் என்றில்லை. ஆற்றங்கரையோரம், வயல் வெளிகள், சுடுகாடுகளின் பாதையில், அல்லது மூலக் கோயிலில் பிடிமண் எடுத்து வந்தோ அல்லது இயற்கையாகவே அமைந்தோ கூட கோவில்கள் எழுப்பப்பட்டிருக்கும். பெரும்பாலும் வயற்காடு களுக்கு நடுவேதான் இருக்கின்றன.

இத்தெய்வங்களைக் கண்டு தவறு செய்தவன் தான் அஞ்சவேண்டும். நான் தான் எந்தத் தவறும் செய்யவில்லையே என்று நம்பி வழிபடுகிறவர்கள் அநேகம். இதுதான் கடவுள் என்றோ இப்படித் தான் உருவகம் என்றோ எவரும் வரையறுப்ப தில்லை. சில இடங்களில் பீடங்களோ, அல்லது சூலாயுதங்களோ இருக்கும். சிறிய செங்குத்தான தூண் போன்ற கல் உச்சியில் குழிவாக இருக்க அதில் எண்ணெய் ஊற்றித் திரி ஏற்றி வழிபடுவார்கள். சூலாயுதத்தில் எலுமிச்சம் பழத்தைக் குத்திச் செருகி இருப்பார்கள். அடுத்து ஒருவர் வந்து எலுமிச்சைப் பழத்தைச் சொருகுகிற வரை அது காய்ந்தே இருக்கும். பீடத்தில் சந்தனம் தடவிக் குங்குமத்தைத் தடவி இருப்பார்கள். வேப்பமரங்களில் ஜரிகைத் துணியைக் கட்டி வேப்பிலைக் காரி என்று வழிபடுவார்கள்.

குலதெய்வங்களைத் தங்களின் நீதிமன்றங்களாகக் கருதிக் கும்பிடுபவர்களும் உண்டு. தங்களுக்கு எவராவது தீமை செய்தாலோ, துரோகம் இழைத் தாலோ கோவில் வாசலில் கிடக்கும் மண்ணை எடுத்து வானத்தை நோக்கி வீசித் தூற்றி விட்டுப் போவார்கள். சொத்துக்களை மோசம் செய்யப் பட்டவர்கள் கால் ரூபாய்க் காசைக் கல்லில் வைத்து உளியால் வெட்டி நீதான் கேட்கணும் என்று சொல்வதும் உண்டு.

சில குடும்பங்களில் கன்னிப்பெண் இறந்திருந் தால் அவளது ஆடைகளை, காதோலை, கருகு மணி வைத்து வழிபடுபவர்களும் உண்டு. இவர் களைக் கன்னித் தெய்வம். கன்னிகா ஈஸ்வரி என்பர்.

சப்பாணி, கருப்பன் போன்ற தெய்வங்களுக்கு சுருட்டு, சாராயம் படைப்பதால் நன்மை சேரும். நோய் விலகும் என்று நம்புகின்றனர்.

சில நேரங்களில் தாங்கள் வேண்டியது நடக்கா விட்டால் நான் என்ன குறை வச்சேன்? கண்ணு தெரியலியா? என்று உரிமையோடு கடவுளர்களைத் திட்டுவதும் உண்டு.

 பெண்கள் தூரமான நாட்களில் கோவில் பக்கம் போகமாட்டார்கள். அதே நேரத்தில் குடும்பத்தில் யாராவது இறந்து விட்டால் வீட்டில் தீட்டு என்று கோவிலுக்குப் போகாமல் காணிக் கையை மட்டும் கொடுத்து அனுப்புவார்கள்.

வறுமை இருந்தாலும் குல தெய்வக் கோவில் காணிக்கைக்கு மட்டும் எப்படியாவது நாலு காசு சேர்த்து மாசிக்களரியன்று உண்டியலில் சேர்த்து விடுவார்கள். இந்த அளவிற்குச் சிறு தெய்வ வழி பாட்டு உணர்வு குருதியோடு கலந்திருக்கிறது.

மதுரை நகரம் ஒரு காலத்தில் பெரிய கிராம மாக இருந்தது. இயற்கையின் மீதான பக்தியும், தெய்வ நம்பிக்கையும், நேர்மையும், தான் பசி கொண்டாலும் பிறர் பசியைக் காணப் பொறாத பரந்த உள்ளமும் கொண்டிருந்தனர். வணிக நேர்மை இருந்தது. பக்கத்துக் கிராமங்களில் விளைந்த பொருட்களைச் சந்தைப் படுத்துவதற்காக மதுரையைத் தான் நாடியும் நம்பியும் வந்தனர். இன்றும் அது தொன்ம வழக்கமாக நீடித்து வருகிறது.

இப்படி வருகிறவர்களும் குடியேறிவர்களுமான பிராமணரல்லாத ஜனங்கள் ஆங்காங்கே தங்களின் வாழ்வு காக்கப்படவும், குடும்பச் செழிப்புக்கும் சிறு தெய்வ வழிபாட்டுக் கோவில்களை நிறுவினர். அக்கோவில்களைத் தங்கள் குல வழக்கப்படியும், சமூக அடிப்படையிலும் அமைத்துப் பெயர்களும் சூட்டினர். இதற்கான வழிபாட்டு முறைகளை கண்ணப்பவேடன் போலத் தாங்களாகவே அமைத்தும் வழிபட்டனர்.

இன்று நூற்றாண்டுகளைக் கடந்தும் அம்மாதிரி அமைந்த பல கோவில்கள் மதுரையில் கிராமத் தன்மைக்குக் கட்டியம் கூறுகின்றன. இன்றும் குறிப்பிட்ட சமூக மக்கள், அல்லாமல் ‘பல ஜாதி’ மக்களும் வந்து வழிபடுகிற புகழ் கொண்ட ஆலயங் களாக நிலைத்து அருள் பாலிப்பதாக மதுரை வாசிகள் கூறுகின்றனர். இப்படிச் சிறப்புடைய சில கோவில்களின் சிறப்பு பற்றிய ஒரு பருந்துப் பார்வையே இக்கட்டுரை.

மதுரையின் நான்கு திசைகளும் காவல் தெய்வங்களால் நின்று காக்கப்படுவதாக மக்கள் நம்புகின்றனர். மேற்கே கோச்சடை முத்தையா, கிழக்கே தெப்பக்குளம் (வண்டியூர்) மாரியம்மன், தெற்கே வெயில் உகந்த அம்மன், வடக்கே தல்லா குளம் கருப்பணசாமி என்று உதாரணம் காட்டு கின்றனர்.

மதுரையின் மேற்கே கோச்சடை வைகை நதியின் தென்கரையில் உள்ள ஒரு கிராமம். பாண்டிய மன்னர் கோச்சடையவர்மனின் தலை நகராக இருந்தது. இங்கே உள்ள சிறு தெய்வக் கோவில் வில்லாயுதமுடைய அய்யனார் கோவில் என்று அழைக்கப்படுகிறது. மூலவராக அய்யனார் இருந் தாலும் பிரதான தெய்வங்களாக முத்தையா சுவாமியும் கருப்பையா சுவாமியுமே பெரிதும் வணங்கப்படுகிறார்கள். கோச்சடை கிராம மக்களின் அதி தேவதைக் கோயிலான இக்கோயில் வடக்குப் பார்த்த நெடிய வாயிலும் ஒரு ஏக்கருக்கும் மேலான பரப்பில் உயர்ந்த மதில் சுவர்களும் கொண்டுள்ளது.

கோச்சடை, புன்னைய நேந்தல், கந்தப்ப கோட்டை, சம்பக்குடி பிள்ளைமார் உள்ளிட்டவர் களால் பராமரிக்கப்படும் இக்கோவிலில் சிறு தெய்வப் பட்டியலில் இடம்பெறும் அத்தனை தெய்வங்களும் உருவங்களாக வடிக்கப்பட்டு வணங்கப் படுகின்றன. முனியாண்டி, அய்யனார், சோணை, குருவாச்சியம்மன், ஆதி பூசாரி, சன்னாசி, இருளப்ப சாமி, நாகப்பர், பத்திரகாளி வீரபத்திரர், அங்காள ஈஸ்வரி, பேச்சி, ராக்காயி, இருளாயி, கருப்பண சாமி சன்னதிகளும், பாம்புப் புற்றும் நாகர் சிலைகளும் கொண்டுள்ளன. கோவிலின் உள் நுழைவு முகப்பின் இரண்டு பக்கங்களிலும் பிரம் மாண்டமான உயரத்தில் குதிரை, யானை சிலை களும் அவற்றின் கால்களின் நடுவே வீரபத்திரர், பத்திரகாளியும் காட்சி தருகின்றனர்.

பெருந்தெய்வங்களான பிள்ளையார் முருகன் களுடன் இடைநிலைத் தெய்வங்களான பைரவர், மாரியம்மன் உருவங்களும் உள்ளன.

இக்கிராமத் தெய்வமான முத்தையா வழிபாடு தென்மாவட்டங்களிலும் மதுரையிலும் புகழ் மிக்கதாகப் பேசப்படுகிறது. புதிதாக வாகனங்கள் வாங்குபவர்கள், வீடு கட்டுபவர்கள் இங்கே சாவிகளை வைத்து வழிபடுவதும் உள்ளே உள்ள மண்டபத்தில் திருமணச் சடங்கு செய்வதும் நிகழ் கின்றன. இம்மாவட்டத்தில் நூற்றுக்குப் பத்து விழுக்காடு மனிதர்களாவது முத்தையா என்ற பெயரைத் தாங்கி வாழ்ந்து வருகின்றனர்.

மார்பில் கவசத்தோடும் கழுகு இறக்கை செருகிய தலைப்பாகையும் சல்லடமும் இடுப்பில் கச்சையும் உடைவாளும் வலக்கையில் வேல் கம்புமாக நிற்கும் முத்தையா உருவைப் புகைப்படம் எடுத்து லாமினேட் செய்து தங்கள் வணிக நிலையங் களிலும் வீடுகளிலும் வைத்து வழிபடும் கோச்சடை மக்கள் இக்கோவிலில் பூப் போட்டுப் பார்த்துத் தான் எந்தச் செயலையும் முடிவு செய்கின்றனர் சில பெரியவர்கள்.

மதுரை முடக்குச் சாலை பென்னர் தொழிற் சாலை மதில் சுவரை ஒட்டியபடி அருள்மிகு காளி யம்மன் கோவில் அமைந்து உள்ளது. இருபதாண்டு களுக்கு முன் சிறிய பீடமும் பாம்புப் புற்றும் மட்டுமே கொண்ட இக்கோவில் இன்று விரிவாகக் கட்டப்பட்டு சிவன், நவக்கிரகங்கள், நாகர் சிலை களுடன் இப்பகுதி மக்களுக்காக அருள் பாலித்துக் கொண்டிருக்கிறது.

மதுரை புறவழிச்சாலையில் மரங்களும் செடி கொடிகளும் மண்டிக்கிடந்த ஞ.சு.ஊ. அலுவலக தென்புறத்தில் கடந்த பத்து ஆண்டுகள் வரை சூலாயுதமும் பீடமுமாகக் காட்சி தந்த கருப்புக் கோவில் இன்று திரளான மக்களின் தினமும் தரும் வருகையினாலும், நேர்த்திக் கடன் நிறைவேறி யதான நம்பிக்கையாலும் பிரபலமாகி இன்று ஆள் உயரச் சிலையோடும் கையில் கம்பும் கொண்டு

அ/மி கருப்பண்ணசாமி ஆலயமாக உயர்ந்துள்ளது. அருகில் உள்ள போக்குவரத்துத்துறை அலுவலகத்தில் ஆர்.சி. புத்தகமும் உரிமமும் பெறுபவர்கள் இக் கோவிலில் வைத்துக் காணிக்கை செலுத்தி எடுத்துச் செல்வது புதிய மரபாகி வருகிறது.

மதுரையின் புதுஜெயில் பகுதி மதுரையின் காட்டு எல்லையாக இருந்தது. அடர்ந்த மரங்களும், வயல்களும் ஆதி மக்கள் வேட்டைக்களமுமாக இருந்த முரட்டம் பத்திரிப் பகுதியில் உள்ள பழமை யான காளி கோவில் வனபத்திரகாளி கோவில் ஆகும். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வட புறம் இருந்த சிறைச்சாலை இடம் மாறி இப் பகுதிக்கு வந்தபோதே இப்பகுதி காடாகத்தான் இருந்ததாக இப்பகுதிப் பெரியவர் கூறுகிறார். வளர்ந்து வரும் நகர்மயமாக்கலால் பாதி மரங்கள் ரயில்வே காலனிக்குள் அடைபட மீதி மரங்கள் காணாமல் போக வனபத்திர காளிவாசலும் புது ஜெயிலின் வாசலும் மட்டுமே ஒன்றை ஒன்று பார்த்தபடி நிற்கிறது. ஆண்டுக்கொரு முறை விழா நடக்கும் போதுமட்டும் பல ஊர்களிலிருந்தும் மனிதர்கள் கூடுவார்கள்.

கோவிலின் அமைப்பும் அமர்ந்த நிலை பத்திர காளி சிலையும் எதிரில் இருக்கும் சிங்க வாகனமும் மட்டுமே இப்பகுதி காடாக இருந்திருக்கும் என்று நம்ப வைக்கின்றன. எதிரில் உள்ள சிறையில் கைதிகள் விடுதலையாகும் போதும் உள்ளே போகும் போதும் வணங்கி வருகின்றனர்.

மதுரை அழகரடியில் உள்ள தங்க மாரியம்மன் கோவில் இப்பகுதி வாழ் இல்லத்துப் பிள்ளை மார்களாலும் தேவர் சமூகம் போன்ற பிற சமூகத் தவர்களாலும் வணங்கப்படுகிற கோவிலாகும். இக்கோவில் வரலாறு குறித்தும் இக்கோவில் விழாவில் கரகம் எடுத்துக் கரகாட்டம் ஆடியது பற்றியும் மதுரை, காமராசர் பல்கலைக் கழக மேனாள் பேராசிரியர் நா. வேலுச்சாமி (புலவர். நா. வேலவன்) எம்ஃபில் பட்ட ஆய்வு செய்துள்ளார். திராவிட இயக்கத்தின் ஆதி எழுத்தாளர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. நாராயண குருவிற்கும் இங்கே சன்னதி உண்டு.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதி முன்னாளில் கண்மாயாக இருந்தது. ஆள் உயரக் குழி வெட்டி உள்ளே உட்கார்ந்து மேலே செடி கொடிகளை வைத்து மறைத்துக் கொண்டு சீட்டாட்டம் நடக்கும். நகர விரிவாக்கத்தின் போது கண்மாய் வீடுகளாகி பெரிய தெருக்களும் சிறிய சந்துகளும் ஏழை நடுத்தர மக்களின் பகுதியாகிவிட்டது. ஆட்களின் புழக்கம் அதிகமாவதற்கு முன்பே இங்கு வீரமாகாளியம்மன் கோவில் இருந்தது. தெற்கே இருந்து பழைய பொருள் வாங்கி விற்கவும் பலசரக்குக் கடை நடத்தவும் மனிதர்கள் வந்த போது இக்காளியம்மன் கோவிலும் வளர்ச்சி பெற்று இன்று இக்கோவில் விழாக்களின் போது நடத்தப்படுகிற முளைப்பாரி ஊர்வலத்திற்

காகப் போக்குவரத்தையே மாற்றி விடுகிறது காவல் துறை. இந்தக் காட்சிகளை சுப்பிரமணியபுரம் என்ற திரைப்படம் மூலம் சினிமா உலகம் எல்லா ஊர்களுக்கும் பரப்பி உள்ளது.

பொன்மேனி முனியாண்டி கோவில் பைபாஸ் சாலையின் மேற்கே அமைந்துள்ளது. இப்பகுதிக்கே பொன்மேனி என்று தான் பெயர். இப்பகுதியில் ஆதி திராவிட மக்களும் பிற இன மக்களும் கலந்தே வாழ்கின்றனர். புதிதாக மாடு வாங்கியவர்களும் வீட்டில் விசேஷம் நடத்துபவர்களும் இப்பகுதியின் காவலாக உள்ள இக்கோவிலுக்குக் காணிக்கை செலுத்துவது எழுதப்படாத மரபாக உள்ளது.

பழங்காநத்தம் இருளப்பசாமி கோவில் பல தலைமுறைகளாக வழிபடப்படும் கோவிலாகும். சூலாயுதமும் பெட்டியும் வைத்துப் பெரிய மக்கள் பெருமளவில் வருகின்றனர். தீர்த்தவாரி பூர்வ புண்ணியதலம் என்று இக்கோவில் அழைக்கப் படுகிறது.

மதுரையின் பெருந்தெய்வமான மீனாட்சிக்கு அவள் பிறந்த வீட்டுச் சீதனமாக வழங்கப்பட்ட நிலங்களும் கிராமமும் “பிராட்டிபற்று” என்று பெயரிடப்பட்ட பகுதியாகும். இப் பெயர் காலப் போக்கில் விராட்டிபத்து என்று மாறியதாகக் கூறுகிறார்கள். இங்குள்ள மந்தைக்களத்தில் உள்ள முத்தாலம்மன் கோவில் சிறு தெய்வ வரிசையில் பேசப்படுகிற ஒன்றாகும். ஆறு கால பூஜையும் மூன்று வேளைப் படையலும் கொண்டு இக்கிராம மக்களின் வழிபாட்டைப் பெற்ற இக்கோவில் விழா மதுரையின் கவனத்தை ஈர்ப்பது. பூக்குழி இறங்குதல் என்று வழங்கப்படும் தீக்குண்டம் இறங்குதல் இவ்விழாவின் சிறப்பு. பல நூறு பேர் ஈர ஆடைகளோடு குஞ்சும் குளுவானுமாக தீயின் மீது நடந்து செல்வதைக் காணலாம்.

மதுரையின் வடபகுதிக் காவல் தெய்வம் என்று வர்ணிக்கப்படுகிறவர் தல்லாகுளம் கருப்பண சாமி; கள்ளர், மறவர், அகம்படியார், அம்பலகாரர் என்று பலராலும் பக்தியுடன் வணங்கப்படுகிற இக்கோவில் தமுக்கம் மைதானத்தை ஒட்டி அமைந் துள்ளது. வெளியே விரிந்தும் உள்ளே அறை போன்ற அமைப்பிலும் கொண்ட இக்கோவிலின் பிரதான தெய்வம் கருப்பணசாமி, மூன்றடி உயரத்தில் கரிய நிறத்தில் கச்சையும் சல்லடமும் கையில் அரிவாளுமாக முறுக்கிய மீசையுடன் திகழும் கருப்பணசாமியைப் பார்த்தால் நமது முன்னோர் ஒருவர் சினேக பாவத்தோடு நம் முன் நிற்பதைப் போல் தோன்றும். போக்குவரத்து அதிகமான தல்லாகுளம் பகுதியில் இருக்கும் இக்கோயிலில் சாதாரண நாட்களிலேயே கூட்டம் இருக்கும்.

சித்திரைத் திருவிழா நாட்களில் இக்கருப்பண சாமி போலவே வேடம் அணிந்து கால்களில் சலங்கையோடும், கையில் எண்ணெய் தடவி வழவழப்பாக்கப்பட்ட பூண்பிடித்த ஆள் உயரக் கம்போடும், கைகளை உயர்த்தியும் கண்களை உருட்டியும் கருப்பசாமி ஆட்டம் நடத்துவார்கள். இடது அக்குளில் ஆள் உயரமும் தடிமனும் கொண்ட எரிகிற தீப்பந்தத்தைச் சுமந்து அருளாட்டம் நடக்கும். அப்போது அவர்களிடம் குறி கேட்கவும் அவர்கள் கூறும் அருள்வாக்கைக் கேட்கவும் சாதிபேத மில்லாமல் கூட்டம் சூழ்ந்து நிற்கும்.

அழகர்கோவிலின் பதினெட்டாம்படிக் கருப்பண சாமியே இத்தெய்வம் என்பாரும் உள்ளனர். முக் குலத்தோர் சமூக மக்களின் குல தெய்வமாகவும், இஷ்ட தெய்வமாகவும் இக்கோவில் உள்ளது. செட்டி யார்கள் சிலருக்கும் இது குல தெய்வமாக உள்ளது.

சௌராஷ்டிரா சமூகத்தினருக்குச் சொந்த மான சின்னக்கடைத்தெரு தசகாளி அம்மன் கோவில், மதுரை ஆதீனம் அருகே உள்ள ஜடாமுனிக் கோவில் மிகவும் பெயர் பெற்றவைகளாகும்.

தெற்காவணி மூல வீதி தொட்டிச்சி அம்மன் பழமை வாய்ந்த வழிபாட்டுத் தலமாகும்.

மதுரை வடக்கு ஆவணி மூல வீதி 1896இல் துவங்கிய பழமையான பொன்னையங்கார் பள்ளிக் கூட வாசலில் உள்ள காளியம்மன், மாரியம்மன் இரட்டைக்கோவில் குறிப்பிட்ட சமூகத்தவர்க்கானது என்றாலும் பொதுக் கோவிலாகவும் உள்ளது.

மதுரை தெற்கு வெளி வீதியில் மின்னாநூற்தீன் பள்ளிவாசல் மருதுபாண்டியரின் கொடையால் சிறப்பு பெற்ற ஒன்று. இதன் கீழ்ப்புறம் சப்பாணி கோவில் தெரு உள்ளது. இப்பகுதி மக்களின் இஷ்ட தெய்வமும் சிலருக்குக் குலதெய்வமுமான சப்பாணி சாமியின் கோவில் நூற்றாண்டு பழமை மிக்கது. துடியான சாமி என்று வர்ணிக்கப்படும் சப்பாணியை வழிபட்டால் அனைத்துத் துன்பங் களும் நீங்குமென்று இப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.

மதுரை நாயக்க மன்னர்களால் ஆளப்பட்ட போது புதுமண்டபம் எதிரிலும் அம்மன் சன்னதி எதிரிலும் வானளாவிய கோபுரங்கள் கட்டுவதற்காக ஏற்பாடு செய்தனர். ஆனால் என்ன காரணத் தாலோ அவைகள் கட்டப்படாமல் விடுபட்டு விட்டன. எழுகடல் தெருவில் கோபுரம் கட்டுவதை அப்பகுதியில் உள்ள தெய்வம் ஒன்று தடுத்ததாகவும், அம்மன் சன்னதி எதிரில் கோபுரம் கட்டுவதை அஸ்திவார நிலையிலேயே முனி ஒன்று தடுத்து விட்டதாகவும் செவி வழிக்கதைகள் உண்டு. இதற்கு ஏற்றாற் போல அம்மன் சன்னதி எதிரில் கட்டப்படாது விட்டு விட்ட கோபுர வாசலின் மாடத்தில் முனீசுவரர் வழிபாடு நடக்கிறது. பீடத்தில் விளக்கு வைத்து வழிபடுதல் என்ற சிறு தெய்வ இலக்கணப்படி இம்மாடத்தில் சந்தனம் குங்குமம் தடவி நித்தமும் பூஜை நடக்கிறது. விட்ட வாசல் முனீசுவரர் கோவில் என்ற இக்கோவிலில் மாசி சிவராத்திரியை ஒட்டிப் பத்து நாள் விழாக் களிலும் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசுவதை “மதுரையின் ஆன்மிக இலக்கியப் பேச்சாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு பெருமையாகக் கருதுகிறார்கள். சிறிய கோபுரம் சுவரோடு எழுப்பப்பட்டு எந்நேரமும் விளக்கு எரிகிறது.

ஆறு வீதிகள் சந்திக்கிற ஆறுமுச்சந்தி மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் பின்புறம் அமைந்த பரபரப்பான பகுதியாகும். இவ்வீதியின் வடபுற வீதியில் வைகைக் கரையோரம் அமைந்த பேச்சியம்மன் கோவில் மூடப்படும் நேரம் தவிர்த்த பிற நேரங்களிலெல்லாம் கூட்டம் திரளுகிற ஒன்று. பள்ளமான மூலஸ் தானத்தில் கையில் சூலமேந்திக் கோரைப் பற்களோடு கண்களை விழித்தபடி நிற்கும் பேச்சியம்மன் மதுரைப் பெண்களின் இஷ்ட தெய்வமாவாள். கற்பூரமும் பாலாபிஷேகமும் நிகழ நிற்கும் பேச்சியம்மன் பேச்சாற்றல் வழங்குகிறவள் என்பதால் சிறு பிள்ளை களுக்கு அபிஷேகப்பால் ஊட்டுகிற தாய்மார்களின் கூட்டத்தை இங்கே காணலாம்.

பேச்சியம்மனின் வலதுபுறம் வெளிப்பிரகாரத்தில் நாகம்மாள் சன்னதியில் முட்டைகளை வைத்தும் பால் ஊற்றியும் மஞ்சள் பூசியும் வழிபாடு செய் கின்றனர். பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் புற்று நாகத்திற்கு முட்டையும் பாலும் வைத்தால் நாக தோஷம் நீங்கும் என்பது இவர்களின் நம்பிக்கை.

மதுரையின் மேன்மையே நீதிக்காக உயிர் விட்ட மன்னன் வாழ்ந்த பூமி. சோனகரும், யவனரும் வணிக நிமித்தம் வந்த ஊர் என்பதாகும். பூம்புகாரில் வாழ்வைத் தொலைத்த கண்ணகி கணவன் கோவல னோடு இழந்த வாழ்வை மீட்டெடுக்க மதுரைக்குத் தான் வந்தாள். வருவாரை வருகவென்றழைக்கும் விதத்தில் ஆடும் பலவண்ணக் கொடிகளும் கோட்டை கொத்தளங்களும் நாளங்காடி (பகல் நேர) கடை களும் அல்லங்காடி என்னும் இரவில் வணிகர்கள் நடத்தும் கடைகளும் மதுரைப் பொருளாதார மேன்மையைப் புலப்படுத்துகின்றன. இசைவாணர் களின் யாழொலியும் குரல் விற்பன்னர்களின் இசைப் பாடல்களும் ஒலிக்கும் மதுரைத் தெருக்களில் சிலம் பொலிக்க வந்த கண்ணகியை இன்றைய வடக்கு மாசி வீதியான அன்றைய பகுதியில் கோவலன் இடைக்குலமங்கை மாதரி வசம் அடைக்கலமாக ஒப்படைத்த பின் நகருக்குள் சென்றதாகச் சிலப்பதி காரத்தின் மதுரைக் காதை பகர்கிறது.

சிலம்பு விற்கக் கோவலன் பொன் வணிகர் உலவும் பகுதிக்குச் சென்ற போது கண்ணகியைத் தேற்றியவர்கள் இடையர் குலமென்னும் யாதவர் குல மக்கள் தான். கண்ணகிக்கு அடைக்கலம் கொடுத்த செல்லியம்மன் தான் இன்று செல்லத்தம்மன் ஆகக் கோவில் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு முலை எறிந்து மதுரையை எரித்த திருமா பத்தினி கண்ணகி, பசு, பத்தினிப் பெண்டிர், அறவோர், அந்தணர், குழந்தைகள் நீங்கலாகத் தீத்திறத்தார் பக்கமே சேர்க என்று கூறி மதுரையை எரித்த போது எரியாத பகுதிகளில் இப்பகுதியும் ஒன்று.

இப்பகுதி இன்று செல்லத்தம்மன் கோவில் தெரு என்று அழைக்கப்படுகிறது. பத்தினிக் கண்ணகிக்குத் திருவுருவச் சிலை இங்கே தான் உள்ளது. இன்று பல குலப்பெண்களும் திரண்டு வந்து திருவிளக்கு வழிபாடும் விழாக்களுமாக அமர்க்களப்படுத்துகின்றனர். சிலப்பதிகாரத்தோடு தொடர்புடைய இப்பகுதியின் இக்கோவில் சிறு தெய்வக் கோயில்களில் சிறப்பிடம் பெறுகிறது.

ஆயிரம் வீடுகளைக் கொண்ட யாதவர்கள் தீப்பந்த வெளிச்சத்தில் இராமாயணம் படித்து விரிவுரை சொல்லிய இராமாயணச் சாவடி இப் பகுதியில் தான் உள்ளது. பெருந்தெய்வம் திருமால் பற்றிய அழகர்வர்ணிப்புப் பாடலை இப்பகுதிப் பெரியவர்கள் இசையோடு பாடக்கேட்பது மன திற்குக் கிளர்ச்சியூட்டுவதாகும்.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் நுழைவு வாயிலில் உள்ள தேரடி முத்தையா சன்னதியும் வெண்ணெய்க்காளியும் சிறு தெய்வ வரிசையில் இடம்பெற்றவர்கள். இவர்களை வழிபட்ட பின்னரே இன்றளவும் மக்கள், பெருந்தெய்வம் முருகனைக் காணச் செல்கின்றனர்.

இப்பகுதி புகைவண்டிப் பாதை அருகே அமைந்த வெயில் உகந்த அம்மன் மதுரையை நோக்கிய வாறு நின்ற கோலத்தில் வடிக்கப்பட்டுள்ளாள். நாள்தோறும் பொங்கலிடல், காது குத்துதல், அன்னதானம் என்று இக்கோவில், மக்களால் நிறைந்து நிற்கிறது.

எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற மனச்சிக்கலிலும் வாழ்க்கைப் போராட்டங்களிலும் தங்களை வருத்திக் கொள்கிற மக்களின் கடைசி நம்பிக்கை தெய்வ நம்பிக்கை என்று மானுடவிய லாளர் கூறுகின்றனர். சிறு தெய்வங்களே தம்மை விரைவில் காக்கும் என்ற முடிவில் தான் மக்கள் ரேஷன் பொருளும், ஏன் ஆதார் அட்டை கிடைக்கா விட்டால் கூடக் குறிகேட்கிற நிலைமையில் உள்ளனர், ஜோதிடம், முத்துப் (சோழி) போட்டுப் பார்த்தல், அலகு குத்துதல், காவடி சுமத்தல், பாதயாத்திரை செல்தல் போன்றவற்றால் தங்களின் வாழ்க்கைச் சிக்கல் தீரும் என்று நம்புகின்றனர்.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கிழக்குக் கோபுர மதில் சுவரை ஒட்டி இருப்பவைகள் சுடலை மாடன் கோவிலும் மதுரை வீரன் கோவிலுமாகும். திருமலை மன்னர் மதுரையை ஆண்ட போது அவரிடம் காவல் வீரனாக இருந்த அருந்ததியர் சமூகம் சார்ந்த மதுரை வீரன் மீது தளபதி சூழ்ச்சி யாக மன்னரிடம் பழி கூற மன்னர் மதுரை வீரனுக்கு மாறுகால் மாறுகை வாங்கக் கட்டளை யிட்டதாகவும் இவ்வாறே வெட்டுப்பட்ட மதுரை வீரனுடன் அவனது மனைவியர் வெள்ளையம் மாளும் பொம்மி என்பாளும் உயிர் நீத்தனர். பின்னர் மன்னர் தனது தவறுணர்ந்து தளபதியைத் தண்டித்த பின் மதுரை வீரனுக்குச் சிற்றாலயம் எழுப்பியதாகவும் மதுரை வீரன் கதை கூறுகிறது.

தலித்களும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களும் நாள் தோறும் வந்து வணங்குகிற இக்கோவில் மதுரை வரலாற்றோடு சம்பந்தப்பட்டது என்பார்கள். தாழ்த்தப்பட்டவர்கள் அரண்மனை வேலைக்கு வரக்கூடாது என்ற உயர் சாதி சூழ்ச்சி தளபதி மூலம் நிறைவேறியதாகச் சொல்லப்படுவது கூர்ந்து கவனிக்கத்தக்கது.

திருமலை நாயக்கர், பண்டார வகுப்பினர்கள், பிற்பட்டவர்களை அரசுப் பணி, ஆலயப் பணிகளில் ஈடுபடச் செய்ததாகவும், இது பிடிக்காத உயர் சாதி மனிதர்கள் அவர் தனது அரண்மனையிலிருந்து மீனாட்சியம்மன் கோவிலுக்கு வருகிறபோது சுரங்கப் பாதையை மூடிவிட்டதாகவும் மதுரையில் ஒரு கதை உண்டு. இச்சுரங்கப் பாதை சொக்கநாதர் சன்னதியின் வடபுறம் மகாலெட்சுமி சன்னதி அருகே “பொற்படியான்” என்ற சிறிய கதவை உடையதாக உள்ளது. சுரங்க வாயிலைக் கூட பொற்படியான் சன்னதியாக்கிவிட்ட புத்திசாலி களின் சாகசம் உண்மையிலேயே வியப்பைத் தருகிறது. இதை வரலாற்றாய்வாளர்கள் சுரங்கப் பாதையைத் திறந்து ஆய்வு செய்ய வேண்டும்.

மதுரை மீனாட்சியம்மன் கோவில் வடக்குப் பகுதி கோபுர வாயிலின் மேல்புறம் வடக்குக் கோபுரம் என்கிற மொட்டைக் கோபுரம் முனீஸ்வரர் கோவில் உள்ளது. மொட்டைக் கோபுரம் என்ற பெயருக் கேற்ப இக்கோபுரத்தில் பிற கோபுரங்களைப் போலச் சுதைச் சிற்பங்கள் கிடையாது. மாடம் போன்ற அமைப்பும் தூண்களும் அமைந்துள்ள கோபுரத்தில் வெள்ளி செவ்வாய் மற்றும் விழா நாட்களில் கோபுரத்தின் உச்சியிலிருந்து முனீஸ்வரர் சன்னதி வரை பூ மாலைகள் பூச்சரங்களாய்த் தொங்கி நிற்கும். சிறிய பலிபீடமும் ஒரு ஆள் மட்டுமே அமரக்கூடிய இடத்தில் முனியாண்டி சிலையும் அலங்காரத்தோடு அமைந்துள்ளது. மதுரையைச் சுற்றியுள்ள முனீஸ்வரர் கோவில்களுக்கெல்லாம் இந்த முனீஸ்வரரே தலைமையாக உள்ளார் என்று நம்புகின்றனர்.

சிலையின் இரு பக்கங்களிலும் கதைகள், அரிவாள்கள் உள்ளன. முறுக்கிய மீசையும் வீரத்தை வெளிப்படுத்தும் விழிகளும் கவசங்களோடும் பாதுகைகளோடும் நிற்கும் முனீஸ்வரர் கோவிலை நெருங்கும் போதே பெண்கள் சிலர் குலவையிடு வதையும் சாமியாடுவதையும் காணலாம்.

இக்கோவில் மூலவர் முனீஸ்வரர் வடக்குக் கோபுரத்திலேயும் சிலையாக வடிக்கப்பட்டுள்ளார். வடக்கு கோபுரம் எவ்வளவு முயன்றும் கட்ட முடியாமல் தடைப்பட்ட போது, இக்கோபுரத்தைத் திருப்பணி செய்த நாகப்ப செட்டியார் இங்கு முனீ சுவரர் சாந்நித்யம் இருப்பதை அறிந்து முனீஸ்வரருக்கு ஒரு உறுதிமொழி கொடுத்தார். இக்கோபுரம் போது முனீஸ்வரருக்கும் சன்னதி எழுப்பப்படும் எனச் சத்தியம் செய்தபடி இப்போதுள்ள மகா முனீஸ்வரர் ஆலயத்தை வடக்கு வாசலை ஒட்டி எழுப்பினார். இக்கோவில் கட்டப்பட்ட காலந் தொட்டு, யாழ்கீத சுந்தரம் குடும்பத்தினர் தான் பூசனை செய்தல், பூ மாலைகள் அபிஷேகப் பொருட்கள் கொடுத்தல், விழா நடத்துதல் போன்ற வற்றைச் செய்து வருகின்றனர். எட்டு தலை முறையாக இவர்கள் குடும்பப் பணி தொடர்கிறது.

மீனாட்சியம்மன் கோவிலில் பணியாற்றும் பட்டர்கள் எனப்படும் அர்ச்சகர்கள் பலருக்கு மகா முனீசுவரரே குல தெய்வமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிராமண சமூகத்தினர் பலருக்கு சிறு தெய்வங்கள் குல தெய்வமாக உள்ளது ஆய்வுக் குரியது. ஆனால் அவர்கள் பெருந்தெய்வக் கோவில் அர்ச்சகர்களாக இருக்கின்றனர்.

இக்கோவிலுக்கு இந்துக்கள் மட்டுமல்லாது, இஸ்லாமியர், கிறிஸ்துவ மதத்தினரும் வருகின்றனர். பிறந்த குழந்தைகளை, பிறந்து 31 நாட்கள் கழித்த பின் இக்கோவிலில் தான் சன்னதி முன் கிடத்தி வணங்குவர். இதன் மூலம் இக்குழந்தை நலனை முனீசுவரரே பேணுவார் என்று நம்புகின்றனர். சுற்றுலாப் பயணிகள் இங்கே வந்து செல்கின்றனர்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தாண்டி மேலமடையில் ரிங் ரோட்டின் மேல் பாண்டி முனிகோவில் உள்ளது. மதுரையின் துடியான (கோப)சாமி என்று மக்களிடையே வழக்கு உள்ளது. கிழக்குப் பார்த்த பெரிய மாடம் போன்ற இடத்தில் உயரமான பீடத்தில் அமர்ந்த நிலையில் பாண்டிய முனி சிலை அமைக்கப் பட்டுள்ளது. பாண்டி(யன்) நாட்டு மக்களைப் பாண்டி முனி காப்பான் என்று தென்மாவட்ட மக்கள் மிகவும் நம்புகின்றனர். இக்கோவில் எப் போதும் விழாக்கோலம் பூண்டு ஒரே கொண்டாட்ட மாக இருக்கிறது. முனி என்பதற்குச் சினம் என்ற பொருளும் உண்டு.

பிராமணரல்லாத பெருவாரியான மக்கள் தான் சாதி வேறுபாடின்றி இங்கே வழிபாடு செய் கின்றனர். ஆடு, கோழி, உயிர்ப் பலியிடலைத் தமிழக அரசு தடை செய்த போது இக்கோவிலுக்கு மட்டும் விலக்களிக்கப்பட்டது. பின்னர் இது மக்கள் பிரச்சினை, மத நம்பிக்கை சார்ந்தது என்று அரசு தடையை விலக்கிக் கொண்டு ரத்து செய்து அரசாணை பிறப்பித்தது.

முனிப்பாண்டி, செல்லப்பாண்டி, தங்கப்பாண்டி என்று இத்தெய்வம் சார்ந்தே பெயர் சூட்டுதல் இக்கோவில் வழிபடுவோரின் வழக்க மாக இருக்கிறது. பாண்டிய முனியின் எதிரில் உள்ள பகுதியில் லாட சன்யாசி, இருளப்பன் என்றெல்லாம் சிறு தெய்வங்கள் உள்ளன.

இப்பாண்டி முனி, பாண்டியன் நெடுஞ்செழியன் மறு பிறப்பு என்றும் பாண்டிய நாட்டுச் சித்தர் ஒருவர் முனிவர் என்ற பெயரைத் தாங்கியும் இருப் பவர் என்றும் செவி வழிக்கதைகள் சொல்லப் படுகின்றன. இக்கோவிலில் குறி சொல்வது, அருள் வாக்கு உரைப்பது, நல்ல செயல்களில் ஈடுபடும் முன் பூக்கட்டிப் போட்டுப் பார்ப்பது என்பதோடு மட்டுமல்லாமல் நீதிமன்றங்களுக்குச் செல்ல விரும்பாத மனிதர்கள் இக்கோவிலில் வந்து தங்கள் பிரச்சினை களைப் பஞ்சாயத்து மூலம் பாண்டி முனி முன்னி லையில் பேசித் தீர்த்துக் கொள்கின்றனர்.

தனியார் வசமிருந்த இக்கோவில் இன்று அற நிலையத்துறை கண்காணிப்பில் உள்ளது. மதுரையின் கிராமியப் பண்பாட்டில் பாண்டி முனி கோவில் முக்கிய பங்கே வகிக்கிறது.

இதே போல மதுரை நகரின் பல பகுதிகளில் முனியாண்டி, பாண்டி முனி கோவில் பல பெயர் களில் உள்ளன. சடையாண்டி முனி, செவிட்டு முனி, அய்யனார் என்று பல தெருக்களில் வழிபடப் படுகின்றன. செம்பியன் கிணற்றுத் தெருவில் உரல் சோணை முனி பிரசித்தம்.

விஜய நகர மன்னர்கள் காலத்தில் அங்கிருந்து புலம் பெயர்ந்து தமிழகப் பகுதிகளுக்கு வந்த தெலுங்கு பேசும் மக்கள் தங்கள் தெய்வ வழிபாட்டு முறைகளையும் பண்டிகைகளையும் தங்களோடு கொண்டு வந்தனர். பெண் தெய்வங்களான முத்தி யாலம்மன், ரேணுகாதேவி, சீதளா தேவி, எல்லம் மாள் போன்றவர்கள் இன்று தமிழக மக்களோடும் கலந்து விட்டனர். வரலெட்சுமி நோன்பு, தீபாவளி நோன்பு போன்றவைகள் இவர்களின் வரவால் புகுந்த பண்டிகைகளாகும்.

அரசியோ அல்லது அரச குடும்பத்தின் மூத்த பெண் வாரிசோ இறந்துவிட்டால் அவர்களைப் புதைத்துக் கோவில் எழுப்புவார்கள். பிறகு இந்த இடங்களைப் பட்டத்தரசியம்மன் என்றோ பட்டத் தளைச்சி அம்மன் என்றோ பெயர் சூட்டி வணங்க, மக்களும் வணங்குவார்கள் என்று சிறு தெய்வம் பற்றிக் கூறும் போது கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.

தமிழகம் முழுவதும் மாரியம்மனுக்குத் தனிக் கோயில்களும் வழிபாடுகளும் நிறைய உண்டு. தெருவிற்கு ஒரு மாரியம்மனாவது கோவில் கொண்டிருப்பாள். பெண் தெய்வ வழிபாட்டிற்கு முக்கியத்துவம் தரும் மதுரையில் மாரியம்மன் கோவில்கள் அதிகம். தண்டு மாரி, தங்க மாரி, பூமாரி, வண்டியூர் மாரியம்மன் என்ற வரிசையில் நேதாஜி சாலையில் உள்ள தண்டு மாரியம்மன் கோவில் வரலாற்றோடு இணைந்தது. மதுரைக் கோட்டையில் காவலுக்காகத் தண்டு இறங்கும் (முகாம்) படை வீரர்கள் கோட்டையின் எதிரில் உள்ள இந்த மாரியம்மனை வழிபட்டதாக வயதான பெரியவர்கள் இன்றும் நினைவு கூர்கிறார்கள்.

மதுரையின் கிழக்கு எல்லைத் தெய்வமாக உள்ள தெப்பக்குளம் மாரியம்மன் தென் மாவட்டங் களில் பிரசித்தி பெற்றது. மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் நாற்பது ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்ட தெப்பக்குளத்தின் வடகரையில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலுக்கு வழி பாட்டிற்காகவும், மொட்டை எடுத்தல் முதலிய நேர்த்திக்கடன்களுக்காகவும் மக்கள் வெள்ளி, செவ்வாய் மற்றும் ஆடி மாதங்களில் திருவிழாக் கூட்டம் திரளும்.

இக்கோவிலின் பின்புறம் கால பைரவர் கோவில் உண்டு. கீழ ஆவணி மூல வீதி கால பைரவர், மீனாட்சியம்மன் கோவில் சாமி சன்னதி எதிரில் உள்ள பைரவர் கோவில் போன்றவை சிறு தெய்வ வரிசையில் இடம் பெற்றிருப்பவைகள். தம்மைக் காக்கும் காவல் மனிதனாகவும் துஷ்ட விலங்குகளிடமிருந்தும், கள்ளர்களிடமிருந்தும் தம்மைக் காக்கும் நாய்களையும் போற்றுகின்ற தன்மையின் வெளிப்பாடே பைரவர் வழிபாடு. சில இடங்களில் நிர்வாணக் கோலத்தோடு திகழும் பைரவர் மூர்த்தங்களின் காலடிப் பகுதிகளில் விடைத்த காதுகளோடு நிற்கும் நாய்களைக் காணலாம். பைரவர் என்ற சொல் நாய்களைக் குறிக்கும் என்பார்கள்.

ஆனால் நாட்டார் வழக்காற்றியல் மாரியம் மனையும் பைரவரையும் பிராமணர் அல்லாதாருக்கும் பிராமணர்களுக்கும் இடைப்பட்ட இடைநிலைத் தெய்வங்களாகச் சொல்கின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் பைரவர் வழிபாடு மிகவும் புகழ் பெற்றது.

எல்லாச் சிறு தெய்வக் கோவில்களிலும் தவறாமல் விழா எடுத்தல், விரதம் இருத்தல், கரகம் சுமத்தல், காப்புக் கட்டுதல், கொடை நடத்துதல், மாவிளக்கு, முளைப்பாரி, பால் குடம், தீச்சட்டி எடுத்தல், தீ மிதித்தல், மொட்டை எடுத்தல், நூற்று எட்டுத் திரு விளக்கு பூஜை நையாண்டி மேளதாளங்களோடு கொண்டாட்டம் என்று மதுரை நகரின் ஒவ்வொரு தெருவிலும் உற்சவங்கள் நடக்கின்றன. விழா முடிவில் மஞ்சள் கலந்த தண்ணீரைப் பெண்கள் முறை மாப்பிள்ளை மீது ஊற்றுவார்கள்.

சிறு தெய்வ வழிபாட்டுக் கோயில்களில் பூசனைகள் அலங்காரங்கள், திருநீறு, குங்குமம் தருதல் போன்றவற்றைப் பூசாரிகள் என்று அழைக்கப் படும் பிராமணரல்லாத மக்களே செய்வதோடு தாய்மொழியிலேயே பூசை செய்வதும் சிறப்புமிக்க ஒன்றாகும். எம்ஃபில், முனைவர் பட்டங்கள் பெற சிறு தெய்வக் கோவில்களைத் தான் ஆய்வு செய் கின்றனர்.

ஆனால் பெருந்தெய்வக் கோவில்களில் புரியாத வடமொழி, சமசுகிருதம் போன்ற இலக்கியமும் பேச்சு வழக்கமும் இல்லாத மொழிகளிலேயே வழிபாட்டை பிராமணர்கள் மட்டுமே செய்கின்றனர். இவர்களைத் தவிர வேறு எவரும் கோவிலைக் கட்டியவரோ, அதிகாரிகளோ ஏன் அறநிலையத் துறை அமைச்சர்களே கூட தெய்வச் சிலை அருகில் செல்ல முடியாது.

ஆனால் சிறு தெய்வக் கோவில்களில் கிட்ட நின்றே வழிபாடு செய்யலாம். சிறு தெய்வ வழிபாடு என்பது தொல் பழங்கால வாழ்வின் எச்சம். இன மரபியல் சார்ந்த வாழ்க்கையோடு தொடர்புடையது. தொன்மத்தின் தொடர்ச்சியான சிறு தெய்வ வழி பாடுகளே தம்மைக் கால்மாடு தலைமாடு நின்று காப்பாற்றும் என்பதும், குல தெய்வங்கள் தங்கள் வாழ்வில் உடைமையையும் உயிரையும் காப்பவை என்பதும் விளிம்புநிலை மக்களின் நம்பிக்கை. குலதெய்வங்களைத் தங்கள் பரம்பரையின் மூத்த உறுப்பினர்களாகவே கருதுகின்றனர்.

மதுரை நாகரிகமாகக் காணப்பட்டாலும் உள்ளூரக் குருதியோட்டமாக ஓடுவது கிராமியப் பண்பாடு தான். இந்த மண் மணம் சார்ந்த பண் பாட்டினால் தான் மதுரையின் வாழ்வில் பெரு மையும் வரலாற்றுச் சிறப்பும் தானாக வந்து சேர் கிறது. கோடி நாகரிகம் கடல் தாண்டி வந்தாலும் மதுரை நாகரிகம் மட்டும் என்றும் மாறாதது என்பது மதுரை வாசிகளின் அசையாத மன உறுதி, நம்பிக்கை.