தானைத் தலைவருக்கு,

இந்த தறுதலை தமிழனின் தலைவணங்கிய வணக்கங்கள். ‘என்னடா, இவன் தன்னைத் தானே தறுதலைன்னு சொல்லுறானேன்னு தப்பா நெனச்சுக்காதீங்க தலைவரே புள்ளைகளுக்கெல்லாம் அப்பன் வெக்கறது தானுங்க பேரு. வேலை வெட்டி எதுக்கும் போகாம நீங்க குடுத்த வண்ணத் தொலைக்காட்சி பெட்டில நீங்களும் உங்க வாரிசுகளும் வகைவகையா நடத்துற சேனல்கள்ல படம் பாட்டுத்துட்டு ஊர் மேஞ்சுட்டு இருந்ததனால ஊர அழைக்காமலேயே எங்கப்பன் எனக்கு வெச்ச ரெண்டாவது பேரு தானுங்க இந்த தறுதலைங்கற பேரு. பேரு நல்லா இருக்குங்களா தலைவரே?

என்ன பண்ணித் தொலைக்கிறது தலைவரே எங்கப்பன் அம்பானி மாதிரி சொத்து சேத்து இருந்தா எனக்கு அதகொடுத்துருப்பாரு. இல்ல உங்கள மாதிரி அரசியல் செல்வாக்கு சேத்து வெச்சிருந்தா வெளங்காத என்ன மாதிரி புள்ளைக்கு ஒரு பதவியவாவது தூக்கி கொடுத்திருப்பாரு. அந்தாளே ஊர்ஊராப் போயி வேலைதேடி கல்லு மண்னு சொமந்து எனக்கு சோறுபோட்டு “வெந்ததத் தின்னுட்டு விதிவந்தா சாகலாம்னு” இன்னைக்கு செல்லாக்காசா உக்காந்துட்டு இருக்காரு. அந்தாளுகிட்ட தறுதலை தண்ட சோறுங்கற பேர தவிர எனக்கு தூக்கிக் கொடுக்க ஒன்னுமில்ல. அதனால போனா போகுதுன்னு அதையே நானும் வாங்கிகிட்டேன்.

பேரு கிடக்குது தலைவரே பேரு. நமக்கெல்லாம் சோறு தானே முக்கியம். அதனால பேசாம கிடக்கிறேன். நீங்க குடுக்குற ஒரு ரூவா அரிசியில பொங்கிப்போடறதுக்கே எங்கப்பனுக்கு இத்தனை ஓப்பாளம். கேட்டா பருப்பு 98 ரூவா, பாலு 48 ரூவான்னு பாட்டு பாடறான் அந்த மனுசன். எதுத்தும் பேச முடியல. பேசுனா குடும்பம் ரெண்டாபோயிடும். நமக்கென்ன தலைவரே நாலஞ்சு டி.வி. சேனலா இருக்கு. குடும்பம் ரெண்டானா சேனல் 16 ஆகும்னு கணக்குப்போட்டு காய் நகத்தறதுக்கு? வீட்ட விட்டு வெளிய வந்தா சோத்துக்கே சிங்கியடிக்கனும். மானம் ரோசம் பாத்தா வயித்த யாரு பார்க்கறதுங்கறதாலதான் அடங்கிப் போயிட்டிருக்கேன் தலைவரே.

எல்லா அப்பனும் உங்கள மாதிரி இல்லாட்டியும் அட்லீஸ்ட் அம்பானி மாதியாவது சொத்து சேத்து வெக்கணும்னு ஒரு ஆடர் போடுங்க தலைவரே. ‘என்ன எழவு ? அப்பவும் “சப்பான்ல சாக்கிசான் கூப்பிட்டாக.. அமொpக்காவுல மைக்கேல் சாக்சன் கூப்பிட்டாக ங்கற மாதிரி” இலவசமா டி.வி. கொடுத்தீக.. கேஸ் கொடுத்தீக.. நெலம் கொடுத்தீக.. இதையும் நீங்களே குடுங்கன்னு, அதுக்கும் இந்த பிச்சக்காரக் கூட்டம் உங்ககிட்டதான் கையேந்தி நிக்கும். அதையும் குடுத்திட்டீங்கன்னா நீங்க யார்கிட்டயும் ஓட்டுக்காகக் கையேந்தி நிற்க வேண்டியதில்லை. வரிசைல வந்து நின்னு ஓட்ட மாறிமாறி உங்களுக்கே குத்திட்டு போயிட்டே இருப்பாங்க. ஐடியா நல்லா இருக்குங்களா தலைவரே? மனசுல வெச்சுக்குங்க 2011 ல கூட்டணி சம்பந்தமா காங்கிரஸ் கூட ஏதாவது பிரச்சனை வரலாம் அப்படி வந்தா தேர்தல் அதுகள கழட்டிவிட்டுட்டு தேர்தல் அறிக்கைல இத சேர்த்திடுங்க. கண்டிப்பா ஒர்க்அவுட் ஆகும்.

எனக்கென்னமோ 2011ல இந்த காங்கிரஸ்காரன் கட்டாயம் தகராறு பண்ணுவான்னுதான் தோணுது. இப்பவே பாருங்க இந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோன்னு ஒன்னு ஏட்டிக்குப் போட்டியாவே பேசிட்டுத் திரியுது. என்னடா தைரியமா பேரச் சொல்றானேன்னு பாக்கறீங்களா. அட அதனால என்னங்க அதென்ன மானநஷ்ட வழக்கா போடப்போகுது. அதெல்லாம் இருக்கிறவன் போட்டாதான் செல்லும் தலைவரே.

கட்சி செயற்குழு, பொதுக்குழு கூட்டத்துக்கு போறதுக்கே பக்கத்து நாட்டுக்கு படையெடுத்து போறது கணக்கா பத்து பதினஞ்சு செட் வேட்டி சட்டை எடுத்துட்டு போய் கடைசீல திரும்பி வரும் போது எல்லாங் கிழிஞ்சி அண்டர் டிராயரோடு வர்ற கூட்டம்தானுங்க தலைவரே இவங்க. அவங்களுக்குத் தெரியும் அவங்களோட வெக்கம் மானத்தப்பத்தி, அதனால அப்படியெல்லாம் எதுவும் செய்ய துணியமாட்டாங்கத் தலைவரே. புதுசா எந்த வழக்குலயும் ஜாயின்ட் பண்ணமுடியலங்கற வருத்தத்துல இந்த சுப்பரமணிசாமி எதாவது முயற்சி பண்ணினா காங்கிரஸ்காரங்களும் அதப்பத்தி யோசிக்க ஒரு வாய்ப்பிருக்கு. ஏன்னா எதுவோ கெட்டா குட்டிச் சுவருதான்னு ஊருக்குள்ள ஒரு பேச்சிருக்குங்க தலைவரே.

அது செரிங்க தலைவரே இந்த தமிழ், தமிழ்னு பேசிட்டுத் திரியற பத்துப் பதினஞ்சு பசங்க சேந்து மாவீரர் தினம் கொண்டாடினாங்களே உங்களுக்கு ஏதாச்சும் நியூஸ் வந்துச்சுங்களா? மன்னிச்சுக்கங்க தலைவரே உகாண்டால ஏதாச்சும் நடந்தாவே உங்களுக்கு நியூஸ் வந்துரும். உள்ளூர்ல நடந்தது தெரியாமயா இருக்கும். அதுல அவங்க பிரபாகரன் படத்த வெச்சாலோ இல்ல பிரிஜ;பாஸி அட்லாஸ வச்சாலோ இந்த இளங்கோவனுக்கு என்ன போச்சு? உலகத் தமிழினத் தலைவர் நீங்களே பேசாம இருக்கும் போது கதர் சட்டக்காரனுக்கென்ன அடிவயித்துல தீய வெச்சமாதிரி அப்படி எரியுது?

தமிழ்நாட்டுல யார் படத்த வெக்கலாம் வெக்ககூடாதுனு சட்டம் எதாவது இருக்குதுங்களா தலைவரே? அட அப்பிடியே இருந்தாலும் அத நீங்கதானே சொல்லனும், இதுகெல்லாம் எப்படி அதபத்தி பேசலாம் நீங்களே சொல்லுங்க தலைவரே. இதனால உங்களுக்குத்தானே கெட்ட பேரு. ஊர்ல எல்லாரும் என்ன பேசிக்கிறாங்க தெரியுமா?

அதான் தலைவரே பரமசிவன் கழுத்துல இருந்து பாம்பு கருடனைப் பார்த்து கேட்டுச்சாம ‘கருடா சௌக்கியமான்னு’ கருடனோட நிழல பாத்தாலே ஓடி ஒழியற பாம்பு பரமசிவனோட கழுத்திலே இருந்த ஒரே தைரியத்துல கருடனைப் பாத்து “கருடா சௌக்கியமான்னு” கேட்ட கதையா உங்களோட கூட்டணியில இருக்கிற ஒரே ஒரு தைரியத்துலதான் தமிழ்ங்கற பேரக்கேட்டாலோ இந்தியாவோட தேசிய விலங்கு என்னானு கேட்டா புலின்னு சொல்ல கூட பயப்படற அந்தகதர் கூட்டம் பிரபாகரனோட பேனரையே கிழிச்சுப் பாத்துச்சாம். இளங்கோவன் பாம்பாம் நீங்க பரமசிவனாம். இதெல்லாம் தேவைங்களா தலைவரே உங்களுக்கு. ஒரு பழுத்த பகுத்தறிவுவாதிய எதுக்கெல்லாம் ஒப்பிடறாங்க பாருங்க.

உங்களுக்கு மறந்திருக்காது இருந்தாலும், திருச்சி செல்வேந்திரன் ஐயா முன்னாடி ஒரு கூட்டத்துல பேசுனத மறுபடியும் இங்க ஒரு தடவ சொல்ல வேண்டியது என் கடமை.

“ஒரு காங்கிரஸ் அமைச்சருக்கு அவசரமா ஒன்னுக்கு வந்துச்சாமா. சரி பக்கத்து ஊருக்குப் போய் போய்க்கலாம்னு அடி பொடிகளோட பஸ் புடிக்க போனாராமா. அந்த காலத்துல பஸ்சுல ஓவர் லோடு ஏத்தக் கூடாது. அதனால கண்டக்டர் , ஐயா ஏற்கனவே, பஸ் புல் ஆயிருச்சு; இத்தன பேர ஏத்த முடியாது. அதனால அடுத்த பஸ்சுல வாங்கன்னு சொன்னாராம். ஊடனே காங்கிரஸ் அமைச்சருக்கு வந்துச்சே கோவம். யோவ் நான் மினிஸ்டரு. என்னையே ஏத்த மாட்டீங்கறீயான்னு கண்டக்டரை நாலு ஏத்து ஏத்த, போனா போய்தொலையட்டும்னு அத வண்டியில ஏத்திட்டுப் போனாராம்.

அடுத்த நாள் கண்டக்டருக்கு அவங்க ஆபீஸ்ல இருந்து அழைப்பு வந்துச்சாம். போய் பார்த்தா… அங்க அவரோட மேலதிகாரி முன்னாடி காங்கிரசு அமைச்சர் உட்காந்திட்டு இருந்தாராம். மேலதிகாரி ஐயா, இந்த ஆளா பாருங்கன்னு கண்டக்டரை கைகாட்ட, மினிஸ்டரும் ஆமா அவன்தான்னு அடையாளம் காட்டுனாராம்.

உடனே மேலதிகாரி யோவ் நேத்து இந்த ரூட்ல போன நீ உன்னோட பஸ்சுல ஓவர் லோடு ஏத்தினியாமான்னு கேட்க, கண்டக்டர் இல்லன்னு பதில் சொன்னாராம். உடனே மினிஸ்டர் அவன் ஏத்தினது உண்மைன்னு சொன்னாராம். மேலதிகாரி, ஐயா அது உங்களுக்கு எப்படி தெரியும்னு கேட்டாராம். உடனே மினிஸ்டர் அவரு ஏத்திட்டு போனதே என்னத்தான்னு சொன்னாராம்.

கண்டக்டர் அப்பவும், இல்லவே இல்லைன்னு சொல்ல, சட்டுன்னு மினிஸ்டர் என்கிட்ட ஆதாரம் இருக்குன்னு சொன்னாராம். என்ன ஆதாரம்னு மேலதிகாரி கேட்க நேத்து நான் போன டிக்கெட்டு இதோ இருக்கு இந்தாங்கன்னு மேலதிகாரிக்கிட்ட கொடுத்தாராம்.

மேலதிகாரி டிக்கெட்ட வாங்கிப் பாத்துட்டு, ஐயா இதுக்கெல்லாம் அவர்மேல நடவடிக்கை எடுக்க முடியாதுன்னு சொல்லி கண்டக்டர அனுப்பிச்சிட்டாராம்.

ஏன் தெரியுமா? ஏன்னா அந்த டிக்கெட்டுல லக்கேஜ்ன்னு எழுதி இருந்துச்சாம். ஆக காங்கிரஸ்காரன லக்கேஜ்ன்னு முதல்முதலா கண்டுபிடிச்சது ஒரு கண்டக்டர் தான்யா”

தலைவரே, இத நான் சொல்லல. வெளியீட்டு கழக செயலாளர் திருச்சி செல்வேந்திரன் சொன்னது. ஒரு கண்டக்டருக்கு தெரிஞ்ச விஷயம், பத்து பதினஞ்சு வாரம் டாப் 10ல முதலிடத்தப் பிடிச்ச உளியின் ஓசை மாதிரி உன்னதமான படம் கொடுத்த உங்களுக்குத் தெரியாம இருக்குமா? அப்புறம் ஏன் இன்னும் இதுகள தூக்கி சுமக்கறீங்க. அதுக்கு இந்த வீரமணி மாதிரி ஆளுகள கூட வெச்சுக்கறது எவ்வளவோ மேல் தலைவரே. ஏன்னா தேவைப்படும்போது Law Point எல்லாம் புடிச்சு கொடுப்பாரு. கூடவே வெச்சிருக்கிற நன்றிக்காக அவரு சந்தோசமா அண்ணா விருதெல்லாம் உங்களுக்குக் கொடுப்பாரு. நீங்களும் அதுக்குப் பதிலா அவருக்கு பெரியார் விருது குடுத்து கௌரவிக்கலாம். குடுத்து வாங்கற உங்களுக்கும் சந்தோஷம் பாத்துட்டிருக்குற ஜனங்களுக்கும் ஒரு சந்தோஷம். ஆனா இந்த லக்கேஜுகளால யாருக்கு சந்தோஷம் சொல்லுங்க பாக்கலாம்.

அப்புறம் தலைவரே இந்த அம்பது அறுபது பவுன்ல உங்களுக்கு வர்ற செயின் மோதிரமெல்லாம் கலைஞர் கருவூலத்துக்கே குடுத்துடறீங்களே தலைவரே. நீங்க உங்களுக்குன்னு ஒன்னாச்சு வெச்சுக்கக் கூடாதா? ஆமா அந்த கருவூலத்தோட வேலை என்னங்க தலைவரே. நீங்க அதுக்கு குடுக்குற நகையெல்லாத்தையும் இரண்டு இரண்டு பவுணா பிரிச்சு நாட்ல நகை போட வக்கில்லாதவ‌ன் பெத்த புள்ளங்களுக்கெல்லாம் நகைபோட்டு கல்யாணம் பண்ணி கொடுக்குறதுங்களா? என்னமோ போங்க தலைவரே உங்களுக்குன்னு நீங்க எதையாவது சேர்த்து வெச்சிக்குங்க தலைவரே! ஏன்னா எங்கப்பன மாதிரி கடைசி காலத்துல எதுவுமே இல்லாம அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடற நெலமைக்கு வந்துடக் கூடாதில்லங்களா? ஆனாலும் நீங்க ரொம்ப அப்பாவியா இருக்கீங்க தலைவரே. சரி அத விடுங்க நம்ம லக்கேஜ் பிரச்சனைக்கு வருவோம். ஆக 67ல் ஆட்சிய பறிகொடுத்துட்டு அட்ரஸ் இல்லாம தொலஞ்சு போன இந்த லக்கேஜூகள ஒவ்வொரு தடவையும் நீங்க ஏன் தூக்கிட்டு அலையனும் அப்பறம் ஏன் முடியாம போய் ஆஸ்பத்திரியில அட்மிட் ஆகனும். யோசிச்சுபாருங்க.

ஏற்கனவே இந்த தமிழ் தேசிய கோஷ்டிகள் எல்லாம் உங்கள கரிச்சு கொட்றாங்க. இலங்கைல ஒன்றரை லட்சம் தமிழர்கள் சாகறதுக்கு உங்க பதவி பயம்தான் காரணம், நீங்க மட்டும் சரியா இருந்திருந்தா, அவங்கள பாதுகாத்திருக்கலாம். இராஜபக்சேவோட சிங்கள பேரினவாதத்துக்கு நீங்களும் மன்மோகன் சிங் அரசும் துணை போறதா குற்றம் சாட்றாங்க.

நீங்க அனுப்பின குழு பண்ண கூத்துல திருமாவளவனுக்கு கதாநாயக வேஷம் கெடைக்கும்னு பாத்தா கடைசீல ராஜபக்சேக்கு அந்த வேஷத்தைக் கொடுத்துட்டு திருமாவ காமெடி பீஸ்ஸாக்கிட்டீங்கன்னு ஒரு பேச்சு பரவலா இருக்கு. “திரும்பி வரும்போது தம்பி திருமாவளவா, மீசையை மழித்துவிட்டு வாடா என் கண்ணேன்னு” ஒரு தந்தியாவது அடிச்சிருக்கலாம் நீங்க. திரும்பி வந்ததுக்கப்புறம் அவர அடையாளமாவது தெரியாம இருந்திருக்கும். அதே நேரத்துல நீங்களும் “நெஞ்சில் தமிழர்தம் நல்வாழ்வெனும் முத்துச் சுமையேற்றி கத்து கடல் சீறிச் செல்கையில் குத்து விளக்கிங்கொன்றை செத்து மடிய விட்டுச் செல்கின்றோம் என நினைப்பாயா தம்பி திருமா எனக் கேட்டேன். அதற்கு அவரும் மாட்டேன் தலைவா உம்மை மறந்தாலன்றோ நினைப்பதற்கு” என கூறிச் சென்றான். ஆனால் அவர் மட்டும் திரும்பவில்லைனு தேனமுதுல எழுதுன மாதிரி எழுதிட்டு நந்தி கடல் முழுக்க தேடியாவது, இல்லை வங்க கடல் முழுக்க சல்லடையிட்டு சலித்தாவது பிரபாகரனின் சடலத்தை பார்த்து கை குலுக்கிவிட்டுதான் திரும்புவான் என் தம்பின்னு கேப்புல கெடா வெட்டி இருக்கலாம். ஆனா அதுக்கெல்லாம் வழியில்லாம அவரு மீசையோட திரும்பிட்டாரு, என்ன பண்ண தலைவரே! அங்க அவரு பேசுன பேச்சு பத்தாதுன்னு இங்கவந்து வேற எழுதறாரு அத வேற நாங்க படிச்சி தொலைக்கணுமான்னு தமிழ் கோஷ்டி கேக்குது என்ன பண்றது தலைவரே.

அவருக்குப் பதிலா நீங்க இந்த சத்தியராஜை அனுப்பி இருக்கலாம். ஏன்னா அவரு இன்னும் மனோகரா வசனத்தையெல்லாம் மனப்பாடமா சொல்லறாரு அட கொஞ்சம் வீராவேசமா பேசியாவது காட்டியிருப்பாரில்லைங்களா தலைவரே. என்ன அவரு நெஜமாலுமே பேசிட்டா சிக்கல்தான் அதுனால அவரு செரிப்பட மாட்டாருன்னு நீங்க நெனச்சிருக்கலாம். எப்படிப் பாத்தாலும் யார்யாரோ பண்ற தப்புக்கெல்லாம் உங்களுக்குதான் கெட்டபேரு வருது, மனசுக்கே கஷ்டமா இருக்குதுங்க தலைவரே. “ஆண்டவரே, இவர்கள் தாம் செய்வது என்னவென்று அறியாமல் செய்கிறார்கள். அவர்களை மன்னித்தருளும்” ன்னு சொன்ன ஏசுநாதருடைய இன்னொரு வடிவமா அன்பின் உறைவிடமா இருக்கிற தலைவரப் பத்தி இப்படி எல்லாம் பேசலாமான்னு கேட்டா “ராஜபக்ஷே தாம் செய்வது என்னவென்று அறியாமல் செய்துவிட்டார். அவரை மன்னித்தருளும் ஆண்டவரேன்னு” கூட உங்க தலைவர் வேண்டுவாருன்னு சொல்றாங்க. உங்கள எல்லாரும் இப்படி பேசுறத கேக்கும்போது என் நெஞ்சே வெடிச்சிரும் போல இருக்குங்க தலைவரே. ஊங்களுக்கு கஷ்டமா இல்லீங்களா தலைவரே.

இதுல இந்த எல்லா விஷயத்தையும் மறைக்கத்தான் நீங்க செம்மொழி மாநாடு நடத்துறீங்க. அதுவும் கோயமுத்தூர் பக்கம் சரிஞ்சு கிடக்கிற கழக மார்க்கெட்டை தூக்கி நிறுத்தத்தான் அதை கோயமுத்தூர்ல நடத்துறீங்கன்னு கூட உங்க மேல பழி சொல்றாங்க தலைவரே. தமிழ் வளர்ச்சியில, தமிழனோட நலத்துல உங்களுக்கு இருக்கிற அக்கறைய யாருமே புரிஞ்சிக்க மாட்டேன்றாங்க. விட்டா எல்.கே.ஜி. பையன் பக்கத்துல இருக்கிற பையன கிச்சுகிச்சு மூட்டுனாலோ இல்ல கிள்ளி வெச்சாலோ கூட இதற்கு காரணம் இந்த கருணாநிதி தான்னு கண்டன பொதுக்கூட்டம் போட்டாலும் போடுவாங்க தலைவரே கொஞ்சம் கவனமா இருங்க.

மாநாட்டு வேலய உட்டு போட்டு மணிகணக்கா உங்களுக்கே எழுதீட்டு இருக்கறேன் மன்னிச்சுருங்க தலைவரே. அப்பறம்… இந்த மாநாட்டுல flex வெக்கறதுக்காக சில வாசகங்கள் எழுதியிருக்கேன் சரியா இருக்கானு நீங்க படிச்சுட்டு பதில் எழுதுங்க தலைவரே

“ தென்னாடுடைய தலைவா போற்றி

என்னாட்டு தமிழனுக்கும் இறைவா போற்றி

இந்திய தமிழனின் முதல்வா போற்றி

ஈழத் தமிழனின் ஈசனே போற்றி

இதுமாதிரி மகத்தான வேலய பார்த்திட்டு இருக்கும்போது கூட உருடியா ஒரு வேலயாச்சும் பண்றியா நீ தண்டசோறு தண்டசோறுன்னு எங்கப்பா திட்டீட்டேதான் இருக்காரு தலைவரே. அணணா பிறந்த நாளுக்கு கைதிகளுக்கு விடுதலை கொடுக்கிற மாதிரி உளியின் ஓசை படத்துக்காக உங்களுக்கு நீங்களே விருது குடுக்கிற இந்த நல்ல நாள்ல் எங்கப்பனையும் மன்னிச்சுருங்க தலைவரே ஏன்னா பாவிகள மன்னிக்கிற பக்குவம் உங்களுக்கு மட்டும்தான் இருக்கு.

இப்படிக்கு

பெற்ற தகப்பனால் தறுதலை என்றழைக்கப்படும்

இரா.செந்தில்குமார்

(கேலிச் சித்திரங்கள்: பாலா, நன்றி - குமுதம்)

 

Pin It