உலகெங்கும் அறிவியல் முன்னேற்றம் வியக்கத் தக்க வளர்ச்சிகளை மிக விரைவில் தோற்றுவித்த காலம் பொதுவுடைமை மேதைகள் கார்ல் மார்க்சும், பிரடெரிக் ஏங்கல்சும் வாழ்ந்த காலம். அவர்கள் இருவரும் உலகில் எந்த நாட்டில் சிறு முரண் அசைவு ஏற்பட்டாலும் அதனைக் கூர்ந்தாய்ந்து, அது மானுட விடுதலைப் போராட்டமா என்று தெளிவுபடுத்துவதில், அப்போராட்டத்தை ஆதரித்துக் கருத்துரைப்பதில் மிகவும் முனைப்பாக இயங்கினர்.

இவ்வாறு உலகத்தையே அலசியாய்ந்த ஆனானப் பட்ட மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவருக்கும் சவாலாக விளங்கிய ஒரு நாடு இந்தியாதான். அவ்வாறு இந்த மேதைகளுக்கே சவாலாக நின்ற ஒரு ‘கூறு’ கெட்ட கூறு சாதிதான்!

எந்த நாட்டிலும், அரசியல், பண்பாடு போன்ற தடங்களில் சீர்திருத்தங்களை ஏற்படுத்தி மறு மலர்ச்சியை, பொதுவுடைமையை நடைமுறையில் காண முயன்றாலும் முடியும்; இந்தியாவில் மட்டும் இயலாது என்ற சூழல்தான் - பத்தொன்பதாம் நூற்றாண்டில்! பின்னர் இருபதாம் நூற்றாண்டின் முன்பாதியில், பண்டித அயோத்திதாசர், டாக்டர் அம்பேத்கர், பெரியார் ஈ.வெ.ராமசாமி, பொது வுடைமையாளர்கள் ம.சிங்காரவேலர், ப.ஜீவானந்தம் ஆகியோர் ஆற்றிய சாதி ஒழிப்புப் பணிகள் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கன.

சாதி ஒழிப்புப் பணியில் இந்தியாவில் குறிப்பிடத் தக்க அளவுக்குச் சிறப்பிடம் பெற்ற தமிழ்நாட்டில் இந்த 21-ஆம் நூற்றாண்டில் சாதி மோதல் என்பது வியப்புக்கும் வேதனைக்கும் உரியது.

தருமபுரி மாவட்டம், செல்லன் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகள் திவ்யா (வயது - 20), அருகிலுள்ள நத்தம் காலனியைச் சேர்ந்த இளங்கோ என்பவரின் மகன் இளவரசன் (வயது - 23) ஆகிய இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். இத்திருமணத்தை விரும்பாத பெண்ணின் தந்தை நாகராஜ் நவம்பர், 7ஆம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டதையொட்டி, அப்பகுதியில் வன்முறை வெடித்தது. அதே நாளில் மாலை நான்கு மணி அளவில் தருமபுரி அருகிலுள்ள வெள்ளாளப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட நத்தம் காலனி, அண்ணாநகர் புதுக்காலனி, கொண்டப்பட்டி ஆகிய மூன்று கிராமங்களில் தலித் மக்கள் வாழும் 270 வீடுகள் மேல்சாதியினரால் தீவைத்துக் கொளுத்தப் பட்டன; வீடுகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் சூறையாடப்பட்டன. அவை ஏழு கோடி மதிப்பு பெறும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏற்படவில்லை.

இந்த இழிசெயல் எவ்வளவு நச்சார்ந்தது என்பதை உணர்ந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அந்த நிகழ்வைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரதங்களையும், போராட்டங்களையும் நடத்தி வருகிற வேளையில், ஓர் அரசியலாளர் தலித் இளைஞர்கள் திட்டமிட்டு மற்ற சாதிப் பெண்களைக் காதலித்து ஏமாற்றிப் பொருளாதார ஆதாயம் தேடு வதாகவும், அதற்காக சில தலித் அமைப்புகள் இயக்கமே நடத்துவதாகவும் கருத்து கற்பித்து வருகிறார்.

இவ்வாறு, காதலிப்பதை - அதாவது, பிற சாதிப் பெண்ணைக் காதலிப்பதையெல்லாம் குற்றம் சாட்டு வதே தவறு; இது சமூக நீதிக்கு எதிரான செயல்!

இன்று விஞ்ஞானம் ஏராளமாக முன்னேறி, ‘உலகில் உயர்ந்த பண்பாடு எங்கள் பண்பாடு’ என்று பெருமையடித்துக் கொள்ளும் இந்தியாவில், நம் தமிழகத்தில் இப்படிப்பட்ட தீய நிகழ்வுகள் நிகழ்வது வெட்கக் கேடானது.

இந்த தர்மபுரி மாவட்ட நிகழ்வு என்பது திடீரென்று உணர்ச்சிவசப்பட்டு நிகழ்ந்ததாகப் புலப் படவில்லை. இதுபோன்ற சாதி வேறுபாடுகளை மனத்தில் கொள்ளாது இயல்பாகக் காதல்வயப் பட்டு திருமணம் செய்து கொள்ளும் நேர்வு எப் போது நடந்திருந்தாலும் உடனிகழ்வாக இந்த வன் முறையும் நடந்திருக்கும் என்றே தோன்றுகிறது.

“சோஷலிஸ்டுகள் அல்லது சோஷலிஸம் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகளில் சாதி மிக முக்கியமானது. இதனை எதிர்கொள்ளாமல் புரட்சியை வென்று அடைய முடியாது. புரட்சிக்கு முன் சாதிப் பிரச்சினையைக் கவனத்தில் கொள்ளத் தவறினால் புரட்சிக்குப் பின் சாதியைக் கவனத்தில் கொண்டு, அதில் நம் சிந்தையை மூழ்கச் செய்ய வேண்டியிருக்கும்” என்கிறார் டாக்டர் அம்பேத்கர்.

சாதி, மத, பண்பாட்டுத் தளங்களில் சீர்திருத்தம் கொள்ளாது, நம் மண்ணில் சமத்துவம் காண இயலாது. இதனை எல்லாச் சாதிகளிலும் உள்ள உழைப்பாளி வர்க்கம் உணர வேண்டும். இத்தகைய பிற்போக்குத்தனமான வன்முறைகள் தொடர்ந்து நிகழ்வது ஒடுக்கப்படுவோர் மட்டுமின்றி ஒடுக்கு வோர், அதற்கு உடந்தையாக இருப்போர், அதைக் கண்டும் காணாது வாளாவிருப்போர் - இவர்களின் அடுத்த தலைமுறையினர்களுக்கும் துன்பத்தை விளைவிக்கும் என்பதை எல்லாத் தரப்பினர்களும் கவனத்திற்கொண்டு உரிய தடுப்பு நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும்.