தமிழில் மரபுவழிப்பட்ட திறனாய்வு என்பது தொல்காப்பியர் முதல் தொடங்கி, பின்னர் உரை யாசிரியர்களின் உரைகளில் வளர்ந்து, பாட்டியல் நூல்களில் ஒரு புதிய திருப்பம் பெற்று, வேறு திசைகளில் வளர்ச்சியடைந்துள்ளது. ஆயின், நவீன இலக்கியத்திறனாய்வு என்பது, தமிழ்ச் சூழலில் மேற்கத்திய மரபு சார்ந்ததாகவே அமைந் துள்ளது. தமிழ்க் கல்விப்புலத்தில் இலக்கியத் திறனாய்வு என்பது, மரபுவழிப்பட்ட திறனாய் வினைக் கருத்தில் கொள்ளாது. மேற்கத்தியத் திறனாய்வு மரபுகளை- பெரிதும் ஆங்கிலத் திறனாய்வு முறைகளைக் கற்பிப்பதும், சிந்திப்பதும் அரங்கேறி வருகிறது. நவீனதிறனாய்வினைக் கல்விப் புலம் சார்ந்த தமிழ்ப் பேராசிரியர்களே அறிமுகப் படுத்தியுள்ளனர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பச்சையப்பன் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியராகவிருந்த திருமணம் செல்வகேசவராய முதலியார்தான் ஆங்கிலத் திறனாய்வு மரபினை யொட்டி, தமிழில் திறனாய்வுக் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். இவர் எழுதிய ‘செய்யுள்’ ‘வசனம்’ என்னும் இரண்டு திறனாய்வுக் கட்டுரைகள் சிறப்பு வாய்ந்த தொடக்க முயற்சி களாகச் சுட்டப்படுகின்றன. (க. பஞ்சாங்கம்: ப. 118)

ஆங்கிலத்திலுள்ள ‘Criticism’ என்ற சொல்லுக் கிணையாக ‘விமர்சனம்’ என்ற சொல்லை ‘அசோக வனம்’ (1944) என்ற நூலில் முதன்முதலாக பேராசிரியர். ஆ. முத்துசிவன் பயன்படுத்தினார். இவர் அரிஸ்டாட்டில், ஏ.சி. பிராட்லி, எம். எச். ஆப்ராம்ஸ் போன்றோரின் இலக்கியத்திறனாய்வுக் கோட்பாடுகளை அறிமுகப்படுத்தி அவற்றின் பின்புலத்தில் தமிழ்க் காப்பியங்களை ரசனை நோக்கில் ஆய்வு செய்துள்ளார். இவருக்குப்பின் இலக்கிய விமர்சனம், அதன் முறையியல் குறித்துத் தமிழில் தனியாக முதல்நூல் எழுதியவர் தொ. மு. சி. ரகுநாதன் ஆவார். இவருடைய இலக்கிய விமர்சனம், 1948-இல் வெளிவந்தது. தமிழுக்குப் புதிதான இலக்கிய விமர்சனத்தை முறையாக அறிமுகப்படுத்திய முதல் நூல் இதுவே. இந்நூலில், இலக்கியம் என்பது வாழ்க்கையின் விமர்சனம் என்கிற மாத்யூ ஆர்னால்டின் கருத்தினை முன் மொழிகிறார். இலக்கியத்தின் சமுதாய அடிப் படைகளை விளக்கும் ரகுநாதன், இலக்கியப் படைப் பாக்கத்தின் தனித்தன்மைகளையும், இலக்கியத்தின் தன்னாட்சித் தன்மையினையும் வலியுறுத்திப் பேசியுள்ளார். இதற்குப் பின்னர், விமர்சனம் என்ற சொல்லுக்கு இணையாக ‘திறனாய்வு’ என்ற சொல்லைத் தமிழில் முதன்முதலில் பயன்படுத்திய அ.ச. ஞானசம்பந்தனின் ‘இலக்கியக்கலை’ 1953-இல் வெளிவந்தது.

இந்நூலில் கலையின் பொது இயல்பு களையும், கலையின் ஒருவகையான இலக்கியத்தின் தனித்தன்மைகளையும் விதந்து பேசுகின்ற அ.ச. ஞானசம்பந்தன், இலக்கியத்தின் அடிப்படைக் கூறுகளான உணர்ச்சி, வடிவம், கற்பனை ஆகிய வற்றை விரித்துப் பேசியுள்ளார். மேலும், இலக்கியப் பாகுபாடுகள் குறித்தும், கவிதை, நாடகம், நாவல் ஆகிய இலக்கிய வகைகளின் அடிப்படைகள் குறித்தும் பேசியுள்ளார். இந்நூலுக்குப்பின், 1959-இல் க.நா.சு-வின் ‘விமர்சனக்கலை’ வெளிவந்தது. இந்நூலில் இலக்கியவிமர்சனம் என்பது, வழக்கமான கல்விப்புல விளக்கங்களுக்கப்பால், சிறுபத்திரி கையின் மரபுசார்ந்து நவீனத்துவ அடிப்படையில் இலக்கியத்தை விமர்சனம் செய்துள்ளார். இலக் கியத்தின் கலைத்தன்மையையும் கலைஞனின் அதீத சுதந்திரத்தையும் வற்புறுத்தும் க. நா.சு., ‘இலக்கியம் என்பது, நிர்க்குணப் பிரம்மத்தையும், கடவுளையும் போன்றது’ என்று இலக்கியத்தை அதன் சமூகச் சார்பிலிருந்து முற்றிலும் விலக்கி, வேதாந்தமாக விளக்கம் காண முயற்சி செய் துள்ளார். ‘குறியீட்டியல், சர்ரியலிஸம், நனவோடை என்பனவெல்லாம் இலக்கிய உத்திகளேயன்றி, இலக்கியப்பிரிவுகள் அல்ல’- எனக்கூறும் க.நா.சு., ‘இலக்கிய விமர்சகன் நடுநிலையில் பற்றற்றவனாக நிற்கமுடியாது’ என்கிறார். இலக்கிய விமர்சனத்தைத் தனிநபர் விருப்பு வெறுப்புக்குட்பட்டதாகக் காணும் இந்நூல் வெளிவந்த காலத்தையொட்டியே மு.வ. -வின் ‘இலக்கிய ஆராய்ச்சி’, ‘இலக்கியத்திறன்’, ‘இலக்கிய மரபு’ ஆகிய மூன்று நூற்களும் வெளி வந்துள்ளன. இம்மூன்று நூற்களையும், ‘இலக்கிய ஆராய்ச்சிபற்றிய பொதுத் திறனாய்வு நூல்கள்’ என்று பேராசிரியர் சி. கனகசபாபதி குறிப்பிடு கின்றார் (1987: ப. 289). ‘ஓவச்செய்தி’, ‘கண்ணகி’, ‘மாதவி’, ‘முல்லைத்திணை’ ஆகியவற்றைத் தனி நிலை ஆய்வுகளாக வகைப்படுத்துகின்றார். இக் கட்டுரையில் பொதுத்திறனாய்வுப்பிரிவில் அடங்கு கின்ற மேற்கண்ட மூன்று நூல்கள் மட்டுமே ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றன.

பேராசிரியர். மு.வ., பச்சையப்பன் கல்லூரியிலும் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பேராசிரி யராகப் பணிபுரிந்த காலத்தில், மாணவர்களிடம் வகுப்பில், இலக்கியம் குறித்தும், இலக்கிய ஆராய்ச்சி குறித்தும் பேசிய குறிப்புக்களின் விரிவுபடுத்தப் பட்ட நூலாக்கமாகவே இம்மூன்று நூல்களும் அமைந்துள்ளன. பேராசிரியர் அ.ச. ஞா.-வின் ‘இலக்கியக்கலை’ நூலின் முன்பகுதியை அடி யொற்றியதாக ‘இலக்கியத் திறன்’ அமைந்துள்ளது. இந்நூலில் அறிவியலுக்கும் கலைக்குமுள்ள வேறு பாடு, கலையின் தனித்தன்மை, இலக்கியம் கலை யாக அமைதல், கலைஞனின் மனம், இலக்கியக் கலையாக்கத்தில் தொழிற்படும் உணர்ச்சித்திறம், இலக்கியத்தை நுகரும் திறம் ஆகியவற்றை விரிவாக விளக்கியுள்ளார். இறுதிஇயலான பத்தாம் இயலில், இலக்கிய ஆராய்ச்சியின் அடிப்படைகள் குறித்துப் பேசியுள்ளார். கலை, இலக்கியம் பற்றிய மாணாக்கரின் அடிப்படைப் புரிதலுக்கு இந்நூல் உதவியாகவிருக்கும் என்பதில் ஐயமில்லை. கலை, இலக்கியத்தின் அடிப்படைகளை விளக்குவதற்கு ஆங்கிலத் திறனாய்வாளர்களாக ஏ.சி. பிராட்லி, ஐ.ஏ. ரிச்சர்ட்ஸ், மாத்யூ ஆர்னால்ட், ஆபர் குரோம்பி, வின்செஸ்டர், ஹட்ஸன் ஆகியோரின் மேற்கோள் களை மு.வ. பெரிதும் பயன்படுத்தியுள்ளார். இவர் களுள் பெரும்பாலோர் 1920-30 காலகட்டத்தில் கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களாகப் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஏ.சி. பிராட்லி, ஷேக்ஸ்பியர் திறனாய்விலும், கவிதைத் திறனாய்விலும் புகழ் பெற்றவர். அவரது ஷேக்ஸ்பியரியத் திறனாய்வின் தாக்கம் குறித்து, ‘ஹாக்ஸ்’ என்பவர், இப்படி யொரு கவிதை எழுதினார்.

“நேற்றிரவு நானொரு கனாக் கண்டேன்
ஷேக்ஸ்பியர் அதிலோர் ஆவியாய் வந்தார்
ஆட்சிப்பணிக்கான தேர்வுஎழுத அவர் அமர்ந்திருந்தார்
அந்த ஆண்டு ஆங்கிலத் தேர்வில்,
லியர் அரசன் நாடகத்திலிருந்து
வினாக்கள் பல வினவப்பட்டிருந்தன,
ஷேக்ஸ்பியர் அதற்கு மிகமோசமாய்ப்
பதிலெழுதினார் - ஏனெனில்
அவர் பிராட்லியை வாசிக்காமல் வந்திருந்தார்!”

ஏ.சி. பிராட்லியின் கவிதை குறித்த ‘ஆக்ஸ் போர்ட் சொற்பொழிவுகள்’ என்னும் நூலையும், அவரது ‘அறிவியலும் கவிதையும்’ என்னும் நூலையும் இந்நூலின் பலவிடத்து மேற்கோளாய்ப் பயன்படுத்தியுள்ளார். கலையின் அழகு, உணர்ச்சி, கலைஞனின் அனுபவம், கற்பனை வடிவம், ஓசை நயம் ஆகியவற்றை பிராட்லியின் கருத்துநிலை சார்ந்தே விளக்கியுள்ளார். கவிதையின் உணர்ச்சி, கவியின்பம், கற்பனைத் திறன் ஆகியவற்றை விளக்கு வதற்கு, பிராட்லியுடன் வோர்ட்ஸ்வொர்த், கோல்ட்ரிட்ஜ், கீட்ஸ், பைரன் ஆகிய ஆங்கிலப் புனைவியல் கவிஞர்களையும் துணைக்கு அழைத் துள்ளார். புனைவியலுக்கு எதிராகக் கவிதையில் புறவயத் தன்மையையும், அழகியல் கூறுகளின் ஒருங்கிணைப்பையும், மரபினையும் வற்புறுத்திய, புதுச்செவ்வியல்வாதி, டி.எஸ். இலியட்டின் கருத்துக் களையும் ஆங்காங்கே மேற்கோள் காட்டியுள்ளார். பிரதியை நெருக்கமாக வாசித்துப்படைப்பை வரலாற்றிலிருந்தும் சூழலிலிருந்தும் கத்திரித்த செய்முறைத் திறனாய்வை ‘(Practical Criticism) அறிமுகப்படுத்திய ஐ.ஏ. ரிச்சர்ட்ஸின் கருத்துக் களையும் ‘இலக்கியத்திறன்’ நூலில் மு.வ., பரவலாக எடுத்தாண்டுள்ளார்.

மேற்காட்டிய திறனாய் வாளர்கள் பொதுவாக ‘தாராளவாத மனிதநேய’த் திறனாய்வாளர்கள் என்ற பொது வகைப்பாட்டில் அடங்குவர். என்றாலும், அவர்களுக்கிடையில் இலக்கியத்தை அணுகும்முறையில் கருத்து வேறு பாடுகள் உண்டு, ஆயின் இத்திறனாய்வாளர்களுக் கிடையிலுள்ள கருத்துநிலை வேறுபாடுகளை மு.வ. பொருட்படுத்தவில்லை; கவனத்திற் கொள்ள வில்லை. தனது கருத்து விளக்கத்திற்கு வசதியாக விருக்கும் அறிஞர்களுடைய மேற்கோள்களை அருகருகே கூடக் கையாண்டுள்ளார். சான்றாக, ‘கலை என்பது, எதார்த்த உலகின் பகுதியோ, நகலோ அன்று; அது தற்சுதந்திரம் வாய்ந்தது; முழுக்கத் தன்னாட்சித் தன்மை கொண்டது.’ என்ற ஏ.சி. பிராட்லியின் கருத்தையும், அதை மறுத்து, ‘கலையின் அழகியல் சார்ந்த, தனிப்பட்ட சொர்க்க நிலை யதார்த்த உலகின் உண்மையைக் கண்டறிவதற்கு இடர்ப்பாடாகும்’ என்று கூறிய ஐ.ஏ.ரிச்சர்ட்சின் கருத்தினையும் ஒரே இடத்தில் கையாண்டுள்ளார் (2010: பக். 29-30). ஆயின் தனது நிலைப்பாடு என்னவென்பதை மு.வ. இங்குத் தெளிவுபடுத்த வில்லை. இது போன்று “கவிதையென்பது தன்னியல்பாய்ப் பொங்கி வழியும் ஆற்றல் வாய்ந்த உணர்ச்சிகளின் கொட்டல்” என்ற வேர்ட்ஸ் வொர்த்தின் மிகு உணர்ச்சி சார்ந்த புனைவியல் கொள்கையை விளக்கும் மு.வ., (மேலது, ப. 67) இதற்கு நேர்எதிரான புதுச்செவ்வியல் சார்புடைய டி.எஸ். இலியட்டின் புறவயக் கூறுகளின் ஒருங் கிணைப்புப் (Objective Correlative) பற்றிய கவிதைக் கொள்கையையும் இந்நூலில் பிறிதோரிடத்தில் விளக்குகிறார். (மேலது, ப. 100) மேலும், இலக் கியத்தின் அடிப்படைக்கூறுகள் குறித்த விளக்கங் களிலும் தனது நிலைப்பாட்டை வலியுறுத்தாது, ஆங்கிலத் திறனாய்வாளர்களின் கருத்துக்களையே வழிமொழிகிறார். பேராசிரியர் மு.வ., அவர் களுக்குச் சமூகப் பண்பாட்டியக்கங்களின் சார்பு நிலைகள் வெளிப்படையாக எதுவுமில்லாததால், இலக்கியத்திறனாய்வு குறித்த விஷயத்திலும் அதே சார்பற்ற நிலையைக் கடைப்பிடித்துள்ளார் எனக் கருதலாம். மாணவர்களுக்கு இலக்கியத்தினடிப் படைகளை விளக்குவதே அவரது முதன்மை நோக்கமாக இருந்துள்ளமையும் இதற்கு மற்றொரு காரணமாகலாம்.

இலக்கியத்தின் இயல்பினை, அதன் அடிப் படைக் கூறுகளை விளக்குவதற்கு ஆங்கிலத் திறனாய் வாளர்களின் கருத்துக்களையே பெரிதும் மேற் கோள் காட்டும் மு.வ., சிலவிடத்து அம்மேற்கோள் களுக்கு இணையான தொல்காப்பியர், பாரதியார் ஆகியோரது கருத்துக்களையும் இயைபுடன் பொருத்திக் காட்டுகின்றார். ஆயின் கருத்து விளக்கத்திற்கான சான்றுப் பாடல்களை முழுக்கத் தமிழ் மரபிலிருந்தே கையாண்டுள்ளார். தற்கால இலக்கியத்தில் பாரதியார் பாடல்களையும் (உணர்ச்சி வெளிப்பாடு), காப்பிய இலக்கியத்தில் கம்பன் கவிதைகளையும் (உணர்ச்சிக்கேற்ற வடிவம், நடை), பழந்தமிழ் இலக்கியத்தில் சங்கக் கவிதை களையும் (உணர்ச்சி, கற்பனை விளக்கம்) பெரிதும் சான்றுப் பாடல்களாகத் தந்துள்ளார். இவற்றுள்ளும் சங்கச் செய்யுட்களே ‘இலக்கியத்திறன்’ நூலில் பெரும்பான்மை எடுத்துக்காட்டுப் பாடல்களாக அமைந்துள்ளன. மு.வ.-வின் ஆழ்ந்த சங்க இலக்கியப் பயிற்சியே இதற்குக் காரணமாகும்.

(2)

இலக்கியம் என்றால் என்ன? இலக்கியம் எங்ஙனம் கலையாகிறது? இலக்கியத்தின் அடிப் படைக் கூறுகள் யாவை? என்பன போன்ற இலக்கியம் பற்றிய அடிப்படை வினாக்களுக்கு விளக்கம் தரும் வகையில் மு.வ.வின் ‘இலக்கியத் திறன்’ நூலின் பெரும்பகுதி அமைந்துள்ளது. இந் நூலின் முதல் ஒன்பது இயல்களில் இலக்கியத்தின் திறனை விளக்கும் மு.வ., இறுதிஇயலான பத்தாவது இயலில் (‘ஆராய்ச்சி’) இலக்கியத்தை ஆராயும் திறன் குறித்து விளக்குகிறார். இலக்கியத்தைப் படைப்பதும் ஆராய்வதும் வெவ்வேறானவை என்று குறிப்பிடும் மு.வ., செய்தித்தாள்களில் வரும் மதிப்புரைகள், கட்சி, குழுச்சார்புகளுடனும் வணிக நோக்கத்துடனும் நடுநிலையின்றி எழுதப் படுகின்றன. ஆயின் இலக்கிய ஆராய்ச்சி என்பது நடுவு நிலைமையுடன் அமைதல் வேண்டும். ‘சமன் செய்து சீர்தூக்கும் துலாக்கோல்’ போன்றதாகவும் விருப்பு வெறுப்பின்றி ‘மெய்ப்பொருள் காண் பதாக’வும் அது நிகழ்த்தப்படவேண்டும் என்கிறார். இலக்கிய ஆராய்ச்சியில் குணமும் (அழகு), குற்றமும் எடுத்துக்காட்டப்பட வேண்டுமென் பதைத் தொல்காப்பியர் வழிநின்று விளக்குகிறார். அதே சமயத்தில் ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ் திறனாய்வின் இருபெருந்தூண்களாகக் குறிப்பிட்ட படைப்பைப் பற்றிய விளக்கமும் படைப்பைப் பற்றிய மதிப்பீடும் இலக்கிய ஆராய்ச்சிக்கு மிகமுக்கியமானவை என எடுத்துக்காட்டுகின்றார். இலக்கியத்திறனாய்வு முறைகளுள், வரலாற்று முறைத்திறனாய்வு, வாழ்க்கை வரலாற்றுத் திறனாய்வு, ஒப்பீட்டு முறைத் திறனாய்வு, வகுத்த விதிகள் வழித் திறனாயும், விதிவழித்திறனாய்வு, தரத்தை மதிப்பிடும் தீர்ப்பு முறைத் திறனாய்வு ஆகியவற்றைப் பயனற்றதாக, விரும்பத்தகாததாக எடுத்துக்காட்டி நிராகரிக்கும் மு.வ., நூலின் வழி இலக்கிய விதிகளை வருவித்துக் கண்டுணரும் வருநிலைத் திறனாய்வுமுறையை இலக்கிய ஆராய்ச்சிக்குரியதாக வலியுறுத்துகிறார்.

“சேக்ஸ்பியர் நூல்களையும் காளிதாசர் நூல் களையும் படித்துவிட்டு, அவை உணர்த்தும் விதிகளைக் கொண்டு சிலப்பதிகாரத்தையோ, பெரிய புராணத்தையோ ஆராய்வதால் பயன் இல்லை. ஒவ்வோர் இலக்கியமும் ஒவ்வொரு வகையான வளர்ச்சி பெற்றிருத்தலால், அந்தந்த நூலைக் கற்று உணர்ந்து, அதனதன் சிறப்பியல்பு களைத் தனித்தனியே கண்டு விளக்கம் தருதல் வேண்டும். இவ்வகையான கண்டுணர்முறை (Inductive Criticism) முன்னமே வகுத்த விதிகளைக் கொண்டு ஆய்வது அன்று; ஒரு நூலைக் கற்கும் போது அதிலிருந்தே விதிகளைக் கண்டு உணர்ந்து ஆய்வது ஆகும்.” (மேலது, பக். 261)

இதே கருத்தினை ‘இலக்கிய ஆராய்ச்சி’ நூலில் உள்ள ‘எள்ளும் எண்ணெயும்’ என்ற கட்டுரையிலும் வற்புறுத்துகிறார். எள்ளிலிருந்து எண்ணெய் எடுப்பதுபோல் இலக்கியத்திலிருந்து இலக்கணம் (விதிகள்) உருவாக்கப்படவேண்டும். (‘இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பல்’) என்கிறார். இங்கு மு.வ., இலக்கியத்திலிருந்து விதிகளை வருவித்துக்கொள்கிற வருநிலைத் திறனாய்வினைக் குறிக்க ‘Deductive Criticism’ என்ற ஆங்கிலக் கலைச்சொல்லைக் கையாளாது, அதற்கு நேரெதிரான விதிகளைச் செலுத்திப் பார்க்கிற செலுத்துநிலைத்திறனாய்வினைக் குறிக்கும் ஆங்கிலக் கலைச் சொல்லான ‘Inductive Criticism’ என்பதை அடைப்புக் குறிக்குள் பிழைபடக் கையாண்டு உள்ளார்.

இலக்கியத்திற்கு உள்ளேயிருந்து விதிகளை வருவிக்கிற வருநிலைத் திறனாய்வை வலியுறுத்தும் மு.வ., இலக்கியத்தில் ஆராயப்படவேண்டிய பொருட் களாக உணர்ச்சி, கற்பனை, வடிவம் என்னும் மூன்றை மட்டும் குறிப்பிடுகிறார்.

“இலக்கியத்தை ஆயும்போது அதன் விழுமிய உணர்ச்சி, சீரிய கற்பனை, அழகியவடிவம் ஆகியவை பற்றி ஆய்தல் வேண்டுமே அன்றி, மக்களின் உள்ளத்தைக் கவரும் நூல் என்னும் காரணம் பற்றிப் போற்றுதல் கூடாது” (2010: ப. 271)

“ஒலி நயமே பாட்டுக்கலையின் உடல்; கற்பனை உணர்வே உயிர்” (2008: ப. 99)

இலக்கியத்தின் பாடுபொருள், சமூக உள்ளடக்கம் விஷயங்களில் மு.வ., அக்கறை செலுத்தவில்லை. மேலும் உணர்ச்சி, கற்பனை, வடிவம் என்ற மூன்றிலும் உணர்ச்சியை அதிகம் வலியுறுத்திப் பேசுகிறார். “சுய உணர்ச்சிச் செல்வத்தை நாடிப் படைக்கும் பெரும் புலவர்கள் ஒலி நயத்தைத் தேடி அலைவதில்லை” (மேலது, ப. 117)

இங்ஙனம் இலக்கியத்தின் உணர்ச்சிக் கூறை உயர்த்திப் பேசும் மு.வ., இலக்கிய ஆராய்ச்சி யாளனின் முதல் தகுதி ‘உணர்ச்சியனுபவமே’ என்னும் ஐ.ஏ. ரிச்சர்ட்சின் கருத்தினை அழுத்த மாகக் கூறுகிறார். “தாம் ஆராயும் இலக்கியத்திற்கு ஏற்ற மனநிலை பெற்று, அதன் அனுபவத்தைப் பெறுவதில் தேர்ச்சி மிக்கவராக இருத்தல் வேண்டும்” (2010: ப. 260). மேலும் இலக்கிய ஆராய்ச்சி என்பதை மு.வ., அனுபவ ஆராய்ச்சி யாகவே கருதுகின்றார். கவிஞனின் அனுபவத்தை உணர்ந்து வெளிக்காட்டுவதே ஆராய்ச்சியாளனின் கடமையெனக் காட்டுகிறார்.

“இலக்கியத்தைப் பொறுத்தவரையில் அனுபவ ஆராய்ச்சி சிறந்து நிற்கும் காலமே அந்த நாட்டின் சிறந்த நிலையாகும். தமிழ்நாட்டில் அதற்குரிய அறிகுறிகள் இந்த நூற்றாண்டில் காணப்படுகின்றன.

கவிஞரின் அனுபவம் இன்னது என்று நான் உணர்கிறேன். கற்கின்ற நீங்களும் உணர்கிறீர்களா? என்று அறைகூவி அழைப்பது போன்ற இலக்கிய ஆராய்ச்சி நூல்கள் ஆங்கிலத்தில் பெருகியுள்ளன” (2008: ப. 8).

“கவிஞரின் அனுபவத்தை எட்டிப்பிடித்திடத் தாவிப் பறப்பது போன்ற ஆராய்ச்சி நூல்களே ஆங்கிலத்தில் மிகுந்துள்ளன; ஷேக்ஸ்பியர், ஷெல்லி போன்றவர்களைப்பற்றிய ஆராய்ச்சி நூல்களில் பெரும்பாலானவை இவ்வாறு அமைந்திருப்பதைக் காணலாம். பிராட்லி (A.C.Bradely) முதலிய ஆராய்ச்சி யாளர்கள் பலர் செய்துள்ள அருந்தொண்டுகளை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.” (மேலது. பக். 8-9).

இங்கு ‘உணர்ச்சியனுபவம்’ என்று மு.வ., குறிப்பிடுவது டி.கே.சி., போன்ற ரசனைமுறைத் திறனாய்வாளர்கள் குறிப்பிடும், வாசகன் பிரதியின் உருவ அழகில் ஓசையின்பத்தில் திளைக்கும் வாசகச் செயற்பாடு சார்ந்த உணர்ச்சி இன்பம் பற்றியது அன்று. படைப்பாளியின் உணர்ச்சி அனுபவத்தைப் பெறுகின்ற மனப்பதிவு திறனாய்வு முறை சார்ந்தது. இதனை மு.வ., “உணர்ச்சி வழி ஆராய்ச்சி (Neo- Criticism or impressionistic Criticism) என்று குறிப்பிடுகிறார். (2010: ப. 261) எனவே மு.வ.வின் இலக்கியத்திறனாய்வு அணுகுமுறை புனைவியல் கவிஞர்கள் வலியுறுத்திய, ஏ.சி. பிராட்லி பின்பற்றிய உணர்ச்சி வெளிப்பாட்டுக் கொள்கை சார்ந்ததாக அமைந்துள்ளது.

(3)

 இலக்கியம் என்றால் என்ன? இலக்கியத்தின் அடிப்படைக் கூறுகள் யாவை? இலக்கியத்தில் ஆராயப்படவேண்டிய அம்சங்கள் யாவை? அவற்றை எம்முறையில் ஆராய்தல் வேண்டும்? என்கிற விளக்கங்களுக்கு, விவாதங்களுக்கு அப்பால் எது நல்ல இலக்கியம் அல்லது உயர்ந்தகலை என்கிற இலக்கிய மதிப்பீடு சார்ந்த விவாதத்திற்குள்ளும் மு. வ., சென்றுள்ளார். இதனை அவரது இலக்கிய ஆராய்ச்சி நூலில் பரக்கக் காணலாம். மு.வ., வின் வருகைக்கு முன்னரும் அவரது காலத்திலும் தமிழ் இலக்கிய விமர்சனச் சூழலில் இத்தகைய இலக்கிய மதிப்பீடு சார்ந்த விவாதங்கள் நடைபெற்றுள்ளன. இடதுசாரி விமர்சகர்கள் ப. ஜீவானந்தம் தொடங்கி நல இலக்கியம் X நச்சு இலக்கியம் என்ற இருமை எதிர்வை முன்வைத்து முற்போக்கான மனித நேயமிக்க இலக்கியம் ‘நல்ல இலக்கியம்’ என வரையறுத்துள்ளனர். ‘மணிக்கொடி’, ‘எழுத்து’ முதலான சிறு பத்திரிகைகளில் பண்டிதம் X நவீனம் என்கிற இருமை எதிர்வை முன்வைத்து விவாதங்கள் நடைபெற்றுள்ளன. க.நா.சு., ந. பிச்சமூர்த்தி, சி.சு. செல்லப்பா முதலியோர் மரபு சார்ந்த இலக்கிய இலக்கண மரபுகளை ‘பண்டிதம்’ என நிராகரித்து, புதுமை, பரிசோதனை அம்சங்கள் நிறைந்தவற்றை ‘நவீனம்’ என வரவேற்று ஆதரித் துள்ளனர். புதுமைப்பித்தனுக்கும் (ரசமட்டம்) கல்கிக்கும் இடையில் நடைபெற்ற விவாதம் ‘ஜனரஞ்சக’ (popular) எழுத்துக்கும் நவீன பரிசோதனை முயற்சி கொண்ட மேட்டிமை (elite) எழுத்துக்குமான விவாதமாகும், கல்கி, ஜனரஞ்சக ஆதரவாளராக இருந்தார்.

மு.வ. தனது இலக்கிய ஆராய்ச்சி நூலில் பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட வெகு மக்கள் ஆதரவுள்ள ‘ஜனரஞ்சக’ இலக்கியத்திற்கு எதிராக மேட்டிமைத்தனம் நிறைந்த உயர் இலக் கியத்தை ஆதரித்துப் பேசியுள்ளார். இவ்விரண்டுக்கு மான முரணை அந்த மணிக்குரியநூல் X எந்தக் காலத்துக்குரிய நூல், உயர்கலை X ஓர் அணா நூல், கலைஞர் சுவை X பொதுமக்கள் சுவை, உயர்வகைக் கலை X இழிவகை நாடகம், குஜிலி பதிப்புக்கள் X சிறந்த நூல்கள், உயர்சுவை X மட்டமான சுவை என்கிற எதிர்வுகள் வழி விளக்குகிறார். எந்தக் காலத்திற்குரிய உயர்சுவையுடைய உயர்வகைக் கலைச் சார்புடைய சிறந்த நூல்களாக மு.வ., கருதுவது அறச்சார்புடைய நூல்களே ஆகும். உயர்ந்த கலைஞர்களாக, அறத்திறன் ஆட்சியில் நம்பிக்கையுடையவர்களைக் காட்டுகின்றார். எனவே மு.வ.வின் ‘உயர் இலக்கியம்’ என்ற கருத்து நிலைக்கு ஆதாரமாக இருப்பது ஒழுக்கம் சார்ந்த அறிவியலே. இதனை ஆதாரமாகக்கொண்டே அவரது புதினங்களும் கட்டப்பட்டுள்ளன.

மு.வ.,வின் இலக்கியத்திறனாய்வு நூல்கள் மாணவர்களுக்கு இலக்கியத்தின் அடிப்படை களையும் இலக்கிய வகைகளையும் விளக்கும் நோக்கத்தில் எழுதப்பட்டுள்ளன. இலக்கியத் திறனாய்வு கருத்துநிலை சார்ந்த விஷயங்களில் மு.வ., சார்பற்ற நிலையைக் கடைப்பிடிக்கிறார். இலக்கியத்தில் ஆராயப்பட வேண்டிய பொருட் களாக உணர்ச்சி, கற்பனை, வடிவம் என்ற மூன்றைக் குறிப்பிடுகின்றார். இம்மூன்றிலும் உணர்ச்சிக் கூறை அழுத்திப் பேசுகிறார். இலக்கிய ஆராய்ச்சி என்பது விதிகள் வழி இலக்கியத்தை அணுகாமல் இலக்கியத்திற்குள் இருந்து விதிகளை வருவிக்கிற வருநிலைத் திறனாய்வாக இருக்கவேண்டுமெனக் கருதுகிறார். மு.வ., இலக்கிய ஆராய்ச்சியை உணர்ச்சி வெளிப்பாட்டுக் கொள்கைசார்ந்த அனுபவ ஆராய்ச்சியாகக் கருதுகிறார். பொழுது போக்கு அம்சம் சார்ந்த ஜனரஞ்சக‘ இலக்கியத்திற்கு எதிராக மேட்டிமைத் தனம் நிறைந்த ‘உயர் இலக்கியம்’ என்ற ஒன்றை வற்புறுத்துகிறார். மு.வ., வின் ‘உயர் இலக்கியம்’ என்ற கருத்துநிலைக்கு ஆதாரமாக இருப்பது ஒழுக்கம் சார்ந்த அறவியலே. மு.வ.வின் இலக்கியத்திறனாய்வு நூல்கள் இலக் கியத்தின் அடிப்படைக் கூறுகளை விளக்கிக் காட்டுகின்றன. திறனாய்வின் தொடக்கநிலைக் கூறுகளைத் தொட்டுக்காட்டுகின்றன. திறனாய்வில் கருத்துநிலை சார்ந்த விவாதங்களுக்குள்ளோ, திறனாய்வின் அடுத்த கட்ட வளர்ச்சியான ‘இலக்கியக் கொள்கைப் பகுதிக்குள்ளோ அவை செல்லவில்லை.

துணைநூற்பட்டியல்

1. கனசபாபதி, சி., “மு.வ. வின் திறனாய்வுக் கொள்கை”, மு.வ. கருத்தரங்கக் கட்டுரைகள்,
சு. வேங்கடராமன் (ப. ஆ.) பதிப்புத்துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், 1987, பக். 289-302.
2. சுப்பிரமணியம், க. நா., விமரிசனக்கலை, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1959.
3. பஞ்சாங்கம், க., தமிழிலக்கியத்திறனாய்வு வரலாறு, அன்னம், தஞ்சை, மறுபதிப்பு, ஜன. 2007.
4. வரதராசன், மு., இலக்கியமரபு, பாரிநிலையம், பிப்ரவரி, 1979.
5. வரதராசன், மு., இலக்கியத்திறன், பாரிநிலையம், மறுபதிப்பு, 2010.
6. வரதராசன், மு., இலக்கிய ஆராய்ச்சி, பாரி நிலையம், மறுபதிப்பு, 2008.
7.  Harry Blamires, A History of Literary Criticism, MacMillian India Ltd., 2000.
8.  Peter Barry, Beginning Theory – An Introduction to Literary and Cultural theory, Manchester University press, UK, 1995.