முத்தம் மறுத்த சித்தரின் முன்னே
திருப்பூவணர்த்துப் பொன்னனையாள்
ரசவாதத்துக்கு எனப் பரப்பி வைத்த
பித்தளை வெண்கலம் தரா ஆகிய
உலோகக் கலன்களுக்கிடையே இருந்து
தப்பி வந்த வெண்கலப் பறவை
யுகப் பிரயாணத்தில் கைமாறி நீந்திப்
பாத்திரக் கடையின் பழைய தரா மூடை இருளில்
கலைப்பொருள் வியாபாரியின்
மாமிசப் பார்வைக்குப் பதுங்கி-
பிரபஞ்ச கானா இழை அறுந்து
கடையில் சதா ஒலிக்கும்
எப்.எம்.இரைச்சலை விழுங்கி-
தவிப்பு தொலைத்த
உலோகச் சிறகை மௌனமாய்க் கோதி-
பொன்னனையாளின் நகக் கிள்ளல்
தனக்கு மட்டும் தப்பியதைத்
தாமதமாய் நினைத்து-
பஜாரின் எல்லையற்ற வெளியில் திரியும்
லோட்மேனின் தோளில் துளிர்க்கும் வியர்வையை
அடங்காத தாகத்துடன் அருந்தியவாறு
அடங்குகிறது.
Pin It