மதுரை நகர் மலைகள் சூழ்ந்ததாக உள்ளது. இம்மலைகளில் அரிய பல கல்வெட்டுக்கள் உள்ளதை அறியமுடிகிறது. பிராமி எழுத்துக் கல்வெட்டுகள் யானைமலையில் உள்ளன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சமணர் குகைகளில் இக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.

அண்மையில் தேனி மாவட்டம், புலி மான்கோம்பையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்ட நடுகல்லானது கி.மு.3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனத் தெரியவந்துள்ளது. அதில் பிராமி எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது.

வட இந்தியப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அசோகர் காலக் கல்வெட்டுகளில் பிராமி எழுத்துக்கள் இருந்ததால் அங்கிருந்தே தெற்குப் பகுதிக்கு பிராமி பரவியிருக்கலாம் எனக் கருதப்பட்டது. ஆனால், புலிமான்கோம்பை நடுகல் மூலம் தெற்கிலிருந்தே வடக்கிற்கு பிராமி எழுத்துக்கள் சென்றிருப்பது தெரியவருகிறது.

இதன்மூலம் மதுரையில் பழங்காலந்தொட்டே கலாசாரம் மிக்க மக்கள் வாழ்ந்திருப்பதை அறியலாம். மதுரையைப் பற்றி வெளிநாட்டவரான மெகஸ்தனிஸ் உள்ளிட்டோரது குறிப்புகளிலும் காணப்படுகிறது. வால்மீகி ராமாயணம், அசோகர் கல்வெட்டுகள் மூலமும் மதுரையின் பழமையை அறியலாம்.

சங்க இலக்கிய நூல்களில் 416 புலவர்கள் பாடியுள்ளனர். இவர்களில் 53 புலவர்கள் மதுரையைச் சேர்ந்தவர்கள், மதுரையில் வணிகர், ஆசிரியர் என அனைத்துத்துறையைச் சேர்ந்தவர்களும் சங்க காலப் புலவர்களாக விளங்கியுள்ளனர்.

சங்க இலக்கியத்தில் 206 பாடல்கள் மதுரைப் புலவர்களால் பாடப்பெற்றவையாகும். இதன்மூலம் மதுரை சிறந்த கலாசார நகராக விளங்கியிருப்பதை அறியலாம்.

Pin It