பத்தொன்பதாவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்

இந்த இதழ் உங்கள் கைகளில் இருக்கும்போது எழுபத்தொரு நாடுகள் பங்கேற்ற “காமன் வெல்த்” பத்தொன்பதாவது விளையாட்டுப் போட்டிகள் நிறைவு பெற்றிருக்கும்.

16-17ஆம் நூற்றாண்டுகளில் முதன்முதலில் முதலாளித்துவம் சின்னஞ்சிறு தீவான இங்கிலாந்தில் வெடித்தெழுந்ததனால் முதலாளித்துவம் தன் சந்தையை விரிவாக்கிக் கொள்ளவும் பெருக்கிக் கொள்ளவும் உலகில் பல்வேறு நாடுகளையும் தீவுகளையும் பல்வேறு வழிகளில் ஆண்டு அடிமைப்படுத்த அரசியல் ஆதிக்கம் செலுத்துவது தேவைப்பட்டது. காலனி ஆதிக்க அடிப்படையில் பிரிட்டிஷ் பேரரசு உருவாயிற்று. அதன் ஆட்சி எதிரொலிக்காத நாடே இல்லை என்னும் நிலை காலப்போக்கில் உருவாயிற்று. இதனாலேயே இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் பிரதமராகவிருந்த சர் வின்ஸ்டன் சர்ச்சில் “பிரிட்டிஷ் பேரரசில் சூரியன் அஸ்த மித்ததில்லை” என்று மார்தட்டிக் கூறினார்.

ஆனால் இரண்டாம் உலகப் போர்க்கால நிகழ்ச்சிகளும், போக்குகளும் ஏகாதிபத்தியத்தின் பிடிப்பை உடைத்தெறிந்தன. புதிதாகக் கிளர்ந்தெழுந்த சோவியத் அரசும், காலனி நாட்டு விடுதலைப் போராட்டங்களும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு முடிவுகட்டின. கடந்த நூற்றாண்டுகளின் நாற்பதுகளில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகள் பல விடுதலை பெற்றன.

முதலாளித்துவம் எதையும் விட்டுக் கொடுப்ப தில்லை. எனவே தன் செல்வாக்கும், மேலாண்மையும் “நட்புறவு”டன் தொடரவேண்டும் என்ற பிரிட்டனின் விருப்பத்தைப் புதிதாக விடுதலையடைந்த நாடுகள் மனமுவந்து தொடரக் காமன் வெல்த் என்னும் அமைப்பு ஏற்படுத்தப்பெற்றது. பண்டித ஜவகர்லால் நேரு இவ்வேற்பாட்டுக்கு ஒப்புதல் அளித்த காலத்திலேயே இந்த உறவு தேவைதானா? அடிமைச் சின்னம் எனக்கருதுவது முடியாதா? என இந்திய இடதுசாரி இயக்கம் வினா தொடுத்தது. இருப்பினும் காமன்வெல்த் தொடர்கிறது.

இந்தியா விடுதலைபெற்று 63 ஆண்டுகள் கழிந்து விட்டன. இக்காலப் பகுதியில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பண்டித ஜவகர்லால் நேருவின் தொலைநோக்குப் பார்வையின் விளைவாக அணிசேராக் கொள்கை, விடுதலைக்குப் போராடும் மக்களுக்குத் தார்மீக ஆதரவு, உலக சமாதானம் என்னும் சீரிய கொள்கைகளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இந்திய அரசு மிகத் தீவிரமாகக் கடைப்பிடித்து வந்ததனால்; காமன்வெல்த் உறுப்பினராக யிருந்தும் இந்தியாவுக்குத் தனித்தன்மையையும் உலக அளவில் ஈடிணையற்ற உயர்ந்தோங்கிய மதிப்பையும் பெறமுடிந்தது; பண்டித ஜவகர்லால் நேருவுக்குப் பிறகு இந்திரா காந்தியும் இதே கொள்கைகளை ஓரளவு பின்பற்றி ஒழுகியதனால் அவருடைய புகழும் ஓங்கிற்று.

இன்று தேசியப் பாரம்பரியம், விடுதலைப் போராட்டப் பின்னணி, புதிய சோஷலிசப்பாணி சமுதாயம் படைத்தல் என்னும் இலட்சியம் ஏதுமில்லாமல் இந்திய அரசு செயல்பட்டு வருவதனால் உயரிய தார்மீக மதிப்பீடுகளும், உயரிய கொள்கைகளும் புறக்கணிக்கப்பட்டு இன்று சிதைந்து, சீர்குலைந்து வருகின்றன. குறிப்பாக, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தனியார்மயமாதல், தாராளமயமாதல், உலகமயமாதல் என்னும் அதிபயங்கரப் பொருளாதாரக் கொள்கையை ஏற்று இந்திய அரசு மும்முரமாகச் செயல் படுவதால் முதலாளித்துவத்தினுடன் பிறக்கின்ற தீங்கு களான வஞ்சம், சூழ்ச்சி, கொள்ளையடித்தல், சுருட்டுதல், லஞ்சலாவண்யம் பெருகுதல் என்னும் தீமைகளெல்லாம் இந்திய சமுதாயத்தின் எல்லா மட்டங்களிலும் பாய்ந்து அலைக்கழிப்பது சர்வசாதாரணமாகி வருகின்றது.

இந்திய நாட்டின் பெருமையைப் பற்றிப் பெருமிதம் கொள்ளும் நல்லெண்ணம் படைத்தோர் இது கண்டு அஞ்சி வருகின்றனர். சீரழிவு தொடரும்.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பிரிட்டிஷ் எம்பயர் கேம்ஸ் என்னும் பெயரில் நடை பெற்று வந்த விளையாட்டுப் போட்டிகள் இப்பொழுது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் என்னும் பெயரில் தொடர்கின்றன. சிலநாட்களில் பத்தொன்பதாவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி முடிக்கப்பட உள்ளன. ஒருபுறம் பல நாடுகள் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவதற்கு இந்தியா களனாக துணையாக நிற்கிறது என்னும் பெருமை தருவது, இந்தியாவின் பெருமையை உலகளாவ உயர்த்தும். அதற்கான ஏற்பாடுகள் பற்றிய தொலைக்காட்சிச் செய்திகள், செய்தித் தாள்கள் தரும் செய்திகள் மிக அச்சமூட்டுவனவாகவும், நாட்டைத் தலை குனியச் செய்வனவாகவும் உள்ளன.

உலக விளையாட்டு புதிதன்று. இதன் தொடக்கத் தினைக் கிரேக்க நாகரிகத்தில் காணலாம். வட கிரேக்கத்தில் இருந்த ஒலிம்பிக் மலைத்தொடரில் கடவுள்கள் வீற்றிருந்து பிறந்து இறக்கும் மக்களுடைய வாழ்க்கையையும் சுக துக்கங்களையும் நிர்ணயிப்பனவாகக் கருதப்பட்டது. தாய் வழிச் சமூகத்திலிருந்து தந்தைவழிச் சமூகத்துக்குக் கிரேக்கம் மாறியதை ஒலிம்பிக் காலவரலாறு சுட்டிக்காட்டுகிறது என்பார் ஜார்ஜ் தாம்சன். அதாவது, ஒலிம்பிக் விளையாட்டு களில் ஆடவர்களுக்குத்தான் முதலிடம் இருந்தது. மற்போர், அம்பெய்தல், வாள் வீசுதல் போன்ற வீரசாகசங்கள் இன்றும் ஒலிம்பிக் விளையாட்டுகளில் தொடர்கின்றன. இவ் விளையாட்டுகளை முன்மாதிரியாகக் கொண்டே காமன்வெல்த் விளையாட்டுகளும் ஆசிய விளையாட்டுகளும் நடைபெற்று வருகின்றன.

பத்தொன்பதாவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற இந்தியாவுக்குக் கிடைத்த வாய்ப்பு மிகச் சிறப்பானது, பாராட்டத் தக்கது. ஆனால் ரூபாய் 70,000 ஆயிரம் கோடி செலவில் விளையாட்டு வீரர்கள் தங்குவதற்கு வீடுகளுள்ள கிராமங்களும், விளையாட்டு அரங்குகளும் தடகள வழிகளும், போக்குவரத்து வசதி களும், உணவு வகைகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யும் பொறுப்பை அமைச்சர் சுரேஷ்கல்மாடியும் அரசு அதிகாரக் குழுக்களும் ஏற்றுள்ளனர். பல செய்தித்தாள்கள் “கட்டிய பாலம் இடிந்து விழுந்தது, கிராமங்களும் பாலங்களும் கட்டுவதற்காக வாங்கிய செங்கற்களும், சிமெண்டும் தரக்குறைவானவை, தங்குமிடங்களில் கழிவறைகளும் மோசமாகக் கட்டப்பட்டுள்ளன, கொசுவத்தியும் பன்மடங்கு விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளது, நிதி மோசடியும், சுருட்டலும், அடக்கவிலைக்குப் பன்மடங்கு அதிகமாகக் கொடுத்துக் கட்டுமானத்திற்குப் பயன் படுத்தப்பட்ட பொருள்கள் வாங்கப்பட்டுள்ளன” என்னும் குற்றச்சாட்டுகள் பலவற்றை அள்ளி வீசி வருகின்றன. உச்சநீதிமன்றமும் இவ் ஊழல் கண்டு கண்மூடி மௌனியாக இருக்கமுடியாது என்று உறுதியாகத் தீர்மானித்துச் சொல்லியுள்ளது.

உலக அளவில் இந்தியாவின் தரத்தை அடி மட்டத்துக்குத் தள்ளி தரம் தாழ்த்திவிடும். பிற நாட்டு விளையாட்டு வீரர்கள் விளையாட்டுக்கான தயாரிப்புகள் குறைகூறியது கேட்டு இந்தியத் திருநாட்டின் நிலைமை இப்படித்தான் ஆக வேண்டுமா? அறுபதாண்டுக் காலத்தில் எத்தகைய சீர்குலைவு? எத்தகைய தலைகுனிவு? இந்த அவல நிலைமை இந்தியத் திருநாட்டின் நூற்றாண்டுக் கால விடுதலைப் போராட்டப் பின்னணியில் காணவேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது. ஏனெனில் அரசுகள் வரும், போகும். அதுபோல விளையாட்டுகளும் வரும், போகும். ஆனால் நாடு நிலைத்துநின்று பெருமைபெறுவது.

முதலாவது உலகப் பெரும்போர்க் காலத்தில் இந்தியா, சீனா, எகிப்து ஆகிய நாடுகள் விடுதலை இயக்கங்கள் கண்டன. இந்தியப் போர்வீரர்கள் மத்தியத் தரைக்கடல் போர்க்களங்களில் பங்கு பெற்றனர். சோவியத் புரட்சியைப் பற்றி ஓரளவு தெரிந்துகொண்டு நாடு திரும்பிய பின் அது பற்றிப் பேசினர். விடுதலை வேட்கையைத் தீவிரப் படுத்திற்று. தொழிலாளி வர்க்கமும், நடுத்தர வர்க்கமும் விடுதலைப் போராட்டத்தைத் தம் கைகளில் ஏற்றன. 1918-1920ஆம் ஆண்டு பம்பாயில் மட்டும் 1,25,000 பஞ்சாலைத் தொழிலாளர் வேலைநிறுத்தத்தில் பங்குபெற்றனர். வங்காளத்திலும் சென்னையிலும் தொழிலாளர் போராட்டங்கள் வெடித்தெழுந்தன.

“சௌரி சௌரா” இயக்கத்திற்குப்பின் 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காந்தியின் தலைமையில் “வெள்ளையனே வெளியேறு” என்னும் இயக்கம் நடைபெற்றது. பிரிட்டிஷ் அரசு அடக்குமுறையை ஏவியது. இவ்வியக்கத்தில் பம்பாயில் மட்டும் 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 2500க்கும் மேற்பட்டோர் கசையடி பெற்றனர். இப்பேரியக்கம் நாடு முழுவதும் பரவி மக்களை ஆர்த்தெழச் செய்தது. இதற்கு முன்னர்தான் 1919ஆம் ஆண்டு பஞ்சாபில் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது. நாடு முழுவதும் வகுப்புக் கலவரங்கள் வெடித்தெழுந்தன. இந்து, முஸ்லிம், சீக்கிய மக்கள் மதவேறுபாடின்றி ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் பிரிட்டிஷ் அரசு வஞ்சினத் தோடு செயல்பட்டது. 1947ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் சதியால் நாடு பிளவுபட்டது. இந்து- முஸ்லிம் கலவரங்களில் மக்கள் ரத்தவெள்ளத்தில் ஆழ்ந்தனர்.

இந்தியாவை எதிர்த்த ஏகாதிபத்தியத்தின் சதி இன்றும் பல்வேறு வடிவங்களில் தொடர்கிறது. இந்தியாவின் அந்நிய நாட்டுக் கொள்கை பிற நாடுகள் குறிப்பாகக்

காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலைபெற்ற நாடுகளின் பேராதரவைப் பெறக்கூடியதாக இன்றில்லை; நல்ல பாரம் பரியம் மதிப்பிழந்துவிட்டது.

ஏகாதிபத்தியத்தை எதிர்த்துச் சின்னஞ்சிறு நாடான கியூபா தலைநிமிர்ந்து நிற்பதற்கு அது மேற்கொண்ட கொள்கையும் நடைமுறையும் காரணம் ஆகும். இது ஒருபுறமிருக்க, இந்திய நாட்டைவிட மிகப்பெரிய நாடான மக்கள் சீனம் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நிமிர்ந்து நிற்கிறதெனில் அது கடைப்பிடித்து வரும் கொள்கையே காரணம். மக்கள் சீனத்தை இந்தியா இன்னும் சில ஆண்டுகளில் மிஞ்சிவிடும் என்று சிலர் ஆரூடம் சொல்லி வருகின்றனர். ஆனால் இந்தியாவில் எங்கும் எதிலும்

ஊழல் மலிந்துவிட்டது என்னும் குற்றச்சாட்டு நம் செவிப்பறையைத் தாக்குகின்றது. இந்திய நாட்டில் முதலாளித்துவத்தைக் கட்டும் காலகட்டத்தில் தீங்குகளும் அவலங்களும் இருந்தே தீரும். அவற்றை நீக்குவது எளிதன்று.

இந்தப் பின்புலத்தில் தேசியப் பாரம்பரியமும், இந்திய மக்களின் நல்வாழ்வினையும் உறுதிப்படுத்துவதற்காக மேற்கொண்ட எல்லாத் திட்டங்களும் மீட்டெடுக்கப்பட வேண்டும். மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டிய கட்டாயம், தீங்குகளை எதிர்த்து இயக்கம் காணவேண்டிய தேவை உணரப்பட வேண்டும். இது இந்திய உழைக்கும்

மக்கள் முன்னுள்ள தலையாய கடமை என நியூ செஞ்சுரியின் உங்கள் நூலகம் சுட்டிக்காட்ட விரும்புகிறது.

பத்தொன்பதாம் காமன்வெல்த் போட்டி சிறப் பாகவும், இந்திய வீரர்களுக்கும் நம் திருநாட்டிற்கும் பெருமை தருவதாகவும் அமைய வேண்டும் என உங்கள் நூலகம் விழைகிறது.

Pin It