தலைக்காவிரி:

தலைக்காவிரி, கர்நாடக மாநிலத்தில் குடகு மாவட்டத்தில் உள்ளது. குடகு மாவட்டம் மைசூரிலிருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ளது. காவிரி நதி முதன்முதலில் உற்பத்தியாகும் இடம், பிரம்மகிரி மலையின் அடி வாரத்திலுள்ள இந்தத் தலைக் காவிரியிலேயேயாகும்.

பிரம்மகிரி மலைக்கு அப்பால் பெய்யும் மழையின் ஒரு பகுதி கேரளாவுக்கும் மற்றொரு பகுதி அரபிக் கடலுக்கும் சென்று விடுகிறது. பிரம்மகிரி மலையின் அடிவாரத்தில் பெய்யும் மழைதான் காவிரி நதியாக உற்பத்தியாகிறது. காவிரி நதி உற்பத்தியாகும் இடத்தில் காவிரி நதி ஆங்காங்கே சிறிய ஓடைகளாகத் தான் உற்பத்தியாகிறது.

காவிரி நதி உற்பத்தியாகும் இடத்தில், அலகாபாத்தில் திரிவேணி சங்கமம் இருப்பது போன்று, ஒரு திரிவேணி சங்கமம் இருக்கிறது. அதில் கனகா நதியும் மற்றொரு நதியும்தான் கண்ணுக்குத் தெரியும். இன்னொரு நதி கண்ணுக்குத் தெரியாது.

mettur_dam_400தலைக் காவிரியில் கோயில்:

தலைக் காவிரியில் கோயில் ஒன்று இருக்கிறது. அதில் நாள்தோறும் பூசைகள் செய்ய, அப்போதைய மைசூர் மகாராஜா 400 பிராமணர்களைத் தலைக் காவிரியில் குடியமர்த்தினார். அந்தக் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு பிராமணக் குடும்பம் மட்டும் இன்றும் தலைக் காவிரியில் இருக்கிறது.

தமிழகத்திலுள்ள காவிரி நதியின் உபநதிகள்:

பவானி, நொய்யல், அமராவதி ஆகியவை, தமிழகத்தில் காவிரி நதியோடு கலக்கும் உபநதிகளாகும்.

காவிரி நதி தமிழகத்தில் ஈரோட்டுக்கு வருவதற்கு முன்னர், அதனுடன் பவானி நதி கலக்கிறது. ஈரோட்டில் நொய்யல் ஆறு கலக்கிறது. கரூரில் அமராவதி ஆறு கலக்கிறது.

திருவரங்கம் தீவு:

திருச்சி மாவட்டம் முக்கொம்பு என்னுமிடத்தில் கொள்ளிடமும் காவிரியும் தனித்தனியே பிரிந்து திருவரங்கம் என்னும் தீவை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டூர் அணையில் நீர்த் திறப்பு:

மேட்டூர் அணையில் ஆண்டு தோறும் ஜூன் 12-ஆம் தேதியில்தான் பாசனத்திற்கு நீரைத் திறந்து விடுவது வழக்கம். ஆனால், மேட்டூர் அணை கட்டப்பட்ட 75 ஆண்டுகளில் 15 ஆண்டுகள் தான் காவிரியில் ஜூன் 12 - ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கிறது. அதாவது, 1934, 1935, 1939, 1965, 1979, 1980, 1984, 1992, 1993, 1994, 1997, 2000, 2001, 2006, 2008 ஆகிய 15 ஆண்டுகளில் தான் தண்ணீர் ஜூன் 12 ஆம் தேதி திறந்து விடப்பட்டிருக்கிறது.

1936, 1937, 1938, 1940, 1941, 1942, 1943, 1945, 1947 ஆகிய ஆண்டுகளில் ஜூன் 12-ஆம் தேதிக்கு முன்னர் மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் 51 முறை ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படவில்லை.

காவிரி நடுவர் மன்றம்:

காவிரி டெல்டா விவசாயிகள் சங்கச் செயலாளர் மன்னார் குடி திரு.ரெங்கநாதன் அவர்களும் மற்றும் தமிழக அரசும் காவிரி நதி நீர்ப் பிரச்சினை சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்ததையடுத்து, அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா அவர்கள், இன்னும் ஒரு மாதத்தில் காவிரி நடுவர் மன்றத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் காவிரி நதிநீர்ப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று, 4-5-90ஆம் நாள் தீர்ப்புரைத்தார். அந்தத் தீர்ப்பின் அடிப் படையில், அப்போது இந்தியாவின் தலைமையமைச்சராக இருந்த திரு.வி.பி.சிங் அவர்கள், 2-6-90ஆம் நாள் காவிரி நடுவர் மன்றத்தை ஏற்படுத்தினார்.

காவிரி நடுவர் மன்றத்தின் தலைவராக நீதிபதி சித்தகோஸ் முகர்ஜி அவர்கள் இருந்தார். அவருடன் இரண்டு உறுப்பினர்கள் இருந்தார்கள். இவர்கள் காவிரி நதிநீர்ப் பிரச்சினையைத் தீர விசாரித்து, கர்நாடகம் தமிழகத்திற்கு ஆண்டு தோறும் 205 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும் என்று இடைக்காலத் தீர்ப்பு வழங் கினார்கள். இது மத்திய அரசாங்க அரசுப் பதிவிதழிலும் (கெஜட்டிலும்) வெளியிடப்பட்டது.

கர்நாடகம் ஆண்டுதோறும் 205 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டுமென்று காவிரி நடுவர் மன்றம் உத்தரவிடும் போது, அதனை ஒவ்வொரு மாதமும் இவ்வளவு இவ் வளவு டி.எம்.சி.யாக வழங்கவேண்டும் என்று உத்தர விட்டது. காவிரியில் திடீரென்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்கும் போது அந்த வெள்ள நீரை, அதாவது உபரி நீரைத் திறந்து விட்டு விட்டு, காவிரி நடுவர் மன்றம் உத்தரவிட்டபடி, நாங்கள் தண்ணீரைத் தமிழகத்திற்கு வழங்கிவிட்டோம் எனக் கூறமுடியாது என்று காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியது.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு மத்திய அரசாங்க கெஜட்டில் வெளியானால் அதனைச் சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கங்கள் ஏற்று நடக்கவேண்டுமென்று மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்த் தகராறுகள் சட்டம் குறிப்பிடுகிறது. ஆனால் கர்நாடக அரசாங்கம் இன்றைய தேதி வரையில், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை நிறைவேற்ற முன்வரவில்லை.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை:

முல்லைப் பெரியாறு பெயர்க் காரணம்:

தமிழகத்திலுள்ள முல்லை ஆறும், கேராளவில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி ஓடி வரும் பெரியாறும் ஒன்று கலப்பதால், இது முல்லைப் பெரியாறு என்றழைக்கப்படுகிறது.

முல்லைப் பெரியாறு அணைக்குரிய நீர் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் இடம் கேரள மாநிலத்திலுள்ள தேக்கடியாகும்.

முல்லைப் பெரியாறு அணை கம்பம் பள்ளத்தாக்கில் கேரள மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்த இடம், முன்பு ஒரு தமிழ் ஜமீனுக்குச் சொந்தமாக இருந்தது. கேரள மாநிலம் மொழிவாரி மாநிலமாகப் பிரிக்கப்பட்ட போது, இந்தப் பகுதி கேரள மாநிலத்தில் சேர்க்கப்பட்டு விட்டது.

முல்லைப் பெரியாறு அணை எப்போது கட்டப்பட்டது:

முல்லைப் பெரியாறு 1886 முதல் 1889 - ஆண்டில், கர்னல் பென்னிகுக் என்ற ஆங்கிலேயப் பொறியாளரால் கட்டப்பட்டதாகும்.

குத்தகைக் காலம்:

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து 999 ஆண்டுகள் கேரள மாநிலம் தமிழகத்திற்குத் தண்ணீர் கொடுக்க வேண்டும் என்பது முன்பு செய்யப்பட்ட ஒப்பந்தமாகும்.

முல்லைப் பெரியாறு அணையால் பாசன வசதி பெறும் மாவட்டங்கள்:

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து, 1. மதுரை மாவட்டம், 2. தேனி மாவட்டம், 3. திண்டுக்கல் மாவட்டம், 4. சிவகங்கை மாவட்டம், 5. இராமநாதபுரம் மாவட்டம் ஆகியன நீர்ப்பாசன வசதிகளைப் பெறுகின்றன.

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு:

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் முல்லைப் பெரியாறு அணை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது.

இந்த அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரைப் பயன்படுத்திக் கொள்வதற்காக, தமிழக அரசு ஆண்டு தோறும் கேரளா அரசாங்கத்திற்கு ரூ. 30 கோடி தொகையை அளித்து வந்தது மற்றும் அணையைப் பாதுகாக்கவும் பழுதுபார்க்கவும் தமிழக அரசே செலவு செய்தது.

இவ்வாறு தமிழக அரசு, கேரளா அரசாங்கத்திற்கு ரூ.30 கோடி கொடுத்து வந்த வருமானம் ஒரு புறமிருக்க, முல்லைப் பெரியாறு அணையைச் சுற்றுலாப் பயணிகள் மூலம் கேரளா அரசாங்கம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.30 கோடி வருமானம் பெற்று வருகிறது!

முல்லைப் பெரியாறு அணையில் எத்தனை அடிகள் வரையில் நீரைத் தேக்கிவைக்க முடியும்:

முல்லைப் பெரியாறு அணையில் 155 அடி வரையில் நீரைத் தேக்கி வைக்கலாம். அதனால்தான், 142 அடி வரையில் நீரைச் சேமித்து வைப்பதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவை கேரளா அரசாங்கம் ஏற்கவில்லை. இது நீதிமன்ற அவமதிப்புக் குற்றமாகும். இத்தகைய குற்றத்தைச் செய்தது ஒரு மாநில அரசாங்கம் என்பதால், உச்ச நீதிமன்றம் கேரளா மாநில அரசாங்கத்திற்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்காதிருக்கிறது. இதே ஒரு தனிப் பட்ட நிறுவனம் இத்தகைய குற்றத்தைச் செய்திருந்தால், உச்ச நீதிமன்றம் கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கும்.

முல்லைப் பெரியாறு அணையில் 136 அடிக்கு மேல் நீரைத் தேக்கி வைப்பதற்கு கேரளா அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவிப்பது ஏன்?

முல்லைப் பெரியாறு அணைக்குரிய நீர் தேக்கி வைக்கப்படும் பகுதிகளின் பல இடங்களில், கேரளா மாநிலத்தின் அமைச்சர்களும் அரசியல்வாதிகளும் மற்றும் பெருந்தனக்காரர்களும் பெரும் மாளிகைகளையும், பங்களாக்களையும் வீடுகளையும் கட்டிவிட்டார்கள். அதனால் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்தினால், அந்த மாளிகைகளும் பங்களாக்களும் வீடுகளும் நீரில் மூழ்கிவிடும். அதனா லேயே முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்துவதை கேரளா அரசாங்கம் எதிர்க்கிறது.

முல்லைப் பெரியாறு அணை உண்மையிலேயே பழுதுபட்டுள்ளதா? கேரளா அரசாங்கம் புதிய அணையைக் கட்டுவதற்கு ஏற்பாடு செய்வதன் நோக்கம் என்ன?

முல்லைப் பெரியாறு அணை பழுதுபடவில்லை. முல்லைப் பெரியாறு அணை பழுதுபட்டுள்ளதென்றும், எப்போது வேண்டுமானாலும் அது உடையும் அபாய நிலையில் உள்ளது என்றும் கேரளா அரசாங்கம் 1976 - ஆம் ஆண்டிலிருந்து திட்டமிட்டுப் பரப்பிவிடுகின்ற ஒரு பொய்ப் பிரசாரமாகும்.

புதிய அணையின் நோக்கம்:

கேரளா அரசாங்கம் தனது நீர் மின் உற்பத்திக்காக, கேரளாவில் இடுக்கி என்னும் இடத்தில் ஒரு அணையைக் கட்டியுள்ளது. அந்த அணை முல்லைப் பெரியாறு அணையைப் போன்று 7 மடங்கு பெரியதாகும். அந்த அணையில் நீர் மின் உற்பத்திக்குப் போதிய அளவுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. அதனால் முல்லைப் பெரியாறு அணைக்குச் செல்லும் நீரை, இடுக்கி அணைக்குத் திருப்பி விடுவதற்கே, கேரளா மாநில அரசாங்கம் புதிய அணையைக் கட்டுவதற்கு முயற்சிக்கிறது.

முல்லைப் பெரியாறு அணையில் போதிய அளவுக்குத் தண்ணீர் தேக்கி வைக்கப்படாததால் தமிழகத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு என்ன?

1.     38,000 ஏக்கர் நிலங்கள் தரிசாகிவிட்டன.

2.     இருபோக சாகுபடியில் இருந்த 26,000 ஏக்கர் நிலங்கள் ஒருபோக சாகுபடிக்கு மாறியுள்ளது.

3.     விவசாய உற்பத்தி இழப்பாக ரூ.500 கோடி ஏற்பட்டு உள்ளது.

4.     மின் உற்பத்தி இழப்பு ரூ.358 கோடியாகும்.

- புலமை வேங்கடாசலம்

Pin It