சொற்களை வீணாக்காத, தட்டச்சுச் செய்யப்பட்டு உறையில் இடப்பட்ட அக்கடிதம் என் வீட்டின் முன் கதவுக்குக் கீழேயுள்ள சிறுசந்து வழியே வீட்டினுள் தள்ளப்பட்டிருந்தது. இந்திய உள்நாட்டுப் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பவர்களுடனான என் சந்திப்பு அக்கடிதத்தில் உறுதிசெய்யப்பட்டிருந்தது. இதற்காக நான் பல மாதங்கள் பொறுமையாகக் காத்திருந்தேன். எங்கள் சந்திப்புக்கென இரண்டு நாட்களில் நான்கு நேரங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன. அந்நான்கில் ஏதாவதொன்றில் சத்தீசுகட் மாநிலம் தாந்தெவாடா நகரில் உள்ள தாந்தேசுவரி அம்மன் கோவிலில் நான் இருக்கவேண்டும்.

ஏன் ஒரே ஒரு நேரத்தைக் குறிப்பிடாமல் இப்படி நான்கு வெவ்வேறு நேரங்களைக் குறிப்பிட்டுள்ளனர் என்கிறீர்களா? வானிலை மாற்றங்களால் சரியான நேரத்தில் நான் அங்குச் சென்று சேர முடியாது போகலாம். நான் செல்லும் ஊர்தியின் உருளிகளில் (சக்கரங்கள்) உள்ள காற்றுக்குழாய்கள் ஓட்டையாகி என் பயணம் தடைப் படலாம். சாலை மறியல் அல்லது போக்குவரத்துத் துறை ஊழியர் வேலை நிறுத்தம் ஏதும் நடந்து அதனால் தாமதமாகலாம். இவற்றில் எதுவுமே நடக்காவிட்டாலும் தற்செயலாக, என் தீய வாய்ப்பால் நான் குறித்த நேரத்தில் அந்தக் கோவிலை அடையமுடியாது போகலாம்.

arunthathi_roy_500

“எழுத்தாளர் (அருந்ததி ராய்) தன்னை அடையாளப் படுத்துவதற்குப் பொட்டு அணிந்திருக்கவேண்டும். ஒரு ஒளிப்படக்கருவி, தேங்காய் ஆகியவற்றைக் கையில் வைத்திருக்கவேண்டும். எங்கள் தரப்பில் அவரைச் சந்திக்க வருபவர் தலையில் தொப்பியணிந்திருப்பார். அவுட்லுக் இந்தி இதழ் ஒன்றையும் வாழைப்பழங்களையும் வைத்திருப்பார். வணக்கம் குருவே என்ற சங்கேத மொழிச் சொற்களால் ஒருவரோடொருவர் அறிமுகம் செய்துகொள்ள வேண்டும்”. இவ்வாறு அந்தக் குறுங்கடிதத்தில் இருந்தது.

“வணக்கம் குருவே.” என்னைச் சந்திக்க வருபவர் ஓர் ஆண் எழுத்தாளரை எதிர்பார்த்துவருவாரோ! நான் மீசையொன்றை வாங்கி வைத்துக்கொள்ளவேண்டுமோ?

தாந்தேவாடா நகரை முரண் நிறைந்த பல வகைகளில் விவரிக்கலாம். இந்தியாவின் நடுவிலுள்ளது. ஆனாலும் அது ஓர் “எல்லை” நகரம். அதைச் சுற்றி ஒரு போர் நடந்து கொண்டுள்ளது. அங்கு எல்லாம் தலைகீழாக உள்ளது. எதுவுமே இயல்பாக இல்லை.

தாந்தேவாடாவில் காவலர்கள் சீருடை அணி வதில்லை. பொது மக்களைப் போல உடையணிகின்றனர். போராளிகள் சீருடையணிகின்றனர். சிறைத்துறைக் கண்காணிப்பாளர் சிறையில் உள்ளார். கைதிகள் விடுதலையாக வெளியில் திரிகின்றனர். (இரண்டாண்டு களுக்குமுன் முந்நூறு கைதிகள் நகரின் பழைய சிறைச் சாலையில் இருந்து தப்பிவிட்டார்கள்.) வன்புணர்ச்சிக்குட் படுத்தப்பட்ட அபலைப் பெண்கள் காவல்துறைக் கண் காணிப்பில் உள்ளனர். அவர்களைக் கொடுமைப்படுத்திய வர்கள் கடைத்தெருக் கூட்டங்களில் உரையாற்றிக் கொண்டுள்ளனர்.

இந்திராவதி ஆற்றின் மறுகரையில் மாவோவினர் களின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதியைக் காவல் துறை பாக்கிசுத்தான் என்றே குறிப்பிடுகிறது. அங்கு ஊர் களில் மக்களைக் காணமுடியாது. ஆனால், அவ்வூர்களின் மக்கள் காடுகளில் வாழ்கின்றனர். பள்ளியில் இருக்க வேண்டிய சிறார் தம் விருப்பம்போல் திரிகின்றனர். காடுகளில் உள்ள அழகிய சிற்றூர்களில் கான்கிரீட்டால் கட்டப்பட்டிருந்த பள்ளிக்கட்டடங்கள் வெடிவைத்துத் தகர்க்கப்பட்டுக் குப்பைக்கூளங்களைப் போலக் காட்சி யளிக்கின்றன. அல்லது அக்கட்டடங்களைக் காவல் துறையினர் முழுக்கத் தம் பயன்பாட்டிற்குக் கையகப் படுத்தியுள்ளனர்.

இந்தக் காடுகளில் ஒரு பெரிய, கொடிய போர் விரிவடைந்துகொண்டுள்ளது. இந்தப் போரைக் குறித்து இந்திய அரசு பெருமிதத்தையும் வெட்கத்தையும் ஒரே நேரத்தில் அடைகின்றது. ‘பசுமை வேட்டை முனைப்பு’ என்று இதற்குப் பெயரிட்டுள்ள இந்திய அரசு இப்போர் நடப்பதைப் பறைசாற்றியுள்ளது. அதே நேரத்தில் இப்படி யொரு போர் நடக்கவேயில்லை என்றும் கூறுகின்றது. இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்தான் இந்தப் போரை முன்னின்று நடத்தும் தலைவர். அவர் இந்தப் போர் நடப்பதை மறுக்கிறார். இப்போர் ஊடகங்கள் கட்டவிழ்த்துவிட்டுள்ள பொய் என்கிறார். ஆயினும் இதற்காகப் பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான படைவீரர்கள் இதற்காக அணியப்படுத்தப்பட்டுள்ளார்கள். இந்தப் போர் நடக்கப்போவதென்னவோ நடு இந்தியாவில் உள்ள அடர்ந்த காடுகளில்தான். ஆயினும் இது நம் அனை வரையுமே மிக மோசமாகப் பாதிக்கும்.

ஒரு மனிதர் அல்லது விலங்கு உயிரிழந்தபின் எஞ்சுவது அதன் ஆவி என்பார்கள். இந்தக் காட்டினூடே துணிந்து செல்லும் நான்குதட நெடுஞ்சாலை ஆவியின் நேர் எதிரானதொன்று: இன்னும் இங்கு என்னென்ன நடக்கப்போகின்றனவோ அவற்றை முன் கூட்டியே எடுத்துக் காட்டும் கருவியாக அந்தச் சாலை இருக்கக்கூடும்.

இந்தக் காட்டினுள் மோதிக்கொள்ளும் இரு தரப் பினரும் அநேகமாக எந்தக் கோணத்தில் பார்த்தாலுமே ஒருவரிலிருந்து மற்றவர் மிகவும் வேறுபட்டவர். அவர்களுக்கிடையேயுள்ள ஏற்றத்தாழ்வுகள் மிக அதிகம். வல்லரசாகத் தன்னைப் பாவிக்கும் அரசின் அகம்பாவம், பண வலு, நவீன படைக்கலங்கள், ஊடகங்கள் ஆகிய வற்றின் துணையுள்ள மிகப்பெரும் எண்ணிக்கையிலான படையினர் ஒரு பக்கம். மிகவும் கவனமாக ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளவர்களும் தம் நோக்கை அடைவதில் பேரார்வம் கொண்டவர்களும் வன்முறை மிக்க படைக் கலப் புரட்சியில் தோய்ந்தவர்களுமான மாவோவின கெரில்லாப் படையினரின் துணை பெற்ற, வழக்கமான படைக்கலங்களை ஏந்திய சாதாரண சிற்றூர்ப்புற மக்கள் மறுபுறம்.

மாவோவினரும் இந்தியப் படையினரும் பல தலைமுறைகளாக வெவ்வேறு போர்முனைகளில் மோதிக்கொண்டவர்கள். 1950-களில் தெலங்கானா, 1960-களின் பிற்பகுதியிலும் 70-களிலும் மேற்குவங்கம், பீகார், ஆந்திராவில் சிறீகாகுளம் ஆகிய இடங்களிலும், 1980-களில் தொடங்கி இன்றுவரை ஆந்திரா, பீகார், மகாராட்டிரம் ஆகிய பகுதிகளிலும் இவ்விரு தரப்பினரும் மோதி வந்துள்ளனர். இவர்கள் தம் எதிரியின் போர்த் தந்திரங் களை நன்கு அறிவர். எதிரிகளின் போர் உத்தி நூல்களை மிகக் கவனமாகப் படித்து அறிந்தவர்கள். ஒவ்வொரு போரிலும் அப்போதைய மாவோவினர் தோற்கடிக்கப் பட்டது போல, ஏன், உலகில் இல்லாது ஒழிக்கப்பட்டு விட்டதுபோலவே தோன்றிற்று. ஆனால், ஒவ்வொரு போருக்குப் பின்னரும் அவர்கள் மீண்டெழுந்துவிட்டனர். முன்பைவிட நன்கு தம் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்திக் கொண்டனர். தம் இலக்கை அடைவதில் எப்போதை விடவும் அதிக முனைப்பு கொண்டனர். மக்களிடையே ஒவ்வொரு முறையும் அவர்களுடைய செல்வாக்கு வளர்ந்து வந்துள்ளது. இப்போது அவர்கள் நடத்தும் ஊடறுப்புப் போர் சத்தீசுகட், சார்க்கன்ட், ஒரிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தாதுக்களும் பிற இயற்கை வளங்களும் நிறைந்த காடுகளில் பரவியுள்ளது. பல இலக்கம் எண்ணிக்கையிலுள்ள பழங்குடி மக்களின் தாயகமான இந்தக் காட்டுப்பகுதி முதலாளித்துவப் பெருநிறுவனங்கள் கைப்பற்றத் துடிக்கும் கனவு நிலம்.

தேர்தல்கள் ஒரு புரட்டு என்றும் நாடாளுமன்றம் பன்றித்தொழுவத்தையொத்தது என்றும் அதனால் இந்திய அரசை வீழ்த்துவதே தம் நோக்கம் என்றும் மாவோவினர் கருதுகின்றனர். இந்தக் காடுகளில் நடக்கும் போர் அத்தகைய மாவோவினருக்கும் இந்திய அரசுக்கும் இடையிலானது என்று எளிமைப்படுத்துவது பரந்த மனப்பான்மையாளர் என்று தம்மைக் கருதிக்கொள் வோருடைய மனச்சான்றுக்கு நிம்மதியளிக்கும்.

இந்தியாவின் நடுப்பகுதியில் வாழும் பழங்குடி மக்கள் மாவோ காலத்திற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே ஆதிக்க வர்க்கத்தினரை எதிர்த்துவந்துள்ளனர் என்பதை மறந்துவிடுவது அந்தப் பரந்த மனப்பான்மையாளர்களுக்கு வசதியாகத்தான் இருக்கும். (அந்தப் பழங்குடிகள் அப்படித் தொடர்ந்து போரிடாமல் இருந்திருப்பின், அவர் களுடைய இனமே இல்லாது ஒழிக்கப்பட்டிருக்கும் என்பது வெளிப்படையான உண்மை). கோ, ஒரேயோன், கோல், சந்தால், முன்டா, கோன்டு ஆகிய இனங்களைச் சேர்ந்த பழங்குடி மக்கள் ஆங்கிலேயர்கள், பெரு நில உடைமையாளர்கள், கந்துவட்டிக்காரர்கள் முதலி யோரைத் தொடர்ந்து எதிர்த்துவந்துள்ளனர். அவர் களுடைய புரட்சிகள் கொடூரமான முறைகளில் ஒடுக்கப் பட்டன. அவர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். ஆனாலும் அம்மக்களை யாரும் எப்போதும் அடிமைப் படுத்த முடியவில்லை.

இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்ற பிறகு மேற்கு வங்கத்தில் நக்சல்பாரி என்னும் சிற்றூரில் நடந்த முதல் மாவோவினப் புரட்சியின் இதயமாகத் திகழ்ந்தவர்கள் பழங்குடி மக்களே. (அந்தப் புரட்சியின் அடிப்படையில்தான் நக்சலியம் என்ற சொல்லாடல் தோன்றிற்று. இன்று அது மாவோவினத்திற்கு மற்றொரு பெயராகச் சுட்டப்படுகிறது.) அப்போதிருந்து நக்சல் அரசியல் பழங்குடி மக்களுடைய போராட்டங்களுடன் மிக நெருக்கமான உறவு கொண்டுள்ளது. ஆகவே, பழங்குடி மக்களும் நக்சலிய அரசியலுக்கு முழு உரிமையுள்ள வர்களே.

இந்தத் தொடர்ப் போராட்டங்களால் போர்க்குணம் மிக்கவர்களாக உள்ள அந்தப் பழங்குடி மக்களை இந்திய அரசு திட்டமிட்டே தனிமைப்படுத்தித் தாழ்த்தி வைத் துள்ளது. இந்திய மக்கள்நாயக அரசை நெறிப்படுத்தும் இந்திய அரசியல் சாசனம் 1950-ல் நாடாளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அது பழங்குடி மக்களுக்குத் துயரம் மிகுந்த ஆண்டு. ஏனெனில், ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த அரசுக் கொள்கைகளைத் தொடர்ந்து பழங்குடி மக்களின் தாயகப்பகுதிகளுக்குத் தன்னையே உரிமை யாளராக ஆக்கிக்கொண்டது இந்திய அரசு. (அரசியல் சட்டத்தை இந்திய அரசு ஏற்றுக்கொண்ட) ஒரே இரவில் பழங்குடி மக்கள் தம் தாயகப் பகுதியிலேயே வந்தேறிகளாக ஆக்கப்பட்டுவிட்டனர். கான்பொருள்களை நுகர்வதற்கு அவர்கள் வழமையாகப் பெற்றிருந்த உரிமை அவர்களுக்கு மறுக்கப்பட்டது. அவர்களுடைய பாரம்பரிய வாழ் முறையே குற்றமுள்ளதெனத் தாழ்த்தப்பட்டுவிட்டது. தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையை மட்டும் அவர் களுக்குத் தந்துவிட்டு அவர்களுடைய வாழ்வுரிமையையும் மேன்மையையும் பறித்துக் கொண்டது இந்திய அரசு.

இப்படி மாய்மாலத்தால் அவர்களுடைய வாழ் வாதாரங்களைப் பறித்துக்கொண்டு அவர்களை ஏழ்மைப் படுகுழியில் தள்ளிய அரசு அத்துடன் ஓயவில்லை. அவர் களுடைய ஏழ்மையை அவர்களுக்கு எதிராகப் பயன் படுத்தத் தொடங்கிற்று. புதிய அணை கட்டுதல், நீர்ப் பாசனத் திட்டம் அமைத்தல், சுரங்கம் தோண்டுதல் என எப்போதெல்லாம் பெருமளவிலான மக்களை அவர் களுடைய வாழிடத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டி யிருந்ததோ அப்போதெல்லாம் “பழங்குடிகளைத் தற்கால மக்களைப் போலாக்குதல்” அல்லது “நவீன வளர்ச்சியில் அவர்களுக்கும் பங்களித்தல்” என்பது போன்ற சொல் லாடல்களை இந்திய அரசு பயன்படுத்திற்று. பல கோடி மக்கள் இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களால் தம் நாட்டினுள்ளேயே ஏதிலிகளாக ஆக்கப்பட்டார்கள். (பெரும் அணைக்கட்டுகளைக் கட்டுவதற்காக மட்டுமே மூன்று கோடிக்கும் மேற்பட்டவர்கள் ஏதிலிகளாக்கப் பட்டனர்.) அவர்களில் பெரும்பாலானோர் பழங்குடி மக்கள்தான். பழங்குடி மக்களுடைய நலனைப் பற்றி அரசு பேசத்தொடங்கினாலே அது கவலையளிப்பதாக உள்ளது.

உள்துறை அமைச்சர் சிதம்பரம் அண்மையில் பழங்குடி மக்கள் மீதான தன் கரிசனத்தை வெளிப் படுத்தினார். அவர்கள் (பழங்காலத்தைப் போல) “அருங்காட்சியகக் கலாச்சாரத்தில்” இருப்பதாகவும் அது தனக்கு உவப்பாக இல்லையென்றும் அவர் தெரிவித்தார். அமைச்சராவதற்கு முன்னர் சுரங்கத் தொழிலில் ஆதிக்கம் செலுத்தும் பெருநிறுவனங்களின் சார்பில் வாதாடும் வழக்குரைஞராக அவர் பணிபுரிந்தார். அப்போது பழங்குடி மக்களின் நலன் அவருக்கு முதன்மையானதாகத் தெரிய வில்லை போலும். ஆகவே அவருடைய அண்மைக்காலக் கரிசனத்தின் அடிப்படை என்ன என்று ஆய்வு செய்வது நல்லதாக இருக்கும்.

கடந்த சுமார் ஐந்து ஆண்டுகளில் சத்தீசுகட், சார்க்கன்ட், ஒரிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் அரசுகள் பெருந்தொழில் நிறுவனங்களுடன் நூற்றுக் கணக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத் திட்டுள்ளன. இவையனைத்தும் கமுக்கமாக வைக்கப் பட்டுள்ளன. இவற்றின் பண மதிப்பு பல்லாயிரம் கோடி உருவாக்கள். எஃகு உருக்காலைகள், இரும்புத் தொழிற் சாலைகள், மின் உற்பத்தி நிலையங்கள், அலுமினியச் சுத்திகரிப்பு ஆலைகள், அணைகள், சுரங்கங்கள் முதலிய வற்றை நிறுவுதல் தொடர்பானவை இவ்வொப்பந்தங்கள். பழங்குடி மக்களை அப்புறப்படுத்தினால்தான் இவற்றின் மூலம் வருவாய் கிடைக்கும்.

அதனால்தான் இந்தப் போர் நடத்தப்படுகிறது.

தன்னை மக்கள்நாயக நாடாகக் கூறிக்கொள்ளும் ஒரு நாட்டின் அரசு தன் எல்லைக்குள்ளாகவே வெளிப் படையாகப் போர் தொடுக்கையில் அந்தப் போர் எத்தகையதாக இருக்கும்? அதனை எதிர்ப்பவர்கள் தாக்குப்பிடிக்க இயலுமா? அது தாக்குப்பிடிக்க வேண்டுமா? மாவோவினர் எனப்படுவோர் யாவர்? காலாவதியாகிப்போன கொள்கைகளைப் பழங்குடி மக்கள்மீது திணித்து வெற்றிவாய்ப்பே இல்லாத புரட்சியைச் செய்யுமாறு அவர்களைத் தூண்டும் வன்முறையாளர்களாகவும் உலக இயல்புமறுப்புச்

சித்தாந்திகளாகவும் உள்ளவர்களா அவர்கள்? தம் பட்டாங்கு களிலிருந்து அவர்கள் எத்தகைய படிப்பினைகளை அடைந்துள்ளார்கள்? படைக்கலப் போராட்டத்தில் இயல்பாகவே மக்கள்நாயகத்திற்கு இடமில்லையா? இந்திய அரசுக்கும் மாவோவினருக்கும் இடையிலான போரில் “சாதாரண” பழங்குடி மக்கள் சிக்குண்டிருப்பதாகக் கூறப்படுவது சரியான கணிப்பா? அப்படிக் கூறுவோரும் பிறரும் கருதுவதைப் போல மாவோவினரும் பழங்குடி மக்களும் முற்றிலும் இரண்டு வேறுபட்ட குழுவினரா? அல்லது, அவ்விரு குழுவினருடைய நலங்களும் தேவை களும் ஒத்த இயல்புள்ளவையா? அவர்கள் ஒருவரிட மிருந்து மற்றவர் ஏதேனும் கற்றுக்கொண்டுள்ளனரா? அவர்கள் ஒருவரை மற்றவர் மாற்றியுள்ளனரா? 

 

நான் (தாந்தெவாடாவிற்குப்) புறப்படவேண்டிய நாளுக்கு முந்திய நாளன்று என் அம்மா என்னைத் தொலைபேசியில் அழைத்தார். அவர் தூக்கக் கலக்கத்தில் பேசியதுபோலத் தெரிந்தது. “இந்த நாட்டிற்குத் தேவை ஒரு புரட்சி என்று நான் நினைக்கிறேன்,” அம்மாக்களுக்கே உரிய விநோதமான உள்ளுணர்வினால் நேரும் தொனியில் அவர் சொன்னார்.

மாவோவினரின் தலைமையை இல்லாதொழிக்கும் நோக்கில் இந்தியக் காவல்துறை அதிகாரிகளில் முதல் தரமான முப்பது பேருக்கு, குறிவைத்துக் கொல்லும் பயிற்சியை இசுரேல் நாட்டின் உளவுத் துறையான மொசாட் அளித்துவருதாக இணைய தளத்தில் உள்ள ஒரு கட்டுரை தெரிவிக்கிறது. இசுரேலிடமிருந்து நவீன படைக்கலங்கள் வாங்கப்பட்டுள்ளதாகச் சொல்லப் படுகிறது. ‘செறிவூட்டப்பட்ட ஒளிக்கற்றைத் தொழில் நுட்ப’த்தில் இயங்கும் இடைவெளிகாண் கருவிகள், உடல் சூட்டினைக் கொண்டு (பதுங்கியிருக்கும்) மனிதர்களைக் காண உதவும் கருவிகள், ஆளில்லாது தானியங்கி மூலம் பறக்கும் வானூர்திகள் முதலியன இவற்றில் அடங்கும். இவை அமெரிக்கப் படைகளால் அதிகம் பயன்படுத்தப் படுபவை. ஏழைகளுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்கு மிகவும் உகந்தவை.

ராய்ப்பூரிலிருந்து தாந்தெவாடா செல்வதற்குச் சுமார் பத்து மணி நேரமாகும். “மாவோவினர் மொய்த்து”ள் ளனவாகக் கூறப்படும் பகுதிகளின் (‘அயடிளைவ-iகேநளவநன’ யசநயள) ஊடாகச் செல்லவேண்டும். இந்தச் சொல்லாடல் போகிற போக்கில் பயன்படுத்தப்பட்டதல்ல. “மொய்த்தல்” என்ற சொல் நோய்களையும் தீங்குயிரிகளையும் நினைவூட்டும். நோய்கள் போக்கப்படவேண்டியவை. தீங்குயிரிகள் ஒழிக்கப்பட வேண்டியவை. (அதேபோல) மாவோவினர் அழித்தொழிக்கப்படவேண்டியவர்கள். இதுபோன்ற மேலோட்டமான, அப்பாவித்தனமாகத் தெரியும் வழிகள் மூலம் இன அழிப்பைக் குறிக்கும் சொல்லாடல்கள் நம் அன்றாடப் பேச்சுவழக்கில் நுழைந்து விட்டன.

நெடுஞ்சாலையை (மாவோவினரிடமிருந்து) காப்பதற்காக அதன் இரண்டு பக்கங்களிலும் உள்ள காடுகளில் சாலையை ஒட்டிய பகுதிகளைப் படையினர்தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர். அப்பகுதி களைத் தாண்டிய காட்டுப்பகுதிகளில் குண்டர்கள், அவர்களுடைய உடன்பிறப்புகள், தோழர்கள் ஆகியோரின் ஆட்சி தான் நடக்கிறது.

வேதாந்தா நிறுவனம் நடத்தும் புற்றுநோய் மருத்துவமனை குறித்த மிகப்பெரும் விளம்பரப் பலகை ராய்ப்பூரின் புறநகர்ப் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. (இந்த நிறுவனத்திற்கு நம் உள்துறை அமைச்சர் கொஞ்ச காலம் பணிபுரிந்தார்.) ஒரிசா மாநிலத்தில் வேதாந்தா பாக்சைட் தாதுவைத் தோண்டியெடுக்கிறது. அம் மாநிலத்தில் அந்த நிறுவனம் ஒரு பல்கலைக் கழகத்திற்குப் பண உதவி தருகிறது. இப்படிப்பட்ட நுணுக்கமான, அப்பாவித்தனமாகத் தெரியும் வழிகளைப் பயன்படுத்திப் பெரும் சுரங்க நிறுவனங்கள் நம் மனங்களில் இடம் பிடிக்கின்றன. நம் நலனில் உண்மையிலுமே அக்கறை உள்ளவைபோன்ற மாயையை உருவாக்குகின்றன. இது “நிறுவனங்களின் குமுகப் பொறுப்பு (நிகுபொ)” என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய செயல்கள் மூலம் சுரங்க நிறுவனங்கள் பழம் பெரும் நடிகரும் முன்னாள் ஆந்திர முதல்வருமான என்.டி.ராமராவ் அவர்களைப்போல இயங்குகின்றன. தெலுகுத் திரைப்படங்களில் நல்லவராகவும் கெட்டவராகவும் (ஒரே படத்தில்) அவர் நடிப்பதுண்டு.

சுரங்க நிறுவனங்களின் பொருளாதார முறை குமுகத்திற்கு மோசமானது. அதை மறைப்பதற்கு இந்த நிகுபொ பயன்படுகிறது. எ.கா. ஒரு தனியார் சுரங்க நிறுவனம் தோண்டியெடுக்கும் ஒவ்வொரு டன்  இரும்புத் தாதுக்கும் அரசுக்குக் கிடை.க்கும் வருமானம் 27 உருவாக்கள். அந்நிறுவனத்திற்குக் கிடைப்பதோ 5,000 உருவாக்கள். இத்தகவல் அண்மையில் கர்நாடக அரசு நீதித் துறை வெளியிட்ட அறிக்கையில் உள்ளது. பாக்சைட்-அலுமினியத் துறையில் இந்த வேறுபாடு மேலும் அதிகம். பல கோடி டாலர்கள் பெருமானமுள்ள பகற்கொள்ளைகளைப் பற்றியது இது. தேர்தல் வெற்றிகள், அரசாங்கங்கள், நீதியரசர்கள், செய்தித்தாள்கள், தொலைக் காட்சி நிலையங்கள் முதலிய ஊடக நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், நிதியுதவி தரும் நிறுவனங்கள் ஆகியவற்றை விலைக்கு வாங்குவதற்குப் போதுமான பணம் இதில் உள்ளது. அப்படியிருக்கையில் இங்கொன்றும் அங்கொன்றுமாகப் புற்றுநோய் மருத்துவமனைகள் எம்மாத்திரம்?

பல நிறுவனங்களுடன் சத்தீசுகட் மாநில அரசு செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்

நீண்ட பட்டியலில் வேதாந்தா நிறுவனத்தின் பெயரைப் பார்த்ததாக எனக்கு நினைவில்லை. ஆனால், (அந்

நிறுவனத்தின்) புற்றுநோய் மருத்துவமனை ஒன்றிருக் கையில் அப்பகுதியில் எங்காவது மட்டமாக்கப்பட்ட பாக்சைட் மலை ஒன்று இருந்தே தீரும் என்று சந்தேகிக்கும் அளவுக்கு என்னுடைய மூளை கோணலடைந்துள்ளது.

இதோ, நாங்கள் கேங்கர் நகரைக் கடக்கிறோம். இங்குதான் பிரிகேடியர் பொன்வர் நடத்தும் புகழ்பெற்ற “பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் காட்டுப் போர்க் கல்லூரி” உள்ளது. ஊழலில் திளைக்கும் போனாம்போக்கிக் காவலர்களைக் காட்டுப் போர் முறைகளில் பயிற்சி பெற்ற வீரர்களாக்கும் பணியில் அக்கல்லூரி ஈடுபட்டுள்ளது. “கெரில்லாக்களுடன் அவர்களுடைய முறையிலேயே போரிட வேண்டும்” என்ற அக்கல்லூரியின் முகப்பு வாசகம் பாறைகளில் எழுதப்பட்டுள்ளது. ஓடுதல், புழுப்போல நெளிந்து நகர்தல், உலங்கு வானூர்திகள் பறக்கையில் அவற்றில் இருந்து வெளியேயும் வெளி யிலிருந்து அவற்றினுள்ளேயும் குதித்தல், குதிரை ஓட்டம் (இது எதற்கு?), பாம்புகளை உண்ணுதல், காட்டில் வாழ்தல் முதலியவற்றில் அவர்களுக்குப் பயிற்சியளிக்கப்படுகிறது. ‘பயங்கரவாதி’களுடன் போரிடுமளவுக்குத் தெரு நாய் களைப் பயிற்றுவதில் அந்த பிரிகேடியர் பெருமிதம் அடைகிறார். ஆறு வாரங்களுக்கொருமுறை அக்கல்லூரி யிலிருந்து 800 காவலர்கள் பயிற்சி பெற்று வெளியேறு கின்றனர். இதேபோல இருபது கல்லூரிகளை இந்தியா வெங்கும் நிறுவ அரசு திட்டமிட்டுள்ளது.

காவல் துறை சிறுகச்சிறுகப் படையாக மாற்றப் படுகிறது. (காசுமீரில் நேரெதிராக உள்ளது. அங்குப் படைகள் தேவைக்கதிகமான காவலர்களைக் கொண்ட அரசுத் துறை போலச் செயல்படுகின்றன.) தலைகீழ். உள் பக்கம் வெளியே. எப்படியானாலும் மக்கள்தாம் (அரசின்) எதிரிகள்.

இருட்டிவிட்டது. பேராயக் கட்சியின் இளைஞர் அணிக்கு ராகுல் காந்தி ஆள் சேர்க்கும் விளம்பரத் தட்டிகளைத் தவிர சக்தால்பூர் நகரமே உறங்கிவிட்டது. ராகுல் காந்தி பசுத்தார் நகருக்கு அண்மையில் இரண்டு முறை வந்திருக்கிறார். ஆனால் அங்கு நடக்கும் போரைக் குறித்து அவர் ஒன்றும் சொல்லவில்லை. இந்தச் சமயத்தில் அதைப் பற்றிப் பேசுவது இளவரசனுக்கு உகந்ததாக இராது போலும். ஊடகத் துறையினருடன் இயங்கும் அவருடைய மேலாளர்கள் இது குறித்து அஞ்சத்தக்கதும் அரசு உதவி பெறுவதுமான ‘சல்வா சூடும்’ படை இங்கு இயங்குகிறது. பெண்களை வன்புணர்ச்சி செய்தல், மக்களைக் கொல்லுதல், ஊர்களைத் தீயிட்டு எரித்தல், பல இலக்கக்கணக்கான மக்களை அவர்களுடைய வீடுகளில் இருந்து துரத்துதல் முதலிய கொடுஞ்செயல்களில் அப்படையினர் ஈடுபடு கின்றனர். பேராயக் கட்சிச் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திர கர்மா அப்படையின் தலைவராக விளங்குவதை ராகுல் காந்தியைச் சுற்றிலும் பின்னப்பட்டுள்ள மாயத் தோற்றத்தில் நாம் காணமுடியாது.

மாவோவினரைச் சந்திப்பதற்கு எனக்குத் தரப்பட்ட நான்கு நேரங்களில் முதலில் குறிப்பிடப்பட்ட நேரத்திற்கு மிகவும் முன்னதாகவே நான் தாந்தேசுவரி அம்மன் கோவிலை வந்தடைந்துவிட்டேன். என்னை அடையாளப் படுத்துவதற்கு நெற்றியில் சிவப்புநிறப் பொட்டு அணிந் திருந்தேன். என் ஒளிப்படக்கருவியையும் சிறுதேங்காய் ஒன்றையும் கையில் வைத்திருந்தேன். என்னைப் பார்த்து யாரோ ஒருவர் (என்னைப் பொய்யாக இங்கு வரவழைத்து ஏமாற்றி விட்டதற்காக) சிரித்துக்கொண்டிருக்கிறாரோ என்று ஐயுற்றேன்.

ஆனால் சில நிமிடங்களில் சிறு பையன் ஒருவர் என்னிடம் வந்தார். அவர் தொப்பி அணிந்திருந்தார். பள்ளிக் குழந்தைகள் முதுகில் சுமப்பதைப் போன்ற பை ஒன்றையும் வைத்திருந்தார். அவர் விரல் நகங்களில் எப்போதோ பூசப்பட்டு ஆங்காங்கு உதிர்ந்ததுபோக மீதி நகப் பூச்சு இருந்தது. அவுட்லுக் இந்திப் பதிப்பு இதழையும் வாழைப்பழங்களையும் அவரிடத்தில் காணவில்லை. “நீங்கள்தான் உள்ளே போகப்போகிறவர்களா?” என்று அவர் என்னை வினவினார். “வணக்கம் குருவே” என்று அவர் சொல்லவில்லை. என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. தன் சட்டைப் பையிலிருந்து நனைந்த துண்டுத்தாள் ஒன்றை எடுத்து என்னிடம் நீட்டினார். “அவுட்லுக் கிடைக்கவில்லை” என்று அதில் எழுதி யிருந்தது.

“வாழைப்பழங்கள் (என்னவாயின)”

“எனக்குப் பசித்ததால் நான் அவற்றை உண்டு விட்டேன்” என்றார் அச்சிறுவர்.

இவர் (இந்தியாவின் பாதுகாப்புக்கு) அச்சுறுத்தலானவர்தான்.

அவருடைய முதுகுப் பையில் புகழ்பெற்ற ஆங்கில ஏளன ஓவிய நாயகன் சார்லி பரவுன் படமும் அத்துடன் “பரவலாகக் காணக்கூடிய முட்டாள் அல்ல” என்ற சொற்றொடரும் வரையப்பட்டிருந்தன. தன் பெயர் மங்டு என்றார் அச்சிறுவர். நான் அடுத்துச் செல்லவிருந்த தண்ட காரண்யக் காடுகளில் உள்ளவர்களில் பலருக்குப் பல பெயர்களும் அடையாளங்களும் உள்ளன என்று விரைவில் அறிந்துகொண்டேன். ஒவ்வொருவருக்கும் இப்படிப் பல அடையாளங்கள் இருப்பதுவும் நல்ல யோசனைதான். நம்மிலிருந்து கொஞ்ச நேரமாவது வெளியே வந்து வேறொருவராக இருக்கலாம் என்பது உவப்பானது தான்.

கோவிலில் இருந்து நடந்து சில நிமிடங்களில் பேருந்து நிலையம் வந்தடைந்தோம். அங்கே ஏகப்பட்ட கூட்டம். மோட்டர் பைக்குகளில் இரண்டு ஆண்கள் காத்திருந்தனர். அவர்கள் எங்களுடன் ஒன்றும் பேச வில்லை. (நாங்கள் நால்வரும்) ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளுதல். சிறிய உடல் அசைவுகள். அவ்வளவே. பைக்குகளில் பயணித்தோம். எங்கே போகிறோம் என்று எனக்குத் தெரியாது. சென்ற முறை நான் இதே வழியில் பயணித்திருந்ததால் காவல்துறைக் கண்காணிப்பாளர் வீட்டை இப்போது அடையாளம் காண முடிந்தது.

அவர் ஒருமுறை தன் மனத்திலிருப்பதை வெளிப் படையாகச் சொன்னார்: “உண்மையாகச் சொன்னால் இந்தச் சிக்கலைக் காவல்துறை அல்லது படைகளைக் கொண்டு களையமுடியாது. இந்தப் பழங்குடி மக்களுக்குப் பேராசை என்றால் என்னவென்றே தெரியாது. அதுதான் சிக்கலுக்கே காரணம். இவர்கள் பேராசைப்பட்டாலன்றி நமக்குத் தீர்வே இல்லை. ‘படைகளை இங்கிருந்து திரும்பப் பெற்றுக் கொண்டு இங்குள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஒரு தொலைக்காட்சிப் பெட்டியை வையுங்கள்; எல்லாம் தானாகச் சரியாகிவிடும்’ என்று என் மேலதிகாரியிடம் சொன்னேன்.”

சற்று நேரத்தில் நாங்கள் நகரைக் கடந்து சென்றோம். யாரும் எங்களைப் பின்தொடரவில்லை. மூன்று மணி நேர நீண்ட பயணம் திடுதிப்பென முடிந்துவிட்டது. சாலையின் இரு பக்கங்களிலும் காடுதான். வேறொன்றுமில்லை. மங்டு ஊர்தியிலிருந்து இறங்கினார். நானும் இறங்கினேன். ஊர்திகள் இரண்டும் திரும்பச் சென்றன. என் முதுகுப் பையை எடுத்துக்கொண்டு ‘சிறிய உள்நாட்டு அச்சுறுத் தலைப்’ பின்தொடர்ந்து காட்டுக்குள் நடந்தேன். அழகான நாள். பொன் வண்ணக் கம்பளம் விரித்ததைப் போல மலர்கள் காடெங்கும் உதிர்ந்துகிடந்தன.

சற்று நேரத்தில் அகண்ட ஆறு ஒன்றின் வெண்மணல் கரையை அடைந்தோம். பருவ மழைதான் அந்த ஆற்றின் நீரூற்று போலும். இப்போது அது பெரும்பாலும் வெறும் மணல்படுகையாக மட்டுமே உள்ளது. நடுப்பகுதியில் மட்டும் கணுக்கால் ஆழத்திற்கு நீர் இருந்தது. அதனால் அதைக் கடப்பது எளிதாக இருந்தது. மறு கரையில் “பாக்கிசுத்தான்”. உண்மை விளம்பியான காவல் கண்காணிப்பாளர் என்னிடம் இவ்வாறு சொல்லி யிருந்தார்: “அங்கு என் பையன்கள் சுட்டுக் கொல்வார்கள்.” ஆற்றைக் கடக்கத் தொடங்கியதும் இந்த வாக்கியம் நினைவுக்கு வந்தது. காவலர் ஒருவர் தன் துப்பாக்கி நோக்குக் குழாய் வழியே எங்களைப் பார்த்துக் கொண்டிருப்பார். அந்தக் காட்சி எப்படி இருக்கும் என்று கற்பனை செய்துபார்த்தேன். பரந்த நிலப்பரப்பில் எங்கள் இருவருடைய சிறு உருவங்கள் எளிதில் புலப்படும். ஆனால் மங்டு இது குறித்துக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. நானும் அதேபோல இருக்க முடிவு செய்தேன்.

சந்து எங்களுக்காக மறு கரையில் காத்திருந்தார். கார்லிக்சு என்ற பெயர் எழுதப்பட்ட எலுமிச்சை-பச்சை வண்ணமுள்ள சட்டை அணிந்திருந்தார். இவர் (மங்டு-வைவிடச்) சற்றே அதிக வயதுள்ள ‘உள்நாட்டு அச்சுறுத்தல்’. இருபது வயதிருக்கலாம். அழகிய புன்முறுவல், மிதி வண்டி, கொதித்து ஆறிய குடிநீர் நிரப்பிய புட்டி, பல குலுக்கோசு அடுசில்லுச் சிப்பங்கள் ஆகியன அவரிடம் இருந்தன.

இவை கட்சியினரால் எனக்கு அனுப்பப்பட்டிருந்தன. மூச்சு சீராகும் வரை சற்றே நின்று ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் நடக்கத் தொடங்கினோம். (காவல் துறையின்) ஆர்வத்தையும் கவனத்தையும் வேறு திசையில் திருப்பி விடுவதற்காக மட்டுமே அந்த மிதிவண்டியைப் பயன்படுத்த முடியும். ஏனெனில் நாங்கள் செல்லும் சாலை மிக மோசமாக இருந்தது. அதில் மிதிவண்டியைச் செலுத்துவது மிகக் கடினமாக இருக்கும். செங்குத்தான மலைகள்மீது ஏறினோம். பாறைகள் நிறைந்த வழிகளில் கவனமாக இறங்கினோம். சில இடங்களில் மிக ஆபத்தான பாறை விளிம்புகள்மீது நடந்தோம். சில இடங்களில் மிதி வண்டியை உருட்டிச் செல்வதற்குக் கூட இடமில்லை. அப்போது சந்து அதை அலாக்காகத் தன் தலைமீது தூக்கிக் கொண்டு இயல்பாக நடந்தார். சிற்றூர்ப் பையனுடையது போன்ற அவருடைய குழம்பிய மனநிலையைப் பற்றி எண்ணலானேன். ஆனால், அவர் இலகுவகை இயந்திரத் துப்பாக்கியைத் தவிரப் பிறவகைப் படைக்கலன்கள் அனைத்தையும் இயக்கவல்லவர் என்பதைப் பின்னர் அவரே மகிழ்வோடு சொன்னபோது அறிந்துகொண்டேன்.

மலர் சூடிய தலைப்பாகை அணிந்த மூன்று அழகிய ஆண்கள் குடிபோதையில் தள்ளாடியபடி அடுத்த சுமார் அரைமணி நேரத்திற்கு எங்களுடன் நடந்தனர். அதன்பின் அவர்கள் வேறு வழியில் சென்றார்கள். மாலையில் அவர் களுடைய தோள்பட்டையிலிருந்து தொங்கிய பைகள் கூவத் தொடங்கின. சேவல்களை விற்பதற்காகச் சந்தைக்கு எடுத்துச் சென்றிருக்கின்றனர். அவை விலைபோகாததால் திரும்ப எடுத்துவந்துவிட்டனர்.

சந்து-விற்கு இருளிலும்கூடக் கண் தெரியும் போலுள்ளது. நான் கை விளக்கைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. சில்வண்டுகள் ஒலிக்கத் தொடங்கி விட்டன. சற்று நேரத்தில் அவ்விசையரங்கம் எங்களைச் சூழ்ந்துகொண்டது. அந்த இரவு நேரத்தில் வானத்தைப் பார்க்க எனக்கு விருப்பம்தான். ஆனால் தலை நிமிர்ந்து பார்க்க அஞ்சினேன். என் பார்வையைத் தரைமேல் பதித்து ஒவ்வோர் அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும்.

நாய்கள் குரைக்கின்றன. ஆனால் அவை எவ்வளவு தொலைவில் உள்ளனவென்று எனக்குப் புலப்படவில்லை. ஓரளவு சம தரையுள்ள பகுதிக்கு வந்திருந்தோம். வானத்தை ஒரு வினாடி அண்ணாந்து பார்த்தேன். பெரு மகிழ்ச்சியாக இருந்தது. எங்கள் பயணம் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கிறேன். “விரைவில் (இலக்கை அடைந்து விடுவோம்)” என்றார் சந்து. ஆனால் அதன்பின் ஒரு மணி நேரம் நடந்தோம். வழியில் பெரு மரங்களின் நிழல்கள் எங்கள்மீதுபட்டன. ஒரு வழியாக வந்து சேர்ந்தோம்.

அந்த ஊரில் நெரிசல் இல்லை. வீடுகளுக்கிடையில் நிறைய இடைவெளி இருந்தது. அழகியதோர் வீட்டினுள் நுழைந்தோம். தீ எரிந்துகொண்டிருக்க அதன்முன் அமர்ந்து சிலர் குளிர்காய்ந்துகொண்டிருந்தனர். வீட்டிற்கு வெளியே இருளில் பலர் இருந்தார்கள். எவ்வளவு பேர் என்று கணிக்க இயலவில்லை. அவர்களுடைய உருவங்கள் ஓரளவு தெரிந்தன. அவ்வளவே. அவர்கள் தமக்குள் முணு முணுக்கத் தொடங்கியிருந்தனர். செவ்வணக்கம், தோழர். நானும் செவ்வணக்கம் சொன்னேன். நான் மிக மிகக் களைப்புற்றிருந்தேன். அவ்வீட்டின் தலைவி என்னை உள்ளறைக்கு அழைத்துச் சென்று சிறிதளவு அரிசிச் சோறும் அவரைக் காய்(பீன்சு)-கோழிக்கறிச் சாறும் தந்தார். மிகவும் சுவையாக இருந்தது. அவருடைய குழந்தை எனக்கருகே படுத்து உறங்கிக்கொண்டிருந்தது. வெள்ளியில் செய்யப்பட்ட அவளுடைய சிலம்புகள் (கால் கொலுசுகள்) தீயின் வெளிச்சத்தில் பளிச்சிட்டன.

இரவுணவுக்குப் பின்னர் என் படுக்கைப்பையை விரித்தேன். அதன் பல்வரித்திறவு (ணiயீ) ஏற்படுத்திய ஓசை அந்த இடத்திற்குப் பொருத்தமற்றதாக இருந்தது. யாரோ வானொலியை இயக்கினர். பீபீசீ இந்தி மொழிச்சேவை கேட்டது. தோங்ரியா கோந்து இனப் பழங்குடி மக்களுடைய உரிமைகள் பறிக்கப்பட்டதையும் சூழல் மாசுபாட்டையும் காரணம் காட்டி வேதாந்தா நிறுவனத்தின் நியாம்கிரி சுரங்கத் திட்டத்திலிருந்து தன் நிதியை ஆங்கிலேயத் திருச்சபை விலக்கிக் கொண்டதாகச் செய்தி வந்தது. மாடுகளின் கழுத்து மணியோசை கலகலப்பதும் அடங்குவதும் கேட்டது. மாடுகள் ஆசனவாய்வழியே காற்றுவிட்ட ஓசையும் கேட்டது. உலகம் நல்லபடி உள்ளது. என் கண்கள் உறக்கத்தில் மூடிக்கொண்டன.

 

காலை ஐந்து மணிக்கு எழுந்தோம். ஆறு மணிக்கு நடக்கத் தொடங்கிவிட்டோம். இரண்டு மணி நேரங் கழித்து மற்றொரு ஆற்றைக் கடந்தோம். அழகிய சிற்றூர் களினூடே நடந்துசென்றோம். ஒவ்வோர் ஊரிலும் குடும்பம் குடும்பமாகப் புளியமரங்கள் உள்ளன. உயர்ந்து வளர்ந்த அம்மரங்கள் மக்களைப் பாதுகாக்கும் நல்ல தேவதைகளைப் போல உள்ளன. இப்பகுதியில் கிடைக்கும் புளி இன்சுவையுடையது. பதினொரு மணிக்கே கதிரவன் உச்சியில் இருந்தது. நடப்பது இப்போது அவ்வளவு எளிதாக இல்லை. மதிய உணவுக்காக ஒரு சிற்றூரில் நின்றோம். வீட்டில் இருப்பவர்கள் சந்துவுக்கு அறிமுக மானவர்கள்போல் தெரிகிறது. அழகிய இளம் பெண் ஒருத்தி சந்துவுடன் நெருங்கி உறவாடுகிறாள். நான் இருந்ததால் சந்துவுக்குச் சற்றுக் கூச்சமாக இருந்திருக்கும் போலுள்ளது. மதிய உணவுக்குப் பப்பாளியும் பருப்புச் சோறும். சிவந்த மிளகாய்த் தூளும் தந்தார்கள்.

மீண்டும் நடைப்பயணத்தைத் தொடங்குவதற்குமுன் வெயிலின் உக்கிரம் சற்றுக் குறைவதற்காகக் காத்திருக்கப் போகிறோம். மண்டபத்தில் கண்ணயர்ந்தோம். அந்த இடத்தின் எளிமை ஒருவகை அழகைத் தருகிறது. அங்கு இருப்பவை அனைத்துமே தேவைப்படும் பொருள்கள். அவையனைத்தும் தூய்மையாக உள்ளன. வேண்டாத பொருள்கள் இடத்தை அடைத்துக்கொண்டிருக்கும் நிலை இங்கு இல்லை. குள்ளமான மண்சுவர்மீது கருங்கோழி ஒன்று அங்குமிங்கும் நடைபயின்றது. மூங்கில் தட்டியொன்று கூரையைத் தாங்குவதற்கும் பொருள் களைத் தொங்கவிடுவதற்கும் பயன்படுகிறது. புற்களாலான விளக்குமாரு (துடைப்பம்), இரண்டு பீப்பாய்கள், பின்னப்பட்ட நாணல் கூடை, உடைந்த குடை, மடித்து அடுக்கிவைக்கப்பட்ட அட்டைப் பெட்டிகள் ஆகியன அங்கு இருந்தன. அதோ அங்கு இருப்பது என்ன? என் கண்கண்ணாடி தேவைப்படுகிறது. அட்டைப் பெட்டியில் எழுதியிருப்பது இதுதான். ‘சீர்மிகு விசை 90 உயர் ஆற்றல் குழம்புநிலை வெடிபொருள்(2-ஆம் வகுப்பு).

மாலை சுமார் இரண்டு மணிக்கு நாங்கள் மீண்டும் நடக்கத் தொடங்கினோம். அடுத்த சிற்றூரில் அக்கா (தோழர்) ஒருவரைச் சந்திக்கப்போகிறோம். பயணத்தின் அடுத்த திட்டம் அவருக்குத் தெரியும். சந்துவுக்குத் தெரியாது. தகவல் பரிமாற்றத்தில் கூட இவர்கள் அளவு மீறுவதில்லை. யாரொருவருக்கும் அனைத்துமே தெரிந் திருக்கக்கூடாது.

ஆனால், நாங்கள் ஊரையடைந்தபோது அக்கா அங்கில்லை. அவரைப் பற்றிய எந்தவொரு செய்தியும் இல்லை. முதன்முதலாக சந்துவின் முகத்தில் கவலையின் அறிகுறிகள் தென்பட்டன. பெருங்கவலை என்னைச் சூழ்ந்துகொண்டது. இவர்களிடையே உள்ள தகவல் பரிமாற்ற முறைகளைப் பற்றி நானறியேன். ஆனால், இவர்கள் தவறாகப் போய்விட்டால் என்னவாகும்?

பயன்படுத்தப்படாத பள்ளிக் கட்டடம் ஒன்றின் அருகில் நாங்கள் நிற்கின்றோம். அது ஊரிலிருந்து வெளியில் உள்ளது. இவ்வூர்களில் உள்ள அரசுப் பள்ளிக் கட்டடங்கள் அனைத்துமே தகர்க்க முடியாத கோட்டை களைப் போலக் கான்கிரீட்டால் கட்டப்பட்டுள்ளன. ஏன்? காலதர்களுடைய (சன்னல்கள்) கதவுகள் எஃகால் ஆன உறுதியான கதவுகள். வாயிற்கதவுகளும் அப்படியே. அங்குள்ள வீடுகளைப் போல மட்சுவர்களும் ஓலைக் கூரைகளும் பயன்படுத்தப்படவில்லை. ஏன்? ஏனெனில் அவை வெறும் பள்ளிகள் மட்டுமல்ல. (அரசுப்) படைகள் பாதுகாப்புடன் ஒளிந்துகொள்வதற்கும் அவை பயன் படுகின்றன. “அபுசுமாட் பகுதிச் சிற்றூர்களில் உள்ள பள்ளிகள் இப்படி வடிவமைத்துக்கட்டப்பட்டுள்ளன...” ஒரு குச்சியைக் கொண்டு மண்தரையில் சந்து பள்ளிக் கட்டடத்தை வரைகிறார். தேன்கூட்டில் இருப்பதைப் போல மூன்று எண்கோண வடிவக் கட்டடங்கள் ஒன்றோடொன்று இணைந்துள்ளன. அப்போதுதான் அவர்கள் (படைகள்) அனைத்துத் திசைகளிலும் சுட முடியும். மட்டைப்பந்து அடிப்பவர் வரைவதைப்போல அம்புக்குறிகளை வரைகிறார் சந்து.

எந்தப் பள்ளியிலும் ஆசிரியர்களே இல்லை. அவர்கள் அனைவரும் இவ்விடத்தைவிட்டு ஓடிவிட்டனர். அல்லது, நீங்கள் அவர்களை விரட்டிவிட்டீர்களா? இல்லை, நாங்கள் காவலர்களை மட்டுந்தான் விரட்டு வோம். ஆனால், ஆசிரியர்கள் ஏன் இங்கு வரப்போகின்றனர், இந்தக் காட்டிற்கு? தம் இல்லங்களில் அமர்ந்தவாறே சம்பளம் வாங்கிக்கொள்ளலாமே? சரியாகச் சொன்னீர்.

இது ஒரு ‘புதுப் பகுதி’ என்று சந்து சொல்கிறார். இப்பகுதியில் கட்சி அண்மையில்தான் நுழைந்துள்ளது.

சுமார் 20 இளைஞர்கள் வந்தனர், ஆண், பெண் இருபாலாரும் இருந்தனர். அவர்களுடைய வயது சுமார் 13 முதல் 25 வரை இருக்கும். இவர்கள்தாம் ஊரளவிலான படையினர் என்று சந்து விளக்கினார். மாவோவினப் படையின் அடித்தட்டிலிருப்பவர்கள் இவர்கள். இவர் களைப் போன்ற யாரையும் நான் இதுவரை பார்த்ததே யில்லை. அவர்கள் புடவை, கைலி முதலியவற்றை அணிந்திருந்தனர். சிலர் கிழிந்த, ஆலிவ்-பச்சை வண்ணப் படைச் சீருடை அணிந்திருந்தனர். பையன்கள் அணி கலனும் (நகையும்) தலைப்பாகையும் அணிந்துள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரிடமும் பர்மார் எனப்படும் துப்பாக்கி இருந்தது. அதனுள் பல குண்டுகளை ஒன்றன் பின் ஒன்றாக வேகமாக ஏற்றலாம். கத்திகள், கோடரிகள், அம்பு முதலியனவும் சிலரிடம் இருந்தன. மூன்றடி நீளமுள்ள கனமான இரும்புக் குழாயில் வடிவமைக்கப் பட்ட செப்பமற்ற சிறு பீரங்கி ஒன்றை ஒரு பையன் வைத்திருந்தார். வெடிபொருளும் தெறிகுண்டுகளும் அதில் நிரப்பப்பட்டிருந்தன. எப்போதுவேண்டுமானாலும் அதை வெடிக்கமுடியும். அது மிகுந்த ஓசையுடன் வெடிக்கும். ஆனால் ஒரேயொரு முறைதான் அதைப் பயன் படுத்தமுடியும். ஆனாலும் அது காவல்துறையினரை அஞ்சவைக்கிறது என்று கூறி அவர்கள் நமுட்டுச் சிரிப்பை வெளிப்படுத்துகின்றனர். போர் அவர்கள் மனதில் முதலிடத்தைப் பிடித்திருப்பதாகத் தெரியவில்லை. இப்பகுதி சல்வா சூடும் படையினரின் தாயகப் பகுதி யிலிருந்து தொலைவில் இருப்பது இதற்குக் காரணமாக இருக்கக்கூடும். அன்றைய வேலையை அவர்கள் அப் போதுதான் முடித்திருந்தனர். தோட்டங்களுக்குள் வெள்ளாடுகள் புகாவண்ணம் சில வீடுகளைச் சுற்றி வேலியமைத்தல்.

அவர்கள் மகிழ்ச்சியுடனும் ஆர்வம் மிகுந்தவர் களாகவும் உள்ளனர். சிறுமிகள் சிறுவர்களுடன் தன்னம்பிக்கையோடு கூச்சமின்றிப் பழகுகின்றனர். இவை போன்றவற்றை நான் எளிதில் கவனித்துவிடுவேன். இவர்களுடைய நடத்தை என் மனதில் இடம் பிடித்து விட்டது. நான்கைந்து ஊர்களைப் பாதுகாப்பதற்காகச் சுற்றுதல் (ரோந்து), வயல்வெளிகளில் வேலை செய்து உதவுதல், கிணறுகளைத் தூர்வாரித் தூய்மைப்படுத்துதல், வீடுகளைச் சீர்ப்படுத்துதல் உட்பட்ட அங்குத் தேவைப் படும் அனைத்து வேலைகளையும் இவர்கள் செய்வார்கள் என்று சந்து சொல்கிறார்.

அக்கா இன்னும் வரவில்லை. என் செய்வது? ஒன்று மில்லை. காத்திரு. அவர்களுடைய உழைப்பில் பங்குபெறு.

இரவுணவுக்குப் பிறகு அதிகம் பேசாமல் ஒவ்வொரு வரும் முறைப்படி வரிசையில் நிற்கின்றனர். நாங்கள் செல்லப்போகிறோம் என்பது தெளிவு. அனைத்துப் பண்டங்களும் எங்களுடனே வருகின்றன. அரிசி, காய்கள், சட்டி பானைகள் என எல்லாமே. பள்ளிவளாகத்தை விட்டு வெளியேறி ஒருவர் பின் ஒருவராகக் காட்டினுள் நடக்கிறோம். அரைமணி நேரம் கூட நடக்கவில்லை. ஒரு திறந்த வெளியை அடைந்தோம். இங்குதான் இன்றிரவு உறங்கப்போகிறோம். அங்கு எந்த ஓசையுமில்லை. சில நிமிடங்களில் அனைவரும் தத்தம் நீல நிற ஞெகிழித் தாள்களை (பாய்கள்) விரித்துவிட்டனர். பரவலாகப் பயன்படும் சில்லி எனப்படும் இந்தப் படுதா இல்லாமல் புரட்சியே இல்லை. சந்துவும் மங்டுவும் ஒரு படுதாவைத் தமக்கு வைத்துக்கொண்டு எனக்கு ஒன்றை விரித்தனர். இருப்பதிலேயே சிறந்த சாம்பல்நிறப் பாறைமீது நல்ல இடத்தை எனக்கு ஒதுக்கினர். அக்காவுக்குச் செய்தி அனுப்பியிருப்பதாக சந்து சொல்கிறார். அது கிடைத்தால் அக்கா அதிகாலை இங்கு வந்துவிடுவார். அது கிடைத்தால் என்பதுதான் இங்கு முதன்மையானது.

நீண்ட காலத்திற்குப் பின் இத்தகைய அழகுவாய்ந்த அறையில் நான் உறங்குகிறேன். ஆயிரம் விண்மீன் தரம் உள்ள விடுதியொன்றில் எனக்கென்று தனியாக ஒதுக்கப் பட்ட அறை. ஆர்வமூட்டும் படைக்கலங்களை ஏந்திய விநோதமான அழகிய சிறார் என்னைச் சுற்றிலும் உள்ளனர். இவர்கள் அனைவரும் கட்டாயம் மாவோவினராகத்தான் இருப்பார்கள். இவர்கள் எல்லோரும் (போரில்) இறக்கப்போகிறார்களா? காட்டுப் போர்முறைப் பயிற்சிப் பள்ளி இவர்களுக்கு எதிரானதா? பெருந்துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட உலங்கு வானூர்திகள், செறிவூட்டப் பட்ட ஒளிக்கற்றைத் தொழில்நுட்பத்தில் இயங்கும் இடைவெளிகாண் கருவிகள், உடல் சூட்டினைக் கொண்டு (பதுங்கியிருக்கும்) மனிதர்களைக் காண உதவும் கருவிகள் ஆகிய அனைத்தும் இவர்களைக் குறிவைத்தா இயங்கும்?

இவர்கள் ஏன் இறக்கவேண்டும்? எதற்காக? இந்த நிலங்கள் அனைத்தையும் சுரங்கங்களாக்குவதற்காகவா? ஒரிசா மாநிலத்தில் கியோஞ்சார் பகுதியில் உள்ள திறந்த வெளி இரும்புச் சுரங்கங்களைப் பார்வையிடச் சென்றது எனக்கு இன்னும் நினைவில் உள்ளது. அங்கு ஒரு காலத்தில் காடு இருந்தது. இதோ இங்கு இருக்கிறார்களே, இவர் களைப் போலவே அங்கும் சிறுவர்கள் இருந்தனர். இப்போது அந்நிலம் ஒரு மாபெரும் சிவப்புப் புண்ணைப் போலக் காட்சியளிக்கிறது. நம் மூக்குத்துளைகள், நுரையீரல்கள் அனைத்திலும் செம்மண் புழுதி நிறைகிறது. தண்ணீர், காற்று, மக்கள், அவர்களுடைய நுரையீரல்கள், முடி ஆகிய அனைத்துமே சிவப்பு. அவர்களுடைய சிற்றூர் களினூடாக இரவும் பகலும் சரக்குந்துகள் சென்று கொண்டேயுள்ளன. ஆயிரக்கணக்கான சரக்குந்துகள் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து செல்கின்றன. தாதுப் பொருளை பாரதீப் துறைமுகத்திற்குக் கொண்டு செல் கின்றன. அங்கிருந்து அது சைனாவுக்குச் செல்லும். அங்கு அது மகிழுந்துகளாகவும், புகையாகவும், வெகு விரைவில் எழும்பும் நகரங்களாகவும் உருமாறுகின்றது. பொருளாதார வல்லுநர்களை அதிசயிக்கவைக்கும் ‘வளர்ச்சி விகிதமாக’ உருமாறுகின்றது. போரிடுவதற்குப் பயன்படும் படைக் கலன்களாகவும் உருமாறுகின்றது.

இச்சிறு போராளிகள் ஒவ்வொருவரும் ஒன்றரை மணி நேரம் இப்பகுதியைக் காவல் காக்கவேண்டும். அப்படிக் காப்பதற்காகச் சுற்றி நடந்துகொண்டிருப்பவர் களைத் தவிர ஏனையோர் உறக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். அப்பாடா, இப்போது நான் விண்மீன்களைப் பார்க்கலாம். நான் மீனாச்சல் ஆற்றங்கரையில் வளர்ந்தேன். அந்தி நேரத்தில் தோன்றும் சில்வண்டுகளின் இரைச்சல், விண் மீன்கள் தாம் ஒளியுமிழத் தொடங்குமுன் ஏற்படுத்தும் ஓசை என்று அந்தக் குழந்தைப் பருவத்தில் நான் நினைத் திருந்தேன். இங்கு இருப்பது எனக்கு இந்த அளவு விருப்ப மாக உள்ளதை எண்ணுகையில் எனக்கு வியப்பு மேலிடு கிறது. உலகில் வேறெந்த இடத்திலும் இருப்பதைவிட இங்கிருப்பதுதான் பிடித்திருக்கிறது. இன்றிரவு நான் யாராக இருக்கவேண்டும்? விண்மீன் ஒளியில் உள்ள காம்ரேய்ட் ராகேல்? அக்கா ஒருவேளை நாளை வரக்கூடும்.

 

பிற்பகலின் தொடக்கத்தில் அவர்கள் வந்தார்கள். தொலைவிலிருந்தே அவர்களைப் பார்க்கமுடிந்தது. சுமார் 15 பேர் இருப்பார்கள். அனைவரும் ஆலிவ்-பச்சை வண்ணச் சீருடை அணிந்திருந்தனர். எங்களை நோக்கி ஓடிவந்தனர். அவர்களுடைய ஓட்டத்தைப் பார்த்தாலே அவர்கள் வலு மிக்கவர்கள் என்பதைக் கணிக்கமுடிந்தது. மக்கள் விடுதலைக்கான கெரில்லாப் படையினர் (மவிகெப). இவர்களைக் குறிவைத்துத்தான் செறிவூட்டப் பட்ட ஒளிக்கற்றைத் தொழில்நுட்பத்தில் இயங்கும் இடைவெளிகாண் கருவிகளும் உடல் சூட்டினைக் கொண்டு (பதுங்கியிருக்கும்) மனிதர்களைக் காண உதவும் கருவிகளும் இயங்குகின்றன. யாருக்காகக் காட்டுப் போர்முறைப் பயிற்சிப் பள்ளி நடத்தப்படுகிறதோ அவர்கள்தான் இவர்கள்.

அவர்கள் முறையான துப்பாக்கிகளை வைத் துள்ளனர். அவர்களுடைய தலைவர் தோழர் மாதவ். அவர் தன் ஒன்பதாவது அகவையில் கட்சியில் சேர்ந்தார். ஆந்திர மாநிலம் வாரங்கல் பகுதியைச் சேர்ந்தவர். அவர் அமைதி யிழந்து வருத்தத்துடன் இருக்கிறார். தங்களுக்குள் தகவல் தொடர்பில் தவறு நேர்ந்துவிட்டது என்று மீண்டும் மீண்டும் சொன்னார். இப்படி ஒருபோதும் ஆனதில்லை. நான் முதல் நாளிரவே அவர்களுடைய முதன்மை

இடத்திற்கு வந்திருக்கவேண்டும். என்னை அழைத்து வருவதற்காகப் பணியமர்த்தப்பட்ட சங்கிலி ஓட்டத் தொடரில் கலந்துகொண்ட பலரில் யாரோ ஒருவர் தன் பணியைச் சரியாகச் செய்யவில்லை. மோட்டர் பைக்கில் நான் வேறோர் இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டிருக்க வேண்டும். “நாங்கள் உங்களைக் காக்க வைத்துவிட்டோம். வெகு தொலைவு நடக்கவைத்துவிட்டோம். நீங்கள் இங்கு இருப்பதறிந்தவுடன் நாங்கள் எம்மிடத்திலிருந்து ஓடோடி வந்தோம்.” பரவாயில்லை, காத்திருத்தல், நடத்தல், நீங்கள் அனைவரும் சொல்வதைக் கவனித்துக் கேட்டல் ஆகிய அனைத்துக்கும் அணியமாகத்தான் புறப்படவேண்டும் என்றும் அவர்கள் அவசரப்பட்டார்கள்.

சில மணி நேரங்கள் நடந்தபின் கூடாரத்தை அடைந்தோம். அப்போது இருட்டத்தொடங்கிவிட்டது. பல அடுக்குப் பாதுகாப்பு வளையங்களைத் தாண்டித்தான் கூடாரத்தை அடைந்தோம். இரண்டு வரிசைகளில் சுமார் நூறு தோழர்கள் அணிவகுத்து நின்றனர். ஒவ்வொரு வரிடமும் படைக்கலன் இருந்தது. புன்முறுவலும் இருந்தது. அவர்கள் பாடத்தொடங்கினார்கள். இப்போது வந்துள்ள தோழர்களுக்குச் செவ்வணக்கம். ஏதோவொரு ஆறு அல்லது பூத்துக் குலுங்கும் காட்டு மலர்க் குவியலைப் பற்றிய நாட்டுப்புறப் பாடலைப் போல இனிமையாக அதைப் பாடுகின்றனர். பாட்டு, செவ்வணக்கம், கை குலுக்கல், மடக்கிய கைமுட்டி ஆகிய அனைத்தும் ஒருசேர இருந்தன. ஒவ்வொருவரும் மற்ற அனைவருக்கும் வணக்கம் சொல்கின்றனர். செவ்வணக்கம், செவ்வணக்கம்... என்ற முணுமுணுப்பு எங்கும் பரவியுள்ளது.

சுமார் 15 சதுர அடிப் பரப்புள்ள பெரிய நீல நிறச் சிலி (பாய்) தரையில் பரப்பப்பட்டுள்ளது. அதைத் தவிர இந்த இடத்தைக் கூடாரம் என்று சொல்வதற்கான வேறு அறிகுறிகள் எவையும் இங்கு இல்லை. இதன் கூரையும் ஒரு சிலியினால் ஆனதே. இதுதான் இன்று இரவு என் அறை. இது, நான் கடந்த சில நாட்கள் நடந்துவந்ததற்குக் கிடைத்த ஊதியமா அல்லது இனி வரப்போவதைத் தாங்கிக் கொள்வதற்காகச் செய்து தரப்பட்டுள்ள வசதியா என்பது தெரியவில்லை. இந்த இரண்டு காரணங்களுக்காகவுமே இருக்கலாம். எப்படியாகினும் இந்தப் பயணத்தில் ஒரு கூரைக்கடியில் தங்குவதற்குக் கிடைத்த இறுதி வாய்ப்பாக இது அமைந்தது.

இரவுணவின்போது கீழ்க்கண்ட தோழர்களைச் சந்தித்தேன். தோழர் நர்மதா, கிராந்திகாரி ஆதிவாசி மகிலா சங்காத்தன் என்ற பழங்குடிப் பெண்கள் அமைப்புக்குப் பொறுப்பேற்றுள்ளார்; அவரைப் பிடித்துத் தருபவருக்கு அரசுப் பரிசு காத்திருக்கிறது. தோழர் சரோசா, மவிகெப-வைச் சேர்ந்தவர்; தான் வைத்திருந்த துப்பாக்கியின் உயரம்தான் இருப்பார் அவர். தோழர் மாசெ (இச் சொல்லுக்கு கோன்டி மொழியில் கருமை நிறச் சிறுமி என்று பொருள்); அவரைப் பிடித்துத் தருபவருக்கும் அரசுப் பரிசு காத்திருக்கிறது. தொழில்நுட்ப வல்லுநர் தோழர் ரூபி. இங்குள்ள படைப்பிரிவின் தலைவர் தோழர் ராசு.

இங்குள்ள அனைவரைக் காட்டிலும் மூத்தவரான தோழர் வேணு (அல்லது முரளி அல்லது சோனு அல்லது சுசில் - என்ன பெயரிட்டழைத்தாலும் சரி). அவர் ஒரு வேளை கட்சியின் நடுவண் குழுவில் அல்லது தலைமைக் குழுவில் இருக்கக்கூடும். என்னிடம் யாரும் சொல்லவில்லை; நானும் கேட்கவில்லை.

கோன்டி, கால்ப், தெலுகு, பஞ்சாபி, மலையாள மொழிகளைப் பேசுவோர் இங்கு கூடியிருக்கிறோம். மாசெ-வுக்கு மட்டுமே ஆங்கிலம் தெரியும். (அதனால் நாங்களனைவரும் இந்தியில் உரையாடுகிறோம்!) தோழர் மாசெ உயரமாக, அமைதியாக உள்ளார். உரையாடத் தொடங்குவது அவருக்கு வேதனையைத் தரும்போலுள்ளது. அவர் என்னைக் கட்டியணைத்த முறையிலிருந்து அவர் (நிறைய நூல்களைப்) படிப்பவர் என்று சொல்லமுடிகிறது. இந்தக் காட்டில் படிப்பதற்கு நூல்கள் கிடைக்காமல் அவர் ஏங்குவது தெரிகிறது. தன்னுடைய வரலாற்றை அவர் பின்னர்தான் என்னிடம் சொன்னார். அவருடைய துயரத்தை என்னுடன் பகிர்ந்துகொள்ளுமளவு என்மீது அவருக்கு நம்பிக்கை வந்தபிறகு.

இந்தக் காட்டில் அவ்வப்போது நிகழ்வதுபோல இன்று ஒரு சோகச் செய்தி வந்துசேர்ந்தது. ‘அடுசில்லுச் சிப்பங்களுடன்’ ஒருவர் ஓடோடி வந்தார். கையால் எழுதப் பட்ட குறிப்புகள் நிறைந்த தாள்கள் சிறு சதுரங்களாக மடித்துப் பிணைக்கப்பட்டிருந்தன. ஒரு பை நிறைய அத்தகைய தாள்கள் இருந்தன. சாப்பிடும் வறுவல் சில்லுகளைப் போல. பல பக்கங்களில் இருந்தும் வந்த செய்திகள் அவற்றில் இருந்தன. ஓங்நார் என்னும் சிற்றூரில் ஐந்து பேரைக் காவலர்கள் கொன்றுள்ளனர். அவர்களில் நால்வர் போராளிகள். ஒருவர் சாதாரண மனிதர். சந்து பொட்டை (25), பூலோ வட்டெ (22), கன்டெ பொட்டை (22), ராமோலி வட்டெ (20), தல்சாய் கோரம் (22), நேற்றிரவு நான் தங்கியிருந்த (திறந்தவெளி) விண்மீன் விடுதியில் இருந்த இளைஞர்களாகக் கூட அவர்கள் இருந்திருக்கலாம்.

அடுத்தபடியாக ஒரு நல்ல செய்தியும் வந்தது. சற்றே பருத்த உடலமைப்புள்ள ஓர் இளைஞருடன்கூடிய சிறு குழு. அவரும் படைச்சீருடை அணிந்துள்ளார். ஆனால் அந்த உடைகள் புத்தம் புதியன போலத் தோன்றுகின்றன. இங்குள்ள அனைவரும் அக்குழுவினரைப் போற்று கின்றனர். குழுவின் உறுப்பினர்களிடையே நிலவும் இணக்கத்தைக் குறித்துப் பேசிக்கொள்கின்றனர். அந்த இளைஞரிடம் மகிழ்ச்சியும் கூச்சமும் கலந்திருந்தன. மருத்துவரான அவர் தோழர்களுடன் வாழ்ந்து பணியாற்று வதற்காகக் காட்டிற்கு வந்துள்ளார். இதற்கு முன் தண்டகாரன்யாவுக்கு மருத்துவர் ஒருவர் வந்து பல ஆண்டுகள் ஆயின.

‘இடது தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட’ மாநில முதல்வர்களுடன் உள்துறையமைச்சர் சந்தித்தது குறித்த செய்தி வானொலியில் வெளியாகிறது. சார்க்கன்ட், பீகார் முதல்வர்கள் போலிப் பணிவுடன் அந்தக் கூட்டத்திற்கு வராதிருந்துவிட்டனர். வானொலியைச் சுற்றி அமர்ந்திருந்த அனைவரும் சிரித்தனர். “நக்சல்கள் எம் குழந்தைகள்” என்று ஒவ்வொரு தேர்தலின்போதும் பரப்புரைக் காலம் முழுவதும், ஏன் புது அரசு பதவியேற்று ஓரிரு மாதங்கள் வரையும்கூட அரசியல்வாதிகள் சொல்வது வழக்கம் என்கின்றனர் இவர்கள். அந்த அரசியல்வாதிகள் எப்போது தம் மனத்தை மாற்றிக்கொண்டு நச்சைக் கக்கத் தொடங்கு கிறார்கள் என்பதைக்கொண்டு ஒருவர் தன் கடிகை காட்டும் நேரத்தைச் சரியாக மாற்றிக்கொள்ளலாம். அவ்வளவு துல்லியமாக அந்த அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் அமைகின்றன.

தோழர் கம்லாவிடம் என்னை அறிமுகப்படுத்து கின்றனர். இரவில் அவரை எழுப்பாமல் நான் என் பாயிலிருந்து ஐந்தடி தொலைவுக்குக்கூட நடந்துசெல்லக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளேன். ஏன்? ஒவ்வொருவரும் இருட்டில் தம் வழியை மறந்து தடுமாறுவார்கள். தொலைந்துவிட்டால் அவர்கள் பாடு மிக மோசமாகிவிடும். (நான் அவரை எழுப்பவில்லை. நான் மரக்கட்டைபோல உறங்குபவள்.) காலையில் ஒரு முனையில் சிறிய துளையிடப்பட்ட மஞ்சள் வண்ண ஞெகிழிப் பை ஒன்றை கம்லா என்னிடம் தந்தார். ஒரு காலத்தில் அதில் ‘அபிசு கோல்டு’ சுத்திகரிக்கப்பட்ட சோயா எண்ணெய் இருந்தது. இப்போது அந்தப் பை தான் எனது கழிப்பறை. புரட்சிப் பாதையில் எந்தப் பொருளும் வீணாக்கப்படுவதில்லை.

(இப்போதும்கூட நான் தோழர் கம்லாவை அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன். ஒவ்வொரு நாளும். அவருக்கு 17 அகவை ஆகிறது. உள்ளூரில் உருவாக்கப்பட்ட கைத்துப்பாக்கியை இடுப்பில் செருகிவைத்துள்ளார். அத்துடன் கூடுதலாக அழகான புன்னகை. ஆனால், காவலர்களுடைய கண்களில் அவர் பட்டால் அவர்கள் அவரைக் கொன்று விடுவர். அதற்குமுன் அவரை வன்புணர்ச்சியில் ஈடுபடுத்தக் கூடும். கேள்வி கேப்பாடே இருக்காது. ஏனெனில், அவர் (இந்தியாவின்) உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்த லானவர்).

 

காலையுணவுக்குப் பின் தோழர் வேணு (சுசில், சோனு, முரளி) எனக்காகக் காத்திருக்கிறார். குறுக்குக்கால் போட்டுப் பாயில் அமர்ந்திருக்கும் மெலிந்த தோற்றமுள்ள அவரை யாராவது பார்த்தால் சிற்றூர்ப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் என்றுதான் நினைப்பார்கள். அவரிடமிருந்து நான் வரலாற்றுப் பாடம் பெறப் போகிறேன். துல்லியமாகச் சொன்னால், தண்ட

காரண்யக் காடுகளின் கடந்த முப்பதாண்டுக் கால வரலாறு. அப்பகுதியில் சூறாவளியாக இப்போது வீசும் போரில் முடியும் வரலாறு. அது ஒரு சார்பான வரலாறு தான் என்பது உறுதி. ஆனால், வரலாறு என்பதே அப்படிப்பட்டதுதானே? மேலும், கமுக்கமாக உள்ள வரலாற்றை வெளிப்படுத்தினால்தானே அதை மறுக்கவோ, அது குறித்து வாதிடவோ முடியும். இல்லாவிட்டால் இப்போது நடப்பில் உள்ளதைப்போல அந்தக் காடு களைக் குறித்த பொய்களே பரவும்.

தோழர் வேணு அமைதியான, ஆதரவு தரும் பாங்கு கொண்டவர். அவருடைய குரல் மென்மையானது. வரப் போகும் நாட்களில் என்னைத் தூக்கிவாரிப்போடும் நிலையில் அவருடைய இந்தப் பாங்குகளும் குரலும் வெளிப்படும். இன்று காலை அவர் ஏறக்குறைய இடை வெளியில்லாமல் பல மணி நேரங்கள் பேசினார். கதைகள், பாக்கள், நுண்ணறிவு ஆகியவற்றைப் பெட்டகங்களில் நிரப்பி, அப்பெட்டகங்களை அடைவதற்குக் குழப்பும் வகையில் பாதைகளை நிறுவி, ஆங்காங்கு பூட்டி வைக்கப்பட்ட கதவுகளையும் வைத்து, அப்பூட்டுகளின் திறவுகளைத் தன்னிடத்தே வைத்திருக்கும் கடை மேலாளரைப்போன்றவர் அவர்.

முப்பதாண்டுகளுக்கு முன் சூன் 1980-ல் படைக் கலந்தாங்கிய ஏழு குழுக்கள் ஆந்திராவில் இருந்து கோதாவரி ஆற்றைக் கடந்து தகாவில் நுழைந்தனர், (தண்டகாரண்யாவை கட்சியில் தகா - னுமு - என்று சுருக்கமாகக் குறிப்பிடுகின்றனர்.) அந்த 49 தோழர்களில் வேணுவும் ஒருவர். அவர்கள் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (ம-இலெ-)-வின் உட்பிரிவுகளில் ஒன்றான மக்கள் போர்க் குழுவைச் (மபோகு) சேர்ந்தவர்கள். அதாவது முதல் நக்சலைட்கள். 1980 ஏப்ரலில் மபோகு கொண்ட பள்ளி சீதாராமையா தலைமையில் தனிக்கட்சியாக முறைப்படி அறிவிக்கப்பட்டது. தனக்கென நிலையானதொரு படையை அமைக்க அக்கட்சி முடிவெடுத்தது. அதற்காகக் கட்சிக்கு ஒரு தளம் வேண்டியிருந்தது. தகா-தான் அந்தத் தளம். அப்பகுதியை ஆய்ந்து கெரில்லாக் குழுக்களை அமைப்பதற்காகத்தான் அந்த ஏழு குழுக்களும் அனுப்பப் பட்டிருந்தன.

பொதுவுடைமைக் கட்சிகள் தமக்கென நிலையான படைகளை வைத்திருக்கவேண்டுமா, “மக்கள் படை” என்பதே முரணானதா என்பன போன்ற வாதங்கள் பழையன. ஆந்திராவில் மபோகு ‘உழுவோருக்கே நிலம்’ என்ற போராட்டத்தை நடத்திற்று. அதன் காரணமாக அவர்கள் பெருநில உடைமையாளர்களுடன் நேரடியாக மோதவேண்டிவந்தது. அப்போது காவல்துறையின் வன்மையான ஒடுக்குமுறைகள் கட்சியினரை வெகுவாகப் பாதித்தன. தமக்கென ஒரு படைவலு இல்லாவிட்டால் அத்தகைய ஒடுக்குமுறைகளை எதிர்கொள்ளமுடியாது என்பதை அவர்கள் அப்போது உணர்ந்தனர்.

(மபோகு 2004-ல் ஒற்றுமைக் கட்சி, மாவோவினப் பொதுவுடைமை நடுவம் ஆகிய இபொகமஇலெ குழுக்களுடன் இணைந்தது. மாவோவினப் பொது வுடைமை நடுவம் பெரும்பாலும் பீகார், சார்க்கன்ட் மாநிலங்களில் இருந்து செயல்படுகிறது. இம்மூன்றும் இணைந்த கட்சி இப்போது இந்தியப் பொதுவுடைமைக் கட்சி - மாவோவினர் என்று அழைக்கப்படுகிறது.)

தண்டகாரண்யாவில் கோன்டு பழங்குடிகள் வாழ்வதால் ஆங்கிலேயர் தமக்கே உரிய வெள்ளைக்காரர் முறையில் அப்பகுதியை கோன்டுவானாலாந்து - கோன்டுக் களின் நிலம் - என்றழைத்தனர். (கோன்டுவானாலாந்து என்பது இக்கால ஆப்ரிக்கா, இந்தியத் துணைக்கண்டம், தென் அமெரிக்கா, அன்ட்டார்டிக்கா, ஆசுதிரேலியா ஆகியவை இணைந்திருந்த பெருங்கண்டம். அது சுமார் 20 கோடி ஆண்டுகளுக்கு முன் உடைந்து மேற்படி கண்டங் களாகப் பிரியத்தொடங்கிற்று.) இப்போது மத்தியப் பிரதேசம், சத்தீசுகட், ஒரிசா, ஆந்திரப் பிரதேசம், மகாராட்டிரம் ஆகிய மாநிலங்களில் எல்லைகள் இக்காடுகளின் ஊடே செல்கின்றன.

‘தொல்லை தரும்’ மக்களை வெவ்வேறு நிர்வாகங் களின் கீழ்வருமாறு பிரிப்பது நெடுங்காலமாகக் கையாளப்படும் பிரித்தாளும் உத்தி. ஆனால் இந்த மாவோவினர்களும் மாவோவின கோன்டுகளும் இவை போன்ற மாநில எல்லைகளைக் கண்டுகொள்வதில்லை. தம் மனங்களில் அவர்கள் வேறுவகையான வரைபடங்களை வைத்துள்ளனர். காட்டிலுள்ள பிற உயிர்களைப் போல அம்மக்களும் தமக்கேயுரிய வழிகளைக் கொண்டுள்ளார்கள். அவர்களைப் பொருத்தவரை சாலைகள் நடப்பதற்கல்ல. குறுக்கே கடப்பதற்குத்தான். அல்லது, காவல் துறையினரை வழிமறித்துத் தாக்குவதற்குத்தான் வரவரச் சாலைகள் அதிகம் பயன்படுகின்றன. கோயா, டோர்லா என்னும் இரு இனங்களை உள்ளடக்கிய கோன்டுகள்தான் இங்கு அறுதிப் பெரும்பான்மையினர். ஆனால் பிற இனங்களைச் சார்ந்த பழங்குடி மக்களும் அங்கு வாழ்கின்றனர். வணிகர், வெளியிலிருந்து வந்து குடியேறிய பிற மக்கள் எனப் பழங்குடிகள் அல்லாத மக்கள் காடுகளின் எல்லைப் பகுதிகளில் சாலைகளுக்கும் சந்தைகளுக்கும் அருகில் வாழ்கின்றனர்.

தண்டகாரண்யாவுக்கு வந்த முதல் போதகர்கள் மபோகு-வினர் அல்லர். புகழ்பெற்ற காந்தியவாதியான பாபா ஆம்டே 1975-லேயே வரோராவில் தன் ஆசிர மத்தையும் தொழுநோய் மருத்துவமனையையும் தொடங் கினார். காட்டின் ஆழத்தில் (உட்பகுதியில்) உள்ள அபுசுமாட் பகுதியில் சிற்றூர்களில் ராமகிருட்டின

மிசன் பள்ளிகளை நிறுவியிருந்தது. வட பசுத்தார் பகுதியில்

பாபா பிகாரி தாசு பழங்குடி மக்களை இந்து மதத்திற்குள் “திரும்பக் கொண்டுவரும்” முனைப்பில் ஈடுபட்டார். அதற்காக அம்மக்களின் கலாசாரத்தைப் பழித்தல், அவர்கள் தம்மைத்தாமே வெறுக்கச் செய்தல், இந்து மதத்தின் உயர்ந்த கொடையான சாதி முறையைப் புகுத்துதல் முதலியவற்றில் அவர் ஈடுபட்டார். சிற்றூர்த் தலைவர்களும் நிலக்கிழார்களும் முதலில் இந்து மதத்திற்கு மாறினர். சல்வா சூடும் என்ற குண்டர் படைத்தலைவரான மகேந்திர கர்மா போன்றோர் இதில் அடங்குவர்.

இவர்கள் துவிசு என்னும் மறுபிறவி எடுத்த பார்ப் பனர்களாக வகைப்படுத்தப்பட்டனர். (இது ஒரு பித்தலாட்டம்தான். ஏனெனில், யாரும் பார்ப்பனராக மாறமுடியாது. அப்படி முடிந்திருப்பின் இப்போது இந்நாட்டினர் அனைவருமே பார்ப்பனராக மாறியிருப்பர்.) ஆனால், இந்தப் பழங்குடி மக்களுக்கு இத்தகைய போலி இந்துமதமே போதும் என்ற மனநிலை (அந்த போதகர் களிடம்) உள்ளது. இங்குள்ள சிற்றூர்ச் சந்தைகளில் விற்கப் படும் அடுசில்லுகள், சலவைக் கட்டிகள், தீக்குச்சிகள், எண்ணெய்கள் போன்ற அனைத்திலும் போலிகள் இருப்பதுபோல.

இந்துமயமாக்கலின்போது ஊர்களின் பெயர்கள் நில ஆவணங்களில் மாற்றப்பட்டன. அதன்காரணமாகப் பல ஊர்களுக்கு இப்போது இரண்டு பெயர்கள்-மக்களிடையே வழங்கும் பெயர்கள், அரசு பயன்படுத்தும் பெயர்கள்-உள்ளன. எடுத்துக்காட்டாக, இன்னார் என்னும் ஊர் சின்னாரி என்று மாற்றப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல்களில் பழங்குடிப் பெயர்கள் இந்துப் பெயர் களுக்கு மாற்றப்பெற்றன. (மசா கர்மா மகேந்திர கர்மா ஆயிற்று.) இந்துவாக மாற இணங்காதவர்கள் தீண்டத் தகாதவர்கள் (கட்வாசு) என்று அறிவிக்கப்பட்டனர். இவர்கள் பின்னாளில் இயல்பாகவே மாவோவினக் கட்சித் தொகுதியினராகினர்.

மபோகு முதலில் தென் பசுத்தார், காட்சிரோலி பகுதிகளில் தம் பணியைத் தொடங்கினர். முதல் சில மாதங்களில் நிகழ்ந்தவற்றைத் தோழர் வேணு விவரித்தார். சிற்றூர்வாசிகள் இவர்களை ஐயுற்றனர். தம் வீடுகளுக்குள் வர அனுமதிக்கவில்லை. யாருமே இவர்களுக்கு உணவோ நீரோ தரவில்லை. இவர்கள் திருடர்கள் என்று காவல் துறையினர் வதந்தியைப் பரப்பினர். விறகு அடுப்பில் உள்ள சாம்பலில் பெண்கள் தம் நகைகளை ஒளித்துவைத்தனர். மிகக் கொடிய அடக்குமுறை நிலவிற்று.

நவம்பர் 1980-ல் காட்சிரோலியில் ஊர்மக்கள் கூட்டத்தில் சுடத்தொடங்கிய காவல்துறையினர் போராளிக் குழுவொன்றை முற்றிலும் அழித்தனர். அதுதான் தகா பகுதியில் நடந்த முதல் “எதிர்ப்படுதல் கொலைகள்”. (காவல்துறை தன் எதிரிகள் தன்னுடன் சண்டையில் ஈடுபடாதபோது சுட்டுக் கொன்றுவிட்டு அவர்கள் தம்மைக் கொல்ல வந்ததாகவும் தற்காப்பில் திருப்பித் தாக்கியபோது அவர்கள் கொல்லப்பட்டு விட்டதாகவும் கூறுதல்.) இது மபோகு-வுக்கு மிகப் பெரிய இழப்பு. அதனால் தோழர்கள் கோதாவரி ஆற்றைக் கடந்து அடிலாபாத் சென்றனர். ஆனால் அவர்கள் 1981-ல் திரும்பினார்கள். பழங்குடி மக்களை அணிப்படுத்தி அவர்கள் சேகரித்து விற்கும் டென்டு என்னும் பீடி இலைக்குத் தரப்படும் விலையை அதிகரிக்கக் கோருமாறு செய்தனர் . சுமார் 50 இலைகளுள்ள கட்டுக்கு வணிகர்கள் மூன்று காசுகள் தந்தனர்.

அரசியல் முறைகளில் எவ்விதப் பழக்கமும் இல்லாத அந்தப் பழங்குடி மக்களை இவ்வாறு அணிப்படுத்துவது மிகக் கடினமான பணியாக இருந்தது. அவர்களை வேலை நிறுத்தம் செய்யத் தூண்டுவது அதைவிடக் கடினம். ஆனால், ஒரு வழியாக வேலை நிறுத்தம் வெற்றியடைந்து அவர்களுக்கு இரட்டிப்பு விலை கிடைத்தது. ஒற்றுமையின் வலுவை உணர்த்தியதும் அரசியல் பேச்சுவார்த்தைகளில் அந்தப் பழங்குடி மக்களுக்குப் புதிய வழிமுறைகளைக் காட்டியதும்தான் கட்சிக்குக் கிடைத்த உண்மையான வெற்றி.

பல வேலைநிறுத்தங்களுக்கும் கிளர்ச்சிகளுக்கும் பிறகு இன்று ஒரு கட்டு இலைகளுக்கு ஒரு உருவா விலை கிடைக்கிறது. (இந்த விலையைப் பார்க்கையில் இதற்காக இவ்வளவு முயற்சி செய்தது போலத் தெரியாது. ஆனால் டென்டு இலை வணிகத்தில் பல நூற்றுக்கணக்கான கோடி உருவாக்கள் புழங்குகின்றன என்பதை உணர்ந்தால் இச்சிக்கலின் முழு வடிவத்தை நாம் புரிந்துகொள்ளலாம்). ஒவ்வோர் அறுவடைப் பருவத்திலும் அரசு ஏலம் விடுகிறது. அதில் வெல்லும் ஒப்பந்ததாரர்கள் குறிப்பிட்ட அளவு இலைகளைக் காட்டிலிருந்து வாங்கிச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். வழக்கமாக 1,500 அளவுப் பைகள் முதல் 5,000 அளவுப்பைகள்வரை நிரப்புவதற்குத் தேவையான அளவு இலைகளை அவர்கள் வாங்கலாம். இந்த அளவுப்பைகள் மனக்போரா எனப்படுகின்றன. ஒரு மனக் போரா-வில் 1,000 கட்டுகள் பிடிக்கும். (ஒப்பந்த தாரர்கள் அளவுக்கதிகமாக எடுத்துச் செல்கிறார்களா என்பதைக் கண்காணிப்பதற்கு வழியில்லை என்பது தனிக்கதை.)

அந்த இலைகள் சந்தையை எட்டுமுன்னரே அவை எண்ணிக்கையில் அல்லாது, எடைபோட்டு கிலோ கணக்கில் விற்கப்படுகின்றன. எண்ணிக்கையிலிருந்து எடைக்கு மாற்றும் முறையில் வணிகர்கள் மிக மோசமாக ஏமாற்றுவதற்குப் பல எளிய வழிகளுள்ளன. ஏனெனில் அவர்கள் அந்த முறையைத் தம் கட்டுப்பாட்டில் வைத் துள்ளனர். அது தொடர்பான கணக்குகளும் எளிதில் தடுமாற வைக்கக்கூடியவை. அளவுப் பை ஒன்றுக்கு ஒப்பந்த தாரர்கள் மிகக் குறைந்தது 1,100 உருவா ஊதியமாவது (இலாபம்) பெறுவர். (பை ஒன்றுக்கு 120 உருவாக்களைத் தரகாகக் கட்சிக்குத் தருவதைக் கழித்த பிறகும் இந்த ஊதியம் கிடைக்கிறது.) இந்தக் குறைந்த பட்சக் கணக் கிலேயே சிறிய ஒப்பந்ததாரர் (1,500 பைகள் வாங்கி விற்பவர்) ஒரு பருவத்தில் 16 இலக்கம் உருவா சம்பாதிப்பார். 5,000 பைகள் வரை கைமாற்றும் பெருவணிகர் 55 இலக்கம் உருவா வரை சம்பாதிக்க முடியும். அதேபோழ்தில் ‘(இந்தியாவின்) மிக மோசமான உள்நாட்டு அச்சுறுத்தல்’ ஒரு பருவத்திலிருந்து அடுத்தது வரை உயிர்வாழ்வதற்குத் தேவையான பணத்தைச் சம்பாதிப்பதே கடினம்.

நிலேசின் சிரிப்பும் வருகையும் எங்கள் கவனத்தை ஈர்க்கின்றன. அவர் மவிகெப-வைச் சேர்ந்த இளம் தோழர். தன்னைத் தானே தட்டிக் கொண்டே சமையல் பகுதியை நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்தார். சினங்கொண்ட எறும்புக் கூட்டம் ஒன்று இலைகளை மடித்துக் கட்டிய தம் கூட்டுடன் அவர்மீது வேகமாக ஊர்ந்துகொண்டும் அவரைக் கழுத்திலும் கை கால்களிலும் கடித்துக் கொண்டும் இருந்ததென்பது அவர் அருகில் வந்தபோது தான் தெரிந்தது. அவர் சிரித்துக்கொண்டும் இருக்கிறார். “எறும்புச் சட்னி எப்போதேனும் சாப்பிட்டிருக் கிறீர்களா?” என்ற தோழர் வேணு என்னைக் கேட்கிறார். குழந்தைப் பருவத்தில் கேரளத்தில் இருந்ததால் சிவப்பு எறும்புகளைப் பற்றி நான் நன்கு அறிந்திருந்தேன். அவை என்னைப் பலமுறை கடித்துள்ளன. ஆனால் நான் அவற்றைச் சாப்பிட்டதில்லை. (அந்தச் சப்போலி நன்றாக இருந்தது. புளிப்பாக, நிறைய போலிக்அமிலம்.)

சல்வா சூடும் படையின் இதயப்பகுதியான பிசாப்பூர் தான் நிலேசின் சொந்த ஊர். அவருடைய தம்பி அந்தப் படையில் சேர்ந்தார். பெருமளவில் கொள்ளையடித்தல், தீக்கிரையாக்குதல் முதலிய செயல்களில் அப்படை ஈடுபடும். ஒரு முறை நிலேசின் தம்பி அத்தகைய செயல் களில் ஈடுபட்டார். அதன்பிறகு அவர் சிறப்புக் காவல் அதிகாரியாக்கப்பட்டார். இப்போது அவர் தம் தாயுடன் பாசகுடாவில் (படைகளின்) ‘இடைவழித் தங்கல் மனை’ ஒன்றில் வசிக்கிறார். அவர்களுடைய குடும்பத்தில் குருதிச் சச்சரவு (குருதி சிந்தும் போராட்டம்) நடக்கிறது. பின்னொரு சமயத்தில் நிலேசுடன் பேச வாய்ப்பு கிடைத்தபோது அவருடைய தம்பி ஏன் அப்படிச் செய்துவிட்டார் என்று கேட்டேன். “அவன் அப்போது மிகவும் இளம் வயதினன். விருப்பம்போல் ஓடித் திரிந்து மக்களைத் தாக்கவும் வீடுகளைத் தீக்கிரையாக்கவும் வாய்ப்பு கிடைத்தது. அவனுக்கு மனநிலை பிறழ்ந்து விட்டது. மோசமான செயல்களைச் செய்துவிட்டான். இப்போது அவனுக்கு அங்கேயே இருப்பதைத் தவிர வேறு வழியில்லை. அவன் ஊருக்குள் திரும்பவே முடியாது. அவனை மக்கள் மன்னிக்கமாட்டார்கள். அவனுக்கும் அது தெரியும்.”

மீண்டும் வரலாற்றுப் பாடத்திற்குத் திரும்புகிறோம். கட்சியின் அடுத்த பெரிய போராட்டம் பல்லார்ப்பூர் தாள் (காகிதம்) ஆலையை எதிர்த்துத்தான் என்கிறார் தோழர் வேணு. மிகக் குறைந்த விலையில் அடுத்த 45 ஆண்டுகளில் 1.5 இலக்கம் டன் மூங்கில்களை அறுவடை செய்து கொள்வதற்கு அந்த ஆலையின் உரிமையாளர்களான தாப்பர் குழுமத்தை அனுமதித்து அரசு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. (பாக்சைட் தாதுக்களைத் தாரைவார்ப்பதைப் பார்க்கையில் இந்தச் சலுகை பெரிதல்ல. இருப்பினும்...) 20 மூங்கில் தண்டுகளைக் கொண்ட கட்டுக்கு (அவற்றைச் சேகரித்துக் கொண்டுவந்து சேர்க்கும்) பழங்குடி மக்களுக்குப் பத்துக் காசுகள் கிடைக்கின்றன. (தாப்பர் குழுமம் அந்த மூங்கிலினால் எவ்வளவு ஊதியம் சம்பாதிப்பார்கள் என்று ஒப்பிட வேண்டும் என்ற ஆபாசமான ஆசைக்கு ஆளாக மாட்டேன்.) நீண்ட காலம் நடந்த கிளர்ச்சி, வேலை நிறுத்தம், அதைத் தொடர்ந்து மக்கள் முன்னிலையில் ஆலை அதிகாரிகளுடனான பேச்சு வார்த்தை ஆகிய வற்றின் பின் கட்டொன்றுக்கு முப்பது காசுகள் கிடைக் கின்றன. பழங்குடி மக்களுக்கு இது பெரிய வெற்றி. பிற அரசியல் கட்சிகள் வாக்குறுதியளித்திருந்தன. ஆனால் அவை அதன்படி நடக்கவில்லை. மக்கள் மபோகு-வை அணுகி தம் போராட்டத்தில் இணைந்துகொள்ள இயலுமா என்று கேட்டனர்.

டென்டு இலை, மூங்கில் போன்ற பல கான்விளை பொருள்கள் அரசியல் தொடர்புள்ளவை. அந்த அரசியல் பருவகாலங்களுடன் தொடர்புள்ளது. (குறிப்பிட்ட பருவத்தில் குறித்த கான்விளை பொருளைச் சேகரித்து விற்பதிலும் வணிகர்கள் அதை வாங்குவதிலும் அரசியல் உள்ளது.)

ஆனால், அப்பகுதியின் மிகப் பெரிய நிலக்கிழாரான கான்துறையானது மக்கள் எப்போதும் எதிர்கொள்ள வேண்டியிருந்த தீராத தலைவலி. ஒவ்வொரு காலைப் பொழுதிலும் கான்துறை அதிகாரிகள் அவர்களில் கீழ்நிலை வேலையில் உள்ளவர்கள் கூட- ஒரு கெட்ட கனவு போல அவ்வூர்ப் பகுதிகளில் எழுந்தருள்வார்கள். நிலத்தை உழுதல், விறகு சேகரித்தல், இலைகளை அறுவடை செய்தல், பழங்களைப் பறித்தல், கால்நடைகளை மேய்த்தல் என வாழ்வாதாரத்திற்குத் தேவையான செயல்களைத் தடுப்பதே அந்த அதிகாரிகளின் வேலை.

யானைகளைக் கொண்டுவந்து விளைநிலங்களை அழித்தல், களைச் செடி விதைகளை நிலங்களின்மீது தூவிச் செல்லுதல் முதலியவற்றில் ஈடுபடுவார்கள். மக்களை அடித்தல், கைது செய்தல், கேவலப்படுத்துதல், பயிர்களை அழித்தல் முதலிய வன்முறைகளில்அந்த அதிகாரிகள் ஈடுபடுவர். அவர்களைப் பொருத்தவரை இந்தப் பழங்குடி மக்கள் இங்குச் சட்டத்திற்குப் புறம்பாக வாழ்ந்துகொண்டு அரசியல் அமைப்புச் சட்டமுறைகளுக்கு உகாத நடவடிக் கைகளில் ஈடுபடுகிறார்கள். தாங்கள் (கான்துறை அதிகாரிகள்) பொறுப்புடன் சட்டத்தை நிலைநாட்டு கிறார்கள். அவ்வளவுதான். (பழங்குடிப் பெண்களை அந்த அதிகாரிகள் வன்புணர்ச்சியில் ஈடுபடுத்துவது, பிற கடினமான வேலைகளில் பணியாற்றும் அவர்களுக்குக் கிடைத்த சிறப்பூதியம்.)

மேற்கண்ட போராட்டங்களில் மக்கள் பங்கெடுத்ததால் தைரியமடைந்த மாவோவினக் கட்சி கான்துறையை எதிர்க்க முடிவெடுத்தது. அத்துறைக்குச் சொந்தமான நிலங்களைக் கையகப்படுத்தி அங்குப் பயிரிடுமாறு மக்களைத் தூண்டிற்று. இதற்கு மறுமொழியாகக் கான்துறைக் காடுகளில் எழும்பிய புது ஊர்களை எரித்தது. 1986-ல் பிசாப்பூரில் தேசியப் பூங்கா அமைக்கப்

போவதாக அறிவித்தது. அதற்காக அறுபது ஊர்கள் அகற்றப்படும். அவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை ஏற்கெனவே அப்புறப்படுத்தப்பட்டுவிட்டன. கட்சி அப்பகுதியில் நுழையு முன்னரே பூங்கா அமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டிருந்தன. கட்சியானது அந்தக் கட்டடங்களை இடித்தது மட்டுமன்றி எஞ்சிய ஊர்கள் அகற்றப்படுவதையும் தடுத்து நிறுத்திற்று. கான்துறையினர் அப்பகுதியில் நுழைவதைத் தடுத்தது. சில சமயங்களில் கான்துறையினரைச் சிறைப் பிடித்தது. மக்கள் சில அதிகாரிகளை மரங்களுடன் கட்டிவைத்து அடித்தனர். பல தலைமுறைகளாக மக்களுடைய வாழ்வும் வளமும் உறிஞ்சப்பட்டதற்குச் சிறு பழிவாங்கல் நடவடிக்கை. இறுதியில் கான்துறை அங்கிருந்து வெளியேறிற்று. கட்சி 1986 முதல் 2000 வரை 3,00,000 ஏக்கர் காட்டு நிலங்களை மக்களுக்குப் பகிர்ந்தளித்தது. இப்போது தண்ட காரண்யாவில் நிலமற்ற உழவர்கள் இல்லை என்கிறார் தோழர் வேணு.

இன்றைய இளைய தலைமுறையினருக்குக் கான் துறையைப் பற்றி நேரடியாகத் தெரியாது. மிக மோசமான, அடிமைத்தனமும் உழைப்பு உறிஞ்சப்படுவதும் நிறைந்த பழங்காலத்தைப் பற்றித் தாய்மார்கள் குழந்தைகளுக்குச் சொல்லும் கதைகள் மூலம்தான் அவர்கள் அறிவார்கள். மூத்த தலைமுறையினரைப் பொருத்தவரை கான்துறை யிடமிருந்து பெற்ற விடுதலைதான் உண்மையான விடுதலை. அவர்கள் முழுமையாக உய்த்துணரும் விடுதலை. இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து பெற்ற விடுதலையைக் காட்டிலும் இந்த விடுதலை முதன்மையானது. தம்முடன் இணைந்து போராடிய கட்சியின் பின்னால் மக்கள் திரளத் தொடங்கினார்கள்.

முதலில் வந்த ஏழு படைக்குழுவினர் வெகு

தொலைவு முன்னேறிவிட்டனர். அவர்களுடைய ஆதிக்கம் 60,000 சதுர கிலோ மீட்டர் கானகப் பரப்பில் நிலை கொண்டுள்ளது. ஆயிரக்கணக்கான சிற்றூர்கள். பல இலக்கக்கணக்கான மக்கள்.

ஆனால், கான்துறை வெளியேற்றத்தைத் தொடர்ந்து காவல்துறை நுழைந்தது. அதனால் குருதி வடியும் சண்டைகள் தொடங்கின. காவல்துறையின் புனைவான ‘எதிர்ப்படுதல்கள்”, மபோகு-வின் பதுங்கித்தாக்குதல்கள்.

நிலச் சீர்திருத்தத்தைத் தொடர்ந்து பிற பொறுப்பு களும் சிக்கல்களும் எதிர்ப்பட்டன. நீர்ப்பாசனம், வேளாண்மையில் விளைச்சலை உயர்த்துதல், பெருகும் மக்கள்தொகை காட்டைத் தாறுமாறாக அழித்தல்.

மக்களிடையேயான பணியையும் படை அமைக்கும் பணியையும் தனித்தனியாகப் பிரிப்பது என்று முடிவாயிற்று.

இன்று மிக விரிவாக அமைக்கப்பட்டுள்ள மக்கள் அரசுகள் தண்டகாரண்யாவை நிர்வகிக்கின்றன. அவற்றைக் கட்டமைப்பதற்குத் தேவையான அடிப்படைக் கொள் கைகள் சீனப் புரட்சி, வியட்நாம் போர் முதலியவற்றி லிருந்து கிடைத்தன. 500 முதல் 5,000 பேர் வசிக்கும் சிற்றூர்த் தொகுதிகள் சேர்ந்து ஒரு மக்கள் அரசைத் தேர்ந்தெடுக்கின்றன. அதில் ஒன்பது துறைகள் உள்ளன. வேளாண்மை, வணிகம்-ஆலைகள், பொருளாதாரம், நீதி, பாதுகாப்பு, நலம், பொதுமக்கள் தொடர்பு, கல்வியும் கலைகளும், கானகம். சில மக்களரசுகள் சேர்ந்தது ஒரு பகுதிக்குழு. மூன்று பகுதிக்குழுக்களைக் கொண்டது ஒரு பிரிவு. தண்டகாரண்யாவில் மொத்தம் பத்துப் பிரிவுகள் உள்ளன.

“நாங்கள் இப்போது கானகக் காப்புத் துறை ஒன்றை அமைத்துள்ளோம்.” என்கிறார் தோழர் வேணு. “நக்சலியக் கட்டுப்பாட்டில் காடுகளின் பரப்பு அதிகரித்துள்ளது என்று அரசு தெரிவித்திருப்பதைப் பற்றி நீங்கள் படித் திருப்பீர்கள்”

விநோதமாக, கான்துறைக்கெதிராகக் கட்சி நடத்திய பரப்புரையால் முதன்முதலில் பலனடைந்தவர்கள் துவிசுப் படை என்னும் சிற்றூர்த் தலைவர்கள்தான் என்று தோழர் வேணு சொல்கிறார். அவர்கள் தம் கட்டுப்பாட்டில் இருந்த ஆள் வலுவையும் செல்வத்தையும் பயன்படுத்தித் தம்மால் முடிந்த அளவு நிலத்தைக் கையகப்டுத்தி விட்டார்கள். ஆனால் விரைவிலேயே இந்த “உள் முரணைக்” குறித்துக் கட்சியிடம் மக்கள் புகார் கூறத் தொடங்கி விட்டார்கள் என்று தோழர் வேணு ஆர்வத்தைத் தூண்டும் தொனியில் தெரிவித்தார். பழங்குடிக் குமுகத்தில் நிலவும் வர்க்க வேறுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள், அநீதிகள் ஆகியவற்றைக் களைவதை நோக்கிக் கட்சியின் பார்வை திரும்பிற்று. அந்தக் குமுகங்களில் இருந்த பெரு நிலக்கிழார்கள் தம் நிலைக்கு ஊறு நேரப்போவதைக் கண்டுகொண்டனர். கட்சியின் செல்வாக்கு வளர வளரத் தம் செல்வாக்கு அருகுவதைக் கண்டனர். வரவர மக்கள் தம் இன்னல் களைத் தீர்ப்பதற்குக் கட்சியையே அணுகினர், ஊரிலுள்ள பெரிய புள்ளிகளிடம் போவது குறைந்தது. நெடுங்காலமாக வழக்கிலிருந்த உழைப்புச் சுரண்டல்களை மக்கள் எதிர்க்கத் தொடங்கிவிட்டனர். மழை பெய்தால் மக்கள் தம் நிலத்தை உழுவதற்குமுன் ஊர்ப்பெரியபுள்ளிகளுடைய நிலத்தைத்தான் உழுதுதர வேண்டும். இப்போது மக்கள் அப்படிச் செய்வதில்லை. அதேபோல, இப்போதெல்லாம் ஆண்டின் முதல் கான்பொருள் அறுவடைகளையும் மக்கள் பெரிய புள்ளிகளுக்குத் தருவதில்லை. இந்நிலையைப் போக்குவதற்கு ஏதாகிலும் செய்தாகவேண்டும் என்பது வெளிப்படை.

இந்நிலையில்தான் மகேந்திர கர்மா அரங்குக்கு வருகிறார். அப்பகுதியில் மிகப்பெரும் நிலக்கிழார்களில் ஒருவரான அவர் அந்தச் சமயத்தில் இந்தியப் பொது வுடைமைக் கட்சியில் (CPI) உறுப்பினராக இருந்தார். அவர் 1990-ல் ஊர்த் தலைவர்கள், நிலக்கிழார்கள் முதலியோரை ஒன்றுசேர்த்து ‘பெருமக்கள் விழிப்புணர்வுப் பரப்புரை’ என்ற ஒன்றைத் தொடங்கினார். அவர்களுடைய அகராதியில் ‘விழிப்புணர்வு’ என்பதற்குப் பொருள் இதுதான். சுமார் 300 ஆண்களைக் கொண்ட வேட்டைக் குழு ஒன்று காடெங்கும் சென்று மக்களைக் கொல்லுதல், வீடுகளைத் தீக்கிரையாக்குதல், பெண்களைப் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்துதல்.

அப்போது சத்தீசுகட் மாநிலம் உருவாக்கப்பட வில்லை. மத்தியப் பிரதேச அரசு மேற்படி விழிப்புணர்வு இயக்கத்திற்குக் காவல்துறையின் ஆதரவைத் தந்தது. மகாராட்டிர மாநிலத்தில் இதேபோன்றதொரு அமைப்பு ‘மக்கள்நாயக முன்னணி’ என்ற பெயரில் தாக்குதலைத் தொடங்கிற்று. இதை மபோகு தன் உண்மையான மக்கள் போர்முறையில் எதிர்கொண்டது. மிக மோசமான நிலக்கிழார்களில் சிலரைக் கொன்றது.

‘வெண் பயங்கரம்’ என்று தோழர் வேணு குறிப்பிடும் ‘பொது மக்கள் விழிப்புணர்வுப் பரப்புரை’ சில மாதங்களில் முடிவுக்கு வந்தது. மகேந்திர கர்மா பேராயக் கட்சியில் சேர்ந்துவிட்டார். அவர் 1998-ல் ‘பொதுமக்கள் விழிப்புணர்வுப் பரப்புரை’யை மீண்டும் உயிர்ப்பிக்க முயன்றார். முதல் தடவையை விட வெகுவிரைவில் அம்முயற்சி தோல்வியுற்றது.

2005 கோடையில் மகேந்திர கர்மாவுக்கு நல்

வாய்ப்பு கிடைத்தது. சத்தீசுகட்-ஐ ஆண்ட இமக

அரசு ஏப்ரல் மாதம் ஒருங்கிணைந்த எஃகு உருக்

காலைகள் இரண்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது (அந்த ஒப்பந்தங்களின் விவரங்கள் இன்றுவரை வெளியிடப்படாமல் கமுக்கமாகவே வைக்கப் பட்டுள்ளன): பைலடிலா-வில் எசார் எஃகு நிறுவனத்துடன் 7,000 கோடி உருவாக்களுக்கு ஒரு ஒப்பந்தம். லோகான்டி குடா-வில் டாட்டா எஃகு நிறுவனத்துடன் 10,000 கோடி உருவாக்களுக்கு ஒரு ஒப்பந்தம்.

அந்த மாதத்திலேயே இந்தியாவுக்கெதிரான “மோச மான உள்நாட்டு அச்சுறுத்தல்” என்று மாவோவினர்களை வர்ணித்தார் இந்தியத் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங். அது பரவலாகப் பேசப்பட்ட கூற்றாகிவிட்டது. (அந்தச் சமயத்தில் இவ்வர்ணனை பொருத்தமற்றதாகவே இருந்தது. ஏனெனில், நிலைமை அப்போது நேரெதிரான தாக இருந்தது. ஆந்திர அரசு மாவோவினர்களைத் தோற் கடித்து ஒழித்திருந்தது. மாவோவினர் தம் படையினர் சுமார் 1,600 பேரை இழந்து நிலைகுலைந்து கிடந்தனர்.)

தலைமை அமைச்சரின் அந்தக் கூற்று சுரங்க நிறுவனப் பங்குகளின் மதிப்பை வானளாவ உயர்த்திற்று. மேலும், யார் வேண்டுமானாலும் மாவோவினரைத் தாக்கலாம் என்ற தைரியத்தை ஊடகங்கள் பெற்றன.

சூன் 2005-ல் மகேந்திர கர்மா ஊர்ப் பெரும் புள்ளிகளை குட்ரூ என்னும் சிற்றூரில் திரட்டி சல்வா சூடும் (தூய்மையாக்கும் வேட்டை) படையை அறிவித்தார். பழங்குடிகளின் எதார்த்த இயல்பும் துவிசுகளின் நாட்சி மனப்பாங்கும் இணைந்த அழகிய கலவை.

‘பொதுமக்கள் விழிப்புணர்வுப் பரப்புரை’ யைப் போலன்றி, காட்டுப்பகுதியிலுள்ள மக்களை அவர் களுடைய ஊர்களிலிருந்து வெளியேற்றிச் சாலையோரக் கூடாரங்களில் தங்கவைப்பதுதான் சல்வா சூடும்-இன் நோக்கம். அந்தக் கூடாரங்களைக் காவல்துறை கண் காணிப்பதும் அம்மக்களை அடக்குவதும் எளிது. இராணுவ மொழியில் இதனைச் ‘செயலுத்தியாகச் சிற்றூர்ப்படுத்துதல்’ என்பர். (மலேசிய நாட்டு) மலாயாப் பகுதியில் 1950-ல் ஆங்கிலேயர்கள் பொதுவுடைமையர் களை எதிர்த்துப் போரிட்டுக்கொண்டிருந்த போது சர் கேரல்ட் ப்ரிச்சு என்பவர் இந்த உத்தியை உருவாக்கினார். இந்த ப்ரிச்சுத் திட்டம் இந்திய இராணுவத்திற்கு மிகவும் பிடித்துவிட்டது. அவர்கள் இதை நாகாலாந்து, மிசோரம், தெலங்கானா பகுதிகளில் பயன்படுத்தியுள்ளனர்.

சத்தீசுகட் அரசைப் பொருத்தவரை கூடாரங்களுக்கு இடம் பெயராத சிற்றூர்வாசிகள் மாவோவினர் என்று தான் (அரசால்) கருதப்படுவார்கள் என்று அம்மாநிலத்தின் இமக முதல்வர் ரமன் சிங் அறிவித்துவிட்டார். ஆகையால், பசுத்தாரில் அப்பாவி சிற்றூர்வாசி ஒருவர் தன் வீட்டில் இருந்தாலே அது ஆபத்தான பயங்கரவாதச் செயலில் ஈடுபடுவதற்குச் சமம்.

எனக்குத் தனிவிருந்தாக எஃகுக் குப்பியில் பாலில்லாத தேநீர் தந்தனர். அத்துடன் இசை கேட்பதற்குப் பயன்படும் காதுக் கருவியையும் தந்து அத்துடன் இணைந்த MP3 கருவியை இயக்கினார்கள். பிசாப்பூர் காவல்கண் காணிப்பாளர் பேசியது அக்கருவியில் பதிவு செய்யப் பட்டிருந்தது. ‘விழிப்புணர்வு பெற்ற’ ஊர்களுக்கும் அவற்றில் வசிக்கும் மக்களில் யார் காவல்துறைக் கூடாரங் களுக்கு இடம்பெயர்கிறார்களோ அவர்களுக்கும் மாநில, நடுவண் அரசுகள் அறிவித்திருக்கும் சன்மானங்களையும் தூண்டுதல்களையும் குறித்த விவரங்களை அந்தக் கண்காணிப்பாளர் தனக்குக் கீழ்ப் பணியாற்றும் அதிகாரி ஒருவருக்கு கம்பியில்லாத் தொலைபேசி மூலம் சுருக்கமாகச் சொன்னார். அடுத்ததாக அவர், அதுபோலச் சரணடைய மறுக்கும் ஊர்கள் தீக்கிரையாக்கப்பட வேண்டும் என்றும் நக்சலியர்களுடன் சென்று நிகழ்வுகளை ஆவணப் படுத்தும் ஊடகவியலாளர்களைக் கண்டவுடன் சுட வேண்டும் என்றும் அந்த அதிகாரிக்குத் தெளிவாக ஆணையிட்டார். (இது குறித்து வெகு காலம் முன்பே நான் செய்தித் தாள்களில் படித்தேன். (கமுக்கமாக இருந்திருக்க வேண்டிய) அந்த ஆணை வெளிப்படையாகத் தெரிந்து விட்டதனால் அவர் பணி மாற்றப்பட்டார். யாருக்குத் தண்டனை தருவதற்காக அவர் பணிமாற்றம் செய்யப் பட்டார் என்று தெரியவில்லை. அவர் மாநில மனித உரிமை ஆணையத்திற்கு மாற்றப்பட்டார்.)

சல்வா சூடும் எரித்த முதல் ஊர் அம்பேலி (சூன்

18, 2005 அன்று). 2005 சூன்-திசம்பர் காலத்தில்

தென் தாந்தெவாடாப் பகுதியில் அது நூற்றுக்கணக்கான ஊர்களில் தீயிட்டு அழித்தல், கொல்லுதல், வன்புணர்ச்சியில் ஈடுபடுதல், கொள்ளையடித்தல் முதலிய கொடுஞ் செயல்களைச் செய்தது. அது இக்கொடுமைகளைச் செய்த இடங்களில் முதன்மையானவை பிசாப்பூர், பாய்ராம்கார் ஆகியன. அவை பைலடிலா அருகிலுள்ளன. அங்குதான் எசார் எஃகு நிறுவனத்தின் புது ஆலை அமைக்கப் படவிருந்தது. அவ்வூர்களில் மாவோவினர்களுக்கு நிறைய ஆதரவு இருந்தது என்பது தற்செயலானதல்ல. அங்கு மக்களரசுகள் நிறைய பொதுப்பணிகளை வெற்றிகரமாக நடத்தியிருந்தன. குறிப்பாக, மழைநீர் சேமிப்புக்குத் தேவையான ஏற்பாடுகளை நன்கு செய்திருந்தன. சல்வா சூடும் தன் தாக்குதல்களின்போது மக்களரசுகளைக் குறிவைத்தது. நூற்றுக்கணக்கான மக்கள் மிகக் கொடூர மான முறையில் கொல்லப்பட்டனர். சுமார் 60,000 பேர் கூடாரங்களுக்கு இடம்பெயர்ந்தனர். சிலர் தாமாக. பிறர் அச்சத்தினால். அவர்களில் சுமார் 3,000 பேர் உருவா 1,500 சம்பளத்தில் சிறப்புக் காவல் அதிகாரிகளாகப் பணி யமர்த்தப்பட்டனர்.

இந்தச் சிறு கூலிக்காக நிலேசுடைய தம்பியைப் போன்ற இளைஞர்கள் முட்கம்பி வேலிகளுக்குப் பின் வாழ்நாள் கைதிகளைப் போலத் தாமாகவே அடைபட்டுக் கொண்டுள்ளனர். அவர்களும் கொடுஞ்செயல்களைச் செய்துள்ளனர். ஆனால் இறுதியில் அவர்களே இந்த மோசமான போரினால் பாதிக்கப்படவும்கூடும். சல்வா சூடுமைக் கலைத்துவிட வேண்டும் என்ற உச்சநீதி மன்ற ஆணை எதுவும் அவர்களுடைய தலைவிதியை மாற்றப் போவதில்லை.

மேற்கண்ட மனிதர்களைத் தவிரப் பல இலக்கம் பழங்குடி மக்கள் அரசாங்கத்தின் பார்வையிலிருந்து வெளியே போய்விட்டார்கள். (ஆனால், இந்த 644 ஊர்களுக்கென ஒதுக்கப்பட்ட வளர்ச்சி நிதி அப்படிக் காணாமல் போய்விடவில்லை. சிறிய தங்கச் சுரங்கத்திற்கு ஒப்பான அந்நிதி என்னவாயிற்று?) அம்மக்களில் பலர் ஆந்திரா, ஒரிசா மாநிலங்களில் ஒப்பந்தக் கூலிகளாக மிளகாய் பறிக்கும் வேலைக்குச் சென்றார்கள். ஆனால் பல்லாயிரக் கணக்கானோர் காடுகளுக்குள் ஓடிச் சென்று இன்னும் அங்கேயே உள்ளனர். அங்கு அவர்கள் தங்கு வதற்குக் கூட இடமில்லை. பகலில் தம் விளைநிலங் களுக்கும் வீடுகளுக்கும் வந்துசெல்வார்கள்.

சல்வா சூடும் மக்களுடன் நடத்திய கொடூரமான போரினால் அங்கு நிலவிய வெற்றிடத்தைப் பயன்படுத்திக் கொண்டு பல காவல் நிலையங்களும் கூடாரங்களும் ஈசல் புற்றுகளைப் போல முளைத்தன. மாவோவினர் கட்டுப் பாட்டில் உள்ள பகுதியைக் கொஞ்சங்கொஞ்சமாக மீட்கும் நடவடிக்கைக்கு முழுப் பாதுகாப்பு அளிப்பது இந்தப் புற்றுக்களின் நோக்கம். இப்பகுதி மக்களுடன் மாவோவினர் 25 ஆண்டுகளாக வாழ்ந்து பணியாற்றி அவர்களின் நம்பிக்கையைச் சம்பாதித்துள்ளார்கள். இப்போது அரசின் மேற்படிப் பாதுகாப்பு ஏற்பாடுகளை முறியடிக்காதிருப்பது அம்மக்களை நட்டாற்றில் பரிதவிக்கவிட்டுவிடுவதற்குச் சமமானது என்பதை மாவோவினர் உணர்ந்தனர். ஆகையால் அவர்கள் அரசு நிறுவிவரும் பாதுகாப்புக் கட்டமைப்பின்மீது தொடர் தாக்குதல்களை நடத்தினர்.

2006 சனவரி 26 அன்று மவிகெப கங்காலௌர் காவல் நிலையத்தைத் தாக்கி ஏழு பேரைக் கொன்றார்கள். சூலை 17 அன்று எராபோரிலுள்ள சல்வா சூடும் கூடாரம் தாக்கப் பட்டதில் 20 பேர் இறந்தனர், 150 பேர் காயமுற்றனர். (இதைப்பற்றி நீங்கள் படித்திருக்கக்கூடும்: “நக்சலியர் களுடைய வன்முறைக்கு அஞ்சித் தம் ஊர்களில் இருந்து தப்பியோடி வந்தவர்களுக்கு அடைக்கலம் தரும் பொருட்டு மாநில அரசு அமைத்திருந்த கூடாரங்களை மாவோவினர் தாக்கினர்.”)

திசம்பர் 13 அன்று மாவோவினர் பாசகுடா “மீட்பு” கூடாரத்தைத் தாக்கினர். மூன்று சிறப்புக் காவல் அதிகாரிகளும் ஒரு காவலரும் கொல்லப்பட்டனர். 2007 மார்ச் 15 அன்று மாவோவினர் தம் தீரமிக்க தாக்குதலைத் தொடுத்தனர். இராணி போடிலி கன்யா ஆசிரமம் என்னும் மகளிர் விடுதியை நூற்று இருபது கெரில்லாக்கள் தாக்கினர். அந்த விடுதி அப்போது சத்தீசுகட் மாநிலக் காவல் துறையின் ஆக்கிரமிப்பில் இருந்தது. 80 காவலர்களும் சிறப்புக் காவல் அதிகாரிகளும் அங்குத் தங்கியிருந்தனர். அவர்களுக்குப் பாதுகாப்புத் தருவதற்காக அவ்விடுதியில் இருந்த இளம்பெண்கள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்பட்டனர். அந்த விடுதி வளாகத்தில் நுழைந்த மவிகெப-வினர் பெண்கள் தங்கியிருந்த பகுதியைத் தனியே பிரித்து வியூகம் அமைத்தனர். பின்னர் காவலர்கள் தங்கியிருந்த அரணைத் தாக்கினர். ஏறக்குறைய 55 காவலர் களும் சிறப்புக் காவல் அதிகாரிகளும் கொல்லப்பட்டனர். ஒரு இளம்பெண்கூடப் பாதிக்கப்படவில்லை. (நாம் முதலில் சொன்ன உண்மைவிளம்பிக் கண்காணிப்பாளர் தன் கணினியில் ஒரு கோப்பினை எனக்குக் காட்டி யிருந்தார். அதில் மிகக் கோரமான ஒளிப்படங்கள் இருந்தன. சிதைந்த பள்ளிக் கட்டட இடிபாடுகளிடையில் எரியூட்டப்பட்ட, குடல் பிதுங்கிய காவலர்களின் உடலங்கள் கிடந்தன. அந்தக் கோரக் காட்சியிலிருந்து பார்வையைத் திருப்பிக்கொள்வது கடினமாக இல்லை. அவ்வளவு மோசமான காட்சி அது. என் முகக் குறிப்பு அவருக்கு மகிழ்ச்சி யளித்ததுபோல் தெரிந்தது.)

பள்ளிக் கட்டடத் தாக்குதல் நாட்டில் பரவலாக ஆரவாரத்தை உண்டாக்கியது. வன்முறையைப் பயன் படுத்தியதோடன்றி பள்ளியைத் தாக்கியதன்மூலம் கல்விக்கு எதிராகவும் மாவோவினர் இருந்ததாக மனித உரிமை அமைப்புகள் மாவோவினரை வலுவாகச் சாடினர். ஆனால், தண்டகாரண்யாவில் அந்தத் தாக்குதல் புகழ்பெற்ற கதையாகிவிட்டது. அதைப் பற்றிப் பாடல்கள், கவிதைகள், நாடகங்கள் முதலியன எழுதப்பட்டன.

இந்த எதிர்த் தாக்குதல்களின் காரணமாகக் காவல் துறை தன் முழுப் பாதுகாப்புத் திட்டத்தைக் கைவிட்டது. இதனால் மக்களுக்குச் சற்று நிம்மதி கிடைத்தது. காவல் துறையும் சல்வா சூடுமும் தம் கூடாரங்களுக்குப் பின் வாங்கினர். அவற்றிலிருந்து அவ்வப்போது- வழக்கமாகப் பின்னிரவு நேரத்தில் - 300 முதல் 1,000 பேர் வரை உள்ள குழுக்களாக மட்டும் அவர்கள் வெளியே வந்து ஊர்ப் புறங்களில் ஆங்காங்குத் தடைகளை நிறுவித் தேடுதல் வேட்டையில் ஈடுபடுவார்கள்.

காலப்போக்கில் சிறப்புக் காவல் அதிகாரிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் தவிர்த்து ஏனையோர் சல்வா சூடும் கூடாரங்களில் இருந்து தம் ஊர்களுக்குத் திரும்பத் தொடங்கினர். அவர்களை மாவோவினர் வரவேற்றனர். ஒருவர் சிறப்புக் காவல் அதிகாரியாகவே இருந்திருப்பினும் அவர் உண்மையாகவும் பொதுமக்கள் முன்னிலையிலும் தம் கொடுஞ்செயல்களுக்கு மனம் வருந்தி மன்னிப்புகேட்பாரேயானால் அவரும்

திரும்பலாம் என்று அறிவித்தனர். பெரும் எண்ணிக் கையில் இளைஞர்கள் கெரில்லாப் படைக்குத் திரும்பினர். (அந்தப் படை முறைப்படி 2000 திசம்பரில் அமைக்கப் பட்டது. கடந்த 30 ஆண்டுகளில் அதன் சிறு குழுக்கள் பிரிவுகளாகவும், பிரிவுகள் பெரும்பிரிவுகளாகவும், பெரும்பிரிவுகள் கும்பனிகளாகவும் வளர்ந்தன. ஆனால், சல்வா சூடும் செய்த அநீதிகளுக்குப் பின் கெரில்லாப் படை ஒரு பட்டாலியன் அளவுக்கு வளர்ந்தது.)

சல்வா சூடும் தோற்றது மட்டுமின்றி அதைத் தோற்று விக்காமலே இருந்திருக்கலாம் என்று எண்ணுமளவு பின்னடைவு ஏற்பட்டது.

சல்வா சூடும் என்பது ஒரு பகுதியில் உள்ளூர் குண்டர்கள் இணைந்து உருவாக்கிய அமைப்பு என்று எளிமைப்படுத்திவிட முடியாது என்பதை இப்போது நாம் அறிவோம். ஊடகங்கள் வேண்டுமென்றே மக்களைக் குழப்புகின்றன. சல்வா சூடும் என்பது சத்தீசுகட் மாநில அரசும் நடுவணரசில் இருந்த பேராயக் கட்சியும் இணைந்து நடத்திய படை என்பதுதான் உண்மை. (எனவே) அது தோற்பதற்கு விடக்கூடாது. திருமணம் செய்து கொள் வதற்கு வரன் தேடிக் காத்திருப்பதைப்போல எத்தனையோ புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் காத்துக்கொண்டிருக்கையில் அப்படை தோற்கக்கூடாது. புதுத் திட்டம் ஒன்றை வகுத்துச் செயல்பட வேண்டிய பெரும் அழுத்தத்தில் அரசு இருந்தது. பசுமை வேட்டை முனைப்பு என்ற வழியை அவர்கள் கண்டுபிடித்தார்கள். சல்வா சூடும் சிறப்புக் காவல் அதிகாரிகள் இப்போது கோயாகமேன்டோக்களாகப் பெயர் மாற்றம் அடைந்தனர்.

அரசு கீழ்க்கண்ட படைகளை அப்பகுதிகளில் நிறுவியுள்ளது: சத்தீசுகட் கலமேந்திய படை, நடுவண் ஒதுக்கப்பட்ட படை, எல்லைப் பாதுகாப்புப் படை, இந்தோ-திபேத் எல்லைக் காவலர்கள், நடுவண் ஆலைப் பாதுகாப்புப் படை, வேட்டை நாய்கள், தேள்கள், நாகப்பாம்புகள் என்ற விலங்குப் பெயர்களைத் தாங்கிய படைகள்.

மேலும், (மக்களின்) ‘மனங்களையும் இதயங் களையும் வெல்லுதல்’ என்ற அன்பொழுகும் பெயருள்ள திட்டத்தையும் அரசு அறிவித்துள்ளது.

முக்கியமான போர்கள் அவ்வப்போது நாம் எதிர்பாராத இடங்களில் நடப்பதுண்டு. தடையில்லா வணிகத்தைப் பரப்பும் முதலாளியம் ஆப்கானிசுத்தான் நாட்டின் கடினமான மலைகளில் சோவியத் பொது வுடைமையைத் தோற்கடித்தது. இங்கு, தாந்தெவாடாக் காடுகளில் இந்தியாவின் ஆன்மாவுக்கான சண்டை நடக்கிறது. இந்திய மக்கள் நாயகம் சந்தித்துவரும் சிக்கல்களைப் பற்றியும் பெருந்தொழில் நிறுவனங்கள், முதன்மையான அரசியல் கட்சிகள், நாட்டின் பாதுகாப்புக் குறித்துப் பேசி, எழுதி, இன்னபிறவழிகளில் பலனடையும் குழுவினர் ஆகியோரின் கூட்டுச் சுரண்டலைப் பற்றியும் நிறைய பேசப்பட்டுவிட்டது. நடப்பு எப்படி உள்ளது என்று நேருக்கு நேர் பார்ப்பதற்கு யாராவது விரும்பினால் அவர் தாந்தெவாடா செல்லலாம்.

டாட்டா எஃகு. எசார் எஃகு ஆகிய நிறுவனங்கள் தான் முதன்முதலில் சல்வா சூடும் படைக்குப் பண உதவி செய்தன என்று அரசுக்கும் உழவர்களுக்கும் இடையே யுள்ள உறவு மற்றும் செய்து முடிக்கப்படாத நிலச் சீர்திருத்தம் ஆகியவற்றைப் பற்றிய அறிக்கையின் முன்வரைவு (தொகுதி 1) கூறுகிறது. அதை வரைந்தவர்கள் அரசுத் துறையினர் என்பதால் முதலில் அது குறித்த செய்திகள் வந்தபோது சலசலப்பு ஏற்பட்டது. (அந்த விவரங்கள் அவ்வறிக்கையின் இறுதி வரைவில் இடம் பெறவில்லை. இது தற்செயலான தவறா அல்லது அக்குழுவில் இருந்தவர்களில் யாராவது மென்மையான எஃகினால் தோளில் தட்டப்பட்டார்களா?)

டாட்டா எஃகு நிறுவனம் சட்டப்படி நடத்த வேண்டிய ‘மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம்’ உள்ளூர் மக்கள் கலந்துகொள்வதற்கு ஏதுவாக லோகான்டிகுடாவில் நடந்திருக்கவேண்டும். ஆனால், பல மைல்கள் தாண்டி சக்தால்பூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறு அறை ஒன்றில் அந்தக் கூட்டம் நடைபெற்றது. யாரும் எளிதில் அக்கூட்டத்துக்கருகில் கூடச் சென்றுவிட முடியாவண்ணம் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஐம்பது பழங்குடி மக்களைப் பொறுக்கியெடுத்து அரசு சீப்களில் மிகுந்த பாதுகாப்புடன் அந்தக் கூட்டத்திற்குக் கொண்டுவரப்பட்டனர். கூட்டம் முடிந்தபின் ஆட்சியர் ‘லோகான்டிகுடா மக்களை’ அவர்கள் தந்த ஒத்துழைப்பிற்காக வாழ்த்தினார். உள்ளூர் செய்தித்தாள்கள் இந்தச் செய்தியை வெளியிட்டன. அவர்களுக்கு உண்மை தெரியும். இருப்பினும் அரசுத் தரப்பு சொன்னதையே செய்தியாக வெளியிட்டனர். (அவற்றுக்கு விளம்பரங்கள் நிறைய கிடைத்தன.) ஊர் மக்களுடைய எதிர்ப்பை மீறி ஆலைத் திட்டத்திற்கு நிலத்தைக் கையகப்படுத்தும் பணி தொடங்கிற்று.

இந்திய அரசை வீழ்த்த விரும்புவோரில் மாவோவினர் மட்டுமல்லாது பிறரும் உள்ளனர். இந்து மத வெறியும் பொருளாதாரச் சர்வாதிகாரமும் இந்திய அரசை ஏற்கெனவே பலமுறை வீழ்த்தியுள்ளன.

தாந்தெவாடாவிலிருந்து ஐந்து மணிப் பயணத் தொலைவில் உள்ள லோகான்டிகுடா நக்சலியப் பகுதியாக எப்போதும் இருந்ததில்லை. ஆனால் இப்போது அது மாறிவிட்டது. நான் எறும்புச் சட்னியை உண்டபோது தோழர் சூரி என்னருகில் அமர்ந்திருந்தார். அவர் லோ கான்டிகுடாவில் பணியாற்றுகிறார். ஊரிலுள்ள வீட்டுச் சுவர்களில் “நக்சலியர்களே வந்து எங்களைக் காக்கவும்” என்னும் வாசகங்கள் கிறுக்கப்பட்டதைக் கண்டபின் இவர்கள் (நக்சலியர்கள்) அப்பகுதிக்குச் செல்ல முடிவெடுத்ததாக சூரி சொன்னார். சில மாதங்களுக்கு முன்னர் ஊர்த் தலைவர் விமல் மெசுராம் சந்தையில் இருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் “டாட்டாவின் ஆள்” என்கிறார் சூரி.

“தம் நிலங்களை டாட்டா ஆலைக்குத் தந்துவிட்டு ஆலைநிர்வாகம் தரும் இழப்புத் தொகையை ஏற்றுக் கொள்ளுமாறு அவர் மக்களை வற்புறுத்திவந்தார். அவரை முடித்தது நல்லதுதான். எம் தோழர் ஒருவரையும் இழந்தோம். அவர்கள் தோழரைச் சுட்டு விட்டார்கள்.”

“உங்களுக்கு இன்னும் கொஞ்சம் எறும்புச் சட்னி வேண்டுமா?”

அவருக்கு அகவை இருபதுதான் ஆகிறது.

“டாட்டா நிறுவனம் அங்கு வருவதற்கு நாங்கள் விடமாட்டோம். அது வருவதை மக்கள் விரும்பவில்லை.”

சூரி கெரில்லா அல்லர். அவர் கட்சியின் கலைக் குழுவில் (சேட்னா நாட்ய மன்ச்-சேநாம) உள்ளார். அவர் பாடுவார். பாவலருங் கூட.. அபூசுமாட் அவரது சொந்த ஊர். (தோழர் மாதவ் சூரியுடைய கணவர். சூரியுடைய ஊருக்கு சேநாம வந்தபோது மாதவ்வும் அதில் இருந்தார். அவருடைய பாடுந்திறனால் சூரி கவரப்பட்டார்.)

இந்த இடத்தில் ஒன்று சொல்லியாகவேண்டும் போல் தோன்றுகிறது. வன்முறையின் பயனின்மை, வழக்காட வாய்ப்பளிக்காமல் தூக்கிலிடுவது முதலிய வற்றைப்பற்றி. ஆனால் அவர்கள் வேறு என்னதான் செய்யவேண்டும் என்று சொல்வது? நீதி மன்றங்களை அணுகுமாறு சொல்வதா? டெல்லி சந்தர் மந்தர் முன்பு அமர்ந்து போராடச்சொல்வதா? ஊர்வலம் போகச் சொல்வதா? தொடர் உண்ணாவிரதம்? இது முட்டாள் தனமாகத் தெரிகிறது. புதுப் பொருளாதாரக் கொள் கையைப் புகுத்துபவர்கள் அதை விட்டால் வேறு வழியில்லை என்று எளிதாகச் சொல்லிவிடுகின்றனர். புது வகைகளில் எதிர்ப்புத் தெரிவிப்பது எப்படி என்றும் அவர்களைத்தான் ஆலோசனை கேட்கவேண்டும். இந்தக் காட்டில் வாழும் இந்தக் குறிப்பிட்ட மக்கள் பின்பற்றக் கூடிய வழியாக அது இருக்கவேண்டும். இங்கே. இப்போதே. எந்தக் கட்சிக்கு இவர்கள் வாக்களிக்க வேண்டும்? இந்நாட்டில் எந்த மக்கள் நாயக அமைப்பை இவர்கள் அணுகவேண்டும்? நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்படும் பெரிய அணைகளை நர்மதா போராட்ட இயக்கம் பலப்பல ஆண்டுகள் எதிர்த்தது. அப்போது அவ்வியக்கம் (நீதிக் கேட்டுத்)தட்டிப்பார்க்காத கதவுகளே இல்லை.

இருட்டிவிட்டது. கூடாரத்தில் வேலைகள் மும் முரமாக நடந்துகொண்டுள்ளன. ஆனால் நான் எதையுமே பார்க்கமுடியவில்லை. ஒளிப் புள்ளிகள் அங்குமிங்கும் செல்வது மட்டும் தெரிகிறது. அவை விண்மீன்களா, மின்மினிப் பூச்சிகளா, அல்லது நடந்துகொண்டிருக்கும் மாவோவினரா என்று சொல்வது கடினம். எங்கிருந்தோ மங்டு குட்டி திடீரென வந்து நின்றார். ‘இளம் பொது வுடைமையர் நடமாடும் பள்ளி’ என்ற அமைப்பு எழுதப் படிக்கக் கற்றுத் தருதல், பொதுவுடைமைக் கொள்கை களின் அடிப்படைகளைக் கற்பித்தல் முதலிய பணிகளைச் செய்துவருகிறது. அப்பள்ளி தொடங்கப்பட்டவுடன் அதில் பயின்றவர்களில் மங்டு-வும் ஒருவர்.

இது “இளம் மனங்களை மனமாற்றம் செய்யும் முயற்சி!” என்று பெருநிறுவனமயமான நம் ஊடகங்கள் ஊளையிடுகின்றன. மழலையர் எண்ணத் தொடங்குவதற்கு முன்பிருந்தே அவர்களுடைய மூளையைச் சலவை செய்யும் தொலைக்காட்சி விளம்பரங்கள் மனமாற்றம் செய்வதாக அறியப்படுவதில்லை.

இந்த இளம் பொதுவுடைமையர்கள் துப்பாக்கி எடுக்கவோ சீருடை அணியவோ அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், இசைக் குழுவை மொய்த்துப் பின்தொடரும் இரசிகர்களைப் போல இந்த இளைஞர்கள் தம் கண்களில் கனவுகளைச் சுமந்து கெரில்லாக்களைப் பின் தொடர் கின்றனர்.

மென்மையான உரிமையுடன் மங்டு என்னைத் தத்து எடுத்துக் கொண்டாற்போலத் தெரிகிறது. என் தண்ணீர்க் குடுவையை நிரப்பி வைத்துவிட்டார். என் உடைமை களைப் பையில் அடைக்குமாறு சொல்கிறார். சீழ்க்கை ஒலி எழும்புகிறது. ஐந்தே நிமையங்களில் நீலவண்ணப் பாயைக் கீழே எடுத்து மடிக்கின்றனர். மற்றொரு சீழ்க்கையொலி. அங்கிருந்த நூற்றுக்கணக்கான தோழர் களும் வரிசையாக அணிவகுத்துவிட்டனர். ஐந்து வரிசைகள். நடவடிக்கை இயக்குநர் (னசைநஉவடிச டிக டியீநசயவiடிளே) தோழர் ராசு. வருகைப் பதிவு நடக்கிறது. நானும் வரிசையில் நின்றுள்ளேன். எனக்கு முன்னால் தோழர் கம்லா. என் முறை வரும்போது அவர் எனக்குத் தெரிவிக்க நான் என் வரிசை எண்ணைச் சத்தமாகச் சொல்கிறேன். (இருபது வரை எண்ணிவிட்டுப் பின் மீண்டும் ஒன்றிலிருந்து தொடங்குகிறோம். ஏனெனில் பெரும்பாலான கோன்டு களுக்கு இருபது வரைதான் எண்ணத்தெரியும். அதுவே அவர்களுக்குப் போதுமானது. எனக்கும்கூட அதுவே போதுமானதாக இருக்குமோ என்னவோ.) சந்து படைவீரர் உடையணிந்துள்ளார். பளுக்குறைந்த இயந்திரத் துப்பாக்கியை வைத்துள்ளார். மட்டான ஒலியில் தோழர் ராசு அனைவருக்கும் தகவல் தருகிறார். அவர் கோன்டி மொழியில் பேசியது எனக்கு எதுவும் புரியவில்லை. ஆனால், சுஏ என்று அவர் அடிக்கடி சொல்வது தெரிகிறது. சந்திக்கும் குறியிடங்களைப் (சநனேநணஎடிரள) பற்றிச் சொல்லிக் கொண்டிருந்ததாகப் பின்னர் அவர் என்னிடம் சொன்னார். அது இப்போது கோன்டி மொழியிலும் இடம்பெற்று விட்டது! “நாங்கள் ஒருவேளை தாக்குதலுக்கு உள்ளாகிக் கலைந்தோட நேரிட்டால் பிறகு எங்குக் கூட வேண்டும் என்று காட்டுவதற்காகக் குறியிடங்களை முன்னரே முடிவு செய்து கொள்வோம்.”

இது என்னை எந்த அளவுக்கு அச்சத்துக்குள்ளாக்கு கிறது என்பது அவருக்குத் தெரிய வாய்ப்பில்லை. நான் சுடப்படக்கூடும் என்பதைக் குறித்து அஞ்சவில்லை. ஆனால், தொலைந்து போய்விட்டால் என்ன செய்வது என்றுதான் அஞ்சுகிறேன். நான் எளிதில் வழியை மறந்து தொலைந்துவிடுவேன். வீட்டில் படுக்கையறையிலிருந்து குளியல் அறைக்குச் செல்வதற்குள்ளாகவேகூடத் தொலைந்து போகக் கூடியவள். 60,000 சதுர கிலோமீட்டர் பரப்பள வுள்ள காட்டில் நான் என்ன செய்வேன்? என்னவானாலும் சரி, நான் தோழர் ராசுவுடைய துண்டை விடாமல் பிடித்துக் கொள்ளப்போகிறேன்.

நாங்கள் நடக்கத்தொடங்குமுன் தோழர் வேணு என்னிடம் வருகிறார்: “சரி தோழர். நான் உங்களிடமிருந்து விடைபெற்றுக் கொள்கிறேன்.” எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவரைச் சுற்றி அவருடைய பாதுகாவலர்கள் மூன்று பெண்களும் மூன்று ஆண்களும் உள்ளனர். உரோமத் தொப்பியும் செருப்புகளும் அணிந்த அவர் ஒரு சிறு கொசுவைப் போன்று தோற்றமளித்தார். நிறைய படைக்கலங்களை அணிந்துள்ளார். “இவ்வளவு தொலைவு வந்ததற்கு நாங்கள் உங்களுக்கு மிகவும் நன்றி செலுத்துகிறோம்”என்கிறார். மீண்டும் ஒருமுறை கை குலுக்கல், பிறகு உயர்த்திய கை முட்டி, “செவ்வணக்கம், தோழரே.” (அந்தத்) திறவுகோல் காப்பாளர் காட்டினுள் மறைகிறார். ஒரு கணத்திலேயே அப்படி ஒருவர் இங்கு இருக்கவே இல்லை என்பதுபோலத் தோன்றிற்று. அவருடைய இழப்பை உணர்கிறேன். ஆனால், பல மணி நேரப் பதிவு நாடாக்களைக் கேட்கும் வேலை எனக்குக் காத்துள்ளது. நாட்கள் வாரங்களாக ஓடின. தோழர் வேணு என் மனதில் வரைந்த எளிய படத்திற்கு மேற்கொண்டு விவரங்களையும் வண்ணங்களையும் சேர்த்து அப் படத்தை முழுமையாக்கிய பலரை நான் அந்த வாரங்களில் சந்தித்தேன். நாங்கள் எதிர்த்திசையில் நடக்கத் தொடங்கு கிறோம். தோழர் ராசு வெகுதொலைவில் இருக்கின்றார். இருப்பினும் அவர்பூசிக்கொண்டுள்ள ஐயோடெக்சின் மணம் தெரிகிறது. “என் முழங்கால்கள் செயலிழந்து விட்டன. நிறைய வலிக்குறைப்பு மருந்துகளைப் பயன் படுத்தினால்தான் என்னால் நடக்க முடியும்” புன்முறு வலுடன் ராசு சொல்கிறார்.

தோழர் ராசு தூய இந்தி பேசுகிறார். மிகுந்த சிரிப்பை வரவழைக்கும் நகைச்சுவைக் கதைகளைக் கூட உணர்ச்சி யற்ற முகத்தோற்றத்துடன் சொல்லும் பழக்கமுள்ளவர். ராய்ப்பூரில் 18 ஆண்டுகள் வழக்குரைஞராகப் பணி யாற்றினார். அவரும் அவருடைய மனைவி மால்தியும் கட்சி உறுப்பினர்களாகவும், நகரில் செயல்பட்ட அக்கட்சி வலையத்தில் பங்காற்றிக்கொண்டும் இருந்தனர். 2007-ஆம் ஆண்டின் இறுதியில் அந்த வலையத்தின் முக்கியமானவர் களில் ஒருவர் கைது செய்யப்பட்டுச் சித்திரவதைக் குள்ளானார். இறுதியில் அவர் வலையத்தின் மற்ற உறுப்பினர்களைப் பற்றிய விவரங்களைக் காவல்துறைக்குச் சொல்லிவிட்டார். மூடிய ஊர்தியில் நகரம் முழுவதும் அவரை அழைத்துச் சென்ற காவல்துறையினர் அவருடைய முன்னாள் தோழர்களை அடையாளம் காட்டுமாறு அவரை அழுத்தினர். அப்போது அடையாளம் காட்டப் பட்டவர்களில் தோழர் மால்தியும் ஒருவர். 2008 சனவரி 22 அன்று அவரும் வேறு பலரும் கைது செய்யப்பட்டனர்.

சல்வா சூடும் இழைத்த கொடுமைகளைப் பதிவு செய்த குறுந்தகடுகளைப் பல நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கு அஞ்சலில் அனுப்பியதாக அவர்மீது குற்றஞ் சாட்டப்பட்டது. அவர்மீதான வழக்கு அரிதாகவே வாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஏனெனில், தம் வாதத்தில் வலுவே இல்லை என்பது காவல்துறைக்கு நன்கு தெரியும். ஆனாலும், சத்தீசுகட் ‘பொதுமக்கள் பாது காப்புக்கான சிறப்புச் சட்டத்தைப்’ பயன்படுத்திக் காவல்துறை அவரைப் பல்லாண்டுகள் பிணையில் வரவியலாமல் சிறைப்படுத்தலாம். “அப்பாவி நாடாளு மன்ற உறுப்பினர்களை அவர்களுடைய அஞ்சலில் இருந்தே காப்பதற்காக இப்போது சத்தீசுகட் காவல்துறை பல பட்டாலியன்களைப் பணி அமர்த்தியுள்ளது,” என்கிறார் தோழர் ராசு. அந்தச் சமயத்தில் அவர் தண்ட காரண்யாவில் நடந்துகொண்டிருந்த கூட்டத்தில் இருந்ததால் கைதாகாமல் தப்பினார். அப்போதுமுதல் அவர் இங்கேயே இருந்துவிட்டார். அவருடைய இரண்டு இளம் மகன்கள் (பள்ளிசெல்லும் வயதினர்) வீட்டில் தனியாக இருந்தனர். காவல்துறை அவர்களை வெகுநேரம் வினாக்களால் துளைத்தெடுத்தது. இறுதியில் அவர் களுடைய வீடு காலி செய்யப்பட்டது. அக்குழந்தைகள் இருவரும் அவர்களுடைய மாமா ஒருவருடன் தங்கி வாழ்கின்றனர். அண்மையில்தான் தோழர் ராசு தன் குழந்தைகளைப் பற்றிக் கேட்டறிந்தார். அவருக்கு இந்த வலிமை, கரைக்கும் அமிலம் போன்ற நகைச்சுவையைத் தரும் வலிமை, எப்படி வந்தது? இவர்கள் அனைவரும் இவ்வளவு இன்னல்களையும் தாங்கிக்கொண்டு எப்படி இயங்க முடிகிறது? கட்சி மீது அவர்களுக்கு உள்ள நம்பிக்கை, எதிர்பார்ப்பு, அன்பு ஆகியவைதான் காரணம். இதை நான் மீண்டும் மீண்டும் பலமுறை ஆழமாகவும் நெருக்கமாகவும் உணர்கிறேன்.

நாங்கள் இப்போது ஒருவர் பின் ஒருவராக நடக்கிறோம். நானும் “கண்மூடித்தனமான வன்முறையில்” ஈடுபடும் குருதித் தாகம் உள்ள கிளார்ச்சியாளர்கள் நூறு பேரும். கூடாரத்தில் இருந்து வெளியேறுமுன் கூடாரம் முழுவதையும் பார்த்தேன். தீ (அடுப்பு) மூட்டிய இடத்தில் இருந்த சிறிதளவு சாம்பலைத் தவிர அங்கு நூறு மனிதர்கள் தங்கியிருந்ததற்கான எந்தவகை அடையாளமும் இல்லை. இந்தப் படையினரை எண்ணி வியக்காமல் இருக்க முடிய வில்லை. நுகர்வைப் பொருத்தவரை இவர்கள் காந்தியை விட முனைப்பான காந்தியவாதிகள். சூழல் மாற்றம் குறித்துக் கவலைப்பட்டு அதைக் குறைக்க வேண்டும் என்று கூவும் எந்த ஒருவரைவிடவும் இவர்கள் மிகக் குறைவாகவே சூழலை மாசுபடுத்துகின்றனர். அழிவு வேலை செய்யும் போதும் கூட காந்திய வழியைக் கடைப்பிடிக்கின்றனர்; எடுத்துக்காட்டாக, காவல்துறையின் ஊர்தியைக் கொளுத்துவதற்கு முன்னர் அதில் உள்ள பாகங்கள் அனைத்தையும் பிரித்தெடுத்த பின் தான் ஊர்தியை எரிக்கின்றனர். ஊர்தியின் திசைதிருப்பும் கருவி (steering wheel) நேராக்கப்பட்டுக் குழல் துப்பாக்கியாகிவிடுகிறது. இருக்கைகளின் மேலுள்ள ரெக்சின் மெத்தை-திண்டு கிழிக்கப்பட்டு வெடிபொருள்களை எடுத்துச் செல்லும் பையாகிறது. ஊர்தியிலிருந்து கழற்றியெடுத்த மின்கொள் கலனுக்குக் கதிரொளியிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்து மீண்டும் மின்னாற்றல் தந்து பயன்படுத்துகிறார்கள். (கைப்பற்றும் ஊர்திகளை எரிக்கக்கூடாது. மாறாக, புதைத்துவிட வேண்டும். அப்போதுதான் பின்னர் தேவைப் பட்டால் அவற்றை மீட்டெடுத்துக்கொள்ளலாம் என்று மேலிடம் அறிவுறுத்தியுள்ளது.) ‘காந்தியாரே, உம் துப்பாக்கியை எடுங்கள்’ என்ற தலைப்பில் ஒரு நாடகத்தை எழுதலாமோ? அப்படிச் செய்தால் நான் உடனடியாகக் கொல்லப்படுவேனோ?

கும்மிருட்டில் மிக அமைதியாக நடந்துகொண்டிருக் கிறோம். நான் மட்டும்தான் விளக்கைப் பயன்படுத்து கிறேன். அதைக் கீழ் நோக்கிப் பிடித்துள்ளேன். என் முன்னால் நடக்கும் தோழர் கம்லாவின் குதிகால்கள் மட்டும் ஒளிவட்டத்தில் தெரிகின்றன. நான் எங்கு கால் வைக்க வேண்டும் என்பதையறிந்துகொள்ள முடிகிறது. நான் எடுத்துச் செல்வதைவிடப் பத்து மடங்குச் சுமையை அவர் எடுத்துச் செல்கிறார். முதுகுப் பை, துப்பாக்கி, தலையில் மளிகைப் பொருள்கள் உள்ள பெரிய பை, பெரிய சட்டி ஒன்று, இரண்டு தோள்களிலும் காய்கறிகள் நிரம்பிய பைகள். அவருடைய தலையிலுள்ள பை மிகப் பொருத்த மாகச் சமநிலையில் வைக்கப்பட்டுள்ளது. வழுக்குப் பாறைகளிலும் கீழ்நோக்கிய சரிவுகளிலும் நடக்கும் போதும்கூட அவர் அந்தப் பையைத் தொடவேண்டிய தில்லை. அவர் ஒரு அதிசயம். நெடுந்தொலைவு நடக்க வேண்டியுள்ளது. நேற்று நடந்த வரலாற்று வகுப்புக்கு நன்றி சொல்கிறேன். அறிவு பெற்றதோடன்றி என் பாதங்களுக்கு நாள் முழுக்க ஓய்வும் கிடைத்தது. இரவில் காட்டில் நடந்து செல்வது மிகவும் அழகானது.

பல இரவுகள் நான் நடந்தேன்.

1910 - ஆம் ஆண்டு கோயா மக்கள் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய பூம்கல் புரட்சியின் நூறாம் ஆண்டு விழாவைக் கொண்டாடுவதற்காக நாங்கள் சென்று கொண்டுள்ளோம். பூம்கல் என்றால் நிலநடுக்கம் என்று பொருள். விழாவிற்காக மக்கள் நாள்கணக்கில் நடந்து வருவார்கள் என்கிறார் தோழர் ராசு. நடந்துதிரிந்து கொண்டிருக்கும் மக்களால் காடு நிறைந்திருக்கும் போலுள்ளது. தண்டகாரண்யா (படைப்) பிரிவுகள் அனைத்திலும் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.

விழாவை வழிநடத்தப்போகும் தோழர் லெங் எங்களுடன் நடந்துவருகிறார் என்பது எங்களுக்குக் கிடைத்த வாய்ப்பு. கோன்டி மொழியில் லெங் என்பதற்கு குரல் என்று பொருள். தோழர் லெங் நடுத்தர அகவையினர். உயரமானவர். ஆந்திராவில் இருந்து வந்தவர். ஆந்திராவில் கத்தார் என்ற புகழ்பெற்ற பாவலர்-பாடகர் உள்ளார். அவருடன் பணியாற்றியவர் வர்லெங். 1972-ல் ‘மக்கள் நாட்டியக் குழு’ என்ற புரட்சிகரக் கலைக்குழுவை கத்தார் நிறுவினார். பின்னர் அது மக்கள் போர்க்குழுவில் முறைப் படி இணைந்தது. ஆந்திராவில் அதற்குப் பல்லாயிரக் கணக்கில் ரசிகர்கள் இருந்தனர். தோழர் லெங் 1977-ல் அதில் சேர்ந்து புகழ்பெற்ற பாடகரானார். ஆந்திர அரசு மிக மோசமான அடக்குமுறையைப் பயன்படுத்திய காலத்தில் அவர் ஆந்திராவில்தான் வாழ்ந்தார். (கற்பனை யான) மோதல்களில் ஈடுபட்டதாகக் கூறிக் காவல்துறை ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் அவருடைய நண்பர்கள் பலரைச் சுட்டுக்கொன்றது. மருத்துவர் போல் நடித்த பெண் (காவல்துறைக்) கண்காணிப்பாளர் ஒருவரால் அவரும் ஓரிரவு மருத்துவமனைப் படுக்கையிலிருந்து பிடித்துச் செல்லப்பட்டார். சண்டையில் சுட்டுக்கொல்லப்பட்ட தாகப் புனையும்பொருட்டு வாரங்கல் நகருக்கு வெளியில் இருந்த காட்டிற்குக் கொண்டுசெல்லப்பட்டார். நல் வாய்ப்பாக கத்தார் அவர்கள் செய்தியறிந்து தோழர்களைக் கொண்டு அவரைக் காப்பாற்றினார்.

1998-ல் தண்டகாரண்யாவில் கலைக் குழு ஒன்றை நிறுவ மக்கள் போர்க்குழு முடிவு செய்தது. சேட்னா நாட்ய மன்ச் என்ற அக்குழுவைத் தலைமையேற்று நடத்து வதற்காக லெங் அனுப்பி வைக்கப்பட்டார். இதே இப்போது அவர் என்னுடன் நடந்துகொண்டுள்ளார். அவர் ஏனோ ஆலிவ்-பச்சை நிறச் சட்டையும் இளஞ் சிவப்பு வண்ணத்தில் முயல் உருவங்களைக் கொண்ட கருஞ்சிவப்பு நிற பைசாமாவும் அணிந்துள்ளார். “சேட்னா நாட்ய மன்ச்-இல் இப்போது 10,000 உறுப்பினர்கள் உள்ளனர்,” என்கிறார். “எங்களிடம் 500 பாடல்கள் உள்ளன. இந்தி, கோன்டி, சத்தீசுகடி, கால்ப மொழிகளில். 140 பாடல்களைக் கொண்ட நூல் ஒன்றை அச்சிட்டுள் ளோம். ஒவ்வொருவரும் பாட்bழுதுகின்றார்.”

முதல் முறை நான் அவருடன் பேசியபோது அவர் மிகவும் துயரார்ந்த, ஆர்ந்தமைந்த சிந்தனைக்குரிய குரலில் பேசினார் (ளடிரனேநன எநசல பசயஎந); ஒரே நோக்கமுடையவராகத் தெரிந்தார். ஆனால் சில நாட்களுக்குப் பின் நெருப்பைச் சுற்றி அமர்ந்திருக்கையில் தன் நண்பரும் புகழ்பெற்ற தெலுங்குத் திரைப்பட இயக்குநருமான ஒருவரைப்

பற்றிச் சொன்னார். அந்த இயக்குநர் தன் படங்கள் ஒவ்வொன்றிலும் நக்சலியராக வேடமேற்பாராம்.

தெலுகு அசை அழுத்தம் (யஉஉநவே) கலந்த தன் அழகிய

இந்திப் பலுக்கலில் லெங் சொல்கிறார்: “நக்சலியர்கள் எப்போதுமே இப்படித்தான் இருக்கிறார்கள் என்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்?” என்று நான் அவரைக் கேட்டேன். தொடர்ந்து வேட்டையாடப்பட்டுக் களைத்த ஒருவர் ஹமு-47 துப்பாக்கி ஏந்தியவாறு காட்டிலிருந்து வெளியே வந்ததைப்போல நடித்துக் காட்டினார் அந்த இயக்குநர். நாங்களனைவரும் சிரிப்பில் ஆழ்ந்தோம்.

பூம்கல் விழாவை நான் ஆவலுடன் எதிர்பார்த்திருக் கிறேனா என்று தெரியவில்லை. மாவோவினப் பரப்புரை களால் இறுக்கமான பழங்குடி நடனங்கள், உணர்ச்சி யூட்டும் மேடைப் பேச்சுகள், அவற்றில் மயங்கி மின்னும் விழிகளுடன் இருக்கும் கீழ்ப்படிதலுள்ள பார்வை யாளர்கள் ஆகிய காட்சிகளைத் தான் காணவேண்டி யிருக்கும் என்று நான் அஞ்சுகிறேன்.

நிகழ்விடத்திற்கு மாலைப்பொழுதின் இறுதியில் வந்து சேர்ந்தோம். மூங்கில் சாரக்கட்டினால் ஆன தற்காலிக மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டு சிவப்புத் துணி போர்த்தப்பட்டுள்ளது. உச்சியில் மாவோவினக் கட்சியின் சுத்தி அரிவாள் கொடியும் அதன் மீது மக்களரசின் வில்-அம்புக் கொடியும் உள்ளன. வெள்ளி வண்ணமுள்ள உலோகத்தால் மெருகூட்டப்பட்ட தாள் அந்தக் கொடியைச் சுற்றியிருந்தது. சரியான அதிகார வரிசைப்படி இவற்றை வைத்திருந்தனர். மேடை மிகப் பெரியதாக இருந்தது. வலுவான சாரக்கட்டின்மீது சேறு குழைத்துப் பூசிய அந்த மேடையும் தற்காலிகமானதுதான். ஆங்காங்கு சிறு அடுப்புகளில் தீ எரிந்துகொண்டிருந்தது. மக்கள் வரத் தொடங்கி விட்டார்கள். தம் இரவுணவைச் சமைத்துக் கொண்டுள்ளனர். இருளில் அவர்களுடைய மெல்லிய உருவங்கள் மங்கலாகத் தெரிகின்றன. அந்தக் கூட்டத்தினூடே நாங்கள் நடந்துசெல்கிறோம். (செவ் வணக்கம், செவ்வணக்கம், செவ்வணக்கம்) 15 நிமையங்கள் நடந்து மீண்டும் காட்டிற்குள் நுழைகிறோம்.

எங்களுடைய புதிய இடத்தில் மீண்டும் அணிவகுத்து நின்றோம். மற்றுமொரு வருகைப் பதிவு நடந்தது. பின்னர் பாதுகாப்புக்காக யார் எங்கு நிற்கவேண்டும், காவல்துறை தாக்கினால் யார் எப்பகுதியைக் காக்கவேண்டும், கலைந்தோடினால் எங்கு ஒன்று சேரவேண்டும் என்பன குறித்த அறிவுறுத்தல்கள் நடந்தன.

எங்களுக்கு முன்னரே வந்துவிட்ட குழுவொன்று இரவுணவைச் சமைத்துவிட்டிருந்தது. உணவுக்குப் பின் சாப்பிடும் இனிப்புக்காக கம்லா எனக்குக் காட்டுக் கொய்யாப் பழம் ஒன்றைத் தந்தார். வரும் வழியில் பறித்து எனக்காகப் பாதுகாத்துக் கொணர்ந்திருக்கிறார்.

அடுத்த நாள் அதிகாலையிலிருந்தே அன்றைய விழாவிற்கென மேன்மேலும் அதிக எண்ணிக்கையில் மக்கள் வந்தவண்ணம் இருந்தனர். அங்கு எழுச்சி பொங்கு கின்றது. ஒவ்வொருவரும் நெடுநாள்களாகப் பார்த்திராத தம் நண்பர்களை மீண்டும் சந்திக்கின்றனர். ஒலி வாங்கி களைச் சோதிப்பவர்கள் அவற்றினூடே அவ்வப்போது பேசுகின்றனர். கொடிகள், தட்டிகள், சுவரொட்டிகள் இன்னபிற ஏற்றப்படுகின்றன. நாங்கள் வந்த அன்று ஓங்நாரில் கொல்லப்பட்ட ஐந்து பேருடைய ஒளிப் படங்கள் ஒட்டப்பட்ட விளம்பரத் தட்டி வைக்கப் பட்டுள்ளது.

தோழர்கள் நர்மதா, மாசெ, ரூபி ஆகியோருடன் அமர்ந்து தேநீர் பருகிக்கொண்டுள்ளேன். கிராந்திகாரி ஆதிவாசி மகிலா சங்காத்தன் அமைப்பின் தண்டகாரண்யக் கிளைத் தலைவராவதற்கு முன் காட்சி ரோலியில் பல்லாண்டுகள் பணியாற்றியது குறித்து தோழர் நர்மதா பேசுகிறார். தோழர்கள் மாசெ, ரூபி இருவரும் ஆந்திராவில் நகர்ப்புறத்தில் பணியாற்றியதை நினைவுகூர்கின்றனர். கட்சியிலுள்ள பெண் தோழர்கள் தம் உரிமைகளுக் காகவும், ஆண்-பெண் இருபாலரும் சமமாக வாழ்வது (நியாயமான குமுகத்தைப் படைக்க முயலும்) அக் கட்சியின் முனைப்பிற்கு நடுநாயகமானது என்பதைக் கட்சிக்குப் புரியவைப்பதற்கும் பல்லாண்டுகள் போராட வேண்டியிருந்ததைப் பற்றிச் சொல்கின்றனர். 1970-களைப் பற்றிப் பேசுகிறோம். நக்சலிய இயக்கத்தில் இருந்த ஆண் தோழர்களில் தாம் சிறந்த புரட்சியாளர்கள் என்று கருதியவர்களுங்கூட ஆணாதிக்க எண்ணத்திலிருந்து வெளிவராதவர்களாக இருந்தது பெண் தோழர்களை நம்பிக்கை இழக்க வைத்தது குறித்தும் பேசுகிறோம். இப்போது நிலைமை எவ்வளவோ முன்னேறிவிட்டது, இருப்பினும் இன்னும் மாறவேண்டியவை உள்ளன என்று மாசெ சொல்கிறார். (கட்சியின் நடுவண் குழுவிலும் தலைமைக் குழுவிலும்  ஒரு பெண் கூட இல்லை.)

 

நண்பகல் வாக்கில் இன்னொரு கெரில்லாக் குழு வந்து சேர்கிறது. பையனைப் போல் இளவயதுத் தோற்றமுள்ள உயரமும் ஒல்லியுமான ஒருவர் அதன் தலைமையில் உள்ளார். இந்தத் தோழருக்கு இரண்டு பெயர்கள் உள்ளன: சுக்தேவ், குட்சா உசென்டி. இவ்விரண்டுமே அவருடைய உண்மையான பெயர்கள் அல்ல. சுக்தேவ் என்பது இவருக்கு மிக நெருக்கமான, காவல்துறையால் கொல்லப் பட்ட தோழரின் பெயர். (இந்தப் போரில், இறந்தவர்கள் மட்டுமே அஞ்சாமல் தம் இயற்பெயரைப் பயன் படுத்தலாம்.)

குட்சா உசென்டி என்பது? பல தோழர்கள் ஏதாவ தொரு சமயத்தில் இப்பெயரை ஏற்றிருக்கிறார்கள். (சில மாதங்களுக்கு முன் தோழர் ராசுவின் முறை; அப்போது அவர் இப்பெயரால் அழைக்கப்பட்டார்.)

தண்டகாரண்யாப் பகுதியில் கட்சியின் பேச்சுப் பாங்கராக (spokesperson) இருப்பவருக்கு இந்தப் பெயர் தரப்படும். ஆகவே, என் பயணத்தின் மீதி நாட்களில் சுக்தேவ் என்னுடன் இருந்தபோதும்கூட அவரை மீண்டும் எப்படிக் கண்டுபிடிப்பேனோ தெரியாது. அவருடைய சிரிப்பை எங்கிருந்தாலும் அடையாளம் கண்டுகொள்வேன். 1988-ல் மக்கள் போர்க் குழு தன் படையினரில் மூன்றில்

ஒரு பகுதியினரை வட தெலுங்கானாவிலிருந்து தண்ட காரண்யாவுக்கு அனுப்பியபோது தானும் அங்கு வந்ததாகச் சொல்கிறார். அவர் நன்றாக உடுத்தியிருந்தார். மாவோ வினக் கட்சிச் ‘சீருடை’ (கோன்டி மொழியில் ‘dress’) அணியாமல் சாதாரண மக்களைப் போன்ற உடை (civilian clothes என்பதை கோன்டி மொழியில் ‘civil’ என்கின்றனர்) அணிந்திருந்தார். அவரைப் பார்க்கும் வெளியாட்கள் அவர் ஒரு நிறுவனத்தில் உயர் பதவியிலுள்ள அதிகாரி என்று கூட நினைத்துவிடக்கூடும். ஏன் சீருடை அணியவில்லை என்று கேட்டேன். தான் பயணம் மேற்கொண்டிருந்த தாகவும் கேங்கர்-க்கு அருகிலுள்ள கேசுகல் மலைப் பகுதியிலிருந்து அப்போதுதான் திரும்பியதாகவும் சொன்னார். வேதாந்தா நிறுவனம் அப்பகுதியில் இருக்கக் கூடிய முப்பது இலக்கம் டன் பாக்கசித் தாது மீது கண் வைத்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆகா! நான் நினைத்தது முழுக்கச் சரியாகிவிட்டது.

மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வதற்காகத் தான் அங்குச் சென்றதாக சுக்தேவ் சொல்கிறார். அவர்கள் நிறுவனத்தை எதிர்த்துப் போராடுவதற்கு அணியமாக உள்ளார்களா என்று கணிப்பதற்காக. அவர்கள் இப்போதே படைக் குழுக்களும் படைக்கலன்களும் வேண்டுமென்கின்றனர். தலையை நிமிர்த்தி உறுமுவது போலச் சத்தமாகச் சிரிக்கிறார். “உடன்பிறப்பே, அது அவ்வளவு எளிதானதல்ல” என்று அவர்களிடம் சொன்னேன். அவ்வப்போது அவர் சொல் வதையும் அவர் AK-47 துப்பாக்கியைக் கையாளும் முறையையும் வைத்து அவர் ஓர் உயரதிகாரி என்பதையும் தேர்ந்த கெரில்லா என்பதையும் நான் உறுதியாகச் சொல்வேன்.

‘காட்டு அஞ்சல்’ வருகிறது. எனக்கு ஒரு அடுசில் வந்துள்ளது! தோழர் வேணு அனுப்பியிருக்கிறார். எனக்கு அனுப்புவதாகச் சொல்லியிருந்த உணர்ச்சிப் பாடலின் வரிகளைச் சில முறை மடிக்கப்பட்ட துண்டுத்தாள் ஒன்றில் அவர் எழுதியனுப்பியுள்ளார். அவற்றைப் படிக்கும் தோழர் நர்மதா புன்னகைக்கிறார். அவருக்குக் கதை தெரியும். 1980-களில் நடந்தது. மக்கள் முதன்முதலில் கட்சியை நம்பத் தொடங்கித் தம் இன்னல்களை - அவர்களுடைய உள் முரண்களை என்று தோழர் வேணு சொல்கிறார் - களைய வேண்டிக் கட்சியை அணுகிய காலம் அது. முதலில் அவ்வாறு வந்தவர்கள் பெண்களே. ஒரு மாலைப் பொழுதில் நெருப்பினருகே அமர்ந்திருந்த மூதாட்டி ஒருவர் எழுந்து நின்று பெரிய புள்ளிகளுக்கு ஒரு பாட்டுப் பாடத் தொடங்கினார். அவர் மாதியா இனத்தவர். அவ்வினப் பெண்கள் திருமணமான பிறகு தம் மேலாடையை அணியாமல் திறந்த மார்புடன் இருப்பது வழக்கமாக இருந்தது.

நாங்கள் எங்கள் மேலாடையை அணியமுடியாது என்கின்றனர்.

ஐயா,

அந்த ஆடைகளைக் களையச் சொல்கின்றனர். ஐயா,

நாங்கள் என்ன பாவம் செய்தோம். ஐயா,

உலகம் மாறிவிட்டது, இல்லையா, ஐயா

ஆனால் நாங்கள் சந்தைக்குப் போகையிலே ஐயா,

நாங்கள் அரை நிர்வாணமாகப் போகவேண்டியுள்ளது ஐயா,

இந்த வாழ்க்கை எங்களுக்கு வேண்டாம் ஐயா,

எங்கள் மூதாதையர்களிடம் இதைச் சொல்லுங்கள் ஐயா

பெண்ணுரிமை தொடர்பாகப் போராடுவதற்குக் கட்சி எடுத்துக்கொண்ட முதல் சிக்கல் இதுதான். இதை நுணுக்கமாகவும் கவனத்துடனும் அணுக வேண்டி யிருந்தது. கட்சி 1986-இல் ‘பழங்குடிப் பெண்கள் அமைப்பை’ ஏற்படுத்திற்று. அது பின்னர் கிராந்திகாரி ஆதிவாசி மகிலா சங்காத்தன் என்று பரிணமித்தது. இப்போது அதில் 90,000 உறுப்பினர்கள் உள்ளனர். இந்தியாவில் உள்ள பெண்கள் அமைப்புகளிலேயே பெரியதாகவும் இது இருக்கக்கூடும். (அந்த 90,000 பேரும் மாவோவினர்கள்தான். அவர்கள் அனைவருமே அரசால் ஒழிக்கப்படப்போகின்றார்களா? சேட்னா நாட்ய மன்ச்-இல் உள்ள 10,000 பேர்? அவர்களுமா?)

கட்டாயத் திருமணம், ஆள்கடத்தல் முதலிய பழங்குடி மக்களின் பாரம்பரியக் கொடுமைகளை எதிர்த்து கிஆமச பரப்புரை செய்கிறது. மாத விலக்கு நாள்களில் பெண்கள் ஊரை விட்டு விலகிக் காட்டில் ஒரு குடிசையில் தங்கவேண்டிய கட்டாயத்தை அது எதிர்க்கிறது. ஆண் இரண்டு அல்லது அதற்கு அதிகமான மனைவியரை வைத்திருப்பதை எதிர்க்கிறது. வீட்டில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்க்கிறது. எல்லாப் போராட்டங்களையும் அது வெல்லவில்லை. ஆனால் வேறு எந்தப் பெண்ணுரிமையாளர் தான் எல்லாவற்றையும் வென்றுள்ளார்? எடுத்துக்காட்டாக, இன்றும் கூட தண்ட காரண்யாவில் பெண்கள் விதைக்க அனுமதிக்கப்படு வதில்லை. இது அநீதியானது, ஒழிக்கப்பட வேண்டியது என்று கட்சிக் கூட்டங்களில் ஆண்கள் ஒப்புக்கொள் கின்றனர். ஆனால், நடைமுறையில் அவர்கள் அதை ஒழிக்கவிடுவதில்லை. எனவே, மக்களரசுக்கு உரிமையான பொது நிலத்தில் பெண்கள் விதைப்பர் என்று கட்சி முடிவெடுத்தது. அந்நிலத்தில் அவர்கள் விதைத்தல், காய்கறிச் செடி வளர்த்தல், தடுப்பணை கட்டுதல் போன்ற வற்றைச் செய்கின்றனர். பாதி வெற்றி; முழு வெற்றியல்ல.

பசுத்தாரில் காவல்துறை அடக்குமுறை அதிகமா கின்றது. அதற்கேற்ப கிஆமச பெண்களும் பெரும் ஆற்றலாக வளர்ந்துவிட்டனர். நூற்றுக்கணக்கில், சில சமயங்களில் ஆயிரக்கணக்கில் ஒன்று சேர்ந்து காவல் துறையை எதிர்கொள்கின்றனர். இந்த அமைப்பு இருப்பதே அப்பகுதியில் பழமையான எண்ணங்களை மிகவும் மாற்றியுள்ளது. பெண்களுக்கெதிரான பல பாரம்பரியக் கொடுமைகளைக் குறைத்துள்ளது. கட்சியில், குறிப்பாக கெரில்லாப்படையில், சேர்வது பல இளம்பெண்களுக்குத் தம் குமுகத்தின் இறுக்கமான அழுத்தங்களில் இருந்து தப்புவதற்கு ஒரு வழியாக அமைந்தது. சல்வா சூடும் அமைப்பினர் கிஆமச பெண்கள் மீது அளவு கடந்த சினம் கொண்டுள்ளது குறித்து கிஆமச அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர் சுசீலா சொல்கிறார். சல்வா சூடும் அமைப்பினர் பயன்படுத்திய முழக்கங்களில் ஒன்று “நாங்கள் இரண்டு பெண்களை மணம் புரிவோம்! கட்டாயம் செய்வோம்!” வன்புணர்ச்சி, விலங்குகளைப் போலப் பெண்களின் உடல்கள் சிதைக்கப்படுதல் ஆகிய வற்றால் பாதிக்கப்பட்ட பெண்களில் மிக அதிக மானவர்கள் கிஆமச-வைச் சேர்ந்த பெண்கள்தான். அந்தக் கொடுமையைக் கண்ட பெண்கள் பலர் கெரில்லாப் படையில் இணைந்தனர். இப்போது அப்படையில் 45 விழுக்காட்டினர் பெண்களே. அவர்களில் சிலரை அழைத்துவருமாறு தோழர் நர்மதா சொல்லியனுப்ப அவர்கள் எங்களுடன் கலந்துகொண்டனர்.

தோழர் ரிங்கி தன் முடியைக் குறுகலாக வெட்டிக் கொண்டுள்ளார். கோன்டி-யில் சொல்வது போல பாப்-கட். அவர் துணிவு மிக்கவர். ஏனெனில் இப்பகுதியில் காவல்துறையைப் பொருத்தவரை பாப்-கட் இருந்தாலே அவர் மாவோவினர் என்று பொருள். ஒருவரைச் சுட்டுக் கொல்வதற்கு இது ஒன்றே போதும். எந்தக் கேள்வியும் கேட்கவேண்டியதில்லை. தோழர் ரிங்கி-யின் ஊரான கொர்மா 2005-இல் நாகா பட்டாலியன், சல்வா சூடும் அணிகளால் இணைந்து தாக்கப்பட்டது. அப்போது ரிங்கி அவ்வூர் மக்கள்படையில் உறுப்பினராக இருந்தார். அவருடைய தோழர்கள் லுக்கி, சுக்கி ஆகியோரும்தான். அவ்விருவரும் கிஆமச உறுப்பினர்களாகவும் இருந்தனர். ஊர் முழுவதையும் எரித்தபிறகு நாகா பட்டாலியனில் இருந்தவர்கள் லுக்கி, சுக்கி, இன்னொரு பெண் ஆகிய மூவரையும் குழுவாக வன்புணர்ச்சி செய்து கொன்றனர். “அவர்கள் அந்த மூன்று பேரையும் புல்வெளியில் வைத்து வன்புணர்ச்சி செய்தார்கள்,” என்றார் ரிங்கி. “ஆனால், அது நடந்து முடிந்த பிறகு அங்கு புல்லே இல்லாமல் போயிற்று.” இது நடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. நாகா பட்டாலியன் போய்விட்டது. ஆனால், காவல்துறையினர் இன்னும் வருகின்றனர். “எப்போதெல்லாம் அவர்களுக்குப் பெண்களோ அல்லது கோழிகளோ வேண்டுமோ அப்போதெல்லாம் இங்கு வருகிறார்கள்.

அசிதாவும் பாப்-கட் முடி வைத்துள்ளார். அவருடைய ஊரான கொர்சீலுக்குச் சல்வா சூடும் வந்தனர். மூன்று பேரை ஓடையில் அமிழ்த்திக் கொன்றனர். அசிதா ஊர் மக்கள்படையில் இருந்தார். படையுடன் சற்றுத் தொலைவில் சல்வா சூடுமைப் பின் தொடர்ந்தார். பரல் நார் டோடக் என்னும் ஊருக்கு அருகில் செல்லும்வரை அவ்வாறு பின்தொடர்ந்தனர். சல்வா சூடும் ஆட்கள் ஆறு பெண்களை வன்புணர்ச்சியில் ஈடுபடுத்தியதையும் ஒரு ஆணை அவருடைய தொண்டையில் சுட்டுக் கொன்ற தையும் அவர் பார்த்தார்.

தோழர் இலக்குமி நீண்ட சடையுள்ள அழகான இளம்பெண். தன் ஊரான சோசோரில் 30 வீடுகளைச் சல்வா சூடும் தீயிட்டு அழித்ததைப் பார்த்ததாகச் சொல் கிறார். “அப்போது எங்களிடம் படைக்கலன்கள் இல்லை. அதனால் அந்த அழிவைப் பார்ப்பதைத் தவிர எங்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை” என்கிறார். அதையடுத்து விரைவிலேயே அவர் கெரில்லாப் படையில் சேர்ந்து விட்டார். நூற்றைம்பது கெரில்லாக்களைக் கொண்ட படை ஒன்று 2008-இல் மூன்றரை மாதங்களுக்குக் காடு களினூடே நடந்து சென்று ஒரிசாவில் நயாகார் பகுதியை அடைந்தது. அப்படையில் இலக்குமியும் ஒருவர். அப்படை காவல்துறைப் படைக்கலக் காப்பறையைத் தாக்கி 1,200 துப்பாக்கிகளையும் 2,00,000 வெடிகுண்டுகளையும் கைப்பற்றியது.

தோழர் சுமித்ரா 2004-இல் சல்வா சூடும் நடத்திய பேரழிப்பிற்கு முன் கெரில்லாப் படையில் சேர்ந்தார். வீட்டிலிருந்து தப்புவதற்காகப் படையில் சேர்ந்ததாகச் சொல்கிறார். அவர் மேலும் சொல்கிறார்: “பெண்கள் எல்லா வகைகளிலும் அடக்கப்படுகிறார்கள். எங்கள் ஊரில் சிறுமிகள் மரம் ஏறக்கூட அனுமதிக்கப்படு வதில்லை. மீறி ஏறினால் தண்டமாக 500 உருவா அல்லது ஒரு கோழியைத் தர வேண்டும். ஓர் ஆண் ஒரு பெண்ணைத் தாக்கி, அவள் திருப்பித் தாக்கினால் அவள் அந்த ஊருக்கு ஒரு வெள்ளாட்டைத் தண்டமாகத் தரவேண்டும். வேட்டைக்காக ஆண்கள் தொடர்ந்தாற்போலப் பல மாதங்கள் மலைக்குப் போய்விடுவார்கள். வேட்டை யாடப்பட்ட விலங்கினருகில் பெண்கள் போவதற்கு அனுமதி இல்லை. இறைச்சியில் சுவையதிகமான பகுதி ஆண்களுக்குத்தான் தரப்படும். பெண்கள் முட்டை சாப்பிட அனுமதிக்கப்படுவதில்லை.

கெரில்லாப் படையில் சேர்வதற்கு நல்ல காரணம் வேறென்ன வேண்டும்?

தேலம் பார்வதி, கம்லா என்னும் தோழியர் இருவரைப் பற்றிச் சுமித்ரா சொல்கிறார். அவர்கள் கிராந்திகாரி ஆதிவாசி மகிலா சங்காத்தன் அமைப்பில் பணியாற்றினார்கள். தேலம் பார்வதி தென்பசுத்தாரில் போலெகயா என்னும் ஊரைச் சேர்ந்தவர். அந்த ஊரைச் சேர்ந்த மற்ற அனைவரையும் போலவே அவரும் சல்வா சூடும் தன் ஊரை எரித்ததைப் பார்த்தார். கெரில்லாப் படையில் சேர்ந்து கேசுகல் மலையில் பணியாற்றுவதற்குப் போனார். 2009-இல் ஒரு நாள்..... அவரும் கம்லாவும் அப்போதுதான் மார்ச் 8 - பெண்கள் நாள் விழா ஏற்பாடுகளைச் செய்து முடித்திருந்தனர். வட்கோ என்னும் ஊரின் வெளிப்புறத்தில் உள்ள சிறு குடிசை ஒன்றில் அமர்ந்திருந்தனர். இரவில் காவலர்கள் அக்குடிசையைச் சூழ்ந்துகொண்டு சுடத் தொடங்கினர். கம்லா திரும்பச் சுட்டார். ஆனால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். பார்வதி தப்பினார். ஆனால், அடுத்த நாள் அவரும் பிடித்துக் கொல்லப்பட்டார்.

கடந்த ஆண்டு பெண்கள் நாளன்று இதுதான் நிகழ்ந்தது. இந்த ஆண்டு பெண்கள் நாளைப் பற்றி தேசியச் செய்தியிதழ் ஒன்றில் வந்த செய்தி இதோ:

பசுத்தார் போராளிகளின் பெண்ணுரிமைக்காகப் பாடுபடுகின்றனர்

சாகர் கான், மெயில் டுடே, ராய்ப்பூர், மார்ச் 7, 2010

மாவோவின அச்சுறுத்தலை எதிர்ப்பதற்காக அரசு முழுமூச்சில் இயங்கிக்கொண்டிருக்கலாம். ஆனால் சத்தீசுகட்டில் போராளிகளில் ஒரு பிரிவினருக்குத் தம் அன்றாட வாழ்க்கைச் சிக்கல்களைத் தவிர முதன்மையான வேலைகள் உள்ளன. அனைத்துலக மகளிர் நாள் நெருங்கு கிறது. பெண்ணுரிமையைப் பரப்புவதற்காக ஒரு வாரம் முழுவதும் “கொண் டாட்டங்களுக்கு” ஏற்பாடு செய்துள்ளனர் பசுத் தார் பகுதி மாவோவினர். பசுத்தார் மாவட்டத்தில் உள்ள பிசாப்பூரிலும் சுவரொட்டிகள் ஒட்டப் பட்டன. பெண்ணுரிமைக் காவலர்களாகத் தம்மைத் தாமே உருவகப்படுத்திக்கொண்ட இவர்களின் செயல் மாநிலக் காவல்துறையை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. “வன்முறையிலும் குருதியைக் கொட்டுவதிலும் மட்டுமே செயல்படும் நக்சலியர்களிடமிருந்து இத்தகைய வேண்டு கோளை நான் பார்த்ததே இல்லை” என்கிறார் பசுத்தார். காவல் துறைப் பொது ஆய்வாளர் இலாங்குமெர்.

அந்த அறிக்கை மேலும் கூறுவதாவது;

“நாங்கள் வெற்றிகரமாக நடத்தும் பொதுமக்கள் விழிப்புணர்வுப் பரப்புரைக்குப் போட்டியாக அவர்கள் இதை நடத்த முயல்கின்றனர் என்று நினைக்கிறேன். இடதுசாரித் தீவிரவாதிகளை வேரோடு ஒழிப்பதற்காகக் காவல் துறையால் தொடங்கப்பட்ட ‘பசுமை வேட்டை முனைப்பு’க்கு மக்களிடையே ஆதரவு பெறுவதற்காக மேற்படிப் பரப்புரையை மேற்கொண்டுள்ளோம்,” என்றார் பொது ஆய்வாளர்.

தீய நோக்கமும் அறியாமையும் கலந்த இந்தப் போக்கு அரிய நிகழ்வன்று. கட்சியின் தற்கால நடப்பை ஆவணப் படுத்தும் குட்சாஉசென்டிக்கு இதைப் பற்றி மற்றெல் லோரையும்விட அதிகம் தெரியும். ஊடகச் செய்தி அறிக் கைகள், மறுப்புகள், திருத்தங்கள், கட்சி அறிக்கைகள், இறந்தவர்களின் பெயர்ப் பட்டியல்கள், தொலைக்காட்சிச் செய்தித் துண்டுகள், பிற ஒலி-ஒளித் துண்டுகள் முதலியன நிறைந்தவை அவருடைய சிறிய கணினியும் எம்பி3 (ஆஞ3) பதிவியும். அவர் சொல்வது: “நாங்கள் வெளியிடும் விளக்கங்கள் வெளியாவதேயில்லை என்பதுதான் குட்சா உசென்டி-யாக இருப்பவர் எதிர்கொள்ளவேண்டிய மிக மோசமான நிகழ்வு, எங்களைப் பற்றி அவர்கள் சொல்லும் பொய்களைக் குறித்து நாங்கள் தரும் வெளியிடப்படாத விளக்கங்களைத் தொகுத்தால் அது ஒரு பெரிய நூலாகும்.” இதைச் சொல்கையில் அவர் முகத்தில் சினமோ சீற்றமோ தெரியவில்லை. சொல்லப்போனால் வேடிக்கைக் களிப்புதான் தெரிகிறது.

“நீங்கள் மறுக்க வேண்டியிருந்தவற்றிலேயே மிக முட்டாள் தனமான குற்றச்சாட்டு எது?”

சற்றே சிந்திக்கிறார். 2007-இல் நாங்கள் இப்படியோர் அறிக்கை வெளியிடவேண்டியிருந்தது: ‘இல்லையண்ணே, நாங்கள் மாடுகளைச் சுத்தியால் அடித்துக்கொல்ல வில்லை.’

மாட்டுத்திட்டம் என்பது 2007-இல் ரமன் சிங் அரசு தந்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று. ஒவ்வொரு பழங்குடி மனிதருக்கும் ஒரு மாடு தருவது.

‘நக்சலியர்கள் இந்து மதத்திற்கும் இமக-வுக்கும் எதிரானவர்கள். அதனால் அவர்கள் மாட்டுக்கூட்டம் ஒன்றைத் தாக்கி மாடுகளை அடித்துக்கொன்றுவிட்டனர்’ என்று தொலைக்காட்சி நிறுவனங்களும் செய்தித் தாள்களும் செய்தி வெளியிட்டன. என்ன ஆகியிருக்கும் என்பதை உங்களால் கற்பனை செய்துபார்க்கமுடியும்.

அச்செய்திகளுக்கு நாங்கள் ஒரு மறுப்பு வெளி யிட்டோம். அநேகமாக யாருமே அதை வெளியிட வில்லை. விநியோகத்திற்காக யாரிடம் மாடுகள் தரப் பட்டனவோ அந்த ஆள் ஒரு பொறுக்கி; அவன் அவற்றை விற்றுவிட்டு நாங்கள் மாடுகளை வழிமறித்துக் கொன்று விட்டதாகக் கூறிவிட்டான் என்பது பின்னர் தெரியவந்தது.

“மிகக் கடுமையான குற்றச்சாட்டு?”

“ஓ, பல உள்ளன. அவர்கள் எங்களுக்கெதிரான பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்களல்லவா. சல்வா சூடும் தொடங்கப்பட்டபோது முதல் நாள் அவர்கள் அம்பேலி என்னும் ஊரைத் தாக்கினார்கள். அதை முற்றிலும் எரித்துவிட்டனர். அவர்கள் அனைவரும் - சிறப்புக் காவல் அதிகாரிகள், நாகா பட்டாலியன், காவல் துறை, ஆகியோர் - கோட்ரபால்-ஐ நோக்கிச் சென்றனர். கோட்ரபால்-ஐப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கவேண்டுமே? அது புகழ்பெற்ற ஊர். சரணடைய மறுத்ததற்காக அவ்வூர் 22 முறை எரிக்கப்பட்டுள்ளது. சல்வா சூடும் அந்த ஊரை அடைந்தபோது எங்கள் படை அதற்காகக் காத்துக் கொண்டிருந்தது. வருபவர்களை மறைந்திருந்து எதிர்பாரா வண்ணம் தாக்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. இரண்டு சிறப்புக் காவல் அதிகாரிகள் இறந்தனர். ஏழு பேரைச் சிறைப்பிடித்தோம். மீதமிருந்தவர்கள் தப்பியோடி விட்டனர்.

நக்சல்கள் ஏழைப் பழங்குடி மக்களைப் படுகொலை செய்து விட்டதாக அடுத்த நாள் செய்தித்தாள்கள் அறிவித்தன. நாங்கள் நூற்றுக்கணக்கானோர்களைக் கொன்றுவிட்டதாகச் சில செய்தித்தாள்கள் செய்தி வெளியிட்டன. பிரன்ட்லைன் போன்ற மதிக்கத்தக்க இதழ்கள்கூட நாங்கள் 18 ஏதுமறியாப் பழங்குடி மக்களைக் கொன்றதாகக் கூறின.

மனித உரிமை ஆர்வலர் (சில மாதங்களுக்கு முன் மறைந்த) பாலகோபால் வழக்கமாகத் தன் அறிக்கைகளில் பயன்படுத்தும் தரவுகளை நன்றாகச் சோதித்த பின்பே பயன்படுத்துவார். அவரேகூட நாங்கள் மேற்கண்டவாறே செய்ததாகக் கூறினார். நாங்கள் ஒரு திருத்தத்தை அனுப்பினோம். யாருமே அதை வெளியிடவில்லை. பின்னர், தன் நூலில் பாலகோபால் தன் தவறை ஒப்புக் கொண்டார்.... ஆனால் யார் அதனைக் கவனித்தார்கள்?”

சிறைப்பிடிக்கப்பட்ட ஏழு பேருக்கு என்ன ஆயிற்று என்று கேட்டேன். “அப்பகுதிப் படைத் தலைவர் மக்கள் நீதி மன்றம் ஒன்றைக் கூட்டினார். நாலாயிரம்பேர் பங்கேற்றனர். அவர்கள் அனைத்தையும் செவிமடுத் தார்கள். இரண்டு சிறப்புக் காவல் அதிகாரிகளுக்கு மரண தண்டனை தரப்பட்டது. ஐந்து பேர் எச்சரித்து விடுதலை செய்யப்பட்டனர். மக்கள் முடிவெடுத்தனர்.

எங்களைக் காட்டிக்கொடுப்போர் அதிகரித்து வருகின்றனர். அவர்களுக்கு எதிரான வழக்குகளிலும் வாதங்கள், அவர்கள் சொல்லும் கதைகள், அவர்களுடைய வாக்குமூலங்கள் முதலிவற்றை மக்கள் கவனமாகக் கேட்கின்றனர். பிறகு, ‘இந்த ஆள் சொல்வதை ஏற்பது இடர் ஏற்படுத்தக்கூடும்’ என்றோ அல்லது ‘இந்த ஆள் சொல்வதை நம்பத் துணிகின்றோம்’ என்றோ முடிவெடுக் கின்றோம்.

காட்டிக்கொடுப்போர் கொல்லப்படுவதை ஊடகங்கள் தவறாமல் செய்தி வெளியிடுகின்றன. ஆனால், பலர் விடுதலை செய்யப்படுவதை அறிவிப்பதில்லை. நாங்கள் பழி வாங்குவதற்காகக் கொல்வதில்லை. நாங்கள் வாழ்வதற்கும் வருங்காலத்தில் உயிர்களைக் காப்பதற்கும்...

இன்னல்களும் உள்ளன என்பது உறுதி. நாங்கள் மோசமான தவறுகளைச் செய்திருக்கிறோம். காவலர் களை எதிர்பாராது தாக்குவதாக நினைத்துக்கொண்டு தவறான மக்களைக்கூடக் கொன்றுள்ளோம். ஆனால், ஊடகங்களில் வெளியா வதைப்போல அல்ல.”

அச்சந்தரும் ‘மக்கள் நீதிமன்றங்கள்’. அவற்றை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்? அல்லது நாகரிக மற்ற இத்தகைய நீதிவழங்கலை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?

ஆனால், ‘எதிர்ப்படுதல்களைப்’ பற்றி என்ன சொல்வது? அவை பொய்யானவையானாலும் உண்மை யானவையேயானாலும்.

தீர விசாரிக்காமல் நீதி வழங்குவதற்கு மிக மோசமான எடுத்துக்காட்டுகள் இத்தகைய எதிர்ப்படுதல்கள்தான். அவற்றில் பங்கேற்கும் காவலர்களுக்கும் போர் வீரர் களுக்கும் இந்திய அரசு பதக்கங்கள், பணப் பரிசுகள், முறைபிறழ்ந்த பதவி உயர்வுகள் முதலியனவற்றைத் தந்து பெருமைப்படுத்துகிறது. இதற்கென்ன சொல்வது? ‘துணிந்த இதயம் உள்ளவர்கள்’, ‘எதிர்ப்படுதல் வல்லுநர்கள்’ என்றெல்லாம் அவர்கள் விவரிக்கப்படு கின்றனர். நாங்கள், அவர்களை எதிர்த்துக் கேள்வி கேட்கத் துணிபவர்கள், ‘தேசத் துரோகிகள்’ என்று குறிப்பிடப் படுகிறோம்.

2001 நாடாளுமன்றத் தாக்குதலில் பங்கேற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட மொகமத் அப்சலுக்கு மரணத் தண்டனை விதித்த உச்சநீதி மன்றம், அவருக்கு எதிரான சான்றுகள் மரணதண்டனை விதிக்கப்போதுமானதாக இல்லை என்று திமிருடன் ஒப்புக்கொண்டது. ஆனாலும், ‘குற்றவாளிக்கு மரண தண்டனை தந்தால்தான் குமுகத்தின் கூட்டு மனச்சான்றுக்கு நிறைவாக இருக்கும்’ என்று கூறினர்.

ஆனால், கோட்ரபால் மக்கள்-நீதிமன்றத்தைப் பொருத்தவரை, மக்களனைவரும் ஓரிடத்தில் இருந்து முடிவு செய்தனர். நெடுங்காலத்திற்கு முன்னரே குமுகத்தின் புறநிலையுடன் தொடர்பிழந்துவிட்ட நீதியரசர்கள் மக்கள் எல்லோருமாக முடிவெடுப்பதைவிட இது எவ்வளவோ மேல்.

கோட்ரபால் மக்கள் வேறு என்னதான் செய்திருக்க வேண்டும்? சிறைப்பிடிக்கப்பட்டவர்களைக் காவல் துறையிடம் ஒப்படைத்திருக்கவேண்டுமோ?

பறை (மத்தள) ஒலி மிக அதிகமாகிவிட்டது. பூம்கல் கொண்டாடும் நேரம் நெருங்கிவிட்டது. அரங்கை நோக்கி நாங்கள் நடக்கிறோம். என்னால் என் கண்களையே நம்ப முடியவில்லை. கடல்போல மக்கள் திரள். இயல்பு மாறாத, அழகான மக்கள். பல வகை உடைகளை அணிந்தவர்கள். மிக அழகாக உடுத்தியவர்கள். பெண்களை விட ஆண்களே தம்மை ஒப்பனை செய்துகொள்வதில் அதிகக் கவனம் செலுத்தியிருப்பார்கள் போலுள்ளது. இறகுகள் செருகப் பட்ட தலைப்பாகைகளுக்குப் பச்சை குத்திய முகங்களும் உடையவர்களாயிருந்தனர். பலர் தம் கண்களைச் சுற்றியும் அலங்கரித்திருந்தனர். முகத்தில் வெண்மை நிறத் தூளைப் பூசியிருந்தனர். நிறையப் படையினர் இருந்தனர். பேரழகு மிக்க வண்ணப் புடவைகளைத் தொங்கவிட்டிருந்தனர். வயது முதிர்ந்தவர்களும் குழந்தைகளும் இருந்தனர். அழகிய சிவப்பு நிறத் துகிற்கொடிகள் வானில் பறந்து கொண்டிருந்தன. கதிரவன் செந்தணலாக உயரே வந்து விட்டான். தோழர் லெங் சொற்பொழிவாற்றுகிறார். மக்களரசுகளின் அதிகாரிகள் சொற்பொழிவாற்று கின்றனர்.

தோழர் நிதி 1997-இல் இருந்து கட்சியில் இருக்கும் அசாதாரணப் பெண். 2007 சனவரியில் அவர் இன்னார் என்னும் ஊரில் இருந்ததாகக் கேள்விப்பட்ட காவல்துறை 700 காவலர்களை அனுப்பி அவ்வூரைச் சூழ்ந்தது. அந்த அளவுக்குத் தோழர் நிதி நாட்டுக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படுபவர். அவர் எதிர்பாராத் தாக்குதல்கள் பலவற்றில் ஈடுபட்டுள்ளார். ஆனால், அவர் பெரும் அச்சுறுத்தலாகக் கருதப்பட்டு வேட்கையுடன் தேடப்படுவதற்கு அவையல்ல காரணங்கள். அவர் தம் ஊர் மக்களால் பெரிதும் விரும்பப்படும் பழங்குடிப் பெண். அத்தோடன்றி, அவர் இளைஞர்களுக்கு அகத்தூண்டுதலாகவும் உள்ளார். அவர் தன் துப்பாக்கியைத் தோள்மேல் வைத்துக் கொண்டே சொற்பொழிவாற்றுகிறார். (அந்தத் துப்பாக்கியின் பின் புலத்தில் ஒரு கதை இருக்கும். அநேகமாக ஒவ்வொரு வருடைய துப்பாக்கிக்குப் பின்னரும் அதுபோலவே ஒரு கதை இருக்கும்: யாரிடமிருந்து அது பிடுங்கப்பட்டது, எப்படி, யாரால்.)

சேட்னா நாட்ய மன்ச்-ஐச் சேர்ந்த கலைக்குழு வொன்று பூம்கல் கிளர்ச்சியைக் குறித்த நாடகத்தை நடிக்கிறது. தீயவர்களான வெள்ளையர்கள் தொப்பியும் (தலைமுடிக்கு) பொன் நிறப் புல்லையும் அணிந்துள்ளனர். அவர்கள் பழங்குடி மக்களை அடித்துத் துவைப்பதும் பிற வகைகளில் கொடுமைப்படுத்துவதுமாக உள்ளனர். அரங்கிலிருப்பவர்கள் எல்லையில்லா மகிழ்ச்சியடை கின்றனர்.

தென்கங்காலௌரிலிருந்து வந்த குழு ‘குருதி வேட்டைக் கதை’ என்னும் நாடகத்தை நடிக்கிறது. சூரி எனக்கு மொழிபெயர்க்கிறார். தம் மகளுடைய ஊரைத் தேடிப்போகும் இரண்டு முதியோரைப் பற்றிய கதை அது. காட்டினூடே நடந்து செல்கையில் அவர்கள் தொலைந்து போகின்றனர். ஏனெனில் காட்டில் அனைத்துமே எரிக்கப் பட்டு விட்டன. அதனால் அவர்களுக்குப் பழக்கமான எவையுமே அங்கு இல்லை. முரசுகள் உட்பட அனைத்து இசைக் கருவிகளையும்கூட சல்வா சூடும் எரித்துப் பொசுக்கிவிட்டது. மழை பெய்துகொண்டிருந்ததால் சாம்பல்கூட இல்லை. அவர்களால் தம் மகளைக் கண்டு பிடிக்க முடியவில்லை. தம் கவலையில் அவர்கள் பாடத் தொடங்குகின்றனர். அதைக் கேட்டு மகளுடைய குரல் அழிவிலிருந்துகொண்டு அவர்களை நோக்கிப் பாடு கின்றது. நம் ஊரின் ஓசை அடக்கப்பட்டு விட்டது என்று அவர் மகள் பாடுகின்றார். நெல் குத்தும் ஓசையும் இனி இல்லை. கிணற்றருகே மக்கள் சிரிக்கும் ஓசையும் இனி இல்லை. பறவைகளும் ஒழிந்தன. வெள்ளாடுகள் கத்து வதும் இனிக் கேளாது. மகிழ்ச்சியின் நாதம் முடக்கப் பட்டுவிட்டது.

அவருடைய தந்தையார் பாடல் மூலம் விடையளிக் கிறார். அழகிய என் மகளே, இன்று அழாதே. பிறப்பவர் ஒவ்வொருவரும் இறக்கவேண்டும். நம்மைச் சுற்றியுள்ள இந்த மரங்களும் வீழும். மலர்கள் பூத்து வாடி மறையும். இந்த உலகம் ஒரு நாள் முதுமையடையும். ஆனால் நாம் யாருக்காக இறக்கிறோம்? நம்மிடம் கொள்ளையடிப் பவர்கள் ஒரு நாள் உணர்வார்கள். வாய்மை இறுதியில் வெல்லும். ஆனால் நம் மக்கள் உன்னை என்றென்றும் மறக்கமாட்டார்கள். ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு மறக்கமாட்டார்கள்.

மேலும் சிலர் சொற்பொழிவாற்றுகின்றனர். அதன் பின்னர் மத்தளம் இசைப்பதும் நடனமாடுவதும் தொடங்கு கின்றன. மக்களரசு ஒவ்வொன்றுக்கும் அதன் சொந்த கலைக் குழு உள்ளது. ஒவ்வொரு குழுவும் தன் நடனத் திற்குத் தானே அணியமாகியுள்ளது. பெரும் மத்தளங் களுடன் அவை ஒவ்வொன்றாக வருகின்றன. கற்பனை வளம் மிக்க கதைகளுடன் நடனமாடுகின்றன. ஆனால், ஒவ்வொரு கதையிலும் தவறாமல் வரும் பாத்திரம் மோசமான சுரங்க உரிமையாளர். அவன் தலைக் கவசமும் கருப்புக் கண்ணாடியும் அணிந்துள்ளான். வழக்கமாக சிறுசுருட்டு (சிகரெட்) புகைக்கிறார்கள்.

இவர்களுடைய நாட்டியத்தில் இயந்திரம்போன்று மிகத் துல்லியமான வரையறைக்குட்பட்ட கூறு எதுவும் இல்லை. அவர்கள் ஆட, ஆட தூசு எழுகிறது. மத்தள ஓசை காதைப் பிளக்கிறது. சிறுகச் சிறுக அரங்கிலிருப் பவர்கள் அசைந்தாடத் தொடங்குகின்றனர். ஆறேழு பேர்கொண்ட சிறு சிறு வரிசைகளில் தம் கைகளைத் தம் இருபுறமும் உள்ளவர்களின் இடுப்பில் வைத்தவாறு ஆண் பெண் தனித்தனியாக ஆடுகின்றனர். ஆயிரக்கணக் கானோர். இதற்காகத் தான் அவர்கள் வந்திருக்கின்றனர். இந்தக் காட்டில் மகிழ்ச்சிக்கு முதன்மை தரப்படுகிறது. மக்கள் பல மைல் தொலைவிலிருந்து நாள் கணக்கில் தொடர்ந்து நடந்து வருவார்கள். விருந்துண்ணவும் பாடவும் வருவார்கள். தலைப்பாகைகளில் சிறகுகளையும் சடையில் மலர்களையும் சூடிக்கொள்வதற்கு. தம் கைகளைத் தம் அருகிலுள்ளவர்களைச் சுற்றிப் பின்னிக் கொள்வதற்கு. கள்ளுண்டு இரவு முழுக்க நடனமாடுவதற்கு. யாரும் தனியாகப் பாடுவதோ நடனமாடுவதோ இல்லை. தம்முடைய இனத்தையே ஒழிக்க முற்படும் நாகரிகத்தை எதிர்த்து நிற்கும் இவர்களுடைய மன உறுதியைக் காட்டுவதற்கு வேறெதையும்விட இதுதான் சான்று.

காவல் துறையின் கண்காணிப்பையும் தாண்டி, பசுமை வேட்டை முனைப்பையும் தாண்டி இவ்வளவும் நடக்கின்றது என்பதை என்னால் நம்பவே முடியாது.

தொடக்கத்தில் கெரில்லாக்கள் தம் துப்பாக்கி களுடன் தள்ளிநின்று நடனமாடுபவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர். பின்னர், சில வாத்துகள் குளத்தில் மீன் பிடிக்கையில் தாம் கரையில் நின்று வேடிக்கை பார்க்க மாட்டாத வாத்துக்களைப் போல கெரில்லாக்களும் ஒருவர் பின் ஒருவராக நடனமாடத் தொடங்குகின்றனர். விரைவில் ஆலிவ்-பச்சை நிற வரிசைகள் உருவாகிவிட்டன. பிற வண்ண வரிசைகளுடன் இவையும் கலந்துவிட்டன. உடன் பிறப்புகள், பெற்றோர்-குழந்தைகள், நண்பர்கள் எனப் பல மாதங்கள், ஏன், பல ஆண்டுகள் கழித்து ஒருவரையொருவர் சந்திப்பவர்கள் தம் வரிசையிலிருந்து மாறிப் புது வரிசைகளை உருவாக்குகின்றனர். சுழன்றாடும் பல நிறப்புடவைகள், மலர்க் கொத்துகள், மத்தளங்கள், தலைப்பாகைகளுடன் ஆலிவ்-பச்சையும் கலந்துவிட்டது. இது மக்கள் படை என்பது உறுதி. குறைந்தபட்சம் இப்போதைக்காவது. ‘கெரில்லாக்கள் மக்கள் என்னும் நீரோட்டத்தில் நீந்தும் மீன்கள்தாம்’ என்று தலைவர் மாவோ சொன்னது அப்படியே உண்மையாகிவிட்டது. இந்தக் கணத்திலாவது.

தலைவர் மாவோ. இங்கேயும் இருக்கிறார். ஒரு வேளை தனிமையை உணர்கின்றாரோ என்னவோ, ஆனால் இங்கு இருக்கிறார். சிவப்புத் துணியாலான திரைச் சீலையில் அவருடைய ஒளிப்படம் வைக்கப்பட்டுள்ளது. மார்க்சும் உள்ளார். நக்சல் இயக்கத்தைத் தோற்று வித்தவரும் அதன் முதன்மை ஆசானுமான சாரு மசும்தாரும் தான். அவருடைய முரட்டுத்தனமான சொல்லாட்சியானது வன்முறை, குருதி, கொள்கைக்காக உயிர்நீத்தல் முதலிவற்றை மிகவும் உயர்த்திப்பிடிக்கிறது. ஏறக்குறைய இன ஒழிப்புக்கு இணையான கடுமையான மொழிநடையை அவர் அடிக்கடி பயன்படுத்தினார். இந்தப் புரட்சியின் அமைப்புக்கு அவருடைய பகுப்பாய்வு இன்றியமையாதது. ஆனால், ஒருபுறம் அந்தப் பகுப் பாய்வுக்கும் மறுபுறம் புரட்சியின் உணர்ச்சிகளுக்கும் மேற்புறக் கட்டுமான அமைதிக்கும் இடையில் உள்ள தொலைவு மிக அதிகம் என்பதை இந்த பூம்கல் நாளன்று இங்கு என்னால் நினைவுகூராமல் இருக்கமுடியவில்லை. “முற்றொழிப்புப் போராட்டம்” மட்டுமே சாவுக்கு அஞ்சாதவரும் தன்னல உணர்ச்சி அறவே இல்லாத வருமான புது மனிதரை உருவாக்கும் என்று அவர் சொன்னார். தன்னுடைய அந்தக் கனவு இதோ இங்கே இரவு முழுக்க நடனமாடிக்கொண்டிருக்கும் இந்தப் பழங்குடி மக்கள் மீதுதான் வந்து தங்கும் என்று அவர் கற்பனை செய்திருக்கமுடியுமா?

சிக்கலான வரலாற்றுப் பின்னணியிலிருந்து கட்சி வளர்ந்து வெளிவந்துவிட்டது. ஆனாலும், அதன் முதல் ஆசான்களின் வளைந்துகொடுக்காத ஆரவாரப் பேச்சுகள் மட்டுமே இன்னமும் வெளியுலகுக்குத் தெரியப்படுத்தப் படுகின்றன. இது இங்கு நடக்கும் அவ்வளவுக்கும் இழைக்கப்படும் அநீதியாகும். “சைனாவின் தலைவர் தான் நமக்கும் தலைவர். சைனாவின் வழியே நம் வழி” என்றார் சாருமசும்தார். யாகியா கான் கிழக்கு பாக்கிசுத்தானில் (இன்றைய வங்கதேசத்தில்) இன ஒழிப்பில் ஈடுபட்டபோது மேற்படி கொள்கை காரணமாகவே நக்சல்கள் அதை எதிர்க்காது அமைதி காத்தனர். ஏனெனில் அப்போது சைனா பாக்கிசுத்தானின் நட்பு நாடாக இருந்தது. அதேபோல, கம்போடியாவில் க்மேர் ரூசு மக்களைக் கொன்று குவித்தபோதும் இவர்கள் ஒன்றும் சொல்ல வில்லை. சீன, ரசியப் புரட்சிகளில் நிகழ்ந்த மிக மோசமான மனித உரிமை மீறல்களைக் குறித்தும் இவர்கள் அமைதி யாகவே இருந்தார்கள். திபேத்தைக் குறித்த அமைதி. நக்சல் இயக்கத்தினுள்ளும் வன்முறை மிக்க அத்துமீறல்களை நடந்துள்ளன. அவர்களுடைய பெரும்பாலான செயல் களை ஆதரிப்பது கடினம். ஆனால், அவற்றில் எதையுமே பஞ்சாப், காசுமீர், டெல்லி, மும்பை, குசராத், இன்னபிற இடங்களில் பேராயக் கட்சியும் இமக-புரிந்த பெருங் கொடுமைகளுடன் ஒப்பிடமுடியுமா?

இத்தகைய அஞ்சத்தக்க முரண்பாடுகளையும் தாண்டி சாரு மசும்தார் எழுதியவையும் பேசியவையும் பெரும்பாலும் தொலைநோக்குடையனவாகவே இருந்தன. இந்தியாவில் புரட்சிக் கனவு இன்றும் உயிருடனிருப்பதற்கு அவர் தொடங்கிய கட்சியும் அதன் பல பிரிவுக் கட்சி களுமே காரணம். அத்தகைய கனவு இல்லாத குமுகத்தைக் கற்பனை செய்து பாருங்கள். அதற்காகவாவது நாம் அவரைக் கடுமையான திறனாய்வுக்கு உட்படுத்தாமலிருக்க வேண்டும். வன்முறையற்ற போராட்டம், பொறுப் பாண்மை ஆகியன குறித்த காந்தியின் இறையுணர்வு கலந்த பசப்புச் சொற்களை நம்மைச் சுற்றிப் போர்த்திக் கொண்டிருக்கையில் சாரு மசும்தாரைக் கடுமையான திறனாய்வுக்கு உட்படுத்த நமக்கு அருகதையில்லை.

“செல்வந்தர்களுடைய சொத்து அவர்களிடமே விடப்படும். அதில் அவர் தன் தனிப்பட்ட தேவைகளுக்கு நியாயமாகத் தேவைப்படுவதைப் பயன்படுத்திக்கொண்டு மீதியைக் குமுக நலனுக்குப் பயன்படுத்துவதற்காகப் பொறுப்புடன் காப்பார்” என்று காந்தி சொன்னார்.

நக்சல்களை ஈவிரக்கமின்றிக்கொன்று குவித்த இந்திய அரசின் இக்கால மன்னர்கள், முன்பு சாரு மசும்தார் சொன்னதையே இப்போது தாமும் சொல்கின்றனர். சைனாவின் வழியே எம் வழி. இது எவ்வளவு வினோத மானது.

தலைகீழாக. உட்புறம் வெளியில் வந்து உள்ளது.

சைனாவின் வழி மாறிவிட்டது. பிற நாடுகளின் மீதும் பிறர் சொத்து மீதும் ஆதிக்கம் செலுத்தி உறிஞ்சிவாழும் வல்லரசாகி விட்டது. ஆனால் கட்சி செய்வதுதான் இன்னும் சரி. என்ன, கட்சி தன் மனதைமாற்றிக் கொண்டு விட்டது. அவ்வளவுதான்.

தண்டகாரண்யாவில் இப்போது நடப்பதைப்போலக் கட்சி, மக்களை ஈர்க்க முயலும்போது அது அவர் களுடைய ஒவ்வொரு தேவைக்கும் செவி சாய்க்கிறது. அதனால் இப்போது அது உண்மையாகவே மக்கள் கட்சி. அதன் படையும் உண்மையிலுமே மக்கள் படை. ஆனால், இந்தக் காதல், புரட்சிக்குப்பின் எவ்வளவு எளிதாகக் கசப்பான திருமணமாக மாறிவிடுகிறது. மக்கள்படை எவ்வளவு எளிதில் மக்களுக்கெதிராகத் திரும்பிவிடுகிறது. இப்போது தண்டகாரண்யாவில் பாக்சைட் தாது மலைக்குள்ளேயே இருக்கட்டும் என்று கட்சி விரும்பு கிறது. நாளை அது தன் முடிவை மாற்றிக்கொள்ளுமா? ஆனால், எதிர்காலத்தைப்பற்றிய அச்சம் இப்போது நம்மைச் செயலற்றவர்களாக்கவேண்டுமா?

நடன நிகழ்ச்சிகள் இரவு முழுக்க நடக்கும். நான் கூடாரத்திற்கு நடந்தேன். மாசெ அங்கிருந்தார். அவர் இன்னும் உறங்கவில்லை. இரவு நெடுநேரம் உரையாடி னோம். எதற்கும் இருக்கட்டும் என்று நான் கொண்டு வந்திருந்த நூலை அவருக்குத் தந்தேன். நெரூடா எழுதிய படைத் ‘தலைவரின் பாடல்கள்’ என்ற நூல் அது. “எங்களைப் பற்றி வெளியில் என்ன நினைக்கிறார்கள்?” என்று திரும்பத் திரும்பக் கேட்டார். “மாணவர்கள் என்ன சொல்கின்றார்கள்? பெண்ணுரிமை இயக்கத்தில் முன்னெடுக்கப்படும் முதன்மை இன்னல்கள் எவை?” என்னைப் பற்றியும் என் எழுத்துப் பணி பற்றியும் கேட்கிறார். என் பெருங்குழப்பங்களைப் பற்றி முடிந்த வரை உண்மையாகச் சொன்னேன். பிறகு அவர் தன்னைப்பற்றிச் சொல்லத்தொடங்கினார். அவர் கட்சியில் சேர்ந்ததைப்பற்றி, தன் துணைவர் கடந்த மே மாதம் போலி எதிர்ப்படுதலில் கொல்லப்பட்டதாகச் சொன்னார். நாசிக்கில் கைப்பற்றப்பட்ட அவர் வாரங்கல்லுக்குக் கொண்டுசென்று கொல்லப்பட்டார். “அவர்கள் அவரை மிக மோசமான சித்திரவதைக்குள்ளாக்கியிருப்பார்கள்.” மாசெ அவரைப் பார்க்கச் சென்றுகொண்டிருந்த போதுதான் அவர் கைது செய்யப்பட்டதைக் கேள்விப் பட்டார். அப்போதுமுதல் மாசெ காட்டிலேயே இருந்து விட்டார். தனக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை திருமணம் ஆயிற்று என்று நெடுநேர அமைதிக்குப்பின் சொல்கிறார். “அவரும் எதிர்ப்படுதலில்தான் கொல்லப் பட்டார்.” என்கிறார். “ஆனால், அது உண்மையாகவே நடந்த எதிர்ப்படுதல்” என்று இதயத்தை உடைக்கும் துல்லியத்துடன் சொல்கிறார்.

மாசெ-யின் நெடுங்காலச் சோகத்தை நினைத்துக் கொண்டும் அரங்கிலிருந்து வரும் மத்தள இசையையும் மிகுதியான மகிழ்ச்சிக் குரல்களையும் கேட்டுக்கொண்டும் என் பாயில் படுத்திருக்கிறேன். மாவோவினக் கட்சியின் நடுக்கொள்கையான ‘நெடுங்காலப் போர்’ என்னும் சாரு மசும்தாருடைய சிந்தனையை நினைத்துப் பார்க்கிறேன். மாவோவினர்கள் ‘அமைதிப் பேச்சுவார்த்தை’யில் ஈடுபட முன் வருவது கூட அவர்கள் தம்மை மீண்டும் தகவமைத்துக் கொள்வதற்கான நேரத்தைப் பெறுவதற்காகவும் நெடுங் காலப் போருக்குத் தேவையான படைக்கலங்களை மீண்டும் சேர்த்துக்கொள்வதற்காகவும்தான் என்று மக்கள் ஐயப்படுவதற்குக் காரணம் சாரு மசும்தாருடைய சிந்தனைதான். நெடுங்காலப் போர் என்பது என்ன? அந்தச் சிந்தனையே தவறானதா அல்லது அத்தகைய போரின் இயல்பைப் பொறுத்ததா? இங்கு தண்டகாரண்யாவில் வாழும் இந்த மக்கள் கடந்த முப்பது ஆண்டுகளாகப் போரிடாமல் இருந்திருந்தால் இப்போது அவர்கள் எங்கே, எப்படி இருப்பார்கள்?

மேலும், மாவோவினர் மட்டும்தான் நெடுங்காலப் போரில் நம்பிக்கையுள்ளவர்களா? ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற்ற நாள் முதலாகவே இந்தியாவும் ஒரு ஆதிக்க நாடாக மாறிவிட்டது. பகுதிகளைத் தன்னுடன் இணைத்துக்கொள்ளுதல், போர்தொடுத்தல் முதலியவற்றில் ஈடுபடுகிறது. அரசியல் சிக்கல்களைத் தீர்ப்பதற்குப் படைகளைப் பயன்படுத்துவதற்கு அது எப்போதுமே தயங்கியதில்லை-காசுமீர், ஐதராபாத், கோவா, நாகாலாந்து, மணிப்பூர், தெலங்கானா, அசாம், பஞ்சாப், மேற்கு வங்கத்தில் நக்சல்பாரிப் புரட்சி, பீகார், ஆந்திரா, மற்றும் இப்போது நடு இந்தியாவில் பழங்குடி மக்கள் வாழும் பகுதிகள். கேள்விமுறையின்றிப் பல்லாயிரம் மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளார்கள். இலக்கக் கணக்கானோர் சித்திரவதைக்குள்ளாக்கப் பட்டுள்ளார்கள். மக்களாட்சி என்னும் நல்ல முக மூடிக்குப் பின்புறமிருந்துகொண்டு இவை செய்யப்பட்டுள்ளன. யாரை எதிர்த்து இந்தப் போர்கள் புரியப்பட்டுள்ளன? முசுலீம்கள், கிறித்தவர்கள், சீக்கியர்கள், பொதுவுடைமை யாளர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடிமக்கள். எல்லோரையும் விட, தம்மை நோக்கி வீசப்படும் எலும்புத் துண்டுகளைக் கடித்துக்கொண்டு அமைதியாக இல்லாமல் தம் இழிநிலைக்குக் காரணம் கேட்குமளவுத் துணிச்சல் உள்ள ஏழைகளை எதிர்த்து இந்தப் போர்கள் நடக்கின்றன. எந்தக் கட்சி ஆட்சியில் இருப்பினும் இந்திய அரசு அதன் சாரத்தில் மேல்சாதி இந்துக்களின் அரசே என்பதைக் கவனிக்காமல் இருக்கமுடியாது. தம்மைப் போன்றோரைத் தவிரப் ‘பிறர்’ மீது எதிர்ப்பைக் கொண்டுள்ளவர்களின் அரசு அது. அடிமைப்படுத்தும் அரசைப்போலவே அது சத்தீசுகடில் சண்டையிடுவதற்கு நாகர்களையும் மீசோக் களையும் அனுப்புகிறது. காசுமீரில் சண்டையிட சீக்கியர் களையும், ஒரிசாவில் போரிட காசுமீரிகளையும், அசாமில் போரிடத் தமிழர்களையும் அனுப்புகிறது. இது நெடுங் காலப் போர் அல்லவென்றால் எதுதான் அத்தகைய போர்?

அழகிய, விண்மீன்கள் நிறைந்த இரவில் இவை கவலைதரும் எண்ணங்கள். சுக்தேவ் தனக்குத்தானே புன்னகைத்துக் கொள்கிறார். கணினித் திரையின் ஒளியில் அவர் முகம் தெரிகிறது. அவர் எப்போதும் தன் வேலையில் குறியாக இருக்கிறார். எதைப் பற்றிப் புன்னகைக்கிறீர்கள் என்றேன். “கடந்த ஆண்டு பூம்கல் விழாவிற்கு வந்திருந்த இதழியலாளர்களை நினைத்தேன். ஓரிரு நாட்கள் இருந்தனர். ஒருவர் என்னுடைய ஹமு துப்பாக்கியுடன் ஒளிப்படம் எடுத்துக்கொண்டார். திரும்பச் சென்றபின் கொலைகார இயந்திரங்கள் என்பதுபோல எங்களைப் பற்றிக் கூறினார்.”

கிழக்கு வெளுக்கத் தொடங்கிவிட்டது. ஆனால் இன்னமும் நடனங்கள் நிற்கவில்லை. வரிசைகள் இன்னமும் உள்ளன. நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இன்னும் ஆடிக்கொண்டுள்ளனர். “அவர்களால் நிறுத்த முடியாது” என்கிறார் தோழர் ராசு. “நாங்கள் (பயணத்துக்கு ஆயத்தமாக) உடைமைகளைக் கட்டத் தொடங்கும்வரை.

அரங்கில் தோழர் மருத்துவரைச் சந்திக்கிறேன். நடன அரங்கின் ஓரத்தில் அவர் மருத்துவ முகாம் நடத்திக் கொண்டிருந்தார். அவருடைய கொழுகொழு கன்னங் களை முத்தமிட வேண்டும்போலுள்ளது. அவர் ஒருவராக இல்லாமல் முப்பது பேராக இருந்திருக்கலாகாதா? ஆயிரம் பேராக இருந்திருக்கக்கூடாதா? தண்டகாரண்யாவின் நலம் எத்தகைய நிலையில் உள்ளது என்று கேட்டேன். அவருடைய பதில் என் குருதியை வெப்பமிழக்கச் செய்துவிட்டது. பெரும்பாலானோர் - கெரில்லாப் படை யினரையும் சேர்த்து - குருதிச் சோகையால் பாதிக்கப் பட்டுள்ளனர். அவர்களுடைய குருதியில் ஈமோகுலோபின் எண்ணிக்கை ஐந்துக்கும் ஆறுக்கும் இடையில் உள்ளது. (சராசரி இந்தியப் பெண்ணுக்குப் பதினொன்று இருக்க வேண்டும்.) குருதிச் சோகைநோய் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்குமேல் இருப்பதால் பலருக்கு எலும்புருக்கி நோய் உள்ளது.

குழந்தைகள் ‘புரத ஆற்றல் போதாமை நோயால்’ கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். (இந்நோய்க்கு மருத்துவத் துறையில் குவாசியோக்கார் என்று பெயர் என்பதைப் பின்னர் நான் தெரிந்துகொண்டேன். ஆப்ரிக்க நாடான கானாவின் கடற்கரைப் பகுதியில் வாழும் மக்கள் பேசும் கா மொழியில் இதன் பொருள்: அடுத்த குழந்தை பிறந்ததும் முதல் குழந்தைக்கு வரும் நோய். அதாவது, அடுத்த குழந்தை பிறந்தவுடன் முதல் குழந்தைக்குத் தாய்ப்பால் நிறுத்தப்படுகிறது. வேறு சத்துணவுக்கு வசதியில்லை.) “பயாபெராவில் இருப்பதுபோல அது இங்கு பெருமளவில் உள்ளது” என்கிறார் தோழர் மருத்துவர். “சிற்றூர்களில் நான் முன்பும் பணியாற்றியுள்ளேன். ஆனால், இதைப் போல எப்போதுமே பார்த்ததில்லை.

இதைத்தவிர மலேரியா, எலும்பு வலுக்குறைவு, குடற்புழுக்கள், காது, பற்களில் கடும் கிருமித் தாக்குதல், பெண்களுக்கு மாதப்போக்கு ஒழுங்காக நடவாதிருத்தல் அல்லது ஒரேயடியாக இல்லாது போதல் (primary amenorrhea) முதலிய நோய்களும் உள்ளன.

“காட்சிரோலியில் உள்ள ஓரிரு மருத்துவ மனைகளைத் தவிர இந்தக் காட்டில்வேறு மருத்துவ மனைகள் இல்லை. மருத்துவர்கள் இல்லை. மருந்துகளும் இல்லை.”

தன் சிறு குழுவுடன் அவர் புறப்படுகிறார். அபுசுமாட்-ஐ நோக்கிய எட்டு நாள் நடைப் பயணத்தில். அவர், தோழர் மருத்துவர், தானும் மாவோவின உடை அணிந்துள்ளார். எனவே அவரைக் கண்டால் காவல்துறை கொன்றுவிடும்.

இங்கு நாங்கள் தொடர்ந்து தங்குவது பாதுகாப் பானதல்ல என்கிறார் தோழர் ராசு. இடம்பெயரவேண்டும். பூம்கலை விட்டுச் செல்கையில் நிறைய பேருக்குப் பிரியாவிடை சொல்லிவிட்டுச் செல்லவேண்டியுள்ளது. அதற்கே வெகுநேரமாகிறது.

பிரிந்து செல்லும் தோழர்களுக்குச் செவ்வணக்கம்

எப்போதாவது ஒருநாள் மீண்டும் தண்டகாரண்யாவில் சந்திப்போம்

ஒன்றுசேர்தல், பிரிதல் ஆகியவற்றின்போது நடக்கும் வினைமுறைகள் ஒப்புக்குச் செய்யப்படுவன அல்ல. “நாம் மீண்டும் சந்திப்போம்” என்று சொல்கையிலேயே “ நாம் இனி மறுபடி சந்திக்காமல் போகக்கூடும்” என்றுதான் ஒவ்வொருவரும் பொருள்கொள்கின்றனர். தோழர் நர்மதா, தோழர் மாசெ, தோழர் ரூபி மூவரும் வெவ்வேறு வழிகளில் பிரிந்து செல்கின்றனர். நான் அவர்களைப் பிறகு எப்போதாவது பார்ப்பேனா?

இப்படியாக, மீண்டும் நாங்கள் நடக்கத் தொடங்கு கிறோம். ஒவ்வொரு நாளும் சூடு அதிகரிக்கிறது. டென்டு மரத்தின் முதல் பழத்தை கம்லா எனக்காகப் பறிக்கிறார். சீமை இலுப்பையைப் போன்ற சுவை. எனக்குப் புளியம் பழம் மிகவும் பிடித்துவிட்டது. இம்முறை ஓர் ஓடைக் கரையில் தங்குகிறோம். பெண்களும் ஆண்களும் முறை வகுத்துக்கொண்டு கூட்டங்கூட்டமாகக் குளிக்கின்றனர். மாலையில் அடுசில் தொகுப்பு ஒன்று தோழர் ராசுவுக்குக் கிடைத்தது. செய்திகள்:

2010 சனவரி இறுதியில் மான்பூர்ப் பகுதியில் கைது செய்யப்பட்ட 60 பேர் இன்னமும் நீதி மன்றத்தில் முன் நிறுத்தப்படவில்லை.

தென் பசுத்தாருக்குப் பெருமளவில் காவல் துறை யினர் வந்துள்ளனர். கண்மூடித்தனமான தாக்கு தல்கள் நடக்கின்றன.

பிசாப்பூர் மாவட்டம், கச்லராம் சிற்றூரில் 2009 நவம்பர் 8 அன்று டிர்கோ மாட்கா (60), கோவாசி சுக்லு (68) இருவரும் கொல்லப்பட்டனர்.

நவம்பர் 24 அன்று பங்கொடி சிற்றூரில் மாதவி பாமன் (15) கொல்லப்பட்டார்.

டிசம்பர் 3 அன்று கோரென்சாட் ஊரைச் சேர்ந்த மாதவி புத்ராம் என்பவரும் கொல்லப்பட்டார்.

டிசம்பர் 11 அன்று தர்பா பகுதியில் குமியபால் என்னும் சிற்றூரில் ஏழு பேர் கொல்லப்பட்டனர் (பெயர்கள் இன்னும் கிடைக்கவில்லை).        

டிசம்பர் 15 அன்று கோட்ரபால் சிற்றூரில் வெகோ சொம்பர், மாதவி குட்டி ஆகிய இருவரும் கொல்லப் பட்டனர். இவர்கள் கிராந்திகாரி ஆதிவாசி மகிலா சங்காத்தன் அமைப்பில் இருந்தவர்கள்.

டிசம்பர் 30 அன்று வெச்சபால் சிற்றூரில் பூனெம் பாண்டு, பூனெம் மோட்டு (தந்தை, மகன்) ஆகியோர் கொல்லப்பட்டனர்.

2010 சனவரியில் (தேதி தெரியவில்லை) கங்கா லௌரியில் உள்ள கைகா சிற்றூரில் மக்களரசின் தலைவர் கொல்லப்பட்டார்.

சனவரி 9 அன்று சாகர்கொண்ட பகுதியில் உள்ள சூர்ப்பன் குடேன் என்னும் ஊரில் நால்வர் கொல்லப் பட்டனர்.

சனவரி 10 அன்று புல்லெம் புல்லாடி என்னும் ஊரில் மூவர் கொல்லப்பட்டனர் (பெயர்கள் இன்னும் தெரியவில்லை.)

சனவரி 25 அன்று இந்திராவதி பகுதியில் தகிலோடு என்னும் ஊரில் 7 பேர் கொல்லப்பட்டனர்.

பிப்ரவரி 10 (பூமிகல் நாள்) அன்று அபுசுமாடில் தும்நார் என்னும் சிற்றூரில் கும்லி என்னும் பெண் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுப் பின்னர் கொல்லப்பட்டார். அவர் பைவெர் என்னும் சிற்றூரைச் சேர்ந்தவர்.

இந்தோ-திபேத் எல்லைக் காவல் துறையினர் 2,000 பேர் ராசுநந்தகௌன் காடுகளில் தங்கியுள்ளனர்.

கேங்கருக்கு மேலும் 500 எல்லைப் பாதுகாப்புப் படைவீரர்கள் வந்துள்ளனர்.

அத்துடன்:

கெரில்லாப் படைக்குத் திட்டமிட்ட எண்ணிக் கையில் வீரர்களைச் சேர்த்துவிட்டோம்.

சில பழைய செய்தித்தாள்களும் வந்திருந்தன. நக்சல்களைப் பற்றிய செய்திகள் நிறைய இருந்தன. அரசியல் நிலவரத்தை மிகச் சரியாகத் தொகுத்த தலைப்புச் செய்தி ஒன்று இதோ: ‘ஒழித்துக்கட்டு, கொல், அவர்களைச் சரணடைய வை’ அதற்குக் கீழாக: ‘மக்கள் நாயகத்தின் கதவுகள் பேச்சுவார்த்தைகளுக்காக எப்போதும் திறந்தே இருக்கின்றன.

பணம் சம்பாதிப்பதற்காக மாவோவினர்கள் கஞ்சா பயிரிடுகின்றனர் என்று இன்னொரு தலைப்புச் செய்தி தெரிவிக்கிறது. நாங்கள் தங்கியிருந்த பகுதியும் இப்போது நடந்து சென்றுகொண்டிருக்கும் பகுதியும் காவல்துறைக் கட்டுப்பாட்டில் இருப்பதாக மற்றுமொரு செய்தித் தலைப்புக் கூறுகிறது.

இளம் பொதுவுடைமையாளர்கள் தம் மொழி யறிவை மேம்படுத்திக்கொள்வதாக இந்தச் செய்தித்தாள் துண்டுகளை எடுத்துச் செல்கின்றனர். வானொலிச் செய்தி வாசிப்பவரைப் போன்று உரத்த குரலில் மாவோவினருக்கு எதிரான கட்டுரைகளைப் படித்தபடி அவர்கள் கூடாரத் தினுள் நடந்துகொண்டுள்ளனர்.

புது நாள். புது இடம். உசிர் என்னும் சிற்றூரில் பெரும் இலுப்பை மரங்களுக்கடியில் அமர்ந்திருக்கிறோம். மரங்கள் அண்மையில்தான் பூத்துள்ளன. அணிகலன் களைப் போன்ற தம் இளம்பச்சை நிற மலர்களைக் காடெங்கும் உதிர்த்துள்ளன. சற்றே தூக்கலான அம்மலர்களின் மணம் அங்குப் பரவியுள்ளது. ஓங்நார் எதிர்ப்படுதலுக்குப்பின் மூடப்பட்ட பட்பால் பள்ளிக் குழந்தைகளுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறோம். அந்தப் பள்ளி காவல்துறைக் கூடாரமாக மாற்றப்பட்டு விட்டது. குழந்தைகளின் வீட்டிற்கு அனுப்பப்பட்டுவிட்டனர். நெல்வாட், மூன்ஞ்மெட்டா, எட்கா, வெடோமகோட், தனோரா என்னும் ஊர்களிலுள்ள பள்ளிகளின் நிலைமையும் இதுவேதான்.

பட்பால் பள்ளிக் குழந்தைகள் வரவில்லை.

உள்ளூர் மக்களரசால் கட்டப்பட்ட மழைநீர் அறுவடை அமைப்புகளையும் பாசனக்குட்டைகளையும் பார்ப்பதற்குத் தோழர் நிதி (தேடப்படுவோர் பட்டியலில் முதன்மையானவர்) தோழர் வினோத் ஆகியோர் எங்களை நெடுந்தொலைவு நடந்து அழைத்துச் சென்றனர். வேளாண்மை தொடர்பாகத் தாங்கள் எதிர்கொள்ள வேண்டிய பலவகை இன்னல்களைப் பற்றி தோழர் நிதி சொல்கிறார். இரண்டு விழுக்காடு நிலம்தான் பாசன வசதி பெற்றுள்ளது. அபுசு மாடில் பத்தாண்டுகளுக்கு முன்பு வரை நிலத்தை உழுவதென்றால் என்னவென்றே தெரியாது. மாறாக, காட்சிரோலியில் வீரிய ஒட்டுவிதைகளும் பூச்சி மருந்துகள் என்று தவறாகக் குறிப்பிடப்படும் வேதியியல் நஞ்சுகளும் கொஞ்சம்கொஞ்சமாக பரவிக்கொண் டுள்ளன. “வேளாண் துறையில் எங்களுக்கு அவசர உதவி தேவைப்படுகிறது,” என்கிறார் தோழர் வினோத். “விதைகள், இயற்கைமுறைப் பூச்சி விரட்டிகள், நிலைபேற்று வேளாண்மை முதலியவற்றைப்பற்றித் தெரிந்தவர்கள் எங்களுக்குத் தேவைப்படுகின்றனர். சிறிதளவு உதவி கிடைத்தால் நாங்கள் நிறையச் செய்யலாம்.

தோழர் ராமு மக்களரசில் வேளாண்துறைக்குப் பொறுப்பேற்றுள்ளார். நெல், கத்தரி, கோங்கூராக் கீரை (புளித்தகீரை) வெங்காயம், முள்ளங்கியைப் போன்ற முட்டைக்கோசு முதலியன விளைந்துள்ள தோட்டங் களைப் பெருமையுடன் அவர் சுற்றிக்காட்டினார். பிறகு, முற்றிலும் வறண்டுள்ள பாசனக் குட்டை ஒன்றையும் அவர் அதேயளவு பெருமையுடன் காட்டினார். இது என்ன? “மழைக்காலத்திலும் இதில் தண்ணீர் இருப்பதில்லை. தவறான இடத்தில் தோண்டப்பட்டுவிட்டது,” என்கிறார் அவர், முகம் நிறைந்த புன்சிரிப்புடன். “இது எங் களுடையது அன்று; கொள்ளை அரசால் (அதாவது, கொள்ளையடிக்கும் அரசால்) தோண்டப்பட்டது.” இங்கு இணையான இரண்டு அரசுகள் உள்ளன, மக்களரசு, கொள்ளையரசு.

தோழர் வேணு சொன்னதை நினைக்கிறேன்: அவர்கள் எங்களை ஒழித்துவிட நினைக்கின்றனர். தாதுப் பொருள்களுக்காக மட்டுமல்ல; நாங்கள் வேறுவகையான (பொருளாதார. குமுக வாழ்முறை) மாதிரி ஒன்றை உலகத்தின் முன் வைக்கிறோம்.

அது இன்னமும் மாற்றாகவில்லை; துப்பாக்கி ஏந்திய, ஊரளவிலான தன்னாட்சி. இங்கு மிக அதிக அளவில் பசியும் பிணியும் உள்ளன. ஆனால், அது மாற்றங் களுக்கான சாத்தியக் கூறுகளைத் தோற்றுவித்துள்ளது என்பது உறுதி. உலகம் முழுமைக்கும் அல்ல. அலாசுக் காவுக்கோ டெல்லிக்கோ அல்ல. சத்தீசுகட் மாநிலம் முழுமைக்கும்கூட இது ஒத்துவராதிருக்கலாம். ஆனால், இப்பகுதிக்கான மாதிரியாக இருக்கும். தண்டகாரண்யாவுக் கானது. இதுதான் இவ்வுலகில் மிகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் கமுக்கம். தன் அழிவுக்கு எதிரான மாற்றுவழிக்கான அடித்தளத்தை அது அமைத்துள்ளது. அது வரலாற்றை மீறியுள்ளது. மிகமிக அதிகமான எதிர்ப்புக்களுக்கும் இடையில் அது தன் வாழ்வைத் தக்கவைத்துக்கொள்வதற்கான வடிவமைப்பை உருவாக்கி யுள்ளது. அதற்கும் உதவியும் கற்பனையாற்றலும் தேவைப் படுகின்றன. மருத்துவர்கள் தேவை. ஆசிரியர்கள், உழவர்கள் ஆகியோரும் தேவை.

போர் வேண்டியதில்லை.

ஆனால், போர் மட்டும்தான் கிடைக்குமாயின் அது திருப்பித்தாக்கும்.

அடுத்த சில நாட்களில் கிராந்திகாரி ஆதிவாசி மகிலா சங்காத்தன், மக்களரசுகள், தண்டகாரண்யா பழங்குடி உழவர் தொழிலாளர் சங்கம் ஆகிய அமைப்புகளில் பணியாற்றும் சில பெண்களைச் சந்திக்கிறேன். கொல்லப் பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் அச்சந்தரும் இந்த நிகழ்காலத்தில் வாழமுயன்றுகொண்டிருக்கும் சாதாரண மக்கள் ஆகியோரையும் சந்திக்கிறேன்.

சுக்கியாரி, சுக்டாய், சுக்காலி என்னும் மூன்று சகோதரிகளைச் சந்தித்தேன். அவர்கள் ஒருவேளை 40-50 வயது உடையவர்களாக இருக்கலாம். நாராயன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். பன்னிரண்டு ஆண்டு களாக கிராந்திகாரி ஆதிவாசி மகிலா சங்காத்தனில் உள்ளார்கள். காவல் துறையை எதிர்கொள்வதற்கு ஊர் மக்கள் இவர்களை அண்டியுள்ளனர். “காவலர்கள் 200-300 பேர் கூட்டமாக வருவார்கள். எல்லாவற்றையும் திருடிச் சென்றுவிடுவார்கள்: அணிகலன்கள், கோழிகள், பன்றிகள், சட்டி பானைகள், வில் அம்புகள்,” என்று சொல்கிறார் சுக்காலி. “ஒரு கத்தியைக் கூட விட்டுவைக்கமாட்டார்கள். “இன்னாரில் உள்ள அவருடைய வீடு இரண்டு முறை எரிக்கப்பட்டுவிட்டது. நாகா பட்டாலியன் ஒரு தடவையும் நடுவண் ஒதுக்கப்பட்ட படை ஒரு முறையும் அப்படிச் செய்தன. “சுக்கியாரி கைது செய்யப்பட்டு சக்தால்பூர் சிறையில் ஏழு மாதங்கள் அடைக்கப்பட்டார்.” ஒரு முறை ஆண்கள் எல்லோரும் நக்சல்கள் என்று குற்றஞ்சாட்டி அனைவரையும் திரட்டிக் காவலர்களைப் பின் தொடர்ந்தார். அவர்கள் காவல் நிலையத்தைச் சூழ்ந்து கொண்டனர். “ஆண்கள் விடுவிக்கப்படும்வரை அங்கிருந்து நகரப்போவதில்லை எனச் சூளுரைத்தனர்.” “எப்போதெல்லாம் அவர்கள் யாரையாவது பிடித்துச் செல்கிறார்களோ அப்போதெல்லாம் உடனே சென்று அவர்களைத் திரும்பக் கொண்டுவந்துவிட வேண்டும். காவலர்கள் அறிக்கை எழுதுவதற்கு முன்னர். காவலர்கள் தம் புத்தகத்தில் எழுதிவிட்டால் மீட்டுவருவது மிகக் கடினமாகிவிடும்.”

சிறுமியாக இருந்தபோதே சுக்கியாரி கடத்திச் செல்லப்பட்டு வயதான ஆண் ஒருவருடன் கட்டாய மணம் முடிக்கப்பட்டார். (அவர் தப்பிச் சென்று தன் சகோதரி யுடன் வாழ்ந்தார்.) இப்போது அவர்பெருங்கூட்டங்களை ஏற்பாடு செய்தல், கூட்டங்களில் சொற்பொழிவாற்றுதல் முதலிய செயல்களில் ஈடுபடுகிறார். ஆண்கள் தம் பாது காப்புக்கு அவரை நம்பியுள்ளார்கள். கட்சியை அவர் எப்படிப் பார்க்கிறார் என்று கேட்டேன். “ நக்சல்வாதி என்றால் என் குடும்பம் என்று பொருள். தாக்குதலைப் பற்றிக் கேள்விப்படுகையில் எங்கள் குடும்பமே தாக்கப் பட்டதாக உணர்கிறோம்” என்கிறார்.

மாவோ யார் என்று தெரியுமா என்று கேட்டேன். “அவர் ஒரு தலைவர். அவருடைய நோக்கம் நிறைவேறு வதற்காக நாங்கள் பாடுபடுகிறோம்” என்றார் வெட்கங் கலந்த புன்முறுவலுடன்.

தோழர் சோமாரி காவ்டே - ஐச் சந்தித்தேன். அவருக்கு அகவை இருபது. இந்த இளம் அகவையிலேயே சக்தால்பூரில் இரண்டாண்டுச் சிறைத்தண்டனை அனுபவித்துள்ளார். 2007 சனவரி 8 அன்று அவர் இன்னார் என்னும் சிற்றூரில் இருந்தார். தோழர் நிதி அன்று அவ்வூரில் இருந்ததாகக் கேள்விப்பட்டு 740 காவலர்கள் முற்றுகையிட்டனர். (அவர் இருந்தது உண்மைதான். ஆனால், காவலர்கள் வருவதற்குள் அவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.) ஆனால், ஊர்ப் படையினர் இருந்தனர். சோமாரியும் அதில் உறுப்பினர். அதிகாலையில் காவலர்கள் சுடத் தொடங்கினர். சுக்லால் காவ்டே, கச்ரூ கோடா ஆகிய இரண்டு சிறுவர்களை அவர்கள் கொன்றனர். பின்னர் தூசிரி சலாம், ரானை என்னும் இரண்டு சிறுவர்களையும் சோமாரியையும் சிறைப்பிடித்தனர், அந்தச் சிறுவர்கள் இருவரையும் கட்டிவைத்துச்

சுட்டுக் கொன்றனர். சோமாரியை ஏறக்குறைய உயிர் பிரியுமளவு அடித்துத் துவைத்தனர். சரக்குப்பெட்டி

யுடன் (டிரெய்லருடன்) கூடிய டிராக்டர் ஒன்றைக் கொணர்ந்து அதில் உடல்களை ஏற்றினர். அதே பெட்டியில் சோமாரியையும் உட்காரச் சொல்லி நாராயன்பூர் சென்றனர்.

தோழர் திலீப் 2009 சூலை 6 அன்று சுடப்பட்டார். அவருடைய தாய் சாம்ரியைச் சந்தித்தேன். திலீப்பைக் கொன்ற காவலர்கள் அவருடைய உடலை ஒரு விலங்கைக் கட்டுவதைப் போலத் தடியில் கட்டித் தம்முடன் எடுத்துச் சென்றதாக அவர் கூறினார். (ஒருவரைக் கொன்றபின்னர் காவலர்கள் தமக்குரிய பணப் பரிசைப் பெறுவதற்கு அந்த உடலை எடுத்துச் சென்று காட்ட வேண்டும். வேறொருவர் அதைத் திருடிச் செல்வதற்கு முன்னர். சாம்ரி காவல் நிலையம் வரை அவர்கள் பின் ஓடினார். காவல் நிலையம் செல்வதற்குள் திலீப்பின் உடல்மீது ஒரு துண்டுத் துணி கூட இல்லை. பின்னர் போகிற வழியில் ஓர் உணவகத்தின் அருகில் உடலை விட்டு விட்டு அங்கு அடு சில்களைச் சாப் பிட்டுத் தேநீர் அருந்தினர். (உணவக உரிமையாளருக்குப் பணம் தரவில்லை.)

காட்டு வழியில் தன் மகனுடைய உடலுக்குப் பின் ஓடி, அவரைக் கொன்றவர்கள் தம் தேநீரை அருந்தி முடிப்பதற்காகச் சற்றுத் தொலைவில் காத்திருக்கும் கொடுமையைச் சிறிதே சிந்தித்துப் பாருங்கள். அவர் தன் மகனுடைய உடலைப் பெறுவதற்கு அவர்கள் விடவில்லை. அதனால் அவர் மகனுக்கு முறைப்படி இறுதிச் சடங்கு களைச் செய்ய இயலவில்லை. அன்று தாம் கொன்ற மற்றவர்களைப் புதைத்த குழியின் மீது ஒரு கைப்பிடி மண்ணை அள்ளிப் போடுவதற்கு மட்டுமே காவலர்கள் அவரை அனுமதித்தனர். பழிக்குப் பழி வாங்கத் துடிக்கிறார் சாம்ரி. குருதிக்குக் குருதி.

ஆறு சிற்றூர்களை நிர்வகிக்கும் மார்சுகோலா மக்களரசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைச் சந்தித்தேன். காவல் துறை நடத்திய திடீர்த் தாக்குதல் ஒன்றை அவர்கள் விவரித்தார்கள்: அவர்கள் இரவில் வரு வார்கள். 300, 400, சில சமயங்களில் 1000 பேர் வருவார்கள். ஓர் ஊரைச் சுற்றித் தடைவேலியமைத்து மறைந்து காத் திருப்பார்கள். அதிகாலையில் வயலுக்குப் போவோரில் முதலில் செல்லும் சிலரைப் பிடித்துத் தமக்கு மனித அரணாக அவர்களை நிறுத்தி வைத்துக் கொள்வார்கள். அப்படியே ஊருக்குள் நுழைந்து, தம்மை வீழ்த்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கும் எதிர்பாராது தொட்ட வுடன் வெடிக்கும் பூபி-டிரேப் பொறிகள்  உள்ள இடங்களைக் காட்டச் சொல்லுவார்கள். (booby-trap என்பது இப்போது ஒரு கோன்டி மொழிச் சொல் லாகவே ஆகிவிட்டது. ஒவ்வொருமுறை அதைக் கேட்கும் போதும் சொல்லும்போதும் அவர்கள் புன்முறுவல் பூக்கின்றனர். காடுகளில் இவை நிறைய வைக்கப் பட்டுள்ளன. உண்மையானவையும் போலிகளும். கெரில்லாப் படைகளுங்கூட ஊரார் உதவியுடன் தான் ஊர்களைக் கடக்கும்.)

காவலர்கள் ஊருக்குள் நுழைந்தவுடன் கொள்ளை யடித்தல், திருடுதல், வீடுகளை எரித்தல் முதலிவற்றில் ஈடுபடுவார்கள். அவர்கள் நாய்களுடன் வருவார்கள். ஊர் மக்கள் தப்பிக்க முயன்று ஓடினால் நாய்கள் அவர்களைப் பிடித்துவிடும். நாய்கள் கோழிகளையும் பன்றிகளையும் துரத்த, காவலர்கள் அவற்றைக் கொன்று சாக்குப் பைகளில் எடுத்துச் செல்வர்.

சிறப்புக் காவல் அதிகாரிகளும் காவலர்களுடன் வருவர். மக்கள் தம் பணத்தையும் அணிகலன்களையும் எங்கே ஒளித்துவைத்திருப்பார்கள் என்பது அந்த அதிகாரி களுக்குத்தான் தெரியும். அவர்கள் மக்களைப் பிடித்து, ஒளித்துவைக்கப்பட்ட பணத்தையும் அணிகலன்களையும் எடுத்துக்கொள்வார்கள். பிடித்து வைக்கப்பட்ட மக்களை விடுவிப்பதற்கும் பணம் தரவேண்டும்.

அவர்கள் தம்மிடம் எப்போதும் உதிரி நக்சல் ‘உடைகள்’ சிலவற்றை வைத்திருப்பார்கள். ஒரு வேளை யாரையாவது கொல்ல முடிந்தால், அவரை நக்சல் என்று காட்டினால் வெகுமதியாகப் பணம் கிடைக்கும்; அதனால் யாரையேனும் கொன்றுவிட்டு அவர்களுக்கு நக்சல் உடைகளை மாட்டிவிட்டால் போதும்; பணம் பெறலாம். சிற்றூர்ப்புற மக்கள் தம் வீடுகளில் தங்கியிருப்பதற்கே அஞ்சுகிறார்கள்.

ஆழ்ந்த அமைதி நிலவுவது போன்று தோன்றும் இந்தக் காடு இப்போது முழுமையாக ராணுவமயமாக்கப் பட்டுவிட்டது. தடுத்துத் தேடுதல், சுடுதல், முன்னேறுதல், பின்வாங்குதல், கீழே போடுதல், செயல்படுதல் போன்ற ஆணைச் சொற்கள்  இம்மக்களுக்குத் தெரியும்! இவர்கள் தம் விளைபொருட்களை அறுவடை செய்யும்போது கெரில்லாப் படையின் பாதுகாப்பு தேவைப்படுகிறது. சந்தைக்குச் செல்வதுகூடப் படையோடு தொடர்புள்ள செயலாகிறது. சந்தையில் காட்டிக்கொடுப்பவர்கள் நிறையபேர் உள்ளனர். இதற்காகவே ஊர்ப்புறங்களில் இருந்து ஆட்களைப் பணத்தாசை காட்டிக் காவலர்கள் கொண்டு வந்துள்ளனர். நாராயன்பூரில் மட்டும் காட்டிக் கொடுப்பவர்கள் குறைந்தது 4000 பேராகிலும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆண்கள் இப்போதெல்லாம் சந்தைக்குப் போகவே முடிவதில்லை. பெண்கள் செல் கின்றனர். ஆனால் அவர்கள் கவனமாகக் கண்காணிக்கப் படுகின்றனர். அவர்கள் சிறிதளவு அதிகமாகப் பொருள் களை வாங்கினாலோ நக்சல்களுக்காகத்தான் வாங்கு கிறார்கள் என்று காவலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மருந்துகளை மிகக் குறைந்த அளவில் மட்டுமே விற்க வேண்டும் என்று மருந்துக்கடைக்காரர்களுக்கு ஆணை யிடப்பட்டுள்ளது. குறைந்த விலையில் வழங்கல் அட்டையின்பேரில் தரப்படும் சர்க்கரை, அரிசி, மண்ணெண்ணெய் முதலிய அடிப்படைப் பொருள்கள் காவல் நிலையங்களுக்கருகில் உள்ள கிடங்குகளில் சேமிக்கப்படுவதால் பெரும்பாலான மக்கள் அவற்றை வாங்க முடிவதில்லை.

‘இன ஒழிப்புக் குற்றத்தைத் தடுத்தல், அதைப் புரிவோரைத் தண்டித்தல் ஆகியன தொடர்பான ஒன்றிய நாடுகளவையின் ஒப்பந்தத்தின் 2 ஆவது பரிவு’ இன ஒழிப்பைக் கீழ்க்கண்டவாறு விளக்குகிறது:

குறிப்பிட்ட தேசியம், இனம், குல மரபு, அல்லது மதம் ஆகியவற்றைச் சார்ந்தவர்கள் அனைவரையு மோ அவர்களில் ஒரு பகுதியினரையோ அழிக்கும் நோக்கத்துடன் செய்யப்படுகின்ற கீழ்க்கண்ட குற்றங்கள்: குழுவினரைக் கொல்லுதல்; குழுவின ருடைய உடல் அல்லது மன நலத்தைக் கடுமையாகக் கெடுத்தல்; அவர்களைப் பகுதியாகவோ முற்றாக வோ ஒழிக்கும் நோக்கில் வேண்டுமென்றே அவர்களுடைய வாழ்முறைகள் மீது நிபந்தனை கனை விதித்தல்; குழுவினர் குழந்தை பெற்றுக் கொள்வதைத் தடுக்கும் நோக்கில் கட்டுப்பாடுகளை விதித்தல்; அல்லது குழுவிலுள்ள குழந்தைகளைக் கட்டாயத்தின் பேரில் வேறொரு குழுவினரிடம் அனுப்பிவிடுதல்.

நிறைய நடந்ததன் விளைவு இப்போதுதான் எனக்குத் தெரியத் தொடங்கியுள்ளது. களைத்துவிட்டேன். குளிப்பதற்கு வெந்நீர் வைத்துக்கொடுத்தார் கம்லா. இருட்டில் ஒரு மரத்தின் பின்னால் குளித்தேன். ஆனால், இரவுணவு அருந்திவிட்டு என் உறங்கும் பைக்குள் நுழைந்து உறங்க முடியாது. நாங்கள் இடம் பெயர வேண்டும் என்று தோழர் ராசு அறிவிக்கிறார். இது அடிக்கடி நிகழ்கிறது என்பதைச் சொல்லவேண்டிய தில்லை. ஆனால் இன்றிரவு கடினமாக உள்ளது. நாங்கள் புல்தரையில் திறந்தவெளியில் கூடாரமடித்திருந்தோம். தொலைவில் வெடிகுண்டு ஓசைகளைக் கேட்டிருக் கின்றோம். எங்கள் குழுவில் 14 பேர் உள்ளோம். மீண்டும் ஒருவர்பின் ஒருவராக இரவில் நடக்கத் தொடங்கினோம். சில்வண்டுகள், மலர்களின் நறுமணம்.

அன்றிரவு தங்கப்போகும் இடத்தை அடைந்தபோது மணி பதினொன்றைக் கடந்திருக்கும். பாறைகள் நிறைந்த இடம். அணி வகுத்தல். வருகைப் பதிவு. யாரோ வானொலியை இயக்குகின்றார். மேற்கு வங்கத்தில் உள்ள லால்கரில் கிழக்கெல்லைப் படையினர் மீது தாக்குதல் நடந்திருப்பதாக பீபீசீ செய்தி வெளியாகிறது. மோட்டர் பைக்குகளில் அறுபது மாவோவினர். பதினான்கு காவலர்கள் கொல்லப்பட்டனர். பத்துப் பேரைக் காண வில்லை. படைக்கலன்கள் பறிக்கப்பட்டன. அணி களிடையே மகிழ்ச்சியை எதிரொலிக்கும் முணுகல்கள் கேட்கின்றன. மாவோவினத் தலைவர் கிசென்சியுடன் நேர்காணல்.

நீங்கள் எப்போது இந்த வன்முறையை நிறுத்திப் பேச்சு வார்த்தைக்கு வருவீர்கள்?

பசுமை வேட்டை முனைப்பு நிறுத்தப்படும்போது. எப்போது வேண்டுமானாலும். நாங்கள் பேசுவோம் என்று சிதம்பரத்திடம் சொல்லுங்கள்.

அடுத்த கேள்வி: இப்போது இரவு நேரம். நீங்கள் கன்னிவெடிகளைப் புதைத்துள்ளீர்கள். படைகளுக்கு உதவுவதற்கு மேலும் அதிகமாகப் படைகள் தருவிக்கப் பட்டுள்ளன. அவர்களையும் நீங்கள் தாக்குவீர்களா?

கிசென்சி: ஆம், கண்டிப்பாக. அப்படிச் செய்யா விட்டால் மக்கள் என்னை அடிப்பார்கள்.

அணிகளிடையே சிரிப்பு பரவுகிறது. எப்போதும் விளக்கம் தருபவரான சுக்தேவ் சொல்லுகிறார்: “(நாம்) கன்னிவெடிகளைப் பயன்படுத்துவதாகத் தான் அவர்கள் எப்போதுமே சொல்கிறார்கள். அது உண்மையல்ல. நாம் குறுகிய காலத்தில் ஆயத்தம் செய்யக்கூடிய வெடிபொருள் கருவிகளைத் (குவெக)தான் பயன்படுத்துகிறோம்.

ஆயிரம்-விண்மீன் விடுதியில் மற்றுமொரு ஆடம்பர அறை. எனக்கு உடல்நிலை சரியில்லை. மழை பெய்யத் தொடங்குகிறது. சிறு நகையொலிகள். கம்லா என் மீது பாய் ஒன்றைப் பரப்புகிறார். எனக்கு வேறென்ன வேண்டும்? மற்றவர்கள் தாம் படுத்திருந்த பாய்களைத் தம்மைச் சுற்றி உருட்டிக்கொள்கின்றனர்.

அடுத்த நாள் காலையில் லால்கரில் எடுக்கப்பட்ட கணக்கின்படி 21 பேர் இறந்ததாகவும் 10 பேர் காணவில்லை என்றும் தெரிகிறது.

இன்று காலை தோழர் ராசு அருள்பாலிக்கிறார். மாலை வரை நாங்கள் இடம்பெயர வேண்டியதில்லை.

தோழர் சுக்தேவுடைய கணினி கதிரொளி ஆற்றலைக் கொண்டு இயங்குகிறது. விளக்கை மொய்க்கும் விட்டில்பூச்சிகளைப் போல ஓரிரவு மக்கள் கணினியைச் சுற்றித் திரண்டுள்ளனர். ‘இந்தியத் தாய்’ நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டுள்ளனர். அவர்களுடைய துப்பாக்கிகள் வானத்தைப் பின்னணியாகக் கொண்டு நிறுத்திவைக்கப் பட்டுள்ளன. கம்லாவுக்கு நிகழ்ச்சியில் ஆர்வமில்லை போலுள்ளது. திரைப்படம் பார்க்கப் பிடிக்குமா என்றேன். “இல்லை அக்கா. எதிர்பாராது வீழ்த்தும் நிகழ்வுகள் தொடர்பான திரைப்படத் துண்டுகளைப் பார்ப்பதுதான் பிடிக்கும்.” பின்னர் அவற்றைப் பற்றித் தோழர் சுக்தேவிடம் கேட்டேன். உடனே ஒரு துண்டுப் படத்தை எனக்குப் போட்டுக் கொட்டினார்.

தண்டகாரண்யா, ஆறுகள், அருவிகள், இலை உதிர்ந்த மரக்கிளை, பாடும் பறவை முதலியவற்றுடன் அந்தப் படம் தொடங்குகிறது. பிறகு திடீரென ஒரு காட்சி. தோழர் ஒருவர் குவெக-வை மின்கம்பங்களுடன் இணைக்கிறார். பிறகு அதை உலர்ந்த இலைகளால் மறைத்துவைக்கிறார். மோட்டார் பைக் அணிவகுப் பொன்று வெடித்துத் தகர்க்கப்படுகிறது. எங்கு பார்த் தாலும் சிதறிய உடல்களும் எரிந்துகொண்டிருக்கும் பைக்குகளும். படைக்கலன்கள் பறிக்கப்படுகின்றன. அச்சத்தில் உறைந்து நிற்கும் மூன்று காவலர்கள் கட்டிவைக்கப்படுகின்றனர்..

யார் இதைப் படமெடுக்கிறார்கள்? இந்தச் செயல் பாடுகளை இயக்குபவர் யார்? சிறைப் பிடிக்கப்பட்ட காவலர்கள் சரணடைந்தால் விடுவிக்கப்படுவார்கள் என்று யார் அவர்களுக்கு உறுதியளிப்பது? (அந்தக் காவலர்கள் விடுவிக்கப்பட்டதைப் பின்னர் நான் உறுதி செய்து கொண்டேன்.)

அந்த மென்மையான, நம்பிக்கையளிக்கும் குரலை நான் அறிவேன். அது தோழர் வேணுவுக்குரியது.

“எதிர்பாராது வீழ்த்தும் அந்த நிகழ்வு கூடூரில் நடந்தது” என்கிறார் தோழர் சுக்தேவ்.

ஊர்கள் எரிக்கப்படும் கொடுமைகளை நேரில் பார்த்தவர்களும் இறந்தவர்களுடைய (கொல்லப்பட்டவர் களுடைய) உறவினர்களும் சான்று பகர்தல் முதலிய காட்சிகள் உள்ள படத்துண்டு ஒன்றையும் அவர் வைத்துள்ளார். எரிக்கப்பட்ட வீடொன்றின் தீய்ந்த சுவரில் இப்படி எழுதியுள்ளது: நாகா! கொல்வதற்கென்றே பிறந்தவன்!

பசுமை வேட்டை முனைப்பின் பசுத்தார் கிளைப் பணி தொடங்கப்பட்டதைக் குறிப்பதாகச் சிறுவர் ஒருவருடைய விரல்கள் வெட்டிவீசப்பட்டன. அச் சிறுவரைப் பற்றியும் படத்தில் காட்டுகின்றனர். (என்னுடன் செய்யப்பட்ட தொலைக்காட்சி நேர்காணல் கூடக் காட்டப்பட்டுள்ளது. நான் படிக்கும் அறை. என் நூலகம். விநோதந்தான்.)

இரவில் மற்றுமொரு நக்சல் தாக்குதல் பற்றி வானொலியில் செய்தி. பீகாரில் சாமூய் என்னும் பகுதியில். பதினைந்து மாவோவினர் ஒரு சிற்றூரைத் தாக்கி கோரா இனப்பழங்குடிகள் பத்துப் பேரைக் கொன்றார்கள். காவல்துறைக்கு அவ்வின மக்கள் காட்டிக்கொடுத்ததால் ஆறு மாவோவினர்கள் கொல்லப்பட்டனர். அதற்குப் பழிவாங்குவதற்காகத்தான் இந்தத் தாக்குதல் நடத்தப் பட்டது என்று வானொலிச் செய்தி கூறுகிறது.

இந்தச் செய்தி உண்மையாகவும் இருக்கலாம், அல்லது புனைவாகவும் இருக்கலாம் என்று நாம் அறிவோம். உண்மையாக இருப்பின் இது மன்னிக்க முடியாதது. தோழர்கள் ராசுவும் சுக்தேவும் மகிழ்ச்சி யற்றவர்களாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது.

சார்க்கன்டிலும் பீகாரிலும் இருந்து வரும் செய்திகள் வருத்தந்தருகின்றன. பிரான்சிசு இந்துவார் என்னும் காவலர் கொடுமையான முறையில் தலை கொய்யப்பட்ட

நிகழ்வை இன்னும் யாரும் மறக்கவில்லை. படையேந்திய போராட்டத்தின் ஒழுங்கு எவ்வளவு எளிதில் மிகக் கீழ்த்தரமான வன்முறையில் முடிந்துவிடக்கூடிய, அல்லது சாதிகள், குழுக்கள், வேற்று மதத்தினர் ஆகியோரிடையில் மோசமான சண்டைகளாக மாறிவிடக்கூடிய வாய்ப் புள்ளது என்பதை அந்நிகழ்வு அனைவருக்கும் நினை வூட்டியது.

இந்திய அரசு தனக்கே உரித்தான வழிகளில் அநீதியை நிறுவனமயமாக்கிவிட்டது. அதன்மூலம் இந்நாட்டைப் பெரும் கிளர்ச்சிகள் மண்டியதாக்கி விட்டது. அக் கிளர்ச்சிகள் எப்போதுவேண்டுமானாலும் வெடிக்கக் கூடும். மாவோவினத் தலைவர்களைக் குறி பார்த்துக் கொல்வதன்மூலம் வன்முறையை ஒழித்து விடலாம் என்று அரசு நினைத்தால் அது தவறு. மாறாக, வன்முறை அதிக மாகும், பரவும். அப்போது பேச்சு வார்த்தை நடத்துவதற்கு யாரும் இருக்கமாட்டார்கள்.

நான் அங்கு இருந்த கடைசிச் சில நாட்களில் நாங்கள் இந்திராவதிப் பள்ளத்தாக்கில் உள்ள வளமான, அழகுமிக்க பகுதிகளில் சுற்றுகிறோம். ஒரு மலையருகே செல்கையில் ஆற்றின் மறுகரையில் எங்களைப் போலவே மற்றொரு அணியில் மக்கள் அதே திசையில் நடந்துசெல்வதைப் பார்க்கிறோம்.

கூடூரில் நடக்கவிருக்கும் அணை-எதிர்ப்புக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவர்கள் செல்வதாகச் சொல்கின்றனர். அவர்கள் (ஒளியாமல்) வெளிப்படையாகவும் படைக் கலன்கள் இல்லாமலும் உள்ளனர். பள்ளத்தாக்கைக் காக்க முயலும் உள்ளூர் நடைப் பயணம் நான் இவர்களை விட்டுவிட்டு அவர்களுடன் சேர்ந்து கொள்கிறேன்.

கடந்த சில நாட்களாக நாங்கள் நடந்து திரிந்த பகுதி முழுவதையும் போத்காட் அணை மூழ்கடித்துவிடும். அந்தக் காடுகள் அவ்வளவும், அதன் வரலாறு முழுமையும், அந்தக் கதைகள் அனைத்தும். நூற்றுக்கும் மேற்பட்ட சிற்றூர்கள்.

அப்படியாயின், அதுதான் திட்டமா? லோகான்டி குடாவில் உள்ள ஒருங்கிணைந்த எஃகு ஆலையும் கேசுகல் மலைப் பகுதியில் உள்ள பாக்சைட் சுரங்கமும் அலுமினிய உருக்காலையும் தமக்கென்றே அந்த ஆறு முழுவதையும் பெறுவதற்காக மக்களை எலிகளைப் போல மூழ்கடித்தல்.

நாமனைவரும் ஏற்கெனவே பல முறை கேட்டதைத் தான் பல மைல் தொலைவிலிருந்து வந்த மக்களும் அந்தக் கூட்டத்தில் சொல்கின்றனர். நாங்கள் நீரில் மூழ்கி இறந்தாலும் சரி, இந்த இடத்தைவிட்டு அகலமாட்டோம்! டெல்லியில் இருந்து ஒருவர் அவர்களுடன் இருப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அவர்களைப்பற்றி எதுவும் தெரியாததும் அக்கறைப்படாததுமான கொடிய நகரம் டெல்லி என்று அவர்களிடம் சொன்னேன்.

தண்டகாரண்யா வருவதற்குச் சில வாரங்களுக்கு முன்னர்தான் நான் குசராத் சென்றிருந்தேன். சர்தார் சரோவர் அணை ஏறக்குறைய தன் முழு உயரத்தை எட்டி யிருக்கிறது. அங்கு என்னென்ன ஆகும் என்று நர்மதா போராட்ட இயக்கம் கூறியிருந்ததோ ஏறத்தாழ அவை ஒவ்வொன்றும் உண்மையாகிவிட்டன. அப்புறப்படுத்தப் பட்ட மக்கள் புது இடங்களில் குடியேற்றப்படவில்லை. இதைச் சொல்லவே வேண்டியதில்லை.

வாய்க்கால்கள் கட்டப்படவில்லை. அதற்குப் பணம் இல்லை. அதனால் நர்மதையாற்று நீர் வறண்டுவிட்ட சபர்மதி ஆற்றுப் படுகைக்கு மாற்றிவிடப்பட்டுள்ளது. (சபர்மதி ஆற்றின் குறுக்கே பல்லாண்டுகளுக்கு முன்னரே அணைகள் கட்டப்பட்டுவிட்டன. நீரில் பெரும்பங்கு நகர்களுக்கும் பெரிய ஆலைகளுக்கும் தரப்படுகிறது. ஆற்றில் நீரில்லாததால் ஆறு கடலைச் சந்திக்கும் இடத்தில் உப்பு நீர் கடலில் இருந்து வந்துவிடும். இதன் விளைவுகளை மட்டுப் படுத்துவது இயலாத செயல்).

பெரிய அணைகள் நவீன இந்தியாவின் திருக் கோவில்கள் என்ற நம்பிக்கை தவறாக இருப்பினும் ஒரு காலத்தில் அப்படிப்பட்ட நம்பிக்கை இருந்ததைப் புரிந்து கொள்ளமுடிகிறது. ஆனால் இப்போது, நடந்து முடிந்த வற்றைப் பார்க்கையில், நாம் கற்றுக்கொண்டுள்ள பாடங்களை எண்ணுகையில், பெரிய அணைகள் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் என்றே சொல்லவேண்டும்.

உள்ளூர் மக்களின் எதிர்ப்பின் காரணமாக 1984இல் போத்காட் அணைத்திட்டம் கைவிடப்பட்டது. இப் போது அதை யார் தடுப்பது? அடிக்கல் நாட்டப்படுவதைத் தடுப்பது யார்? இந்திராவதி அணைதிருட்டுப்போவதை யார் நிறுத்துவது? யாரோ செய்யவேண்டும்.

கடைசி இரவில் செங்குத்தான மலையின் அடி வாரத்தில் தங்குகிறோம். நாளை காலை அம்மலை மீது ஏறிச் சாலையை அடைந்தால் மோட்டார்பைக்கில் என்னை அழைத்துப்போவார்கள். நான் முதலில் நுழைந்ததன் பின் காடு மாறியுள்ளது. சிராவுஞ்சி, இலவு, மா மரங்கள் பூக்கத் தொடங்கிவிட்டன.

அப்போதுதான் பிடித்த மீன்களைப் பானை நிறைய அனுப்பி வைத்துள்ளனர் கூடூர் மக்கள். அத்துடன் எனக்கு ஒரு பட்டியலையும் இணைத்துள்ளனர். காட்டில் கிடைப்பதும் தாம் விளைவிப்பதும் என 71 வகைப் பழங்கள், காய்கள், பருப்புகள், பூச்சிகள் ஆகியவற்றின் பெயர்களும் அவற்றின் சந்தை விலையும் அதில் உள்ளன. அது வெறும் பட்டியல்தான். ஆனால், அது அவர் களுடைய உலகைப் பற்றிய வரைபடமும் ஆகும்.

காட்டு அஞ்சல் வந்துவிட்டது. எனக்கு இரண்டு அடுசில்கள். தோழர் நர்மதாவிடமிருந்து ஒரு பாடலும் மடிக்கப்பட்ட மலரும். மாசெயிடமிருந்து அன்புகனியும் கடிதம். (யார் அவர்? அவரை நான் எப்போதாவது அறியப்போகின்றேனா?)

என் ஐப்பாட் கருவியில் இருந்து இசையைத் தன் கணினிக்குப் படியெடுத்துக்கொள்ளலாமா என்று தோழர் சுக்தேவ் கேட்கிறார். ‘அந்த நாளுக்கு நாங்கள் சான்று பகர்வோம்’ என்ற பைசு அகமது பைசு-வின் பாடலை இக்பால் பானோ பதிவு செய்துள்ளார். அதைக் கேட்கிறோம்.

கொடுங்கோலன் சியா-உல்-கக் பாக்சைட் தானை ஆண்டபோது அடக்குமுறை மிக அதிகமாக இருந்த காலத்தில் லாகூரில் நடந்த புகழ்மிக்க பாட்டரங்கின் போது அது பதிவு செய்யப்பட்டது.

(அரசுக்கு) முரணனான கருத்துள்ளவர்களும் வெறுக்கப்பட்டவர்களும் உயரத்தில் அமர்ந்திருக்கையில்

எல்லாக் கிரீடங்களும் பறிக்கப்படும், எல்லா அரியணைகளும் வீழ்த்தப்படும்

அந்த நாளை நாங்கள் பார்க்கத்தான் போகின்றோம்.

அப்போது 50,000 பேர் அடக்குமுறையை எதிர்த்துப் பாடினர். புரட்சி வாழ்க! புரட்சி வாழ்க! (inளூரடையb ணiனேயயென) இவ்வளவு ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த மந்திரம் இந்தக் காட்டில் எதிரொலிக்கிறது. கூட்டணிகள் அமைவது விநோதமானது.

“மாவோவினருக்கு அறிவுசார் ஆதரவும் பொருள்சார் ஆதரவும் தரும் தவறைச் செய்பவர்களுக்கு” உள்துறை அமைச்சர் மறைமுகமான எச்சரிக்கைகளை வெளியிட்டு வருகிறார். இசைப் பதிவுகளைப் பகிர்ந்துகொள்வதும் இதில் அடங்குமா?

அதிகாலையில் தோழர் மாதவ், தோழர் சூரி, இளந்தோழர் மங்டு, மற்றவர்கள் அனைவருக்கும் பிரியா விடை சொல்கிறேன். தோழர் சந்து பைக்குகளை ஏற்பாடு செய்வதற்குச் சென்றுள்ளார். அவர் முதன்மைச் சாலை வரை என்னுடன் வருவார். தோழர் ராசு வரமாட்டார். மலையேறுவது அவருடைய முழங்கால்களுக்கு மிகக் கடும் சுமையாக இருக்கும்.

தோழர் நிதி (மிகவும் தேடப்படுபவர்) தோழர்கள் சுக்தேவ், கம்லா, மேலும் ஐந்து பேர் என்னை மலைமீது கொண்டுசெல்வர். நாங்கள் நடக்கத் தொடங்கியதும் நிதியும் சுக்தேவும் போகும் போக்கில் ஒரே நேரத்தில் தத்தம் துப்பாக்கிகளின் பாதுகாப்புப் பூட்டை விடுவிக்கிறார்கள். அவர்கள் இதைச் செய்வதை நான் இப்போதுதான் பார்க்கிறேன்.

‘எல்லை’யை நெருங்கிக்கொண்டிருக்கிறோம். “நாம் சுடப்பட்டால் என்ன செய்ய வேண்டுமென்று தெரியுமா?” என்று போகும் போக்கில் சுக்தேவ் கேட்கிறார். உலகில் மிக இயல்பாகச் செய்யக்கூடிய ஒன்றைப் பற்றிக் கேட்பதைப் போல.

“ஆம், முடிவில்லா உண்ணாநோன்பை உடனடியாக அறிவித்து விடவேண்டும்,” என்றேன்.

அவர் ஒரு பாறை மீதமர்ந்து சிரித்தார். ஒரு மணி நேரம் ஏறினோம். சாலைக்குச் சற்றே கீழ்ப்பகுதியில், ஒளிந்திருந்து தாக்குபவர்களைப்போல ஒதுக்குப்புறப் பாறைமீது அமர்ந்து பைக்குகளின் ஓசை வருகிறதா என்று பார்த்திருந்தோம். அவை வந்தவுடன் பிரியா விடை சொல்லிக்கொள்ள அதிக நேரம் எடுத்துக்கொள்ளக் கூடாது.

நான் திரும்பப் பார்த்தபோது அவர்கள் இன்னும் அங்கேயே இருந்தனர். கைகளை ஆட்டிக்கொண் டிருந்தனர். சிறு முடிச்சுப் போலத் தெரிந்தனர். வெளி யுலகம் தன் அச்சந்தரும் கெட்ட கனவுகளுடன் வாழ் கையில், தம் நல்ல கனவுகளுடன் வாழும் இம்மக்கள்.

ஒவ்வோர் இரவும் நான் அந்தப் பயணத்தைப் பற்றி நினைக்கிறேன்.

அந்த இரவு நேர வானம். காட்டு வழி யிடைச் செல்லும் அந்த வழிகள். தோழர் கம்லாவின் செருப்பு களினூடே தெரியும் அவருடைய குதிகால்கள் என் கை விளக்கொளியில் தெரிகின்றன. அவர் இட.ம் மாறிக் கொண்டேயிருப்பார் என்று நான் அறிவேன். நடைப் பயணத்தில். தனக்காக மட்டுமன்றி, நாம் அனைவரும் தொடர்ந்து நம்பிக்கையை உயிருடன் வைத்திருப்பதற்காக.

நன்றி : அவுட் லுக்

(உங்கள் நூலகம் ஜூலை 2010 இதழில் வெளியானது)

Pin It