இந்தியப் பெண்ணியத்தைப்பற்றிப் பேசும் போது முதலில் சங்க இலக்கிய தமிழ்ப் பெண்களைப் பற்றிய முன்னுரையே காலத்தாலும் கருப்பொருளாலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய பெண்ணியமாக இருக்கிறது. சங்க காலப் பெண்பால் கவிஞர்கள் என்று பார்த்தால் 26 கவிஞர் களை குறிப்பிடலாம் .(எண்ணிக்கையில் சிலர் வேறு படக் கூடும்). பெண்கள் சில குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்தவர்களாக இல்லாமல் பல்வேறு இனத்தைச் சார்ந்தவர்களாக இருப்பதைப் பார்க்கும் போது பெண்களுக்குக் கல்வி பொதுவான ஒன்றாக இருந்ததை உணர முடிகிறது. குறமகள், குறத்தியார் என்ற அடைமொழிகள் இதை உணர்த்துகின்றன.

சங்க இலக்கியத்தில் க.ற்பு என்பது திருமணமான பெண்ணுக்குரிய ஒழுக்கமாக மட்டுமே காட்டப்பட்டுள்ளது. "மாசு இல்லாத கற்பு' என்ற சொல் ஏறத்தாழ பல பாடல்களில் நற்: 15, அறம் 66, 144, 116 பயின்று வந்துள்ளதைக் கொண்டு இதனை உணரலாம். இக்கவிதைகள் மனிதனின் வாழ்க்கைக்கு உயிர்நாடியாக பெண் விளங்கியதையும் பெண்களுக்கு சிலவகை உரிமைகள் இருந்தன என்பதையும் சமூக வாழ்வில் இரண்டாம் நிலையில் பெண்கள் இருந்தார்கள் என்பதையும் உணர்த்தும் சான்றுகளாக உள்ளன.

கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்களுக்கு இருந்திருக்கிறது எனினும், தெரிவு செய்யப்பட்ட கணவன் தவறு செய்யின் செய்த தவறை சுட்டிக்காட்டி அவனைத் திருத்த முயல்வது மட்டுமே பெண்ணின் கடனாக இருந்தது. அவன் செய்த தவறுக்காக அவனைத் தண்டிப்பதோ விலக்குவதோ சமூகத்தில் விளையாத கருத்தாக்கமாகவே இருந்தது என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. சங்க காலத்துப் பெண்கள் கணவனின் போக்கைத் தடை செய்ய முடியாது. கணவன் மீது அவர்கள் கொள்ளும் அன்பினை வைத்தே அவர்களின் பெருமை அடையாளம் பெறும்.

வடமொழியில் மூத்த வேதமான ரிக் வேதத்தில் 267 ரிஷிகள் இருந்தனா என்றும் இவர்களில் பெண் ரிஷிகளின் எண்ணிக்கை இருபது எனவும் "ஆர்ஷானுக்கரமணி' எனும் நூல் தெரிவிக்கிறது. "ப்ரஹத்தேவதா' எனும் நூல் 27 பெண் கவிஞர்கள் இருந்ததாக தெரிவிக்கிறது. கணபதி சாஸ்திரிகள் 12 பெண் ரிஷிகள் இருந்ததாக சொல்கிறார். கா.ஸ்ரீ.ஸ்ரீ.ரிக் வேதத்தில் 24 பெண் கவிஞர்கள் இருந்தனர் என்று பட்டியல் தருகிறார். எண்ணிக்கையில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் சுவாமி விவேகானந்தர் சிகாகோ சர்வதேச சபையில்  "வேதகாலத்தில் பெண்கள் ரிஷிகளாக இருந்தார்கள்' என்று பெருமையுடன் குறிப்பிட்டதை கருத்து வேறுபாடின்றி ஏற்றுக் கொள்ள முடியும்.

குடும்பம், குடும்ப நலன், குடும்ப உறவில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான காரணங்கள், தாம்பத்ய உறவின் சிக்கல்கள், கணவனின் பரத்தையர் பிரிவு, அதைப் பொறுக்க முடியாத பெண்ணின் இயல்பான எழுச்சி. இப்படியாக பெண்களின் உலகம் முரண்பாடுகள் கொண்ட இந்த இரு வேறு இனக்குழுவிலும் இணைகோடுகளாகவே இருந்தது என்பதுதான் அதிசயத்தக்க உண்மை. ரிக் வேத பெண் ரிஷிகளின் கவிதைகளும் சங்க இலக்கியப் பெண் கவிஞர்களின் கருப்பொருளின் மையப்புள்ளியாய் ஆண் சார்ந்தும் குடும்பம் சார்ந்தும் இயங்கியதைக் காணலாம்.

பக்தி இயக்க காலத்தில் தோன்றிய பெண் கவிஞர்கள், மராத்தியில் ‡ சக்குபாய், ஜானாபாய், தமிழில் ‡ ஆண்டாள், காரைக்கால் அம்மையார், ராஜஸ்தானில் ‡ மீராபாய், கர்நாடகாவில் ‡ அக்கா மகாதேவி, இந்தியில் ‡ மகாதேவி வர்மா, மலையாளத்தில் ‡ லலிதாம்பிகா அந்தரஜ்னம், வங்கத்தில் ‡ ஆஷாபூர்ணதேவி என்று கடவுள் என்ற பரமாத்மாவை நோக்கி காதல் பக்தியுடன் பாடியப் பெண்களின் பாடுபொருளும் ஒரே தளத்தில் பயணம் செய்தது. "இயற்கை என் கருப்பை அதில் சிந்தும் வித்துகளின் தந்தையும் நானே' (Nature is my yoni, I am the seed giving father) என்று கீதையின் கண்ணன் சொல்லும் தத்துவம் ஆண்‡பெண் உறவையும் ஆணின் சமூக மேலாண்மையையும் காட்டும்.

இந்தியத் தேசியம் கட்டமைக்கப்பட்ட காலகட்டத்தில் கண்ணுக்குப் புலப்படாத இந்த மையப்புள்ளியைச் சுற்றி இந்தியப் பெண்ணியம் கட்டமைக்கப்பட்டது. மேற்கத்திய பெண்ணியத்திற்கு எதிராக (Non Western) இந்தியப் பெண்ணியம் கட்டி எழுப்பப்பட்டது. பெண்மையின் வலிமையைச் சக்தியை அடிப்படையாகக் கொண்டே இந்திய நாகரிகம் என்னும் மாளிகை எழுப்பப்பட்டிருக்கிறது என்று சரோஜினிதேவி போன்றவர்கள் குரல் கொடுத்தது இந்த பின்னணியில் தான். பெண் தெய்வமாக்கப்பட்டதும், சக்தியின் வடிவமாக கொண்டாடப்பட்டதும் இந்தப் பின்னணியில் தான். இக்கருத்துருவாக்கங்கள் இந்தியப் பெண்ணியத்தின் அடையாளமாக முன்னிருத்தப்பட்டன. இந்தியப் பெண்ணியம் இந்திய விடுதலைப் பேராட்ட வரலாற்றுடன் இணைந்து வளர்த்தெடுக்கப்பட்டது. ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி என்று வகுத்து பெண்ணடிமைத்தனத்தை சட்டமாக்கிய மனுநீதியை எதிர்த்துக் குரல் கொடுக்கும் விழிப்புணர்வு ஆங்கில ஆட்சிக்குப் பின்னரே பெண்களுக்கு ஏற்பட்டது. பெண்களுக்கு சுதந்திரம், உரிமை, விதவை மறுமணம், உடன்கட்டை எதிர்ப்பு, பெண்கல்வி என்று பெண்ணியம் விழிப்புணர்வு பெற்றது.

 சுவர்னகுமாரிதேவி தலைமையில் 1886ல் பெண்கள் கூட்டமைப்பு (Ladies association) உருவானது. 1917, மே மாதம் 8ஆம் நாள் சென்னையில் அன்னிபெசண்ட் அம்மையார் தலைமையில் இந்தியப் பெண்கள் கூட்டமைப்பு உருவானது. ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குப் பின்னர் ஏற்பட்ட தேசிய எழுச்சியில் தான் முதன் முதலில் இந்தியப் பெண்கள் போராட்டக் களத்தில் பங்கேற்றனர். ஆங்கிலேயர் கொணர்ந்த நிறுவனக் கல்வி முறையும் பெண்களின் விழிப்புணர்வுக்கு தூண்டுகோலாக இருந்தது.

 "இவற்றிற்கெல்லாம் மேலாக மராட்டியத்தில் தோன்றிய ஜோதிபாபூலே (1827‡1890) என்பவரே முதன் முதலில் பெண் தனித்துவம் வாய்ந்தவள் என்று குரல் கொடுத்தவர் ஆவார். ஜோதிபாபூலே தான் முதன் முதலில் சாதியத்திற்கும் பெண்ணடிமைத்தனத்திற்கும் உள்ள உறவை வெளிப்படுத்தினார். '(இரா. பிரேமா, பெண்ணியம் பக். 176).    தமிழகத்தில் தந்தை பெரியாரின் பெண்ணிய சிந்தனைகள் மிகப்பெரிய சமூக மாற்றங்களை ஏற்படுத்தின. குஷ்பு பிரச்சனையாகட்டும், கண்ணகி சிலை விவகாரமாகட்டும் தந்தை பெரியாரின் பெண்ணியக் கருத்துக்களைத் தொட்டுச் செல்லாமல் எவராலும் பெண்ணியம் பேச முடியாத அளவுக்குப் பெண்ணியத் தளத்தில் இன்றுவரைத் தொடர்ந்து வருகிறது தந்தை பெரியாரின் குரல்.

இக்கட்டுரையில் தமிழ் மொழி தவிர்த்து பிற வட இந்தி மொழிகளில் இந்தியப் பெண்ணியம் பயணிக்கும் தளத்தை அடையாளம் காட்டுவதன் மூலம் தமிழ்ப் பெண்ணியத்துடன் கை கோர்த்து நடக்கும் ஒப்புமையை மறுபக்கமாக்கி வாசகனை அடுத்தக் கட்ட நகர்வுக்கு இழுத்துச் செல்ல முடியும் என்று நம்புகிறேன். இந்தியப் பெண்ணியம் அடையாளப்படுத்தும் மரபு சார்ந்த அரசியல் நிறுவனங்களை ஆராய்ந்து பெண்கள் ஏன் நசுக்கப்படுகிறார்கள், அதற்கான காரணங்கள் எவை, என்று ஆராயும்போது தனிமனித வாழ்வில் பெண்கள் நசுக்கப்படுவது போலவே பொதுவாழ்விலும் பெண்கள் நசுக்கப்படுகின்றனர் என்று உணர்ந்தார்கள்.

மனித மறு உற்பத்தி, திருமணச் சடங்கு, கட்டாய இருபாலர் உடலுறவு, தாய்மை இவற்றின் பெயரால் பெண்கள் கட்டுப்படுத்தப்படுவதும் தனிநபர் வழக்கமே சமூக அமைப்பின் கட்டுப்பாடுகளாக ஆக்கப்பட்டு அவற்றை ஏற்றுக் கொள்ளுமாறு பெண்கள் கட்டாயப்படுத்தப்படுவதைக் காணலாம். பாதிதூரம் வந்த பின் அவள் திரும்பிப் பார்த்தாள்

காணவில்லை அவள் கடந்து வந்த பாதையை

வயல்களில்லை வீடுகளில்லை

மனிதர்கள் இல்லை எதுவுமில்லை

எங்கிருந்து அவள் புறப்பட்டாள்

என்பதற்கான

எந்த தடயங்களும் இல்லை

யாரோ அவளுக்குப் பின்னால்

கவனமாக

அவள் வாழ்வின் அடையாளங்களை

துடைத்துச் சென்றிருக்கக் கூடும்

என்று இந்தி கவிஞர் ஜியோட்சனா மிலன் பெண்ணுக்கான தனித்துவங்களும் பயணங்களும் அடையாளங்களும் சமூகத்தால் துடைக்கப்படுவதை தன் கவிதையில் பதிவு செய்துள்ளார். பெண்ணியத் திறனாய்வில் காத்லின் வீலர் தன்னிலை மீதான ஒடுக்கு முறையிலிருந்து சமுதாயத்தை புலனாய்வு செய்வதையும் அந்தரங்கமே அரசியல் என்பதையும் வலியுறுத்துவார்.

இருட்டு அந்த இருட்டு

அவளுக்குள்ளும்

கிணற்றைச்சுற்றி எழுப்பப்பட்டிருக்கும்

சுற்றுச்சுவரைப்போல

அவளைச் சுற்றி இருட்டு

வெளிச்சத்தின் தடயமில்லாத இருட்டு

என்று பெண்ணைச் சுற்றி மட்டுமல்ல பெண்ணுக்குள்ளும் இருக்கும் ஆண் சமூகச் சிந்தனைகள் உருவாக்கி இருக்கும் இருட்டை வெளிச்சப்படுத்துவார் இந்திக் கவிஞர் அனாமிகா. புத்தகங்களும் வாசிப்புகளும் நிறுவனக்கல்வி முறையும் பெண்ணியத்தில் ஏற்படுத்திய சிந்தனை மாற்றங்கள் இதுவரை யுகம் யுகமாய் உறுதியானதாக ஆணாதிக்க சமமூகத்தால் கட்டி எழுப்பப்பட்டிருந்த குடும்பம், வீடு என்ற கட்டுமானத்தை அசைத்துப் பார்த்தது.

செங்கல் சிமெண்ட் மரத்தால்

கட்டுக்கோப்பாக உறுதியாக

கட்டப்பட்டிருப்பதாக நம்பப்படும்

வீட்டை அதன் பலத்தை அடித்தளத்தை

அசைத்துப் பார்க்கிறது

புத்தகங்களும்

புத்தகங்களில் ஒட்டிக்கொண்டிருக்கும்

கரையான்களும்

என்று மராத்திக் கவிஞர் கவிதாமகாஜனின் கவிதை வெளிப்படையாகவே பேசுகிறது. பெண் அழகியல் இரண்டுமே ஒன்றாக கருதப்படுவதால் மராத்திக் கவிஞர் மல்லிகா அமர்ஷேக் பெண்ணை அழகின் குறியீடாக இருக்கும் வீனஸ் சிலையுடன் ஒப்பிடுகிறார்.

வீனஸ்

அவளுக்கு கைகள் இல்லை

அவள் தீர்க்கதரிசனப் பார்வை

அடியோடு செத்துப் போய்விட்டது

அவள் ஆடாமல் அசையாமல்

அலங்காரப் பொம்மையைப் போல

நின்று கொண்டிருக்கிறாள் என்னைப் போலவே

கரடு முரடனா கலாச்சார நூலேணியில்

கஷ்டப்பட்டு தொங்கிக் கொண்டிருக்கிறாள்

கால்களுக்கும் கால்களின் மேலிருக்கும்

உதடுகளுக்கும் நடுவில் இறுக்கமாக

என்னைப் போலவே

பாலியல் உந்துதல்களின் காரணமாகப் பாலியல் வன்முறை தொடர்வதும் தந்தை வழிச் சமூகத்தில் அதிகார மையம் இதுவே என்பதும் இதனால்தான் பெண் இரண்டாம்தரக் குடி நிலைக்குத் தள்ளப்படுகிறாள் என்பதும் பெண் ஆண் சார்ந்து இயங்க வேண்டிய கட்டாயத்தையும் பெண்ணின் அதிகாரங்கள் மறுக்கப்படுவதையும் இன்றைய பெண் கவிஞர்கள் பல்வேறு கவிதைகளில் அடையாளப்படுத்துகிறார்கள். ஆணின் காதலும் கவிதைகளும் பெண் மீது சுமத்தப்படும் முள் கீரிடங்களாகவே இருக்கின்றன.

அவள் முலைகளிலும் தொடைகளிலும் நீ

வாழ்க்கையின் அர்த்தங்களைத் தேடி

அலைகிறாய்

விடை தெரியாத உன் கேள்விகளுக்கு

அவளிடம் நீ விடைகாணத் துடிக்கிறாய்

என்று சொல்லும் மல்லிகா அமர்ஷேக்கின் கவிதை இக்கருத்தின் உள்ளும் புறமும் அலசுகிறது. ஆண் பேசும் காதலும் கவிதையும் பொய்யானவை என்று சொல்கிறது. அந்த உடல்களுக்கு அப்பால்

உயிர்ப்புடனிருக்கும் "அவள்களை'

உதாசீனப்படுத்துக்கிறாய்

உண்மையில் அவள் கேள்விகளுக்கெல்லாம்

படுக்கையறை மட்டுமே பதிலாக முடியுமா?

உன் காமம் தணிந்த இரவில்

உன்னோடு உறங்கிய அவளை

நீ அறிந்திருக்கவில்லை

அவள் பெண்ணோ மாயப்பிசாசோ

இத்தருணத்தில் கவிதைகளைப் பற்றிய

உன் பேச்சு ஆச்சரியம்தான்

ஆனால் வருத்தமாகவும் இருக்கிறது

இன்னும் எத்தனைக் காலங்கள்

அர்த்தமில்லாத சொற்குவியலாய்

மரப்பாச்சி வாழ்க்கையில்

பொய்யான கீரிடத்தைச்

சுமந்து கொண்டு திரியப் போகிறாய்‡

என்று கேள்வி எழுப்புகிறது

உன் படகுகள்

பெண்ணின் தொடைகளை சுற்றிவந்து

பாய்மரத்தை விரிக்கின்றன

படகின் பயணம் மீண்டும ஒரு கடற்கரை

அல்லது இளைப்பாறுகிறது

அவள் முலைக்காம்புகளில் உன் படகு

சத்தமாகப் பாடுகிறாய்

அமெரிக்கா அமெரிக்கா

யுரேக்கா யுரேக்கா

இப்படியாக ஏதோ ஒரு பாடலை

கடலலைப் போன்ற அவள் கூந்தலில்

உன் சரீரம் தொங்கிக் கொண்டிருக்கிறது

 

அவள் கண் இமைகளில்

ஈர உதடுகளில் காய வைக்கிறாய்

உன் சுவையான அதிகப்படியாக

தர்க்க நியாயங்களை

 

மகிழ்ச்சி அலையின் உச்சகட்டத்தில்

நிறைவுகளின் விளிம்பில் நீ

இப்போதும் நான் சொல்லவரவில்லை

அவள் தேவதை என்று

ஆனால்

அரை நிர்வாணமாக்ப்போன

உன் ஆன்மாவுக்கு அவள் மட்டுமே

ஆடையாக முடியும்

இறுதியாக கவிதை இந்திய மெய்யியலின் தத்துவத்துடன் பெண்ணிய விதவையை இணைக்கிறது. பெண்ணியத்துடன் மெய்யியலை இணைக்கும் போக்கில் பெண்ணின் மனதில் புதியச் சிக்கல்கள் உருவாகின்றன. பெண் தனக்குள்ளும் வெளியிலும் புதிய தேடல்களில் ஈடுபடுகிறாள். மரபை முற்றாக ஒதுக்கிவிடவும் முடியாமல் மரபில் புதுமைச் செய்வதும் தேவையாகிறது. அவளுக்குள் இருக்கும் பெண் பிம்பத்தை துரத்தவும் முடியவில்லை. புதிய தேடல்களில் மரபு சார்ந்த மெய்யியலை இணைத்து ஒரு புதிய வழிமுறையை உருவாக்க

அவள் முனைகிறாள்.

 

பெண்ணியத்தின் மேற்சொன்ன போக்கில் புராண இதிகாச கருப்பொருளுக்கு புதிய அர்த்தங்கள் கொடுப்பதும் இதிகாசப் பாத்திரங்களுக்குள் இன்றைய சிந்தனைகளை புகுத்தி ஏற்கனவே கட்டமைக்கப்பட்டிருக்கும் கருத்துருவாக் கத்தை கேள்விக்குட்படுத்துவம் புதிய கருத்துத்தளத்தைக் கட்டமைப்பதும் சாத்தியமாகிறது. மோதிரங்கள் திருமணத்தின் புனித அடையாளங்கள்

என்றால் ஏ... துஷ்யந்த ராஜனே

நான் உன் சகுந்தலையாக

இருக்க விரும்பவில்லை

ரத்தமும் சதையுமான என்னை நினைவூட்ட

தேவை ஒரு மோதிரம்தான் என்றால்

என்னை நீ மறந்துவிடுவதே நல்லது துஷ்யந்தா

என்கிறார் பஞ்சாபிக் கவிஞர் வனிதா.

நிராதரவான தருணத்தில் மழைச்சாரலாய் நான்

ஈன்றெடுப்பேன் என் மகன் பரத்தை

அவனுக்காகவும் அலைய மாட்டேன்

மீன்களின் வயிற்றில் மோதிரத்தைத் தேடி

என் மகனுக்காக

நான் உருவாக்கும் உலகத்தில்

மீன் அவன் வீடு மாகடல் அவன் தந்தை

பூமி அவன் தாய்மடி

என்று ஆண் சார்பில்லாத சகுந்தலையை அடையாளம் காட்டுகிறது.

பெண்ணுக்கு தன் உணர்வு என்ற ஒன்று கிடையாது. அப்படியே இருந்தாலும் அதை அவள் வெளிப்படையாக உணர்த்தவே கூடாது என்பது தான் இலக்கியத்திலும் இலக்கணத்திலும் காணப்படும் பெண்ணியம். "தன்னுறு வேட்கை கிழவன் முன் கிளத்தல் எண்ணுங்காலை கிழத்திக்கில்லை' என்று தொல்காப்பியம் பேசும் பெண் திணை இலக்கணம் நினைவு கூரத்தக்கது. ஆனால் இருபதாம் நூற்றாண்டு பெண்ணியம் தன் தனித்துவத்தை, தன் வேட்கையை தங்கள் கவிதைகள் வழி பதிவு செய்ய ஆரம்பித்துள்ளன.

உனக்குத் தெரியுமா

அந்தக் கணநேர காதலுக்காக

நான் காத்திருந்தேன் பல நாட்கள் என்பது

கற்பனைத் தவழும் கண்கள்

தேன்சொட்டும் உதடுகள்

மதுவடியும் முலைகள் போதையூட்டும்

ப்ராண அவஸ்தையில் அல்குல்

ஒரே ஒரு முறை காதலின் சுவையறிய

அடிக்கடி என்னை நானே

கொலை செய்து கொள்கிறேன்

மீண்டும் மீண்டும் என்னை

உயிர்ப்பித்துக் கொள்ள

என்ற அபர்ணா மொகந்தி ‡ ஒரியா கவிதை ஆண் எழுதும் எதையும் பெண்ணும் எழுத முடியும் என்பதும் அதைப் பெண் எழுதும்போது ஏற்படும் சக்திவாய்ந்த மொழியின் கருத்துருவாக்கத்தையும் சேர்த்தே பதிவு செய்துள்ளது. “"ஆண் உயர்வு சமுதாயத்தில் இருக்கும்வரை பெண்ணுக்கான வெளி உருவாக முடியாது. ஆண் உயர்வு வெளியில் இருந்து கொண்டு யண் பேசும் அரசியலும் ஆண்மை சார்ந்ததாகத்தான் இருக்க முடியும். அதற்குப் பெண் தன்னைத் தானே உணர்தலும் உணர்ந்ததைத் தன்னுடைய மொழியில் வெளிப்படுத்தலும் தேவை' என்பார் எலைன் ஷோவால்டர். (பெண்ணியத் திறனாய்வு  பக்.45)

ஆணாதிக்கச் சமுதாயத்தில் இரண்டாம் நிலையிலிருந்து தாங்கள் பெற்ற சொந்த அனுபவங்களின் வழி தன்னை உணர்தலே இன்று அலுவலக மகளிர் குரலாக பல கவிதைகளில் ஒலிக்கிறது. ஆபிஸில் மதிய உணவு நேரம் என்ற பிரதிபா நந்தகுமாரின் கன்னட மொழிக்கவிதை ஒரு காட்சியை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது. அவன் நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருந்தான். திறந்திருந்தது அவன் பெரிய டிபன் கேரியர் அறுசுவை உணவு வகைகள் அவியல், பொறியல், சட்னி, சாம்பார் சாதம், தயிர்சாதம், அப்பளம் தொட்டுக்கொள்ள ஊறுகாய் இத்துடன் தித்திக்கும் இனிப்பில் இரண்டொரு மாங்கனித் துண்டுகளின் மணம். சாப்பிட்டுக் கொண்டே அவன், அவன் மனையியைப் பற்றிக் குறைபட்டுக் கொள்கிறான். அவள் அறிவிலியாம். சோம்பேறியாம். குண்டாம் பார்க்க சகிக்கலையாம். முட்டாளாம். நடனங்கள் கண்டதில்லையாம். சங்கீதக்கச்சேரி கேட்டதில்லையாம் ஏன்.

மசாலா டீனா கூட என்னவென்று தெரியாதாம். அவளுடன் வாழும் வாழ்க்கை வெறுத்துவிட்டதாம். ஆனாலும் ஆனாலும் என்ன செய்வது குழந்தைகளுக்காக குடும்ப கவுரவத்திற்காக... என்றவன்... என்னைப் பார்த்து சொன்னான்... நான் புத்திசாலியாம் அறிவுஜீவியாம் ஆபிஸ் வேலை வீட்டு வேலை இரண்டிலும் கெட்டிக்காரியாம் சம்பாதிக்கிறேனாம் கவிதை கூட எழுதுகிறேனாம் என் கணவர் ரொம்பவே கொடுத்து வைத்தவராம்.

நான் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தேன் என்று சொல்லி இறுதியில் அன்று மாலை என் கணவருக்குப் பிடித்தமானவை சமைத்துக் கொண்டிருக்கும்போது அவர் ஆபிஸ் பையன் கழுவப்படாத டிபன் பாக்ஸை என்னிடம் நீட்டிவிட்டு சொல்லிச் சென்றான். "பாஸ் இன்று லேட்டாக வருவார் என்று' என்று முடியும்போது தனித்தனி இருவேறு பெண்களாக ஆணாதிக்கத்தால் அடையாளப்படுத்தப்பட்ட இரண்டு பெண்களும் இரண்டாம் நிலையிலேயே இருப்பதை உணர்த்திவிடுகிறது. பெண்ணியப்போக்கில் சில கவிதைகளில் யதார்த்தத்தின் கோரமுகம் அப்படியே சித்தரிக்கப்படுகிறது.

பெண் விடுதலை என்பது இரும்புக்கூட்டிலிருந்து தங்கக் கூட்டிற்குள் அடைக்கப்படுவதாக மட்டுமே இருக்கிறது. ஆண்‡குடும்பம் என்ற சிறை உடைத்து வெளியில் வந்தால் இந்த பூமி உருண்டையின் ஒவ்வொரு அசைவிலும் ஆணாதிக்கமே கோலோச்சுவதால் விரக்தியுடன் ஓர் ஆணுக்கு அடிமையாக இருந்து விட்டு போகிறேன் என்ற தத்புருஷ் கவிதையில் சொல்கிறார் மராத்திக் கவிஞர் கவிதா மகாஜன்.

ஒத்துக் கொள்கிறேன்

நான் உன் அடிமை என்பதை

என்பதை விடுவிக்க என் மீது கொண்ட

அபரிமிதமான உன் காதலால்கூட

என் கட்டுகளை அவிழ்க்கும்

நாட்களைப் பற்றி பேசாதே

உன் வாசலுக்கு வெளியே

என்னைக் கட்டிப்போடும்

காலச்சங்கிலிகள்

சிறைவைக்கும் சிறைக்கூடுகள்

காத்திருக்கும் சிவந்த சவுக்குகள்

கெட்டுப்போன எச்சில் பருக்கையை

என் தட்டில் பரிமாற காத்திருக்கும்

ராட்சதக்கைகள்

என்ன செய்யட்டும் இருந்துவிட்டுப் போகிறேன்

உனக்கு மட்டுமேயான அடிமையாக

களைத்துப் போய்விட்டேன்

கண்டவர்கள் கால்களை எல்லாம்

நக்கி நக்கி வறண்டு போய்விட்டது

என் நாக்குகள்

அதில் பிறக்கும் என் வார்த்தைகள்

வலிமை குன்றிவிட்டன

எழுந்து நிற்க முடியாமல்

சரிந்து விழுகின்றன

பற்களுடன் உரசியபின்னும்

என் நாக்குகளுக்கு கிடைக்கவில்லை

வார்த்தைகளின் ஒலிச்சுவடு

என் உதடுகளைப் பற்றிக்கொள்ளத் துடிக்கும்

வார்த்தைகள் எல்லா இடங்களிலும்

பலகீனமாய் எதிரொலிக்கின்றன

கண்களில் தென்படும் கடைசி

எதிர்பார்ப்பைத்தவிர

 உன் தட்டில் எஞ்சி இருக்கும்

கடைசிப் பருக்கையை தருவாயா

என் பசித்தீர்க்க?

 இந்தியப் பெண் கவிஞர்களின் படைப்புகளை இதுவரை யாரும் ஒட்டு மொத்தமாகத் தொகுத்து ஒரு முழுமையான ஆய்வினை மேற்கொள்ளவில்லை. இப்படி தொகுக்கப்பட்டால் மொழி சார்ந்த பிரிவுகளைத்தாண்டி முரண்படும் புள்ளியில் கை கோத்து நிற்கும் இந்தியப் பெண்ணியத்தின் கோட்பாடுகளையும் போக்குகளையும் கண்டறிய முடியும்.