புயலுக்குத் தலைசாய்த்து

காற்றுக்கு கை வீசி

வனமே

மழைக்கும் பாடுவாய்

வரவேற்புக் கவிதை

வாழ்க்கை வாய்த்திருக்கிறது உனக்கு மட்டும்

நோய் தீர்க்கும் மூலிகையாய்

வாயில் காக்கும் காவலனாய்

வாசமூட்டும் சந்தனமாய்

மனிதன் போலன்றி

இறப்பிற்கு பிறகு எலும்பாகும்

மண்ணுக்குள் மக்கி

மரிப்பிற்குப் பின்னும்

வைரமாக

உன்னால் மட்டும் மரமே

மர ஆடை உருவப்பட்டு

கருமேகமில்லா ஆகாயம்போல்

பரந்துகிடக்கிறது பூமி

வெட்டவெளியயங்கும் வெடிப்புகளோடு

மண்மகளின் மானம் காக்கவாவது

மறுபடி போர்த்துவோம் பச்சை ஆடை

இறகுகள் கோதும்

இணைப் பறவைகளுக்கு

சிரித்தபடியே கனி சுமப்பாய்

வாடகையில்லாமல் வீடும்

உனக்கு மட்டுமே சாத்தியம்

ஒடித்துப்போடும் காற்றுக்கும்

தலையாட்டும் தயை

ஈத்துவக்கும் இன்பத்தை

ஈட்டிவாழும் உம்போல்

பழகவேண்டும் எம் தலைமுறை

பயிற்றுவிக்கும்

பள்ளியயான்று கட்டித்தாயேன்

மரமே மண்மீது கொண்ட ஆசையில்

மண்ணரிப்பை தடுத்து

போரிடுகிறது சுனாமியோடு

இரைச்சலை வடிகட்டி

காற்றைச் சலித்து

அனுப்பும் சல்லடையே

பிராணவாயுவை நாங்கள் பெற

கரியமில வாயுவை உண்பாய்

நஞ்சுண்ட சிவனாய்

தொடக்கத்தில் தொட்டிலாய்

நடக்கையில் வண்டியாய்

பருவத்தில் கட்டிலாய்

துயர்க்கடலில் உறவை மூழ்கவிட்டு

உடலை ஏற்றிச் செல்லும் தோணியாய்

மரம் மனித வாழ்க்கைக்கு

இயற்கையின் வரம்

காடு கொன்று நாடாக்கிய

சரித்திரங்கள் போதும்

நாடு கொன்று காடாக்கும்

நிலை வந்தால்

நம் சந்ததிகள் வாழ

வளங்கள் தரு(ம்)வனம்