இராபர்ட் கால்டுவெல் 1875இல் இரண்டாம் பதிப்பாகத் திருத்தி வெளியிட்ட "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" (A comparative Grammer of the Dravidian or South Indian Languages) என்னும் நூல் 1913இல் பல்வேறு விடுபடல்களுடன் மூன்றாம் பதிப்பாக வெளியிடப்பட்டது. மூல நூல் மொழியியல், வரலாற்றியல், சமூகவியல் என முப்பரிமாணம் கொண்டது. அவற்றில் மொழியியலை மாத்திரம் தக்க வைத்துக்கொண்டதே மூன்றாம் பதிப்பு - ஆகவே, குறை பதிப்பு. இப்போது கால்டுவெல்லின் 1875ஆம் ஆண்டின் முழுமையான ஆங்கிலப் பதிப்பு கவிதாசரண் பதிப்பகம் மூலம் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.

அந்நூலை முன்வைத்து 24.04.2008ஆம் நாள் காலை 10:30 மணி முதல் மாலை 5:30 வரை, சென்னைப் பல்கலைக் கழகம் தமிழ் இலக்கியத் துறை தன் பவளவிழாக் கலையரங்கில் கருத்தரங்கும் வெளியீடும் நடத்தியது. காலை நடந்த கருத்தரங்கிற்குத் தமிழ் இலக்கியத் துறைத் தலைவர் பேராசிரியர் வீ.அரசு அவர்கள் தலைமை ஏற்று நூலையும் அதன் மூலத்தை மீட்டெடுத்த பதிப்பையும் பற்றி விரிவான ஆய்வுரை நிகழ்த்தினார். அவரைத் தொடர்ந்து பேராசிரியர் மு.வேதசகாயகுமார், "கால்டுவெல் ஆய்வுகள்" பற்றி உரை நிகழ்த்தினார். இவர் கால்டுவெல் நூலைத் தொடர்ந்து ஆய்வு செய்து வருபவர். அவருடைய உரையும் அவ்வாறே. "கால்டுவெல் எழுதிய நூல்கள் ஏற்படுத்திய சர்ச்சைகள்' என்பதையே ஒரு தனி நூலாகக் கொண்டுவரலாம் எனும் கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக அவரது ஆய்வுரை அமைந்தது.

அடுத்து, அ.மங்கை, "காலனியமும் மொழி ஆய்வுகளும்" எனும் தலைப்பில் ஒப்பிலக்கணம் எழுதப்பட்ட சூழல், தேவை பற்றி அரிய தகவல்களுடன் விரிவாகப் பேசினார். அவருக்குப் பின்னர் "திராவிட மொழியியலும் கால்டுவெல்லும்" என்னும் பொருள் பற்றி இலக்கண மாதிரிகள் பலவற்றை மேற்கோள் காட்டி பேராசிரியை ந.கலைவாணி ஒரு வகுப்பறைப் பேராசிரியராகத் தகவல்கள் தந்தார்.

பிற்பகல் வ.கீதா, "காலனியமும் இனவியல் ஆய்வுகளும்" என்பது பற்றி ஆய்வுரை நிகழ்த்தினார். தமிழ், வடமொழி இரண்டும் பெண்மொழி, ஆண்மொழி என்று அழைக்கப்பட்டது பற்றிய தகவல்களோடு அ.மங்கையின் உரையைப் பலமுறை மேற்கோள் காட்டி இனவியல் முறைமைகளை விளக்கினார். அவரைத் தொடர்ந்து கவிதாசரண், "கால்டுவெல் நூல்பதிப்பு அரசியல்" பற்றி எடுத்துரைத்தார். கால்டுவெல் பறையர்களைப்பற்றி எழுதிய கட்டுரை மறைக்கப்பட்டதை வேதசகாயகுமார் முதன்முதலில் கவிதாசரண் இதழில் அம்பலப்படுத்தியதையும் அக்கட்டுரையே இந்நூல் கொண்டுவரக் காரணமென்றும், பழைய படியைத் தேடிக் கண்டுபிடிப்பதில் பொ.வேல்சாமி செய்த உதவியையும் நினைவு கூர்ந்தார். மூன்றாம் பதிப்பில் விடுபட்ட பகுதிகள் பற்றிக் குறிப்பிட்டு அவற்றுக்குப் பின்னுள்ள அரசியலை விரிவாகச் சொன்னார்.

கருத்தரங்க முடிவில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. நூலை வெளியிட்டு முதுபெருந் தோழர் இரா.நல்லகண்ணு அவர்கள் அரிய உரை நிகழ்த்தினார். பறையர்கள் பட்ட அவலங்களை உதாரணத்துடன் விளக்கினார். ஒரு வெளிநாட்டுக்காரர் இவ்வளவு பெருமுயற்சியும் நல்லெண்ணமும் கொண்டு மண்ணை, மக்களை, மொழியை ஆய்ந்திருப்பது வியப்புக்குரியது என்றார்.

தொடர்ந்து பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் பேசினார். நூலில் கால்டுவெல் வாழ்க்கைக் குறிப்பை இணைத்திருந்தால் நன்றாயிருக்கும் என்றார். திராவிட இயல் இன்று பெரும் பரப்பையும் வீச்சையும் கொண்டு திகழ்வதைக் குறிப்பிட்டு, கால்டுவெல் எழுதிய திருநெல்வேலி வரலாறு போன்ற எல்லா நூல்களையும் ஆழ்ந்து ஆய்தல் வேண்டும் எனச் சொன்னார்.

மேடையில் கவிதாசரண்கள் நூலாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். கவிதாசரண் தன் ஏற்புரையில் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறைக்கும் அதன் தலைவர் பேராசிரியர் வீ.அரசுவுக்கும் தன் மனமார்ந்த நன்றியை நெகிழ்ச்சியுடன் பதிவு செய்தார். பேராசிரியர் மணிகண்டன் தன் நன்றி நவிலலில் கால்டுவெல் நூல் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டதில் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளையின் விருப்பம் நிறைவேறியிருப்பதாகக் குறிப்பிட்டார். விழா மேடையில் முதுபெரும் தமிழ்மகனார் மா.சு.சம்பந்தனார் அவர்கள் நூல் பெற்றுச் சிறப்பு செய்தார்.

நூல் பற்றிச் சில கருத்துகள்:
1. "பார்ப்பானுக்கு அடிமையாய் இருந்தாலும் இருப்பேனே தவிர பறையனுக்குச் சகோதரனாய் இருக்க மாட்டேன்" என்னும் தமிழ்ச் சாதியின் வெறியுணர்வே தமிழின் தனித்துவத்தையும் மீறி அவர்களைப் பார்ப்பனத் தகைமைகளுக்கு முன்னுரிமையும் முதலிடமும் கொடுக்க வைத்துள்ளது. அதன் காரணமாகவே "பறையர் முதலான தாழ்த்தப்பட்டவர்கள் திராவிடர்கள்தாம்" என்னும் கால்டுவெல்லின் கட்டுரையை அவர் நூலிலிருந்தே உருவிப்போட்டுவிடத் துணிச்சலைக் கொடுத்திருக்கிறது.

2. பறையர் முதலானவர்கள் பார்ப்பனர் முதலான உயர்சாதியினரின் முறையற்ற பாலுறவால் "நடத்தை கெட்டவர்கள் பெற்றுப்போட்ட குழந்தைகள்" என்பதாக ஐரோப்பியர்கள், பார்ப்பனர்கள், உயர்சாதித் தமிழர்கள் போன்றோரால் இழிவாக வைத்து எண்ணப்பட்டிருந்த காலம் அது. இது ஆய்வு ரீதியாகவோ நடைமுறை அறிவிலோ மெய்ப்பிக்கப்பட முடியாத கட்டற்ற மனத்தின் ஆகப்பெரும் பொய்ப்புனைவு என்பதைக் கால்டுவெல் ஐயத்திற்கிடமின்றி நிறுவுகிறார். இந்தப் பொய்யிலும்கூட ஒரு விஷயம் பாருங்கள்: வல்லுறவு கொண்ட பொறுக்கிகள் மேல்குலத்தவர்களாம். வல்லுறவுக்காட்பட்ட பெண்கள் பெற்றுப்போட்ட குழந்தைகள் சாதி கெட்டவர்களாம். இந்தச் சடங்குத்தனமான வகைப்பாட்டை நம்புகிறவர்கள்தாம் மேன்மக்கள் எனில் மேன்மையின் கீழ்மை எவ்வளவு கோரமானது அதைத்தான் கால்டுவெல் வலுவாக நிறுவுகிறார். அதைச் சகித்துக்கொள்ள மறுத்தவர்கள்தாம் அவர் நூலைச் சிதைத்தவர்கள்.

3. மாதவியின்பால் கோவலன் "விடுதல்அறியா விருப்பினன்" ஆயினன் என்பார் இளங்கோவடிகள். தமிழின் மேல் கால்டுவெல்லின் நேசமும் அப்படிப்பட்டதுதான். 53 ஆண்டுக்காலம் தமிழோடு வாழ்ந்து தமிழ் மண்ணில் அடக்கமானவர். கோவலன் மாதவியை நேசித்தாலும் அவனது ஆவியில் கலந்தவள் கண்ணகி மட்டும்தான். கால்டுவெல்லுக்கும் அப்படித்தான். ஆயினும் அவரது விளைச்சல் தமிழ் மண்ணோடுதான்- கோவலன் மாதவியிடம் பெற்றாற்போல.

4. மலையாளத்தைத் தமிழின் சகோதரி என்பதைவிடப் புதல்வி என்றே சொல்லலாம் என்பது கால்டுவெல்லின் எண்ணம். மொழி ரீதியாக அதற்கொரு சான்று சொல்கிறார். தமிழில் கிழக்கு, மேற்கு என்று திசைகளைச் சொல்கிறோம். கிழக்கு என்றால் கீழே, தாழ்வாக (கிழங்கு என்றால் நிலத்தின் "கீழ்" விளைவது) என்னும் பொருள் தருவது. அதுபோல மேற்கு என்பது மேல்நோக்கி, மேடாக என்றாகிறது. தமிழ்நாட்டுக்கு மேற்கு நோக்கிச் செல்லும்போது ஏறுமுகமாக, மலைநோக்கியும், கிழக்கு நோக்கிச் செல்லும்போது இறங்குமுகமாக, கடலை நோக்கியும் அமைகிறது. ஆகவே இவை காரணப் பெயர்கள். மலையாளத்திலும் திசைகளுக்கு இதே பெயர்கள்தாம். ஆனால் கேரளத்தில் கிழக்குத் திசை ஏறுமுகமாகவும், மேற்குத்திசை கடலை நோக்கி இறங்குமுகமாகவும் நிலப்பரப்பைக் கொண்டது. எனவே, அங்கே இத்திசைகள் இடுகுறிப் பெயர்களாக, தமிழ்ப் பெயர்களை உள்வாங்கிக் கொண்டனவாக உள்ளன. அதாவது அவர்கள் தமிழர்கள், தமிழ்நாட்டிலிருந்து நகர்ந்து சென்றவர்கள் என்பதாக முடிவுக்கு வரலாம். நம்பூதிரிகள் "நாங்கள் "படுஞ்ஞாயிறு" என்றுதான் மேற்கை அழைக்கிறோம்" என்று சொன்னபோது "அடடே, அது இன்னும் நல்ல தமிழாயிற்றே" என்கிறார் கால்டுவெல். இதுபோன்று பல சாத்தியப்பாடுகளையும் அவர் மொழிகளூடாக ஆராய்கிறார்.

5. கால்டுவெல் தொல்காப்பியத்தை அறிந்திருந்தார் என்பது இன்றுவரை இருட்டடிப்புச் செய்யப்பட்டே வருகிறது. 07-05-2007இல் இரவு 11.30 மணியளவில் பொதிகைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழ்மொழி பற்றிய நிகழ்ச்சியில் கால்டுவெல் தொல்காப்பியத்தை அறிந்திருக்கவில்லை என்றே "தமிழறிந்த" மூன்று பேர் பேசிக்கொண்டிருந்தார்கள். அனால் உண்மை என்னவெனில் அவர் தொல்காப்பியத்தை அறிந்திருந்தார் என்பதுதான். தொல்காப்பியத்தில் "என்மனார் புலவர்" எனப்படுவது தொன்மையை நிலைநாட்டும் பொருட்டு என்பதாகிறது. ஆனால் "என்மனார்" என்பதற்கு மாற்றாக "என்பர்" என்று சொன்னாலே அது தொன்மையைச் சுட்டக்கூடியதுதான் என்கிறார் கால்டுவெல்.

6. கால்டுவெல்லுக்கு முன்பே "திராவிடம்", "திராவிட மொழிகள்" என்னும் சொற்கள் புழக்கத்திலிருந்தன. கால்டுவெல் செய்ததெல்லாம் அக்கருத்துகளைத் தொகுத்து, ஆழமும் விரிவும் கொண்டதாக்கி, தமிழின் செம்மொழித் தகுதியை ஐயத்திற்கிடமின்றி நிறுவியதுதான். உண்மையில் கால்டுவெல்லின் ஒப்பிலக்கண நூலை அடியாதாரமாகக் கொண்டுதான் செம்மொழித் தமிழின் கருத்தியல் களம் பரந்து விரிகிறது. இன்னும் சொல்லப்போனால் கால்டுவெல் பொருளாழப்படுத்திய "திராவிடம்"தான் தமிழகத்தை ஒரு நூறாண்டுக் காலம் குலுக்கிக்கொண்டிருக்கிறது, ஒரு நாற்பதாண்டுக் காலம் ஆட்சி செய்துகொண்டிருக்கிறது. இது கால்டுவெல்லின் நாமறிந்த முகம். அவருக்கு இன்னொரு முகமும் உண்டு. வெகு தீவிரமான தெளிவான சமூக முகம். அந்த முகம் 1913க்குப் பிறகு முற்றாக மறைக்கப்பட்டுவிட்டது.

7. கால்டுவெல் மட்டும் இந்த நூலை எழுதாமல் இருந்திருந்தால் இன்றைய இந்தியப் பெருவெளியில் தமிழ்ச் சமூகம் என்னவாக இருந்திருக்கும் என்று நினைக்கவே அச்சமாக உள்ளது. சிந்துவெளி நாகரிகம் தமிழ்ச் சமூகத்தினுடையது என்று சொல்வதுகூட எளிதாய் இருந்திருக்க முடியாது. இந்திய ஒற்றைத் தேசியத்தில் தமிழ்ச் சமூகம் ஆகக் கீழான தலித் சமூகமாக மிதிபட்டு நசுங்கிப் போயிருக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது. இன்றைய அரசியல் களத்தில் இன ரீதியாகவும் மொழி ரீதியாகவும் தமிழ்ச் சமூகத்தைத் தலைநிமிர்ந்து செம்மாந்து நிற்க வைத்த பெருமை கால்டுவெல்லையே சாரும். "வெள்ளையின மக்களே மேன்மை யானவர்கள், கறுப்பினத்தார் கீழானவர்கள்" என்னும் சமஸ்கிருதக் கோட்பாட்டை அடித்து நொறுக்கியவர் கால்டுவெல். சமஸ்கிருதம் இந்தியாவுக்குள் நுழையுமுன்பே தமிழுக்குக் கடன்பட்டது என்பதைத் தர்க்கபூர்வமாக நிறுவிக்காட்டியவர் அவர்.

8. தமிழ்ச் சமூகம் ஒருவகையில் ஆரிய சமூகத்தைவிடவும் குரூரமானது என்பதைக் கால்டுவெல்லைக் கொண்டே நம்மால் மெய்ப்பிக்க முடியும். தமிழ்ச் சமூகம் தன் தலை நிமிர்வுக்கான கால்டுவெல்லின் ஒரு முகத்தை மட்டுமே ஏற்றுக்கொண்டது. அவருடைய இன்னொரு முகம் பறையர்கள் முதலான தாழ்த்தப்பட்டவர்கள் அனைவரும் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்களே - வெள்ளாளர்களின் சகோதரர்களே என்று உறுதிபட மெய்ப்பித்துக் காட்டிய முகம். அந்த முகத்தைத்தான் அவர் மறைவுக்குப் பின் ஆதிக்கத் தமிழ்ச் சாதிகள் முற்றாக மறைத்துவிட்டன- ஒளித்து வைத்துவிட்டன. இன்றைய தமிழ் மக்களுக்கு, ஏன் அறிஞர்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்களுக்கும்கூட கால்டுவெல்லின் அந்த முகம் முற்றாகத் தெரியாது. தெரிந்துகொள்ள முயலவே இல்லை. அதை வெளிக் கொண்டுவரும் முயற்சியாகத்தான் கால்டுவெல் ஒப்பிலக்கணம் முழுமையாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

9. தமிழ்ச் சூத்திரர்கள் தங்களை மட்டுமே தமிழர்களாக நிறுவிக் கொண்டார்கள். பார்ப்பனர்களையோ தாழ்த்தப்பட்டவர்களையோ தமிழர்களாக அவர்கள் ஏற்கவில்லை என்னும் முறைகேட்டை கால்டுவெல் துல்லியமாக எடுத்து வைத்துத் தாழ்த்தப்பட்டவர்களும் தமிழர்களே என்று நிறுவுகிறார். அந்தப் பகுதியையும் அதன் நிறம் கசிந்த பல பகுதிகளையும் வெட்டியெறிந்துவிட்டே "தமிழர்கள்" அவர் நூலுக்கு மூன்றாவது பதிப்பைக் கொண்டு வருகிறார்கள். அவர் எடுத்துக் காட்டிய உண்மை மறைக்கப்பட்டுவிட்டதால், எப்போதும் போலவே வையாபுரிப் பிள்ளை தொகுத்த தமிழ் அகராதியில் "பார்ப்பானொழிந்த பறையனொழிந்த தமிழ் பேசுவோரே தமிழர்கள்" என்று குறிப்பிடும் பழைய முறையைப் பேணிக் கொண்டார்கள். இதை எதிர்த்து அண்மைக் காலங்களில் கிளர்ச்சி நடந்தது. உண்மையில் இந்தக் கிளர்ச்சி கால்டுவெல் காலந்தொட்டே நடந்திருக்க வேண்டும். அதை மறைத்த பெருமை இந்தச் சுரணையற்ற தமிழர்களையே சாரும்.

10. இதன் இன்னொரு தொடர் நிகழ்வாகக் கால்டுவெல் கூடுதல் தகவல் தருகிறார். தலித்துகளும் தங்களுக்குக் கீழாகத் தலித்துகளைப் பேணி வந்தார்கள் என்பதே அந்தத் தகவல். அதாவது பறையர்கள் தங்களை விடத் தாழ்ந்தவர்களாக செருப்பு தைப்பவர்கள், துணி வெளுப்பவர்கள் போன்றோரை ஒதுக்கி வைத்தனர் என்கிறார். ஆக, இந்தியாவில் ஒவ்வொருவனும் தனக்கொரு தலித்தை உருவாக்கிக் கொள்வதையே குறியாகக் கொண்டிருக்கிறான் என்றாகிறது. இது வர்க்கப் பிரச்சினையின் உள் மடிப்புகளில் படிந்திருக்கும் செல்லரிப்புச் சிதிலம். இந்த உள்வட்டச் சிதிலங்களைக் களையாமல் தலித்தியம் வெல்வதெப்போது?

11. தமிழ்ச் சமூகம் இடங்கை, வலங்கை என்று இரண்டாகப் பிரிந்து மோதிக்கொண்டது என்பதைக் கால்டுவெல்லும் குறிப்பிடுகிறார். "இடங்கை" என்றால் மாற்றத்தைக் கோருவது. "வலங்கை" என்பது இருப்பதைத் தக்கவைத்துக்கொள்வது. இதன் உலகளாவிய நவீனப் பெயர்கள்தாம் இடதுசாரி, வலதுசாரி என்பதை அறிய நமக்கு வியப்பு ஏற்படுகிறது. பறையர்கள் எப்போதும் வலங்கையர்களாகவும், பள்ளர்கள் இடங்கையர்களாகவும், "நீயா, நானா? யார் பெரியவர்?" என்னும் மோதலைத் தொடர்ந்தனர் என்கிறார். இன்றைக்கும் அந்த மோதல் தொடர்கிறதெனில் தலித்துகளுக்கு எப்போது விடுதலை வரும்? பறையர்கள் வலங்கையர்களாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டதிலிருந்து அவர்களின் தூர்ந்துபோன பின் வரலாற்றை ஒருவாறு யூகிக்க முடிகிறது.

12. தென்னிந்தியா முழுதுமுள்ள பெருநகரக் கண்டோன்மென்டுகளிலும் சந்தைகளிலும் பெருவாரியாகத் தமிழைக் கேட்கலாம் என்கிறார் கால்டுவெல். இப்படித் தமிழை ஒலிக்கச் செய்தவர்கள் படைப் பிரிவுகளிலும் வெள்ளையர் மனைகளிலும் பணியமர்த்தப்பட்ட, சிப்பாய்களாயிருந்த பறையர்கள்தாம். அண்மையில் பி.ஏ.கிருஷ்ணன் எழுதியுள்ள கட்டுரையிலிருந்து இது பற்றிய கூடுதல் விவரங்களும் கிடைக்கின்றன. சாதிக் கொடுமைகளுக்கு அஞ்சி படைப் பிரிவில் இருந்த பறையர்கள் தங்கள் குடும்பத்தையும் தங்களோடே அமர்த்திக் கொள்வார்கள் என்றும், இன்னும்கூடத் தமிழ் அவ்வாறு புழங்கிக் கொண்டிருக்கிறது என்றும் அவர் சொல்கிறார். இப்படிப்பட்டதொரு கொடும் தள்ளிவைப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்கென்றே கால்டுவெல் எழுதிய "பறையர்கள் திராவிடர்களே, தோடர்களும் திராவிடர்களே" என்னும் பகுதிகளையும், திராவிடர்கள் "மலையிறங்கி வந்து அருள்வாக்கு சொல்லி மீண்டும் மலையேறும் தெய்வ வழிபாட்டினர்" - வேறு வகையில் சொன்னால்- பேய் வழிபாட்டினர் என்னும் உண்மைகளையும் முற்றாகக் களைந்துவிட்டுத் தங்களுக்குப் பிடித்த மாதிரி நூலைச் சிதைத்து வெளியிட்டுக் கொண்டனர்.

13. திராவிட மொழிகளில் தமிழ் தவிர மற்றவை சமஸ்கிருதத்தோடு ரசாயணக் கலவைக்கு உட்பட்டுவிட்டதையும் தமிழ் மட்டும் விதிவிலக்காய் இருப்பதையும் கால்டுவெல் சுட்டுகிறார். ஒரு மொழியின் எழுத்துப் பயன்பாட்டை அல்லது இலக்கியத்தை யார் வசப்படுத்துகிறார்களோ அவர்கள் அந்த மொழியைத் தங்கள் ஆளுமைக்குள் கொண்டுவந்துவிடுவார்கள் என்கிறார். தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பார்ப்பனர்களே முதல் இலக்கியத்தைப் படைத்தார்கள். ஆகவே அவை சமஸ்கிருதமயமாயின. ஆனால் தமிழில் மூல இலக்கியங்கள் பார்ப்பனர்களுக்கு முன்பே தமிழர்களாலேயே படைக்கப்பட்டுவிட்டன. தொடர்ந்து வந்த பார்ப்பனர்களின் பங்களிப்பு மூல இலக்கியங்களை மீறியதாக இயங்க முடியவில்லை என்கிறார். வள்ளுவர் திருக்குறளை இயற்றினார். அதற்குப் பரிமேலழகர் உரை எழுதினார். இதை "பறையராகக் கருதப்படும் வள்ளுவர் எழுதிய குறளுக்குப் பார்ப்பனராகிய பரிமேலழகர் உரையெழுதும்படியாகத்தான் பார்ப்பனியத் தாக்கம் தமிழை வந்தடைந்தது" என்கிறார். அதாவது முயன்றால் தனித் தமிழ் சாத்தியமே என்பது அவர் கண்டுணர்த்தும் உண்மை. உரை எழுதுவது ஒன்றும் பொருள் விளங்க வைப்பதற்கல்ல. குறைந்த பட்சம் சந்துபொந்துகளிலாவது தங்கள் வர்ணாசிரமக் கருத்துகளைப் புகுத்துவதற்குத்தான்.

ஒன்றை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். மொழி என்ற அளவில் சமஸ்கிருதம் வளமானது என்பதில் ஐயமில்லை. தமிழின் இறையாண்மையை மதிக்கும் எனில், அதைத் தமிழின் அரிய நட்பு மொழியாக ஏற்பது தமிழுக்கு உகந்ததுதான். ஆனால் பாம்புக்கு ஒழுக்கம் கடிவாயில் நஞ்சை உமிழ்வதுதானே? சமஸ்கிருதம் தொடுவாயிலும் நஞ்சுமிழும் நற்கருணைப் பாம்பு.

வாசகர் கருத்துக்கள்
Dr. V. Pandian
2008-09-17 09:00:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

I am eager to read this book. I am of the openion that "Truth Rarely Wins". It is such a RARE occasion for Truth that it did win and it happened through an English man. Tamil & Tamils are liberated!

The kind of damage that sanskrit had done to Tamil......Oh, No. We should drive out this language at our earliest. I am also of the openion that "Good People do not last; Able people do" . Kindly read Able as RUTHLESS. Any mercy, Tamilian's general character, on sanskrit would be fatal for Tamil.

NAGASUNDARAM.R
2008-09-22 08:30:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

payanulla pala pudhiya thahavalhalai ariya mudindadhu nalla padhivu unmai varalaru ella nilaihalilum maraikkappaduvathu dhan iyalbahivaruhiradhu