தமிழ்நாட்டுக் கிராமங்களில் தீண்டாமை வெறி இன்னமும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. இது மறுக்கப்பட முடியாத உண்மை. அரசியல் கட்சிகள் அனைத்தும் கள்ள மவுனம் சாதிக்கின்றன. ஓட்டு வங்கி அரசியலை முன் வைத்து தான் அவர்கள் பிரச்சனைகளை பார்க்கிறார்களே தவிர, சமூக அவலங்கள் அவர்களின் கண்களுக்குத் தெரிவதே இல்லை.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவிடியல் கிராமத்தில் இருந்து வெட்கக் கேடான, நாம் அனைவரும் தலைகுனிய வேண்டிய செய்தி வந்திருக்கிறது. இந்தப் பகுதியில் வாழ்கின்ற தலித் மக்கள் பயன்படுத்துகின்ற குடிநீர் தொட்டியில், மனித மலத்தைக் கலந்து வைத்திருக்கிறது ஜாதி வெறி கும்பல் ஒன்று. அந்தப் பகுதி குழந்தைகள் நோய்வாய்ப்பட்டு பலரும் பாதிக்கப்பட்ட நிலையில், புகார் வரவே மாவட்டத் ஆட்சித் தலைவர் கவிதா ராமு, மாவட்ட காவல் துறை அதிகாரி வந்திதா பாண்டே ஆகியோர், வருவாய் துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டபோது, தண்ணீர் தொட்டியில் மலம் கலந்திருப்பது உண்மை என்று கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. 5 பிரிவுகளின் கீழ் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது.

அங்கே இருக்கிற இறையூர் கிராமத்தில் உள்ள தேநீர்க் கடையில் இரட்டைக் குவளை முறை பின்பற்றப்பட்டு வருகிறது. அதையும் மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் சென்று விசாரித்து, தேநீர் கடைக்காரர் மூக்கைய்யா என்பவரை கைது செய்து இருக்கிறார். அதையடுத்து அங்கே இருக்கிற அய்யனார் கோவிலில் தலித் மக்களை சாமி கும்பிட அனுமதி அளித்தது இல்லை. அவர்களை அழைத்துக் கொண்டு மாவட்ட ஆட்சித் தலைவர் கோவிலுக்குள் சென்றிருக்கிறார். ஜாதி வெறியர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். அந்த கிராமத்தைச் சேர்ந்த சிங்கம்மாள் என்ற பெண், ஆதிக்க ஜாதியைச் சேர்ந்தவர் சாமி வந்தது போல் ஆடி, தலித் மக்களை இழிவாக பேசி சாமி குத்தம் நடந்தது போல், ஒரு நாடகத்தை அரங்கேற்றி யிருக்கிறார். இந்த சாமியாடும் நாடகங்களுக்கு பணியாமல், சிங்கம்மாள் என்ற பெண்ணையும் கைது செய்ய உத்தரவிட்டிருக்கிறார் மாவட்ட ஆட்சித் தலைவர்.

இது ஒரு உதாரணம். தமிழ்நாடு முழுவதும் பல கிராமங்கள் இப்படித் தான் இருந்து கொண்டு இருக்கின்றன. ஒரு பக்கம் இந்து ஒற்றுமையை பேசிக் கொண்டிருக் கிறார்கள். அந்த தொட்டியில் மலத்தைக் கலந்தவனும் இந்து; அந்த நீரைக் குடித்து பாதிக்கப்பட்டவர்களும் இந்து. இந்து மதம் இப்படித் தான் “மலத்தின் முடை நாற்றம் வீசுகின்ற ஒரு மதமாக மாறிப்போய் இருக்கிறது”.

எந்த இந்து முன்னணியும், சந்து முன்னணியும், சங்கிகளும் இந்த சமூக ஒடுக்குமுறைகளைக் கண்டிப்பதற்கு, இந்து மதத்தில் இப்படி இருக்கலாமா ? என்று கேள்வி கேட்பதற்குத் தயாராக இல்லை. ஆனால், மதத்தைப் புண்படுத்தி விட்டார்கள், கடவுளைப் புண்படுத்தி விட்டார்கள் என்று ஓலமிடுவதற்கு முன் வந்து விடுகிறார்கள்.

 தமிழ்நாடு அரசு இப்படியான ஜாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிராக, கட்சி மாச்சரியம் பார்க்காமல், வாக்கு வங்கியைப் பார்க்காமல் நடவடிக்கை எடுத்தாக வேண்டும். அப்போது தான் திராவிட மாடல் ஆட்சி முழுமையான அங்கீகாரத்தை பெறும் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It