வாழ்வின் தீராப் பொருள்களுள் ஒன்று காமம்;அது உயிர்களின் இயல்பூக்கம். காமம் உடலின்பம், பரிணாம வளர்ச்சி என்கிற இரு பக்கங்களை உடையது. எனும்போது காமம் தவிர்த்த படைப்புகள் குறையுடையதாகவே கருதப்படுகிறது. காமம் குறித்த மனத்தடை தமிழ் சமூகத்திற்கு இடையில் வந்ததுதான். நிலப் பிரபுத்துவம் வளர்ந்த கால கட்டத்தில் உருவாகிய நீதி நூலான குறளில் காமத்துப்பால் இடம் பெற்றிருக்கிறது. இனக்குழு சமூகத்தில் காமத்தின் மீது எவ்வித ஒழுக்கக் கட்டுப்பாடுகளும் இல்லை. உடமைச் சமூகம் தனது சொத்துக்கு அசல் வாரிசு வேண்டும் எனக் கருதிய போது பெண்ணை அதன் முதன்மையான உடைமைப் பொருளாக்கியது. கற்பு, பதிவிரதை, கல்லானாலும் கணவன் போன்ற மதிப்பீடுகளை உருவாக்கியது. பெண்ணின் உடலை இத்தகைய மதிப்பீடுகள் கண்காணிப்புக்கு உட்படுத்தின. இம்மதிப்பீடுகள் ஆதிக்க குணமும் அதிகார ஆசையும் படைத்த மனிதர்கள் உருவாக்கியது. காமமோ உடலிலும் உள்ளத்திலும் எரியும் தீ. அதனால்தான் வள்ளுவர் ‘காமக் கடும்புனல்’ என்றார். கம்பர் ‘மோகமுள்’ என்றார். காமத்தைக் கொண்டாடியவர்கள் தாம் தமிழர்கள். தமிழ் நிலத்தில் சாதி காப்பாற்றும் மனோபாவம் தான் காமத்தின் மீது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. காமத்தை சிற்றின்பம் என இகழ்ந்தது. கலகப் பண்புகள் கொண்ட சித்தர்கள் கூட ‘எத்தனை பேர் நட்ட குழி, எத்தனை பேர் பற்றி இழுத்த இதழ்’ என காம இச்சையை அறு வெறுப்புடனேயே அணுகினர். இருப்பினும் இரண்டாயிரம் ஆண்டு பழமையுடைய சங்கப் பாடல்கள் காதல், காமம் குறித்து திறந்த மனதுடன் பேசவே செய்தன.

சிறு கோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு இவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே

 என்கிறது குறுந்தொகை. காமம் தாங்கமுடியாத சுமை, அது சிறு மரத்தில் கனிந்த பெரும்பழம். காமம் மதிப்பீடுகளின் எல்லைக்குள் இயங்கும் வரை அது காவிய ரசனைக்குரியதாக போற்றப்படுகிறது. பரத்தையரோடு புணர்தலைக்கூட இச்சாதிப் பிளவுள்ள சமூகம் அனுமதிக்கிறது. ஆபத்தற்ற வடிகால் ஆணுக்கு தேவையென்பதால் பரத்தையர் ஒழுக்கம் என்று அதையும் ஒரு நெறியாக்கியது.

எத்தனை நெறிகள் வகுத்தாலும் மனித மனத்தின் செயற்பாடுகளும், உடலின் வேட்கைகளும் இவ்வித செயற்கைக் கட்டுப்பாட்டுக்குள் அடங்குவதில்லை. அதன் செயல்பாடுகள் விசித்திரமானவை. அடக்கி வைக்கப்பட்ட பாலியல் கனவுகள் ஆழ்மனதில் தங்கி ஹிஸ்டீரியாவாக வெடித்து விடுவதுமுண்டு. சிக்மண்ட் ஃபிராய்டின் உளப்பகுப்பு ஆய்வுகள் மனித நடத்தையின் வினோதங்களுக்குக் காரணமாய் பாலியல் மன எழுச்சிகளே திகழ்வதாக கூறுகின்றன. சமூகத்தில் ஒழுங்கை ஒழுக்கத்தை நிலை நாட்ட விரும்பி எழும் கட்டுப்பாடுகள் மனித குலத்தை மனநோய் பீடிக்கச் செய்துவிடுகிறது.

பாலின்பம் கற்பிக்கப்பட்டிருப்பது போல் ஒற்றைத் தன்மையுடையது அல்ல. சுயபுணர்ச்சி, ஓரினப் புணர்ச்சி என பன்மைத்தன்மை உடைய ஆண்நோக்கில் பெண் கணவன் தவிர்த்து இன்னொரு ஆணுடன் உறவு வைத்துக்கொள்வது கூட செரித்துக் கொள்ளப்படுகிறது. ஆனால் அவள் இன்னொரு பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்வதென்பது ஆணைப் புறமொதுக்கும் கலகச் செயலாகப் பார்க்கப்படுகிறது. பெண்ணும் பெண்ணும் உறவுகொள்ளும் கதையமைப்பில் வெளியான ஃபயர் திரைப்படம் திரையிடப்பட்ட அரங்குகளில் இந்துமத அடிப்படைவாதிகள் நடத்திய வன்முறைகளை நாம் அறிவோம்.

மேற்கிலிருந்து இறக்குமதியான நவீனத்துவம் இங்கு பெண்ணை புற அளவிலான மாற்றத்திற்கு மட்டுமே அனுமதித்தது. அக அளவில் அவள் இந்திய தமிழ்ப் பெண்ணாக இருப்பதே உகந்தது என ஆதிக்க சமூகம் கருதியது.

இத்தகைய நுண் அரசியல் சிந்தனையோடு நவீன தமிழ்க்கவிதை காமம் குறித்த புதிய பார்வைகளை, புதிய அழகியலில் விரித்தது. இத்தகைய தடையற்ற பார்வை பார்ப்பன, வெள்ளாள கவிதைப் பிரதிகளில் காணக் கிடைப்பதில்லை. இவை இந்திய தமிழ் பண்பாட்டு, கலாச்சார கட்டமைப்பை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க விரும்புபவை. தமிழ் மரபென்பது வெள்ளாள மரபு மட்டுமன்று. அது பல இசைக் குழு மரபுகளின் தொகுப்பு. பல்வேறு சிறு குடிகள் தமிழ்ச் சமூகத்திற்கு தங்களது தனித் தன்மைமிக்க அடையாளங்களால் பன்முக குணத்தை அளித்துள்ளன. தன்னைப் பெண்ணாக எண்ணி கடவுளைக் காதலுக்கு அழைக்கும் சிந்தனை நம் வேர்களில் இருக்கிறது. திருமங்கையாழ்வார், கூவாய் பூங்குயிலே/குளிர்மாரி தடுத்துகந்த / மாவாய் கீண்ட / மணிவண்ணனை வரக்/கூவாய் பூங்குயிலே என கண்ணனை காதல் செய்ய அழைத்து குயிலிடம் தூதுவிடுகிறார். இதேபோல் ஆண்டாளும் காதல் மேலுற திருமாலைப் பாடுவதைப் பயின்றிருக்கிறோம்.

இன்றைய கவிதைகளில் பெண்கள் தயக்கமின்றி தங்கள் உடலின் மீது, உடல்சார் இன்ப விழைவின் மீது விதித்திருக்கும் தளைகளை தகர்க்க முன் வந்திருக்கிறார்கள். பெண் விடுதலையென்பது சமூக, பொருளாதார, அரசியல் தளைகளிலிருந்து விடுபடுவது மட்டுமன்று. கலாச்சார விடுதலையாலும் தான் அது முழுமையுற முடியும்.

நவீன பெண் கவிஞர்களுள் கவனம் பெற்றவராக விளங்கும் குட்டிரேவதி ‘சாம்பல் பறவை’ எனும் கவிதையில் பெருகும் காமத்தை இப்படி எழுதுகிறார், கண்ணீராய் வழியத் துவங்கிவிட்டது / இருள். பூப்பெய்யத் தயாரான/உடலின் பரவசத்துடனும் மிரட்சியுடனும் / காத்திருக்கிறேன் காதல் புரிய வரும் தன் காதலனுக்கான காத்திருப்பு மனநிலையை இவ்வாறு கூறுபவர் தொடர்கிறார்...

இதோ...தூரத்தில் / மழையை இறக்கப்போகும் கனமேகம்போல்/வந்து கொண்டிருக்கிறான் / இன்பம் தாளாமல் / என் உடலில்/செந்நட்சத்திரங்கள் துளிர்க்கத் துவங்கிவிட்டன

மழையை இறக்கும் கார்மேகம் போல் காதலன் வருவதாய்ப்பாடுகிறார். காமம் மழையைப் போல் குளிர்ச்சி தருவது. நிலத்தில் தன்மையை ஏற்படுத்தி பசுமையை மலர்த்துவது. பசலை படர்ந்த உடலின் கண்களைத் திறந்து நட்சத்திரங்களை மின்னச் செய்வது எனும் காமத்தின் விளைவுகளை உள்ளர்த்தங்களாகக் கொண்டு இயங்குகிறது இக்கவிதை.

காமத்தை ஆண்கள் பாடும் போது எவ்வித அதிர்வுகளும் ஏற்படுவதில்லை, அது திருவள்ளுவராயிருந்தாலும், மகுடேஸ்வரனாக இருந்தாலும், பெண்களாயிருந்தால் காதலைப் பாடலாம், கடவுளை எண்ணி கசிந்துருகிப் பாடலாம். ஆனால், காமத்தைப் பாடினால்தான் ஆணின் இருப்பு ஆட்டம் காண்பதாக அச்சப்படுகிறார்கள்.

மயிர்கள் சிரைக்காத என் நிர்வாணம்/அழிக்கப்படாத காடுகளைப் போல / கம்பீரம் வீசுகிறது என குற்ற உணர்வின்றி தன் உடலைக் காடு என்று ஆராதிக்கிறார் சுகிர்தராணி. காடு ரகசியங்களடங்கியது, உயிர்ப்பானது, பசுமையைக் கொண்டிருப்பது, மழை தருவது. கம்பீரமானது. மதம் கற்பிப்பது போல் பெண் உடல் தீட்டு இல்லை. அது கனிகளைத் தருவது. இன்னொரு கவிதையில், அவனுக்குப் பழக்கினாள் தன் கனிகளைச் சுவைக்கும் உடல் நுட்பம் என்கிறார். காமத்தை ‘கலவி’ என்கிறார்கள். அது கலப்பது ஆறும் சமுத்திரமும் கலப்பதைப் போல நுட்பமானது காமம். நிலை கொள்ளாமல் அலையும் மனதை அது அமைதிப்படுத்துகிறது. ‘அறியாதவனோடு வாழலாம் புரியாதவனோடு வாழ முடியுமா’ என்பது நாட்டுப் புற சொலவடை. புரிவது என்றால் வினையாற்றுதல் என்று பொருள். மணம் புரிதல், போர் புரிதல் எனும் சொற்றொடர்கள் இதை விளக்கும். புரியாதவனோடு வாழ முடியுமா என்றால் காதல் புரியாதவன், காமம் புரியாதவன் என்று பொருள் கொள்ள வேண்டும். நம் நிலம் காமத்தின் மகத்துவத்தை அறிந்த நிலமாய் இருந்திருப்பதால் தான் இத்தகைய சொலவடைகள் வழக்கில் இருந்திருக்கின்றன.

பாலுறவு சுதந்திரத்தை ஒரு சகஜ நிகழ்வாக விவரிக்கிறது யவனிகா ஸ்ரீராமின் ‘இந்த வருடம் மழைக் குறைவு’ கவிதை. கவிஞருக்கு குறைந்த கூலிக்கு முந்திரிக் கொட்டை உடைப்பவளைத் தெரியும். அவளை குதிரை லாடமடிக்கும் பட்டறைக் காதலன் காதலிக்கிறான். லாடக்காரன் கவிஞருக்கும் நண்பன். மதுகுடிக்கும்போது ஏற்பட்ட நட்பு அது.

நீண்ட மழைக்காலத்தின் மத்தியில் / உடலுறவிற்காக ஒருமுறை அவளை அழைத்தோம் / அவள் ஆர்வத்துடன் ஒத்துக் கொண்டாள்/எருமைகளுக்கென வளர்ந்த பசும்புற் சரிவில் / பொதித்து ஈரம் பொங்க இருவரும் சுகித்தோம்.

மதுக்குவளையை பகிர்ந்து கொள்வதுபோல் மூவரும் சேர்ந்து காமத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இங்கு எல்லாவித மரபின்

விதிகளும் மீறப்படுகின்றன. ஆனால் விருப்பமின்மையாலோ வற்புறுத்தலிலோ இக்காமச் செயல்பாடு நிகழவில்லை. கருத்தொருமித்து நிகழும்கலவி. கவிதை நீளும் போது மரபு வழிப்பட்ட மனங்களுக்கு கவிஞர் இன்னும் அதிர்ச்சி தருகிறார்.

அவள் கணவன் ஏதோ தனக்கு மகளைப்போல் / பொறுப்பற்றுத் திரிவதாய் அவளை ஏசினான்.

ஆமாம், அவள் திருமணமானவள். ஆனாலும் அவளுக்கு எவ்வித குற்றவுணர்வுமில்லை. இவர்களைத் தன் கணவனுக்கு அறிமுகப்படுத்துகிறாள்.

‘எங்களை சகோதரர்கள் என்று அறிமுகப் படுத்தினாள்’ கள்ளத்தனமில்லாத மனித மனமொன்று இல்லை. மனம் உன்னதத்தாலும் கள்ளத்தனத்தாலும் ஆனது. பெண்ணும் இதற்கு விதிவிலக்கல்ல. அவளிடம் மட்டும் ஒழுக்கத்தை எதிர்பார்க்கக் கூடாது.

அவன் சில ஆரஞ்சுப் பழங்களை எங்களுக்கு / அன்பளிப்பாக கொடுத்தான் / இந்த வருடம் மழைக்குறைவு என்றவாறே இவர்களைப் பற்றி கணவனுக்கு எவ்வித சந்தேகமுமில்லை. ஒரு வேளை அப்படி தெரிந்திருந்தால் கூட அவன் கவலைப்பட்டிருக்க மாட்டான்.

பெண்ணை அடிமையாய் வைத்திருக்கும் ஆணும் சுதந்திரமாய் இருப்பதில்லை. அவன் தன் மனசாட்சியை விடவும் ஊர் என்ன சொல்லுமோ எனும் மதிப்பீட்டுக்குத்தான் கவலைப்படுபவனாக இருக்கிறான். கலைப் படைப்புகள் தான் இத்தகைய மாதிரி உலகங்களைக் காட்டி அவனது மனத் தடைகளை அகற்ற முயல்கின்றன.

ஓரினப் புணர்ச்சியையும் தமிழ் நவீன கவிதைகள் விவரித்துள்ளன. சங்கரின் தொடுதலில் - உயிர்த்தெழுந்து நெளிகிறது - பெரிய உடலாய் - சங்கருக்கு கதவற்ற - என் வீடு எனும் லஷ்மி மணிவண்ணனின் கவிதையில் ஓரினப் புணர்ச்சியின் அடையாளங்கள் தென்படுவதை நாம் உணரமுடியும்.

காமத்தைப் பற்றி பேசும்போது மகுடேஸ்வரனை விட்டுவிடமுடியாது. அவர் புணர்ச்சி 400 பாடியவர். நல்ல கவிதையை விட / நல்ல இசையைவிட / நல்ல தியானத்தைவிட / நல்ல மலரை விட / நல்ல மௌனத்தைவிட / நல்ல சொற்களைவிட / நல்லது / நல்ல புணர்ச்சி என்று காமத்தைக் கொண்டாடுகிறார்.

பிரேம்-ரமேஷ் இன்னும் ஒருபடி மேலே போய், நாம் புணரும் போது பூக்கும் குறிஞ்சி என்கிறார்.

காமத்தின் சமரில் யார் வென்றார் யார் தோற்றார் என்பதில்லை அது ஒரு பாவனை. விடிய விடிய சமர் செய்து என் கம்பத்தை வெட்டியெறிந்து பறக்க விட்டாள் தன் கொடியை என்கிறார் என்.டி.ராஜ்குமார். பெண்ணின் பெருங்காமத்தை வேலி போட்டா தடுத்துவிட முடியும்.

காமத்தை ஓர் அழகியாகவும், அரசியலாகவும் நோக்கும் பார்வை நவீன கவிகளுக்கு வாய்த்திருக்கிறது. அது அசூசைப்பட வேண்டிய விஷயமில்லை. மாறாக மாயத்திரைகள் எதுவுமின்றி தோழமையோடு விவாதிக்கப்பட வேண்டிய பொருள் அது. போலி ஒழுக்கம், போலி கலாச்சாரம், போலி பண்பாடு பேணும் நம் தேசத்திய கள்ளக் காதல் கொலைகளை தாங்கிவராத நாளேடுகளோ, வார இதழ்களோ இல்லை எனலாம். உடலைக் கொண்டாடும் இத்தகு கவிதைகள் கலை சார்ந்த மதிப்பீடுகளையும் நிறைவு செய்பவையாக உள்ளன. வெறும் அதிர்ச்சி மதிப்பீட்டிற்காகவோ, கவனம் பெறுவதற்காகவோ எழுதப்பட்ட கவிதைகள் அல்ல இவை. சமூகம் பார்க்க கண் கூசுபவையாகக் கருதுபவற்றை பார்த்து, பேச அஞ்சுபவை குறித்து பேசி, யதார்த்த வாழ்வின் முரண்பட்ட போக்கிற்கு பதிலாக விடுதலை நிறைந்த உலகைக் காட்டி, கவித்துவ அழகு கெடாமல் எதிர் மதிப்பீடுகளை, மாற்று மதிப்பீடுகளை முன் வைக்கும் கலைஞனின் பணி மகத்தானது. ஆனால் அவன் பெறும் விமர்சனங்களோ மோசமானவை. ‘வக்கிரம் பிடித்தவர்கள்’ ‘லும்பன் கலாச்சாரத்தைப் பேணுபவர்கள்’ என மதிப்பீட்டுக் காவலர்களால் எள்ளி நகையாடப்படுகிறார்கள்.

புணர்ச்சியோ, காமமோ, இவை நுகர்வு மற்றும் வணிக நோக்கில் எழுதப்படும் போதுதான் அது வக்கிரம், ஆபாசம். கவிஞன் காமத்தின் இருளையும், ஒளியையும் காட்டி மனித மனங்களில் மண்டிக் கிடக்கும் இருளை அகற்றி வெளிச்சத்தின் ரேகைகளை தன் கவிதை வழி விரியவிடுகிறான். நவீன கவிதைகளின் பாடுபொருளான காமத்தின் வேர் நம் அகப்பாடல்களில், குறளில் இருக்கிறது. அதற்கும் முந்தைய நாட்டுப்புறப் பாடல்களில் இருக்கிறது. நம் சமகாலக் கவிதை பிரதிகளில் பெருகும் காமத்தை மத, கலாச்சார மனத் தடைகளற்று வாசிக்க நாம் இன்னும் திறந்த மனத்தோடு தயாராக வேண்டியது அவசியம்.