நடை

நான் பந்தாரா நதியை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். கால்சராயும் இறுக்கிப் பிடித்த கறுப்பு பனியனும் அணிந்திருந்தேன். விரைவு நடைக்கு ஏற்றவாறு வாகான விளையாட்டு செருப்பு. ஆனாலும் மெதுவாகத்தான் நடந்து கொண்டிருந்தேன். கோடைக் காலமாதலால் பந்தாரா சிறுத்து மணற்திட்டுகள் அங்கங்கே மடுக்களாக, நீர் இளஞ்சூரியனில் மினுமினுத்தவாறு ஓடிக் கொண்டிருந்தது. நதிப் பரப்பில் பாகல், சுரை போன்றவற்றையும் பயிர் செய்திருந்தார்கள். இயற்கை விரும்பிகள் நதியோரங்களில் மலஜலம் கழித்திருந்தார்கள். நதியின் குறுக்காக பெரிய பாலம் ஒன்று விரைந்து செல்லும் வாகனங்களைத் தாங்கியவாறு நின்றிருந்தது.

 நான் அந்த மேம்பாலத்தில் கால் வைத்ததும் திகைத்துப் போனேன். பாலத்தின் மறுகோடியில் கூட்டமாக மனிதக் குரங்குகள் வந்து கொண்டிருந்தன என்று என் பொறியில் தட்டியதுதான் திகைப்புக்குக் காரணம். இப்படிக் கூட்டமாக இப்பகுதியில் மனிதக் குரங்குகள் வசிக்க முடியாது என்று மறுகணமே காரண அறிவு விழித்ததும் அமைதியானேன். அவர்கள் யாராயிருக்கக்கூடும். ஏன் இப்படி வித்தியாசமாகத் தோற்றமளிக்கிறார்கள்? மறு நிமிடத்திற்குள் விளங்கி விட்டது, அவர்கள் நிர்வாணமாக வந்து கொண்டிருக்கிறார்கள் என்று. ஏன் நிர்வாணமாக வரவேண்டும்? நிர்வாணத்தில் என்ன சுகம் உள்ளது? வெய்யில் காலங்களில் கடலோரங்களில் சில மக்கள் நிர்வாணமாக உலாவுகிறார்கள் படுத்துறங்குகிறார்கள்! மக்கள் நடக்கக் கூடிய தார்ச்சாலைகளில் யாரிப்படி நிர்வாணமாயிருக்கக் கூடும்?

சற்றே நெருங்கியதும் புரிந்தது அவர்கள் ஜைனத் துறவிகள் என்பது மயிலிறகுகளை பூங்கொத்துப் போல் நேர்த்தியாகக் கட்டி கட்கத்தில் இடுக்கிக் கொண்டிருந்தார்கள். வாயிலும் மூக்கிலும் துணி கட்டவில்லை. மூச்சுக் காற்றின் வெப்பத்தில் சில கிருமிகள் இறந்து விடலாம். என்பதால் ஜைனத்துறவிகள் துணி கட்டிக் கொள்வார்கள் என்று கேள்விப்பட்டிருந்தேன். ஒருவேளை அப்படி துணி கட்டிக் கொள்வது நிர்வாணத்திற்கு விரோதமான தாயிருக்க முடியுமோ? யாரிடம் நான் அப்போது கேட்டுத் தெரிந்து கொண்டிருக்க முடியும்?

அவர்கள் என்னை நெருங்கிவிட்டார்கள். எனது குறுகுறுப்பை அடக்க முடியவில்லை. என் பார்வை தாழ்ந்து மறைவுப் பிரதேசங்களை நோக்கி குவிந்தது. குறிகள் தளர்ந்து சுருங்கி ஊசலாடிய வண்ணமிருந்தன. நோயுற்ற குழந்தையைப் போலிருந்தன அவை. உடலெல்லாம் மயிரடர்ந்திருந்தன காற்றின் வேகத்தில் தூசி படிந்திருந்தன. அவர்கள் உடல்களில் கால்களில் சிராய்ப்புகளும், பாதங்களில் வெடிப்புகளும் தெரிந்தன. காலார நடக்க வேண்டும், நதிக்காற்று மேனியில் பட பச்சைத் தாவரங்களைத் பார்த்து வர வேண்டும், உடலைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று உற்சாகமாக, காலைப் பொழுதில் சீட்டியடித்துக் கொண்டே கிளம்பிய என்னை வதைப்பது போல் பல கேள்விகள் பெருகின.

ஏனிப்படி உடலை வருத்திக் கொள்ள வேண்டும்? ஏனிப்படி நடந்து கொண்டேயிருக்க வேண்டும்? மயிலிறகுகளை வேறு ஏன் சுமையாக தூக்கிக் கொண்டு அலைய வேண்டும்? அவர்களது வாழ்க்கையின் நோக்கம் தான் என்ன? பிற உயிர்களுக்கு துன்பம் தராமை என்பது நம்மைத் துன்புறுத்திக் கொள்வதில் தான் இருக்கிறதா? துன்பம் என்கிறேனே, துன்பத்திற்கு அளவுகோல் எது? அருகே ஓடும் ஆற்று நீரில் குளித்து தொள தொளப்பான துவைத்த ஆடைகளை அணிந்து யாருக்கும் கற்றுத்தர வேண்டும் என்ற எண்ணமில்லாமல் தன்னுடையதை பகிர்ந்து கொள்ள இயலாதா? துறவு என்பது என்ன? பற்றுக்களிலிருந்து விடுபடுவதா? வாழவேண்டும் என்பதே பற்று இல்லையா?

இப்படி எனக்குள் கேட்டுக் கொண்டே அவர்களைக் கடக்க முயன்ற போது அவர்களிலிருந்து ஒருகுரல் வந்தது. பந்தாரா இங்கிருந்து எவ்வளவு தூரம்? இந்தியில் கேட்டார்கள். என்னைத் தான் அவர்களுக்கு பதில் சொல்ல அவர்கள் கண்களை நேருக்கு நேர் சந்தித்தேன். அவர்கள் எல்லாருமே ஏறக்குறைய அறுபது வயதினர். அப்போது எனக்குள் பலவிதமான எண்ண அலைகள். கணணி வலை, சல்மான் ரஷ்டி பத்மாவை மணந்து கொண்டது, ஜான் அப்டைக்கின் பெயர் மறந்த நாவலொன்று, ஆப்கானிஸ்தானத்து இடிந்த புத்தர் சிலை இப்படியான தொடர்பற்ற தோற்றங்களும் நினைவுகளும். இப்படி ஏன் தொடர்பற்றவைகள் தோன்றுகின்றன? ஒருவேளை இவைகளுக்குள் ஏதேனும் தொடர்பு இருக்குமா? இந்த எண்ண அலைகள் அவர்கள் கண்களிலிருந்து மிதந்து வந்தனவா? “இதோ இந்தப் பாலத்தைக் கடந்தும் நீங்கள் பந்தாராவை மிதிப்பீர்கள்” நான் பதிலிறுத்தேன் வறண்டிருந்தது என் குரல்.

அவர்கள் கால்களையே நோட்டமிட்டவாறு நான் கடந்தேன். அப்போது கவனித்தேன். இருவர் பாலத்தின் சுவர் மீது ஏறியமர்ந்ததை. அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை. இரு துறவிகள் என்ன பேசிக்கொள்வார்களோ? பழசா, புதுசோ? எதிர்காலம் குறித்து? ஜைனத் துறவிகளின் வாழ்க்கை வரலாறு? கொல்லாமை பற்றிய தத்துவம்? எது அவர்கள் பேச்சினூடே அடிபடுவது?

என்னைப் பார்த்தால் நான் இந்திக்காரி அல்ல என்பது அவர்களுக்கு விளங்கியிருக்கக் கூடும்? நான் அந்த ஊருக்குப் புதுசு என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. மொழிப்பற்று இடப்பற்று ஏதுமில்லாததால் இந்த எண்ணங்களெல்லாம் அவர்களுக்கு அவசியமில்லாமல் கூட இருக்கலாம். அதனால்தான் என்னிடம் வழி கேட்டார்களோ? அல்லது அவர்களைப் பற்றிய எனது குறுகுறுப்பை நான் வெளிப்படுத்தி விட்டேனா?

துறவிகளின் படை முடிவடைந்து விடவில்லை. சற்று தூரத்தில் இன்னொரு கூட்டம் இடையே, பின்தங்கி இருவர் மூவாரய் நடந்து கொண்டிருந்தனர் சிலர். எல்லோரும் ஒரே மாதிரியான உருவ அச்சில் வார்த்தது போலிருந்தார்கள். இளைத்து வாடிய தேகம்தான் இந்த உருவ ஒற்றுமையை அளித்துக் கொண்டிருந்தது.

பாலத்தைக் கடந்து மீனவ கிராமம் ஒன்றின் சந்தடியான மீன் சந்தையைக் கடந்து வயல் வெளிகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே நடந்தபோது துறவிகள் வரிசையில் சில இளந் துறவிகளும் இருப்பதைப் பார்த்தேன். ஆனால் இளந் துறவிகள் வெள்ளைக் கோமணம் உடுத்தியிருந்தார்கள். ஏன்? இளந் துறவிகள் நிர்வாணம் கேலிக்குரியதா? வயதான துறவிகள், தங்களுக்கு வயதான காரணத்தினால் தான் நிர்வாணமாக இருக்கிறார்களா? துறவியில் பல்வேறு நிலைகள் உள்ளனவோ? தங்களில் ஒருவர் துணியால் மறைத்துக் கொள்வதை எப்படி அங்கீகரிக்கிறார்கள்? இதெல்லாம் பழக்கம் சம்மந்தப்பட்ட விஷயமோ?

சற்று தூரத்தில் வெள்ளைப் புடவை அணிந்த பெண் துறவிகள் வந்தார்கள். பெண்கள் ஏன் நிர்வாணமாக இல்லை? வயதான பெண்கள் கூட புடவை உடுத்தியிருந்தார்கள்; பெண்கள் என்றால் வயது வேற்றுமை இல்லையா? பெண்கள் துறவு பூணுவதற்குத் தகுதியானவர்கள் இல்லையா? துறவிலும் ஆண் பெண் வேற்றுமை உண்டா? ஆண் துறவிகளும் பெண் துறவிகளும் ஏன் கலந்து நடக்கவில்லை? பற்றுக்களிலிருந்து விலகுவது என்பது தன்னைச் சுற்றி திரையிட்டுக் கொள்வதா? எனக்கோ குழப்பம் மேல் குழப்பம்; அவர்களிடம் கேட்டால் அவர்கள் தகுந்த பதிலளிக்கக் கூடும். ஆனால் எனது மொழிப் புலமையும் அவர்களின் இலக்கை நோக்கிய விரைவும் என்னைத் தடை செய்தன. சூரியன் குழந்தைமை கழிந்து முழுவட்டமான ஒளிப் பிரவாகமாக தோன்ற ஆரம்பித்தான். நான் நிழற்பறவை போல் மரங்களின் நிழல்களில் தங்கித் தங்கி நடக்க ஆரம்பித்தேன். ஒளி ஆயுதம் எத்துணை அற்புதமானது. அழிக்கவும் ஆக்கவுமான வல்லமை மிக்கது.

துறவிகளின் ஊர்வலத்தின் இறுதியில் சிறு மரவண்டிகள் வந்தன. அந்த வண்டிகளின் மேல் சிறு காவிக்கொடிகள் சேவற் கொடியோனுடையதைப் போல பறந்து கொண்டிருந்தன. அந்த மரவண்டிகள் நான்கு ஆட்கள் தள்ளிக் கொண்டு வந்தனர். அவர்கள் துறவிகளல்ல. பைஜாமா அணிந்து மேலே வண்ணச் சட்டைகளை அணிந்திருந்தனர். கழுத்தில் கறுப்புக் கயிறு கட்டியிருந்தார்கள். கருந்தேகத்தினர். துறவிகளால் வேலைக்கமர்த்தப்பட்ட கூலிக்காரர்கள் போலும்; அந்த வண்டிகளில் வெள்ளைப் பீங்கான் கமண்டலங்கள் இருந்தன.

என்ன இது? அவர்களிடம் சுலபமாகப் பேச முடிந்ததை எண்ணி வியந்து கொண்டேன். “இவையா? சுத்தமான வெந்நீர் துறவிகளுக்கு” வெந்நீரில் இறந்த உயிரணுக்களை நினைத்து துயரமேதுமின்றி, ஏன் இந்தக் கமண்டலங்களை அவர்கள் சுமந்து சென்றால் என்ன என்று எண்ணமிட்டேன். மயில் தோகை சுமப்பதும் கமண்டலங்களை சுமப்பதும் ஒன்றல்ல. துறவிகள் எங்காவது கூலிக்கு ஆளமர்த்தி தங்கள் கமண்டலங்கள் எடுத்து வர ஆட்களை பணிப்பார்களா? ஓ, பணிப்பார்களே, இதோ நான் பார்க்கிறேனே; கேள்வியும் வியப்புமாக எனக்குள் உரையாடிக்கொண்டேன்.

இந்தத் துறவிகளிடமிருந்து என்ன கற்றுக் கொண்டேன்? நவீனத் துறவின் நடைமுறைகளை அதற்குள் பொதிந்திருக்கிற பொய்மையை? ஆனால் இதற்கான அவசியம் என்ன என்ற இடத்திலேதான் குழப்பம் மிகுந்தது.

நான் பள்ளியில் படித்த போது எங்கள் பள்ளியில் சூசையப்பர் திருநாள் கொண்டாடுவார்கள். பள்ளிப் பிள்ளைகளிடம் அப்போது சூசையப்பர் திரு நாளுக்காக ஒரு ரூபாய் வசூலிக்கப்பட்டது. மாலை திருவிழாக் கொண்டாட்டத்தின் போது உருளைக் கிழங்கு போண்டாவும் கேசரியும் தருவார்கள். நாங்கள் ஊர்ப் பாதிரியாரிடம் முழந்தாள் பணிந்து ஆசிர்வாதம் பெறுவோம். அவர் தனது குடியிருப்பிலிருந்து வெளியில் வந்து விறாந்தையில் நின்று ஆசிர்வாதம் தருவார். அவரது அறை வாசலில் பச்சை திரைச்சீலை தொங்கும். அது காற்றில் அசையும் போது உள்ளே அழகிய சுத்தமாக மெத்தைப் படுக்கை தெரியும். வேலைப்பாடுள்ள பீங்கான் குடுவைகளும், கண்ணாடித் தம்ளர்களும் தெரியும்.

சில சமயங்களில் பாதிரியார் எங்கள் பள்ளிக்கு வந்து உரை நிகழ்த்துவார். அவர் வருகையையொட்டி கன்னியாஸ்திரிகள் அங்குமிங்கும் புறாக்கள் போல் அலைந்து கொண்டிருப்பார்கள் உரை முடிந்ததும் அவரை அலுவலக அறைக்கு அழைத்துச் சென்று தேநீரும் புதிதாக மடத்தில் தயாரிக்கப்பட்ட பலகாரங்களும் வழங்குவார்கள். முடிவில் கன்னியாஸ்திரீகளும் முழந்தாளிட்டு ஆசி பெறுவார்கள். குழந்தைகளாகிய எங்களுக்கு பாதிரியாரின் அங்கி, சுரூபம் முதல் கன்னியாஸ்த்ரிகள் மூடாக்கு எல்லாமே விசேஷமானதாகத் தெரியும்.

சூசையப்பர் திருநாளுக்கு ஒரு ரூபாய் கேட்டு நான் வாசற்படியில் ஒற்றைக்காலில் தவமிருந்து கொண்டிருந்தேன். எங்கள் வாயில் காசு அடிக்கடி புழங்கிய அளவு பையில் புழங்கவில்லை, காசு, காசு, காசு, எப்போப் பாத்தாலும் காசு புடுங்கறாளுங்க என்று அம்மா திட்டிக்கொண்டே சுருக்குப் பையிலிருந்து காசு எடுத்துக் கொடுத்தாள், அந்த ஒரு ரூபாய் மட்டும் இல்லையென்றால் பாதிரியார், கன்னியாஸ்திரீகளின் நாடகங்களை நான் தொலைத்து விடுவேன் என்று எனக்குள்ளே பயந்தேன்.

எனக்கு துறவிளெல்லாம் அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை நாடகக்காரர்கள் போலவே தோற்றமளிப்பது ஏன்?