“Watching ones own disease is very interesting” - நித்ய சைதன்ய யதி

அது ஒரு பொன்னான மாலை நேரம்தான். நான் நீர் வண்ணம் கொண்டு நிலக்காட்சி ஓவியம் ஒன்றை வரைவதில் ஆழ்ந்திருந்தேன். வாசலில் ஓர் இளைஞன் வந்து நின்றான். யார் என்று பார்த்தால் கோபால். நான் ஆசிரியப் பயிற்சி முடித்து வேலை தேடிக் கொண்டிருந்த நேரம் அது. கோபால் எனது பயிற்சிப் பள்ளி மற்றும் விடுதி அறைத் தோழன். அவனுக்கு இங்கே கிராமம் ஒன்றில் வேலை கிடைத்திருந்தது. நீண்ட எங்கள் அளவளாவல்கள் மற்றும் உரையாடலைத் தொடர்ந்து கொண்டு வெளியே நடக்க ஆரம்பித்தோம்.

அவன் வீட்டு வாசலில் வந்த நின்றதைப் பார்த்த எனது முதற்கணப் பார்வையில் அவன் ஓர் அபூர்வமான மனிதன் என்ற காட்சி என் மூளையில் அறைந்திருந்தது. தொடர்ந்து அவன் அவ்வாறே இருந்ததை மூளை அவதானித்துக் கொண்டே வந்தது போலுமிருந்தது. மட்டுமின்றி அவனைப் பற்றிய எனது முன் அனுபவ மதிப்பீடுகளும் அத்தகையனவே. எப்போதும் அவனது எல்லாச் செயல்களிலுமிருந்த தியானமே என்னை வியப்பிலாழ்த்தியதும் அவன்பால் நான் ஈர்க்கப் பட்டிருந்ததற்கும் காரணமாயிருந்திருக்கலாம். எனக்கு அவன் மீதுள்ள ஈர்ப்பைப் போலவே அவனுக்கு என் மீதும் ஒரு ஆர்வம் இருந்திருக்க வேண்டும். அந்த இரண்டு ஆண்டுகளிலும் நான் இழுத்த இழுப்பிற்கெல்லாம் இணங்கி என்னோடு அவன் சுற்றித் திரிந்தான் அல்லவா? அப்போது எனது தேடல் மிகுந்த வாழ்க்கையின் பதின்வயதின் இறுதி.

என்ன தேடல்பெரிய தேடல், அந்த பஞ்சாயத்து ஒன்றியக் கிராமத்தின் நூலகத்தில்தான் நான் வெகுநாளாய்த் தேடிய எனது பெயருடைய ஒரு தத்துவநூல் அகப்பட்டது எனக்கு. பரபரப்பும் வேகமுமாயிருந்த எனது ஆளுமையின் இனனொரு முகமான ஆழமான துக்கம் பற்றி ஒரு நாள் அவனிடம் பேசியபோது, வெறுமை பற்றியும், ஆழ்ந்த ஈடுபாடுடைய ஏதாவது ஒரு செயல் மூலம் அதைப் போக்கலாம் என்றும் அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன் அப்போது அவன் சொன்ன உதாரணம், மாடு வளர்த்தல். அவன் வீட்டில் மாடு உண்டு. வாசிப்பு இல்லாத ஒருவன் இந்த மாதிரி விஷயங்களைத் தன்னியல்பாய் யோசித்தும் வாழ்ந்தும் கொண்டிருப்பான் என்பதுதான் என் அதிர்ச்சிக்குக் காரணம்.

எங்களது உரையாடலுக்கு ஊடேதான் வழியில் அங்கே ரொம்பப் பழக்கப்பட்டவன் போல் இரண்டு கடைகளில் அன்றைய இரவு உணவுக்கும் சேர்த்து காய்கறிகள் மற்றும் சில மசால் சாமான்கள் கொஞ்சம் அரிசி, எண்ணெய் ஆகியவற்றை மிகவும் தேர்ந்த கவனத்துடன் வாங்கிக் கொண்டான். ஊரை விட்டே வெளியே வந்து ஒரு மணல் பாதையைத் தொட்டு விட்டோம். நேரம் போனதே தெரியாமல் ஒரு மஞ்சள் வெயிலுடன் அவன் கிராமத்தை நெருங்கிவிட்டோம். ஆட்டுக் கிடையோடு திரும்பிக் கொண்டிருந்த ஒரு இளைஞன் வயல் வேலைகளிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த மக்கள் எல்லோருமே ரொம்பத் தெரிந்தவர்கள் போலிருந்தார்கள்.

“என்ன தம்பி, கூட வர்றது யாரு?”

“இதுவா, இது நம்ம சிநேகிதக்காரன் இவனும் வாத்யார்தான் டவுன்ல இருக்கான்”

“அப்படியா? ஆங்” என்று அந்தப் பெரியவர் என்னையும் பார்த்து வியந்து மகிழ்ந்தார்.

“உங்களுக்கு இப்போ உடம்புக்கு நல்லா இருக்கில்லா? நேத்து எல்லாரையும் படாதபாடு படுத்திப்புட்டீங்களே” என்றான் கோபால். பெரியவர் ஒருவித வெட்கத்தோடும் பெருமிதத்தோடும் சிரித்தார்.

“தம்பி பார்த்து போங்க நேரம் இருட்டிட்டு பூச்சி பொட்டு கிடக்கும் மேற்காந்தப் பாதை வழியா போவாதீங்க கீழக்கோடிப் பாதையைப் பிடிச்சுப் போங்க,” என்றார் சற்றுத் தூரம் நடந்துவிட்ட பெரியவர் உரத்த குரலில் “சரி தாத்தாவ்” என்றான் கோபாலும் சத்தம்போட்டு.

“இந்த ஊருக்கு நீ வந்து ஒரு வாரம்தானே ஆச்சின்ன?” “ஆமாம் நல்ல ஊரு இது” என்றான் கோபால் மண்ணெண்ணெய் ஸ்டவ்வில் சோறு வெந்து முடிந்து குழம்பு கொதித்துக் கொண்டிருந்த வேளையிலும் எங்கள் பேச்சு தொடர்ந்தபடி இருந்தது. “நல்லா சமைக்க தெரிந்து வைத்திருக்கிறாயே” என்றேன். “நானா சமைக்கிறேன். ஸ்டவ்வல்லவா சமைக்கிறது” என்றான் கோபால். சாதாரண ஜோக் அல்ல அது. ஓர் அசாதாரணமான உண்மை. அவன் செயல்கள் எல்லாமே அவன் செய்வது போலில்லாமல் அவனுக்காக வேண்டி வேறு யாரோ அவனுள்ளிருந்தபடி செயல்படுவது போல இருந்தது. சுருக்கமாகச் சொல்லி விஷயத்திற்கு வருகிறேன். அதன்பிறகு ஒரு நாள் ஒரு பிற்பகலில் உடைமரங்களும் பனைகளும் ரயில்வே தண்ட வாளங்களுமான அந்த ஒற்றையடிப் பாதை வழியாய் அவனைத் தேடி வந்து சேர்ந்தேன்.

பின்னால் தமிழ்ச் செல்வனின் “வெயிலோடு போய்” சிறுகதையை வாசிக்கையில் இந்த ஊடு பாதையே நினைவுக்கு வந்தது. பள்ளிக் கூடத்தை நெருங்கி விட்டேன். அவன் பாடும் குரல் கேட்டது. தொடர்ந்து பின்பாடிய குழந்தைகளின் கூட்டுக்குரல். அவன் நன்றாகப் பாடுவான். எந்தப்பாடலைப் பாடினாலும் பெரு வெளியில் கரையுமாறு எழும் கனத்த துக்கமான பாவத்திலேயே அது அமையும். இதைக் கொண்டு குழந்தைகளை அவன் கவரமுடியுமா என்று நான் யோசித்ததுண்டு. ஆனால் குழந்தைகள் எப்போதும் தாங்களாகவே அவன் கட்டுக்குள் மயங்கிக் கிடப்பவர்களே போல் தான் இருந்தார்கள். வேறு என்னென்னவோ வித்தைகளும் கூட அவன் வைத்திருந்திருக்கலாம். அதன் பின் திடீரென்று ஒருநாள் பணிமாற்றலின் காரணமாய் தன் ஊருக்கு அவன் கிளம்ப வேண்டியதிருந்தபோதுதான் அதுவரை ஒத்திப் போட்டு கொண்டுவந்ததை நிறுத்தி அவன் அழைப்பையும் தட்டாமல் ஏற்றுக்கொண்டு அவன் ஊரான கடையத்தைப் பார்க்கவும் மூட்டை முடிச்சுக்களோடு செல்ல அவனுக்குத் துணையாகவும் இருக்குமென்று கிளம்பினேன்.

நிலக்காட்சிகள் மீது எனக்கிருந்த ஆர்வத்தை அவன் நன்கு அறிவான். எங்கள் பயிற்சிப் பள்ளிக் காலத்தில் காணாததைக் கண்டமாதிரி நான் ஒவ்வொரு ஓய்விலும் விடுமுறை நாட்களிலும் உணவைப் பற்றிக் கவலைப்படாமல், பாதையற்ற ஊடு பாதைகளிலெல்லாம் ஆர்வமாய் நடந்து சென்று தேவதைகள் போல் சோளக் கதிர்கள்மீது பாய்ந்து வந்து அமர்ந்து செல்லும் படைக் குருவிகளையும், வயல்களூடே கவலையற்று வேகமாய்ப் பாய்ந்தோடும் தெளிந்த வாய்க்கால் நீரையும் மழைக் காலத்துக் குளமும் குட்டைகளும் மதகுமாய் மனதை நிறைக்கும் பச்சைப் பசேலென்ற நிலப்பரப்பையும் தீர்க்கமாய் நின்றசையும் ஆற்றங்கரை மரங்களையும், எப்போதும் பறவைகள் இறைந்து ஒலித்துக் கொண்டிருக்கும் பெரு மரங்களையும் சுழன்று வீசும் காற்றுடைய குன்றுகளையும் மலையின் கீழுள்ள கிராமங்களின் மொத்த மேற் கூரைகளையும் வெறித்தபடி நிலக்காட்சிகளில் பரவசங்கொண்டு பித்துப் பிடித்தலைந்தது அவனுக்குத் தெரியும் மேலும் உங்களுக்குத்தான் தெரியுமே நான் ஒரு வருங்காலக் கவிஞனோ, ஓவியனோ அல்லவா?

உங்களுக்குத் தெரியாததல்ல, சூட்டிங்குக்கு லொகேஷன் பார்த்துக் கொண்டு திரியும் சினிமாக் காரர்களுக்குள்ள ஒரு பழக்கம் தோதான காட்சிகள் அகப்பட்டால் இரு கைவிரல்களாலும் உண்டாகும் ஒரு செவ்வக வெளியை ஒற்றைக் கண்ணுக்கருகே பிடித்தப்படி அதைச் சரிப் பார்த்துக் கொண்டே அலைவார்களில்லையா, அது போல எனக்கொரு பிரச்சனை உண்டு. அதைச் சொல்லிவிடுகிறேன். நிலக்காட்சியை வரையும் போது வரைந்து கொண்டிருக்கும் தாளில் நாம் பார்த்த காட்சியானது நமக்கு உள்ளிருந்து ஊறிக் கொண்டு வர வேண்டும் இதற்காக வேண்டி நான் ஒரு பயிற்சியை மேற் கொண்டிருந்தேன். அதாவது அழகான ஒரு காட்சி ஒன்று எனக்குத் தோன்றினால் போதும். அதில் நன்கு திளைத்தபின் கண்களை மூடிக் கொண்டு அந்தக் காட்சியை எனது மூடிய கண்களுக்கு முன் அதாவது மனத்தில் அப்படியே சித்திரமாய் நிறுத்திப் பாத்துக் கொள்வேன்.

கடையத்தை வந்தடைந்ததும் பயணக் களைப்பு தீர ஆற்றில் குளித்து முடித்துவிட்டு வரும் வழியில் பாரதி வாழ்ந்திருந்த அக்ரகாரத்தைக் காட்டினான் கோபால். ஒரு விதமான அமைதியில் ஆழ்ந்திருந்தது அப்போது அத்தெரு. அந்த வழியாக அவர் வீட்டையும் (அந்த வீட்டு ஜன்னலில் ஒரு தபால்பெட்டி தொங்கியது) பார்த்துக் கொண்டு போக ஆசைப்பட்ட என்னைக் கோபால் முதலில் தடுத்தான். போகலாம். எனினும் உள்ளூர் மக்கள் வேறு வழியிருக்க அவ்வழியை அனாவசியமாகப் பயன்படுத்தத் தயங்கியே நடந்து கொள்வதாகக் கோபால் சொன்னான். பைத்தியம் பைத்தியம் என்று கல்லெறிந்த சிறுவர்களைப் பற்றி அவன் கூறியபோது எனக்கு முதுகு கூசியது.

என் வற்புறுத்தலின் மறுநாள் வெகு அதிகாலையிலேயே எழுந்து கொண்டோம். இன்னும் நட்சத்திரங்களைக் கூட மறையவிடவில்லை நான். எனக்கு ஒரே கொண்டாட்டம் ஊமையாகி நின்றிருந்த கடைக் தெருவைத் தாண்டி கோயிலைத் தாண்டி அகலமான தார்ச்சாலையை விட்டு விலகி பனி நீங்காத இருள் பிரியாத கருக்கல் பொழுதில் வயல் வரப்புகள் மீது நடந்தோம். கடைசியாக அனுதாபத்திற்குரிய அந்தக் கவிஞன் மல்லாந்து கிடந்தபடி ஓய்வு கொள்ளும் அந்தக் குன்றுக்கே வந்து சேர்ந்து விட்டோம். இரவின் குளுமை இன்னும் நீங்கவில்லை. கீழ்வானில் சூரியன் உதயமாகும் சுவடு தெரிய ஆரம்பித்திருந்தது. சுனை ஒன்று பாதரசம் போல் நடந்து செல்வதைக் காட்டினான் கோபால். வெகுநேரம் அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டே நின்றுவிட்டோம். காலம் விக்கித்து நின்று விட்டது. இருவரும் மவுனமாக அங்கே அமர்ந்தோம். சூரிய ஒளி மெல்ல தோன்றத் தொடங்கவும் பறவைகள் உயிர்பெறும் ஒலிகள் வரத் தொடங்கின.

ஆற்றங்கரைப் படித்துறையை வந்தடைந்தோம். நீரில் நன்கு துளைந்து நீராடிவிட்டு, ஈர ஆடையுடன் வெட வெடத்தபடி புறப்பட்டோம். குளிரைக் காத்து வைத்துக் கொண்டிருக்கும் காட்டு மரங்களுக்கிடையேயுள்ள ஒரு கோயிலை வந்தடைந்தோம். இடிபாடுகளும், கீறல்களுக்கிடையே முளைத்த தாவரங்களுமாய், எடுத்துக் கட்டப்படாது சிதைந்து போய்க் காட்சியளித்த பழங்காலத்துக் கட்டடம் அது. பூஜை மட்டும் ஒழுங்காக நடந்து கொண்டிருப்பது தெரிந்தது. அந்த விடி காலையிலேயே முதல் பூஜை நடக்கத் தொடங்கியிருந்தது. வாசல் தெளிக்கப்பட்டுக் கோலமிடப்பட்டிருந்தது. அதன்மேல் காட்டு மரங்களின் சருகுகளும் பூக்களும் விழுந்து ஒரு வனம்தான் முதன்மையாய் அக்கோயிலை வழிபட்டுக் கொண்டிருக்கிறதாய்த் தோன்றிற்று. உடம்பெல்லாம் பளீரிடும் திருநீற்றுப் பட்டைகளுடன் குருக்களையர் மணி ஒலித்தபடி கற்பூரம் காட்டிக் கொண்டிருந்தார்.

அந்த சூர்யோதயப் பொழுது வெகு நீண்டதாயிருந்தது. பறவைகளின் அந்த ஒலி அந்த புலரிப் பொழுதில் மட்டுமல்லாமல் எப்பொழுதுமே அந்த இடத்தில் இருக்கும் என்றுதான் தோன்றியது. எனக்கு ஒவ்வொரு காட்சியும் திகட்டத் தொடங்கியிருந்தது. நான் என் வேலையை ஆரம்பித்துவிட்டேன். அங்கே அங்கே நின்றபடி விழிகளை மூடி அக்காட்சிகளை அகக் கண்ணில் நிறுத்திக் கொண்டிருந்தேன். கோபால் பக்தன். என்னைப் பற்றித்தான் உங்களுக்குத்தெரியுமே. அவன் முறையாய் பிரகாரங்களைச் சுற்றி வணங்கிக் கொண்டு வந்தான். சிற்பங்களையும் எத்தனையோ பருவகாலங்கள் கண்டு முதுமையேறியிருந்த கற்சுவர்களையும் கல்பாவிய தளங்களையும் இடைவெளிகளில் முளைத்திருந்த புற்களையும் பார்த்தபடி நான் வந்து கொண்டிருந்தேன். இருவரும் உட்பிராகரத்தையும் சுற்றி முடித்து கர்ப்பக் கிரகத்துக்கு முன் வந்துவிட்டோம். குருக்கள் அம்மனை நன்கு அலங்கரித்திருந்தார். அந்தக் காட்சி.

கோபால் விழிகளை மூடியவாறு கைகூப்பித் தொழுதவாறிருந்தான். எனக்கு ஆச்சரியம் தாளவில்லை. என்ன அழகு அந்த உருவம்! குருக்கள் பூக்களாலும் பட்டாலும் சிரத்தையுடன் செய்திருக்கிறார்தான் என்றாலும் அது இப்படியா? சொல்லி முடியாது அந்த அழகை. இத்துணை ஒரு அழகை இதுவரை எந்த ஒரு உயிருள்ள பெண்ணிலும் கூடக் கண்டதில்லையே. இது பிந்தைய ஒரு சொல்விளம்பல்தானே? அந்தத் திகைப்பைச் சொல்லவும் முடியுமோ? கண்களை மூடிக் கொண்டேன். வழக்கமான பேராசையுடன் அக்காட்சியை என் கண்களுள் இருத்தி நின்றேன். அப்போதுதான் அது நிகழ்ந்தது. பார்த்துக் கொண்டேயிருக்கையிலேயே அந்த தேவ சுந்தரரூபம் உயிரசைவு பெற்று நேரே முன்னோக்கி என்னை நோக்கி ஒரு சீரான கதியில் நடந்து வருவது தெரிந்தது.

நான் என் விழிகளைத் திறந்துவிடாது மிகுந்த ஆசையுடன் இறுக்கமாய் மூடிக்கொண்டிருக்க அது நேரே என்னை நோக்கி என்னருகே இன்னும் அருகே நெருங்க இனி இடமில்லை என்னுமளவுக்கு என் மார்பை ஒட்டி வந்து விட்டபோது நான் என்னை மீறி வெடுக்கென்று விழிகளைத் திறந்து விட்டேன். காணோம் அது. அதே கணம் அது என்னுள்ளேதான் நுழைந்து மறைந்து விட்டதான நிச்சயமான உணர்வு உண்டாகி மெய்சிலிர்த்தது. வழியில் வெகுநேர மவுனத்திற்குப் பிறகு கோபாலிடம் அந்த அனுபவத்தைச் சொன்னேன். அதற்கு அவன் எல்லோருக்கும் ஏற்படக்கூடிய அனுபவமல்ல இது. நீ ஏதோ பாக்கியம் பெற்றவன்தான் என்பதுபோல் சொன்னான். என்னால் அதை ஏற்கவும் முடியவில்லை. மறுக்கவும் முடியவில்லை.