சுமாராக மத்தியகாலத்திலிருந்து துவங்கும் பக்தி இலக்கியத்தைத் தேடிப்படிக்க வேண்டிய அவசியம் ஆன்மீகம் என்ற அளவில் இல்லாமல் ‘அன்பு’ என்ற ஒருசொல் குறிக்கும் பன்மொழியை அதன் நிஜமான அர்த்தத்தை அறிந்துவிடும் ஆவலில்தான் துவங்கியது. பதின்ம வயதில் துவங்கும் வர்ணஜாலங்கள், மருட்டும் உறவு, பீதிக்கனவாய் படிந்த கல்வி எங்கும் ஒரு மாயவிலங்கு நம்மைக் கட்டி வைத்திருக்கிறது. கற்றுக் கொடுக்கக் காத்திருக்கும் பூத நிழல்களிலிருந்து நிராதரவாக அன்பைத் தேடி நிலைகொள்ளாமல் துரத்தித் தேடுகிறேன். தேடுங்கள் கிடைக்கும் என்கிறான் கிறிஸ்து. தேடாதே தொலைந்து போவாய் என்கிறது ஜென்.

வாழும் காலத்தில் நன்றியுணர்ச்சியைப் பரிமாறிக் கொள்வதும் மனம் என்று சொல்லும் சுயநீட்சியை சாந்தப்படுத்தி இன்பந்துய்க்கச் செய்வதும் அன்பாகிவிடுமா? நமதுகல்வியும் உறவும் போட்டி போட்டு வளர்த்துவிடும் மனப்பிம்பத்தை அறிவு என்று சொல்வதும் அறிவு சுயஉடல் மீது நிகழ்த்தும் வாதையை மொழியின் அலகுகளில் பகிரங்கமாய்ப் பேசுகிறோமா? வலியுறுத்தப்படும் அறமும் ஒழுங்கு செய்யப்பட்ட தர்க்கமும் முடிச்சிட்டு இதுதான் வாழ்வு என்று பொதுச் சொல்லில் சொல்லிவிட நம்மைப் பழக்கியது பக்தி அல்லவா.

சொல்லப்பட்ட சொல்லின் அர்த்தம் ‘இறந்த காலத்தில் மட்டுமே அதன் இருத்தல்’ இருக்கும்போது சொல்லுக்குப் பின்னால் அலைபவன் தனது முழுமையைக் கண்டு மறைப்பதும், சொற்கவர்ச்சியை தெரிவு செய்வதையும்தான் பக்தி இலக்கியம் முழுதும் காணமுடிகிறது. கவர்ச்சியில் மழுப்பப்பட்ட விகாரம் நம்மிடம் சரணாகதியைப் பரிந்துரைக்கிறது. சரணாகதி எல்லாப் பிரச்சனைக்கும் எளிய தீர்வு. கடவுளின் புரோக்கர்களான இவர்கள் வெகுமக்கள் மீடியாவாக மாறும் முக்கியப் புள்ளியும் இது. லௌகீகர்களுக்காக பொறுப்பெடுத்து கடவுளிடம் கையேந்தும் முக்கியமான பணியை தாமே மனமுவந்த ஏற்கின்றனர். சரணாகதி தப்பித்தல் மட்டுமே.

பக்திக்கும் அன்புக்குமான தொடர்பு உண்மையின் மீது இல்லை, அல்லது பொய்களின் வாயிலாக வேறொரு இடத்திற்கு அழைத்துச் செல்வதும் இல்லை. அன்பு, கருணை என்பதெல்லாம் இணக்கமான சொற்கள் அனைத்து வெகுமக்களிடமும் லகுவாகப் புழங்க. ஆனால் பக்தி இலக்கியவாதிகளின் எண்ணங்களை மட்டுமே வழிகொண்டு செல்கின்றனர். இதில் அனுபவம் துளியாவது இருக்கிறதா, அனுபவமில்லாத எண்ணங்களுக்கு நம்பகத் தன்மையை தரமுடியாது போகும்போது, அதற்கு பக்கத் துணையாக சுத்தமும் ஞானமும் கை கொடுத்து உதவுகின்றன. அன்பையே வெளிப்படையாகப் பேசமுடியாத இவர்கள் உடலிலிருந்து விடுதலை என்பது வெறும் பாவனை. இவர்களது உடலுக்கான விடுதலையும் சுத்தமும் காமத்தை அடக்குவதுமே. காமம் என்று சொல்வது தவறு. குறிவழியே விந்து வருவதே அழுக்கு, குறிவிறைப்பதும் அழுக்கு, குறியை அடக்கத்தான் யோகம்.

அறிதலின்றி ஒப்புக்கொண்டு பின்தொடர மனிதரை மூடராக்கி அழைக்கும் சைவ வழியே வரும் கொலைத்தத்துவன் ஞானசம்பந்தன், மனதிற்கு குடமுழுக்கு நடத்தும் வாதவூரார், இருமைக்கும் மறுமைக்கும் இடையே அல்லாடும் சுந்தரர், பௌத்தத்திற்கும் சைவத்திற்கும் மாறிமாறிக் குழம்பிய நாவுக்கரசர், உடலை விஞ்ஞான களமாக்கும் திருமூலர், அவர்களை மலினமாகத் தொடரும் குமரகுருபரர், சிவப்பிரகாசர், தாயுமானவர், சிதம்பரம் இராமலிங்கர், இவர்களைப் பின்பற்றும் நமக்கு இவர்கள் தரும் அனுபவம் ‘ஒன்றுமில்லை’. அதனை சூன்யமாக அர்த்தப்படுத்த முடியாது. நம்பிக்கை என்று எதிர் அர்த்தம் கொள்ளவும் முடியாது. பன்னிரு திருமுறை மற்றுமான சைவப் பாடலாசிரியர்களில் காரைக்காலம்மையார் மட்டுமே வாசக அனுக்கத்தையும், சொல்லின் வழியே முன்னகரவும் உதவுகிறார். அவரிடம் அன்புகுறித்த நிஜமான கேள்வி இருக்கிறது.

நமக்குத் தெளிவாக வரலாறு தெரியும். சிதம்பரம் இராமலிங்கர் என்ற அருட்பிரகாச வள்ளலார் இந்தப் பெரும்பாடற் கூட்டத்தில் என்னதான் சொல்லுகிறார் என்று பார்க்கலாம். அவரது ஆரம்பகாலப் பாடலொன்று சிறுவர்கள் படிப்பதற்காக எழுதப்பட்ட ‘மனுமுறை கண்ட வாசகம்’. அதில், நாற்பத்திநான்கு விதமான பாவங்களைப் பட்டியலிடுகிறார். சிறுவர்களுக்கு மனுமுறையை முன்வைத்துச் சொல்வது,
.........
வலிய வழக்கிட்டு மானங்கெடுத்தேனோ
ஆசை காட்டி மோசம் செய்தேனா
கற்பழித்தவளைக் கலந்திருந்தேனா
காவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனா
கணவன் வழி நிற்போரைக் கற்பழித்தேனா
கருப்ப மழித்துக் களித்திருந்தேனா

சுத்த சன்மார்க்கம் பேசுகிறவர் சிறுவர்களுக்கு எழுதும் எழுத்து இது. சுத்தத்தைப் பேசுபவரும் பேணுபவரும் அன்புக்கு வெகுதூரமான ஆட்கள், இராமலிங்கரும்கூட. ஒரு கடிதத்தில் குறிப்பிடுகிறார், ‘ஆண்டவரது அருட்பெருஞ்சித்தி வெளிப்படும்வரை தகரக் கண்ணாடி விளக்கை ஏற்றவும், தூசு துடைக்க தேகசுத்தி கரண சுத்தியுள்ளவரும், பன்னிரண்டு வயதுக்கு மிகாதவராயும், எழுபத்திரண்டு வயதுக்கு மேற்பட்டவராயும், பொருள், இடம், போகம் முதலியவற்றில் சிறிதும் ஆசை இல்லாதவராயும், தேகசுத்தஞ் செய்து கொண்டு காலில் வத்திரம் சுத்தி முட்டிக் காலிட்டவாறு காரியம் செய்யவேண்டும்’ என்கிறார். மேலும் ஞானசபைத் திறவுகோலை ஒருவர் கையிலும் வெளிப்படையாயிருக்கக் கூடாது, அத்திறவுகோலை வேறொரு பெட்டிக்குள் வைத்து அப்பெட்டியை பொற்சபைக்குள் வைத்துப் பூட்டி அப்பெட்டித் திறவுகோலை ஆஸ்தானக் காவல் உத்தரவாகியிருக்கின்றவர் கையில் ஒப்புவித்தல் வேண்டும் என்கிறார். (இந்தக் கடிதம் 18.7.1872ல்அவர் இறப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது)

இரட்சகரின் ஆசையைப் பாருங்கள், ஞானமென்ன கொள்ளையடிக்கும் பொருளா, அல்லது சமாதியிலிருப்பவரை யாரேனும் ஏதேனும் செய்து விடுவார்கள் என்ற பயமா? பயம் கொள்பவன் ஞானத்தையடையவோ, போதிக்கவோ முடியுமா என்ன? இவரிடம் அன்பை எதிர்பார்க்க ஏலுமா? இராமலிங்கரின் நசிந்த சுயத்திற்கு அவதூறு வழக்கு மிகச்சரியான உதாரணம்.

அந்தணர்க் கூட்டத்தில் உணர்ச்சி வேகத்தில் வசைபொழிந்தபின், அது அவதூறு வழக்காக மாறியதும், தீர்ப்புக்கு முந்தின தினமே சென்று நீதிபதியை நலம் விசாரித்தும் அருளாசி வழங்கியதும், நீதிமன்றத்தில் உண்மைக்கு முரணாக பொய்ச்சத்தியம் செய்ததும், நாவலர் மனமுவந்து வழக்கை வாபஸ் பெற்றும் கூட தனவந்தரின் துணையோடு தஸ்தாவேஜிகளைச் சிதைத்ததும் அவரது தனிப்பெருங்கருணை.

ஒருபுறம் தனவந்தரின் உறவு, மறுபுறம் விட்டேத்தியான பேச்சு. தனது புத்தகம் அச்சிடுவதில் தனக்கு விருப்பமில்லாதது போன்று சேலத்து தனவானுக்குக் கடிதம் எழுதுவது. அதேநேரம் புத்தகம் அச்சிலிருக்கும் போதே மேலும் நூற்றுக்கணக்கான பாடல்களை அச்சுக்குச் சேர்க்க அனுப்புவது நசிந்த சுயத்தின் அருட்பெருஞ்ஜோதி.

“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” ஆமாம் வாயில்லாத ஜீவனிடம் அன்பு பாராட்டலாம். பசித்த சிங்கத்தைக் கண்ட போதெல்லாம் வருந்தினேன் என்று சொல்ல முடியுமா, கிட்டேபோய்த் தடவிக் கொடுக்க முடியுமா? எளிய சித்துகளால் வெகுமக்களை வளைத்துவிடுவது சுலபம்தான். தண்ணீரில் விளக்கெரிக்கலாம். அந்தரத்தில் நடக்கலாம். நசிந்த சுயத்தால், அன்பை போதிக்க அன்பைக் கற்றுத்தர யாரால் ஆகும்?

சைவ இலக்கியவாதிகள் அனைவருமே அன்புக்கு வெகுதூரமாகவே நிற்கிறார்கள். இவர்களது கடவுளும் ஒருவகை மோஸ்தர்தான். ஒருவகையில் வெற்றுப்புகழ்ச்சியால் கடவுளுக்கும் அருளாசி வழங்கும் கடவுளின் கடவுள்கள்.