கறுப்பு வண்ணத்துப் பூச்சிகள்

கறுத்த பாறைகளின் மேல்
வண்ணத்துப் பூச்சிகள் பறக்கின்றன
நம் கண்களுக்கு வெளியேதான்
சற்றே தொலைவேதான்
பறந்தேகும் வண்ணத்துப் பூச்சிகளுடனும்
நீராடும் பாறைகளுடனும்
அமர்ந்திருக்கிறாள் ஒருதேவதை
ஒட்டன் தழைகளைக் கொண்டுவந்து
உணவு சமைத்திருக்கிறாள்
பாறைகளுக்கு மேலேயும்
வண்ணத்துப் பூச்சிகளுக்கு கீழேயும்
நழுவிச் செல்லும் நீரில்
மிதந்து செல்வது எது
அவளுடைய நிழலா உடலா?
பறக்கின்றன வண்ணத்துப் பூச்சிகள்
நீரில் பாறைகளை எறிந்தபடி.

கை பக்குவம்

கூந்தலை எப்படி முடிவது
எப்படி ருசியாகச் சமைப்பது
துணிகளை எப்படி துவைப்பது
கடவுளுக்கு எப்படி படைப்பது
எப்படி குழந்தைகளைக் குளிப்பாட்டுவது
எல்லாம் தெரிகிறது
ஒரு ஆண்குறியை எப்படி
பக்குவமாகப் பற்றிக் கொள்வது என்று
தெரியவில்லை தேவதைகளுக்கு

கேள்வி பதில்கள்

உங்கள் உருவகங்களால்
பாழ் பட்டுப்போன
ஜன்னல்களையும் கதவையும்
அறைந்த மூடுகிறேன்

மேஜைக்கு முன் அமர்ந்து
நானாகத் தேர்ந்தெடுத்த
மதுப் புட்டியைத் திறக்கிறேன்

நன்றாகச் சமைக்கப்பட்ட
இளம் பெண்ணின் மாமிசம்
உணவு மேஜையில் காத்திருக்கிறது

வெட்கமற்றுக் கெஞ்சும்
கெல் போனின் குரல்வளையை நெரித்துவிட்டு
வண்ணத்துப் பூச்சியின் சுவைகொண்ட
மதுவை அருந்துகிறேன்

புத்தகங்கள் கனக்கும் சவப்பெட்டி
என்னை வெறித்துப் பார்க்கிறது
அவைகளைப் புதைத்திருக்கக் கூடாது
எரித்திருக்க வேண்டும்

வெளியே கேட்ட உங்களின் கூச்சல்
அடங்கி வருகிறது
விலகிச் செல்வது நீங்களா?
நானா?
குமட்டித் துப்புகிறேன் கேள்வியை
கேள்விகளாலும் பதில்களாலுமான
திருட்டு உலகம்.