சவலை, சவலைப்பிள்ளை அல்லது சவலை பாய்தல் என்னும் சொற்றொடர்கள் நாட்டுப்புற வாழ்வியலில் வழங்கப்படுபவை ஆகும். ஒரு குழந்தை தனது தாயிடத்திலிருந்து பால் குடிக்கும் வழக்கத்திலிருந்து விடுபடுவதற்கு அல்லது அதீதப் பாசப்பிணைப்பிலிருந்து விடுபடுவதற்கு முன்பாக, அத்தாய் அடுத்த குழந்தையைப் பெற்றெடுக்கத் தயார் நிலையை எய்துகிறபோது, அம்மூத்த குழந்தையின் செயல்பாடுகள் உடல் வளர்ச்சி முதலியவற்றில் ஒருவித மந்தத்தன்மை தோன்றும். இதனால் அக்குழந்தை அதன் உணவு, விளையாட்டு முதலான இயற்கையான செயல்பாடுகளை மறுத்து உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டு உடல் வளர்ச்சியிலும் ஒரு தேக்கத்தைக் காட்டுகிறது. மூத்த குழந்தையின் இத்தன்மையைச் சவலை பாய்தல் என்றும் அக்குழந்தையைச் சவலை அல்லது சவலைப் பிள்ளை என்றும் அழைக்கின்றனர்.

இது பற்றிய ஒரு நாட்டுப்புறக் கதையை கி. ராஜநாராயணன் தந்திருக்கின்றார். “மகன் பதினாலு வயது இளவட்டம். நல்லா கலப்பை பிடித்து உழுதுகொண்டிருந்தான். அவனுடைய தாய் உண்டாகி இருந்தாள். கலப்பை பிடித்து உழும்போது அவனுக்குக் கொஞ்ச நாளாய் என்றுமில்லாத ஒரு ஆயாசமும் சோர்வும் கண்டிருப்பது அவனுக்கே ஆச்சரியமாக இருக்கும். ஒரு நாள் சோர்வு தாளாமல் காட்டில் கலப்பையை நிறுத்திவிட்டு மரத்து நிழலடியில் வந்து அப்படியே அயர்ந்து படுத்துக் கிடந்தான். தாய் அவனுக்குக் கஞ்சி கொண்டு வந்தபோது கலப்பை நிறுத்திக் கிடப்பதையும் மகன் சோர்ந்து மரநிழலில் படுத்துக் கிடப்பதையும் பார்த்து ஆச்சரியப்படவில்லை. பெண்களுக்கு இதைப் பற்றித் தெரியும். மகன் எவ்வளவு சத்தான ஆகாரம் சாப்பிட்டாலும் ஓய்வு எடுத்துக் கொண்டாலும் அந்தச் சோர்விலிருந்தும் ஆயாசத்திலிருந்தும் மீள முடியவில்லை. “அம்மா எனக்கு என்ன வந்தது, ஏன் இப்படி இருக்கிறது? என்று கேட்டுக்கொண்டேயிருப்பான். பத்து மாதம் கழித்த அந்தத் தாய்க்கு ஒரு குழந்தை பிறந்த அடுத்த நாளே அந்த மகனுடைய சோர்வு, ஆயாசம் எல்லாம் போய் பழைய திடம் வந்துவிட்டதாம்’’ (கி. ராஜநாராயணன் 1982 _ 120)

கி. ராஜநாராயணன் குறிப்பிடும் இக்கதையில் ஒரு தாய் இன்னொரு குழந்தையைப் பெறவிருப்பது அவளது மூத்த மகனை எவ்விதம் மனத்தளவில் பாதித்துள்ளது என்பதனைச் சுட்டுகிறது. அதனால்தான் அம்மூத்த இளைஞன் சோர்வு அடைந்துள்ளான். இவ்வகையான ஒரு தாயின் மூத்த பிள்ளை தனக்கு அடுத்துப் பிறந்திருக்கும்/பிறக்கவிருக்கும் இளைய பங்காளியின் வரவு தன்னை எவ்வாறு பாதித்துள்ளது என்பதனை வெளிப்படுத்தும் செயல்பாடுகள் மூத்த பங்காளிகளால் உணர்த்தப்படும். இவ்வுணர்வுகளுக்கான வடிகாலாக அவர்களது வழக்காறுகள் அமைகின்றன. இவ்வுணர்வு வெளிப்படுத்தல் பகிரங்கமானதாகஇருப்பதில்லை. மாறாக அது பூடகமாகவும் மறைமுகமாகவும் எளிதில் புரிந்து கொள்ளவியலாத குறியீடாகவும் உணர்த்தப்படுகின்றது.

ஏனென்றால் வெளிப்படையான வெறுப்பு, எதிர்ப்பு, பெற்றோரால், சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் சாத்தியம் இல்லை எனக் குழந்தைகள் புரிந்து கொண்டுள்ளனர். மேலும் அது எதிர்ப்பையும் தண்டனையும் பெற்றுத் தரக்கூடியது என்றும் புரிந்து கொண்டுள்ளனர். எனவே இளைய பங்காளி மீதான வெறுப்பு, எதிர்ப்பு உணர்வு, பிறர் காணாவண்ணம் துன்புறுத்துதல், சில வேளைகளில் ஆபத்தான துன்புறுத்தலையும் தருதல் என்று அமையும். இந்நடத்தைகள் அன்றாடம் நமது வாழ்வில் சந்திப்பவையாக இருப்பது தெளிவு.

பங்காளி மீதான வெறுப்பு, எதிர்ப்பு உணர்வுகள் மெல்லிய இழைகளாக சிறுவர்களது வழக்காறுகளில் மாற்றீடு பெறுகின்றன. சிறுவர் கதைகள், பாடல்கள், விளையாட்டுக்கள், விடுகதைகள் போன்ற வழக்காறுகளை உற்று நோக்குகையிலும், அவற்றை ஆழ்விசாரணைக்கு உட்படுத்துகையிலும் இது புலப்படும். இவ்வாறு சிறுவர்கள் தமது இளைய பங்காளியை எதிர்கொள்வதில் எழும் எதிர்ப்பு, வெறுப்பு உணர்வு என்பதனையே இங்கு பங்காளிக் காய்ச்சல் என்னும் உளவியல் சிக்கலாகக் குறிப்பிடலாம்.

இனிக் குழந்தைகள் நாட்டுப்புறப் பாடல் ஒன்றை எடுத்துக்கொண்டு பங்காளிக் காய்ச்சல் என்னும் உளவியல் மனநிலை எவ்வாறு அதன் உள்ளீடாக, பூடகமாக இருக்கின்றது என விளக்கலாம். எ.மு. ராஜன் (1989) தொகுத்த சிறுவர் பாடல்களில் இருந்து ஒரு பாடலை இந்த வாசிப்புக்கு உட்படுத்தலாம்.

“மாவாளியாம் மாவாளி
மாவாளிக்காரன் பெண்டாட்டி
மரக்கால் புள்ளை பெத்தாளாம்
எடுக்க வந்த சீமாட்டி
இடுப்பொடிந்து செத்தாளாம்
பாக்க வந்த சீமாட்டி
பல்லொடைந்து போனாளாம்
கேக்க வந்த சீமாட்டி
கீழே விழுந்து போனாளாம்
சும்மா வந்த சீமாட்டி
சுருண்டு விழுந்து செத்தாளாம்’’
(எ.மு. ராஜன் 1989, ப. 54)

இப்பாடலை மேலோட்டமாக வாசிக்கும்போது, ஒரு தாய் (மாவாளிக்காரன் பெண்டாட்டி) ஒரு குழந்தை பெற்றெடுக்கிறாள். அது ஓர் உண்மையான குழந்தை அன்று. ஒரு மரக்கால் (மரக்கால் என்பது (1) மரம் + கால் (2) தானியங்களை அளக்கப் பயன்படும் மரத்தாலான அளவியற் கருவி என்று பொருள்படும்) மட்டுமே. அது ஓர் உயிரற்ற சடப்பொருளேயாகும். இத்தகைய குழந்தைகளை எடுக்க, பார்க்க, கேட்க, சும்மா (பார்க்க) வந்த பெண்கள் அனைவரும் முறையே இடுப்பு ஒடிதல், பல் உடைதல், கீழே விழுதல், சுருண்டு விழுதல் போன்ற உடல் துன்பங்களைப் படுகின்றனர். இறந்தும் போகின்றனர் என்ற பொருளைப் பெற முடியும். ஆனாலும் இப்பாடலின் பொருண்மை இவ்வளவுதான் அல்லது இதனை மீறிய பொருண்மையுடன் இருக்க வாய்ப்பில்லை என்று கூறி ஒதுக்கிவிடலாமா? என்ற கேள்வி எழுகிறது.

நாட்டுப்புறவியலில் ஒவ்வொரு வழக்காறும் ஏதோ ஒரு பொருண்மையை அது வழங்கப்பெறும் சூழலில் தனக்குள் சுமந்து கொண்டிருக்க வேண்டும். அது அதனை வழங்கி வருவோரிடத்தில் ஏதோ பொருண்மையைத் தந்துகொண்டிருக்க வேண்டும். அன்றின் அக்கூறினை அவர்கள் வீணாகச் சுமந்துகொண்டிருப்பதில் எவ்விதப் பொருளும் இருக்க முடியாது. இவ்வாறான சூழலில், ஒரு வழக்காற்றினைப் புழங்கும் சமூகக் குழுவினிடத்தில் (textual community) அவர்கள் அதற்குத் தரும் விளக்கங்களைக் கேட்டறிதல் அவ்வழக்காற்றின் பொருண்மையைக் கண்டறிய உதவும். இங்கு அச்சமூகம் ஒரு குழந்தைகளின் குழுவாக அமைந்துவிடுகிறபோது, அவர்கள் கொண்டிருக்கும் வழக்காறுகளின் பொருண்மையை அவர்களிடமிருந்தே தருவித்துக்கொள்வது என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல.

ஆலன் டண்டிஸ் (1980 - ப. 33-61) மேற்குறிப்பிட்ட குழந்தைகள் பாடலைப் போன்றதொரு அமெரிக்கக் குழந்தைகள் கயிறு தாண்டி விளையாடும்போது (skipping rope rhyme) பாடும் பாடலை எடுத்துக்கொண்டு அதனை உளப்பகுப்பாய்வுக் குறியியல் (psychoanalytic semiotics) ஆய்வுக்குட்படுத்தி விளக்கம் தருகிறார். அவர் குறிப்பிடும் பாடலும் இத்தமிழ்ப் பாடலும் ஒரே மாதிரியாக அமைந்துள்ளன. அவர் அப்பாடல் பங்காளிக் காய்ச்சல் (sibling rivalry) என்னும் குழந்தைகளின் உளவியல் சிக்கலை வெளிப்படுத்துகிறது என்கிறார். இவ்வாறான பார்வையில் இத்தமிழ்ப் பாடலை ஆழ்நிலை வாசிப்புக்குட்படுத்தும்போது பின்வருமாறு பொருண்மைப்படுத்தலாம். குழந்தைகள், மாவாளிக்காரன் பெண்டாட்டி (யாரோ ஒருவன் மனைவி, இவள் தமது தாயைப் பதிலீடு செய்கிறாள்) பெற்ற குழந்தை ஒரு குழந்தையே அன்று. அது உயிரற்ற சடப்பொருள் என்று சொல்வதன் மூலம். தனது தாய்க்குத் தன்னையடுத்துப் பிறந்துள்ள குழந்தையை (தங்கை/தம்பி) ஓர் உயிரற்ற சடமாக முன்வைக்கிறார்கள்.

இதனை ஒரு குழந்தையாக அங்கீகரிக்கும் அனைத்துப் பெண்டிரும் (அவர்களும் தனது தாயைப் பதிலீடு செய்கின்றனர்) இவ்வுயிரற்ற சடத்தினை ஒரு குழந்தையாக அங்கீகரிப்பதன் மூலம் தனது இருப்பினையும் தனது தாய்க்கும் தனக்கும் உள்ள உளவு வெளியை (வெளி என்பது தனது இருப்பை மறுத்துத் தனது தாயிடத்தே தனக்கு இருக்கிற முழு சுதந்திரத்தைப் பறித்தல். தாய் தனது முழு உடைமை என்பதை மறுத்து அவனை இன்னொரு குழந்தைக்கும் உடைமை எனப் பங்கிட்டுக் கொடுத்தலையும் கேள்விக்குள்ளாக்குகின்றனர், எனவே இவர்களும் ஏதோ ஓர் உடல் உபாதையால் அவதிப்படுகின்றனர். இறந்து விடுகின்றனர். அக்குழந்தையின் தாயும் (தனது தாய்) பதிலித் தாயார் அனைவரும் செத்துவிட வேண்டும் என்ற உளவியல் அவாவை வெளிப்படுத்துகின்றனர்.

முதன்மையாக தனது தாய்க்கும், தனக்கும் உள்ள வெளியை அந்நியப்படுத்தும். தனது உடைமையின் (தாய்) மீதுள்ள முழு உரிமையையும் பங்கு போடவும் வந்துள்ள புதிய குழந்தையை உயிரற்ற ஒரு சடம் என்று மொழிவதன்மூலம் தனது தாய் மீது தனக்குள்ள உடைமை உரிமையையும் வெளியையும் தனது மனவெளியில் இறுக்கமாகத் தக்கவைத்துக் கொள்கிறது. மேலும் அக்குழந்தையின் மீது ஓர் அகப்போர் தொடுக்கிறது. அதாவது அக்குழந்தையைத் தனது அகஉலகில் இருந்து அப்புறப்படுத்திவிடுகிறது. இவ்வாறு ஒரு குழந்தை தனக்கடுத்துப் பிறந்துள்ள குழந்தையின் மீது தொடுக்கும் போரையே பங்காளிக் காய்ச்சல் எனலாம்.

அமெரிக்கப் பாடல் குழந்தையை ஆணுமில்லாத, பெண்ணுமில்லாத ஒன்றாகவும் மலமாகவும் குறிப்பிடுகிறது. இம்மலத்தைத் தாளில் சுற்றிக் கழிப்பறைக் குழாய் வழியே எறிந்து அழித்துவிட வேண்டும் என்றும் கூறுகிறது. இப்பாடலில் குழந்தைகள், தமது இளைய பங்காளியின் இருப்பை மறுப்பதே முதன்மை இடம் பெறுகின்றது. தாயைப் பழிப்பதோ சாபமிடுவதோ நிகழவில்லை. ஆனால் தமிழ்ப்பாடலில் குழந்தையின் மனித இருப்பு மறுக்கப்பட்டாலும், முதன்மையாக இத்தகைய குழந்தையை அங்கீகரித்திடும் தாய், பதிலித் தாயார் அனைவரையும் அழித்திட வேண்டும் என்ற வேட்கையே மிகுந்துள்ளது. இங்ஙனம் தாய்மார்களை அழிப்பதன்மூலம் மேலும் புதிய பங்காளிகளின் வருகையையும் தடுத்திட முடியும் என்பதால்தான் தாய் அழிப்பு/தாய் மறுத்தல் என்பது நிகழ்கிறது. மொத்தத்தில் இப்பாடல் குழந்தைகளின் பங்காளிக் காய்ச்சல் எனும் உளவியல் உந்துதலையே வெளிப்படுத்துவதாக அமைகின்றது.

இவ்வாறான வாசிப்புக்குட்படுத்தும்போது, குழந்தைகளிடம் இத்தகைய அழித்தல் வேட்கை ஏன் வெளிப்படையாக இல்லாது மறைமுகமாக இருக்கிறது என்ற வினாவும் எழாமல் இல்லை. உளப்பகுப்பாய்வியலர் இப்பண்பினைப் புறச்சாட்டுதல் என்னும் கருத்தாக்கத்தால் விளக்குகின்றனர். நேரடியாகச் சமூகத்தில் அங்கீகாரம் பெறமுடியாத, வெளிப்படுத்த முடியாத அல்லது தடைசெய்யப்பட்ட உள்ளுணர்வுகளை வேறொன்றின் மீது மறைமுகமாக ஏற்றிக் கூறுதலே புறச்சாட்டுதல் எனப்படும். இப்பாடலிலும் பங்காளிக் காய்ச்சல் என்னும் குழந்தைகளின் உளவியல் பண்பு மறைமுகமாகவும் குறியீட்டு ரீதியாகவும் வேறொன்றின் மீது ஏற்றிக் கூறப்பட்டுள்ளதைக் காணலாம்.

இந்தப் பாடலின் முதல் இரு வரிகளில் குறிப்பிடப்படும் ‘மாவாளி’ ‘மாவாளிக்காரன்’ என்பது பற்றித் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. என்றாலும் இது மகாபலிச் சக்கரவர்த்தியைக் குறிக்கும் ஒன்றாகக் கொள்ள வாய்ப்பு உண்டு. இப்பாடல் ஆர்க்காடு, தஞ்சைப் பகுதிகளின் நாட்டுப்புற வழக்காறுகளில் இடம்பெறுகிறது. இப்பாடல்கள் மாவாளிப் பாடல்கள் எனப்படுகின்றன. இப்பாடல் சிறுவர்களின் ‘கார்த்திகைப் பொறி’ என்ற விளையாட்டுடன் பாடப்படுகிறது. கார்த்திகை மாதங்களில் பனைப் பொருளான, பனம் பூக்களை ஒரு குழிக்குள் வைத்து நெருப்பு மூட்டி அதிலிருந்து நெருப்புக் கங்கு பெறப்படுகிறது. இந்நெருப்புக் கங்கைத் துணியில் பொதிந்து வைத்து அதனை இரவு நேரங்களில் சிறுவர்கள் சுற்றி விளையாடுவர். இவ்வாறு சுழற்றி வீசும்போது இதிலிருந்து தீப்பொறிகள் பறந்து தெறிக்கின்றன. இச்சமயம் இப்பாடல் பாடப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் வீடுகளின் முற்றங்களில் ஒளியேற்றி வைத்தல் (கார்த்திகை தீபம்) என்னும் வழக்கம் பெரும்பாலும் நடைமுறையில் உள்ளது.

இந்நடைமுறை முற்காலத்திய மகாபலிச் சக்கரவர்த்தியை மீள்நினைவு கூறுவதாகவும் அவரது மறுவருகையை எதிர்நோக்கி அமைவதாகவும் கொள்ள வாய்ப்பு உண்டு. மகாபலிச் சக்கரவர்த்தி மிகச்சிறந்த திராவிட நாட்டு அரசன் என்பதும் அவர் வஞ்சிக்கப்பட்டு அழிக்கப்பட்டாலும் மீண்டும் வருவார். நல்ல ஆட்சி தருவார் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில் மக்கள் நிகழ்த்தும் சடங்கு இது எனக் கொள்ளலாம். கேரளப் பகுதியின் ஓணம் பண்டிகையைக்கூட இதன் வழியில் எண்ணிப் பார்க்கலாம். எனவே, ‘மாவாளி’, ‘மாவாளிக்காரன்’ என்பதை மகாபலிச் சக்கரவர்த்தி என்பதாகக் கருத இடமுண்டு. (இக்கருதுகோள் பேரா. ஆறு. இராமநாதன், முனைவர் மு. சுதர்சன் ஆகியோருடன் நடந்த நேரடிக் கலந்துரையாடலில் இருந்து பெறப்பட்டது) இவ்வாறான ஒரு பன்முக வாசிப்புக்குக் குழந்தைகள் வழக்காறுகளை உட்படுத்தும்போது அவர்களின் உளவியல் உள்ளிட்ட பல்வேறு பண்புகளின் உள்ளளிகளை வெளிக்கொணர முடியும்.