ஆதிகால மனிதன் ஒலி எழுப்பியும் சைகைகள் மூலமும் தன் எண்ணங்களை வெளிப்படுத்தினான். அவன் முறையான ஒலிகள் எழுப்பி மொழிகளை உருவாக்கினான். குகைகளில் படங்கள் வரைந்து செய்திகளைத் தெரிவித்தான். இவ்வாறு சித்திர எழுத்துக்கள், கருத்து எழுத்துக்கள், ஒலி எழுத்துக்கள் என எழுத்து முறை வளர்ச்சியடைந்தது. பழந்தமிழகம் குமரி நாடு எனக் கூறப்படுகிறது. குமரிக்கோடும் பஃறுளியாறும் கடலால் அழிவுற்றது. அங்கு வாழ்ந்த தமிழர்கள் ஏடுகளில் எழுதி இருக்க வேண்டும். (கோவிந்தராசன் 2000:7) தமிழ் எழுத்துக்களின் காலம் வரையறை செய்ய முடியாத பழமையானது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் எதப்பட்ட ‘‘சமவயங்கசுத்த” என்னும் சமண நூல் பதினெட்டு வகை எழுத்துக்கள் இருந்த செய்தியைக் கூறுகிறது.
இப்பட்டியலில் ‘‘தமிழி” என்னும் பெயரில் ஒரு எழுத்து குறிப்பிடப்பட்டுள்ளது.

அது தமிழகத்தில் வழங்கிய எழுத்தைச் சுட்டுகின்றது. பிராமி என்ற பெயர் எப்பொழுது வழங்கப்பட்டதோ, அப்பொழுதே தமிழி என்னும் பெயரும் வழக்கில் இருந்தது (இரா. நாகசாமி 1972:10). கி.பி. 5-6ஆம் நூற்றாண்டில் தோன்றிய ‘லலிதவிஸ்தரம்” என்னும் பௌத்த நூலில் 64 வகை எழுத்துக்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் ‘‘திராவிடி” என்னும் பெயர் காணப்படுகிறது (இரா. நாகசாமி, 1972:10). இந்திய மொழிகளில் மிகப் பழங்காலம் தொட்டே வரிவடிவம் கொண்ட மொழி தமிழ் மொழியே. இந்தியாவில் கிடைத்துள்ள பல கல்வெட்டுகள் இதற்குச் சான்றாக உள்ளன. இக்கட்டுரை தமிழர்களின் எழுத்துக்களான 1. தமிழி 2. வட்டெழுத்து 3. கிரந்தம் என்னும் எழுத்துக்களை விளக்குவதாய் அமைகிறது.

தமிழி (தென்பிராமி)

தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பழமையான கல்வெட்டு எழுத்துக்களைப் பிராமி எழுத்துக்கள் என்றனர். வடநாட்டில் உள்ள பிராமி எழுத்துக்களில் இருந்து மாறுபட்டதால் தென்பிராமி என்றனர். தென்பிராமியைத் தமிழ்பிராமி என்றும் குறிப்பிடடனர். மலைக் குகைகளிலும், பானை ஓடுகளிலும் காணப்படும் இவ்எழுத்துக்களைத் தமிழி என்று அழைத்தனர். தமிழி எழுத்துக்கள் கி.மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 3ம் நூற்றாண்டு வரை ஏறக்குறைய 600 ஆண்டுகட்கு வழங்கி வந்திருக்கிறது (நடன. காசிநாதன் 1989:3). இத்தமிழி, தமிழ் மொழிக்கே உரிய சிறப்பு எழுத்துக்களான ழ, ள, ற, ன ஆகிய நான்கு எழுத்துக்களையும் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் கிடைக்கும் பிராமிக் கல்வெட்டுகள் ஒன்றிரண்டு வரிகளையுடையனவாக மதுரை, திருநெல்வேலி ஜில்லாக்களில் அதிகமாகக் காணப்படுகின்றன (தி.ந.சுப்பிரமணியன் 2004:20). திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி என்ற கிராமத்திற்கு அருகில் மறுகால் தலை என்னும் சிற்றூரில் உள்ள குகைத் தளத்தில் தமிழி எழுத்துக்கள் உள்ளன. அம்பாசமுத்திரம் அருகில் அய்யனார்குளம் என்ற இடத்தில் இராஜாபாறை, நிலாப்பாறை என்ற இரண்டு பாறைகள் உள்ளன. அவற்றில் உள்ள தமிழி எழுத்துகள் அண்மைக் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வட்டெழுத்து

தமிழர் பயன்படுத்திய வட்ட வடிவமான எழுத்துக்களை வட்டெழுத்து என்பர். இவ்வெழுத்து கரோஷ்டி எழுத்திலிருந்து தோன்றியது. பிராமி எழுத்திலிருந்து உருவானது. தமிழரின் தனி எழுத்து என பல கருத்துக்கள் கூறப்பட்டன. தமிழி எழுத்துக்கள் படிப்படியாக வட்டெழுத்தாக மலர்வதை ஒவ்வொரு எழுத்திலும் காட்டலாம் (இரா. நாகசாமி 1972:27). கி.பி. 3ம் நூற்றாண்டளவில் தமிழி எழுத்திலிருந்து வட்டெழுத்து, தமிழ் எழுத்து என இருவகை எழுத்துக்கள் வளர்ச்சியுறத் தொடங்கின (நடன. காசிநாதன் 1989:22). வட்டெழுத்துள்ள கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள் கேரளம், கன்னியாகுமரி மாவட்டம் ஆகிய பகுதிகளில் கிடைத்துள்ளன (நடன. காசிநாதன் 1986.26). திருநெல்வேலி பகுதியில் உள்ள பல கோவில்களில் வட்டெழுத்தைக்காணலாம். குற்றாலம் திருக்குற்றாலநாத சுவாமி கோவில் கல்வெட்டு இவ்வட்டெழுத்தைப் புரியாத வட்டெழுத்து என்று குறிப்பிடுகின்றது.

கிரந்தம்

தமிழ் மொழியின் ஒலி அல்லாது வடமொழியின் ஒலி வரும் இடங்களில் வடமொழிச் சொல்லை எழுத கிரந்த எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தமிழர் வடமொழியை எழுத உருவாக்கிய எழுத்துக்களே கிரந்தம். வடமொழியில் கிரந்தம் என்றால் நூல் என்று பொருள். கி.பி. 3-4ம் நூற்றாண்டுகளில் ஆட்சி புரிந்த பல்லவர்கள் காலத்தில் பிராகிருதம் செல்வாக்குப் பெற்றது. இதனால் கிரந்த எழுத்துக்கள் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டன.

பல்லவர்கள் எழிலான வடிவுடைய கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தினர். அவற்றைப் பல்லவ கிரந்தம் என அழைக்கின்றனர். இரண்டாம் நரசிம்மவர்மன் என்னும் பல்லவன் மயில் போலும், அன்னப்பறவை போலும், பாம்பு போலும், பல்வகைக் கொடி போலும், எழிலார்ந்த சித்திரங்களைப் போலும் கிரந்த எழுத்துக்களை எழுதச் செய்துள்ளான். தமிழர் வடமொழி ஒலிகளைத் தமிழில் எழுதுவதற்குக் கண்டுபிடித்த எழுத்துக்கள்தான் கிரந்த எழுத்துக்கள்.

தமிழி, வட்டெழுத்து, கிரந்தம் என எழுத்துக்களைப் பயன்படுத்தி வந்த தமிழர், காலந்தோறும் எழுத்து வடிவில் தேவையான மாற்றங்களை உருவாக்கி உள்ளனர். இன்றைய எகர, ஒகர எழுத்துக்கள் வீரமாமுனிவரால் மாற்றம் பெற்றவை (எ, ஏ, ஒ, ஓ). தமிழகத்தில் கிடைத்துள்ள கல்வெட்டுகள், செப்பேடுகள், நாணயங்கள், ஓலைச்சுவடிகள் போன்றவற்றிலிருந்து தமிழர் எழுத்துக்களின் வடிவங்களை அறிகின்றோம். அச்சு எழுத்துக்கள் வந்த பின்னர் ஒரே வகையான எழுத்துக்கள் பயன்பாட்டில் வந்தன. அண்மைக் காலத்தில் பெரியார் செய்த மாற்றங்களை ஏற்று, தமிழ் எழுத்துக்களைக் கையாள்கின்றோம். இன்று கணினி நூற்றுக்கணக்கான தமிழ் எழுத்துக்களை உருவாக்கித் தந்துள்ளது.