வெகு நாட்களுக்கு முன்பு, அதாவது முன்னொரு காலத்தில், ‘யானை வளர்த்த வானம்பாடி’ என்று ஒரு தமிழ்ப் படம் வந்தது. என் பள்ளி நாட்களில், பள்ளிக்குச் செல்லும் வழியில் அந்தத் திரைப்படத்தின் சுவரொட்டிகளைப் பார்த்திருக்கிறேன். அந்தச் சொற்றொடர் அப்போது மனதில் பல கேள்விகளை எழுப்பியதுண்டு. வானம்பாடி என்பது குருவியைப் போன்ற ஒரு சிறிய பறவை. முற்றத்தில் அல்லது மொட்டை மாடியில், உலர்த்தப்பட்டிருக்கும் தானியங்களை அவ்வப்போது வந்து கொத்தி எடுத்துப் போகும். அதன் அலகில் ஒரு நேரத்தில், தானியத்தின் ஒரு மணிக்கு மேல் எடுத்துப் போக முடியாது. அத்தனை சிறிய பறவை அது. அந்தச் சிறிய பறவை எப்படி ஒரு யானைக்குத் தீனி போட முடியும்? இதுதான் எனக்கு முதலில் முளைத்த சந்தேகம்.

ஒருவேளை யானை ஒரு வானம்பாடியை வளர்த்து வந்தது என்பதைத்தான் இந்தச் சொற்றொடர் குறிக்கிறதோ? என்று ஒரு கிளைக் கேள்வியும் முளைத்ததுண்டு, கேள்விகள் கிடக்கட்டும். இந்த வாக்கியத்திற்குப் பின் ஓர் அற்புதமான கற்பனை புதைந்து கிடக்கிறது.

 செய்யுளிலேயே எல்லாம் எழுதப்பட்டு வந்த காலத்தில், உரைநடை இருந்திருக்குமா? உரைநடை இல்லை என்றால் மக்கள் எப்படிப் பேசிக் கொண்டிருந்திருப்பார்கள்? கவிதையாகவேவா? எனக்குத் தெரியாது. ஆனால் தொல்காப்பியத்தில் எங்கெங்கெல்லாம் உரைநடை வரும் என்பதற்கு ஒரு சூத்திரம் எழுதி வைத்திருக்கிறார்கள். அதில் “பொருள் மரபில்லாப் பொய் மொழியானும்” என்று ஒரு வரி வருகிறது. அதற்கு உரை எழுதிய அறிஞர்கள், ‘யானையும் குருவியும் தம்முள் நட்பாடிக் கொள்வதைப் போல’ என்று விளக்கமளித்திருக்கிறார்கள். யானையும் குருவியும் ஒன்றுக்கொன்று பேசிக்கொள்வது பொய்மொழி. பொய்மொழி என்ற சொல்லைச் சற்றே தளர்வாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் ‘Fictious’. Fiction என்றால் புனைகதை. அதாவது கற்பனைக் கதை.

கதை என்றால் கற்பனை கலந்தது என்ற எண்ணம் தமிழர்கள் மனதில் ஆழப் பதிந்துவிட்டது. நம்ப முடியாத அளவு எவராவது பொய் சொன்னால், அவர் ‘கதை விடுகிறார்’ ‘கதை அளக்கிறார்’ கதை கட்டுகிறார்’ என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். கதையில் கொஞ்சம் ‘லாஜிக்’ இருக்க வேண்டும் என்றுகூட திருநெல்வேலிக்காரர்கள் எதிர்பார்ப்பதில்லை. ‘கதைக்குக் கால் கிடையாதல்ல அண்ணாச்சி’ என்பார்கள். அதாவது கதை என்ற சொல்லில் கால் என்று பேச்சு வழக்கில் அழைக்கப்படும் துணையெழுத்து கிடையாது என்று ஓர் அர்த்தமும், கதை ஒரு தர்க்கத்தில் அடங்கி நிற்க வேண்டும் என்பதில்லை என்று ஒரு அர்த்தமும் உண்டு.

இப்படி கால் இல்லாத கதைகள், அதாவது ‘லாஜிக்’க்கு முக்கியத்துவம் கொடுக்காத, ஆனால் ஏராளமாய்க் கற்பனை செறிந்த கதைகள் இந்தியா முழுக்க இறைந்து கிடக்கின்றன. குறிப்பாக கிராமங்களில், தமிழ்நாட்டிற்கு வெளியே உள்ள கிராமங்களில் நான் கேட்ட சில கதைகளை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்:

இறக்கை முளைத்த யானைகள்

உங்களால் நம்ப முடியாது. ஆனால் ஒரு காலத்தில் யானைகளுக்கு இறக்கைகள் இருந்தன. ரொம்ப, ரொம்ப காலத்திற்கு முன்னால், அதாவது கடவுள் உலகத்தை சிருஷ்டிப்பதில் மும்முரமாக முனைந்திருந்த காலத்தில் யானைகளுக்கு இறக்கைகள் இருந்தன. ஒன்றல்ல, நான்கு இறக்கைகள் யானைக்கு இருந்தன. இறக்கை முளைத்த யானைகள் மீதுதான் கடவுள் அவ்வப்போது பூமிக்கு வந்து, வேலை எல்லாம் ஒழுங்காக நடக்கிறதா என்று பார்த்துவிட்டுப் போவார். பூமி உருவாகி, அதில் மனிதர்களும் படைக்கப்பட்ட பின்னர், கடவுளுக்கு அடிக்கடி பூமிக்கு வர வேண்டிய அவசியம் இல்லாமல் போயிற்று. அதனால் அவர் பறக்கும் யானைகளை அதிகம் பயன்படுத்துவதில்லை.

சும்மாக் கிடந்த யானைகளுக்குக் கொழுப்பேறிவிட்டது. வேலை இல்லாவிட்டால் மனுசாளுக்கு மட்டுமில்லை, யாருக்கும் பைத்தியம்தானே பிடிக்கும். இந்தக் குந்தாணி யானைகள், பறந்துபோய், வேணுமின்னே, தொப்பென்று வீடுகள் மீது விழும். வீட்டு மேல யானை விழுந்தால் என்ன ஆகும்? கூரை நொறுங்கிப்போகும். சடசடவென ஓடுகள் நொறுங்குவதைப் பார்த்து யானைகள் கடகடவென்று சிரிக்கும்.

ஆனால் மனுசர்களுக்கு இந்த இம்சை தாள முடியவில்லை. கடவுளடம் முறையிட்டார்கள். அப்படியா சேதி, அதுங்களை நான் ஒரு வழி பண்றேன், நீங்க போங்க எனக் கடவுள் மனிதர்களுக்கு உறுதி அளித்துத் திருப்பி அனுப்பினார்.

யானைகளை ஒரு விருந்திற்குக் கூப்பிட்டு அனுப்பினார். யானைகளும் குஷியாக விருந்துக்கு வந்தன. விருந்தில் ஏகப்பட்ட அயிட்டங்கள். யானைகளும் வயிறு முட்டத் தின்றுவிட்டு, தரையில் படுத்துப் புரண்டன. உண்ட மயக்கத்தில் தூங்கியும் போயின.

இதுதான் சமயம் என்று கடவுள் யானைகளின் இறக்கைகளைக் கத்தரித்து எடுத்துவிட்டார். அப்படி எடுத்ததில் இரண்டை மயிலுக்குப் பொருத்திவிட்டார். அதனால்தான் அதன் தோகை அத்தனை நீளமாயிருக்கின்றது. மீதம் இருந்த இரண்டை வாழை மரத்திற்கு இலைகளாக அமைத்து வைத்தார். அதனால்தான் மற்ற மரம் செடி கொடிகளின் இலைகள் சிறியதாக இருக்கும்போது, வாழை இலை மட்டும் அத்தனை நீளமாக இருக்கின்றது.

தூங்கி எழுந்த யானைகள், தற்செயலாக முதுகைத் தடவிப் பார்த்தன. இறக்கைகளைக் காணோம் என்ன செய்வது என்று தெரியாமல், பயந்து காட்டுக்குள் ஓடிப் போய்விட்டன. ஆனாலும் எப்போதாவது இறக்கை போனதை நினைத்துப் பார்க்கும்போது, ஆத்திரம் ஆத்திரமாக வரும். இந்த மனுசப் பயல்கள்தானே காரணம் என்று ஆத்திரமாய் அவர்கள் வீடுகளை நோக்கி வரும். அல்லது வழியில் எங்கேயாவது வாழை மரத்தைப் பார்த்தால் அதை, மளுக்கென்று முறித்துப் போடும்.”

அசாம் கிராமம் ஒன்றில் உலவுகிற கதை இது. யானைக்கு இறக்கைகள் இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், சன்னதிக்கு வெளியே, கர்ப்பகிரகத்தைத் தாங்கி நிற்பது போல வெள்ளை யானைகளைக் கல்லில் செதுக்கி வைத்திருப்பார்கள். இரவு வேளைகளில் தேவலோகத்திலிருந்து இந்திரன் அந்த ஐராவதங்களில் வந்து பூஜை செய்வதாக ஐதீகம். “அட, இந்திரன் ஜம்போ ஜெட்டில் வந்து போகிறார்” என்று நான் விடலைத்தனமாக ‘கமெண்ட்’ அடித்ததுண்டு. ஆனால் அசாமில் யானைக்கு இறக்கை முளைத்ததற்கு வேறு காரணங்கள் இருக்கின்றன.

இந்தப் பரிசை என்ன செய்வது?

‘வாலி தாத் என்று ஒரு தச்சர். தனியாக வாழ்ந்து வந்தார். அவருக்குப் பொன் பொருள் மீதெல்லாம் ஆசை கிடையாது. நம்மால் எல்லாம் அதை வைத்து ஆள முடியாது. என்னத்துக்கு தலைவலியை விலை கொடுத்து வாங்கணும் என்பது அவர் நினைப்பு. வேலை செய்வார். கிடைக்கிற கூலியைக் கொண்டு சாப்பிடுவார். அது போக மீந்த காசை ஒரு ஜாடியில் போட்டுக்கொண்டு வருவார்.

கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஜாடியில் காசு சேர்ந்துகொண்டு வந்தது. ஒரு நாள் அந்த ஜாடி முழுவதுமாக நிரம்பிவிட்டது. வாலி தாத்திற்குக் கவலை பிடித்துக் கொண்டுவிட்டது. “ஜாடி நிரம்பிவிட்டால் காசை எங்கே போடுவது?” என்று நினைத்த அவர், ஜாடியைக் காலி செய்ய வேண்டியதுதான் என்று முடிவு செய்தார். அந்த ஜாடியை ஒரு பொற்கொல்லர் முன்னால் கொண்டுபோய்க் கவிழ்த்தார். “இந்தக் காசுகளை நீ வைத்துக்கொள்” என்றார்.

“நான் சும்மா காசு வாங்கிக்கொள்ள மாட்டேன். இந்தா உன் காசுகளுக்குப் பதிலாக இதை வைத்துக்கொள்” என்று பொற்கொல்லர் தன்னிடமிருந்த ஒரு கங்கணத்தை வாலியிடம் கொடுத்தார். கங்கணம் புதுசு. நல்லா தகதகவென்று ஜொலித்துக் கொண்டிருந்தது.

கங்கணத்தைக் கையில் வைத்துக்கொண்டு தச்சர், ‘என்னடா இது புதுத் தலைவலியா போச்சு’ என்று யோசித்துக்கொண்டே தெருவில் நடந்தார். தெருவில் ஒரு வியாபாரி, வரிசை வரிசையாய் ஒட்டகங்களை ஓட்டிக்கொண்டு போய்க்கொண்டிருந்தார். அவற்றின் முதுகில் ஏகப்பட்ட பொதிகள். “எல்லாம் எங்கே போகிறது?” என்று வியாபாரியை விசாரித்தார் வாலி.

“அரண்மனைக்கு” என்றார் வியாபாரி. “இளவரசி துணிகள் கேட்டிருந்தார். அதைக் கொடுக்கக் கொண்டு போகிறோம்.” இவ்வளவு துணி வாங்குகிறவர்களுக்கு நிச்சயம் தேவை அதிகமாகத்தான் இருக்கும் என்று நினைத்த வாலி, “சரி, இந்தா இந்தக் கங்கணத்தையும் கொண்டுபோய்க் கொடு” என்றார். வியாபாரி கங்கணத்தைக் கொண்டுபோய் இளவரசியிடம் கொடுத்தார். இளவரசிக்கு கங்கணம் ரொம்பவும் பிடித்துப்போய்விட்டது. “ஏது?” என்று வியாபாரியிடம் கேட்டார். “வாலி தாத் என்பவர் உங்களுக்கு பரிசாகக் கொடுத்தனுப்பியிருக்கிறார்” என்றார் வியாபாரி.

ஒருவர் தனக்கு பரிசு அனுப்பினால் அதை வாங்கிக்கொண்டு சும்மா இருப்பது இளவரசிக்கு அழகா? அதனால் இளவரசி பதிலுக்கு ஒரு ஒட்டகம் சுமக்குமளவிற்கு நல்ல பட்டுத் துணிகளை வாலிக்கு, அதே வியாபாரி மூலம் அனுப்பி வைத்தார்.

“இதை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வது?” என்றார் வாலி வியாபாரியிடம். “உனக்கு வேண்டாம் என்றால் யாருக்காவது பரிசாகக் கொடேன்” என்றார் வியாபாரி “யாருக்கு?” “பக்கத்து ஊர் சுல்தானுக்குக் கொடேன்.

நான் அங்கேதான் இப்போது போகிறேன்” வாலி அந்த விலையுயர்ந்த பட்டுத் துணிகளை சுல்தானுக்கு அனுப்பி வைத்தார். சுல்தான் பதிலுக்கு ஆறு குதிரை நிறைய பரிசுப் பொருட்களை அனுப்பி வைத்தார். வாலி அதை இளவரசிக்கு அனுப்பி வைத்தார். இளவரசிக்கு, யார் இந்த வாலி தாத், ஏன் அவர் நமக்கு மீண்டும் மீண்டும் பரிசுகளை அனுப்பிக் கொண்டிருக்கிறார் என்ற கேள்வி எழுந்தது. பதில் மரியாதையாக 20 கோவேறு கழுதை நிறைய வெள்ளிப் பொருட்களை அனுப்பி வைத்துவிட்டு வாலி தாத்தை நேரில் சந்திக்கக் கிளம்பினார். இளவரசி அனுப்பிய வெள்ளியை சுல்தானுக்கு அனுப்பி வைத்தார் வாலி. சுல்தானும் யார் இந்த வாலி என்று பார்க்கக் கிளம்பி வந்தார்.

இளவரசியும், சுல்தானும் அந்த ஏழையின் குடிசையில் சந்தித்துக் கொண்டார்கள். கண்டதும் காதல், காதல் கலியாணத்தில் முடிந்தது. இளவரசியும் சுல்தானும் திருமணம் செய்துகொண்டார்கள். தங்கள் திருமணப் பரிசாக ஒரு பெரிய பெட்டி நிறைய தங்கக் கட்டிகளை வாலி தாத்துக்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால் அந்தத் தங்கக் கட்டிகளை வாலியிடம் கொடுக்கத்தான் முடியவில்லை. ஏனென்றால், அவர் இவர்கள் இருவரும் மாற்றி மாற்றி பரிசுகள் அனுப்பி வைத்த ‘தொல்லை’ தாங்காமல், ஊரை விட்டே ஓடிப் போய்விட்டார். எங்கே போனார் என்று இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.”

ராஜஸ்தான் கிராமங்களில் பேசப்படும் இந்தக் கதையைக் கேட்டபோது, அதிலிருந்த மறைமுகமான எள்ளல் எனக்குப் பிடித்திருந்தது. கையில் தொழில் உள்ள, தங்கள் திறமையை நம்பி வாழ்கிற தச்சரும், பொற்கொல்லரும், வியாபாரியும், இலவசமாக எதையும் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை. ஆனால், ‘சும்மா’ இருக்கிற இளவரசியும், சுல்தானும் யாராவது எதையாவது கொடுத்தால் பெற்றுக்கொள்வதும், அதைவிடப் பெரிதாக பதிலுக்குக் கொடுத்து தங்கள் அந்தஸ்தை நிலைநாட்டிக் கொள்வதுமே ‘ஜோலி’யாக இருந்திருக்கிறார்கள்.

இந்தியா பூரா தேடினால் இந்த மாதிரி வாழைப்பழத்தில் ஏற்றப்பட்ட ஊசிகள் நிறைய கிடைக்கும்.