கண் இமைக்கும் நேரத்தில், கணினியில் மாற்றம், தொழில்நுட்பத்தில் மாற்றம். நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் பெண் பாகங்களை மட்டும் குறி வைக்கும் கும்பல் ஒரு புறம். உலகமயம், தாராளமயம், தனியார்மயம் இதை ஆதரிக்க ஒரு கூட்டம், எதிர்க்க ஒரு கூட்டம்! என்ன? ஏது? என்று தெரியாமல் ஆடுகளைப் போல் அநியாயமாகப் பலியாகும் கூட்டம் ஒருபுறம்....

2020-ல் இந்தியா வல்லரசு, ஏவுகணைச் சோதனை, சார்க் மாநாடு, இலங்கையில் அமைதி பரவ இந்தியா தூது, ஓயாத வேலைப்பளு நாட்டில் உள்ள கட்சிகளின் உறுப்பினர்களுக்கும்.... உட்கட்சிப்பூசல், மோதல் சட்டமன்றத்தில் மைக் உடைப்பு, மண்டை உடைப்பு தலைவர்கள் பிறந்த நாள் எனத் தீராத வேலையோடு போலீஸார் தடியடி, மன்மத லீலை, சாமியார் சொல்லும் 20 வழிகள் என மக்கள் பிரச்சினைகளை மட்டும் மையமாக வைத்து இயங்கி வரும் பத்திரிகைகள் ஒருபுறம்.

‘சட்டம் தன் கடமையைச் செய்யும்’ எதிர்க்கட்சிகளுக்கு, ஏழைகளுக்கு மட்டும் என நீதி தவறாத நீதித்துறை ஒருபுறம், இவைபோக மக்கள் நலனைக் கொண்டு மக்களுக்காக அறிமுகம் செய்யப்பட்ட மிக மெதுவாக அவர்களைக் கொல்லும் கொடிய நஞ்சுகளான சாதி, மத, இன, மொழி வேறுபாடுகள் ஒருபுறம் இருக்க இவை பற்றிய கவலைகளே இல்லாமல் ஜவ்வாது மலையில் வாழும் பழங்குடியினர் எப்படி வாழ்கின்றனர் என்பதை அறிய, சிறிய முயற்சியே இந்த மக்களைப் பற்றிய கட்டுரை.....

திருவண்ணாமலை என்ற உடனே சிலருக்கு அக்கோயிலின் தீப ஒளி ஞாபகத்திற்கு வரும். சிலருக்கு இசை அமைப்பாளர் ஒருவர் ஞாபகத்திற்கு வருவார். சிலருக்கு அந்த மூன்றெழுத்து நடிகர் ஞாபகத்திற்கு வருவார். ஆனால் நம்மில் பலருக்கு ஞாபகம் வரவேண்டியது ஜவ்வாது மலையும், மலைக் கிராமங்களும், மலை வாழ் மக்களும்தான்.... காரணம் அறிய விரும்புவோர் கவனமாய்க் கேளுங்கள். இந்த ஜவ்வாது மலையில் கண், காது, மூக்கு, வாய், கால் மற்றும் மனித உறுப்புகள் கொண்ட நம்மைப் போன்ற மனிதர்கள்தான் வாழ்கின்றனர். அண்ணாமலையாரும், இந்த மலைவாழ் மக்களும் ஒரே மாவட்டத்தில்தான் வசிக்கின்றனர்.

புத்திசாலிகளே ஒப்பிட்டுப் பாருங்கள் அனைத்து சக்திகளையும் படைத்த அண்ணாமலையாரைத் தரிசிக்க எளிதில் ஏற்பாடு செய்யும் அரசு வெறும் ஆறறிவு மட்டும் கொண்ட இந்த மழைவாழ் மக்களின் வளர்ச்சியில் என்ன செய்துள்ளது என்று! கொடுமை என்னவென்றால் இந்த மலை வாழ் மக்களும் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளனர் அண்ணாமலையார் மீது...!

கடவுளை மறுக்கச் சொல்லவில்லை. அக்கோயிலினால் அந்த ஊர் அடைந்துள்ள வளர்ச்சி எண்ணற்றவை. ஆனால் இந்த மக்களின் சூழ்நிலையை நரக வாழ்க்கை என்றே கூறலாம். எங்கு நோக்கினும் மலைகள், மரங்கள் பாறைகள். அவசரச் சூழலில்கூட இவர்கள் குறைந்தது 15 கி.மீ.வரை நடந்தே வரவேண்டியுள்ளது.

பணக்கார ஆசாமிகள் முதல் பாதிரியார்கள்வரை காலையில் வாக்கிங் செல்லும் பழக்கம் நகரத்தில் உள்ளது. ஆனால் இந்த மலைவாழ் இனப் பழங்குடியினர் கொழுப்பைக் குறைக்கவோ ஆயுளை அதிகப்படுத்தவோ நடக்கவில்லை. தங்கள் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவே நாள்தோறும் நடக்கின்றனர். சந்தேகம் இருப்பவர்கள் முத்தனாத்தூர் என்னும் கிராமத்திலிருந்து கௌம்பட்டு என்னும் கிராமம்வரை உள்ள நிலையைப் பார்த்தால் தெரியும். இருப்பினும் சிற்சில இடங்களில் தார்ச் சாலை அமைத்துள்ளனர். யார் வேலை செய்கிறார்கள் என்றால் இந்த ஊரில் வசிக்கின்ற பழங்குடியின மக்கள்தான்.

இவர்களின் கடின உழைப்பிலும், களைப்படையாத முகத்திலும் என்றாவது விடியும், அந்த சுதந்திர விடியலை வருகின்ற 4வது தலைமுறையினராவது சுவைக்கட்டும் என்ற நம்பிக்கை இந்த மலைமக்கள் உழைத்து உழைத்துக் கருத்துப் போன ஆதிப் பரம்பரையினர். தீராத உழைப்பையும் தித்திக்கும் தமிழையும், கனிவான பேச்சும், மாறாத பண்பும், மங்காத பழக்க வழக்கங்களையும் கொண்ட இவர்கள் ஆதிவாசிகளாம்.

நம்மில் பலர் பாகிஸ்தானில் குண்டு வெடிக்கும்போது மட்டுமே நாட்டுப்பற்றை உணருகிறோம். ஆனால் இந்த மலைவாழ் மக்களோ தாங்கள் வசிக்கும் சின்ன ஊரையே தங்கள் நாடு என உணரும் பழக்கம் உடையவராய் உள்ளனர்.

ஊர்நிர்வாக அமைப்புமுறை

தங்கள் ஊரை நாடு என்றே கூறுகின்றனர். மேலும் ஊரில் உள்ள குடும்பங்களைக் குடி என்றே கூறி வரும் பழக்கமுடையவர்கள். தங்கள் ஊர்த் தலைவரை ஊரான் என்று சொல்கின்றனர். மேலும் நாட்டார், மூப்பன் ஆகியோரும் ஊரின் முக்கியமான பொறுப்பாளர்கள். இந்த மூன்று பதவிகளுக்கும் பெரும்பாலும் வம்சாவழியிலேயே ஆட்களைத் தேர்வு செய்கின்றனர். அதில் ஏதாவது சிரமம் ஏற்படுகின்ற சூழலில் மாற்றுக் குடும்பத்தில் ஆட்களைத் தேர்வு செய்கின்றனர்.

தேர்வு செய்யும் முறை

நாட்டார் : நாட்டார் பதவி ஊரின் மிக முக்கியப் பொறுப்பாகும். இவரைத் தேர்வு செய்கின்ற வேலையில் சில தகுதிகளைப் பார்க்கின்றனர். சொத்து மதிப்பு, நற்பண்புகள், ஊர்ப் பிரச்சினைகளின் போது நடந்து கொள்ளும் விதம் ஆகியவை சில முக்கிய தகுதிகள் ஆகும். இவருடைய பதவியேற்பு விழாவை ஒரு திருவிழா போல் கொண்டாடுகின்றனர். தலைமை நாட்டார் என்பவர் இவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். பச்சை மூங்கிலை வெட்டி அதில் சந்தனம், குங்குமம், மஞ்சள்தடவிப் பூமாலை கட்டி எடுத்துக்கொள்கின்றனர்.

காலையில் சாமி வீட்டில் சாமி கும்பிட்டு வந்த பிறகு தலைமை நாட்டார் ‘‘இன்றிலிருந்து ஊரைக் காப்பாயா?’’ என்று கேட்க நாட்டார் பதவி ஏற்க வந்தவர் ‘‘இன்று முதல் எனக்கு உட்பட்ட கிராமங்களில் வசிக்கும் குடிகளைக் காப்பேன். மேலும் பிரச்சினை ஏற்படும் காலத்தில் அவர்களை அன்றி எந்த முடிவும் எடுக்க மாட்டேன்’’ என்று சொல்ல அந்தக் கோலை அவர் மடியில் இடுகின்றனர். பின்னர் கிராம மக்கள் அனைவரும் மாலை அணிவிக்கின்றனர். நாட்டார் பதவியேற்கும் நபர் கிராம மக்களுக்கு வேட்டி-சேலை வழங்குகின்றனர் மேலும் மொய் வைக்கும் வழக்கமும் பின்பற்றப்படுகிறது. வந்தவர்களுக்கு விருந்தும் கொடுக்கப்படுகிறது.

ஊரான் : இவரையும் மேற்சொன்ன விதிமுறைகளில் தேர்வு செய்கின்றார். ஓர் ஊரின் தலைவராவார் ஊரான். நாட்டார் 10 அல்லது 12 கிராமத்திற்குத் தலைவர்.

மூப்பன் : வம்சாவழியாகத் தேர்வு செய்யப்படும் இவரின் வேலை சற்று சிரமமானதே. ஊரின் சுபகாரியங்களின்போது விருந்து வைப்பவர். ஆடு, கோழி, பன்றி போன்ற விருந்துகளின் போதும் பகிர்ந்தளிப்பவர்.

இம்மூன்று பதவிகளும் மலைவாழ் இனச்சமுகத்தின் மிக உயர்ந்த பதவிகளாகக் கருதுகின்றனர். நாட்டார் கையில்தான் திருமணத்தின் போது தாலிகொடுக்கப்படுகிறது. ஊரான், ஊருக்கு ஏதாவது பிரச்சினை ஏற்படும் போதும், சுப, துக்க நிகழ்ச்சிகளின்போதும் முக்கியப் பங்கு வகிக்கின்றவர்.
ஊர் மக்கள் ஊர்க் கட்டுப்பாட்டில் அதிகக் கவனம் செலுத்துகின்றனர். மேலும் இவர்களது பஞ்சாயத்து முறையில் தவறுகளுக்குத் தண்டனையாக அபராதம் விதிக்கப்படுகிறது. இவர்களில் எவரேனும் மாற்று சாதியிலிருந்தோ, மதத்திலிருந்தோ திருமண உறவு வைக்கும் பொழுது உயர்ந்தபட்ச தண்டனையாக ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் தண்டனை வழங்கப்படுகிறது.

மலைவாழ் இன மக்களின் உணவுப் பழக்க வழக்க முறைகள்

இவர்கள் பெரும்பாலும் இயற்கையான சூழலில் இருப்பதால் அதிகச் சத்தான உணவுப் பொருள்களை உட்கொள்கின்றனர். பெரும்பாலானோர் சாமை, கேழ்வரகு, கம்பு, சோளம், சிறுகீரை, கொள்ளு ஆகிய தானிய வகை உணவுகளையும், இயற்கையாலும் இவர்களது கடினஉழைப்பாலும் விளைவித்த காய்கறிகளையும் உண்கின்றனர். மேலும் சுப காரியங்களின் போது பன்றி இறைச்சியை உட்கொள்கின்றனர். இந்த மலைவாழ் இன மக்களின் பிரத்யேக உணவு கறி, பன்றி, ஆடு, கோழி, இறைச்சியையும் உட்கொள்கின்றனர்.

திருமண விழாவின் முந்தைய நாள் இரவில் ஊருக்கே விருந்தளிக்கும் பழக்கம் உடையவர்கள். அந்த விருந்தில் பன்றி இறைச்சி பரிமாறப்படுகிறது. மூப்பன் கையால் விருந்து இறைச்சி பரிமாறப்படுகிறது.

சுபநிகழ்வுகளும் முறைகளும்

திருமணம் பேசி முடிக்கப்பட்டவர்கள் திருமணத்திற்கு ஒரு மாதம் அல்லது ஒரு வாரத்திற்கு முன்பே அந்தப் பெண்ணை மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்து வருகின்றனர். அப்படி வரும் வேளையில் ஆண்-பெண் கூடல் அனுமதிக்கப்படுகிறது. முன்பு ஒரு காலத்தில் ஒரு பை அரிசியும், ஒரு பன்றியும் கொடுத்து மணமகன் வீட்டார் பெண்ணைப் பேசி முடிக்கும் வழக்கம் இருந்துள்ளது. தற்போது வழக்கத்தில் இல்லை என்றும் சில இடங்களில் கடைப்பிடிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. வரதட்சணை முறை கூட ஆண் பெண்ணுக்குக் கொடுப்பது வழக்கமாகச் சொல்லப்படுகிறது.

பிரசவம் (முதல் மகப்பேறு) தாய்வீட்டில் நடைபெறுகிறது. அடுத்த மகப்பேறு மருத்துவமனையிலோ அல்லது புகுந்த வீட்டிலோ நடைபெறுகிறது. நகரத்தில் வசிப்பவர்கள் கரு உண்டான நாள் முதல் ஓயாத செக்-அப், ஓயாத டெஸ்ட் எனப் பல வகைகளில் பிறக்கப் போகும் சிசுவைப் பேணிக் காக்கின்றனர். ஆனால் இந்த மலை வாழ் தாய்மார்கள் பிரசவக் காலங்களில் படும் வேதனை எண்ணற்றவை. வெறும் கான்கிரீட் கட்டடங்களாகவும், இரும்பு போர்டுகளாகவும் இயங்கி வரும் நம் ஆரம்பச் சுகாதார நிலைய ஊழியர்கள் பெரும்பாலும் இந்த மலைக் கிராமங்களில் பல ஊர்களுக்குச் செல்வதில்லை. மாதமொருமுறை சிலர் செல்கின்றனர். அவர்கள் தங்களுக்குத் தெரிந்த யாராவது ஒரு நபரிடம் தகவல் சொல்லிவிட்டுச் சென்று விடுகின்றனர்.

ஊரில் உள்ள கைதேர்ந்த, உண்மையாகவே தாய்-சேய் நலம் விரும்பும் மூதாட்டிகள் சிலர், ஐந்துபைசா எதிர்பார்க்காமல் மகப்பேறு பார்க்கின்றனர். இவர்களை மருத்துவச்சி, வைத்தியச்சி இடுப்புப் புடிக்கிறவங்க என அழைக்கின்றனர். விளக்கெண்ணெயைப் பயன்படுத்தி அப்பெண்ணின் வயிற்றுப் பகுதி முழுவதும் தேய்த்து சுலபமாகக் குழந்தையைப் பிரிக்கின்றனர்.

கொடுமை என்னவென்றால் தொப்புள் கொடியை ஒரு காலத்தில் நன்கு தீட்டிய அரிவாளால் வெட்டியவர்கள் தற்போது பிளேடு பயன்படுத்துகின்றனர். ஆரம்பச் சுகாதார ஊழியர்கள் தரும் பஞ்சுகளைப் பயன்படுத்தி இரத்தக் கசிவைச் சுத்தம் செய்கின்றனர். மகப்பேறு காலத்தின்போது எந்த ஆணையும் அவர்கள் அருகில் அனுமதிப்பதில்லை. ஏதாவது ஓர் ஊரில் குழந்தை பெற்றிருந்தால் யாராவது அது தீட்டாகக் கருதப்படுகிறது. வெளியூர் ஆட்கள் எவரேனும் வந்தால் கூட அவ்வூரில் சாப்பிட முடியாது. மேலும் அந்த ஊர் மக்கள் அந்த நாள்களில் திருவிழா, திருமணம், எந்த நிகழ்வுகளும் நடத்துவதில்லை.

பிரசவமான 5,7,9 நாள்களில் ஒரு சிறிய சடங்கு செய்து தீட்டைக் கழிக்கின்றனர். ஆட்டுக் கோமியத்தில் மஞ்சள் கலந்து வீட்டைச் சுற்றியும் தெளித்துத் தீட்டைப் போக்குகின்றனர். பெண்ணுக்கு வளைகாப்பு இடும் பழக்கமும் வழக்கத்தில் உள்ளது.

மலைவாழ் இன மக்களின் தெய்வங்களும் சடங்குகளும்

சலுகைகளுக்காகவோ, உதவிகளுக்காகவோ, எளிதில் மதம் மாறாதவர்கள் இந்த மலைவாழ் மக்கள்.
‘மலைமேல் உள்ள பட்டணம் அரணானது’ விவிலிய வசனம் ஒன்று உள்ளது. இறைமகன் சொன்னதாகச் சொல்லப்படும் அந்த வசனம் உண்மையா ? நான் சொல்லவில்லை வந்து வாழ்ந்து பாருங்கள் உண்மை புரியும்.

கிறித்துவ மிஷனரிகளின் அளப்பரிய சேவை போற்றத்தக்கதே...காரணம் ஆங்கிலேய கிறித்துவத் துறவிகளினால் செய்யப்பட்ட கல்வி, மருத்துவ, ரீதியான சேவைகள். இன்று எப்படி உள்ளது? ஒரு சிலர் மட்டுமே இன்றளவும் அதே பாணியில் சேவை செய்து வருகின்றனர். ஜவ்வாது மலையைச் சுற்றிக் கட்டமைக்கப்பட்ட கோயில்களோ, தெய்வங்களோ இல்லை. கற்களைக் கொண்டு இவர்களே சில மாடங்களைச் செய்து, வர்ணம் பூசி வழிபடுகின்றனர். சில இடங்களில் உள்ள கோயில்களில் முருகன், பிள்ளையார் போன்ற கடவுளரைக் கும்பிடுகின்றனர்.

தெய்வத்தின்மீது தணியாத தாகம் கொண்ட இவர்கள் திருப்பதி சென்று முடி எடுத்து வருகின்றனர். இவர்கள் தங்கள் ஊருக்குப் பாதை இல்லாவிட்டாலும் பக்தியில், பரவசத்தில் திளைத்து நிற்கின்றனர்.

திருவிழாக் காலங்களில் மிகவும் சுத்தமாக வாழும் பழக்கமுடையவர்கள். திருவிழாக்காலங்களில் கங்கணம் (காப்பு) கட்டுகின்றனர். அவ்வாறு காப்பு கட்டிவிட்டால் இவர்களில் யாரும் வெளியில் (அடுத்த ஊரில்) சென்று நீர் அருந்தவோ உணவு அருந்தவோ கூடாது. மேலும் வெளியூர்க் காரர்களை ஊருக்குள்ளும் வீட்டினுள்ளும் அனுமதிப்பதில்லை. அப்படிச் செய்தால் தெய்வம் தண்டித்து விடுவதாகக் கூறுகின்றனர். மேலும் பல்வேறு விதமான சடங்குகளைத் திருவிழாக் காலத்தில் இவர்கள் பின்பற்றுகின்றனர்.

ஆச்சரியம் என்னவென்றால் இவர்களில் யாரும் சலுகைகள் நிதி உதவி கிடைப்பதற்காகக் கிறித்தவ மதத்திற்கு மாறவில்லை. இருப்பினும் இடைவிடாது இறைமகனைப் பற்றியே சிந்தனை செய்கின்ற சகோதர சபையினர் (கிறித்துவ மதத்திலிருந்து பிரிந்த கிறித்தவர்கள்) ஊழியம் செய்கின்றனர். பேருந்து இல்லாத ஊருக்குக்கூட நடந்து செல்கின்றனர்.

துக்க நிகழ்வு

இவர்களுடைய இறுதிச் சடங்குகளிலும் சில சிறப்பம்சங்கள் உள்ளன. இவர்கள் ‘புதைக்கும்’ பழக்கம் உடையவர்கள். தற்கொலை செய்து கொள்பவர்களை மட்டுமே எரிக்கின்றனர். அவ்வாறு புதைக்கும் வேளையில் சில சடங்குகளைச் செய்து வருகின்றனர். 8 வயது சிறுவனைக்கூட ஊர்களுக்கு அனுப்பிச் செய்தி சொல்கின்றனர். நெருங்கிய உறவினர்கள் வரும்போது, நீர் எடுத்து வருகின்றனர். ஆண் இறந்து பெண் இருந்தால் சடலத்துக்கு மாலை இடுவதைப்போல் அப்பெண்ணுக்கும் மாலை அணிவிக்கின்றனர். மேலும் பல சடங்குகள் செய்தபின், ஊதுபத்தியைக் கையில் ஏந்தி உறவினர்கள் அனைவரும் சடலத்தைச் சுற்றி வருகின்றனர். பொது இடமாகக் கருதப்படும் இடுகாட்டில் புதைக்கின்றனர்.

கேழ்வரகில் ரொட்டி, பொரி போன்றவற்றையும் மஞ்சள் சேர்த்துச் செய்யப்பட்ட சாதம் ஆகியவற்றையும் கொண்டு சில சடங்குகள் செய்த பின் தலை, இடுப்பு, கால் ஆகிய பகுதிகளைத் தேங்காய் நாரினால் செய்யப்பட்டக் கயிறு கொண்டு கட்டி கிழக்கே பார்த்தாற் போல் புதைக்கின்றனர். பெண்களை இறுதிச் சடங்கு உட்பட எல்லாவற்றிலும் பங்குபெற அனுமதிக்கின்றனர்.

கலை, கலாச்சாரம்

இவர்களுடைய வாழ்க்கை முறை மற்றும் பண்பாடு, கலாச்சார ரீதியான நாட்டுப் புறப்பாடல்களைத் தெரிந்து வைத்துள்ளனர். மேலும் கோலூர் என்ற கிராமத்திற்கு அருகில் வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில் ஒன்று உள்ளது. வரலாற்றை அழிப்பதுதானே. நம்மில் பலருக்குத் தெரிந்த விஷயம், ஆகவே இக்கோயிலும்கூடக் கேட்பாரற்று இடிந்து சிதைந்து காணப்படுகிறது. மேலும் இதில் கல்வெட்டு ஒன்றும் உள்ளது.

கோட்டையில் உள்ள செல்லியம்மன் சிலை இங்கிருந்து அரசுத்துறை அதிகாரிகளால் கடத்தப்பட்டது தெரிந்தும்கூடப் பொறுமையைக் கடைப்பிடிக்கின்றனர். இன்னும் எழ முடியாமலிருக்கும் கிராமங்கள் எத்தனையோ?