கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வாய்ப்புக் கோரும் வகுப்புரிமையன்றையே திராவிட இயக்கம் தனது தொடக்க காலத்தில் பிரதான நோக்கமாகக் கொண்டிருந்தபோதிலும் அதற்கான காரணங்களை வரலாற்றில் தேடிக் கண்டடைந்து அவற்றை உரத்த குரலில் கண்டிக்க முனைந்து சித்தாந்த ரீதியிலும் தனக்கு வலுவான தற்காப்பை உருவாக்கிக் கொண்டுள்ளது. அதனால்தான் இவையெல்லாம் வெறும் வேலைகேட்கும் போராட்டங்கள்தான் என்று போகிறபோக்கில் செய்த பகடிகள் நீண்டு நிலைகொண்ட இயக்கவேர்களை வலுவிழக்கச்செய்ய முடியாமல்போனது. பார்ப்பனீய எதிர்ப்பை மிக அழுத்தமாக முன்வைத்துப் பேச ஆரம்பித்த பெரியார் அதனோடு நெருங்கிப் பிணைந்துள்ள கண்ணிகளான சாதி, மதம், கடவுள் எனச் சகலத்தையும் அடுத்தடுத்து சாடிக்கொண்டிருந்த தனது நீண்டநெடிய பிரச்சார வாழ்வில் மாணவர் நலனில் காட்டிய அக்கறையும் அதை முன்னிட்டு நடத்திய போராட்டங்களும் மிகவும் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவை.

உணர்வுபூர்வமாகத் தன்னைப் பேராயக் கட்சியோடு (Congress) இணைத்துக்கொண்டு பெயரளவில் தலைவராகவும் அடிநிலைத் தொண்டனுக்குரிய ஆர்வமிகுதியோடும் களப்பணியாற்றிவந்த பெரியார் அக்கட்சியிலிருந்து கோபாவேசமாக வெளிக்கிளம்பியதற்கான முக்கிய காரணம் அவர் முன்வைத்த வகுப்புவாரி பிரதிநிதித்துவத் தீர்மானம் தொடர்ந்து புறந்தள்ளப்பட்டது என்பதோடு சேரன்மாதேவி குருகுலத்தில் பார்ப்பனரல்லாத குழந்தைகள் இழிவாக நடத்தப்பட்டு உழைப்புச் சுரண்டலுக்கும் ஆளாக்கப்பட்டார்கள் என்பதை அறிய நேர்ந்ததும்தான். அவருக்குள் ஏற்கெனவே எரிந்துகொண்டிருந்த நெருப்புக்கு எண்ணெய் வார்த்தது சேரன்மாதேவி சம்பவம்.

பேராயக் கட்சியிலிருந்து விலகி நீதிக் கட்சியை ஆதரித்து வந்த நிலையில் அக்கட்சியின் ஆட்சிக்காலத்தில் சென்னை மருத்துவக்கல்லூரியில் கட்டாயப் பாடமாக இருந்த வடமொழி அகற்றப்பட்டதற்காகப் பனகல் அரசரும், தாழ்த்தப்பட்ட மாணவர்களைச் சேர்க்கமறுக்கும் பள்ளிகளுக்கு அரசு உதவித்தொகையை நிறுத்தியதோடு அனைத்துப் பள்ளிகளும் அவர்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று ஆணையிட்டதற்காக சுப்பராயனும் பெரியாரால் பெரிதும் பாராட்டப்பட்டிருக்கிறார்கள்.

திருவையாறு வடமொழி கல்லூரிக்குத் தஞ்சாவூர் ஜில்லா போர்டு செலவழிக்கும் தொகையில் ஒரு பகுதியை மீதம் வைத்து ஆதிதிராவிட மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்குச் செலவிட வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றியதோடு அங்கு பார்ப்பனர், பார்ப்பனரல்லாத மாணவர்களுக்குத் தனித்தனியாக உணவு பரிமாறப்பட்டதைத் தடுத்துநிறுத்திய ஜில்லா போர்டுக்கு ஆதரவாகவும் செயல்பட்டிருக்கிறார் பெரியார். ராஜகோபாலச்சாரியாரின் ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட குலக் கல்வித்திட்டத்தை எதிர்த்து அவரைப் பதவிவிலக வைத்தவர், அதன்பின் ஆட்சிக்கு வந்த காமராஜர் அத்திட்டத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டதும் அதற்காகவே பேராயக்கட்சியை ஆதரிக்கவும் தலைப்பட்டார்.

பணியின் தன்மை எவ்வாறிருந்தபோதும் பணியாளர்களின் அடிப்படைத்தேவைகள் பொதுவாக இருக்கும்பட்சத்தில், உடலுழைப்பாளிகளுக்கு மிகக் குறைவாக ஊதியம் வழங்கப்படுவதே, அவனை மட்டுமின்றி அவனது அடுத்த தலைமுறையையும் அதே நிலையில் வைத்திருக்கத்தான்; ஒரு உடலுழைப்பாளிக்குப் போதுமான ஊதியம் கிடைத்தால், அதைக் கொண்டு தன் பிள்ளைகளைப் படிக்க வைப்பான்; பிறகு தனியுரிமை கொண்டாடிவரும் வேலைவாய்ப்புகள் அனைத்தும் கைநழுவிப் போய்விடுமென்ற அச்சமே குறைவான உதியமுறைக்கு காரணமென்று கூறிய பெரியார், அதற்குத் தீர்வாகத் தொழிலாளர்களின் குழந்தைகள் படிப்பதற்குக் குறைந்தபட்ச அளவிலாவது இலவசக் கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டு மென்று கேட்டுக்கொண்டார்.

இன்று கியூபாவில் கிளைபரப்பி நிற்கும் ‘அனைவருக்கும் இலவசக்கல்வி’ என்ற பெருவிருட்சத்திற்கான வித்துகள் இந்த மண்ணில் ஏற்கெனவே விதைக்கப்பட்டிருக்கின்றன. என்ன, நல்ல நிலத்தில் விழுகிற விதைகள்தானே முளைவிடும், களர்நிலத்தில் விழுந்த விதை பயனற்று அழியத்தானே செய்யும்?

ஆங்காங்கே அரசுக் கல்லூரிகள் தோன்றிய பிறகு அனைத்துத் தரப்பு மக்களும் படிப்பதற்குக் கொஞ்சமேனும் வழிவாய்ப்புகள் ஏற்பட்டிருக்கின்றன என்றபோது, மீண்டுமொரு புதுப் பிரச்சினையை உலகமயச்சூழல் உண்டாக்கியிருக்கிறது. அரசுக்கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித்தரம் அவ்வளவு திருப்திகரமாக இல்லை என்பதுதான் அது. ஆங்கில ஆட்சிக்காலத்தில் வேலை வாய்ப்புகளின் மார்க்கமாகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கல்விமுறையானது தன்னையும் ஆளும்வர்க்கமாகக் கருதிக்கொள்ளும் நம்பிக்கைக்குரிய சேவகர்களை வெற்றிகரமாக உற்பத்தி செய்தது.

அன்றைய அதே கல்விமுறைதான் காலனியாதிக்கத்தின் நவீன வடிவான பன்னாட்டுப் பெரு முதலாளித்துவத்திற்குப் பணியாளர்களை உருவாக்கும் வகையில் தன்னைச் சூழலுக்கேற்றவாறு தகவமைத்துக் கொண்டிருக்கிறது. ஆளும் வர்க்கமும் அதோடு ஒட்டி உறவாடும் உயர் மத்தியதர வர்க்கமும், உயர்கல்வி நிறுவனங்களை உருவாக்குவதும், கல்விக்கட்டணங்களுக்காகப் பெருந்தொகையைச் செலவிடுவதும் வேலை வாய்ப்புகள் தன்னைவிட்டுக் கைநழுவிவிடக்கூடாது என்கிற அச்சத்தினாலேயன்றி தான்மட்டும் பேரறிவு பெற்றுவிடும் ஆசையினால் அல்ல.

வேலைவாய்ப்பில் பார்ப்பனரல்லாதோரும் பிரதிநிதித்துவம் பெறவேண்டும் என்பதற்காக அனைவருக்கும் கல்வியறிவு அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய பெரியார், இந்தக் கல்வியறிவு வேலைவாய்ப்புக்கன்றி வேறெதற்கும் பயன்படப் போவதில்லை என்பதைத் தெளிவுபட உணர்த்தினார். படிக்காத பாமரர்களைப் போலவே படித்தவர்களும் சாதி, சமய மூடத்தன்மைக்கு ஆளாகியிருப்பதைக் கண்டிக்கவும் தவறவில்லை.

‘பி.ஏ., எம்.ஏ., பொது அறிவில் டாக்டர் பட்டம் பெற்றவர்களெல்லாம் இந்த மடமையான காட்டுமிராண்டிச் செயலுக்கு அடிமைகளாக இருக்கின்றார்கள் என்றால், இன்றைய கல்வி எவ்வளவு தூரம் அறிவை, மானத்தை உண்டாக்க முடியாத, அறிவுக்குப் பயனற்ற கல்வியாக இருக்கிறது என்பதைக் கருதி வேதனைப்படுகிறோம். அரசாங்கமும் இன்றைக்கும் கல்விக்குத் தகுதி, திறமை இல்லை என்றுதான் கவலைப்படுகிறதே தவிர, ‘அக்கல்வியினால் அறிவு ஏற்படவில்லையே’ என்று எந்த அரசாங்கமுமே கவலைப்படுவதாகத் தெரியவில்லை’ என்று 26.10.1972 அன்று பெரியார் விடுதலையில் எழுதிய தலையங்கத்திற்கு இன்னும்கூட திருத்தங்கள் தேவையில்லை என்ற நிலையே நீடிக்கிறது.

‘ஒரு மாணவனுக்குப் படிப்பறிவும் தேவை, பகுத்தறிவும் தேவை, இரண்டும் எப்போது அவனுக்கு ஒரு சேர கிடைக்குமென்று இன்னும் உறுதிபடத் தெரியவில்லை. அதுவரை இரண்டையும் தனித் தனியாகவே அவன் பெற்றாக வேண்டும். பாடநூல்களோடு சிறிய அளவிலேனும் பிறதுறை நூல்களையும் அவன் கண்டிப்பாகப் படித்தாக வேண்டியிருக்கிறது. ஆனால், மனனக்கல்வி றையை அடிப்படையாகக்கொண்ட கல்விமுறையே இதற்கு முட்டுக்கட்டையும் போட்டு விடுகிறது. இந்த முறையில் ஒரு மாணவன் எவ்வித உயர்ந்த பட்டத்தை அடைந்த படிப்பாளி என்று கூறப்பட்டாலும், அவனுக்குப் போதிய பொது அறிவும் உலகியலில் தகுந்த ஞானமும் அடைந்தவனாகக் கருதப்பட மாட்டான்,’ (திருச்சி 7.11.1954 சொற்பொழிவு, விடுதலை 12.11.1954) என்பதுதான் பெரியாரின் அபிப்ராயம்.

படிப்பறிவுக்கும் பகுத்தறிவுக்கும் சம்பந்தம் இல்லாமலே போய்த் தொலையட்டும். படிப்புக்கும் வேலைக்குமாவது ஏதாவது தொடர்பு இருக்கிறதா? இதைக்குறித்தும் பெரியார் பேசியிருக்கிறார். இப்படி... ‘சர்க்கார் உத்தியோகத்துக்கு பி.ஏ. வகுப்பு வேண்டியிருக்கிறது. அந்த பி.ஏ. தேர்வுக்கு இலக்கியம், பூகோளம், சரித்திரம், கணக்கு, விஞ்ஞானம் (சைன்ஸ்) முதலியதைப் படித்து உருப்போட்டுத் தேறவேண்டி இருக்கிறது. இந்தப் படிப்புக்காரர்களுக்கு சர்க்கார் கொடுக்கும் உத்தியோகங்களுக்கு, அவர்கள் உத்தியோகம் பார்க்கும் காலங்களில், அல்லது தன்மைகளில் மேற்கண்ட இலக்கியம், பூகோளம், சரித்திரம், கணக்கு, சைன்ஸ் இவ்வளவு தேவை இருக்கிறதா அல்லது பயன்படுகிறதா என்று கேட்கிறேன்.’ (குடி அரசு 1.4.1944)

சரி... தற்போதைய கல்விமுறையின் அடிப்படை, நோக்கம் அனைத்துமே அறிவுக்கெதிரானது என்கிற போது கல்வியென்பது எவ்வாறிருக்க வேண்டும் என்பதற்கும் பெரியாரே வரையறையும் வழங்கியிருக்கிறார். ‘கல்வி என்பது ஒரு மனிதனுக்குக் கற்பிக்கப்பட வேண்டிய அவசியமெல்லாம், ஒருவன் தனது வாழ்நாளில் சுதந்திரத்தோடு வாழ்வதற்கு அவனைத் தகுதிப்படுத்துவது என்பதேயாகும்’ (குடி அரசு 29.07.1931)

கல்விமுறை குறித்து ஆய்ந்து அலசிய இந்தக் கருத்தறிவாளர் திண்ணைப்பள்ளிக் கூடத்தையே தாண்டாதவர். படித்துப் பட்டம்பெற்று கோட்பாட்டுச் சிக்கல்களுக்குள் தலையை நீட்டி மாட்டிக் கொள்ளாமல், பெரியாரைக் காப்பாற்றிய அவரின் இளம்வயது இயல்பான சண்டியர்த்தனத்துக்குச் சலாம் போடுவோம்....
(தொடரும்)