புத்தாடை அணியாத
புத்தாண்டு
நிர்வாணமாய் நான்
பழைய ஆண்டின்
கடைசிப் பக்கங்களை
கடைசியாய் ஒருமுறை
திரும்பிப்பார்க்கிற போது
அதிகம் தென்பட்டவை
அழுகைகளும், வலிகளும்,
காயங்களும், கவலைகளும்,
நிராகரிப்புகளும்தான்.

விழியிரண்டிலிருந்தும்
விழத்தொடங்கின
கண்ணீர் அருவிகள்.
அடிபட்ட இதயத்தில் தொடங்கி
எழுதி எழுதியே
ஒடிபட்ட விரல்கள்வரை
உடம்பு முழுக்க
ஒழுகத் தொடங்கின கவிதைகள்

மொட்டை வெயிலின்
மொத்தக் கோபத்தோடு
முகத்தில் அறைந்து
கன்னங்களைக் காயப்படுத்தின
அந்த ஆண்டின் அவமானங்கள்

உச்சி இரவில்
பசிமயக்கத்தில்
தூக்கக் கலக்கத்தில்
தாய் முலை தேடும்
குழந்தையைப்போல

மறுபடியும்
மனசு தேடுகிறது
கதகதப்பான
அந்தத் தாயின் கருவறையை
இந்த ஆண்டிலிருந்து
ஒவ்வொரு புத்தாண்டிற்கும்
மீண்டும் குழந்தையாகவே பிறக்க