ரிச்சர்ட் அட்டன் பரோ தயாரித்து இயக்கிய ‘துண்டாக்கப்பட்ட தலை.’ (The Severed Head) திரைப்படத்தை 1994ல் தான் (அது வெளிவந்து 24 வருடங்கள் கழித்து) பார்த்தேன். காட்சி ரூபங்கள் நிம்மதியற்ற மனநிலையை அளித்த போது அது ஒரு நாவலின் தழுவல் என்பதை அறிந்து, ஐரீஸ் முர்டாச்சின் The Severed Head நாவலை தருவித்து வாசித்தபோது ஒரு எழுத்துப் பிரதிக்கும் வேறு ஊடகமான திரைப்பட வடிவத்திற்கும் இருக்கும் வேற்றுமை ரொம்பப் படுத்தியது. ழீன் பால் சாத்தரையும் சிக்மண்ட் பிராய்டையும் குழைத்து ஐரீஸ் முர்டாச் அளித்திருந்த அதிர்ச்சி வைத்தியம் அவரது மற்ற படைப்புகளின்பால் ஈர்ப்பை ஏற்படுத்தி, பார்க்கும் நண்பர்களுக்கெல் லாம் அவரை சிபாரிசு செய்தேன்.

 The Severed Head ஒரு பெண் எழுத்தாளரின் படைப்பு என்பதே நம்ப முடியாத அதிர்ச்சியாய் இருந்தது. ஆனால் அதைவிட பெரிய அதிர்ச்சி அந்த 1994லிலேயே ஐரீஸ் (Alzhemiers deseas) எனப்படும் ‘நினைவிலி’நோயின் ஆரம்ப அறிகுறிகளால் தாக்கப்பட்டிருந்தார் என்பத. இன்றைக்கும் கூட உளயிவியலின் ஒரு அரைவேக்காட்டு கடைசி பெஞ்ச் மாணவனாக என்னைக் கருதும் நான் தொன்னூறுகளின் இறுதியில் அல்கொய்மிர் நோய் குறித்தும் அதன் பின் விளைவுகள் குறித்தும் வெளிவந்து கொண்டிருந்த ஆங்கிலக் கட்டுரைகள் சிலவற்றை மொழி பெயர்க்கத் தூண்டப்பட்டேன். எழுத்தாளர் தொகுதி எனும் (Writers Block) உளவியல் பதம் கொடுத்த கூடுதல் ஆர்வத்தாலும் தனது அத்தனை விஷயங்களையும் விசேஷங்களையும் மெல்ல மெல்ல மறந்து குழந்தை மன நிலைக்கும் கீழாக எப்படி ஒருவரது மூளை ஒருவரை மறதிக்கு தள்ளிவிடுகிறது என்பதை புரிந்து கொள்வதிலிருந்த சவால்களாலும் அக் கட்டுரைகளின் பால் ஈர்க்கப்பட்ட நான் அங்கே ஐரீஸ் முர்டாச் எனும் பெயரை அல்கொய்மிர் நோயாளிகளில் ஒரு ஆய்வு-நபராக (அப்படிப்பட்ட வரை subject என்று அழைக்கிறார்கள்) குறிப்பிடப்பட்டதைக் கண்டு நண்பர்களிடம் காட்டிக் காட்டி அதிர்ச்சியைப் பகிர்ந்து கொண்டேன்.

1958ல் தொடங்கி 1995 வரையில் ஐரீஸ் முர்டாச் இருபத்தி ஏழு நாவல்களும் தத்துவம் சார்ந்த ஆழமான-குறிப்பாக எக்ஸிஸ்டென்ஷி யலிஸம் சார்ந்த ஆறு கட்டுரை தொகுதிகளையும் நான்கு விரிவான நாடகங்களையும் எழுதி வெளியிடும் அளவிற்கு தீவிர வாசக பரப்பைக் கொண்டிருந்தார். மிக அதிக எழுத்துப் பரப்பைக் கொண்டிருந்த தத்துவப் புரிதல் கொண்ட ஒரே பெண் எழுத்தாளராக பல விமர்சகர்களால் ஏற்கப்பட்டவர் ஐரீஸ்.

ஐரீஸ்ஸின் நாவல்களில் குறிப்பிடத்தக்கவை (நான் வாசித்தவரையில்) The Unicorn(1963), A fairly Honourable defeat(1970), The Black prince (1973) மற்றும் புக்கர் பரிசு பெற்ற The Sea The Sea(1978). ஐரீஸ் முர்டாச்சின் முதல் நாவல் அன்டர் தி நெட் 1954ல் வெளிவந்தது. ஆனால் அது அவரது முதல் நூல் அல்ல. அதற்கு முன்னதாகவே 1953ல் சார்த்தரைப் பற்றிய ரொமாண்டிக் ரேஷலலிஸ்ட் கட்டுரைத் தொகுதி வெளிவந்து விட்டிருந்தது. தொண்ணூற்று மூன்றில் மறுபதிப்பு செய்யப்பட்ட போதுதான் அது பலருக்குத் தெரியும்.

மகிழ்ச்சி நிரம்பிய ஞானம். ஒரு வித பேதலிப்பு சந்தைத் திடலாகிக் கொண்டிருக்கும் உறவை பட்டவர்த்தனமாய் பிடித்தாட்டும் நுட்பமான வெளிப்பாடு. இவையே ஐரீஸ் நாவல்களின் தனிச் சிறப்பு. அதை அன்டர் தி நெட் நாவலிலிருந்தே நாம் பார்க்கிறோம். இயக்கங்கள் என்பவை சக ஏற்றத் தாழ்வுகள் என்றழைக்கப்பட்டவைகளை நிகராக்க மேற்கொண்ட கொச்சையான செயல்பாடுகள் சார்த்தர் வழியில் நின்று விமர்சிக்கப்படுகின்றன. நீட்சே கட்டுரைகளாகவும் கட்டுடைப்புகளாகவும் எழுதிக் குவித்த விஷயங்களை நாவல்களுக்குள் ஐரீஸ் தரிசிக்க வைக்கிறார். யூனிகார்னில் இருத்தலியகலை கத்தே (Gothe) வின் நேசிப்பு இயலோடு முரணாக கலக்கும் சோதனையை முயல்கிறார். கோபுரங்களும் மெழுகுவர்த்திகளும் முழுமுதற் கடவுளின் புனித சின்னங்களாகின்றன. தேவாலய மணி ஓசை இப் பேரண்டப் பாடலில் புதைகிறது. இருத்தல் முதலா, சுரம் முதலா எனம் பழங்கால விவாதங்கள் தற்கால அனுபவத்தின் தூய நிலைகளை விளக்குவதற்குப் போதாது எனும் சார்த்தரின் நிலைப்பாட்டை நாவல் தன் பன்முகப் பாத்திரங்களின் வழியே அடைகிறது.

தத்துவ நெறிக்குள் உண்மை நிலை (Factility) என்பதைப் புகுத்தியவர் சார்த்தர். ‘இப்போது-இந்த நேரத்தில், இந்த இடத்தில் இந்தப் பண்புகளுடன் வாழுகிற உண்மை நிலைதான் நான்’ என்பது அவருடைய நிலைப்பாடு. நான் எனது உண்மை நிலையை வாழ்கிறேன். அது தான் நான் யார் என்கிற எனது முழுமையான சாரத்தை உருவாக்குகிறது என்பார் அவர். இதையே சிக்மண்ட் பிராய்டு தனது உள்ளப் பகுப்பாய்வு மூலம் நிறுவி இருப்பார். தனி மனித மனம் சார்ந்தவர் பிராய்டு. வாழும் வரலாற்றுக் காலத்தின் நிலைமைகள் வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் பாதிக்கின்றன.

வண்ணம் தீட்டுகின்றன என்று சமுதாயத்தையே ஒரு கூறாக சிந்தித்தது சார்த்தரின் இருத்தலியல். இவற்றை இணைக்கும் அந்த நடுக்கோட்டில் பயணிக்கிறது. துண்டாக்கப்பட்ட தலை. ஐரீஸின் சோதனை முயற்சிகளிலேயே மிகவும் அதிக கவனத்தைப் பெற்ற நாவல்.

இருத்தலும் சாரமும் மனிதனின் வாழ்க்கையில் ஒன்றை ஒன்று ஊடுருவுகின்றன எனுத் தத்துவ வெளிக்குள் ஐரீஸ் முர்டாச்சை இழுத்து வந்தது எது? துண்டாக்கப்பட்ட ஒரு தலையை பல முண்டங்களுக்கு பொறுத்திப் பார்க்கும் பேராசிரியன் நமக்குச் சொல்ல வருவது என்ன? முறை கேடுகளே நியதிகளாகிக் கொண்டிருக்கும் முரணை அவரது எழுத்தில் எங்கே பார்த்தாலும் தரிசிக்கின்றோம். கருப்பு இளவரசன் (The Black Prince) நாவலில் வரும் கதாப்பாத்திரங்கள் சுய வெறுப்பின் உச்சத்திற்கே போய் நாவலின் பிரதி திருத்துபவனிடம் தங்களுக்காக மனமிரங்குமாறு இரைஞ்சுகின்றன. தனிமை என்பது கழிவறையால் கூட கிடைப்பது இல்லை. ஈவு இரக்கமின்றி வாழ்க்கை மனிதர்களை வேட்டையாடுகிறது. விரக்தியை விற்றுப் பிழைப்பது என்று எழுத்தாளன் பிரதிகளாய் அதை உருவாக்க முடிவெடுக்கிறான். மர்மமான ஒரு தணிக்கையாளன் ஒவ்வொருவனின் தலையிலும் இருந்தபடியே நிகழ்வுகளை விமர்சித்துக் கொண்டே இருக்கிறான்.

1978ல் புக்கர் பரிசு பெற்ற The Sea... The Sea நாவல் மேற்கண்ட விஷயங்களிலிருந்து சற்றே வேறுபடுகிறது. பிரபலமடைவது புகழ் சம்பாதிப்பது என்பதன் மீதான மனித குல வெறியை நையாண்டி செய்யும் ஒரு முயற்சி. சர்ச்சை எதையும் ஏற்படுத்தாத புக்கர் தேர்வு என்பதைக் குறிப்பிட வேண்டும். தன்னை கண்ட மாத்திரத்தில் அடையாளம் கண்டுகொள்ளும் ஒரு சமூகத்தில் கிட்டத்தட்ட நாற்பதாண்டுகள் கழித்துத் தன் பழைய சினேகிதியை சந்திக்கும் ஒரு நடிகன் பிரபலமடைந்தால் கலைந்த நாடக வாழ்வை மீறி பீறிட்டு இயல்புக்கு திரும்பிச் செல்ல முயல்கிறான் தான் அடைய இயலாத யதார்த்த- சுகங்களின் முழுமையை அடைந்துவிட்ட சினேகிதி மது கடும் பொறாமை ஏற்படுகிறது. காதல் மற்றும் காதலற்ற தன்மை என்பதன் இருத்தலியல் பார்வை அது. தூய உலகிற்கு பின்னே ஒரு ஒரு மறைப்பொருள் இருக்கிறது. அதுவே முழுமை என்று அதைத்தேடி அலையும் ஆன்மாக்களான ஐரீஸின் கதாபாத்திரங்கள் இறுதியில் அடைவது முழுமையற்ற (Imperfect) நிலையை அற இலட்சியங்கள், கோட்பாடுகள் என்பவை பற்றிய பிரக்ஞை இல்லாமலேயே அது நிகழ்வதுதான் மற்றவர்களிடமிருந்து ஐரீஸ் முர்டாச்சை பிரித்துக் காட்டுகிறது.

நீட்சேவின் ‘ஸரதுஷ்டிரா’ (Zarathustra) பாத்திரத்திற்கு சற்றும் குறைந்தவை அல்ல ஐரீஸின் பாத்திரங்கள். ஆனால் நீட்சே அளவிற்கு அவர் பேசப்படவில்லை. நம் உலகில் தத்தவஞானிகள் என்போர் ஏன் எப்போதும் ஆண்களாகவே இருக்கிறார்கள்? அதனால்தானோ என்னவோ. ஞானம் கூட சந்தோஷிக்கத் தகுந்த ஞானமாக (Joyful wisdom) இருக்கிறது. நன்மை தீமை இரண்டையும் கடந்த அதீத மனிதன் ஆண்தான். யாரெல்லாம் அறநெறிகளை கடந்து செல்கிறார்களோ அவர்களுக்கே எதிர்காலம் என்று நீட்சேவைப் போலவே ஐரீஸீம் கருதினார். ஆனால் நீட்சேவின் ஸரதுஷ்டிரானைப் போல கடந்த கால மனித குலத்தைக் காட்டிலும் மிக உயர்ந்த மட்டத்தில் வாழந்து இது வரையான மனித குல வரலாறு அனைத்தையும் தூக்கியெறிந்துவிட ஐரீஸ் முர்டாச்சின் கதாபாத்திரங்களால் முடியவில்லை. அதீத மனிதனால்தான் எதேச்சதிகாரத்தினின்று தனி மனிதனை காக்க முடியும் எனும் ஆணாதிக்கக் கூற்றை அவரது நாவல்கள் எள்ளி நகையாடுகின்றன. ‘கருத்த ராஜகுமாரன்’‘The world must be peopled’ என்று ஷேக்ஸ்பியர் போல முகத்தை வைத்துக் கொண்டு வலியில் அழும் ஒரு குழந்தையாகி அறைக்கூவுகிறான்.

ஐரீஸ் முர்டாச் 1919 ஜூலை 15 அன்று டப்ளினில் நடை பராமரிப்பு பரம்பரை ஒன்றில் பிறந்தார். சிறு வயதில் அரசு வேலை தேடி தாயும் பரம்பரை தொழிலை கைவிட்டு தந்தையும் லண்டன் வந்தபோது அங்கே எளிய பள்ளிகளில் கல்வி கற்று பழங்கால வரலாற்றை சிறப்புப் பாடமாக எடுத்து ஆக்ஸ்போர்டில் தத்துவ இயல் பட்டப்படிப்பு சேர்ந்தார் ஐரீஸ். உயர் கல்விக்கு தந்தை ஜான் ஐரீஸ் முர்டாச் பல இடங்களில் கடன் வாங்கி காம்பிரிட்ஜ் அனுப்பியபோது அங்கே பிரபல தத்துவ அறிஞர் லுட்விக் விட் ஐன்டீனுக்கு கீழே தத்துவம் படித்து 1948ல் முடித்தார்.

இரண்டாம் உலக யுத்தத்தின்போது அயர்லாந்தின் தென்கோடி ராணுவ முகாமுக்கு ஊனமுற்ற ஆங்கிலேய வீரர் தம் சிகிச்சை பிரிவுகளுக்கு அனுப்பப்பட்டார். போர் முனையில் எதிர் முகமின் வீரர்களை குறிப்பாக மோசமாய் படுகாயங்களுடன் மனித நெறிகளுக்கு மீறி காழ்ப்புணர்ச்சியோடு நடத்தப்பட்ட ரஷ்ய போர்ப் படையை சேர்ந்த கைதிகளை நல்லெண்ண உறவு அடிப்படையில் பச்சாதா பத்துடனும் பரிவுடனும் நடத்தினார் என்பதற்காக உளவாளியென குற்றம் சாட்டப்பட்டு இழிவாக மதிக்கப்பட்டார். உலக யுத்தம் அவரது மனித வேட்கை தேடலின் ஊற்றா இருந்திருக்க வேண்டும்.

 ஐரீஸ் முர்டாச் ஒரு பெண் எழுத்தாளர் என்பதாலேயே பல அவமானங்களை எதிர் கொண்டார். இறந்து பல ஆண்டுகள் கழித்தும் 2003ல் ஆங்கிலேய எழுத்தாளர் ஏ.என்.வில்சன் எழுதி வெளிவந்த ஐரீஸ் முர்டாச்-நான் அறிந்த வரை (Iris Murdoch-as I knew her) நூலே ஒரு சாட்சி. (anti biography)க்கு ஒரு சான்று. முர்டாச்சின் எழுத்துலகில் புகுந்து விமர்சிக்காமல் யாரோடு வேண்டுமானாலும் படுப்பதற்கு தயாராக இருந்தார் என்பது வரை அவரது வாழ்வை மரியாதை குறைவிற்கு உட்படுத்தி கொச்சையாக்கியவர் வில்சன். அவர் மட்டுமல்ல ஐரீஸ் முர்டாச்சின் எழுத்துக்கள் குறித்து ஆகச் சரியான விமர்சனம் இன்றுவரை பதிவாகவே இல்லை என்றே சொல்லலாம்.

1994 முதல் 1999 வரையிலான கால கட்டத்தில் அல்கொய்மிர் நோய்வாய்ப்பட்டு ஐரீஸ் அனுபவத்தை துயர வாழ்வை அவரது கணவர்-நாவலாசிரியர்-ஜான் பெய்லி- ‘ஐரீஸ் நினைவுகள்’ நூலாக வடித்ததும் அது பல விருதுகள் பெற்றதோடு அல்கொய்மிர் நினைவிலி நோய் குறித்த திரைப்படமாய் எடுக்கப்பட்டது. ஐரீஸ் உயிரோடு நினைவோடு இருந்திருந்தால் அவரை மகிழ்வித்திருக்குமா என்பதைச் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் அவரது ஒரு கவிதையில் வருவதைப்போல.

உனக்குள்ளேயே சுருங்கிக் கொள்வாயா
அமைதி வெளியே இருக்கிறது.
அமைதியின் நிழல்தான் உள்ளே இருக்கிறது.

ஐரீஸ் முர்டாச் எழுதிய நாவல்கள்

வலைக்குள் (Under the Net)-1954
பிளைட் ப்ரம் என்சாண்ட்டர்-1956
மண் மாளிகை (The Sand Castle)-1957
தி பெல்-1958
துண்டாக்கப்பட்ட தலை-1961
அன்-அபிஷியல் ரோஸ்-1962
தி யூனிகார்ன்-1963
இத்தாலியப் பெண்-1964
சிவப்பும் பச்சையும்-1965
தேவதைகளின் காலம்-1966
நேர்த்தியும் நல்லதும்-1968
புருனோவின் கனவு-1969
ஓரளவு மரியாதைக்குரிய தோல்வி-1970
ஆக்ஸி டெண்டல் மேன்-1971
கருப்பு இளவரசன்-1973
புனிதமான ஆழமான காதல் இயந்திரம்-1974
வார்த்தை குழந்தை-1975
ஹென்றியும் காட்டோவும்-1976
கடல்...கடல் (The Sea The Sea)-1978
கன்னிகாஸ்திரிகளும் போர் வீரர்களும்-1980
தத்துவஞானியின் மாணவர்-1983
நல்ல பணி பயிற்சியாளன்-1985
சகோதரத்துவமும் புத்தகமும்-1987
கோளத்திற்கான செய்தி-1989
கிரீன் நைட்-1993
ஜாக்ஸனின் குழப்பம்-1995
சம்திங் ஸ்பெஷல்-1999 (எழுதப்பட்ட ஆண்டு 1957)