koottanchoru_logo_90

நாகரிக கோமாளிகள்
உல்லாச ஊஞ்சலாட
பிரம்பு ஊஞ்சல்களோடு
காத்திருக்கிறான்
குடும்பத்தோடு
ரோட்டோர சாலையில்.

ப்ளோரோசென்ட் விளக்கின்
வெளிச்சத்தில்
பசி தின்று
உறங்குகிறது-அவனின்
பச்சிளங் குழந்தை.

வாகனங்களின்
பேரொளியில்
வானதிர-சலனமின்றி
பரிமாறுகிறது-மனைவியின்
ஒற்றைப்பார்வை.

கொசுவோடும் போராட
கொசுவர்த்தி ஏற்றிவைத்து
கண்ணயர்ந்து
காத்திருக்கிறாள்
விடியலுக்காக.
Pin It
காதலைத் தேக்கிய
இதழ்களை உரசியவுடன்
பற்றிக்கொள்கிறது
உனக்கான நெருப்பு

தீண்டுமென் தீத்துளிகளில்
சிலிர்க்கிறாய் இசை மீட்டி
புதுப்புது ராகலயங்களில்...

வாசிப்பின் உச்சத்தில்
கொழுந்து விட்டெரிகிறது
இசைக்கருவி
ஜூவாலைகளின் தகிப்பில்
முனகி உருகி வழியுமுனது இசை
சங்கீதக்காரனின்மேல்
எரிகிறேன் உன்னோடு இசைத்தீயாய்.
Pin It
லட்சம்

வாங்கினேன்
கைது செய்தார்கள்
கொடுத்தேன்
விடுதலை செய்தார்கள்


தங்கப்பதுமை

தன் பெண்ணுக்கு
உள்ளமெல்லாம்
தங்கம் என்றான் தந்தை -
உண்மையா என
தீயில் அவளை
உருக்கி பார்த்தாள்
மாமியார்...


பெண்களின் இலவச பட்டம்

மணந்தால் மனைவி
இழந்தால் விதவை
விலகினால் வாழாவெட்டி
அலங்கரித்தால் மினுக்கி
நியாயம் கேட்டால் பிடாரி
நீ படிப்பால்
எத்தனை பட்டங்கள் வாங்கினாலும்
உனக்கென்று
இத்தனை பட்டங்கள் காத்திருக்கின்றன
இலவசமாய்....
Pin It
சீருடை பற்றிய சிற்றறிக்கை

பிசுபிசுத்து வியர்வையும் அழுக்குமாய்ப்
பொதிந்த சீருடையில்
தொழிலாளி ஒருவரைப் பார்க்கையில்
காலம் விதிர்த்த விதியின் கயமைக்குள்
திணித்திருக்கும் ஒரு மனிதனைத்தான்
பார்க்கிறீர்கள் நீங்கள்
மேலாளர் ஒருவனின் ரத்தவாடைக்குள்
கேவல்கள் ஆர்ப்பரித்து
அன்றையப் பொழுதை மிக இயல்புடன் நகர்த்தாமல்
அவர் கண்ணில் எதிரிகளின் படுதாவாக சீருடை
கோரிக்கைகள் முன் வைத்ததில்
சீருடையின் நிறத்தை மாற்றுவது மட்டுமல்ல
அதிலிருந்து இழை பிரிவதையும்
மேலிருந்து மூன்றாவது பொத்தான் ஒன்று
அறுந்துபோனதையும் சங்கத்தில் முன் வைக்க
அதற்கான வாயில் கூட்டம்
நிர்வாகத்தின் கழுகுப் பார்வையில்
ஓர் அங்கத நாடகம்.
நிர்வாகம் மாற்றியது சீருடையல்ல
நைந்த உறுப்புகளை எடுத்தும் சரிசெய்தும்
கூட்டியும் குறைத்ததுமான உடலைத்தான்.
சகித்துக்கொள்ள வேண்டும்
முதலாளியின் கண்களில்
சீருடையின் உன்னதங்கள்பட்டு
அவரே அதைக் கழற்றி எறிய முற்படுகையிலும்.
சீருடையில் தொழிலாளியின்
வாழ்வு புதைந்திருக்கிறது என்று எழுதாதே
அதன் அழுக்கிலும் எண்ணெய்ப் பிசுபிசுப்பிலும்
தொழிலாளியின் வீச்சம் என்று பாடாதே
உளியும் சுத்தியலும்
மண்டைக்குள்ளே கிழித்தும் நொறுக்கியும் விட்டன
சீருடை கழற்றிய நிர்வாகம்
உள்ளாடையையும் கழற்றி எறியும்போது
சீருடைகள் குறித்த கவலைகள்
இந்த நகரத்தில் யாருக்குமே இல்லை

உடைபடும் புனிதங்கள்

நாளும் தபால்காரன்
என் முகவரி தேடி வருகிறான்.
வருவதும் போவதும்
பழகிய அவன் கால்களுக்கு இல்லை
பயணத்தின் சோர்வு.
யாரோ ஒருத்தியின்
மணமுறிவின் வழக்கு நகலை
யாருக்கோ வந்ததை
என் பெயராகக் கருதி
கொடுத்துவிட்டுப் போனான் அன்று.
மனம் தகித்தது.
மணமுறிவுகள் வழக்காக உருமாறுகையில்
வாழ்வின் தவிப்பு
அனலாக அதனுள்.
மறுநாள் -
தபால்காரன் என் முகவரி தேடிவந்தபோது
மணமுறிவின் நகல்
எனதில்லையென ஒப்படைத்தேன்.
அவன் சொன்னான்.
தங்கள் கவிதைப் பெண்ணின்
மணமுறிவின் நகலாக இருக்கலாம் என்று.
நான் புனிதங்களை தகர்ப்பவன் எனினும்
அப்படியொரு பெண்
என் கவிதையில் உண்டோ? என்றேன்.
மீண்டும் சொன்னான்?
தாலிகட்டி, குடும்பம் நடத்தி
குழந்தைகள் பெறும் பெண்கள்
ஒடுங்கிச் சுருண்டவர்கள்
தங்கள் கவிதைப்பெண்ணோ
இதையெல்லாம் மீறி
மணமுறிவு பெற்றவர்கள் என்றான்.
நான் -
புனிதங்களை உடைக்கையில்
என் கவிதைப் பெண்ணோ
வாழ்வின் கட்டுடைத்து விடுதலையாகிறாள்.

பறவைக் குழந்தைகள்

குழந்தைகளைத் திணித்து
பள்ளிக்குச் செல்லும் வாகன ஓட்டிக்கு
குழந்தைகளை மென் இதழாக
உணருதலே இல்லை,
ஒரு வாகன ஓட்டிக்கு
சாலையைக் கடத்தல்தான்
அவனின் அவசியமெனினும்
அவன் சுவாசத்தில் குழந்தைகள் பற்றிய
மூச்சே இல்லை,
நெரிசல் கடப்பது, நேரம்
ஒருமித்து அவனுக்குள் குவிய-
இந்தப் பெருநகரம்
ஒவ்வொருவரிலும் கால்நழுவிச் செல்கிறது.
புகைகளின் நூல் அரவங்கள்
பழுதுபட்ட சாலைக்குள் புதையும் ஆத்மா
பகலும் இரவுமான வானக்குடையின் கீழாக
வாகன ஓட்டிக்கு
தன் சரிந்த சித்திரங்களே
அவன் மூச்சில் திளைக்கின்றன
குழந்தைகள் அப்பொழுதும்
ஞாபக பொருள்களாகக்கூட வருவதில்லை.
வாகனத்தை விட்டிறங்கும் குழந்தைகள்
சிறைக் கூண்டிலிருந்து வெளிப்பட்ட
உயிர்ப்பறவைகளாகின்றன.
பறவைக் குழந்தைகளின்
இறக்கைகள் கத்தரித்து
விழிகள் பிடுங்கிய
வாகன ஓட்டிக்குள் உள்ளிருக்கும் மிருகம்.
குழந்தைகளை உறுப்பாக தன்னுள்
பொருத்திக்கொள்கிறான் வாகன ஓட்டி -
குழந்தைகள் சந்தோசம் கொள்கின்றன
அவரவர் சிறகுகளை அவரவரே வெட்டி
ஒரு படகாக நீரில் விடுகின்றனர்
மீண்டும் தன் சிறகுகளை ஒட்டவைத்து
பறக்கின்றனர் பறவைக் குழந்தைகள்.
Pin It
கடினக்கம்பிகள் புடைசூழ
சப்பாத்தி மடல்கள் தரைவிரிக்க
சொட்டும் குருதியொடு
சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறது
அழகிய பொன்னிறப் பறவையொன்று.

பழைய இராட்சதப்பையை
கழுத்தில் தொங்கவிட்டபடி
தவமிருக்கும்
வாசஸ்தலங்களில் விரதமொடு
தீர்க்காயுள் வேண்டியதன்
இணைப்பறவை.

தார்ச்சாலையில்-தகிக்கும் வெய்யிலில்
உயிர்த்தளர
ஒற்றை கூஜாவோடு வரும்
எனதினிய மகள்
உன்னைப் போலொருவனை நோக்கி

இருந்தும்
கருணைக் காட்டுகிறார்கள் கடவுள்கள்
எப்போதும் என்னைப்போல்
கழுவிலேற்றவே.

2.

சுடச்சுட பெய்யும் மழையாய்
எனக்கானத்தேவை எதுவாயினும்
உன் காலடி சப்தத்தில்
கூட்டித் தள்ளப்படும் மூளையில்.

பட்டாம்பூச்சியின் லாவகமாய்
தொரட்டுமுள் வாழ்க்கை
கன்னித்திரைக் கிழிசலில்
நம்பிக்கைக்குரிய பாத்திரமாயிற்று.

ஏற்றுக்கொள்ளும் பாரமாய் இரவுகள்
வித்தைக்காரனின் அசைவிற்கேற்ப
ஆடி அடங்கிக்கிடக்கும்
பெட்டிப் பாம்பாய்
உடலோடு மனசும்.

வெறுமனான பார்வைக்கு
நீள்கரத்தின் ஆசுவாசம்
அரளிப்பூவையும் எஞ்சிநிற்கும்
பெரும் வெப்பமாய்.

ஆயினும் அலைகள் பழக்கமாயிற்று
நுரையாகி உறைந்து போவதற்கும்
ஊடாக மடிந்து மீள்வதற்கும்.

3.

பரிச்சயமாய் என்னோடு கைகலக்கும்
உன் மீட்சியின் சிறகுகள்
இப்போதெல்லாம் எனைத் துண்டிக்கவே
முனைப்பாய் இருக்கின்றன.

உன் தொடுதல்
என்னை துக்கங்காப்பதுவாய்

உன் தழுவல்
என்னை வருடிக் கொடுப்பதுவாய்

நீ வேண்டுமானால் சிலாகித்துக் கொள்ளலாம்

புரிந்துகொள்
கால்தொட்டுப் போகும்
அலையின் நொடியில் நிகழ்ந்துவிடும்
உன் சாகசங்கள்
எப்போதுமே எனக்கு
அந்நியம்தான்.
Pin It