தமிழ்ப் புனைகதைத் தளத்தில் மாணிக்கம், அளம், கீதாரி எனும் மூன்று நாவல்கள் மூலமாக பயணித்து தனக்கென தனி இடத்தைத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறார் சு.தமிழ்ச்செல்வி. இந்நாவல்கள் மூலம் தமிழ்ப் புனைகதை உலகில் சலசலப்பையும் கவனத்தையும் ஈர்த்து வருபவர் இவர். கீழ்த்தஞ்சை மாவட்டம், திருத்துறைப்பூண்டி பகுதிகளைக் களமாகக் கொண்டு அப்பகுதி வாழ் மக்களின் வாழ்க்கைமுறையையும், வட்டார வழக்கையும் பதிவு செய்துள்ளார். அப்பகுதிவாழ் மக்களோடு மக்களாக நம்மையும் நிறுத்தி அழைத்துச் செல்லும் பாங்கு இந்நாவல்களின் செய்நேர்த்தியைத் தனித்த அழகியலோடு நிறுவுகிறது.

மூன்று நாவல்களிலும் பெண்களின் கதாபாத்திரங்களே முதன்மையாக அமைக்கப்பட்டுள்ளன. மாணிக்கம் நாவலின் கதைத் தலைவனாக மாணிக்கம் எனும் பாத்திரம் இருப்பினும் அவனது நிலையற்ற மனதாலும் அதன் தொடர்ச்சியாக ஏற்படும் துன்பங்களாலும் பாதிக்கப்படும் செல்லாயி (தன் உழைப்பால் நாடி நரம்புகளை அணுஅணுவாய்த் தேய்த்து) தன் கணவன், தன்னிடம் சொல்லாமல் ஊரைவிட்டுச் சென்ற காலத்திலும் தனியளாய் தன் குழந்தைகளைக் காப்பாற்றுகின்றாள். பின் இவளோடு வந்து சேர்ந்தாலும் வாழ்க்கை ஆழியில் கரையேறத் தெரியாமல் தடுமாறுகிறான் மாணிக்கம். முதுமையில் (குடித்துவிட்டு வந்ததை) எதிர்த்துக் கேட்டதற்காக அடித்து இவள் சுயநினைவற்ற நிலைக்குத் தள்ளப்படுகிறாள்.

மாணிக்கம், அளம் நாவல்களில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காத சமூகச் சூழல் விளக்கப்பட்டுள்ளது. மாணிக்கம் ஹோமியோபதி மருத்துவத்தில் டிப்ளமோ (பட்டயப்படிப்பு) வாங்கியும் காதல் தோல்வியால் புரிதலற்ற வாழ்க்கை வாழ்கிறான். தன் மருத்துவத் தொழிலை விட்டுவிட்டு சைக்கிளில் வித்தை காட்டுதல், விவசாயம், மீன்பிடித்தல் என தொழிலை மாற்றிக்கொண்டே செல்லுகிறது அவன் மனம். மு.வ.வின் அகல்விளக்கு நாவலில் படித்த இளைஞன் சந்திரன் சின்னாபின்னமாவதைப்போல மாணிக்கமும் சூதாட்டம், குடி என வாழ்வின் எதிர்திசையில் பயணித்து குடும்பப் பொருளாதாரத்தை உயர்த்த கடலில் மீன்பிடிக்கச் சென்று தற்கொலை செய்துகொள்வதென முடிவு செய்கிறான். அதனால் குடும்பத்திற்குப் பணம் கிடைக்கும் என செல்லாயியை மனதில் சுமந்தவாறே தன்னைக் கடலோடு கரைக்கச் செல்கிறான்.

அளம் நாவலின் தலைவியான சுந்தராம்பாள் செல்லாயியை (மாணிக்கம்) நினைவுபடுத்துகிறாள். சுந்தராம்பாளின் கணவன் அயலகம் சென்று சம்பாதித்து வருகிறேன் என சிங்கப்பூர் செல்கிறான். வேலை பார்த்த இடத்தில் சொல்லாமல் வேறிடம் செல்கிறான். இறுதிவரை திரும்பவே இல்லை. அவன் வரவை எதிர்பார்த்துக்கொண்டே தன் மூன்று மகள் களையும் கடைத்தேற்ற முயல்கிறாள்.

கீதாரியின் ராமு முந்தைய நாவலின் கதைத் தலைவரைவிட மாறுபட்டவன். தாய்மை உள்ளமுடையவன். பைத்தியக்காரிக்கும் பிரசவம் பார்க்க அருவருப்பு காட்டாதவன். அவளது இரட்டைப் பெண் குழந்தையை வளர்க்க ஊரார் தயங்குகையில் தயங்காமல் தானே வளர்க்க முடிவெடுப்பவன். தொழில் நேர்த்தியும் அனுபவமும் உள்ளவன். அதனால் கீதாரிகள் (ஆடு மேய்ப்போர்) கூட்டத்தின் ஆலோசகனாக அவர்களது மேய்ப்பனாக விளங்கியவன்.

தமிழ்ச்செல்வி காட்டும் பெண் பாத்திரங்கள் அனைத்தும் கடின உழைப்புக்கு அஞ்சாதவை. சங்க காலப் பாடலில் வறுமைக்கு குப்பைக் கீரையை உப்பில்லாது கதவடைத்து உண்டதுபோல அளம் நாவலின் தாயும் (சுந்தராம்பாள்) மூன்று மகள்களும் கொட்டிக்கிழங்கையும், பலவகைக் கீரைகளையும் வேகவைத்து உண்கின்றனர். மாணிக்கத்தின் செல்லாயி அளம் சுந்தராம்பாள், வடிவாம்பாள் (சுந்தராம்பாளின் மகள்) பாத்திரங்கள் சாதாரண நிலத்தை உழு நிலமாக்குதல், உழுநிலத்தைப் பண்படுத்துதல், அளத்தில் முற்றிய உப்பு வெட்ட வெட்ட வேலை செய்தல் என்று ஆண்மையின் உருவங்களாக படைக்கப்பட்டுள்ளனர். மலையாள நாவல் ஒரதாவின் கதைத் தலைவியை நினைக்கத் தோன்றும் சமரசத்திற்கு உட்படுத்த முடியாத கடின உழைப்பு காட்டப்படுகிறது. மேலும் பசி, காதடைப்பு, கஞ்சி, ஒருவேளைசோறு என வறுமையின் பரிமாணங்கள் நெஞ்சை வியர்க்க வைக்கின்றன.

கீதாரி நாவலில் கீதாரிகளின் நிலையற்ற வாழ்க்கை, விவசாய நிலங்களில் பட்டி அடைக்க மேற்கொள்ளும் வழிமுறைகள், மழைக்காலங்களில் குடும்பங்களைப் பிரிந்து சென்று ஆடுகளைப் பராமரித்தல், நாடோடி வாழ்க்கை முறையில் தாம்பத்தியம், உணவு சமைக்கும் முறை, வங்கியில் பணம் போடுவதுபோல வீட்டுக்குழந்தைகளுக்கு ஆட்டுக்குட்டியைப் பிரித்து வைப்பதும் அவை விருத்தி ஆவதும் திருமணத்தின்போது எத்தனை ஆடு தருவது என நிர்ணயிப்பதும் என அவர்களின் வாழ்க்கையை சுவை குன்றாமல் நகர்த்துகிறார். வாசகன் கதைக்களத்தை உணரும் அவர்களோடே பயணிக்கும் வாசிப்பு அனுபவம் தனித்துவ மிக்கது.

அளம் நாவலின் வடிவாம்பாள் திருமணத்திற்காக ஏங்கிக் கிடப்பதும் தேற்றிக்கொள்வதுமாயிருக்க அவளை மணம் கேட்டு வந்த முதியவனுக்கே மணமுடித்து வைக்கின்றனர். மூன்றாம் மாதமே அவன் தலையில் தேங்காய் விழ சுயநினைவற்று இறக்கிறான். கைம்மைத் துயரோடு நாத்தனார்கள் விரட்டியடிக்க தாயிடமே வந்து சேருகிறாள். மீண்டும் அவளை வற்புறுத்தி வலிப்பு நோயுள்ளவனுக்கு மறுதாரமாக்குகின்றனர். ஓராண்டுக்குப்பின் குளத்தில் குளிக்கச் சென்றவன் வலிப்பு நோயால் தாமரைக் கொடிகளுக்கு இடையே சிக்கி இறக்கிறான்.

இவளது தங்கை ராசாம்பாள் இரண்டு பெண் குழந்தைக்குத் தாயானவள். மூன்றாவதாகக் கருவுற்றிருக்கிறாள். அளத்து வேலையைக் கணவனோடு பங்கு போட்டுச் செய்ய முடியவில்லை. இதை சாதகமாக்கிக் கொண்டு வேறோரு பெண்ணை அளத்து வீட்டில் குடியேற்றுகிறான்.

பொறுக்கமுடியாமல் பச்சைக்குழந்தையை அள்ளிக்கொண்டு தாலியைக் கழற்றி கோயில் உண்டியலில் போட்டுவிட்டு வருகிறாள். நடுத்தரப் பெண்களைப்போல பிரச்சனையின்போது தயக்கம் காட்டுதல், பொறுத்துப்போதல், சமாதானம் பேசுதல் என்பதெல்லாம் அடித்தட்டுப் பெண்களிடத்தே கிடையாது என்பதை வலியுறுத்தும் வகையில் இப்பாத்திரம் படைக்கப்பட்டுள்ளது. அவளது தாய் சமாதானம் பேச நினைக்கும் பொழுதும் மானத்தோடு மறுத்துவிடுகிறாள். ஏழைகளுக்கு மானம்தான் சொந்தம் என்பது வெளிப்படுகிறது.

அக்காள்களின் வாழ்க்கை தங்கை அஞ்சம்மாவை மணப்பாதையிலிருந்து விலக்கிவிடுகிறது. அஞ்சம்மாளின் காதலன் பூச்சியை மணக்க ஆம்பிளைகளோடு வாழாத வீடு என்ற சமூக முத்திரையே தடையாகிறது. ஊரைவிட்டு கேரளாவிற்கு ஓடிவிடலாம் என பூச்சி கூறும்போதும் “எங்கம்மா என்னை அப்படி வளக்கல...” என மறுத்துவிட்டு தமக்கையின் பாதையைத் தொடர்கிறாள்.

இப்பெண்கள் மானத்தைப் பெரிதெனப் பார்க்கின்றனர். ஆனால் இவர்களின் மானத்தைப் பொருட்படுத்த சமூகம் தவறிவிடுகிறது என்ற யதார்த்தத்தை கீதாரியின் செவப்பி (பைத்தியத்தின் ஒரு பெண். சாம்பசிவம் வீட்டில் வளர்கிறாள்) பாத்திரம் உணர்த்துகிறது. கடின வேலையை செய்வதற்காகவே வளர்க்கப்படுவதாகக் காட்டப்படும் செவப்பி மாட்டுக்கொட்டகையில் படுத்துத் துன்புறுபவள். செவப்பியை வளர்க்கும் சாம்பசிவம் இரண்டு பொண்டாட்டிக்காரன். இவனே சிவப்பியின் வாலி பத்தைக்கண்டு எல்லைமீற அவள் தூக்குப்போட்டு இறக்கிறாள்.

ராமு, கரிச்சாவுக்கு சொல்லியனுப்பாமல் அடக்கம் செய்கின்றனர். இதற்காக எவ்விதமான அபராதமோ தண்டனையோ சாம்பசிவத்திற்கு விதிக்கப்படவில்லை. ராமுவும் நியாயம் கேட்கவில்லை. பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் உயிர்களை எவ்வளவு மலிவாக மாற்றி விடுகின்றன என்பது (அமெரிக்க சூறாவளி கத்ரீனாவில் சிக்கிய கருப்பர்கள் போல) இந்நாவலில் பிரதானப்படுத் தப்பட்டுள்ளது.

விதவை வாழாவெட்டிகளின் நிலையைப் போன்றே மருமகளை மகனிடமிருந்து பிரிக்க (மாணிக்கம்) முயற்சி செய்யும் மாமியார், மருமகளின் நடத்தையைக் குறை கூறுகிறாள். மாணிக்கம் நாவலில் வாழ்வின் கோரப்பிடியில் சிக்கித் தவிப்பவர்கள் தன்னம்பிக்கை குறையாமல் மீண்டும் மீண்டும் மீண்டெழும் முயற்சிகள் காட்டப்படுகின்றன.

புதுமைப்பித்தன் தொடங்கி ராஜம் கிருஷ்ணன் (மண்ணகத்துப் பூந்துளிகள்) வரை கீழ்த்தட்டுப் பெண்களுக்கு கற்பு வலியுறுத்தப்படுவதை விமர்சித்துள்ளனர். எனினும் பெண் பொதுவாழ்வில் ஈடுபடக்கூடாது என காலங்காலமாக அவர்களைப் புறந்தள்ள மேற்கொள்ளப்படும் வழிமுறைகள் குடும்பத்தின் பிணைப்பை சிதைக்கவும் பயன்படுத்தப்படுகிறது. பெண்களை ஒடுக்குவதற்கான உத்தியாகப் பயன்படுகிறது.

தமிழ்ச்செல்வியின் மூன்று நாவல்களிலும் பரந்து, படர்ந்து ஊடாடுபாவாக பெண்ணே காட்டப்படுகிறாள். நடுத்தரக் குடும்பப் பெண்களின் சிக்கல்களை முதன்மையாகக் கொண்ட எண்பதுகளுக்குப் பின் எழுதப்பட்ட நாவல்களைப் போலன்றி ஒடுக்கப்பட்ட பெண்களின் அன்றாட வாழ்வை முன்னிறுத்தும் முயற்சி இந்நாவல்களில் காணக்கிடைக்கின்றன. கதைத்தளத்தில் இதனை இயல்பாக புனைவுகளற்று வெளிப்படுத்தியிருப்பது சிறப்பு. அவ்வாறே தனித்த விமர்சனங்களைக் கதாபாத்திரங்களின் மீது திணிக்காமல் வாசகனிடமே விமர்சிக்கும் பொறுப்பை விட்டுவிடுகிறார். திருத்துறைப் பூண்டி வட்டார வழக்கு இவருக்கு இயல்பாக வாய்த்திருக்கிறது.

மூன்று நாவல்களின் முடிவுகளும் சோகம் நிரம்பியதாகும். அளம் நாவலின் முடிவு தன்னை விமர்சிக்கும் சமூகத்தையும் புறக்கணிப்பதாக உள்ளது.

இந்நாவல்களின் கதாபாத்திரங்கள் செய்த தொழில்கள் யாவும் அனுபவவீச்சோடு விளக்கப்படுகிறது. அதன் நுணுக்கங்கள் நுட்பமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் குடும்பப் பெண்கள் குடும்பம் நடத்த வயிற்றின் ஜ்வாலையோடு உச்சிவெயிலில் பணியாற்றும் அலைக்கழிப்பு; பசிக்கு ஏதும் கிடைக்காதபோது காடு கழனிகளில் தேடியலையும் மனக்கொதிப்பு; மர எறும்புகள் உடலைக் கடித்துப் பிய்த்தெடுக்க வயிற்றுக்காக அதனைப் பொருட்படுத்தாத உணர்வுகளைக் கேள்விக் குறியாக்கும் உக்கிரம் என ஈரம் காயாத கனத்த மனசை வாசகர்களுக்கு அளிக்கிறார்.

உலகமயமாக்கலின் மூலம் பொருளாதாரப் பிளவுகள் தோன்றும் இச்சமயத்தில் இத்தகைய நாவல்கள் வரவேற்கத்தக்கன. பஞ்சும் பசியும், துலாபாரம் என சோகங்களை மட்டும் சுமக்காமல் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லும் பாதைகள் உருவாக தமிழ்ச்செல்வி போன்றவர்கள் இலக்கியம் மூலமேனும் முயல வேண்டும். அதற்கான இலக்கியத் தகுதிகள் இவர் படைப்புகளில் பரவிக் கிடக்கின்றன.