மலையாள மூலம்: டி. பத்மநாபன்
தமிழில்: குறிஞ்சிவேலன்

உச்சிவேளை முடிந்து விட்டிருந்தாலும் வெயிலின் உக்கிரம் குறைந்த பாடில்லை. கடலிலிருந்தும் குளிர்ந்த காற்று வீசத் தொடங்கவில்லை. வராந்தாவில் கிடந்த பிரம்பு நாற்காலியில் அமர்ந்து வெறுமனே வெளியே நோக்கிக் கொண்டிருந்தாள் அம்மா. வீட்டுக்கு முன்னால் கடற்கரையில் இருந்த பழைய அரண்மனை போன்ற கட்டிடத்தை இடித்து உடைத்து விட்டு ஒரு பெரிய கான்கிரீட் கட்டிடத்தை எழுப்பிக் கொண்டிருந்தான் ஒரு புதிய பணக்காரன். அந்த அரண்மனை போன்ற கட்டிடம் கூட யாரோ ஒரு ஜமீன்தார் நகரத்திற்கு வரும்போது தங்குவதற்காகக் கட்டியது தான். புதுக்கட்டிடம் கட்டுவதற்காக அங்கே வேலை செய்து கொண்டிருக்கும் மனிதர்களுடையதும் இயந்திரங்களுடையதுமான சப்தம் வெகுதூரம் வரையில் கேட்டுக் கொண்டிருந்தாலும் அம்மா மட்டும் அது எதுவொன்றையும் கவனிப்பதில்லை. அம்மா அங்கே நடக்கும் எதுவொன்றையும் பார்ப்பதோ காதால் கேட்பதோ செய்யாமல் ஒரு பழைய சிலையைப்போல் தான் அமர்ந்திருந்தாள்.

 அம்மாவின் முன்னே நேரமும் அசைவில்லாமல் தான் இருந்தது. சமீபகாலங்களில் அம்மா எங்கும் போனதே இல்லை. மாடியிலுள்ள தன்னுடைய அறையிலேயேதான் எப்போதும் இருந்தாள். தவிர்க்க முடியாத ஏதாவது தேவை இருந்தால் மட்டுமே - செக்கப்பிற்காக நர்ஸிங் ஹோமிற்கோ அல்லது அதைப்போல் மிக முக்கியமானவைகளுக்காகத்தான் - அம்மா கீழே வருவது வழக்கம். அந்த நேரம் தவிர்த்து தன் முழு நேரத்தையும் அம்மா தன் அறையிலேயேதான் கழித்தாள்.

அந்த அறையின் நான்கு சுவர்களுக்குள்ளேயே அம்மாவின் உலகம் சுருங்கி விட்டிருந்தது.

ஆனால், முன் எப்போதும் அம்மா இப்படி யெல்லாம் இருந்ததில்லை. அவள் மிகவும் ஒளிபொருந்தியவளாகவும் எப்போதும் சுறு சுறுப்பாகவும், ஏதாவது ஒரு வேலையைச் செய்து கொண்டிருப்பவளுமாகத் தான் இருந்தாள். கணவன் காலமான பின்பும் அம்மாவின் செய்கையிலும் எண்ணத்திலும் எவ்வித குறையும் இருக்கவில்லை. அம்மாவுக்குப் பல குழந்தைகள் இருந்தார்கள். கடைசி மகனைத் தவிர மற்ற எல்லாப் பிள்ளை களுக்கும் பிள்ளைகள் இருந்தார்கள். இவர்கள் எல்லோருடைய காரியங்களையும் பார்த்துக் கொண்டு ஒரு பெரிய குடும்பத்தின் மேதாவியாக எவ்வித இடைஞ்சலும் இல்லா மல் வாழ்ந்து வரும்போதுதான்.....

அது எப்போது என்பதைத்தான் துல்லியமாகச் சொல்ல முடியாமல் இருந்தது. அதுபற்றி அம்மா வுக்கும் தெளிவானதொரு உணர்வு இல்லாமல் இருந்தது.

வீட்டிலுள்ள மிகப்பெரிய அறையில்தான் அம்மா அமர்ந்திருந்தாள். மிக நன்றாக அமைக்கப்பட்டிருந்த அறையும் அதுவாகத் தான் இருந்தது. ஏர் கண்டிஷன் செய்யப்பட்டிருந்த அந்த அறையில் டெலிவிஷன், டேப்ரிக்கார்டர் முதலியவை கூட இருந்தன. சில பிரத்யேக பாடல்கள் மட்டும்தான் அம்மாவுக்கு மிகவும் விருப்பம். அதனால், அம்மா எப்போதும் அந்த டேப் ரிக்கார்டரை மட்டும் பயன்படுத்திக் கொண்டிருந்தாள். சில சமயங்களில் மட்டும் டிவி பார்த்துக்கொண்டிருப்பாள். ஆனால், அம்மா ஒருபோதும் டிவியை அதிகம் விரும்பியதில்லை. அதனால், பல சமயங் களிலும் டி.வியை ‘ஆன்’ செய்து அதிகமொன்றும் ஆவதற்கு முன்பே நிறுத்தி விடுவதுதான் வழக்கம்.

ஆனால், அம்மா ஒருபோதும் குளிர் சாதனத்தைப் பயன்படுத்தியதே இல்லை. அதனால், அது வாங்கியதைப் போலவே புத்தம் புதியதாக அங்கேயே கிடந்தது. மூத்தமகன் ராஜப்பனுக்குத்தான் அம்மாவின் அறையில் குளிர்சாதனம் இருக்க வேண்டும் என்னும் நிர்ப்பந்தமிருந்தது. ஒரு புது வீட்டைக் கட்டிக் கொண்டு ராஜப்பன் வீடு மாறுவதற்கு சற்று முன்புதான் அது நிகழ்ந்தது. எந்தவொரு செயலிலும் யாதொரு குறையும் அம்மாவுக்கு நேர்ந்துவிடக்கூடாது என்பதில் ராஜப்பனுக்கு ஒரு பிடிவாதமே இருந்தது. அதை அவன் பல சமயங்களிலும் உரக்கச் சொல்வது உண்டு. ஆனால், அம்மா அதற்கு அப்போதே தடை சொல்லிக் கொண்டிருந்தாள்.

“இது எதுக்கு எனக்கு? இது வொண்ணும் வேணாம். நான் ஒன்றும் இப்படி யெல்லாம் வளரல. உங்களை யெல்லாம் பார்த்துக் கிட்டு இதே மாதிரி காலம் தள்ளினா போதும்.......” என்று தடுத்தாள் அம்மா.

அப்போது ராஜப்பனின் தம்பிகளும் அண்ணன் பேச்சை ஆமோதித்தார்கள்: “உங்களுக்கு என்னம்மா, குறைச்சல்? இப்போது இந்த நகரத்துல ஏர் கண்டிஷனர் இல்லாத வீடு எங்க இருக்கு? அதனாலதான் அம்மா.....?”

தன் பிள்ளைகளின் அளவற்ற அன்பின் பிரச்சனைதான் அது என்பதைப் புரிந்து கொண்டபோது, அம்மா அதன்பின் அதற்குத் தடையேதும் சொல்லவில்லை.

மார்க்கெட்டிலேயே மிக விலை மதிப்புடைய குளிர்சாதனப் பெட்டியைத்தான் பிள்ளைகள் தன் தாய்க்காக வாங்கினார்கள். அதைப்பற்றி அவர்கள் தங்கள் தாயிடம் சொல்லவும் செய்தார்கள். ஆனால், அப்போது அந்தத் தாயின் மனம் வேறு எங்கேயோ இருந்தது. ஆற்றங்கரையில் மழைபெய்தால் ஒழுகும் பழைய வீடு, ஆடி மாதப் பெருமழை, ஆற்றில் வருடந்தோறும் உண்டாகும் வெள்ளப்பெருக்கு.... ஏழ்மையின் நடுவே ராஜப் பனின் தந்தை வந்து திருமணம் செய்து கொண் டது...... அதன் பின் வெகு தூரத்திலிருக்கும் இந்த நகருக்கு வந்து...... அவ்வாறு மெல்ல... மெல்ல.. அப்புறம் நினைவுகளிலிருந்து மனதை வேறுபடுத்தி ஏறக்குறைய ஒரு விரக்தியுடன் - ஆனாலும் நேசத்தோடுதான்..... குளிர்சாதனத்தைப் பற்றிப் பேசும் பிள்ளைகளை நோக்கிய போது அவளுக்குப் பிரமிப்பாகத்தான் இருந்தது.

அம்மா மனதில் என்ன இருக்கிறது என்று அவர்களுக்குப் புரியவில்லை. வராந்தாவில் கிடந்த ஒரு பிரம்பு நாற்காலியில் அம்மா ஒரு பழைய சிலையைப் போல் அமர்ந்திருந்தாள்...

முற்றத்தில் குழந்தைகள் குளித்துக் கொண்டிருந்தார்கள். ஏராளமான குழந்தைகள்; அவர்களின் பெருத்த சப்தம். உரத்தச் சிரிப்பும் ஆரவாரக் கூச்சலும் அம்மாவின் பயனற்ற காதுகளில் மோதின. ஆரம்பத்திலெல்லாம் அம்மா அதை வெகுவாகக் கவனிக்கவில்ல என்றாலும், போகப் போக மனதின் ஒரு மூலையில் குழந்தைகளின் இந்தச் சப்தம்......?

யாருடையது...... அம்மா காது கொடுத்து நின்றாள். தன்னை யாராவது அழைக்கிறார்களோ..... யாராக இருக்கும்....... அவங்க யாரு...... அம்மாவுக்குத் திடீரென்று மெய்சிலிர்த்தது. ராஜப்பனின் மகன்! பாலுவோட மகன்.... நாணுக் குட்டனின்..... அடா, அவர்களெல்லாம் தான் வந்திருக்கிறார்கள். ஆமாம், அவர்களெல்லாம்.....! அதுவும் என்னைப் பார்ப்பதற் காகவே....

என்னை ..... என் குழந்தைகள்.....

அம்மா வேகமாக வந்து வராந்தாவின் ஒரு ஓரத் துக்குச் சென்று முற்றத்தை எட்டிப் பார்த்தாள்.ஆனால், அங்கிருந்து அம்மாவால் எதையும் காணமுடியாமல் இருந்தது. தன் பிள்ளைகளின் குழந்தைகள் இன்னும் சில நிமிடங்களில் மாடிக்கு ஓடிவந்து தன்னைக் கட்டி அணைத்துக் கொள் வார்கள் என்பதில் அம்மாவுக்கு உறுதி இருந்தது. ஆனாலும், அதுவரையில் காத்திருப்பதற்கு அம்மாவால் முடியவில்லை. அவர்களைப் பார்ப்பதற்கும் அவர்களின் குரலைக் கேட்பதற்கும் அம்மா தவித்து நின்று கொண்டிருந்தாள். அதனாலேயே அம்மா அவசர அவசரமாக மாடிப்படி இறங்கி கீழே சென்றாள்.

கீழே வரவேற்பறையில் இருக்கும் சோபாவில் அம்மாவை கவனித்துக் கொள்வதற்காக நிரந்தரமாக பிள்ளைகளால் அமர்த்தப்பட்ட நர்ஸ் அரை மயக்கத்தில் அமர்ந்திருந்தாள். அம்மாவின் காலடி யோசையைக் கேட்டவுடன் அவள் திடுக்கிட்டு எழுந்து கொண்டாள். முதலில் அவளால் நம்பவே முடியவில்லை. அட, அம்மா! எவ்வளவு நிர்ப்பந்தித்தாலும் அம்மா கீழே இறங்க மாட்டாங்களே! அதுமட்டுமல்லாமல் இந்த நேரத்தில் அம்மா தூங்குவதுதானே வழக்கம், இருந்தும். இன்று..... அவள் பிரமிப்போடு நினைத்துப் பார்த்தாள்.

அம்மாவுக்கு ஏதாவது நேர்ந்து விட்டதோ! ஆனால், அவள் ஏதாவது சொல்வதற்கு முன்பே அம்மாவே கேட்டாள்:

“எங்கே? அவங்கள்லாம் எங்கே?”

நர்சுக்கு ஒன்றும் புரியவில்லை, மீண்டும் அம்மாவே சொன்னாள்;

“குழந்தைங்கதான்.... மதுவும், சாந்தியும், கோபனு மெல்லாம்..... நான் அவங்களோட குரலக் கேட்டேனே-”

நர்சு அம்மாவை உற்று நோக்கினாள். பின்பு தனக்குள்ளாகவே, “கடவுளே, இவங்களுக்கு ஏதாச்சும்......” என்று நினைத்தாள்.

பின்பு, அவள் அம்மாவின் அருகில் சென்று ஒரு சிறிய குழந்தையைப்போல், “அவங்க யாரும் இங்க இல்லீங்களேம்மா. அவங்கள்லாம் எங்கியோ உள்ள பள்ளிக் கூடங்களிலே படிக்கிறாங்க - ஊட்டியிலும் கொடைக்கானலிலு மெல்லாம்.... ” என்று கூறினாள்.

அம்மாவால் அவள் சொல்வதை நம்ப முடியவில்லை. அம்மா நர்சை சந்தேகத்துடன் நோக்கினாள். “அப்போ..... நான் அவங்களோட குரலக் கேட்டேனே”... நர்சுக்குப் புரிந்து விட்டது. அவள் சங்கடத்துடன்,” "அம்மா, அவங்க கோபனும் சாந்தியுமல்ல, நம்ம முருகையனோட குழந்தைங்க...” என்று விளக்கினாள்.

தன் வாழ்விலேயே முதன்முதலாக அந்தப் பெயரைக் கேட்பதுபோல் அம்மா அப்பெயரை மெல்ல முணு முணுத்தாள்:

“முருகையன்.....?”

“அவனை நான் காட்டறேன்....” என்றாள் நர்ஸ். வீட்டின் பின்னாலுள்ள முற்றத்தில் எருமையிடம் பால் கறந்து கொண்டிருந்தான் முருகையன். வெகு காலமாக காலையிலும் மாலையிலுமாக அவர்கள் வீட்டிற்கு வந்து பால் கறப்பவன்தான் முருகையன். அவனுடன் அவனுடைய இரு குழந்தைகளும் வருவார்கள். வாழைத் தோப்பில் ஓடியாடி மறையும் ஆட்டம் ஆடுவார்கள். அதோடு உரத்தக் குரலில் கூச்சலும் போடுவார்கள்.

அம்மாவைக் கண்டதும் பால் கறப்பதை நிறுத்தினான் முருகையன். குழந்தைகளும் அவர்களின் விளையாட்டை நிறுத்தினார்கள். வெகு நாட்களுக்குப் பின் அவர்கள் அம்மாவைப் பார்க்கிறார்கள். முருகையன் வெற்றிலைக் கறை படிந்த பற்கள் வெளியே தெரியும்படி சிரித்தவாறே பவ்யமாகக் கேட்டான்.

“என்னம்மா, சௌக்கியங்களா?”

அம்மா, முருகையனின் குழந்தைகளையே நோக்கிக் கொண்டு நின்றாள். அவர்களும் அம்மாவைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள். அவர்கள் ஏழெட்டு வயதான சிறுவர்கள். அவர்கள் அணிந்திருந்த சட்டைகளும் பழையனவாகவும், கிழிந்தவைகளாகவும் இருந்தன. அவர்களின் உடல் முழுவதும் மண்ணில் புரண்டு குளித்ததுபோல இருந்தன. ஆண் குழந்தைகளாக இருந்தாலும் பெண் குழந்தைகளினுடையது போல் பின்னப்பட்டிருந்தன.

அவர்கள் எண்ணெயைப் பார்த்தோ குளித்தோ பல நாட்களாகியிருந்தன. அம்மா அவர்களிடம், “வாங்க, கிட்ட வாங்க....” என்று மிகவும் அன்புடன் அழைத்தாள்.

குழந்தைகள் தயங்கினர்.

அம்மா மீண்டும், “வாங்க...” என்றழைத்தாள்,

குழந்தைகள் சந்தேகத்துடன் தங்களின் தந்தையை நோக்கினார்கள். அம்மா அவர்களை அருகில் அழைப்பது இதுதான் முதன்முறையாகும்.

முருகையன், “போங்கடா....” என்றான்

குழந்தைகள் தயங்கி தயங்கி முன்னோக்கி வந்தார்கள். அருகில் வந்ததும் அம்மா, அவர்களின் கண்களை உற்று நோக்கினாள். அம்மாவின் கண்களில் அன்பும் துக்கமும் ஒருசேர தெரிந்தன. குழந்தைகளுக்கு முதலில் பயமாக இருந்தது. அவர்கள் அம்மா முன்னால் மரத்துப் போய் நின்றார்கள். அதுவும், அவர்களின் தோள்களில் அம்மா கையை வைத்தபோது. ஆனால், அது கண நேரத்துக்கு மட்டுமாகத்தான் இருந்தது. அதன்பின் அவர்கள் தங்களின் சொந்தப் பாட்டியிடம் செல்வது போல் நெருங்கி நின்றார்கள். அவர்களை அன்புடன் தடவினாள். ஒரு கட்டத்தில் அவர்களில் இளையவன் அம்மாவின் மேல் முண்டின் முனையில் தலையை மறைத்துக் கொண்டபோது அவள் சிரித்தாள். அதைக் கண்டதும் முருகையனும் சிரித்தான்.

அம்மா பின்னால் பார்த்துக் கூறினாள்: “சமையலறையில் ஏதாச்சும் இருக்கும், பார்த்துட்டு வா,”

நர்ஸ் இரண்டு வடைகளைக் கொண்டு வந்தபோது அம்மா கோபத்துடன், “இதுதான் இருக்குதா? அந்த ராகவன் நாயரிடம் போய் சொல்லு.... அங்க லட்டோ ஜிலேபியோ ஏதாச்சும் இருக்கும்.....” என்று கூறினாள்.

நல்ல சுத்தமான நெய்யில் தயாரிக்கப்பட்ட முதல்தரமான ஜிலேபிகள் இருந்தன.

முருகையனின் குழந்தைகள் தங்களுக்கு முதன் முறையாகக் கிடைத்த ஜிலேபியை தின்னா மல் கையில் பிடித்து வேடிக்கைப் பார்த்தார்கள். அவர்களின் கண்களில் ஆவல் அதிகரித்திருந்தன. “தின்னுங்க, நான் இன்னும் தரேன்” என்றாள் அம்மா. முருகையனின் குழந்தைகள் ஜிலேபியை நக்கியும் கொறித்தும் மிக மெல்ல தின்னத் தொடங்கினார்கள். வேகமாகத் தின்று விட்டால் தங்களுக்குக் கிடைத்த அந்த அரியவகை பலகாரம் சீக்கிரம் தீர்ந்து விடுமே என்னும் பயம் அவர்களுக்குத் தோன்றியிருந்தது. அவர்கள் அவற்றைத் தின்று முடிக்கும் வரையில் அம்மா அவர்களைப் பார்த்துக் கொண்டே நின்றாள். அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

“நாளைக்கு வாங்க. நாளைக்கு உங்களுக்கு நான் லட்டு தருவேன்” என்றாள் அம்மா.

முருகையனும் குழந்தைகளும் போனபின் நர்சு நினைவுப்படுத்தினாள்: “மருந்து சாப் பிட்டீங்களா?”

மாலை நேரங்களில் அம்மா மருந்து சாப்பிடுவது வழக்கம்.

“இன்னிக்கு எனக்கு மருந்து வேணாம்,” என்றாள். உடனே நர்சு திடுக்கிட்டுப் போய், “ஐயோ! மருந்து வேணாம்னா சொல்றீங்க. இன்னிக்கு மத்தியானம் கூட டாக்டர் சொன்னாரே.....” என்றாள்.

ஆனால், அவள் பேச்சு முழு வதையும் கேட்க அம்மா நிற்கவில்லை. கனவுலகில் செல்வது போல் அம்மா நடந்தாள். அடுக்களைக்கு முன்னே சென்று சேர்ந்ததும் அம்மா நின்றாள். அங்கே ராகவன் நாயரும் அவருக்குக் கீழே பணியாற்றுபவர்களும் தோட்டக்காரர்களுமெல்லாம் பேசிக் கொண்டு அமர்ந்திருந்தார்கள். அம்மாவைக் கண்டவுடன் எல்லோரும் திடுக்கிட்டு எழுந்து நின்றார்கள். ராகவன் நாயரும் தோட்டக்காரனும் மட்டும்தான் அம்மாவை நன்றாக அறிந்தவர்கள். மற்றவர்களைப் பொருத்தமட்டில் அம்மா ஒரு புதிராகத்தான் இருந்தாள். அவர்கள் அருகில் வருவதற்குள் அம்மா மாடி அறைக்குத் திரும்பி விட்டிருந்தாள்......

அம்மா அடுக்களையின் - ஒரு காலத்தில் தான் சர்வாதிகாரத் தன்மையுடன் கோலோச்சிக் கொண்டிருந்த அந்த அடுக்களையின் - வாயிலில் ஒரு அந்நியளைப் போல் சிறிது நேரம் நின்றபின் திரும்பி நடந்தாள்.

மாடியேறப் படிக்கட்டிடம் சென்றதும் அம்மா சிறிது நேரம் தயங்கி நின்றுவிட்டு, பின்பு ஏதோ வொரு உள் அழைப்பின் ஆணைக்குக் கட்டுப்பட்டவளைப் போல் . . .

ஏராளமான அறைகளும் இடை நாழிகளும் வராந்தாக்களுமுள்ள ஒரு பெரிய வீடுதான் அது. அம்மா அந்த அறைகளின் வழியாகவும் வராந் தாக்களின் மூலமும் மெல்ல நடந்தாள், முதன் முதலாக பார்க்கும்போது ஏற்படும் ஆச்சரியத்துடனும், பின்பு, அவற்றையே வெகுகாலம் கழித்துக் காணும்போது உண்டாகும் வேதனையோடும் . . . அம்மா, தன்னையறியாமலேயே காலத்தின் வழியே பின்னோக்கிப் போய்க்கொண்டிருந்தாள். . . பல அறைகளும் அடைக்கப்பட்டுதான் இருந்தன. உண்மையில் அந்த வீட்டிலேயே இரண்டு அறைகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளதாக இருந்தன. . . அவை அம்மாவினுடையதும், அம்மாவின் கடைசி மகனுடையதும் தான். இரண்டும் மாடியில் தான் இருந்தன. ஒரு வகையில் இளைய மகனின் அறையும் அடைக்கப்பட்ட கணக்கில்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். தன் வியாபார வேலை களுக்காக அவன் விடியலிலேயே வீட்டை விட்டுப் போய்விடுவான். மாலையிலோ இரவிலோதான் திரும்பி வருவான். வந்தவுடன் குளித்து விட்டு கிளப்புக்குப் போய்விடுவான். அப்புறம் . . .

பிள்ளைப் பெறமாட்டாள் என்று எண்ணியிருந்த அவனுடைய மனைவி முதல் பிரசவத்துக்காக முன்கூட்டியே பிறந்த வீட்டுக்குப் போய்விட்டாள். அவர்கள் பயன்படுத்திய அறை ஏறக்குறைய சூனிய மாகவே கிடந்தது.

ஒரு காலத்தில் கூச்சலும் கும்மாளமுமாக இருந்த வீட்டில் இப்போது . . .

அம்மாவைக் காணாமல் நர்சு தேடிவந்தபோது அம்மா மாடிப்படியின் கீழே, படிகளின் கைப் பிடியில் தலைசாய்த்து கண்களை மூடி அமர்ந்திருந்தாள். நர்சு அவசர அவசரமாக அம்மாவைத் தாங்கிப்பிடித்துத் தூக்கிவிட்டாள். அவளுக்கு மிகவும் பயமேற்பட்டுவிட்டது. எப்போதும் அம்மாவைக் கவனித்துகொள்ள வேண்டும் என்று டாக்டர் அவளிடம் குறிப்பாகச் சொல்லியிருந்தார். அதேபோல், அம்மாவின் பிள்ளைகளும் சொல்லி யிருந்தார்கள். ஆனால், இப்போது . . .

இருந்தாலும் அம்மா, "இல்ல. எனக் கொன் னும் இல்ல. ஏதோவொரு களைப்பு வந்ததுபோல தோணிச்சு. அவ்வளவுதான். இப்போ ஒன்னுமில்ல . . . ஒன்னுமில்ல . . ." என்றாள்.

நர்சு டாக்டரை அழைக்க எத்தனித்தபோது அம்மா சம்மதிக்கவில்லை.

அம்மா அதன்பின் நர்சின் நிர்ப்பந்தத்தைப் பொருட்படுத்தாமல் மெதுவாக மாடிப்படி ஏறி தன் அறைக்குள் சென்று படுத்துக்கொண்டாள்.

திறந்துகிடக்கும் ஜன்னல் வழியாக வெறு மனே வெளியே நோக்கிப் படுத்திருந்தாள். பலவற்றையும் நினைத்துப் பார்த்தாள்.

வெகுகாலத்திற்கு முன்புதான் அது நடந்தது - ராஜப்பனையெல்லாம் பெறுவதற்கு முன்பு. ராஜப்பனின் தந்தைக்கு வியாபாரம் செழிக்கத் தொடங்கிய காலம். அப்போது ராஜப்பனின் அப்பா சொன்னார்:

‘நமக்கு பெரிசா ஒரு வீடு வேணும்... ஏராளமான அறைகளும் வராந்தாக்களும் இருக்கணும். குழந்தைங்க விளையாட தாராளமா இடம், தோட்டம், தொழுவம், மாடு கன்னுங்க... இப்படி ரொம்ப பெரிய வீடு.’

அப்போது அம்மா சொன்னாள்: ‘வேணாம். நமக்கு எதுக்கு அவ்வளவு பெரிய வீடு?’

அதற்கு ராஜப்பனின் அப்பா மேலும் சொன்னார்: ‘நம்ம குழந்தைங்கள்ளாம் அப்புறம் எங்கே போவாங்க? எங்க வசிப்பாங்க?’

அப்போது அம்மா, ‘எனக்கு ஒரு குழந்தை போதுங்க’ என்றாள்.

அதுக்கு ராஜப்பனோட அப்பா சொன் னார்: ‘அது போதாது. நமக்கு ஏராளமான குழந்தைங்க வேணும். ஆணும் பொண்ணுமாக ஏராளமான குழந்தைங்க இருக்கணும்.’ ராஜப்பனுடைய அப்பா ஒரே குழந்தையாகப் பிறந்தார். உடன் பிறப்புகள் யாருமே அவருக்கு இல்லை. அதனால் குழந்தைகள் என்றால் அவருக்கு அலாதிப் பிரியம். அதனால், ஏராளமான குழந்தைகள் வேண்டுமென்று எப்போதும் சொல்லிக்கொண்டிருப்பார். அவருடைய எண்ணம்போல் குழந்தைகளும் பிறந்தன. ஆனால், எல்லாமும் ஆணாகவே இருந்துவிட்டன. அப்போதும் ராஜப் பனுடைய அப்பாவுக்கு மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. ராஜப்பனுடைய அப்பா அப்போது சொன்னார்: ‘எனக்கு எல்லாக் குழந்தைகளுமே ஒன்னு தான். ஆணாக இருந்தாலும் பொண்ணாக இருந்தாலும் எந்த இடைஞ்சலும் இல்லை. ஆனா, அவங்கள்லாம் நல்லவங்களா வளரணும். அது மட்டும்தான் என்னோட ஆசை...’

அதன்பிறகு சிறிது நேரம் வரையில் அம்மா எதையும் நினைக்கவில்லை. அம்மாவுக்கு மிகவும் களைப்பு ஏற்பட்டிருந்தது. கடைசியில் அவள் தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்: ‘இருந்தாலும் உன்னால எப்படி அவங்கள குத்தம் சொல்ல முடியும்? அவங்களுக்கும் அவங்களோட வேலை நெருக்கடி இருக்கும்தானே? குடும்பக் கஷ்டமும் இருக்குமல்லவா? இருந்தாலும், அவங்க என்னை மறந்தா போயிடறாங்க...? என்னைப் பாக்கறதுக்குன்னே வர்றாங்கதானே? எனக்கு வேண்டியதயெல்லாம் செஞ்சும் தராங்கதானே?’

...தராங்கதானே என்று தன்னையே கேட்டுக் கொண்டபோது அம்மாவுக்கு சட்டென்று தழு தழுப்பு ஏற்பட்டது. ‘இருந்தாலும்...’ என நினைத்தாள் அம்மா.

மாலை நேரம். அந்தி வேளை.

ஆகாய வெளியில் குங்குமத்தை விசிறி பரப்பியவாறு சூரியன் கடற்கரையிலுள்ள தென்னைகளின் பின்னால் மறைவதை அம்மா பார்த்தாள்.

அம்மாவின் இளைய மகன் வந்தபோதும் அவள் அப்படியேதான் படுத்திருந்தாள்.

மகன் ஏதாவது சொல்வதற்கு முன்பே, “உன்னோட கட்டிட வேலையெல்லாம் எப்படி இருக்கு?” என்று கேட்டாள் அம்மா.

அம்மாவின் குரலில் தழு தழுப்புடன் கூடிய ஆதங்கம் இருந்தது. இந்த மகனாவது தன்னோடு எப்போதும் இருப்பான் என்றுதான் அவள் நினைத்திருந்தாள். இவ்வளவு பெரிய வீட்டில் இவனாவது என்னோடு கூட... அப்போதுதான்...

மகன் தெளிவானதொரு பதிலளிக்காமல், “ஆங்... அதுபாட்டுக்கு அது நடக்கும்மா...” என்று பட்டும் படாமலும் சொல்லிவிட்டு நழுவினான். அம்மா மீண்டும், “சாரதா சங்கதி எப்படி இருக்கு? அவ நர்ஸிங் ஹோமுக்குப் போனாளா?” என்று கேட்டாள்.

அதற்கு அவன், “இல்ல. மாசம்தான் ஆகுது” என்றான்.

அவனும் அப்போது குழப்பத்துடன்தான் இருந்தான்.

தாயின் கால்களுக்கு அருகில் படுக்கையில் அமர்ந்தான் அவன். தாயின் போர்வை முனையை வெறுமனே திருப்பியும் மடித்துக் கொண்டிருந்தான். அவனால் அதற்கு மேல் ஒன்றும் சொல்ல முடியாமல் இருந்தது. அம்மாவும் ஒன்றும் பேசவில்லை.

இருள் பரவிவிட்டிருந்த ஆகாயத்தை நோக்கி அம்மா எதுவும் சொல்லாமல் படுத்திருந்தாள். பின்பு, திடீரென்று ஏதோவொரு யோசனை தோன்றியது போல் அம்மா கேட்டாள்:

“உன்னோட புது வீட்டுக்கு நீ எப்போ போகப் போறே?”

அம்மாவின் தழுதழுத்தக் குரலில் உள்ள இந்தக் கேள்வி அவனைத் திடுக்கிடச் செய்தது. இப்படியொரு கேள்வி என்றைக்காவது வரும் என்று அவனுக்குத் தெரியாமலேயே இருந்தது. இருந்தும், இப்போது அந்தக் கேள்வி வந்தபோது சட்டென்று அதற்கான பதிலைச் சொல்ல அவனால் முடியவில்லை. அவனுக்கு அம்மாவின் முகத்தை நோக்குவதற்கும் முடியவில்லை. அம்மா மீண்டும் கேள்வியைக் கேட்டபோது அவன் ஒரு முட்டாளைப்போல் பதில் சொன்னான்:

“இன்னும் மார்றதுக்குத் தீர்மானிக்கல. நமக்குன்னு ஒரு வீட்டை கட்டி வைக்கலாமேன்னு தான்...”

அப்புறம் அவனே தாயிடம் கேட்டான்.

அவன் குரலில் ஆவல் அதிகரித்திருந்தது.

அம்மா ஒன்றும் கூறவில்லை.

‘அப்படின்னா நான் மத்தவங்களோடவும் இதுக்கு முன்பே போயிருக்கணுமே? அவங்களும்கூட நிர்ப்பந்தித் தாங்கதானே?’ என்று அம்மா கேட்கவில்லை. ‘உன்னோடு வந்துட்டா அப்புறம் இந்த வீடு என்னாகும்?’ என்று அம்மா கேட்கவில்லை.

அவர்களுக்கிடையே மௌனச் சுவர் உயர்ந்தது.

வீட்டில் எவ்விதச் சப்தமும் எழும்பவில்லை.

அதன் பிறகு அவன் அம்மாவுக்குப் பிடித்தமான ஒரு பாடல் கேசட்டை எடுத்து டேப் ரிக்கார்டரில் வைத்து ஆன் செய்தான். புல்லாங்குழல் இசைதான் அது. ஸச்தேவின் பாம்சூரி. பாம் சூரியின் சப்தம் அம்மாவை திடுக்கிடச் செய்தது. பிரிந்தவனின் வேதனையும் பிரிவின் துயரமும் ஆத்மாவின் ஆழங்களிலிருந்து விம்மல்களாக உயர்ந்து வருவதை அம்மா கேட்டாள். மெல்ல மெல்ல அதில் லயித்து முழுமையாக இணைந்தாள். பாம்சூரியின் சப்தம் அறையிலிருந்து வெளியேறி வழிந்தது. உலகம் முழுவதும் வியாபித்தது.

அவனுக்கு அவசரம். அதனால், அவன் சப்தம் எழுப்பாமல் அறையிலிருந்து வெளியேறினான். வாயிலில் நர்சு நின்று கொண்டிருந்தாள்.

“ஏதாவது அவசியம்னா எனக்கு கிளப்புக்குப் போன் செய்யுங்க” என்று நர்சிடம் கூறினான்.

கீழே ஃபோர்ச்சுக்குச் சென்று தன்னுடைய புது ஸ்போர்ட்ஸ் காரில் ஏறி வேகமாக வெளியேறினான் அவன்.

அம்மாவின் அறையில் அப்போது பாம்சூரியின் இசை எழும்பிக்கொண்டுதான் இருந்தது. பிரிந்தவனின் வேதனையும் பிரிவின் துயரமும் ஆத்மாவின் ஆழங்களிலிருந்து...

ஆனால், அவனுடைய ஸ்போர்ட்ஸ் காரின் இரைச்சலில் பாம்சூரியின் இசை யார் காதிலும் சரியாக விழாமல் போய்விட்டது.