சீருடை பற்றிய சிற்றறிக்கை

பிசுபிசுத்து வியர்வையும் அழுக்குமாய்ப்
பொதிந்த சீருடையில்
தொழிலாளி ஒருவரைப் பார்க்கையில்
காலம் விதிர்த்த விதியின் கயமைக்குள்
திணித்திருக்கும் ஒரு மனிதனைத்தான்
பார்க்கிறீர்கள் நீங்கள்
மேலாளர் ஒருவனின் ரத்தவாடைக்குள்
கேவல்கள் ஆர்ப்பரித்து
அன்றையப் பொழுதை மிக இயல்புடன் நகர்த்தாமல்
அவர் கண்ணில் எதிரிகளின் படுதாவாக சீருடை
கோரிக்கைகள் முன் வைத்ததில்
சீருடையின் நிறத்தை மாற்றுவது மட்டுமல்ல
அதிலிருந்து இழை பிரிவதையும்
மேலிருந்து மூன்றாவது பொத்தான் ஒன்று
அறுந்துபோனதையும் சங்கத்தில் முன் வைக்க
அதற்கான வாயில் கூட்டம்
நிர்வாகத்தின் கழுகுப் பார்வையில்
ஓர் அங்கத நாடகம்.
நிர்வாகம் மாற்றியது சீருடையல்ல
நைந்த உறுப்புகளை எடுத்தும் சரிசெய்தும்
கூட்டியும் குறைத்ததுமான உடலைத்தான்.
சகித்துக்கொள்ள வேண்டும்
முதலாளியின் கண்களில்
சீருடையின் உன்னதங்கள்பட்டு
அவரே அதைக் கழற்றி எறிய முற்படுகையிலும்.
சீருடையில் தொழிலாளியின்
வாழ்வு புதைந்திருக்கிறது என்று எழுதாதே
அதன் அழுக்கிலும் எண்ணெய்ப் பிசுபிசுப்பிலும்
தொழிலாளியின் வீச்சம் என்று பாடாதே
உளியும் சுத்தியலும்
மண்டைக்குள்ளே கிழித்தும் நொறுக்கியும் விட்டன
சீருடை கழற்றிய நிர்வாகம்
உள்ளாடையையும் கழற்றி எறியும்போது
சீருடைகள் குறித்த கவலைகள்
இந்த நகரத்தில் யாருக்குமே இல்லை

உடைபடும் புனிதங்கள்

நாளும் தபால்காரன்
என் முகவரி தேடி வருகிறான்.
வருவதும் போவதும்
பழகிய அவன் கால்களுக்கு இல்லை
பயணத்தின் சோர்வு.
யாரோ ஒருத்தியின்
மணமுறிவின் வழக்கு நகலை
யாருக்கோ வந்ததை
என் பெயராகக் கருதி
கொடுத்துவிட்டுப் போனான் அன்று.
மனம் தகித்தது.
மணமுறிவுகள் வழக்காக உருமாறுகையில்
வாழ்வின் தவிப்பு
அனலாக அதனுள்.
மறுநாள் -
தபால்காரன் என் முகவரி தேடிவந்தபோது
மணமுறிவின் நகல்
எனதில்லையென ஒப்படைத்தேன்.
அவன் சொன்னான்.
தங்கள் கவிதைப் பெண்ணின்
மணமுறிவின் நகலாக இருக்கலாம் என்று.
நான் புனிதங்களை தகர்ப்பவன் எனினும்
அப்படியொரு பெண்
என் கவிதையில் உண்டோ? என்றேன்.
மீண்டும் சொன்னான்?
தாலிகட்டி, குடும்பம் நடத்தி
குழந்தைகள் பெறும் பெண்கள்
ஒடுங்கிச் சுருண்டவர்கள்
தங்கள் கவிதைப்பெண்ணோ
இதையெல்லாம் மீறி
மணமுறிவு பெற்றவர்கள் என்றான்.
நான் -
புனிதங்களை உடைக்கையில்
என் கவிதைப் பெண்ணோ
வாழ்வின் கட்டுடைத்து விடுதலையாகிறாள்.

பறவைக் குழந்தைகள்

குழந்தைகளைத் திணித்து
பள்ளிக்குச் செல்லும் வாகன ஓட்டிக்கு
குழந்தைகளை மென் இதழாக
உணருதலே இல்லை,
ஒரு வாகன ஓட்டிக்கு
சாலையைக் கடத்தல்தான்
அவனின் அவசியமெனினும்
அவன் சுவாசத்தில் குழந்தைகள் பற்றிய
மூச்சே இல்லை,
நெரிசல் கடப்பது, நேரம்
ஒருமித்து அவனுக்குள் குவிய-
இந்தப் பெருநகரம்
ஒவ்வொருவரிலும் கால்நழுவிச் செல்கிறது.
புகைகளின் நூல் அரவங்கள்
பழுதுபட்ட சாலைக்குள் புதையும் ஆத்மா
பகலும் இரவுமான வானக்குடையின் கீழாக
வாகன ஓட்டிக்கு
தன் சரிந்த சித்திரங்களே
அவன் மூச்சில் திளைக்கின்றன
குழந்தைகள் அப்பொழுதும்
ஞாபக பொருள்களாகக்கூட வருவதில்லை.
வாகனத்தை விட்டிறங்கும் குழந்தைகள்
சிறைக் கூண்டிலிருந்து வெளிப்பட்ட
உயிர்ப்பறவைகளாகின்றன.
பறவைக் குழந்தைகளின்
இறக்கைகள் கத்தரித்து
விழிகள் பிடுங்கிய
வாகன ஓட்டிக்குள் உள்ளிருக்கும் மிருகம்.
குழந்தைகளை உறுப்பாக தன்னுள்
பொருத்திக்கொள்கிறான் வாகன ஓட்டி -
குழந்தைகள் சந்தோசம் கொள்கின்றன
அவரவர் சிறகுகளை அவரவரே வெட்டி
ஒரு படகாக நீரில் விடுகின்றனர்
மீண்டும் தன் சிறகுகளை ஒட்டவைத்து
பறக்கின்றனர் பறவைக் குழந்தைகள்.