அம்மண மஜா (Naked maja) மற்றும் ஆடையணிந்த மஜா (Clothed maja) என்னும் பிரசித்தி பெற்ற இரட்டை ஓவியங்கள் மேற்கத்திய ஓவியங்களில் ஆர்வமுள்ளவர்களுக்கு பரவசமூட்டும் அனுபவமாக இருக்கும். உலகின் தலைசிறந்த ஓவிய மேதைகளில் ஒருவரும் சமகால சமூக, அரசியல் நடப்புகள் மீதான விமர்சனங்களை தனது படைப்புகளில் மிகுந்த செய்நேர்த்தி யோடும் கடும் அழுத்தத்தோடும் பதிவு செய்தவருமான ஸ்பானிய ஓவியர் கோயா (Goya)வின் புகழைத் தேக்கியிருக்கும் படைப்புகளில் ஒன்றுதான் அந்த இரட்டை மஜாக்கள். கட்டில் மீது படுக்கை வசமாக ஒன்றும், நிறுத்து வசமாக ஒன்றுமாக அடுத்தடுத்து இரட்டைத் தலையணைகள் இட்டு, அதன் மீது சற்றே ஒருக்களித்த நிலையில், மடக்கப்பட்ட கைகளை தலைக்குப் பின்னே கோர்த்தபடி படுத்திருக்கும் அம்மண மஜா; அதே மாதிரியான போசில் இருக்கும் ஆடையணிந்த மஜா. இதில் அந்த நாட்களை அதிர்ச்சியூட்டியது அம்மண மஜா ஓவியம்.

ஸ்பானியக் கலையில் பெண்களின் நிர்வாணம் அரிதாகவே இருந்த காலகட்டம் அது. சமயத்தால் தடை செய்யப்பட்ட அந்தக் கருப்பொருளை சமரசம் செய்துகொள்ளாத நேர்மையுடனும் பாலிச்சை கொண்டிருக்கும்படியாகவும் கோயா வரைந்தது கலை வரலாற்றில் சினமூட்டுவதாக அமைந்தது. அம்மண மஜாவை கோயா மிகுந்த தத்ரூபத்துடன் வரைந்திருந்தார். முந்தைய மேற்கத்திய ஓவியங்களிலும் இத்தகைய தத்ரூபத்தைக் காணமுடியுமெனினும் மஜாவின் சரும நிறமும், முப்பரிமாணங்களும், ஒளி-நிழல்-நிழலீடுகளும் இன்றைய புகைப்படங்கள் அளவுக்கு துல்லியமாக கைவரப்பெற்றிருந்தன. மேலும், பழைய நிர்வாண ஓவியங்களில் அழகுபடுத்தலுக்காக அக்குள்களும், யோனியும் மழிக்கப்பட்டிருக்கும். மஜாவிலோ யோனி மழிக்கப்படவில்லை, சரும நிறத்தோடு இயைந்துபோகும் படியாகவும், அடத்தியற்றுமாக இளம் பழுப்பு நிற மென்ரோமங்கள் அழகுணர்ச்சியோடு தீட்டப்பட்டிருந்தன. ஆனால், அக்குள் பகுதி மழிக்கப்பட்டதாக இருக்கிறது. எனவே, இது திட்டமிட்ட செயல் எனப் புரிந்துகொள்ள முடியும். கவனக் குவிப்பும், பாலிச்சைத் தூண்டலும் கோயாவின் நோக்கமாக இருக்கலாம். முந்தைய அழகியல் கண்ணோட்டங்களுக்கு எதிரான மாற்றுக் கண்ணோட்டமாகவும் இருக்கலாம்.

இவ்வோவியம் அம்மண மஜா (Naked maja) என்றுதான் குறிப்பிடப்படுகிறதே அன்றி நிர்வாண மஜா (Nude Maja) என்று குறிப்பிடப்படுவதில்லை. அம்மணம் என்பது வெகுளிமையான குழந்தைகளின் ஆடையற்ற நிலையைச் சுட்டுவதற்கு மட்டுமே பொருந்தும். நிர்வாணம் என்பது பெரியவர்களின், அறிதலுடன் கூடிய ஆடையற்ற நிலை. இதில் வெகுளிமையைக் குறிக்கும் அம்மணம், மஜாவின் நிர்வாணத்துக்கு மாற்றுச் சொல்லாகப் பயன்படுத்தப்படுவதும், ஆனால் அதற்கு மாறாகவே அவ்வோவியம் பாலிச்சையைத் தன்னுணர்வாகக் கொண்டிருப்பதுமான முரண்பாடுகள் பற்றியும் நாம் சிந்திக்கலாம்.

அம்மண மஜா கூடுதல் பாலிச்சையானது (Sexuality) எனில் ஆடையணிந்த மஜா அதிகம் சிற்றின்பகரமானது (erotic). அம்மண மஜாவைப் பார்த்துவிட்டு இதைப் பார்ப்பது ஒப்பீட்டு அனுபவத்துக்கு வழி வகுக்கும். அந்த ஆடைகளுக்குள்ளான, நாம் முன்பு பார்த்திருக்கக்கூடிய நிர்வாணத்தை நினைவுகளில் கிளர்த்தும். அதே சமயம் நீங்கள் அம்மண மஜாவைப் பார்த்திருந்திராவிட்டாலும் கூட ஆடையணிந்த மஜாவில் கதகதப்பான சிற்றின்ப உணர்வைக் காணலாம்.

இம்ப்ரஷனிஸத்தின் முன்னோடியான எட்வர்ட் மானே (Edouard Manet)யின் பேரற்புதமானதும், உலகளவில் உள்ள செவ்வியல் உச்சபட்ச படைப்பு (Classic master piece)களில் ஒன்றாக தற்போது அங்கீகரிக்கப்படுவதுமான ஒலிம்பியா (Olympia) என்னும் 1863ம் வருடத்து ஓவியம் அம்மண மஜாவின் தாக்கத்தால் உருவானதே.

உலகெங்கும் காலந்தோறும் பெண்ணுடல் என்பது ஓவியர்கள் மற்றம் சிற்பிகளின் பேரார்வத்துக்குரிய கருப்பொருளாகவே இருந்து வருகிறது. வளைவு நெளிவுகளும், மேடு பள்ளங்களும், மென்மையும், எழிலும் கொண்ட பெண்ணுடலானது அழகின் ஆராதகர்களான ஓவிய, சிற்பக் கலைஞர்களைத் தணியாத வேட்கையுடன் கவர்வதில் வியப்பொன்று மில்லை. கருப்பு ஓவியங்கள் எனப்படும் பீதியூட்டுகிற குரூப ஓவியங்களில் தனித்த பேரெடுத்த கோயாவினுள் அழகின் ஆராதிப்பும் இருந்தது என்பதுதான் ஆச்சரியம். அல்லது இதன் மறுதலையாக, அழகின் ஆராதிப்பு கொண்டிருந்த கோயாவுக்குள் எப்படி இந்த குரூப வெளிப்பாடுகள் என்று வியக்க வேண்டியிருக்கும்.

அவரது உச்ச படைப்புகளான (Masterpiece) போர்டி யாக்ஸின் பால்காரி (The milkmaid of Bordeaux), டோனா இஸபெல்டி போர்ஸெல் (Dona Isabel de porcel), டான் மேனுவல் ஓசாரியோ டி மேன்ரிக் ஸுனிகா (Don Manuel Osorio de Manrigue Zuniga), மே இரண்டு (Dos de Mayo), குடை (The Parasol) போன்ற அழகு பொலியும் ஓவியங்களைப் பார்ப்பவர்களுக்கு வன்முறையும் குரூரங்களும் கோரங்களும் குரூபமும் கொண்ட அவரது மறுபக்க ஓவியங்கள் அதிர்ச்சியூட்டுவனவாகவும் இருக்கலாம்.

18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மேற்கத்திய ஓவியங்களில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த போக்கு புதுச் செவ்வியல் (New-classicism). இது ரோம் மற்றும் க்ரீஸில் உள்ள செவ்வியல் கலைகளின் தாக்கத்தினால் உருவானது. ஓவியம், சிற்பம் மற்றும் கட்டிக் கலைகள், இலக்கியம், இசை ஆகியவற்றில் கிரேக்க, லத்தீன் செவ்வியல் பாணியின் புத்தெழுச்சியை சாரமாகக் கொண்ட புதுச்செவ்வியல் காலகட்டத்தவர்தான் கோயாவும்.

1746 மார்ச் 30ம் தேதி வடக்கத்திய ஸ்பெயினில் அரகோன் மண்டலத்தில், ஸரகோஸாவுக்கு அருகிலுள்ள Fuendetodos என்னும் ஒரு தொலைதூர குக்கிராமத்தில் கோயா பிறந்தார்.

அவரது தந்தை தங்க மெருகிடும் கைவினைஞர். தனது இளம் வயதுகளை குக்கிராமத்தில் கழித்த கோயாவின் குடும்பம் பின்னர் ஸரகோஸா நகரத்துக்குக் குடிபெயர்ந்தது. அங்கிருந்த ஓவிய ஆசிரியர் ஜோஸ் லூஸன் (Jose Luzan) என்பவரது ஓவியக்கூடத்தில் 13 வயதில் பயிற்சி மாணவராக சேர்ந்தார். பின்பு தனது தனித்திறனால் மேட்ரிட் (Madrid) டில் அகாடெமிக் பயிற்சி பெற்றார். 1770ல் 24ம் வயதில் அதை உதறித்தள்ளி இத்தாலிக்குத் திரும்பிய அவர், ஸோப்ராடியல் அரண்மனையில் தனது முதல் முக்கிய ஒப்பந்தப் பணியாக ஆறு ஓவியங்களைச் செய்தார். ஏற்கனவே, எல் பிலர் (El Pillar) பேராலயத்தின் சுவர் ஓவியத்துக்கான போட்டியிலும் அவர் வெற்றிருந்தார்.

1773 ஜூலையில் ஜோஸெஃபா பாயேவு (Josefa Bayeu)வுடன் நடந்த திருமணம், அவளது ஓவிய சகோதரர்களான ஃப்ரான்சிஸ்கோ மற்றும் ரமோன் பாயேவுடனான தொடர்புகளுக்கு வழிவகுத்து அவரது ஓவியப் பணிகளுக்கு குறிப்பிடத்தக்க பயனளிப்பதாக அமைந்தது.

சரகோஸாவின் வெற்றிகரமான ஓவியராகத் திகழ்ந்த அவர் அரசரின் முதல் ஓவியரான மெங்°ஸின் அழைப்பில் ராயல் அலங்காரத் திரைச்சீலைத் தொழிற்சாலை (Royal Tapestry Factory)யில் ஃப்ரான்சிஸ்கோ பாயேவுவின் நேரடி கண்காணிப்பின் கீழ் பணி புரியலானார். இடைவிட்டு இடைவிட்டு இருபது ஆண்டு காலம் அங்கே பணிபுரிந்தார். பெரிய அளவில் எண்ணெய் ஓவியமாகத் தீட்டப்படும் அவரது ஓவியங்கள் பின்பு நெசவாளர்களால் கம்பளியில் துல்லியமாகப் பிரதியெடுக்கப்பட்டன. 28ம் வயதில் அவர் தனது ஆசிரியர் லூஸனைக் காட்டிலும் அதிக சம்பாத்தியம் கொண்டவராக ஆகியிருந்தார்.

கோயாவின் ஆற்றல் மிக்க ஓவியத்துவ ஆளுமை விரைவிலேயே அவரது சித்திரங்களில் சமகால ஸ்பானிய வாழ்வு மற்றும் தொன்று தொட்டு நிலவும் பழக்கங்களின் நவீனமுறுதல் குறித்த அவரது சொந்த தரிசனங்களோடு வெளிப்படலாயிற்று. அஸ்ட்டூரியஸ் இளவரசர் மற்றும் இளவரசிக்காக அவர் செய்த ஓவியங்கள் அரண்மனையை அலங்கரித்தன. புத்துணர்வு வீரியமும் யதார்த்தவியலும் கொண்ட கோயாவின் ஓவியங்கள் ஸ்பானிக் கலையின் ஊக்க மூட்டும் காவலர்களாக விளங்கிய இளவரசருக்கும், இளவரசிக்கும் சிறந்த உணர்வெழுச்சியைக் கிளர்த்துவதாக இருந்தன.

அரச குடும்பத்தினர் குளிர்காலத்தில் தங்கியிருக்கும் மாட்ரிட்டின் புறப்பகுதியில் உள்ள பேர்டோ அரண்மனையில் இளவரசியின் உணவுக் கூடத்தை அலங்கரிப்பதற்காக கோயா வரைந்த சித்திரங்களில் ஒன்றுதான் அவரது அருமையான ஓவியங்களில் ஒன்றான ‘குடை’ ஓவியம். நுண்ணிய அரை நிறமிகள் (half-tone), ப்ரகாசமான வண்ணம், மற்றும் ஆச்சாரமற்ற, மின்னாற்றல் கொண்ட தொகுப்பமைவு (Composition ஆகியவற்றுடன் கூடிய ஓவியம் அது.

1780ல் ஸ்பெயினுக்கும் இங்கிலாந்துக்குமிடையிலான போரினால் திரைச்சீலைத் தொழிற்சாலைப் பணியிலிருந்து கோயா விலக்கப்பட்டார். ஃப்ரான்சிஸ் பாயேவுவின் ஒத்தாசையினால் மேட்ரிட்டின் ராயல் அகாடமியில் அங்கத்தினரானார். அங்கிருப்பவர்களின் அனுமதியினால் மேன்மையான தொகுப்புகளைச் செய்யும் வழிவகை ஏற்பட்டு வெலாஸ்க்விஸ் (Velazquez)ன் ஓவியங்களை மறுஆக்கம் செய்தார். அந்தத் தருணத்தில்தான் (1778-1780) அவரது முதல் முக்கியமான செதுக்கோவியம் (Etching), குரல்வளையை நெறித்துக் கொல்லும் தண்டனைக்குரிய மனிதன்’ (The Garotted Man) செய்யப்பட்டது.

கோயாவின் தனித்த அடையாளங்களான ‘கருப்பு ஓவிய’ங்களின் துவக்கம் மேற்கூறிய எட்சிங்கிலிருந்தே துவங்குவதாகக் கொள்ளலாம். அதுவரையில் வழமையாக ஓவியர்கள் எடுத்துக் கொள்வது போன்ற கருப்பொருள்களையே எடுத்துக்கொண்டிருந்த கோயா, இதில் தான் வழமைக்கு மாறுபட்ட, துக்கமூட்டும் கருப்பொருளை முதல் முறையாக எடுத்துக் கொண்டிருக்கிறார். ஒருசிறு மரத்திண்டின் மீது அமர்ந்து தரையில் கால் நீட்டியிருக்கும் தண்டனைக் குரியவன், அத்திண்டோடு இணைந்த செங்குத்துக் கட்டையின் மீது சாய்ந்திருக்கிறான். மடியில் இருக்கும் கோர்த்த கைகளுக்குள் சிலுவை. அருகிலேயே தாங்கியின் மீது பெரிய மெழுகுவர்த்தி ஒளி வீசிக் கொண்டிருக்கிறது. கட்டைக்குப் பின்னால், சுவரில் இடப்பட்ட துளையிலிருந்து வந்திருக்கும் கயிற்றில் அவன் கழுத்து இறுக்கப்பட்டிருக்கிறான். கொல்லப்பட்டபோது அவன் துடிதுடித்து கைகால்களை உதறவில்லையா? மடி மீது கோர்த்த கைகளுக்குள் சிலுவையையும்விடாமல் பிடித்துக்கொண்டு அமைதி யாக, ஆடாமல், அசையாமல் பிரேதக்களை படிந்த அவனது முகத்தின் மீது அந்த மெழுகுவர்த்தி ஏன் இப்படி இரக்கமற்ற ஒளி வீசுகிறது?

சபலங்கள் (Caprices) எனத் தலைப்பிடப்பட்ட எண்பது செதுக்கோவியத் தொகுப்பைப் பின்னர் 1797-1799ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் கோயா செய்தார். சமூக, அரசியல் அங்கதங்களோடு கூடிய அப்படைப்புகள் அவரது கூரிய விமர்சனங்களுக்கும், நுண்ணிய தொழில்நுட்பத்திறனுக்கும், நேர்த்திமிகு கலை மேதைமைக்கும் சான்றுகள். அதிலிருந்து நான்கு ஓவியங்களை மட்டும் இப்போது காணலாம்.

1. அங்கே அவர்கள் பிய்த்தெடுக்கப்படுவதற்காகப் போகிறார்கள். (There they go plucked)

விபச்சார விடுதியொன்றில் இரு விபச்சாரிகள் தங்களின் இழிவான வாடிக்கையாளர்களை விரட்டியடிக்கும் காட்சி, கோயா தனது விமர்சனத்தை விரிவுபடுத்தி, குறியீட்டுத் தன்மையில் இதை சித்தரித் திருக்கிறார். விபச்சாரிகளின் கைகளில் நீண்ட ஒட்டடைக்கழி. ஒருத்தி அடிக்க ஓங்கிய நிலையில், இன்னொருத்தி குப்பையைப் போல தள்ளிவிடும் நிலையில் வாடிக்கையாளர்களின் உருமாற்றம்தான் wighlight. அவர்கள் மனித முகத்துடன் கூடிய, இறகு பிடுங்கப்பட்ட கோழிகளாக இருக்கிறார்கள். ஒருவர் பின் ஒருவராக இருவர் அறைக்குள் வெளியேறிக் கொண்டிருக்க, இன்னொருவர் திறந்த கதவின் நிலைப்படியிலிருந்து தாவிக் குதிக்கும் தறுவாயில் இறகு பிடுங்கப்பட்ட இறக்கைகளை விரித்திருக்கிறார்கள்.

பின்புலத்தில் உள்ள, கடுமையான முகபாவம் கொண்ட கிழட்டுப் பணிப்பெண்களுக்கு மேலே இறகு பிடுங்கப்படாத இரண்டு மனிதக் கோழிகள் தப்பித்துப் பறந்து கொண்டிருக்கின்றன. இங்கே இறகு பிடுங்கப்படுதல் என்பது வாடிக்கையாளர்களின் உடைமைகளைப் பறிப்பதற்குக் குறியீடாகிறது. அவர்களது வழுக்கைத் தலைகள் பால்வினை நோய்களுக்கான முன்அறிகுறி. போலவே, ஒடிந்து கட்டுப்போடப்பட்டிருக்கும் கால்கள் ஆண்மையின்மையை உருவகப்படுத்துகின்றன.

2. காற்றடிப்பு (Blow):

அச்சமூட்டும் இந்த தெளிவானவரைவு சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுடன் ஆண்கள் கொள்ளும் தகாத புணர்ச்சியை நீடித்த பயமூட்டும் துர்சொப்பனங்கள் போல வரைந்ததாகும். அரையாடை அணிந்த ஆண் சூனியக்காரக்கிழவன் நிர்வாணமாக்கப்பட்ட குழந்தை ஒன்றின் கை கால்களை சேர்த்துப் பிடித்துக்கொண்டு, ஆசன வாயிலிருந்து வெளியேறும் அபாண வாயுவினால் தணல் அடுப்புக்கு காற்று வீசச் செய்து கொண்டிருக்கிறான். முன்புலத்தில் உள்ள நிர்வாணக் கிழவனும், பின்புலத்து இருளில் முகம் மட்டும் துலங்கும், பிசாசுகள் போலக் காட்சியளிக்கும் இரு உருவங்களும் அதைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இச்சித்தரிப்பின் நடுவே உள்ள சிறு இடைவெளியின் மத்தியில் ஒரு கிழவன் சிறு குழந்தையின் ஆண்குறியை சும்பனம் செய்துகொண்டிருக்கிறான். குழந்தையின் முகமோ மற்ற உடல் பாகங்களோ காட்டப்படுவதில்லை. அதற்கு இடமும் இல்லை. தேவையும் இல்லை. இவர்களுக்கு மேலே இருளுக்குள் மங்கலான சித்தரிப்பில் ஒருவன் இரு சிசுக்களை கைக்கொன்றாக ஏந்தியிருக்கிறான். அதன் பின்னால் அரை அரூபத் தோற்றத்தில் ஒருவனது உருவம் கைகளை சிறகுகள் போல் விரித்து பறக்கும் பாவனையில், காமத் திளைப்பின் பரவசத்துக்கான உருவகிப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

3. இப்போது அவர்கள் நேர்த்தியாக அமர்ந்திருக்கிறார்கள் (Now they are sitting pretty):

நகைச்சுவை மிளிரும் இவ்வோவியம், தன் தோற்றம் பற்றிய கர்வம் கொண்டவர்களின் அறிவீனத்தை இயல்புக்கு மீறிய முறையில் நையாண்டி செய்வதாகும். புதுப்பாணி (Fashion)க்கு பலியான இரு இளம் பெண்கள் தங்களின் முட்டாள்தனத்தையும் கள்ளங்கபடமற்ற தன்மையையும் காட்சிப்படுத்தும் விதமாக தங்களின் பாவாடையை மிகவும் குட்டையாக, ஆனால் இடுப்பில் கட்டாமல் மேலுயர்த்தி, இடைவெளியை தலையில் முக்காடிட்டு அணிந்திருக்கிறார்கள். ஒருத்தி நின்ற படியும், ஒருத்தி அமர்ந்தபடியுமாக இருக்கும் அவர்கள் உள்ளாடைகள் ஏதும் அணிந்திராததால் முக்கால் தொடை வரையிலான அரை நிர்வாணம் நகைப்புக்கும் ஆபாசத்துக்கும் உரியதாகிறது.

4. Thou who canst not:

இரண்டு சாமான்ய மனிதர்கள் தங்களது முதுகில் கழுதைகளைச் சுமந்து திணறியபடி குனிந்து நிற்கும் இந்த ஓவியம் பிடிவாதமான மதியீனத்துக்குக் குறியீடாகவும், மேல்தட்டினரும் கிறிஸ்துவ மத குருமார் (Clerics)களும் மக்கள் மீது செலுத்துகிற ஆதிக்கத்தைச் சுட்டிக் காட்டுவதாகவும் உள்ளது. சராசரியர்களான அந்த மக்கள் மீது கழுதைகள் சேணமிட்டு அமர்ந்திருப்பது, தங்களின் தாங்கொணாத் துயரங்களை குருட்டுத் தனமாக ஏற்றுக்கொள்ளும் சமூக அடக்கிவைத்தலை விமர்சிப்பதாக அமைகிறது. குதிரைச் சவாரி செய்பவர்கள் அதை வேகமாக ஓடச் செய்வதற்காக தங்கள் காலணிகளின் பின் பகுதியில் பொருத்தியிருக்கும் குதிமுள் ஒரு கழுதையின் குளம்பில் கட்டப் பட்டிருப்பது இந்த விமர்சனத்தை இன்னும் கூர்மைப்படுத்துகிறது.