மனைவியும் மகளும் தூங்கிவிட்டதாக நினைத்து ரகசியமாகக் கிளம்புகிறான் ஸ்டாக்கர். விழித்த நிலையில் படுத்திருக்கும் மனைவியோ அவனைத் தடுக்கிறாள். அவன் திரும்பவும் சிறையிலடைக்கப்படுவான் எனவும் வருவதற்கு பல வருடங்கள் ஆகும் எனவும் அதுவரை தான் உயிரோடு இருக்கப் போவதில்லை என்றும் எச்சக்கிறாள். அவளை உதறிவிட்டு கிளம்புகிறான்.

முன்னேற்பாட்டின்படி ஒரு மதுவிடுதிக்கு வரும் விஞ்ஞானப் பேராசிரியரையும், எழுத்தாளரையும் (இவர்களின் சரியான பெயர்கள் குறிப்பிடப்படுவதில்லை) அழைத்துக்கொண்டு பிரதேசத்திற்கு வருகிறான் ஸ்டாக்கர். பிரதேசம் தடைசெய்யப்பட்டப் பகுதியாக இருக்கிறது. அதற்குள் செல்வதென்றால் பாதுகாப்பைக் கடந்துதான் போகவேண்டும். ஆபத்தான எல்லைப்பகுதியைக் கடந்து துப்பாக்கிக் குண்டுகள் துரத்த ஒரு சாகசப் பயணத்தை மூவரும் மேற்கொள்கிறார்கள்.

டீசலில் இயங்கும் ஒரு ரயில்வே டிராலியில் மூவரும் அந்த இடத்தைக் கடக்கிறார்கள். டிராலி பிரதேசத்திற்குள் நுழைகிறது. “பிரதேசம்’ (ZONE), முன்பு மனிதர்கள் வாழ்ந்திருந்த அது முற்றிலும் அழிந்து சிதிலமடைந்திருக்கிறது. அந்த நிலப்பகுதியின் எல்லா இடங்களிலும் இதற்கான அடையாளங்கள் சிதறிக்கிடக்கின்றன. சாய்ந்துபோன மின் கம்பங்களும், இடிந்து தரைமட்டமான வீடுகளும், உபயோகமற்ற அணைகட்டும், கைவிடப்பட்ட பீரங்கிகளும், துப்பாக்கிகளும், புத்தகங்களும், நாணயங்களும், மருந்து ஊசிகளும் இன்னும் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்படாத, விளக்குகள் எந்துகொண்டிருக்கும் அமானுஷ்யமான அறைகளும், ரகசியமான சுரங்கப் பாதைகளும் அவர்களை மிரட்சிகொள்ளச் செய்கின்றன.

துணியால் பிணைக்கப்பட்ட இரும்பு நட்டுகளை வீசி திசைகளையும், யார் முதலில் செல்வது என்பதையும் தீர்மானித்தபடி அழைத்துச் செல்கிறான் ஸ்டாக்கர். பிரதேசத்தில் பயணிப்பதற்கு குறுக்குப் பாதையை பயன்படுத்துவது ஆபத்தானது, தொலைவே என்றாலும் சுற்றிச் செல்வதுதான் பாதுகாப்பானது என்கிறான் ஸ்டாக்கர். குறுக்குப் பாதையைத் தேர்ந்தெடுத்துச் செல்ல முயலும் எழுத்தாளனோ அமானுஷ்யமான ஒரு குரலால் தடுத்து நிறுத்தப்படுகிறான்.

ஸ்டாக்கர் சொல்கிறான்: பிரதேசம் மிக சிக்கலான அமைப்பு கொண்டது. இது ஒரு பொறி. இங்கே உள்ளவர்களெல்லாம் இறந்து போனவர்கள். மனித சஞ்சாரமற்ற இந்த பிரதேசத்தில் என்ன நடக்குமென்று யாருக்கும் தெரியாது. ஆனால் அதன் இயக்கத்தை நம்மால் பார்க்கமுடியும். அது தொடர்ந்து இயங்கியபடியே உள்ளது. பழைய பொறிகள் அழிகின்றன. புதிய பொறிகள் உற்பத்தியாகின்றன. இங்கே பாதுகாப்பான பகுதி என்பது வழியற்றது. சலன புத்தியுள்ளவர்கள் பாதிவழியிலேயே திரும்பி விடுகின்றனர். சிலர் ‘அறை’யின் தீவிரம் தாங்காது இறக்கவும் செய்கின்றனர். எதுவேண்டுமானாலும் இங்கே நடக்கலாம், அது இந்த பிரதேசத்தைப் பொறுத்ததல்ல, நம்மைப் பொறுத்தது. இவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்பது தெரியாது, ஆனால் பரிதாபகரமானவர்கள். இவர்கள் பெரும்பாலும் எப்படி இங்கே நடந்துகொள்வதென்று தெயாததால் இறக்க நேரிட்டவர்கள்.

பார்க்கோபினி என்கிற முந்தைய ஸ்டாக்கர் வீசிய நெட் ஒன்று அணையில் தொங்குவதைக் கண்டு எச்சக்கை அடைகிறான் ஸ்டாக்கர். இப்போது பயணத்தைத் தொடர்வது ஆபத்தானது, தங்கிச் செல்வோம் என்கிறான். நதியின் கரையில் மூவரும் படுத்து ஓய்வெடுக்கிறார்கள். விஞ்ஞானத்தைப் பற்றியும் கலையைப் பற்றியும் ஒரு உரையாடலை தொடங்குகிறான் எழுத்தாளன்.

இந்த பயணத்தின் போது தங்களுக்கு அன்றாடத் தேவையாக இருக்கும் எல்லாவற்றையும் அவர்கள் இழக்கவேண்டியிருக்கிறது. எழுத்தாளன் தன்னுடன் கொண்டுவரும் மதுபாட்டிலை பிடுங்கி கீழே ஊற்றிவிடுகிறான் ஸ்டாக்கர். தற்காப்புக்காக கொண்டுவந்த கைத்துப்பாக்கியையும் கீழே போடவேண்டியிருக்கிறது எழுத்தாளனுக்கு. அங்குள்ள எதையும் பாழ்படுத்தக்கூடாது என்பதில் இருவர் மீதும் கடுமை காட்டுகிறான் அவன். அது அவர்களைப் பழிவாங்கிவிடும் என்று எச்சக்கிறான். இதனால் அவர்கள் இருவரும் எச்சலடைகிறார்கள். தங்களுடைய கௌரவம் இப்படிப் பறிபோவதைக் கண்டு சினம் கொள்கிறார்கள். ஸ்டாக்கர் அவர்களை மாணவர்களைப் போல நடத்துகிறான். இந்த பயணத்தின் ஊடே எழுத்தாளனும் பேராசிரியரும் தங்களைப் பற்றி விவாதித்தபடியே இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் இருவருமே பிரதேசத்தில் நிலவும் புதிர்களினாலும் தீவிரத்தன்மையாலும் அதிர்ந்துபோகிறார்கள்.

எழுத்தாளனுக்கும் இங்கே வருவதற்கு ஒரு நோக்கமிருக்கிறது. அற்புதங்கள் எதுவுமற்ற அலுப்பூட்டும் வாழ்விலிருந்து விடுபடுவது முதல்நோக்கம். மேலும் எழுதுவதற்கான தூண்டுதலைப் பெறுவது. விஞ்ஞானியோ தனது நோக்கத்தை வெளிப்படுத்துவதில்லை. ஆனால் பின்னால் அவன் நிகழ்த்தும் தொலைபேசி உரையாடல் மூலம் அதை வெளிப்படுத்திவிடுகிறான்.

பல உயிர்களை பலி கொண்டதாகக் கூறப்படும் பீதியூட்டும் சிமெண்ட் குழாயின் வழியே பயணத்தை மேற்கொள்ளும் எழுத்தாளனோ, மணல் குவியல்கள் நிறைந்துள்ள ஒரு அறையை அடைகிறான். அவனைத் தொடர்ந்து மற்ற இருவரும் அங்கு வந்து சேர்கிறார்கள். அந்த விஸ்தீரனமான அறையில் இருக்கும் மணல் குவியல்கள் ஒரு பாலைவனத்தையும், மணல் குவியல்களுக்கு நடுவில் உள்ள கிணறு அணுகுண்டு பசோதிக்கப்பட்ட இடத்தையும் நமக்கு ஞாபகமூட்டுகின்றன.

மிக சோர்ந்த நிலையில் காணப்படும் எழுத்தாளன் விஞ்ஞானப் பரிசோதனைகள் எல்லாமே சிலரின் முட்டாள்தனத்தின் வெளிப்பாடு என்று பரிகசிக்கிறான். அவன் கேட்கிறான், “உங்களுடைய அறிவால் நல்லது எதையாவது செய்யமுடியுமா? யார் இதற்காக குற்ற உணர்வு அடையப் போகிறார்கள்?'' மேலும் அவன் சொல்கிறான், எனக்கு சுய நினைவில்லை, நான் அதிர்ச்சியடைந்திருக்கிறேன். சில வேசைமகன்கள் என்னை விமர்சிக்கும் போது புண்படுகிறேன். சிலர் என் எழுத்தை ‘ஆஹா’ என்று புகழும்போதும் புண்படுகிறேன். எனது இதயத்தையும் ஆன்மாவையும் இந்த வாசகர்கள் விழுங்கிக்கொண்டிருக்கிறார்கள்,

பத்திரிகையாசியர்களும் விமர்சகர்களும் ‘இன்னும் கொடு, இன்னும் கொடு’ என்று நச்சரிக்கிறார்கள். எழுத்தையே வெறுக்கும் நான் எந்த இழவை எழுதுவது? நான் யாருக்கும் வேண்டியதில்லை. நான் இறந்துவிட்டால் இரண்டு நாள் கழித்து வேறு ஒருவனுடைய எழுத்தை இவர்கள் விழுங்கத் தொடங்கிவிடுவார்கள். நான் அவர்களை மாற்ற நினைக்கிறேன். அவர்களோ என்னை மாற்றுகிறார்கள். அவர்களுடைய பிம்பத்தை என் மேல் ஏற்றிப் பார்க்கிறார்கள். அவர்களுக்கு எதுவுமே தேவையில்லை. எதையாவது விழுங்கவேண்டும், அவ்வளவுதான்.''

அங்குள்ள தொலைபேசி ஒன்று உயிர்ப்புடன் உள்ளதை அறியும் விஞ்ஞானி அதன் வழியே தன் சக விஞ்ஞானி ஒருவனுடன் தொடர்புகொண்டு பேசுகிறான்.

“நீங்கள் ஒளித்துவைத்திருந்த பழமையான அந்த நான்காவது கட்டடத்தை நான் கண்டுபிடித்துவிட்டேன்.’‘

“உடனே நான் பாதுகாப்புப் படையினருக்கு சொல்லப்போகிறேன்'' எச்சக்கிறது பதில் குரல்.

“சொல்லிக்கொள், என்னைக் காட்டிக்கொடு. எனது சக விஞ்ஞானிகளை எனக்கு எதிராக மாற்று. எனக்கு கவலை இல்லை. காலம் கடந்துவிட்டது. இப்போது அதன் மேல் நான் கல்லை எறியப்போகிறேன்.''

“ஒரு விஞ்ஞானியாக உன்னால் கடைசியாக செய்ய முடிந்தது இதுதானா?''

“நல்லது, உனக்கு சந்தோஷம்தானே?''

“இதனால் உன்னால் என்ன சாதித்துவிடமுடியுமென்று நினைக்கிறாய்?''

“மீண்டும் என்னைத் தாக்க நினைக்கிறாயா நீ? என்னுடைய வாழ்நாள் முழுவதும் நான் பயந்துகொண்டிருந்தேன். உன்னைப் பார்த்துக்கூட பயந்தேன். இப்போது எனக்கு அந்த பயம் இல்லை. என்னால் உறுதியாக சொல்லமுடியும்.''

“கடவுளே! இப்போது கூட உன்னால் சிறந்த மனிதனாக மாறமுடியாது. இருபது ஆண்டுகளுக்கு முன்னால் நான் உன்னுடைய மனைவியோடு படுத்துவிட்டேன் என்பதற்காக என்னுடைய வாழ்க்கையையே நீ நரகமாக்கினாய். இப்போது உன்னைப் போலவே என்னையும் சந்தோஷமாக இரு என்கிறாய். நீ எதை விரும்புகிறாயோ அதைச் செய். என்னை ஒழித்து விடப்போவதாக நினைக்காதே. சிறைச்சாலையை விட மோசமான ஒன்றை நீ விரும்புகிறாய். உன்னையே நீ மன்னித்துக்கொள்ளாதவரை இதுதான் நடக்கும். அந்த சிறைச்சாலையில் நீ தண்டிக்கப்படுவதை ஏற்கனவே நான் பார்த்துவிட்டேன்.''

இந்த சாபத்தை எதிர்முனையிலிருந்து கேட்டதும் போனைத் துண்டித்துவிடுகிறார் பேராசிரியர்.

அவர் தனது சகபயணிகளிடம் கேட்கிறார், “இந்த அறையை எல்லோரும் நம்பத்தொடங்கிவிட்டால் என்ன ஆகும்? எல்லோரும் இங்குதானே ஓடி வருவார்கள்? ஆசையடங்காத மன்னர்கள், புகழ்பெற்ற புலனாய்வாளர்கள், தன்னார்வலர்கள்... பணத்திற்காகவோ, தூண்டுதலுக்காகவோ இல்லை, இந்த உலகத்தை மாற்றுவதற்காக.''

ஸ்டாக்கர் சொல்கிறான், “நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை, அப்படிப்பட்ட ஆட்களை நான் அழைத்துக்கொண்டு வருவதில்லை.’‘

“இந்த உலகத்தில் நீ எதைப் புரிந்துகொண்டாய்? இங்கே நீ மட்டுமே ஸ்டாக்கர் இல்லை. வேறு சிலரும் இருக்கிறார்கள். உங்களால் தேவையில்லாத குற்றங்கள் பெருகிவிட்டன. தற்கொலைப் படைத் தாக்குதலைப்போல, கொள்ளைக்காரர்கள் அரசாங்கத்தில் பங்கெடுப்பதைப் போல. இவர்கள்தான் உங்களுடைய வாடிக்கையாளர்களா? இல்லை லேசர் அலைகளும் மோசமான கிருமிகளுமா? இவைகளெல்லாம் பாதுகாப்பானவைகள் தானா?''

எழுத்தாளன் பேராசிரியரைப் பார்த்துச் சொல்கிறான், “நீ மனிதாபிமானத்தையும் வெற்றிகொள்ள நினைக்கிறாய். எல்லாமே இந்த மனிதாபிமானத்தை நோக்கித்தான். உங்களால் எதையுமே பெறமுடியாது. வேண்டுமானால் நோபல்பரிசு வாங்கலாம். உன் கனவு வேறு, நீ பெறப்போவது வேறு.''

இது தொடர்பான ஒரு கதை இந்த படத்தின் பல இடங்களில் விவாதத்திற்குள்ளாகிறது. ஸ்டாக்கரின் ஆசிரியனாக இருந்த பார்கோபினி என்ற ஒருவனைப்பற்றியது. பிரதேசத்திற்குப் பயணிகளை அழைத்துவரும் அவன் இறந்துபோன சகோதரனை மீண்டும் உயிர்ப்பிக்கும் விருப்பத்துடன் பிரதேசத்திற்குச் செல்கிறான். அங்கே சென்று வந்தால் ஆழ்மனதின் விருப்பம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. பிரதேசத்திலிருந்து திரும்பி வந்து பார்க்கும் அவன் தான் ஒரு பெரிய பணக்காரனாகியிருப்பதை அறிகிறான். அவனுடைய உண்மையான ஆசை தனது சகோதரன் உயிருடன் வருவது இல்லை, தான் ஒரு பணக்காரனாவதே என்பதை அறிந்துகொண்ட அவன் அவமானத்தால் தற்கொலை செய்துகொள்கிறான்.

அந்தப் புதிரான அறையின் (ROOM) வாசலில் மூவரும் நிற்கிறார்கள்.

ஸ்டாக்கர் எச்சரிக்கிறான், “இதுதான் தலைவாயில். உங்களுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான கணங்கள். உங்களுடைய ஆழ்மனதின் விருப்பம் இங்குதான் நிறைவேறப் போகிறது. உங்களுடைய உன்னதமான விருப்பமாக அது இருக்கவேண்டும். உங்களுடைய துயரத்திலிருந்து பிறந்திருக்கவேண்டும். உங்களுடைய இதுவரையிலான வாழ்க்கையை பற்றி சிந்தித்துப் பாருங்கள். இறந்த காலத்தைப் பற்றி சிந்தித்தாலே போதும் ஒருவன் இரக்கமுள்ளவனாக மாறிவிடுவான். இதையெல்லாவற்றையும் விட முக்கியமானது நீங்கள் நம்பவேண்டும். ரொம்ப முக்கியமானது இதுதான். இப்போது நீங்கள் போகலாம். யார் முதலில் போகப்போகிறீர்கள்?''

இருவரையும் கேள்வியுடன் பார்க்கிறான். எழுத்தாளனிடம் கேட்கிறான், “நீங்கள் போகிறீர்களா?”

“நான் போகவில்லை'' என்கிறான் அவன் அச்சத்துடன்.

“சற்று சிரமம்தான். இருந்தாலும் உங்களால் போக முடியும்’ என்கிறான் ஸ்டாக்கர்.

“போக முடியும்தான், ஆனால் சந்தேகம் இருக்கிறது. என்னுடைய இறந்த காலத்தை நான் யோசிக்கும் வேளையில் நான் இரக்கமுள்ளவனாக மாறிவிட்டால் எல்லாமே எவ்வளவு அவமானகரமானதாக மாறிவிடும்.’‘

பேராசிரியரைப் பார்த்துக் கேட்கிறான், “நீங்கள் போகிறீர்களா?''

பேராசிரியர் தன்னுடைய பையிலிருந்து ஒரு வெடிகுண்டை எடுத்து அதன் பாகங்களை இணைக்கிறார்.

“இந்த இடம் யாருக்கும் சந்தோஷத்தைத் தரப்போவதில்லை'' என்ற அவர் அந்த இடத்தை நிர்மூலமாக்கப்போவதாக சொல்கிறார். “இந்த இடம் தவறானவர்களின் கைக்குப் போய்விடக்கூடாது'' என்கிறார். அதிர்ந்து போன ஸ்டாக்கர், “மனிதர்களுக்கு இறுதியாக நம்பிக்கை கொள்ள இந்த இடம் மட்டுமே எஞ்சியுள்ளது. அதைத் தகர்த்தெறிய அனுமதிக்கமுடியாது'' என்கிறான். வெடிகுண்டை அவடமிருந்து பிடுங்க முயல்கிறான். இந்த சண்டையில் ஸ்டாக்கர் எழுத்தாளனால் தாக்கப்படுகிறான்.

“மனிதர்கள் எல்லாம் இந்த உலகத்தை விட்டு வெளியேற நேர்ந்தால், அவர்கள் வருவதற்கு இந்த ஒரு இடம்தான் உள்ளது. அவர்களுக்கு வேறு புகலிடமில்லை. இதை அழிக்க நினைக்கிறீர்களே'' என்று கோபம்கொள்கிறான் ஸ்டாக்கர். ஸ்டாக்கர் ஒரு ஏமாற்றுப் பேர்வழி என்றும் பணத்திற்காக இதுபோன்ற வேலையைச் செய்வதாகவும் அவன்மேல் குற்றம் சாட்டுகிறான் எழுத்தாளன். ‘அறை' க்குள் செல்லாமலேயே பிரதேசத்திலிருந்து வீடு திரும்புகிறார்கள் மூவரும்.

“இனி யாரையும் பிரதேசத்திற்கு அழைத்துச் செல்லப்போவதில்லை'' என்கிறான் ஸ்டாக்கர் தன் மனைவியிடம். “தங்களை விஞ்ஞானி என்றும் எழுத்தாளன் என்றும் சொல்லிக்கொள்ளும் அவர்கள் எதையும் நம்புவதில்லை. தங்களுடைய நலனைப் பற்றி மட்டுமே எப்போதும் சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். தங்களை எவ்வளவுக்கு விற்பது என்பதுதான் அவர்களுடைய சிந்தனை. இவர்கள் மட்டுமல்ல யாருக்குமே நம்பிக்கையில்லை. யாரை நான் அழைத்துச் செல்வது? அந்த ‘அறை’ யாருக்கும் தேவைப்படவில்லை. என்னுடைய முயற்சி வீணானது'' என்று அழுகிறான்.

இறுதிக் காட்சியில் ஸ்டாக்கரின் காதுகேளாத வாய்பேசமுடியாத கால் ஊனமுற்ற மகள் ("மன்கி' என அழைக்கப்படும் இவளை மற்றவர்கள் "பிரதேசத்தால் தண்டிக்கப்பட்டவள்' என்கிறார்கள்) புனித நூல் ஒன்றை வாசித்துவிட்டு உணவு மேஜை மேல் தலை சாய்த்தபடி மதுகோப்பைகளை பார்க்கிறாள். அவை நகர்கின்றன. மெல்ல நகர்ந்த ஒரு கோப்பை மேஜை மேலிருந்து கீழே விழுகிறது. இந்த காட்சியில் பிரகாசமான ஒளியில் அவள் ஒரு தெய்வீகத் தோற்றத்தைப் பெறுகிறாள். ஒரு அமானுஷ்யமான உணர்வொன்று நம்மைப் பற்றிக்கொள்கிறது. ஸ்டாக்கர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் ‘உண்மையான நம்பிக்கை' என்ற உணர்வு நம்மை ஆட்கொண்டுவிடுகிறது.

பிரதேசத்தைப் பற்றி பேராசிரியர் எழுத்தாளனுக்கு சொல்கிறார், “இருபது ஆண்டுகளுக்கு முன் எரிநட்சத்திரம் ஒன்று இந்த இடத்தைத் தாக்கி அழித்தது. தேடிப்பார்த்ததற்கு அந்தக் கல் கிடைக்கவே இல்லை. இங்கே வருபவர்களும் காணாமல் போனார்கள். எனவே கம்பி வேலி அமைத்து இந்த இடத்துக்கு வருவதை தடைசெய்தார்கள். இதைப்பற்றி நிறைய கட்டுக்கதைகள் உலாவுகின்றன. இந்த இடத்திற்கு வந்தால் விரும்பியது கிடைக்கும் என்கிறார்கள். நம்மை மகிழ்ச்சியானவர்களாக மாற்றிவிடும் என்கிறார்கள்.’

‘சேக்பைஸ்' படத்திலும் தார்க்கோவஸ்கி இதே போன்ற ஒரு விஷயத்தைத்தான் பேச விரும்புகிறார். மனிதனின் அறிவு அவனுக்கு துன்பங்களை கொண்டுவந்து சேர்க்கும் போது, அவன் கண்டுபிடித்த தொழில்நுட்பம் அவனைக் காப்பாற்றாதபோது அவன் எதை நம்புவது? மறுநாள் அணுகுண்டு வெடிப்பில் பேரழிவு நிகழப்போவதை அறிந்துகொள்ளும் அலெக்ஸாண்டர் தான் ஏதாவது செய்து அந்தப் பேரழிவிலிருந்து ஐரோப்பாவைக் காப்பாற்ற நினைக்கிறார். மின்சாரம், தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்படுகின்றன. மனைவி துக்கம் தாளாமல் அழுகிறாள்.

கடவுள் நம்பிக்கை இல்லாத அலெக்ஸாண்டர் இன்று போலவே நாளையும் இந்த உலகத்தை மீட்டுக்கொடுத்தால் தன் உடைமைகளையெல்லாம் இழக்கத் தயாராக இருப்பதாகக் கடவுளிடம் பிரார்த்திக்கிறார். ஓட்டோ என்ற தபால்காரன் அறிவுரையின்படி வேலைக்காரியான மயாவுடன் படுக்கைக்குச் செல்கிறார். ‘இறுதி நம்பிக்கை’ இதுதான் இந்த இரண்டு படங்களின் பிரதான உணர்த்துதலாக இருக்கிறது. இது பெரும் துயரத்தின் மலர்.

ஒவ்வொரு படைப்பாளியும் தனக்கே உரித்தான இது போன்றதொரு பிரதேசத்தைத்தான் நிர்மாணிக்கிறான் என்று தோன்றுகிறது. அவன் புறத்தே உள்ளவைகளின் சிதிலங்களை எடுத்து வேறு வகைமாதிரி ஒன்றை உருவாக்கிக் காட்டுகிறான். ஒரு நாடகம் போல. அது இதுவரையில்லாத ஒரு தர்க்கத்தில் செயல்படுகிறது. புதிர்களை உருவாக்குகிறது. வாழ்வின் மனோபாவங்களை பகடி செய்கிறது. தத்துவ நெருக்கடிகளை தருகிறது. ஒரு சிறந்த படைப்பு நிர்பந்திப்பதெல்லாம் தனக்குள்ளான பரிசீலனைதான். அவற்றை அர்த்தப்படுத்த விரும்புவன் தன்னையே அர்த்தப்படுத்திப் பார்க்கிறான். எழுத்தாளன் மறை முகமாக ஒரு ஸ்டாக்கரின் பாத்திரமேற்று தனது படைப்புக்குள் வழிகாட்டியைப் போல செயல்படுகிறான். தன்னலமற்ற ஒரு செயல்பாடு இது. தான் உருவாக்கும் பிரதேசத்தில் தானும் ஒரு பயணியாகச் சிக்கிக்கொண்டுவிடுகிறான். எதையோ தேடி தன்னை அனுகும் பயணிகளை அவன் ஏமாற்ற விரும்புவதில்லை. அவனுடைய நேர்மையின் ஒளியைப் பின்பற்றி அவர்கள் செல்லவேண்டியிருக்கிறது.

ஏமாற்றுப் பேர்வழி என்று குற்றம் சுமத்தும் எழுத்தாளனிடம் ஸ்டாக்கர் சொல்கிறான், ஏதோ ஒன்றை நோக்கமாக வைத்துக்கொண்டு இந்த பிரதேசத்திற்குள் என்னால்கூட நுழைய முடியாது. எந்த நல்லதையும் இந்த உலகத்துக்கு நான் செய்யமுடிந்ததில்லை. என்னுடைய மனைவிக்குக்கூட எதையும் தரமுடியவில்லை. எனக்கு நண்பர்களும் இல்லை. ஆனால் என்னை என்னிடமிருந்து பிரித்துவிடமுடியாது. இந்த கம்பிவேலிகளுக்கு பின்னால் உள்ளவர்கள் எல்லாவற்றையும் என்னிடமிருந்து எடுத்துக்கொண்டுவிட்டார்கள். என்னுடைய எல்லா செல்வங்களும் இங்குதான் இருக்கின்றன. இந்தப் பிரதேசத்திற்குள்தான் இருக்கின்றன. என்னுடைய சந்தோஷம், என்னுடைய சுதந்திரம், என்னுடைய மரியாதை எல்லாம். என்னைப் போலவே துணிந்த, துன்பப்பட்ட மனிதர்களை இங்கே அழைத்துக்கொண்டு வருகிறேன். வாழ்வதற்கான ஆதாரமில்லாதவர்களை அழைத்துக்கொண்டு வருகிறேன். அவர்களுக்கு உதவுகிறேன். என்னால்தான் அவர்களுக்கு உதவமுடியும். இதற்குமேல் எனக்கு எதுவும் தேவையில்லை.

ஒரு கலைஞன் தனது பொறுப்புகளை இப்படித்தான் உணர்கிறான் என்று சொல்வது மிகையான கூற்றாக இருக்காது. தனது படைப்பை கடமையாக அவன் செய்கிறான். மிஞ்சுவது துயரம்தான் என்றாலும் அதற்காக அவன் கவலைப்படுவதில்லை. புகழுக்காகவும், பணத்திற்காகவும், அந்தஸ்திற்காகவும் படைக்கப்படும் எந்த படைப்பும் சந்தேகத்திற்குயவையே. அதன் நோக்கம் இதனால் பாழ்படுகிறது. உண்மையில் இது ஒரு மோசடி. இந்த வழிகாட்டி தனது கவர்ச்சியின் மூலம் பலரையும் ஏமாற்றி தவறான இலக்குகளை நோக்கி அழைத்துச் செல்கிறான். அவன் உருவாக்கும் கனவு வேறு ஒரு பகட்டான கலைப் படைப்பின் போலி வடிவமே தவிர வேறில்லை.

சராசரியான வாழ்வின் நோக்கங்களை தாண்டிய, வெற்றிகரமான பாதை என்று அவர்கள் நம்பக்கூடியவற்றை ஒதுக்கிய ஒரு கலைஞன் இந்த மனித சமூகத்தில் தனக்கான வாழ்நிலைகளை எப்படி அமைத்துக்கொள்கிறான்? அரூப ஒவியத்தைப் போலத்தான் எனத் தோன்றுகிறது. ஒரு புதிர் போல அது சகமனிதர்களால் எதிர்கொள்ளப்படுகிறது. அவனுடைய உலகத்தை புந்துகொள்ள கடினமாகிவிடுகிறது. அவனைச் சுற்றி வேலி ஒன்று உருவாகத் தொடங்குகிறது. அவனுடைய அழைப்பை புரிந்துகொள்ளாமல் மற்றவர்கள் விலகிச் சென்றுகொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு அவனுடைய உதவி தேவைப்படுவதில்லை. அவன் உருவாக்கிய பிரதேசத்திற்குள் செல்ல நினைப்பவர்கள் மட்டும் அவனைத் தேடிவருகிறார்கள். மற்றவர்கள் அவனை குற்றவாளியாகப் பார்க்கவும் தயங்குவதில்லை. அதனால்தான் ஸ்டாக்கர் சிறையிலடைக்கப்படுகிறான். குடும்பத்திற்கு பயனற்றவனாகத் தோன்றுகிறான். மற்றவர்கள் அவனை கேலி செய்கிறார்கள்.

வேறு விதமாக அர்த்தம் கொள்வோமேயானால் இந்தப் ‘பிரதேசம்’ நமக்கு வெளியே இல்லை. நம் ஒவ்வொருவருக்குள்ளும் உருவாகியிருப்பவைதான். இது நமக்குள் பரந்து விரிந்துகொண்டிருக்கிறது. இங்கு வழிகாட்டியும் (ஸ்டாக்கர்), வழி தவறுபவரும் நாமேதான். இது ஒரு ஆபத்தான பயணம். பயணத்துக்கான நிர்ப்பந்தம் வெறுமையுறும் மனதிற்கு ஏற்படுகிறது. இந்தப் பயணத்தின் போதுதான் நமது தோல்விக்கான காரணம் புகிறது. நமது ஆழ்மனதின் ஆசை என்ன என்பதை உணர்ந்துகொள்கிறோம். கலைஞனும், ஆன்மீகவாதியும் இந்த பயணத்தைதான் மேற்கொள்கிறார்கள். ரமணர் இதைத்தான் தனது தத்துவமாக்கினார். ‘நான் யார்?' இதுதான் பிரதேசத்துக்குள் நுழைய அவர் அளித்த சாவி.

"மேலான கலைகள் எல்லாமே முற்றான உண்மையின் படிமங்கள்' என்கிறான் இதில் வரும் எழுத்தாளன். தார்க்கோவஸ்கியின் படங்கள் எல்லாமே இப்படிப்பட்ட படிமங்களால் ஆனதுதான். அவருடைய படங்களில் வரும் நீண்ட உரையாடல்கள் முடிவற்ற அர்த்தங்களை உணர்த்தியபடியே செல்கின்றன. அது மனசாட்சியின் குரலாக இருக்கிறது. சகமனிதர்களுடன் உரையாடுவதுபோல இல்லாமல் தங்களுக்குள் உரையாடிக்கொள்வதுபோல இருக்கிறது.

மனிதர்கள் பேசாதபோது கவிதைகள் பேசுகின்றன.

பலவீனம்தான் போற்றுதலுக்குயது
பலமென்பது ஒன்றுமே இல்லை
பலமும் கடினத்தன்மையும் சாவின் துணைவர்கள்
செத்துக் காய்ந்த மரம்தான் கடினமாகிறது
வறண்டு போகிறது...

தார்க்கோவஸ்கியின் பாத்திரங்கள் வாழ்வின் துயரங்களால் நிலைகுலைந்து போகின்றனர். நிலை தடுமாறுகிறார்கள். அதிகாரமும், வன்முறைகளும் தன்னுடைய கட்டுப்பாட்டை மீறிய ஒன்றாக இருப்பதால் தனிமையையும் பலவீனத்தையும் ஆழமாக உணர்கிறார்கள். எதுவும் செய்யமுடியாத தன் நிலையிலிருந்த அவர்களுக்குத் தேவைப்படுவது “இறுதி நம்பிக்கை'’தான். ‘ஆந்திரே ரூப்ளே’ படத்தில் ரூப்ளே புகழ்பெற்ற ஒரு ஒவியன். மாஸ்கோவில் கட்டப்பட்டுள்ள தேவாலயத்தில் ஓவியம் வரைவதற்காக பணிக்கப்படுகிறான். இதற்காக அவனது குழுவினர் நீண்ட பயணத்தை மேற்கொள்கிறார்கள். இந்தப் பயணத்தின் போது மனிதர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு இன்னல்களைக் காண நேர்கிறது.

அவை அவனது மனதை ரணப்படுத்திவிடுகின்றன. மாஸ்கோவைச் சென்றடையும் அவன் வெள்ளையடிக்கப்பட்டுள்ள தேவாலயத்தின் சுவர்களில் சாணியை அள்ளிப் பூசுகிறான். பின்னர் தேவாலயத்திற்கு மணி தயாரிக்கும் ஒரு சிறுவனால் நம்பிக்கை பெறுகிறான். ஒரு கலைஞனால் செய்ய முடிந்ததெல்லாம் முழு ஈடுபாட்டுடன் படைப்புச் செயலில் ஈடுபடுவதுதான் என்ற முடிவுக்கு வருகிறான். தனது உணர்வுகளை ஓவியங்களாக அந்த சுவர்களில் வரைகிறான். அதுவரை கறுப்பு வெள்ளையில் நகர்ந்த படம் வண்ணத்திற்கு மாறுகிறது. இந்த இறுதிக் காட்சியைத் தவிர படம் முழுவதும் கறுப்பு வெள்ளையில்தான் நகர்கின்றன. இதே போல ஸ்டாக்கர் படத்திலும் டிராலி பிரதேசத்திற்குள் நுழைந்ததும் படம் வண்ணம் பெறுகிறது. பிரதேசத்தைவிட்டு திரும்பியதும் கறுப்பு வெள்ளைக்கு மாறிக்கொண்டுவிடுகிறது. இந்த உத்தி வேறு வேறு உலகத்தை வித்தியாசப்படுத்தவது மட்டுமல்லாது ஒரு நம்பிக்கையையும் உணர்த்தவே செய்கிறது.

எழுத்தாளன், பேராசிரியடம் சொல்கிறான், ஒருவனுக்குத் துயரமும், சந்தேகமும் ஏற்படும்போதுதான் எழுதுகிறான். தன்னையும், மற்றவர்களையும் அவன் நிரூபிக்கவேண்டியிருக்கிறது. இந்த நிலையில் அந்த ‘அறை’ க்குள் செல்லும் நான் கடவுளின் அருளால் முற்றும் உணர்ந்த பெரிய மேதையாகி விட்டேன் என்று வைத்துக்கொள்ளுங்கள்; பிறகு எதற்காக எழுதவேண்டும்?

“உங்களுடைய தொழில் நுட்பங்களும் கண்டுபிடிப்புகளும் எதற்காகப் பயன்படுகின்றன? குறைவாக வேலை செய்து அதிக உணவை பெறுவதற்குத்தானே? இவையெல்லாமே செயற்கையான ஒரு வாழ்க்கையைக் நிர்மாணிக்கின்றன. ஆனால் மனிதாபிமானத்தைப் பெறவேண்டுமானால் கலைப்படைப்பில் ஈடுபடுவதால்தான் முடியும். இதுதான் சுயநலம் இல்லாத செயல்.''

ரயிலின் சப்தம் ஒரு மந்திர ஒலியைப் போல எழுந்து பரவுகிறது இந்தப் படத்தில். ஆரம்பக் காட்சியில் ஸ்டாக்கரின் வீடே இந்த ஒலியால் அதிர்கிறது. ஸ்டூலின் மேல் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி டம்ளர் நகரத் தொடங்குகிறது. பிரதேசத்திலிருந்து அவர்கள் திரும்பும் இறுதிக் கட்சியில் இசையுடன் கலந்து ரயிலின் சப்தம் ஒலிக்க இறந்து மிதக்கும் மீன்களின் மீது கறுத்த எண்ணெய் கலந்து பரவி மூடுகிறது. படத்தின் இறுதியில் "மன்கி'’ என்றழைக்கப்படும் ஸ்டாக்கரின் மகள் தனது பார்வையால் மேஜையின் மேல் உள்ள டம்ளர்களை நகர்த்திய பிறகு ரயிலின் இசை தொடங்குகிறது. இதனோடு சேர்ந்து தேவாலய இசை ஒன்றும் கலந்து அந்தக் காட்சிக்கு ஒரு தெய்வீகத் தன்மையை அளிக்கிறது.

கைவிடப்பட்ட ரயில் நிலையத்திலிருந்து தொடங்கும் டிராலி பயணத்தின் போது அவர்களுடன் நாமும் பயணிப்பது போல உணர்கிறோம். டிராலியின் சப்தத்துடன் ஒலிக்கும் மாய இசை நம்மை வினோத உணர்வுக்கு இட்டுச்செல்கிறது. போக இருக்கும் இடம்பற்றிய புதிரை அது உணர்த்துவதாக இருக்கிறது. அது ஒரு நீண்ட பயணம் போன்ற கால மயக்கத்தை ஏற்படுத்துகிறது.

துரிதமான காட்சிகள் என்பது தார்க்கோவஸ்கியின் படங்களில் பார்ப்பது அது. அதே போல பதற்றமான அசைவுகளும் குறைவு. ஒரு நிதானமான கதை சொல்லலை அவர் மேற்கொள்கிறார். திரையில் பாத்திரங்கள் தோன்றுவதும் அசைவதும் மறைவதும் ஒரு நாடகம்போல நிகழ்கின்றன. இதுவே காட்சிக்கு ஒரு வினோதத் தன்மையைக் கொடுத்துவிடுகிறது. பாத்திரங்கள் யாரும் மிகையான உணர்ச்சி பாவங்களை மேற்கொள்வதில்லை. அவர்களுடைய முகங்களிலேயே உணர்ச்சிகள் உறைந்து காணப்படுகின்றன. ஒவ்வொரு பாத்திரத்தின் மிக அருகாமையிலும், முதுகுக்குப்பின்னாலும் நாம் இருக்கிறோம். பாத்திரங்கள் திரும்பி நம்மோடு உணர்வுகொள்கின்றன.

விஸ்தீரணமான நிலவெளிகளைக்கூட (Landscape) அவர் நாடகவெளி போலவே பயன்படுத்துகிறார். சேக்பைஸ் படத்தில் இடம்பெறும் அந்த இறுதிக் காட்சி முழுக்கவும் இந்த நாடகத்தன்மையை நாம் உணர்கிறோம். நோஸ்டால்ஜியாவில் மிக பிரமிக்கத்தக்க அளவு இந்த விஸ்தீரண நிலவெளி நாடகக் காட்சிகளை நாம் பார்க்கலாம். இவருடைய கதை சொல்லல் முறையே நாடகப் பாங்கானது என்றாலும் பொருந்தும். எதார்த்தமோ, மிகை எதார்த்தமோ அவருடைய படங்களில் அதாகவே இடம்பெறுகிறது. ஏதோ ஒரு நோக்கத்திற்காகவும், உணர்த்தலுக்காகவும் வடிவமைக்கப்பட்ட காட்சிகளின் இணைப்புகளாகவே அவருடைய படத்தை நாம் காணமுடியும். தார்க்கோவஸ்கியின் படங்கள் புரிவது சற்று கடினம் என்றாலும் அது உணர்த்த நினைப்பதெல்லாம் வாழ்வின் துயரங்களைத்தான். இந்த துயரங்களை கவனிப்பவர்கள், அக்கறை கொள்பவர்கள் புரட்சிக்காரர்களோ, கலகக்காரர்களோ, சீர்த்திருத்தவாதிகளோ இல்லை; எளிய மனிதர்கள், கலைஞர்கள், அறிவாளிகள். இவர்கள் எல்லோருமே தனியர்கள்.

தார்க்கோவஸ்கியின் கலை பாமரர்களைப் பற்றிப் பேசினாலும் அது பாமரர்களுக்கானதில்லை. மேம்போக்கான சிந்தனை கொண்ட சராசரி மனிதர்களுக்கானதும் இல்லை. தன்னை சுற்றியுள்ள உலகத்தை ஆழ்ந்து கவனிக்கிற, சகல உயிர்கள் மீதும், வரலாற்றின் மீதும் அக்கறை கொண்டவர்களுக்கானது. உண்மையும், ஆன்மீகமும் பிரகாசிக்கும் மனம்தான் தார்க்கோவஸ்கியின் கலையை அதே பற்றுதலோடு தரிசிக்க முடியும்.

பகட்டான அறிவாளிகளால் போலியான ஒரு அங்கீகாரத்தை இவருடைய கலைக்கு வழங்க முடியுமே தவிர அந்த தரிசனங்களை தன்னுள் கரைத்துக்கொள்ள முடியாது. இந்தப் படத்தில் இடம்பெறும் காட்சிகள், அதைப் பார்க்கும் எல்லோரையும் சற்றே உறைய வைத்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. மிரட்சிகொள்ளவும் அச்சுறுத்தவும்கூட செய்யலாம். ஒரு திரில்லர் படத்துக்கான அத்தனை அம்சங்களும் இதில் உள்ளன. அனால் இதெல்லாம் எதற்காக? என்ன நடந்துகொண்டிருக்கிறது? எங்கே போகிறார்கள்? எதைத்தேடிப் போகிறார்கள்? எதைக் கொண்டு வந்தார்கள்? இதுபோன்ற கேள்விகளுக்கு விடை தெரிந்துகொள்வது சற்று சிரமம்தான்.

கலை உணர்த்தக்கூடிய அர்த்தங்களை தொடர்ந்து தேடும் ஒருவனுக்கு ஆந்த்ரே தார்க்கோவஸ்கி ஒரு பொக்கிஷம். எத்தனை முறை வேண்டுமானாலும் அவருடைய படத்தை நாம் திரும்பத் திரும்பப் பார்க்கமுடியும். ஒவ்வொரு முறையும் அது நம்மை வாழ்வின் உண்மைகள் படிந்துள்ள வேறு வேறு பிரதேசங்களுக்கு அழைத்துச் செல்லக்கூடியது.

- ஜீ.முருகன்