அன்று நயினார் நோன்பு எல்லாச் சந்தியிலும், சித்திரபுத்திர நயினார் கதை வாசிப்பார்கள். ஒரு பாவமும் அறியாத அகலிகை கல்லாகி விட்டதால் மேலுலகம் கீழுலகம் ஏழேழு உலகத்திலும் எல்லா ஜீவராசிகளும் மரம் மட்டைகள் உட்பட மலடாகப் போனதை கதை வாசிப்பவர் விவக்கும் போது பெண்கள் கூட்டத்தில் “சும்மயா, பத்தினி பாவம் பொல்லததுல்லா'' என்று நிமிர்ந்து உட்கார்வார்கள். நயினார் பிறப்பைப் பயபக்தியோடு கேட்பவர்கள் அமராவதி கதை வாசிக்கும் போது உருகி மெய்சிலிர்த்து விடுவார்கள். பாவம் செய்பவர்களெல்லாம் நரகத்துக்குத் தான் போவார்கள். எல்லோரும் செய்த பாவங்களுக்கு சித்ரபுத்ர நயினார் சயான கணக்கு வைத்திருப்பார். அவரை மட்டும் ஏமாற்றவே முடியாது. செய்த பாவத்துக்குத் தக்கபடி எமதர்மன் தண்டனை கொடுப்பார்.

செக்கில் போட்டு ஆட்டுவார்கள், கொதிக்கும் எண்ணெயில் தூக்கிப் போடுவார்கள், வெளவாலைப் போல் தலை கீழாய்த் தொங்க விடுவார்கள், கைகால்களைச் சதைப்பார்கள்; நாகங்கள் சீறிக் கொண்டு கடிக்க வரும்; இன்னும் என்னென்னவோ செய்வார்கள். யாரும் சாக மாட்டார்கள். ஆனால் வலியும் வேதனையும் நிரந்தரமாகும். கதை கேட்பவர் சிலரது கண்களில் ஆர்வம் மின்னும். அவர்களை வதைப்பவர்கள் தண்டனை அனுபவிப்பதாகக் கற்பனை செய்து கொள்வார்கள் போலும், வேறு சிலர் பேயறைந்தது போலிருப்பார்கள். “இதெல்லாம் சும்மாப் பொய்'', என்ற பாவனையில் சிலர் அசட்டையாக அமர்ந்திருப்பார்கள். கதை வாசிப்பவர் மட்டும் சித்ரபுத்திரனுக்கு ரொம்பவும் நெருக்கமானவர் போலக் காட்டிக் கொள்வார். சித்திர புத்திர நயினார் கதை வாசிப்பதால் அவர் கொஞ்சம் விட்டுக் கொடுத்து தண்டனையிலிருந்து காப்பாற்றுவார் என்ற நினைப்பு இருக்கும் போல.

அமராவதி கதையும் முடிந்த பிறகு தீபாராதனை காட்டுவார்கள். எல்லோருக்கும் ஒரு சின்ன எள்ளுருண்டையும் எலுமிச்சம் பழப்பானகமும் கொடுப்பார்கள். சுக்கும் ஏலமும் அதில் மணக்கும், கதைக்காக இல்லாவிட்டாலும் பானகத்துக்காகவாவது சந்திக்குச் செல்வார்கள். கடையின் ஒற்றைப் பலகையைக் குறுக்காகச் சார்த்திவிட்டு கீழத் தெரு சந்திக்குப் புறப்படும் போது தான் “கோலப்பன் பாலிடால் அடிச்சிட்டானாம்'' என்று என்னிடம் சொன்னார்கள்.

கீழத்தெருவிலிருந்து கொசக்குடிக்குச் செல்லும் முடுக்கில் கோலப்பன் வீடு இருந்தது. கோலப்பன் என்னோடுதான் எட்டாம் வகுப்பு வரை படித்தான். அரைப்பரீட்சையோடு பள்ளிக்கு வராமல் நின்றுவிட்டவன். அவனுக்கு நான்கு அண்ணன்கள் ஒரு தங்கை. கடைக்குட்டி தங்கச்சியைத் தேரேகால் புதூரில் கட்டிக் கொடுத்திக்கிறார்கள். நான்கு அண்ணன்களுக்கும் கலியாணமாகி தனித்தனிக் குடும்பமாகி விட்டனர். மூத்தவன் பாட்டத்துக்கு நிலம் பயிட்டுக் கொண்டிருக்கிறான். இரண்டாவது அண்ணனுக்கு “நெல்லளவு'' தான் வேலை. நல்ல கூலி கிடைக்கும். அவன் நெல் அம்பாரத்தில் மரக்காலைப் பாய்ச்சிக் கோனான் என்றால் ஒவ்வொரு மரக்காலிலும் உழக்கு நெல்லாவது அதிகம் கொண்டு வந்து விடுவான் என்பார்கள். மூன்றாவது அண்ணன் வள்ளியூர்ப்பிள்ளை வீட்டில் மாதம் முக்கால் கோட்டை நெல்லுக்கு சாப்பு வேலை. கோலப்பனுக்கு நேர் மூத்தவன் பெரிய வீட்டு மாடுகளை மேய்ப்பதும் உழவு நாட்களில் உழுவதுமாக இருந்தான். அப்பா "பத்துக்காவல்' பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அவருடைய காவலில் மேலப் பத்துக்குள் எந்த மாடும் நுழைந்து விடமுடியாது. நெல் அறுப்பு நேரத்தில் யாரும் கசக்கிச் சென்று விடமுடியாது. மாடாக இருந்தாலும் மனிதனாக இருந்தாலும் அவரது நெற்றிமுட்டுக் கம்பு தான் பேசும். குடும்பத்தோடு என்ன கசப்போ தெரியவில்லை. யாரோடும் ஒட்டும் உறவுமில்லாமல் அபின் உருண்டையும் டீயுமாக காலங் கழித்துக் கொண்டிருக்கிறார். குளத்தங்கரைச் சுடலை மாடன் கோயில் முகப்பில் தான் உறக்கம். கோயில் கொடையின் போது அவர் தான் தீச்சட்டியேந்தி சாமியாடுவார்.

கோலப்பன் வீட்டு முடுக்கில் ஏகக்கூட்டம் கூடிவிட்டிருந்தது. எல்லோரும் கும்பல் கும்பலாக நின்று கொண்டிருந்தார்கள். உட்பக்கமாக வீடு தாழ்ப்பாள் இட்டிருந்தது. அம்மா மகள் வீட்டுக்குப் போயிருந்தாள், இரண்டாவது அண்ணன் தான் சட்டையில்லாமல் மேல் துண்டை தலையில் கட்டிக் கொண்டு அங்கும் இங்குமாக உலத்திக் கொண்டிருந்தான். அவன் மனைவியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக்கொண்டிருந்தது. வீட்டுக்குள்ளிருந்து வாந்தியெடுக்கும் சத்தம் இடையிடையே வந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு வீட்டு வாசலிலும் பெண்கள் நின்று கொண்டிருந்தார்கள். எல்லோருமே வீட்டுக் கதவை உடைத்து கோலப்பனை வெளியே கொண்டு வர விரும்பினார்கள். இரண்டாவது அண்ணன் தீர்மானமாகச் சொல்லி விட்டான், “யாரும் கதவைத் திறக்கக்கூடாது; சாகட்டும்; இது மாதிப் பயலுகளெல்லாம் சாகத்தான் வேணும்.''

அவனிடம் யாரும் பேச்சு கொடுக்க முடியவில்லை. மற்ற மூன்று அண்ணன்களும் வரட்டுமெனக் காத்திருந்தார்கள். அவர்களும் வந்தார்கள். இரண்டாவது அண்ணன் அவர்களிடம் என்ன சொன்னானோ தெரியவில்லை, அவர்களும் “சவத்துப்பய, சாகட்டும்'' என்றார்கள். கோலப்பனின் கூட்டாளிகள் கட்டமணி புழுவினி, தாணு, செல்லம் நாலு பேரும் அய்யப்பண்ணனிடம் வந்து நின்றார்கள். “கதவைத் திறக்கச் சொல்லுண்ணே, நீ சொன்னாக் கேப்பாங்க'' என்று கேவிக்கேவி அழுதார்கள். “அவங்க அண்ணன் தம்பி விவகாரம்; அவங்க வீடு; நாம என்னடேய் செய்ய முடியும்?'' கையைப் பிசைந்தான் அவன்.

மௌனமே உரத்து ஒலித்துக் கொண்டிருந்தது. “கோலப்பன் கொஞ்சம் சல்லிப்பயதான், இருந்தாலும் சாகதப் பாத்துகிட்டிருக்க முடியுமா?'' அவனும் அவன் கூட்டாளிகளும் உழவு நேரத்தில் உழவு, மற்ற நேரத்தில் மலைக்கு போய் தழை தறிப்பது, உரம் தூவுவது, பூச்சி மருந்து அடிப்பது, நடவு நேரங்களில் பெண்களைச் சேர்த்துக்கொண்டு நடவு வேலை செய்வது, அறுப்பு காலங்களில் ஆட்களை கூட்டிக்கொண்டு போய் அறுப்பது என அந்தந்த பருவத்துக்கேற்ற வேலைகளை செய்துகொண்டிருந்தார்கள். கோலப்பன் "நல்ல வேலக்காரன்' என்று பெரிய ரெடுத்திருந்தான். "குடி'தான் அவன் பெயரைக் கெடுத்தது. குடித்துவிட்டான் என்றால் ஆளே மாறிப் போய்விடுவான். தெரு நாறிப் போகும். போறவர்ற எல்லோரையும் வம்புக்கு இழுப்பான். கிண்டலும், கேலியும் நக்கலும் எல்லோரையும் வேடிக்கைப் பார்க்க வைக்கும். யாராவது எதிர்த்துப் பேசினால் அடிக்கவும் செய்வான். அவனிடம் வாய்கொடுத்தால் மீள முடியாது. இரண்டொரு பெண்களோடு சினேகம் இருந்தது. ஒரு சிலர் அவனை ரகசியமாகச் சாராயம் வாங்கிவரப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

வகுப்பு தோழன் என்பதாலோ என்னமோ என்னிடம் மட்டும் எப்போதும் அன்பாகவும் மயாதையோடும் நடந்துகொள்வான். என்னிடம் பேசும்போது தலையில் கட்டியுள்ள துண்டை எடுத்துத் தோளில் போட்டுக்கொள்வான். என்தோளில் கையைப் போட்டுக்கொண்டுதான் பேசுவான். “உமக்கு நல்ல வேலை கிடைக்கும்வேய்'' என்று அவன் சொல்லும் போது ஆறுதலாக இருக்கும். அவனுடனான எனது சிநேகிதம் அம்மாவுக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை. “படிச்ச பிள்ளை, உன் மாதிரி பிள்ளைகளோட சிநேகம்னா சரிதான்; அவனெல்லாம் என்ன பைய...'' என்பார்கள்.

ஒரு நாள் வீட்டுக்கு வந்து என் புதிய சட்டை ஒன்றை எடுத்து மாட்டிக்கொண்டு போனவன் திருப்பித் தரவேயில்லை. அதன் பிறகு அவனும் போட்டு நான் பார்க்கவில்லை. வேறு யாருக்காவது கொடுத்துவிட்டிருப்பான். நயினார் நோன்பு அன்று காலை பத்துப் பதினோரு மணிவாக்கில் கடைக்கு வந்தான். கொஞ்சம் நேரம் என்னவோ போல பெட்டி மீது உட்கார்ந்திருந்தான். பேச்சில் சுரத்து குறைந்த மாதிரி இருந்தது. வீட்டில் அம்மா இல்லாததால் இட்லி ரசவடை வாங்கிக்கொண்டு போவதாகச் சொன்னான். மடியில் வைத்திருந்த பிராந்திப் பாட்டிலையும் காட்டினான். வீட்டில் வைத்து குடிக்கப் போவதாகச் சொன்னான். பிராந்தியோடு பாலிடாலையும் சேர்த்துக் குடித்திருப்பான் போல.

“இப்பமும் ஒண்ணும் ஆகாது. கதவை உடைச்சி வெளியே எடுத்து கோபால் பிள்ளை ஆஸ்பத்திக்கோ, ஜெயகரன் ஆஸ்பத்திக்கோ கொண்டு போயிட்டாப் போதும். குடலுக்குள்ள இருக்கிறதயெல்லாம் வெளியே கொண்டாந்துடுவான். எத்தனை கேசு பிழைச்சிருக்கு. அவன் அண்ணனுக இல்லே குறுக்க நிக்கானுக.'' மொத்த ஜனங்களின் நினைப்பும் ஒன்றாக இருந்தது.

“இப்ப மட்டும் அவன் அம்மா இருந்தால் அவளே தோள்ளத் தூக்கிக்கிட்டாவது போயி பிழைக்க வச்சிருவாடேய். சைக்கிள் எடுத்துக்கிட்டு யாராவது போய்க் கூட்டியாருங்கடேய்'' என்று பழனியண்ணன் சொன்னதும் கட்டமணி வாடகை சைக்கிள் எடுத்துக்கொண்டு ஓடினான்.

“அவன் என்ன வேணுமானாலும் செய்திருக்கட்டும் டேய். அதையெல்லாம் சித்ரபுத்ர நயினார் பார்த்துக்கிடுவார். நீங்க அவனைக் கொல்லப் பாக்கேளா?'' என்று சீட்டுக்கரம் சுடலையாண்டித் தாத்தா சொன்னதற்கு, “உம்ம வேல மயிரப் பார்த்துக்கிட்டுப் போம்வேய்'' என்றார்கள் அண்ணன்கள். யாருடைய பேச்சுக்கும் அவர்கள் மசியவில்லை. “இப்படிப்பட்ட பய எல்லாம் உயிரோடு இருக்கக் கூடாதுண்ணே, சாகட்டும்'' என்று ஒருவரோடு ஒருவர் பேசி ஒரு தடையை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். வேறு யாரையும் கதவைத் திறக்கக் கூடாது என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்கள்.

கட்டமணி அவன் அம்மாவை அழைத்துக்கொண்டு வந்துவிட்டான். அவள் கூப்பாடு போட்டுக்கொண்டு வாசலுக்கு வரும் போதே எதோ கடவுளே வந்துவிட்டது போல தையத்துடன் செல்லம் ஓட்டைப் பிரித்து உள்ளே இறங்கி தாழ்ப்பாளைத் திறந்தான். எல்லோரும் உள்ளே நுழைந்து பார்த்தார்கள். கோலப்பன் இறந்துகிடந்தான். அவனை சவமாகத்தான் தூக்கிக்கொண்டு வெளியே வந்தார்கள்.