தமிழில்: கூத்தலிங்கம் 

துள்ளிச் செல்லும் நீர்

சொட்டுச் சொட்டாக
ஆசீர்வாதங்கள்
நல் நிவேதனக் கொடைகள்
ஓடும் நீர்
பிரார்த்தனைகள் சொட்டுச் சொட்டாக

வாங்கவும் விற்கவும் கூடிய பொருளா
நதியின் ஆன்மா?

நீர்த்துளியை நேசிப்பவரே
நீர்த்துளியின் காவலரே
நாம் சம்மதிக்கலாமா
ஒரு நதி இறந்து போக...?

புனித நதி

நதியிலே
நமக்காக ஓடியது ஒரு புனிதநதி

நாம்
அந்த நதியின் மாந்தர்களாக இருந்தோம்
அந்த நதிக்கரையில் பிறந்தவர்களுக்கு
இயற்கையாக அது
தொழுவதற்குகந்த தெய்வமாக இருந்தது
நமது வாழ்தல் மற்றும் இருத்தலின்
முக்கிய குவியமாக இருந்தது மேலும் அது

நமது நம்பிக்கைகளும் இதிகாசங்களும்
அந்த நதியுடன் தழுவிக் கலந்து பின்னி இருந்தன
நமது கனவெங்கும்
பரவித் தவழ்ந்தது அந்தத் தூய நதி
நமது தீய சொப்பனங்கள்
அதன் அழகிய கரைகளை
அறுத்து உடைக்க
நமது நிலம் வெள்ளம் சூழ்ந்தது.
நாம் வான்தொடும் நகரத்தை
கட்டி உயர்த்தினோம்
நமது நதி இறந்தது

நாம் நகரத்தின் மாந்தர்களாக ஆனோம்.
கூளங்களாலும் கழிவுகளாலும் மூச்சுத்திணறிய
அந்த நதியின்
மந்தமும் மரணமும் துர்வாடையும்
நம்மை அச்சுறுத்தியது
இப்படியாக அந்த இறந்த நதி அடக்கம் செய்யப்பட்டது
கடைசியாக

நகரத்தின் மாந்தர்கள் நாம்
நமது கால்களுக்கு கீழே
புதைபட்டு கிடக்கிறது
நாமிழந்த ஒரு புனித நதி

கனவில் நெளியும் நீலப்பிரவாகம்

மலைகளிலிருந்து துள்ளித்தாவி வரும் நீர்
உங்களது பள்ளத்தாக்குகளில்
நகரும் நதியாக தவழ்ந்து போகிறது
உங்களது கனவுகளிலும்
விழிப்பின் சாட்சியிலும்
பிறப்பிலும் இறப்பிலும்
அந்த நதி வாழ்கிறது
மலைகளுக்கும் பெருங்கடல்களுக்கும்
அப்பால் வெகு தொலைவிலும்
கடந்த காலத்திலும்
நிகழ்காலத்திலும் கூட...
ஓ மனிதனே!
நீ கண்டது உண்டா
கனவு நேரத்தின் நீல நிறங்களை?
என் உள்ளே வந்து
உன்னை தூயதாக்கிக் கொள்ள முடியுமா
மறுபடியும்?
உனது உள் ஆழத்தில்
நான் தவழ்ந்து நகர்வதை
அறிந்து உணர முடியுமா உன்னால்?