ஏழ்கடலும் மலையும் சஞ்சரித்து தேடாது
பச்சையை தரித்து
பவழவாய் இமைக்கும் கண்ணோடு
தன்னெதிரே அலையும்
கிளிசுமந்த மாந்த்ரீகன் உயிர்பற்ற
குட்டி இளவரசி
நிற்கத்தடுமாறி மடமண்டியிட்டு
சப்பாணி போல் கால்தசை தேய
தரைதொடும் மலராய் சிறுகையூன்றி
விரியும் சிறகாய் காற்றில் மறுகை விரைய
தவழ்பவள் கைகளில் பிடிபடும் விந்தை உயிரை
தரைமேல் அடித்து கசக்கி அழுத்த
கொக்கியன்ன அலகு பிளந்து
மென்பஞ்சு நாவினை துருத்தி
கட்டளை மொழியில் பிதற்றும் கிள்ளை
வலிகண்ட பறவையாய் மாந்த்ரீகன் துடிக்க
விரிந்த விழிகளோடு கெக்கலிக்கும் இளவரசி
மீண்டும் அழுந்த மறுபடி துடிக்க
சங்கிலி கண்ணியாய் உயிர்சுருள் அதிர்ந்தடங்க
பால்பற்கள் தெரிய பலமாகச் சிரிக்கிறாள்
ஆனந்த பூவுதிரும் புன்னகையோடு
குட்டி இளவரசியை குளிப்பாட்ட
செந்தூக்காய் தாய்கொண்டு செல்கிறாள்
மூக்குப்பொடிக்கான நமைச்சலில்
கிழட்டு மாந்த்ரீகன் உயிர்த்தெழுந்து
மாடிப்படிகளில் மறைய
உளறியபடி உலா வருகிறது
பேட்டரியில் இயங்கும் பொம்மைக்கிளி