நமது அரசியல்வாதிகளும் அரசுகளும் ஒழுக்கக் காவலர்களாக மாறி வருவது அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரத்தில் பாரம்பரியமாக நடந்து வந்த ‘பார்’ நடனங்களை மாநில அரசு தடை செய்துள்ளது. அவசரச் சட்டத்தில் கவர்னர் கையெழுத்து போடாததால் சட்டமன்றத் தொடர் தொடங்குவது வரை நடனம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அந்தப் பரிதாபத்திற்குரிய நடனப்பெண்கள் பங்களா தேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களால் “தேசப் பாதுகாப்பிற்கு’’ ஆபத்து எனவும் ஒழுக்கக் காவலர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். படீல் நடனப் பெண்கள் தம்மைத் தாக்கிவிடுவார்கள் எனக் காரணம் காட்டி எப்போதும் பெண் போலீஸ்கள் புடைசூழத் திரிகிறார். உயிருக்குப் பயந்த நடனப் பெண்கள் மகாராஷ்டிரத்தை விட்டு மற்ற மாநிலங்களுக்கு ஓடிக்கொண்டிருப்பதாகச் செய்திகள் வருகின்றன.

இதற்கிடையில் எஸ்.என்.டி.டி. (SNDT) பல்கலைக் கழகத்தின் ‘பெண்கள் ஆய்வு மையம்’ நடத்திய ஆய்வு ஒன்றின்படி நடனப் பெண்கள் எல்லோருமே பங்களாதேசிகள் என்பது மறுக்கப்பட்டுள்ளது. இவர்களில் 20 சதம் பேர் மும்பை வாசிகள். பெரும்பாலானோர் மகாராஷ்டிரத்தைச் சுற்றியுள்ள பழங்குடியினர் என்கிறது அவ் ஆய்வு (டெக்கான் கிரானிக்ல் ஜூன் 14, 2005).

இதற்கிடையில் ஒழுக்கவாதிகள் “ஸ்வீட்டியா? சாவித்திரியா? யார் வேண்டும் உங்களுக்கு?’’ எனத் துண்டுப் பிரசுரங்களை வீடுதோறும் வழங்கி வருகின்றனர். சாவித்திரி மாதிரி மனைவி வேண்டும் என விரும்பும் மத்திய தர வர்க்கத்திடமும் பழமைவாதிகளிடமும் ஆர்.ஆர்.படீலின் முயற்சிக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகக் கேள்வி. கலகலத்துப் போயிருக்கும் சிவசேனாவிடமிருந்து ஒழுக்க போலீஸ் சீருடையை தேசியவாத காங்கிரஸ் கைப்பற்றுவது அதன் நோக்கம். இதன் மூலம் சிவசேனையின் ஆதரவுத் தொகுதியைக் கைப்பற்ற அது முயற்சிக்கிறது. பிற மராத்திய சத்ரப்புகளைப் போல அதிகம் பின்புலமில்லாத படீல் நடனப் பெண்களைப் பலி கொடுத்துத் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளப் பார்க்கிறார்.

இதற்கிடையில் மும்பையில் சுனில்மோர் என்கிற போலீஸ்காரன் ஒரு பெண்ணைப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கியது தொடர்பான பிரச்சினையில் சிவசேனாவின் ‘சாம்னா’ இதழ் உணர்ச்சியைத் தூண்டும் வகையில் பெண்கள் ‘ஸ்கர்ட்’ முதலிய ஆடைகளை அணிந்தால் இதுதான் கதி என எழுதியது குறிப்பிடத்தக்கது. இதையொட்டி மும்பைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் விஜய் கோல் (57) தனது வளாகத்தில் குட்டைப் பாவாடைகளுக்குத் தடை விதித்துள்ளார். குட்டைப் பாவாடைக்கு வெளியே தெரியும் வழுவழுப்பான கால்கள் உணர்ச்சியைத் தூண்டுமாம். கவனத்தை ஈர்க்குமாம்.

பாலியல் உணர்வு அழகிய கால்களால்தான் தூண்டப்பட வேண்டுமென்பதில்லை. முழுப்பாவாடைக்குள் நிழலாக அசையும் கால்கள் கூட ஒருவரது நரம்புகளை முறுக்கேற்றலாம். பேசிக்கொண்டிருக்கும்போது காட்டும் உடலசைவுகள், கண்களின் சாய்வு, உதடுகளின் சுழிப்பு இவையெல்லாம் கூட உடல் வெப்பநிலையைச் சில டிகிரிகள் உயர்த்தலாம். இதற்கெல்லாம் என்ன செய்யப்போகிறார் துணைவேந்தர்? நமது பாரம்பரியப் புடவையினூடாகக் கண்களை ஈர்க்கும் மெல்லிய (சிலரது ரசனையில் குண்டான) இடைகளும் கூட சிலரைச் சூடேற்றலாம். புடவைகள் தடை செய்யப்படுமா? அழகிய பாதங்களின் நிழற்படங்களைச் சேகரிப்பவர் ஒருவர் பற்றி பத்திரிகையில் படித்தேன். இனி பெண்கள் எல்லோரும் முழங்கால் வரை மறைக்கும் ஷூக்களை அணிய வேண்டும் என ஆணையிடுவார்களா?

மும்பைக்காரருக்கு நான் ஒன்றும் சளைத்தவனல்ல என்கிறார் நமது அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிதாய் பொறுப்பேற்றுள்ள துணைவேந்தர் விஸ்வநாதன். பொறியியற் கல்லூரி முதல்வர்கள், செயலாளர்கள் எல்லோரையும் கூட்டி, “கலாச்சார நிகழ்ச்சிகள் என்ற பெயரில் கல்லூரி வளாகத்திற்குள் சினிமா கலாச்சாரத்தை அனுமதித்து விடாதீர்கள்’’ என்று கூறியுள்ளார். “சினிமா சீரழிவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது’’ என்றும் முத்துதிர்த்துள்ளார் (இந்து, ஜூலை 19, 2005).

தமிழ்ப் பாதுகாப்புக் காவலர் மருத்துவர் ராமதாஸ் கலாச்சாரக் காவலராகவும் மாறி வருகிறார். இந்த ஆண்டு காதலர் தினத்தின் போது சென்னையில் வாழ்த்து அட்டைக் கடைகளை அவரது கட்சியினர் தாக்கியுள்ளனர். ராமதாஸின் கவனம் இப்போது குடிப்பழக்கம் பற்றித் திரும்பியுள்ளது. “தமிழக அரசு குடி அடிமைகளை உற்பத்தி செய்கிறது’’ (டெக்கான் கிரானிக்ல், ஜூலை 9, 2005) என்று சாடியுள்ளார். தமிழின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான விஞ்ஞானி சுஜாதாவின் அய்யங்கார்கள் ஒண்ட இடமின்றிக் குடித்துவிட்டுப் பூங்காக்களில் படுத்திருக்கும் தாழ்ந்த சாதியினரைக் கொன்று குவிக்கின்றனர். (ஷங்கர்களின் துணையுடன்).

மருத்துவர் மகன் சின்ன அய்யா அன்புமணி ராமதாஸ் அக்டோபர் 2 முதல் இந்திய சினிமாக்களில் புகை பிடிக்கும் காட்சியைத் தடை செய்வது உறுதி என்கிறார். சினிமா பார்க்கும் இளைஞர்கள் மத்தியில் அவர்களது ஹீரோக்களைப் பார்த்து சிகரெட் பழக்கம் வந்துவிடும் என்பது சின்னவரின் வாதம். நேரு, லோகியா, பிரணாப் முகர்ஜி, முஃப்டி முஹம்மத் சயித், ஜஸ்வந்த் சிங், ஏ.பி. பரதன், சீதாராம் யெச்சூரி எல்லோரும் கூட சிகரெட் பிடிப்பவர்கள் தான். அவர்களுக்கும் ரசிகர்கள் உண்டு. அவர்கள் கெட்டுப் போக வாய்ப்புண்டு. அரசியல்வாதிகள் சிகரெட் பிடிக்கக் கூடாது என அன்புமணி ஒரு சட்டம் கொண்டுவரலாம். சண்டை மற்றும் கலவரக் காட்சிகள் வேண்டாமென பாதுகாப்பு அமைச்சரும், கள்ள மார்க்கெட் இந்திய சினிமாவின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது.

அன்புமணி வெளியிட்டுள்ள (மே 31) புகைக்காட்சித் தடை ஆணை அபத்தங்கள் நிறைந்தது. இதன்படி செய்தி வெளியிடும் உரிமைகள் கூடப் பத்திரிகைகளுக்குப் பறிக்கப்படுகின்றன. சிகரெட் விளம்பரமுள்ள டி - சர்ட் அணிந்துள்ள ஒரு ஆட்டக்காரரின் கிரிக்கெட் காட்சி கூடச் சட்டபடி குற்றமானதே. சிகரெட் பழக்கமுள்ள சத்யஜித் ராய் பற்றி நீங்கள் ஒரு ஆவணப் படம் தயாரிக்க முடியாது. ஏன் புற்றுநோயைத் தோற்றுவிக்கும் காரணிகள் பற்றிய ஒரு செய்திப் படத்தில் புகை பிடித்தலைச் சேர்க்க முடியாது. எல்லாவற்றிற்கும் மேலாகப் படைப்பாளிகளின் படைப்புத்திறனில் தலையிடும் பாசிச முயற்சி இது.

புகை உடல் நலனைக் கெடுக்கும் என்பதில் நமக்கும் சந்தேகமில்லை. புகைப்பழக்கம் ஒருவரது சராசரி ஆயுளை 4.5 ஆண்டுகள் குறைப்பதாக எங்கோ படித்திருக்கிறேன். கார் ஓட்டுவதால் ஏற்படும் ‘ஸ்ட்ரெஸ்’, விவாகரத்து செய்கிறவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், மாநகர வாழ்க்கை முறை இவையெல்லாம் கூட ரத்த அழுத்தத்தை அதிகரிக்கின்றன. ஆயுளைக் குறைக்கின்றன. சின்ன அய்யா இவற்றையும் கவனத்தில் கொள்ளலாம்.

உடல் எடை கூடுதல் (Obesity) ஒருவரின் ஆயுளைச் சராசரியாக 7.5 ஆண்டுகள் குறைக்கிறது என்பது ஆய்வு முடிவு. எனவே பலகாரங்கள், விருந்துகள், அசைவ உணவுகள் ஆகியவற்றைக் காட்சிப்படுத்துவதையும் தடை செய்யலாம். புகையை விட எடை கூடுதல் ஆபத்தானதாயிற்றே. புகை பசியைக் குறைக்கும் எனப் படித்திருக்கிறேன். புகை பிடித்தால் 4.5 ஆண்டு ஆயுள் குறைகிறது. ஆனால் பசியைக் குறைத்து அதிகம் சாப்பிடுவதை அது தடுப்பதால் எடை கூடுவது தவிர்க்கப்பட்டு அதன் மூலம் 7.5 ஆண்டு ஆயுள் குறைவது தடுக்கப்படுகிறது. எனவே புகை பிடிப்பதால் நிகர லாபம் 3 ஆண்டுகள் ஆயுள் அதிகரிப்பு. மருத்துவத் தந்தையும், மருத்துவ மகனும் என்னை அணுகினால் இதுபோன்ற பல ஆலோசனைகளையும் எதிர் ஆலோசனைகளையும் பெறலாம்.

புகை பழக்கம் கொடியதுதான். ஆனால் அதற்கெதிரான பாசிசம் அதனிலும் கொடியது.