மும்பை தாதாவும் பிரதீப் ஜெயின் கொலை வழக்கு மற்றும் தொடர்குண்டு வெடிப்புகளில் பங்கு பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளவருமான அபுசலேம் மற்றும் அவரது காதலி மோனிகா பேடி இருவரையும் மத்திய புலனாய்வுத் துறை போர்த்துக்கல் நாட்டிலிருந்து விசாரணைக்குக் கொண்டு வந்துள்ளனர். சி.பி.அய்க்கு இது ஒரு பெரிய வெற்றி எனக்கூறப்படுகிறது. அபுசலேம் போன்றவர்கள் சட்டத்தின் பிடிக்குள் கொண்டு வந்து தண்டிப்பது வரவேற்கத்தக்கது.

அபுசலேமிடமிருந்து உண்மைகளை வரவழைக்க அவரை பெங்களூருக்கு கொண்டு வந்து பொய் கண்டுபிடிப்பான், போதைப் பகுப்பாய்வு, மூளை வரைவு (lie detector, Narco analysis brain mapping) ஆகிய சோதனைகள் செய்யப்பட்டது குறித்துப் பத்திரிகைகளில் செய்திகள் வந்தன (பார்க்க டெகான் க்ரானிகல், டிசம்பர் 27, 2005).

இந்தச் சோதனைகளைச் சந்தேகத்துக்குரியவர்கள் மீது மேற்கொள்ளுதல் குறித்த அறவியற் கேள்விகள் சிலவற்றை நாம் முன்வைக்க வேண்டி இருக்கிறது. உலக அளவில் மனித உரிமை ஆர்வலர்களால் மட்டுமின்றி, விஞ்ஞானிகளாலும் கடுமையாகக் கண்டிக்கப்படும் நடைமுறைகள் இவை. இவை மூலம் உண்மைகளைக் கண்டுபிடிப்பதற்கு உத்தரவாதமில்லை என்பதோடு, இவை மனித உடல்களிலும் மனங்களிலும் ஏற்படுத்தக் கூடிய நிரந்தரமான விளைவுகள் கொடூரமானவை “பொய் கண்டுபிடிப்பு - ஒரு மோசடி” என்கிற தலைப்பில் தடயவியல் அறிஞரும், ஜோத்பூரிலுள்ள தேசிய சட்டக் கல்லூரியின் இணை துணைவேந்தருமான டாக்டர் சந்திரசேகர் கூறியுள்ள கருத்துக்கள் (இந்து, பிப்ரவரி 16, 2004) நம் கவனத்திற்குரியவை.

“நமது காவல்துறை கடைபிடிக்கும் இந் நடைமுறைகள் விஞ்ஞான பூர்வமானவையோ, நம்பத் தகுந்தவையோ அல்ல. காட்டுமிராண்டித்தனமான விசாரணை முறை. ‘உண்மைத் திரவம்’ (Truth Serum - என்பது ஒரு மாயை. ‘பாலிகிராப்’ஒரு மோசடி” - என்பன சந்திரசேகர் கூறியிருந்த வாசகங்கள். துறைவல்லுனர்களும் மூத்த பேராசிரியர்களுமான டேவிட் டி. லிக்கர், ஜான். எப். ஃபரீதி முதலியவர்களின் கண்டனங்களை ‘வெப் சைட்களில் நீங்கள் பார்க்க இயலும். தொழில்நுட்பத்தை வைத்துச் செய்யப்படும் ஏமாற்று எனவும் உளவியல் ரீதியான ஒரு ரப்பர் குழாயைப் பயன்படுத்த குற்ற வாக்குமூலங்களைத் தூண்டுகிற, பொய்யின் அடிப்படையில் செயல்படும் உண்மை கண்டு பிடிக்கும் முயற்சி எனவும் இவற்றை அவர்கள் கண்டிக்கின்றனர். இவை புதுமையான கண்டுபிடிப்புகளுமல்ல. 1920 களிலிருந்து பயன்படுத்தப்படுபவை. சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்படாதவை. நீதிமன்றங்களும் கூட ஏற்காதவை.

பாலிகிராப் அல்லது பொய் கண்டுபிடிப்பான் எந்திரம் என்பது ஏதோ பொய் சொல்லும் போது ஒரு ‘பீப்’ ஒலி எழுப்பியோ, திரையில் ‘பொய்’ என எழுதியோ காட்டுகிற எந்திரமல்ல. மூச்சுவிடும் வேகம், இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம், வியர்வைக் கசிவு ஆகியவற்றின் அடிப்படையிலேயே ‘பொய்’கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. ‘கட்டுப்படுத்தும் கேள்விகள்’ எனவும் குற்றத்துடன் ‘தொடர் புடைய கேள்விகள்’ எனவும் இருவகைக் கேள்விகளுக்கு சோதிக்கப்படுபவர் பதிலளிக்க வேண்டும். இது சந்தர்ப் பங்களிலும் வெளிப்படும் மேற்குறிப்பிட்ட உடல் நிகழ்வு களிலிருந்து ‘உண்மை’யும் ‘பொய்யும்’ பிரித்தறியப்படுகின்றன.

கட்டுப்படுத்தும் கேள்வி என்பது பச்சை ஏமாற்று. மோசடி. “பிரச்சினைகளிலிருந்து தப்புவதற்கு நீ எப்போதாவது பொய் சொல்லி இருக்கிறாயா?” என்பது கட்டுப்படுத்தும் கேள்விகளில் ஒன்று. “பொய் சொன்னால் மாட்டிக் கொள்வாய்” என அவர் முதலில் கடுமையாக எச்சரிக்கப்படுவார். பிரச்சினையிலிருந்து தப்புவதற்காக முன்பு பொய்கள் சொல்லியுள்ளேன் என அவர் பதில் சொன்னால் இப்போதும் அப்படிப் பொய் சொல்கிறார் என ஆகிவிடும் என்பதால் அவர் “இல்லை நான் பொய் சொன்னதில்லை” எனச்சொல்லும்படி நிர்ப்பந்திக்கப்படுவர். ஆனால் எப்படியும் அவர் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் பொய் சொல்லியிருப்பார். எனவே ‘பொய் சொன்னதில்லை’ என்கிற பதில் ஒரு பொய். இவ்வாறு பொய்க்கு நிர்ப்பந்திக்கப்பட்டு அவர் உடல் வெளிப்பாடுகள் பதிவு செய்யப்படும். பின்னர் அவரிடம் குற்றத்துடன் தொடர்புடைய கேள்விகள் கேட்கப் பட்டு இரண்டும் ஒப்பிடப்பட்டு ‘பொய்’ கண்டுபிடிக்கப்படும். இடையிடையே “இந்த அறையில் விளக்குகள் உள்ளனவா?” என்பது போன்ற கேள்விகள் சும்மா ஏமாற்றுக்காகக் கேட்கப் படும். இதற்கான உடல் எதிர்வினைகள் பதிவு செய்யப்படுவதில்லை.

‘பாலிகிராப்’ சோதனை உண்மை பேசுபவர்களுக்கு எதிராகவே கட்டமைக்கப்படுகிறது என்பது நிபுணர்கள் கருத்து. எந்த அளவிற்கு நேர்மையாக ஒருவர் பதில் சொல்லி அதன் மூலம் stress இல்லாமல் அமைதியாக உள்ளாரோ அந்த அளவிற்கு அவர் இந்தச் சோதனையில் தோற்றுப்போவார். பொய்யராக அடையாளம் காட்டப்படுவார். ஆனால் பொய்யர்கள் திட்டமிட்டுச் செயல்பட்டு இந்த எந்திரத்தை ஏமாற்ற இயலும். கேள்விகளுக்கான உளவியல் எதிர் வினைகளை வேண்டியபடி தகவமைத்துக் கொள்ள இயலும். கிளர்ச்சியூட்டும் நினைவுகளில் ஆழ்வது, மூச்சு விடும் முறையை மாற்றிக் கொள்வது, அல்லது வெறுமனே நாக்கைக் கடித்துக் கொள்வது என்பதன் மூலம் எந்திரத்தை ஏமாற்ற இயலும்.

‘உண்மைத் திரவம்’ அல்லது போதைப் பகுப்பாய்வு என்பது வேறொன்றுமல்ல. போதை ஏற்றி உளற வைப்பது. உளறலில் உண்மைகள் வெளிப்பட்டுவிடும் என நம்பப்படுகிறது. போதை மூலம் மனவசியம் செய்து உண்மை பேசவைப்பது என்பதாகச் சொல்லப்படும் இம்முறையில் சோடியம் பென்டாதோல் அல்லது சோடியம் அமிடால் போன்ற திரவங்கள் பயன்படுத்தப் படுகின்றன. அறுவை சிகிச்சைகளின் போது மயக்க மருந்துகளாகப் பயன்படுபவை இவை. சுமார் ஒரு நிமிடத்திற்குள் மயக்கம் வரும்.

சில சந்தர்ப்பங்களில் இருவகை மருந்துகளை உடலில் செலுத்துவதுமுண்டு, இங்கு சோதனையாளியின் இரு கரங்களிலும் இரு நரம்பு ஊசிகள் பொருத்தப்பட்டிருக்கும். முதல் ‘ஸ்விட்சை’த் தட்டியவுடன் முன் குறிப்பிட்ட ‘பார்பிடுரேட்’களில் ஒன்று நரம்பு மண்டலத்தில் பாய்ந்து அவர் மயக்க நிலைக்கு ஆளாவார். உடனே அடுத்த ‘ஸ்விட்ச்’ அழுத்தப்பட்டு தெளிவிக்கும் மருந்து (amphiotetrine) செலுத்தப் படும். அரை விழிப்புள்ள நிலையிலுள்ள அவரிடம் கேள்விகள் கேட்கப்படும்.

எனினும் இந்நிலையில் அவர் கூறுவன எல்லம் உண்மையாகவே இருக்கும் என்பதில்லை.

மத்திய நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதும், இதயத் துடிப்பு குறைவதும், இரத்த அழுத்தம் வீழ்வதும் இவை உடலில் ஏற்படுத்தும் விளைவுகள். மூச்சு மற்றும் ரத்த சுழற்சி நிரந்தரமாகப் பாதிக்கப்படும் ஆபத்து இதில் உள்ளது. இச்சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட ஒருவர் மும்முறை வாந்தி எடுத்துப்பின் “நான் சாகணும் சாகணும்” எனப் புலம்பியதாகவும், இன்னொருவர் மேசையில் தலையை மோதிக் கொண்டு மயங்கி விழுந்ததாகவும் பதிவுகள் உண்டு.

மூளை வரைவு முறையில் தலையில் பொருத்தப்பட்ட அலைத்துடிப்பு உணர்வான்கள் மூலம் ஒரு மூளை அலைத் துடிப்புக் கருவி (EEG – Electro Emcephalograph) இயக்கப்படுகிறது. குற்றத்துடன் தொடர்புடைய ஒரு பொருளைச் சோதனையாளியின் முன் காட்டினால் அவரது மூளை அதனைப் புரிந்து கொண்டு P300 எனப்படும் அலைகளை எதிர்வினையாக வெளிப்படுத்தும். கருவியின் திரையில் இது உடனடியாகக் காட்சியளிக்கும். இதிலும் பல பிரச்சினைகள் உள்ளன. காரை ஓட்டிவந்து மோதி ஒருவர் கொல்லப்படுகிறார் எனக் கொள்வோம். அந்தச் சாலை, கார், சடலம் ஆகியவற்றின் படத்தைப் பார்த்து கொலையாளி மட்டுமல்ல, அவற்றைப் புகைப்படம் எடுத்தவர், செய்தி சேகரிக்கச் சென்றவர், தொலைக்காட்சியில் பார்த்தவர் எல்லோருமே P300 அலைகளை வெளிப்படுத்துவர்.

இச்சோதனைகள் வன்முறையானவை என்பது மட்டுமல்ல சித்திரவதைகளுக்கு எதிரான உலக அளவிலான சாசனங்களுக்கு எதிரானவையும் கூட. அபுசலேமுக்கு முன்பு முத்திரைத்தாள் மோசடியாளன் தெல்கி இந்தச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். தமிழ்நாட்டைச் சேர்ந்த .... பெண் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் மீதும் கூட இச்சோதனை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்தது.

அதுசரி: நமது காவல்துறை ஏன் இந்தச் சோதனைகளை குற்றம் சாட்டப்படுகிற அரசியல்வாதிகள் மீது மேற்கொள்வதில்லை? நரசிம்மராவ், ராஜீவ் காந்தி, அத்வானி, பெர்னாண்டஸ் எனப்பலரும் பல்வேறு லஞ்ச, ஊழல் குற்றச் சாட்டுகளுக்கு ஆளானவர்கள் தானே?