சென்ற டிசம்பர் 25 அன்று நடிகை பானுமதி ராமகிருஷ்ணா இறந்து போனார். 1950 - 60களில் தமிழ்த் திரையில் முக்கிய கதாநாயகி. நடிகை என்பது மட்டுமின்றி இயக்குனர், பாடகி, இசையமைப்பாளர், சிறுகதை ஆசிரியர் என பல பரிமாணங்களுடன் உலா வந்தவர். பல துறைகளிலும் விருதுகள் பெற்றவர். எம்.ஜி.ஆரையே ‘மிஸ்டர் ராமச்சந்தர்’ என அழைக்கக்கூடியவர். படங்களில் அவர் ஏற்ற வேடங்களிலும் கூட ஒரு குறிப்பிட்ட அளவு தனித்தன்மை காத்தவர். இருந்தும் அவர் மரணம் பற்றி நமது ஊடகங்கள் கண்டு கொள்ளவில்லை. நடிகர், ஆர்.எஸ்.மனோஹர் இறந்த போது அவரைப் பற்றி எழுதப்பட்ட புகழுரைகள், கட்டுரைகள் அளவு கூட பானுமதி பற்றி எழுதப்படவில்லை.

 சில மாதங்களுக்கு முன்பு ‘உயிர்மை’ இதழில் சாருநிவேதிதா நடிகைகளின் மதிப்பெல்லாம் இப்போது உயர்ந்து விட்டதாக எழுதியிருந்ததுதான் எனக்கு நினைவுக்கு வந்தது. இப்போதெல்லாம் முந்தி மாதிரி இல்லை. பெரிய குடும்பங் களிலிருந்து நடிக்க வருகிறார்கள் என்றும் அவர் எழுதியிருந்தார். நடிகை ஒருவரை இயக்குனர் ஒருவர் பொது இடத்தில் விபச்சாரி எனத் திட்டியதை ஒட்டி எழுந்த சர்ச்சையின் போது சாரு இப்படி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. பெரிய குடும்பத்துப்பெண்கள் என்றால் இப்படி ‘விபச்சாரி’ எனத் திட்டலாம் போலும். என்ன பெரிய இடத்தில் பிறந்தாலும் இன்றளவும் திரைகளில் வரும் பெண்களின் நிலை அவலமான தாகவே இருக்கிறது. இன்றும் ஆண்டுக்கு இரண்டு நடிகைகளாவது தற்கொலை செய்து கொள்ளத்தான் செய்கிறார்கள். விபச்சாரக் குற்றங்களுக்காகக் கைது செய்யப்படுகிற செய்திகளும் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருக்கின்றன. நடிகைகளுக்குச் சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றுவதும் தொடரவே செய்கிறது. சில வாரங்களுக்கு முன்னர் சேலத்தில் படப்பிடிப்பிற்கு வந்த நடிகைகள் சம்பளம் கொடுக்காத தயாரிப்பாளர் ஒருவரை லாட்ஜ் அறையில் வைத்து பூட்டிய செய்தி பத்திரிகைகளில் வந்தது நினைவிருக்கலாம்.

‘துண்டறிக்கை வினியோகிப்பவன்’ என என்னை அக்கட்டுரையில் சாரு நிவேதிதா கேலி செய்திருந்தார். உண்மைதான் எத்தனையோ ஆண்டுகளாக இப்படித் துண்டறிக்கைகள் விநியோகித்து வருகிறேன். தஞ்சாவூரில் ராஜராஜ சோழன் சிலை திறப்பு விழாவை எதிர்த்து கடுமையான கெடுபிடிகளுக்கு மத்தியில் இன்குலாப்பின் ராஜராஜேச்வரியம் கவிதையைத் துண்டறிக்கைகளாக அச்சிட்டு நானும் தோழர் உ. ராசேந்திரனும் வினியோகித்தது நினைவுக்கு வருகிறது.

இன்னும் துண்டறிக்கைகள் விநியோகித்துக் கொண்டுதான் இருக்கிறேன். சாரு குறிப்பிட்ட அந்தத் துண்டறிக்கையை விநியோகித்ததற்காக எனது தோழர் ஒருவர் அடிவாங்கிய கதை எல்லோருக்கும் தெரியும் (அதைக் கண்டித்தும் ஒரு துண்டறிக்கை விநியோகித்தோம்). துண்டறிக்கைகள் விநியோகிப்பதைவிட ‘தினமலர்’ முதலாளிக்கும் நல்லி செட்டி யாருக்கும் வேட்டி துவைத்துப் போடுவது நல்லது எனச் சாரு நிவேதிதா நினைத்திருக்கலாம். நான் அப்படி நினைக்கவில்லை.