சென்ற இதழில் மனுஷ்யபுத்ரனை பார்ப்பனர்களின் கோவணம் என்று எழுதியிருந்தேன். பிறகு கொஞ்சம் வருத்தமாகக் கூட இருந்தது. என்ன இருந்தாலும் ஒரு எழுத்தாளர், கவிஞர் அவரை இப்படி எழுதியிருக்க வேண்டாம் என்று தோன்றியது. ஆனால் இப்போது மீண்டும் நான் எழுதியது சரியே என்பது நிரூபணமாகியுள்ளது.

சென்ற மாதம் சென்னையில் பெருஞ்செலவுடன் நடத்தப்பட்ட தமிழ்நாடு பிராமண சங்க வெள்ளிவிழா மாநாட்டில் சுஜாதாவுக்கும், கே. பாலசந்தருக்கும் வாழ்நாள் சாதனை விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அது குறித்து ‘ஆனந்த விகடன்’ இதழில் (ஜனவரி 15, 2006) ‘கற்றதும் பெற்றதும்’ பகுதியில் ராமகோபாலன், எஸ்.வி.சேகர் ரேஞ்சில் சுஜாதா எழுதியுள்ளது கவனிக்கப்பட வேண்டியது. ‘தலைவர் நாராயணன்’ என பார்ப்பன சங்கத் தலைவரை விளித்து, தமிழ்ப்பார்ப்பனர்கள் குறித்த விவரங்களைத் திரட்டி நியாயமாக சலுகைகள், சட்டசபை இருக்கைகள் (!) கோர வேண்டும் என்று அறிவுரைத்துள்ளார் சுஜாதா. பார்ப்பனர்கள் மீது சுமத்தப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வாதாடி நீக்க வேண்டுமாம், வந்தேறிகள், ஆரியர்கள் என்பதெல்லாம் அபத்தம் என சமீபத்திய மானிடவியல் ஆராய்ச்சிகள் ஆணித்தரமாக வெளிப்படுத்திவிட்டனவாம். அடுத்தநாள் திலகவதியின் தலித் எழுத்து கள் தொகுப்பு நூல் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டாராம். தலித்துகளுக்கும் பார்ப்பனர்களுக்கும் பொதுவான சில பிரச்சினைகள் இருப்பது தெரிந்ததாம்.

அது என்ன பொதுவான பிரச்சினைகள் சுஜாதா சார்? பார்ப்பனர்களும் தலித்களோடு சேர்ந்து தலையில் மலம் அள்ளுகிறார்களா? தீண்டாமை அனுபவிக்கிறார்களா?

‘உயிர்மை’யின் போற்றுதலுக்குரிய இன்னொரு பார்ப்பனரான அசோகமித்ரன் இன்னொரு பார்ப்பனக் கவிஞரான ஞானக்கூத்தனைப் பாராட்டி இந்த இதழ் உயிர்மையில் எழுதியுள்ளார். ஞானக்கூத்தனிடம் விமர்சிக்கத்தக்க பார்ப்பனப் பார்வைகள் உள்ளன என்ற போதிலும் அவர் ஒரு முக்கியமான கவிஞர் என்பதில் அய்யமில்லை. ஞானக்கூத்தனை அவர் பாராட்டிக் கொள்ளட்டும். ஞானக்கூத்தனில் வெளிப்படும் ஒரு மாபெரும் மனித அவலத்தைச் சுட்டிக் காட்டி கண்ணீர் வடிக்கிறார் அசோகமித்ரன்:

“தென்னிந்திய பிராமணர்கள் செய்யும் திவசத்துக்குக் கடும் நிபந்தனைகள் சமையல் பாத்திரங்கள், பண்டங்களிலிருந்து வேட்டியின் ‘மடி’ வரை. திவசத்தன்று காய நனைத்து உலர்த்திய வேட்டி தான் உடுக்க வேண்டும். ஈரவேட்டி கூடாது. ஆனால் மழை நாட்களில் திவசம் வந்துவிட்டால் என்ன செய்வது? அந்த சித்திரவதையை எப்படி விவரிப்பது? ஞானக்கூத்தனின் ‘மழைநாள்திலகம்’ படித்தபோது தென்னிந்தியாவின் ஆயிரக்கணக்கான மனங்கள் அப்படி ஒரு தினத்தில் படும் நரக வேதனையைச் சொற்களில் வடித்துவிட்டார் என்று நினைத்தேன்”

அய்யோ! அய்யோ! எத்தனை பெரிய அவலம், சோகம். ஆகா தமிழ்நாட்டுப் பிராமணர்களும் தலித்களும் ஒன்று என பார்ப்பன சங்க வாழ்நாள் விருது பெற்ற சுஜாதா சொன்னது சரிதான். அசோகமித்ரன் சார் எனக்கும் கண்ணீர் பொத்துக் கொண்டு வருகிறது.

பிராமண சங்கத்தில் அடுத்த மாநாட்டில் வாழ்நாள் சாதனை விருதுகளை அசோகமித்ரனுக்கும் மனுஷ்யபுத்ரனுக்கும் கொடுக்கலாம் எனத்தலைவர் நாராயணனுக்குப் பரிந்துரை செய்கிறேன்.