குகை 1:

குச்சிகளை நல்ல ஒழுங்கமைப்புடன் நகர்த்தி வைத்தமாதிரி நாலைந்து காவல்துறையினர் நிற்பது  விக்னேஷின் கண்களில்பட்டதும் சொரேலென்றது. ஏதேதோ சுரப்பிகள் சுரந்து உடம்பை உலுக்கின. அபூர்வமாகத்தான் காவல்துறையினர் தட்டுப் படுவார்கள். விபத்து நடந்து விட்டால் தென் படுபவர்கள் சாதாரண. நேரங்களில் அபூர்வமாகத் தான் காணப்படுவார்கள்.

நெளிந்து போகிற பாதையில் இருக்கும் புட்கோர்டுக்குப் போகலாம் என்று கிளம்பியிருந்தான். சாலை ஆற்றின் லாவகத்தோடு வளைந்து நெளிந்தது.காவல்துறையினர் பேப்பர்ஸ் என்று உச்சரித்து விட்டால் உடம்பு முழுக்க அலசிவிடுவார்கள். எரிச்சல்பட்டால் நிர்வாணமாக்கி விடுவார்கள்.

அதுவும் நிகழ்வது அபூர்வம்தான். ஆனால் அந்த அபூர்வம் இன்று நடக்கும் என்று ஏதோ பட்சி சொல்லி அவனை பயமுறுத்தியது.அவன் பாக்கெட்டில், பர்ஸில் எதுவும் வைத்துக் கொள்வதில்லை.

டூரிஸ்ட் விசாவில் வந்து தங்கி பணத்திற்கு ஆசைப்பட்டு வேலை செய்து கொண்டிருப்பதில் இருக்கும் சிக்கல்பயம் அவன் இரத்தத்தில் உறைந்திருந்தது. அது எப்போது வேண்டுமானாலும் இரத்தத்துடன் கலந்து ஓடும்.

இப்போதைக்கு பேப்பர்ஸ் தொல்லையில் இருந்து விடுபட ஒளியவேண்டும் போல்பட்டது. சரேலென்று அவன் உடம்பு கண்ணாடிக் கதவுகளுக்குள் நுழைந்துக்கொண்டது. இனி பயமில்லை என்றாகி விட்ட்து.

அதுவும் ஒரு ரெஸ்டாரண்ட்தான். காவல்துறையினர் நாலு பக்கங்களிலும் தென்படாதது ஆச்சர்யமாகவே இருந்தது. கண்ணாடிக் கூண்டிற்குள் வந்து உட்கார்ந்து கொண்டோம் என்றிருந்தது.

கண்ணாடிக்கூண்டு தெருவில் நடக்கிறதைக் காட்டாமல் இருப்பதற்காகவே வடிவமைக்கப்பட்டதாய் இருந்தது. கண்ணாடிக்குகை என்று முணுமுணுத்துக் கொண்டான். ஒரு வகை செண்ட் வாசம் அறையெங்கும் நிறைந்திருந்தது. முஸ்லீம்கள் அடிக்கும் அடர்த்தியான செண்ட். அவன் அருகில் அந்த சர்வர் வந்து நின்றதும் அது ஆணா பெண்ணா என்ற நினைப்பு சட்டென வந்தது. மார்பு சப்பையாக இருந்தது. தலை மயிர் வெட்டப்பட்டிருந்தது. தொப்பி வேறு தலையின் ஓரமாய் உட்கார்ந்திருந்தது. “ப்பே லஞ்ச்” என்றான். “எண்பது ரிங்கிட்” அவன் மனம் மலேசியா பணத்தினை இந்திய ரூபாயில் கணக்கிட்டுக் கொண்டது. ஏகதேசம் ஆயிரம் ரூபாய் வந்து விடும். புட் கோட்டுக்குப் போயிருந்தால் சப்பாத்தியும்., பரோட்டாவும் கிடைத்திருக்கும்.

இதில் பத்தில் ஒரு பங்கில் முடித்திருக்கலாம். வெளியில் பார்வையில் படும் காவல்துறையினர் இந்த கண்ணாடி குகைக்குள் தள்ளி விட்டனர்.இந்த குகை பாதுகாப்பாய்தான் இருக்கிறது. இங்கேயே நூடுல்ஸ், பிரைட்ரைஸ் என்று சொன்னாலும் இந்த ஆயிரம் ரூபாயில் பாதியாவது செலவாகிவிடும். எதிரில் இருப்பவன் ருசித்துக் கொண்டிருப்பது என்ன சூப்பாக இருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்தான்.

தவறான இடத்தில் தவறான நேரத்தில் கால் வைப்பது புத்திசாலித்தனமல்ல. எது தவறான இடம் .. எது தவறான நேரம் என்பது பற்றி சூப்பு வாசனையை முகர்ந்தபடி யோசிக்க ஆரம்பித்தான்.

குகை 2:

பட்டாயா போகலாம் என்று ரொம்ப நாளாய் கார்த்திகேசு சொல்லிக் கொண்டிருந்தான்.கும்பலாய் போனால் இந்த பேப்பர்ஸ் தொல்லையெல்லாம் இல்லை என்று சொன்னான். லங்காவிலிருந்து பார்க்கிறபோது பட்டாயா தெரியும் என்பார்கள். லங்காவிற்கு வந்து போகும் செலவு மூவாயிரம் ரிங்கிட்டாவது ஆகிவிடும்.

ஊருக்கு ஒருதரம் போய் விட்டு வந்து விடலாம். ஆனால் கார்த்திகேசு வற்புறுத்தியாதால் வந்து விட்டான்.லங்காவில் வவ்வால்குகைகள் அழகாகத்தான் இருந்தன.

படகு சவாரி சுகமாகத்தான் இருந்தது. வவ்வால் குகை என்று எதற்கு பெயரிட்டிருப்பார்கள். இங்கிருந்து கிளம்புவதற்குள் தெரிந்து கொண்டு விடலாம். ஒரு சின்ன விலங்குப்பண்ணை அவனுக்குப் பிடித்திருந்த்து. அதில் தினைக்குருவிகள் என்று சிலது தென்பட்டன. ஆப்பிரிக்காவின் மஞ்சள் நிற தினைக்குருவிகள் மழைக்காலத்தில் எதுவும் சேகரிக்க முடியாதாம். மழைக்காலம் முடிந்தபின் அவை எறும்புப்புற்றுகளின் அருகில் சென்றமர்ந்து ஏதோ பாடிக்கொண்டிருக்கும்.

அதைக்கேட்டு எறும்புகள் தாங்கள் சேமித்து வைத்திருக்கும் தினைகளை வெளியில் கொண்டு வந்து காயப்போட்டு தினைக்குருவிகளுடன் பங்கிட்டுக் கொள்ளுமாம். இதற்கு பிரதி உபகாரமாக அறுவடை காலத்தில் வயலில் தினைகள் முற்றியவுடன் அதன் மேல் அமர்ந்து அக்குருவிகள் தினைகளை உதிர்க்கும்.

அவற்றை எறும்புகள் எடுத்துக் கொண்டு போய் புற்றுகளில் சேமித்துக் கொள்ளும் என்று தகவல் பலகையில் இருந்தது.கார்த்திகேசு போன்ற நண்பர்கள் அவனை புற்றினுள் வைத்து பாதுகாக்கிறார்கள். புற்று கூட நல்ல குகைதான். எதுவரை பாதுகாப்பார்கள். காவால்துறையின் தொந்தரவு என்று தெரிந்தால் நழுவி விடுவார்கள். அவன் நழுவுவதற்கு நிறைய இடம் இருக்கிறது. மாலத்தீவு, சாவேஸ் தீவு என்று சொல்லிக் கொண்டிருப்பான். போர்னியா தீவில் கூட இருந்திருக்கிறான். அது மலேசியாவை ஒட்டித்தான் இருக்கிறது.

போர்னியா தீவின் மிகப் பெரிய காட்டுப்பகுதியில் ஆதிவாசிகளுடன் இருந்திருக்கிறான். ஆதிவாசிகள் குகை வைத்திருப்பார்கள். குகைகள் பாதுகாப்பானவை என்பது மனதில் இருந்து கொண்டே இருந்தது.

குகை 3:

குத்துப்பாட்டுகள் என்று இரவின்மின்சார ஒளியில் நடனமொன்றைப் பார்க்க ஆசைப்பட்டிருந்தான். அதற்கு நிறைய செலவாகும் என்று பட்டது. எதற்கும் கசையடி, தலை கொய்தல் தண்டனை என்றான ஊரில் இது மட்டும் எப்படி அனுமதிக்கப்படுகிறது. எப்படி... அப்புறம்...

விதவிதமான பார்கள். அவன் உட்கார்ந்திருந்த பாரின் விதவிதமான பாட்டில்களின் வரிசை அழகான பெண்ணொருத்தியின் பல்வரிசை போலிருந்தது.சிறு பாறை மேட்டின் மேல் கொண்டு வந்துஅமைத்திருந்தார்கள். செடிகளும் மரங்களும் இயைந்ததாக இருந்தன.

ஏதோ மரத்தடியில் கொண்டு வந்து நாலைந்து மேசை, நாற்காலிகளைப் போட்ட மாதிரி. நடமாடிக்கொண்டிருந்தவர்கள் சீனப் பெண்களாக் இருக்கக் கூடும். ஒரு மணி நேரத்தை இங்கு கழித்து விட்டு ஏதாவது பேருந்தில் ஏறி விட வேண்டும்.

வெளியில் காவல்துறையினரின் பார்வையில் பட்டுவிடக்கூடாது. மிளிர்ந்து கொண்டிருந்த சிறு சிறு மின் விளக்குகள் ஊரின் பண்டிகைகளை ஞாபகப்படுத்தின. எப்போதும் தான் இங்கிருக்கிறவர்களை விட மேலானவன் இல்லை என்று சொல்லிக் கொண்டான்.

போன வாரம் ஒரு பாரில் அவன் உட்கார்ந்திருந்த போது உச்சமான போதையில் ஒருவன் உளறிக் கொண்டிருந்தான். நீண்ட நாள் வாழக்கூடிய ஒரு மருந்தை மலேசியாக்காரன் ஒருவன் கண்டு பிடித்திருக்கிறான். மண்டையில் தண்ணீர் வற்றி விடுகிற போது மனநலம் கெட்டு விட்டது என்று சொல்லிக் கொள்கிறார்கள்.

மூளையை சமமாக்க அந்த மண்டை நீர் பயன்படுமாம். அதை ரகசியமாய் எடுத்து அந்த மருந்தைச் செய்கிறார்களாம். ஏழைகள், குழந்தைகள் என்று தேடிப்பிடித்து அந்த நீரை ரகசியமாய் எடுக்கிறார்களாம். அதை வைத்து தயாரிக்கப்படும் மருந்தைச் சாப்பிடுறவனுக்கு ஆயுள் நீடிக்குமாம்.

உடம்பில் ரத்தத்தை மாற்றிக் கொண்டு அதிக நாள் உயிர் வாழ்வதை விட இன்னும் அதிக நாட்கள் உயி வாழலாமாம். மலேசியா காளான் மருந்து என்று கொஞ்ச நாள் அவன் விற்பனை செய்திருக்கிறான். மல்ட்டி லெவல் மார்கெட்டிங் சாகச காலத்தில் அது நடந்தது.அதுவும் அவனுக்கு கை கொடுக்கவில்லை. நிரந்தர வருமானத்திற்கு வழி வகுக்கவில்லை.

அந்த மருந்திற்காய் மண்டைத்தண்ணீரை எடுக்கப்பட்டவனுக்கு மண்டைத்தண்ணீர் வற்றிப் போவதால் பைத்தியம் பிடித்து அலைவார்களாம். தன்னையும் அப்படி அலைய விட்டு விடுவார்களா என்ற பயம் இருந்தது.

பணத்தைத் துரத்திக்கொண்டு அலைந்து கொண்டிருப்பவன் என்று அவனையேச் சொல்லிக் கொள்வான். இந்த ஊரில் இருக்கும் சாதாரண மனிதனிடன் இருக்கும் அற்பப் பணம்தான் அது. அவர்களையெல்லாம் ஒப்பிடும்போது எதற்கும் லாயக்கற்றவன். யாரிடமிருந்தும் வேறுபடுத்திக் காட்டிக் கொள்வதற்கும் தன்னிடம் எந்த பிரயாசையும் இல்லை.

பயந்தாங்கொள்ளியாக ஏதாவது குகை கிடைக்காதா என்று தேடிக் கொண்டிருகிறவன் விக்னேஷ். இரவுகளில் தப்பித்துக் கொள்ள முடிகிறது. குறைந்த அளவு அதிர்ஷ்டமும் தனக்கு இல்லை . எல்லோரும் துரோகிகளாகத் தென்படுகிறார்கள். எனக்கு உதவி செய்யாதவர்கள் யாரும் துரோகிகள்தான்.

கடலில் நீச்சல் அடித்து மறு கரையை அடைந்து விட முடியுமா. கடலைப் பார்க்கவே இரநூறு கி.மீ  போகவேண்டியிருக்கும். அதிகாரம் யார் செய்கிறார்கள் கண்ணிற்குத் தெரியாதவர்கள். அபத்தங்களும், துயரங்களும் கடலாய் விரிந்து கொண்டிருக்கிறது. நிழல், ஒளிக்கீற்று, நிழல், நட்சத்திரங்களுடனான வானம்.

குகை 4:

நெகமம் எட்டு முழச்சேலையில் தூளி கட்டியிருந்தது. சேலையின் புது வாசம் எங்கும் நிறைந்தது. கால்களை நீட்டி சாவகாசமாகப் படுத்திருந்தான் விக்னேஷ். முப்பது வயது உருவம் விரிந்து கிடந்தது. தூளியின் கதகதப்பு அவனைத் தூக்கத்திற்குக் கொண்டு போயிருந்தது.

சட்டென பிறந்த குழந்தையின் உடல்போல் கிடந்தான். ஏதோ குகையில் தான் அந்த தூளி கட்டப்பட்டிருப்பது போலத் தென்பட்ட்து. நடையா ஓட்டமா என்று தெரியாத குழப்பத்தில் அவன் கிடந்தான்.

சட்டென ஓட்டம் விரைவெடுத்தது. காடு அவனின் ஓட்டத்திற்கேற்ப விரிந்து கொண்டிருந்தது. ஏதாவது ஒற்றையடிப்பாதை அவன் கால்களை சரியான திசைகாட்டுவது போல் ஓடிக் கொண்டிருந்தான். எந்த திசையிலிருந்தும் எந்த மிருகமும் வேண்டுமானால் வரலாம். உடம்பைத் தீண்டலாம்.

உடம்பைக் காயப்படுத்தலாம். அப்படியாவது ஒளிந்து திரிகிறவன் வாழ்க்கை ஒரு முடிவிற்கு வரட்டும். விடுதலை. அவனின் தலைமறைவு வாழ்க்கை விடுதலை. அவன் செத்துப் போய் விட்டான் என்று தெரிந்தால் குடும்பத்தாருக்கும் விடுதலை.

சம்பாதித்து ஊருக்குப் போய் திருமணம் செய்து கொள்ள நினைத்திருந்தான். மலேசியா வெள்ளிப் பணத்தைக் காட்டி ஏதாவது பெண்ணை மனைவியாக்கிக் கொள்ளலாம் என்றிருந்தான். இப்போது எதுவுமில்லாமல் போய்விட்டது. இப்படி காட்டுக்குள் அலைந்து திரிய வேண்டியிருக்கிறது.

மழைத்தூரல் சற்றே சகதியை உண்டு பண்ணியிருந்தது. அதில் கால் வைத்தால் மீளமுடியுமா. இல்லையென்றால் இழுத்துக் கொள்ளுமா. வலது காலை சகதியில் வைத்தான். இடது கால் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது.

மீண்டும் இடது காலை முன்னோக்கி வைத்தான். சேறு சற்று பட்டு தெறித்தது. கால்கள் சேற்றுள் அமிழ்ந்து போய்விடவில்லை, தளக் புளக் சப்தத்துடன் அவன் கால்கள் விரைந்து கொண்டிருந்தன. காவல் துறைக்குப் பயந்து ஓடி வந்து இப்படி விழுந்து கிடக்க வேண்டியதாகிவிட்டது.

எல்லாம் சரியாகி விட்டால் கோலாலம்பூர் பத்து மலை முருகனுக்கு பன்னீர் காவடி எடுப்பதாக வேண்டிக் கொள்ளலாமா. பினாங் தண்ணீர் மலை முருகனுக்கு முதுகெங்கும் கொக்கிகள் மாட்டி தேர் இழுப்பதாக வேண்டிக் கொள்வோமா. தப்பித்திருந்தால் மீண்டும் தலைமறைவா அல்லது இத்தகைய வேண்டுகோளை நிறைவேற்றுவதற்காய் ஊரிலிருந்து மலேசியாவிற்கு விமானம் பிடிக்க வேண்டியிருக்குமா? அவன் பார்வை மெல்ல உயர்ந்து கொண்டிருந்தது. வானம் மேகங்களாய் நிறைந்திருந்தது.

அதன் நீலம் எங்கும் விரிந்திருந்தது. எங்கு போனாலும் வானம் ஒன்றும் தெரியாதது போல வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

கைகூப்பி முருகனை நினைத்துக் கும்பிடுகிறவன்தான். சின்ன வயதில் பத்துக்கும் மேலான தடவைகள் பழனிக்கும் மொட்டை போட்டிருக்கிறான். ஆனால் எந்தக் கடவுளும் அவனைக் காப்பாற்றவில்லை என்பது போல்தான் அவனுக்குப்பட்டது.

அவன் வாய் அப்பெண்ணின் மார்பில் புதைந்திருந்தது. முலைக்காம்புகளை மாறி மாறி முத்தமிட்டான். மாறி மாறி வாயில் வைத்துச் சப்பினான். அவள் மலேயாக்காரி போல் மஞ்சள் நிற உடம்பு மினுமினுத்தது. அவளின் உடம்பு முழு நிர்வாணமாகியிருந்தது. அவன் தலை மார்பிலிருந்து நழுவி இடுப்பிற்குச் சென்றது.

அவனை யாரோ பெயர் சொல்லி விரட்டுவது போல அவன் ஓடிக் கொண்டிருந்தான். காவலர்களின் தடிச்சத்தம் கேட்டது. பிடி... பிடி என்ற தமிழ் குரல்கள் கேட்டன. மலாயாவா, சீனக் குரல்களாகவும் கேட்டன. எதுவும் புரியாததாக இருந்தது. அவன் வேலை செய்த இடங்களில் புதிதாய் நுழைகிற போது காதில் விழும் அர்த்தமற்றக் குரல்களாய் இருந்தது. சிற்றோடையன்று விழும் சப்தம் இடது புறத்தில் கேட்டது. பறவைகள் சிறகடித்து பயந்து செல்வது கேட்டது.

ஆனால் எந்தப் பறவையும் அவனின் பார்வைக்குப் படவில்லை. எங்காவது சிற்றோடையோ, அருவியோ தென்பட்டால் உட்கார்ந்து விட வேண்டியதுதான். உடம்பில் உள்ள உஷ்ணம் குறைந்து போகிற அளவு நனைந்து விட வேண்டும் என்று ஆசைப்பட்டான்.

சட்டென வீசிய காற்று உடம்பை நடுங்க வைத்தது. ஏதோ குளிர் காற்று. எதிரில் எந்த மலையும் தென்படவில்லை. குளிர் காற்றென்றால் ஏதாவது மலையிலிருந்துதான் வந்திருக்க வேண்டும் என்று நம்புவன் அவன். இந்தக் காற்று தொடர்ந்து வீசிக் கொண்டேயிருந்தால் நிச்சயம் சாவு வந்துவிடும். அது குளிர் காய்ச்சலாய் வந்து உடம்பை நடுங்க வைத்து பின் சாவுக்குக் கொண்டு செல்லுமா. அல்லது அது விஷமாய் வாய் மூலம் உடம்பினுள் சென்று உயிரைப் பிரித்துப் போகுமா...

எப்படியாயினும் உயிர் போய்விட்டால் நல்லதுதான். கூட ஒரு நாய் வருவது போல் தோன்றியது. இந்த நாய் நீலாவின் தோட்டத்திலிருந்து வந்ததாக இருக்குமா. அங்கிருந்து இத்தனை தூரம் தன்னை தொடர்ந்தே வந்திருக்கிறதா. சொர்க்கத்திற்கு நாயுடன் போன பாண்டவர்களின் கதையைக் கேள்விப்பட்டிருக்கிறான். தன் உயிர் மேலே போகாமல் இந்த நாய் கொஞ்ச நாளைக்கு கொஞ்ச நேரத்திற்கு இழுத்து வைத்துக் கொள்ளுமா... தோ...தோ என்று அழைத்தபடியே சென்ற அவன் ஓட்டம் சீரானது.

அந்த நிர்வாண உடம்பின் மிருதுத்தன்மை அவன் மூளைக்குள் மெல்ல நுழைந்து கொண்டிருந்தது. உடம்பின் வளைவுகள் உடம்பு பாகங்களை அடையாளம் காட்டுவது போலிருந்தது. உடம்பின் வாசனையையும் மெல்ல மெல்ல மூளை நுகர்ந்து கொண்டிருந்தது.

உடம்பு ஒரு சீனக்காரியுடையதாக இருக்க வேண்டும் இறுக்கமான உடம்பு. உடல் கனம் வேறு அவனை அழுத்திக் கொண்டிருந்தது. அவன் வேலை செய்த நிபோங் சீன உணவு விடுதியில் அவனுடன் வேலை செய்த சீனப் பெண்ணின் உடம்பு வாசனையை அவன் சமையலறை வாசம் மீறி அடையாளம் கண்டிருக்கிறான். அந்த வாசத்தைதான் இப்போது உடம்பு நுகர்ந்து காட்டிக் கொண்டிருந்தது. அவள் அவனின் தூக்கத்திற்கு முன்பாக கற்பனை நினைப்புகளில் கூட இருந்திருக்கிறாள்.

இரண்டு குழந்தை பெற்றவள் என்றாலும் முகம் தவிர்த்து சீரான உடம்பைப் பெற்றவள்தான். அவன் படுத்தவாக்கிலேயே முகத்தை மறைத்திருந்த தலைமயிரை ஒதுக்கினான். அது நீலாவின் முகமாக இருந்தது.

இப்போதுதான் யோசித்துப் பார்த்தான். நீலா என்பது சீனாக்காரியா, பாட்டியின் பெயரா, அம்மாவா... தான் இனி மேல் மனதில் வரித்துக் கொண்டு வாழப் போகிற புதியளா.. எப்படி இருந்தாலும் அந்தப் பெயர் ஆறுதலாகத்தான் இருந்தது.

“ நீலா .. நீலா “ என்று முணுமுணுத்துக் கொண்டான். வேறு குகைக்குள் பிறந்திருந்தால் வேறு வானம் பார்க்கக் கிடைத்திருக்கும் அப்புறம் வேறு எல்லையற்ற வெளி. நட்சத்திரங்கள் நிறைந்த நாளைய வானத்தை அண்ணாந்து பார்க்கக் காத்திருந்தான்.

நம்பிக்கைக்கு ஏதேனும் பெயர் வைக்கலாம்.