கடவுள் செத்து விட்டார் என்றார் நீட்சே. இல்லை என்று பல்வேறு செய்திகள், பிரச்சாரங்கள் தொடர்கின்றன. அமெரிக்கப்படம் ஒன்று இல்லையில்லை என்று வாதித்தது. அவர்கள் வேறு என்ன செய்வார்கள். என்றாலும் பாத்து தொலைத்த படம் “கடவுள் சாகவில்லை”. செமஸ்டர் ஒன்றின் ஆரம்பத்தில் படம் தொடங்குகிறது. தத்துவார்த்த வகுப்பில் பேராசிரியர் கடவுள் இல்லை என்ற வாதத்தை வைக்கிறார்.

ஒரு கிறிஸ்துவ மாணவன் எதிராகப் பேசுகிறான். மற்றவர்கள் பேராசிரியரை எதிர்க்க வேண்டாம் என்று மவுனம் காக்கிறார்கள். “நான் ஏன் கிறிஸ்துவனில்லை “ என்ற புத்தகங்களிலிருந்தும் பேராசிரியர் மேற்கோள் காட்டுகிறார்.

பணம், புகழ், வெற்றி பற்றிய பல பெருமிதங்கள் பல மாணவர்களுக்கு வகுப்பில் முஸ்லீம் பெண் பர்தா அணிந்தே காணப்படுகிறாள். கடவுளை நம்புவதில் அவளுக்கும் பெரிய அக்கறை. அவள் யேசு பற்றிய பிரசங்கம் கேட்கிறாள். மாணவன் பாதிரியிடம் சென்று பேராசிரியரின் வாதங்கள் பற்றி பேசுகிறான். அவருக்கு பழுதாகி விடும் கார் மீது அக்கறை. வாடகைக்கார் வந்தாலும் மக்கர் செய்கிறது.

மாணவன் தத்துவார்த்த ரீதியாக எதையாவது கேட்பான். நான் கார் பிரச்சினையில் இருக்கிறேன் என்பார். கடவுளை விட கார் அவருக்கு முக்கியம். உலகம் எப்படி உண்டானது என்பதில் விஞ்ஞான கோணம் அல்லாத பல சிக்கல்கள் விவாதங்களாய் வருகின்றன. முஸ்லிம் பெண் ஆயிஷாவின் கிறிஸ்தவ ஆர்வம் அவள் அப்பாவுக்கு தெரியவர அடிக்கிறார். வீட்டை விட்டு வெளியே துரத்திவிடுகிறார்.

பத்திரிக்கையாளர் ஒருவர் வருகிறார் அவருக்குக் கேன்சர். காலம் ஓடி விட்டது பற்றி வயதானவர்கள் விவாதம். புற்றுநோய் பத்திரிக்கையாளருக்காகப் பிரார்த்தனைகள். பெரும் சத் சங்கம் போல் கிறிஸ்துவ பிரச்சாரம்.

வீதியைக் கடக்கும் பேராசிரியர் வாகனத்தில் சிக்கி அடிபடுகிறார். சாவு திணறல். “யேசுவை நம்பு” என்று அவரின் மூச்சு திணறலோடு பலர் வலியுறுத்துகிறார்கள். அவர் தலையசைப்பதை கேட்டு புளகாங்கிதம் கொள்கிறார். வெளிச்சத்தை நோக்கி நட என்று எல்லோரும் அல்லோலியா போல் கோஷம் போடுகிறார்கள்.

“ கடவுள் சாக வில்லை” என்ற தலைப்பைப் பார்த்து பட குறுந்தகடை காசு கொடுத்து வாங்கினேன். திட்டமிட்ட பிரச்சாரங்களின் எப்படி அதை நியாயப்படுத்த ஒரு பேராசிரியரை கொன்று தலையை அசைக்க வைக்கிறார்கள் என்பது எரிச்சலாக இருந்தது. முக்கியமான அமெரிக்கப்படம் என்று தலைப்பைப் பார்த்து நண்பர் ஒருவரும் சொன்னார். திட்டமிட்டு கிறிஸ்துவம் சார்ந்த பிரச்சாரத்திற்கு இது பயன்படும் என்பது தெரிந்தது. எரிச்சலில் “கடவுள் எப்போதோ செத்து விட்டார் தெரியுமா” என்று உரக்கக் கத்தினேன்.