உனக்கும் எனக்குமான இடைவெளி குறுகி, இறுகிப் பனிப் பந்துபோலத் திரண்டு நிற்கிறது. ஒரு பத்து வருட காலம். பனியிலிருந்து புறப்படும் புகைபோல் நினைவுகள் ஆவியாகி நம்மைச் சுற்றி வருகிறது. எப்போது எதற்காகச் சந்தித்தோம் என்பது நினைவிலில்லை. பிரிந்ததற்கான காரணங்களும் நம்மிடம் இல்லை. சுழலும் காற்றில் உதிர்ந்த இறகுகள் இரண்டு நடுவானில சந்திப்பது போல் இப்போது நம் சந்திப்பு நிகழ்ந்துள்ளது, இந்த கோயிலில் நாம் இருவர் மட்டுமே தெய்வங்களாகி அமர்ந்திருக்கிறோம். குடைந்து உருவாக்கப்பட்ட குடைவரை கோயில்களில் எப்போதும் குளுமை சூல்கொண்டிருந்தது. வெளியே இறுகி வெப்பமேறி, வறண்டு கிடக்கும் பாறையின் உள் உலகம் வேறுபட்டு நின்றது. உன்னையும் என்னையும் சேர்த்து இங்கே அலையும் அநேக மனிதர்களின் உலகம் இரண்டாய் மட்டுமே இருக்கிறது. அது ஒன்றானதில்லை என்பது உறுதி. அலைந்து திரியும் மனிதர்களிடம் தேடலைவிட, எதையோ ஒளிப்பதற்கான உந்துவேகமே அதிகமாக இருந்தது. கடவுளின் பெயரால் பிறரிடமிருந்து தன்னை மறைத்துக்கொள்ள எல்லோருக்கும் கோயில் மிகப் பொருத்தமான இடமாக இருந்தது. நீ என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறாய். நான் ஒரு புன்னகையோடு உன்னை உள்வாங்கி என்னுள் நிறைக்கிறேன். 

பத்து வருடங்களுக்கு முன்பு சந்தித்த முதல் கணமே உன்னை எனக்குப் பிடித்து விட்டது அப்போதே அவ்வளவு பிடித்திருந்தது. பின்பு இப்போதுவரை அதே அளவு பிடித்திருக்கிறது. காலம் என்னும் அழிப்பானால் பிரியத்தின் அளவுகளைக் கூட்டவோ குறைக்கவோ இயல வில்லை. நீ எனக்கானவன் என்பதை முடிவு செய்துவிட்டேன். நாம் முன்பே நிறையப் பேசியது போன்ற உணர்வு என்னுள் பரவிக் கிடந்ததால், உன் முதல் பேச்சு எனக்கு நினை விலில்லை. முதல் சந்திப்பில் அடையாளம் கண்டுகொண்டேன். தவிர அறிமுகப்படுத்திக் கொள்ள அவசியமில்லாமல் போயிற்று. நாம் ஏற்கனவே பழகியது போன்ற உணர்வு எனக்குள் இருந்தது. என் புலன்கள் உன்னைப் பார்த்ததும் இயங்க ஆரம்பித்த நொடியில் நீ எனக்கானவன் என்பது தெரிந்தது. என் னொத்த உணர்வுகள் உனக்குள்ளிருப்பதை என்னால் உணர முடிந்தது. சமூகம் வரைந்து வைத்த கட்டுப்பாட்டு எல்லைக்குள் நின்று, நம்மால் மௌனத்தை மட்டுமே விதை ஊன்ற முடிந்தது அப்போது. இந்தக் கட்டுப்பாடுகள் ஒரு பெரிய உறிஞ்சு தாளாகி நம் உணர்வு களையும் பிரியங்களையும் உறிஞ்சி ஒரு வெறுமையைக் காண்பிக்கவே எப்போதும் படபடத்துக் கொண்டிருந்தது.  

கோயில் பரப்பில் சிறுசிறு மணற்துகள்கள் கால்களுக்கும் அழுத்தி ஊன்றிய உள்ளங் கைக்கும் சிறுசிறு சங்கடங்களை உண்டாக் கியது. உனக்கும் எனக்குமிடையிலும் உனக்கு மட்டுமாகவும் எனக்கு மட்டுமாகவும் பகிரப் படாத சங்கடங்கள் உறுத்திக¢ கொண்டிருந்தன. சற்றுத் தள்ளித் தூண் ஒன்றில் தலையை மேல் நோக்கிச் சாய்த்து, சாய்ந்து அமர்ந்து கொள் கிறாய். என்னையறியாமலே நான் உன்னை நோக்கிச் சற்று முன்னோக்கி நகர்கிறேன். இடைவெளியைக் கூட்டிக்கொள்ள நான் விரும்பவில்லை. உன்னுள்ளிலிருந்து இயலா மையும் வருத்தமும் மூச்சுகாற்றாய் வெளிவரு கிறது. உன் நெஞ்சு அகடுமுகடென ஏறி இறங்குகிறது. அகடு முகடுகளில் நான் அடைந்து கொள்கிறேன். உன் நெஞ்சோடு சாய்ந்துகொள்ள விரும்புகிறேன். உன் விரல் கள் என் தலை கோதி என் முதுகு வழியோடி என்னை ஆற்றுப்படுத்தாதா எனும் ஏக்கம் என்னுள் எழுந்து படமெடுக்கும் போதெல் லாம் பார்வையைச் சிலையன்றின் மீது நிலைக்குத்தி, நானே என்னை அடக்கி ஆசுவாசப்படுத்துகிறேன். 

என் மேசையின் மீது ஒரு சிறிய பொருள் வைக்கப்பட்டிருந்தது. அது பரிசுப்பொருள் என்பதும் தெரிந்தது. அதை நீதான் வைத்திருக்கக்கூடும் என்பதும் தெரிந்தது. பரிசுப் பொருளோடு உணர்வுகளைப் பகிர்ந் தபடி உன் வருகைக்காக நீண்ட நாட்கள் காத்திருந்தேன். நீ வரவில்லை. உன் பரிசுக்கு நன்றி சொல்லச் சொற்களின் காடொன்று என்னுள் காத்துக்கிடந்தது. மிகச்சிறந்த வார்த்தைகளில் நன்றி சொல்ல விரும்பினேன். ஒவ்வொரு வார்த்தைகளின் போதும் என் பிரியங்களால் என்னை உன்னிடம் ஒப்படைத்துவிடக் காத்திருந்தேன். என் காத்திருப்பின் எல்லை இன்றுதான், இங்கு தான், இப்போதுதான், முடிந்திருக்கிறது. நீ வரவேயில்லை. உன்னைப் பற்றி விசாரிக்கும் அளவுக்கு அங்கு இருந்த யாரும் எனக்கு நெருக்கமானவர்களாக இல்லை. தேடலின் பயணத்தில் உனக்குத் திருமணம் எனும் செய்தி குறுக்கிட்டு என் பயணத்தை நிறுத்தியது. உன் பரிசுக்குப் பதில்தரக் காத்திருந்த வார்த்தைகளின¢ காடு எனக்குள்ளே புதைந்து போனது. அவ்வப்போது நீர்க் குமிழிபோல் குமிழியிட்டு உடைந்துபோகும். எனினும் திரும்பத் திரும்ப உருப்பெற்றுக் கொண்டே இருந்தது. 

என¢ மீதான உன் பிரியங்கள் பொய் என்பதை எந்த நிலையிலும் மனம் ஒத்துக் கொள்ள மறுத்தது. மீண்டும் மீண்டும் அக்காக் குருவி போல உன் பிரியம் நிஜம் எனும் குரல் என்னுள் ஒலித்துக்கொண்டே இருந்தது. என்னை ஏன் பிரிந்தாய் என என்னால் கேட்க முடியாது. நாம் பிரிந்ததாக நான் உணர்ந்ததே இல்லை. ஏன் நீ திரும்ப வரவில்லை? என்று மட்டுமே எனக்குள் கேட்டுக்கொண்டேன். என் அன்பு உனக்குப் புரியவில்லையா எனக் கேட்க முடிய=வில்லை. என் அன்பை எப்படி உன்னால் ஒதுக்க முடிந்தது என்று மட்டுமே எனக்குள் கேட்டுக்கொண்டேன். வாழ்க்கை யின் சதுரங்கத்தில் நீ எந்தப் பகடைக்காய் ஆனாய். எது என்னை வெட்டி உன்னை வென்றது. “ஏன் என்னைப் பிடித்தது என்பதை நீ ஏன் என்னிடம் கூறவில்லை.” என்று இறைஞ்சும் குரலில் கேட்கிறாய். நான் “நீ ஏன் திரும்ப வரவில்லை.” என்பதை உன்னிடம் கேட்கிறேன். இருவரும் விடைகளற்று ஒரே சிலையை நோக்கிக் கொண்டிருக்கிறோம். 

உனக்கு இரண்டு மகள்கள் இருப்பதையும் அவர்களில் ஒருவருக்காவது என் பெயர் வைக்க விரும்பியதையும் இயலாமல் போனதையும் கூறுகிறாய். என்மீதான நேசம் உனக்குள்ளிருந்ததை இதன் மூலம் தெரிவு படுத்துகிறாய். நான் எனக்கு ஒரு மகன் இருப் பதையும் அவன் உன் ஜாடையில் இருக்கக் கொடுத்து வைக்காததையும் நினைத்து உன்னிடம் வருந்துகிறேன். அகடு முகடென மூச்சுவிடுகிறாய். நான் அந்த இடைவெளி களில் அடைந்துகொள்கிறேன். எனக்கும் உனக்குமிடையாய் அகப்பட்ட எல்லாமே நமக்குப் பொதுவானதாகிப் போகிறது. 

யுவன் யுவதிகளை மட்டுமே கோயில் அனுமதிக்கிறது. ஆணாகவும் பெண்ணாகவும் அவர்களை அவர்களுக்கு அடையாளப் படுத்துகிறது. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கு மாய் அங்கங்கே வாழ்க்கையின் ரகசியங்கள் பொதிந்து வைக்கப்பட்ட இடம் கோயில். ஆணையும் பெண்ணையும் அர்த்தநாரியாய் மாற்றும் வித்தை பொக்கிஷம் கோயில். அதற்குக் குடும்பம், சாதி, பொருள் பற்றிய கவலையில்லை. கோயில் ஆணுக்கும் பெண்ணுக்குமாய் உருவாக்கி வைக்கப் பட்டது. அதை மனிதன் தனக்கே தனக்காய் மாற்றிக்கொண்டான். 

“ரொம்ப அழகா இருக்க, முன்னாடி பார்த்த மாதிரி அப்படியே இருக்க, எனக்கு உன்ன ரொம்பப் பிடிக்கும். எப்பவும் எனக்குப் பிடிச்ச மாதிரியே இருக்க, ரொம்பக் கஷ்டமா இருக்குடா” நான் சொல்ல நினைத்ததை நீ உன் குரலில் சொல்கிறாய். நான் கண் கலங்கி உன்னைப் பார்க்கிறேன். நான் அழகான்னு தெரியவில்லை. உன் பாசந்தான் என்னை அழகாக நினைக்க வைக்கிறது. எனக்கும் நீ மட்டுமே அழகாய்த் தெரிகிறாய். கண்ணால் சுற்றி வட்டமிட்டுப் பார்க்கிறேன். பத்துப் பதினைந்து ஆண்கள் கண்ணுக்குத் தெரிகிறார்கள். யாரும் உன்னைப் போல அழகாகத் தெரியவில்லை. “உன்னைப் பார்த்த உடனே ஏதோ ஒரு உணர்வு பூத்துச்சு, அப்புறம் எனக்குக் கல்யாணம், அதன் பிறகும்கூட உன் நினைவுகள் நிரந்தரமா மனசுல தங்கிடுச்சு. அதனாலோ என்னவோ வேறு பெண்களோ வேறு உறவுகளோ பெரிதாப் படவில்லை” என்கிறாய். என் மனதையும் நீ மொழி பெயர்க் கிறாய். என் உணர்வுகளை நீ பேசுகிறாய். எனக்கும் உனக்குமிடையாய் எப்போதோ எப்படியோ இது சாத்தியப்பட்டுவிட்டது. மீண்டும் கலங்குகிறேன்.  

கோயில்கள் தனக்குள் ஒரு இறுக்கத்தைச் சுமந்தபடியே இருக்கின்றன. ஆனால் அவை பாதுகாக்கப்படுவதில்லை. மனிதர்கள் தங்கள் சலசலப்பினால், இயக்கத்தினால் தன் எதிரே நிற்கும் மரணத்தை மிக எளிதாய் நகர்த்தி விட்டுப் போவதுபோல, கோயில்களின் இறுக்கத்தை மனித இயக்கங்கள் தளர்த்து கின்றன. கோயில்களை இயங்க வைக்க மனிதர்கள் வேண்டும். தெய்வங்கள் உறவாட, இயங்க மனிதர்கள் வேண்டும். கோயிலுக்கு வராமல் மனிதர்கள் இருந்துவிடலாம். மனிதர்கள் இல்லாமல் தெய்வங்களால் வாழ முடியவதில்லை. அவை பாழடைந்து விடும். தெய்வம் சக்தியை இழந்துவிடும் அதன் புனிதம் கலைக்கப்படும் கோயில்கள் சபிக்கப் பட்ட இடங்களாகும். கோவிலுக்கு மனிதர் கள் தேவை. மனிதர்கள் மறுக்கும்பொழுது தெய்வங்கள் மனிதனைத் தேடிப் புறப்பட்டு விடுகின்றன. தெய்வங்களுக்கு மனிதன்தான் மூலாதாரம். தெய்வங்களுக்கு மனிதன்தான் குலதெய்வம். மனிதர்களும் தெய்வங்களும் ஒன்றுபடுத்திக் கொள்ளும் ஒரு புள்ளியே கோயில். 

நீயும் நானும் ஒன்றுபடும் புள்ளியின் பரப்பு பெரிதாகிக்கொண்டே வருகிறது. என்னுள் கதறும் குரலை உள்வாங்குகிறாய். இறந்த காலமும் நிகழ்காலமும் நமக்கு வேறு வேறாக இல்லை. இறந்த காலத்தைக் கடத்திக் கொண்டே நிகழ்காலத்திற்குப் பயணித்திருக் கிறோம். நம் இறந்த காலப் பாடலுக்கான நிகழ்கால நடனத்தை தேவதைகள் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். ரசிப்பதற்கும் வெறுப்ப தற்கும் அதில் நமக்காக ஒன்றுமில்லாதிருந்தது. தவிப்பும் ஏக்கமும் மட்டுமே நிறைந்து கிடந்தது. அந்தச் சூழலில் வலிய ஒரு வெற்றுப் புன்னகையைச் சிந்துகிறாய். தற்காலிகமாகச் சூழலை மாற்ற விரும்புகிறாய். திரும்பவும் பொய்களோடு ஒத்துப்போக விரும்பாத நான், முகத்தை இருந்தபடியே வைத்துக்கொள் கிறேன். நீ நன்றாக அறிவாய் நம்மிடையே புன்னகைக்க ஏதுமில்லை என்ற போதும் நிஜத்தைத் தோலுரித்து அதைத் தின்று செரித்துவிடக் காத்திருக்கும் அன்பு அரக்கியாய் உன் முன் இருக்கிறேன். 

அப்பா சிறு வயதில் இராமயணக் கதை சொல்லுவார். சூர்ப்பனைக்காக அவர் ஒரு முரட்டுக் குரலைத் தயார் நிலையில் வைத்திருப்பார். சூர்ப்பனகை அதியாசை கொண்டவளாக, அதீத காமுகியாக, காமம் பிதுங்கி வழியும் உடலுக்குச் சொந்தக்காரியாக, குறிப்பாகப் பெண் எனும் வறட்டு இலக்கண எடுத்துக்காட்டுக்குத் தகுதியற்றவளாக அவளைக் காட்சிப்படுத்துவார். காப்பியத்துள் புகுந்து அவளை அழித்து விடும் வெறுப்பு அந்தக் குரலிலிருந்து வெளியேறும். மாற்றாக எங்கள் தெருவின் மத்தியிலிருந்து பெரிய வீட்டுத் திண்ணையிலமர்ந்து, வருடா வருடம் வந்துபோகும் கோவூர்க் கதைசொல்லித் தாத்தா அதே சூர்ப்பனகையை வேறு வடிவில் அங்கு கூடியிருக்கும் மக்கள்முன் வைப்பார். 

தாத்தா சூர்ப்பனகையாகத் தன் உடற் கூட்டை மாற்றிக்கொள்வார். அவள் இலக்குவனனோடு வாதம் புரியும் குரல் அனைவர் செவிகளிலும் கேட்கும். அந்தக் குரல் ஆணின் கரகரப்பு ஏறிய பெண் குரலாக ஒலிக்கும். அர்த்தநாரி குரல் அது. அழுகை தாங்கி, உக்கிரமாய்க் குரல் ஒலிக்க ஆரம்பிக்கும். இலக்குவனா எதற்காக என் உறுப்புகளைச் சிதைத்தாய்? உன் அண்ணன் ராமனை எனக்குப் பிடித்ததில் என்னடா தவறு? ஆயிரம் பெண்டாடும் உன் அப்பன் உறுப்பை அறுப்பாயா? எனக்கு ராமனை மட்டும்தானடா பிடிக்கிறது. அவனுக்குத் தகுந்த இணை நான். அவன் திரண்ட தோள்களுக்குச் சீதையின் மென்தடக்கைத் தோல்கள் போதாது வில்லொடித்த அவன் வீரத்திற்கு என் பெண்மை மட்டுமே ஈடாகும். கைகேயின் விரல்கள் தசரதனைக் கட்டுப்படுத்தலாம். ராமனை அடக்க அவற்றுக்கு அதிகாரமில்லை என வாதமிட்டு அவனை ஆட்சிபீடத்தில் அமர்த்தும் அறிவுத்திறம் எனக்குண்டு. சீதை அவன் வழித்தடம் பற்றுபவள். நான் அவன் தோள்பற்றி வழிநடத்தக் கூடியவள் என் காமத்தைக் கட்டியடக்க அவனால் மட்டுமே முடியும் என நான் உணரும்போது, அவன் காமம் என்னிடம் மட்டுமே முற்றுப்பெறும் என்பதை அவன் உணரக்கூடும். பெண்மையின் அழகு மென்மையில் இல்லை என்பதை உணர்ந்தவன் ராமன். அவனை ஓரு முறை என் முன்னே அனுப்பு, அவன் என் பின்னோடு வந்துவிடுவான். ராமா வெளியே வா, ஏகபத்தனி விரதன் என்று புகழும் வரலாறு நாளை உன்னைச் சந்தோசக்காரன் என்று இழிவுபடுத்தும். என்னை ஏற்றுக்கொள் ராமா, என் காமம் களைத்துப் போடு, ஒரு முறை உன் தேகம் இணையப் பலநாள் வாழ்வேன். நீ எனக்கானவன், நான் உனக்கானவள் என்பதை உணர வா, ராமா, உன் சமூகம் இட்ட கோடுகளையும் எல்லைகளையும் கடந்து வா ராமா, ஒரே ஒரு முறை வந்து என்னைப் பார், என்னை விட்டுத் திரும்பிப் போகமாட்டாய்.....” உடம்பெங்கும் காதுகளாகிக் கேட்போரின் ஒவ்வொரு செல்லும் அறுபட்டுக் கிழிந்து தொங்கும். 

கறுப்பு சூர்ப்பனகை மெல்ல மெல்ல அவர் குரலில் வண்ணம் கலைந்து வெற்றாக மாறு வாள். கதை கேட்பவர்கள் முன் சூர்ப்பன கையை நீதி தேவதையாக்கி நிறுத்திவிடுவாள். எல்லோருக்குள்ளும் ஏதோ புரண்டு ஒரு தலைகீழ் மாற்றம் நிகழ்ந்தபடி இருக்கும். எல்லோருடைய உள்மனம் திறந்து ஆழ்மனம் வெளிப்படும். அது மெல்ல மெல்ல சூர்ப்பனகையின் பக்கம் தலைசாய்க்கும். எல்லோருக்குள்ளும் ஒரு சூர்ப்பனகையை அழவிடுவார் தாத்தா. எல்லோரும் எதையோ கடப்பதற்கான வேகத்தை உள்ளத்திலும் திறக்க முடியாத மௌனத்தை முகத்திலும் சுமந்தபடி கலைந்து போவார்கள். மணப் பந்தல் தீப்பற்றி எரிவதுபோல் அன்றிரவு சிலர் கனவு காண்பார்கள். 

உன்னருகில் உன்முன் அமர்ந்திருக்கிறேன். என்னருகில் வருகிறாய், என் தலையின் மீது கைவைத்துத் தடவுகிறாய் நான் உருகிக் கரைகிறேன். நேரமாகுது இருவருமே கிளம்ப வேண்டும் என்கிறாய். கண்களால் மறுத்தபடி குனிந்து கொள்கிறேன். சமூகத்தின் மீதான எரிச்சல் கசப்பாய் என்னுள் பரவிக் கிடக்கிறது. எதைப் பற்றி யோசித்தாலும் துரத்தப்படுவது சிந்தனையாகிறது. இங்கே விடைகளுக்கு மட்டுமே மதிப்பெண்கள். கேள்விகளுக்கு மதிப்பெண் அளிக்கப்படுவதில்லை. பஞ்சு திணிக்கப்பட்ட தலையணை உறைபோல் முரணான கட்டுப்பாடுகளில் அடைக்கப் பட்டுக் கிடக்கிறோம். நம் வாழ்க்கையைப் பரிசளிக்க இவர்கள் யார்? நம் வாழ்க்கையை இச்சமூகம் இரையாக்கிக் கொள்கிறது. நான் குலுங்கிக் கதற ஆரம்பிக்கிறேன். “ஏதாவது கேளு தயவு செய்து, என்னை அமைதிப்படுத்திக் கொள்கிறேன்.” என்கிறாய். எதைக் கொண்டோ எதையோ இடையிட்டு, எதையோ நிறைக்கும் தவிப்பு உனக்குள் சலசலக்கிறது. எதைக் கொண்டும் நிரப்ப முடியாத நேசப்பள்ளத்தில் நாம் வீழ்ந்து கிடக்கிறோம் என்பதை அறிந்திருக்கிறாய். ஏதாவது என்னிடமிருந்து பெற்றுக்கொள் என்று உன் கண்கள் இறைஞ்சுகின்றன. உன் சாட்சியாயும் இங்குள்ள ஒவ்வொருவர் சாட்சியாயும் தெய்வமாய் உறைந்து கிடக்கும் மூத்த குடி சாட்சியாயும் கேட்க ஆரம்பிக் கிறேன். 

“எனக்கு நீ வேண்டும். எனக்கும் உனக்கு மான வாழ்க்கை திரும்ப வேண்டும். எனைப் பொய்களின் கைகளில் இருந்து அள்ளிக் கொள். என் வாழ்க்கையை எனக்குத்தா” 

சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட மத யானைபோல் நகர்ந்து செல்கிறாய். என் பிரியங் களும் எனக்கான உன் பிரியங்களும் உன் கணத்தைக் கூட்டுவதை நான் உணர்கிறேன். இலையின் நுனியில் மழையின் கடைசித் துளி நடுங்குவது போலப் பார்வை ஒன்றை என்மீது வீசுகிறாய். சங்கிலியில் ஒவ்வொரு கண்ணிக்கும் கண்களாகித் துரத்த நீ ஒருபுறமும் நான் ஒரு புறமும் பிரியத் துவங்கும் புள்ளியில் திசைகள் தோன்றுகின்றன. 

- எஸ்.தேன்மொழி