ஓய்வே பொழுதாய் மலரும்
மாயக்கிழவி ஒருத்தி
தன் சேமிப்புகளின்
சிமிழ் திறந்து பார்ப்பதைப் போல்

உறக்கம்
தன் கனவு வெளியை
திறக்கிறது
உள்ளீடற்ற சிப்பியைப் போல்
உடல் மௌனமாய்
கரையொதுங்கி நிற்கிறது
ஆர்பரித்துத் தொடரும் பயணம்
இழப்புகளை
பேரலைகளாக்கி
கனவு வெளியை
புரட்டி எடுக்கிறது
தாமதிப்பாலான
இழப்பின் கணங்கள்
முகவாயில் சிந்திப்போன

முத்தங்கள்
நெரிசல்மிகு சாலையில்
கைவிரல் விட்டு
தனித்து ஓடும் குழந்தை
வனாந்திரமொன்றில்
இணைதேடி
கரைந்தழும் பறவை

என மனப்பரப்பெங்கும்
இழப்பின் அலைகள்
விடியலொன்றில்
மரத்தின் சருகொன்று
உதிர்வது கண்டு
திடுக்கிட்டு நெருங்க
என் உடல்
மிதந்து கொண்டிருக்கிறது
அந்தரத்தில்.


............................


புறங்கையைக் கட்டிக் கொண்டு
அப்பாவின் அருகாமையை
தவறவிடாத நடை

பதிந்த பருத்த கால்தடங்களுக்குள்
ஒளிந்து விளையாடும்
சின்னஞ்சிறு முயல்குட்டி ஒன்று போல்
பாதம் பதித்து பரவசங்கொள்ளும்
அப்பாவிற்கு இணையாக நின்று
கால்களை அகல விரித்து
சிறுநீர் கழிக்கும் லாவகம்
விரல்களின் அபிநயத்துடன்
சரிக்கு சரி அமர்ந்து
சேதி சொல்லும் பாங்கு
இடையே

ஓரக்கண்ணால் என்னைப் பார்த்து
ஓடிவந்து கால்களைக் கட்டி
ஒரு சுற்று சுற்றி
முத்தம் ஒன்று பதிக்கும்

உனக்கிது போதும்தானே
என்ற புரிதல் வழிந்தோடும்
முத்தத்தின் எச்சில் ஈரத்தில்.