வியர்வை குறித்து கலை இலக்கியவாதிகளும், தத்துவ ஞானிகளும், அறிஞர் பெருமக்களும் எண்ணற்ற கருத்துக்களைக் கூறியுள்ளனர்.

நெற்றி வியர்வை சிந்தினோமே முத்து முத்தாக,..

அது நெல் மணியாய் விளைஞ்சிருக்கு கொத்து கொத்தாக...!

என்றொரு பழைய திரைப்பாடலின் வரிகளில் வியர்வை பெருமைபடுத்தப்படுகிறது.

என் ஒரு துளி வியர்வைக்கு,

ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தது தமிழல்லவா!

என்று பிரபல திரைக் கதாநாயகன் பாடலின் கருத்தின் மூலம், மக்களின் வியர்வை சிந்தி உழைத்த பணம் ஒரு துளி வியர்வை கூட சிந்தாதவர்களின் பைகளில் தங்கக் காசுகளாக சேர்வதை அறிய முடிகிறது.

உழைப்பவனின் வியர்வை ஈரம் காயும் முன்பே, உழைப்பிற்கான ஊதியத்தைக் கொடுத்து விட வேண்டும் என்கிறார் முகமது நபிகள். மாவீரன் நெப்போலியன் தன் காதலி யோசப்பினுக்கு எழுதிய கடிதத்தில் அன்பே உன் இயற்கையான வியர்வை மணத்தில் மகிழ்ச்சி அடைகிறேன். நாளைக் காலை பாரிசுக்கு வருகிறேன். தயவு செய்து உன் உடம்பை அதற்குள் கழுவி விடாதே என்று குறிப்பிட்டுள்ளார்.

இத்தகு பெருமை மிக்க வியர்வையின் இயற்கைப் பலன்கள்-

தோலில் உள்ள வியர்வைச் சுரப்பிகள் (சுடோரிபெரஸ் கிளான்ட்ஸ்) வியர்வை திரவத்தை கசிந்து வெளியேற்றுகின்றன. உடலின் உஷ்ண நிலையை சீராக வைத்துக் கொள்ள வியர்த்தல் உதவுகிறது. தோல் மென்மையானதாகவும், ஈரப்பதமாகவும் அமைவதற்கு இதுவே காரணமாகும். வெயிற் காலங்களிலோ, அல்லது உடலில் உஷ்ணம் மேலோங்கிய நிலையிலோ வியர்வைச் சுரப்பிகளால் சுரக்கப்படும் வியர்வை காரணமாகவே உடல் இதமாக பாதுகாக்கப்படுகிறது. தோலில் இருந்து வியர்வை ஆவியாகி மறையும் போது உடலில் குளிர்ச்சியை உணர முடிகிறது.

அதிக வியர்வைக்கு காரணங்கள் என்ன?

வியர்வை அதிகரிப்பதற்கு உடல் வெப்ப அதிகரிப்பும் ஓர் காரணம். எனினும் உடலின் சில பாகங்களில் குறிப்பாக அக்குள் பகுதியிலும், அடிப் பாதங்களிலும், உள்ளங்கையிலும், நெற்றியிலும், வியர்வைச் சுரப்பிகள் அதிகளவு வியர்வையை சுரக்கக்கூடும். மத்திய நரம்புத் தூண்டப்பட்டு கை, கால் வியர்வைச் சுரப்பிகள் அதிகளவு வியர்வையை சுரக்கக்கூடும். பெண்களை விட ஆண்களுக்கே அதிக வியர்வை சுரப்பதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

சில பல தூண்டல்களால் உடலில் அதி வியர்வை ஏற்படலாம். வெப்பம், வலி, பயம், பதட்டம், உடலுழைப்பு, குமட்டல், வாந்தி போன்ற காரணங்களால் வியர்வை அதிகரிக்கலாம். சிலவகை ஆங்கில மருந்துகள் வியர்வையை அதிகரிக்கச் செய்யலாம். தாளம்மை, நிமோனியா, ஆஸ்த்துமா, காசம், டைபாய்டு சுரம், இதய நோய் போன்ற கடுமையான நோய் தாக்குதல்களுக்குப் பின்னர் வியர்வை அதிகரிக்கலாம். தினமும் மாலை அல்லது இரவு லேசான சுரத்துடன் உடலில் வியர்க்கவும் செய்தால் காசநோய்க்கான அறிகுறியாகக் கொள்ளலாம்.

உழைப்பே இல்லாதவர்களை விட உழைப்பவர்களுக்கும், நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளவர்களுக்கும் இரண்டு மடங்கு வியர்வை வெளியேறுகிறது. விளையாட்டு வீரர்களுக்கு ஒவ்வொரு நாளும் 5 லிட்டர் அளவுக்கு வியர்வை வெளியேற்றப்படுகிறது.

அதி வியர்வை அவதியே!

இயல்பாகவே வியர்வை வெளியேறினால் உடல் உஷ்ணம் சீராகப் பராமரிக்கப்படுகிறது. இரத்த சுத்திகரிப்பு, மென்மையான தோல் அமைப்பு போன்ற நன்மைகள் கிடைக்கின்றன. மாறாக அதிகளவு வியர்த்தல் காரணமாக உடலிலும், மனதிலும் அசௌகரியங்கள் ஏற்படுகின்றன. உலகில் மில்லியன் கணக்கானோர் அதிவியர்வை பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். உலக மக்கள் தொகையில் 3 சதவீதம் பேர்களுக்கு அதிவியர்வை பிரச்சனை உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இயல்பான வியர்வையோ, அதிக வியர்வையோ அது வெளியேறும் சமயத்தில் வாசனை எதுவும் இருப்பதில்லை. இரத்தத்தில் உள்ள வெளியேற்றப்பட வேண்டிய பொட்டாசியமும், உப்பும் நுண் கிருமிகளுடன் கூட்டணி ஏற்படுத்தி துர்நாற்றம் உண்டாகிறது. உடல் வியர்வை குளிப்பதன் மூலம் மற்றும் கழுவுவதன் மூலம் முறையாக அகற்றப்படாவிட்டால் துர்நாற்றம் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

காற்றோட்டமான சூழலிலும் கூட, குளிர் காலத்திலும் கூட, வேலையற்று ஓய்வாக இருக்கும் போது கூட சிலருக்கு வியர்த்துக் கொட்டும். சிலரது உள்ளங்கை, உள்ளங்கால்களில் வியர்வையின் ஈரப் பிசுபிசுப்பு எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். இவர்களைப் போன்ற அதிவியர்வையாளர்கள் அவரவரின் அறிகுறிகள், தனித் தன்மைகளுக்கேற்ப ஹோமியோபதி மருந்துகளில் சிகிச்சை பெற்று முழு நலம் பெற முடியும்.

ஹைப்பர் ஹைடிரோசிஸ் எனப்படும் அதிவியர்வைப் பிரச்சினையைத் தீர்க்க உதவும் சில முக்கிய ஹோமியோ மருந்துகளையும், அவற்றிற்கான அறிகுறிகளையும் பார்ப்போம்.

கோனியம்: கண்களை மூடித் தூங்க ஆரம்பித்ததும் ஏராளமாக வியர்த்தல்.

சம்புகஸ்: தூங்கி விழிக்கும் போது முகத்திலும் பின்னர் உடல் முழுவதும் ஏராளமாக வியர்த்தல்.

ஜபராண்டி, பைலோகார்பஸ்: உடல் முழுவதும் அதிகளவு வியர்த்தல்.

கல்காரியா கார்ப்: தலை, மார்பு, கை-கால்கள், பிறப்புறுப்புப் பகுதிகளில் ஏராளமாக வியர்த்தல். பருத்த உடல் வாகு, கைகளிலும், பாதங்களிலும் எப்போதும் வியர்வைக் கசிவு, தலைப் பகுதியில் இரவில் தலையணை நனைந்து விடும் அளவு வியர்த்தல்.

சிலிகா: பாதங்களில் நாற்றமுள்ள வியர்வை கசிவு.

தூஜா & கலாடியம்: தேன் போன்ற வாசனையுடனும் இனிப்பாகவும் அதிகளவு வியர்த்தல்.

ஆர்ஸ்-அயோடு: இரவில் உடல் நனையுமளவு, உடலைப் பலவீனப் படுத்தும் அதிகளவிலான வியர்வை.

கார்போ அனிமாலிஸ்: இரவில் நாற்றமுள்ள அதிக வியர்வை.

அம்மோனியம் மூர்: இரவில் பாதங்களில் அதிகம் வியர்த்தல்.

ஆண்டிமோனியம் டார்ட்: அதிக மார்புச் சளியால் இருமலால் குளிர்ந்த வியர்வை.

பாஸ்பாரிக் ஆஸிட்: கடும் நோய், உயிர் திரவ இழப்பு, துக்கம் போன்ற குறிகளுடன் அதிக வியர்வை.

கார்போ வெஜ்: நோய்களுக்குப் பின் உயிர்நீர் இழப்பு காரணமாக அதி வியர்வை.

நேட்ரம் மூர்: ஒவ்வொரு சிறு உழைப்பிலும் கூட அதிகளவு வியர்த்தல்.

காலி கார்ப்: முதுகு வலி, இடுப்பு வலியுடன் அதிகளவு குளிர்ச்சியான வியர்வை. சிறிய உழைப்பினாலும் அதிகரிக்கும்.

செலினியம்: உப்புக் கரிப்பான மஞ்சளான அதிக வியர்வை, காலை நேரம் நோய் அதிகரிப்பு.

செபியா: அக்குளிலும், தொடை இடுக்கிலும் புளிப்பு நாற்றமுள்ள அதிக வியர்வை.

முக்கிய குறிப்புகள்;

1. நோயாளி விசாரணையில் அவரது நோய் வரலாற்றுத் தொகுப்பில் வியர்த்தல் குறித்த விபரம் அவசியம் இடம் பெற வேண்டிய முக்கிய குறியாகும்.

2. துர்நாற்றமுள்ள அதி வியர்வைப் பிரச்சினைக்கு: பாப்டீசியா, கல்கேரியா கார்ப், ஹீப்பர், மெர்க்சால், நைட்ரிக் ஆஸிட், நக்ஸ்வாம், பெட்ரோலியம், சிலிகா, சோரினம், சல்பர், தூஜா .

3. உள்ளங்கையில் அதி வியர்வைத் தொல்லையைத் தீர்க்க: பாரிடா கார்ப், கல்காரியா கார்ப், நேட்ரம் மூர், சோரினம், சிலிகா, நைட்ரிக் ஆஸிட் .

4. உள்ளங்கால்களில் அதி வியர்வைப் பிரச்சனைக்கு: அலுமினா, அம்மோனியம் மூர், பாரிடா கார்ப், கல்காரியா கார்ப், லைகோ, மெர்க் சால், நைட்ரிக் ஆஸிட், சோரினம், சானிகுலா, சிலிகா, டெல்லூரியம், ஜிங்கம் மெட்.

இவை தவிர அவரவர் தனித் தன்மைக்கு ஏற்ற சிறந்த ஹோமியோ மருந்துகள் ஏராளமாக உள்ளன.

- Dr.R.ஆவுடேஸ்வரி