“யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு” இப்படி நயமாகச் சொல்கிறார் வள்ளுவப் பெருந்தகை.

உலகத்தில் பயங்கரமான ஆயுதம், நிலை கெட்டுப்போன நயவஞ்சகரின் நாக்கு என்று கோபமாக அடையாளம் காட்டுகிறார் பட்டுக்கோட்டையார்.

தமிழகத்தின் அம்மா ஜெயலலிதாவாம். இந்தியாவின் அம்மா மோடியாம்.

தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராசனின் நாவன்மையில் விழுந்த ‘பொன்மொழி’ இது.

ஆண்பாலுக்கும் பெண்பாலுக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமை கூடத் தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார் இவர்.

கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து, மத்திய அரசுக்கு எதிராக அவதூறுகளைச் சொல்லி வருகிறாராம் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் & சொல்கிறார் தமிழிசை.

அது அவதூறு இல்லை, உண்மை!

பா.ஜ.க.வைத் தவிர அனைத்துக் கட்சித் தலைவர்கள், அறிஞர் பெருமக்கள், தொல்லியல் விற்பனர்கள், மக்கள் என எல்லோரும்தான் கீழடிக்காக மத்திய அரசைக் கண்டித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

சிந்து சமவெளி நாகரிகத்தைப் பார்ப்பன நாகரிகமாகக் காட்டப் பல பொய்களைச் சொன்னார்கள் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.வினர்.

இல்லாத சரஸ்சுவதி நதியை இருப்பதாக நா கூசாமல் பொய் சொல்கிறார்கள்.

வால்மீகியே சொல்லாத இராமன் பாலத்தை இருப்பதாகச் சொன்ன இவர்களின் பொய்யை நாசா ஆய்வுப் படம் தகர்த்தெறிந்தது.

ஆனாலும் பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகிவிடும் என்று கோயபல்ஸ் பின்னால் நிற்கிறார்கள்.

“பொய்” - அது நமக்குத் தொழில் என்பது பா.ஜ.க.விற்குப் பொருந்தும். ஊடக விவாதங்களில் பா-.ஜ.க.வினரிடம் இதைப் பார்க்கலாம்.

கருப்புப் பணத்தைப் பிடுங்கி ஆளுக்கு 15 லட்சம் தருகிறேன்  என்றும், நாட்டை முன்னேற்றப் போகிறேன் என்றும் சொன்ன மோடியின் பொய் இதுவரை நின்றபாடில்லை.

பொய் சொன்ன வாய்க்கு போசனம் கிடைக்காது என்பார்கள் மக்கள்.

உண்மை பேசாவிட்டாலும் பரவாயில்லை.

இனியாவது ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க.வினர் (மற்றவர்களை தூற்றிப்) பொய் பேசாமல் இருப்பது நல்லது.

முதலில் இனிமையாகப் ‘பேசுவதற்குக்’ கற்றுக்கொள்ள வேண்டும்.