கோடைமழையில் திடீரென தொடங்கும் குடை வியாபாரம் போல தேர்தல் அறிவிப்பு வந்ததும் மூன்றாவது அணி, நான்காவது அணி என்பன போன்ற அரசியல் கூட்டணிகள் உருவாவது இந்திய தேர்தல் அரசியலின் தவிர்க்கமுடியாத நிகழ்வு. ஆனால் அப்படி உருவாகும் எந்தவொரு அணிக்குமே அற்ப ஆயுள்தான் என்பது வரலாறு சொல்லும் செய்தி. இது, காங்கிரஸக்கு மாற்றாக உருவான ஜனதா அணிக்கும் பொருந்தும்; காங்கிரஸ்- பாஜகவுக்கு மாற்றாக உருவான ஐக்கிய முன்னணிக்கும் பொருந்தும்.

தற்போது மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழலிலும் மாற்று அணிகள் உருவாகத் தொடங்கியுள்ளன. முதலில் இடதுசாரிகளின் முன்னெடுப்பில் 11 கட்சிகளைக் கொண்ட மூன்றாவது அணி உருவானது. பூர்வாங்கக் கூட்டம் முடிந்து, பெயர் சூட்டும் வைபவத்துக்குத் தேதி குறிப்பதற்குள் அந்த அணியில் விரிசல் ஏற்பட்டுவிட்டது. உபயம் : அதிமுக -இடதுசாரிகள் மோதல்.

எப்போது உடைந்தது, ஏன் உடைந்தது என்று சுதாரிப்பதற்குள், அதிமுக, திரிணாமுல் காங்கிரஸ், மதச்சார் பற்ற ஜனதா தளம் ஆகியவற்றை உள்ளடக்கிய காங்கிரஸ், பாஜக, இடதுசாரிகள் அல்லாத ஃபெடரல் அணியை உருவாக்கும் முயற்சிகளும் தொடங்கியுள்ளன. தேர்தல் நெருக்கத்தில் இன்னும் எத்தனை மாற்று அணிகள் உருவாகும், எத்தனை அணிகள் கரைந்து போகும், எத்தனை அணிகள் உடைந்து போகும் என்று தெரியவில்லை.

என்றாலும், காங்கிரஸ் - பாஜகவுக்கு மாற்றாக ஒரு அணி உருவாகியே தீரும் என் பதில் சந்தேகம் இல்லை. அது தேர்தலுக்கு முன்பா, பின்பா என்பதுதான் இன்றுள்ள கேள்வி. அதைவிட முக்கியமான கேள்வி, இந்திய அரசியல் களத்தில் மாற்று அணி எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதுதான். அந்தக் கேள்விக்கான விடையை வரலாற்றின் வெளிச்சத்தில் தேடுவதுதான் சரியான காரியம்.

மாற்று அணி : நேற்று

சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து ஆட்சியில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சிக்கு வலுவான மாற்று உருவானது எமர்ஜென் சிக்குப் பிறகுதான். ஜனதா என்ற பெயரில் ஸ்தாபன காங்கிரஸ், ஜனசங்கம் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டமைப்பாக உருவான ஜனதா, காங்கிரஸை வீழ்த்தி, ஆட்சியைப் பிடித்தது. அதன்மூலம் காங்கிரஸ§க்கு மாற்றை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை அரசியல் களத்தில் விதைத்தது. சோகம் என்னவென்றால், அந்த மாற்று அரசு, அதிகாரப் போட்டியின் காரணமாக பாதிப்பயணத்தில் கவிழ்ந்துபோய் விட்டது.

என்றாலும், மாற்று அணிக்கான முயற்சிகள் தொடர்ந்து நடந்தன. முக்கியமாக, 1989ல் வி.பி. சிங், என்.டி.ஆர், கலைஞர் ஆகியோரின் முயற்சியால் உருவான தேசிய முன்னணியைச் சொல்ல வேண்டும். பல மாநிலக் கட்சிகளை உள்ளடக்கிய அந்த அணி, ஆட்சியைப் பிடித்தது. ஆனால் அதில் ஒரேயரு கரும்புள்ளி இருந்தது. அந்த அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவளித்த கட்சி பாஜக. ஆனால், ஆட்சி அமைந்து ஈராண் டுகள் முடிவதற்குள், மண்டல் கமிஷன் விவகாரத்தை முன்வைத்து வி.பி.சிங் அரசை வீழ்த்தியது பாஜக.

அதன்பிறகு மீண்டும் இடது சாரிகள், திமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகளைக் கொண்டு காங்கிரஸ் -பாஜகவுக்கு மாற்றாக ஐக்கிய முன்னணி 1998ல் உருவானது. தேர்தலில் வெற்றி பெற்ற அந்த அணி ஆட்சியிலும் அமர்ந்தது. உண்மையில் தேசிய அரசு என்ற பதத் துக்குப் பொருத்தமாக அமைந்தது இந்த அரசு. இந்திய அமைச்சரவையில் ஏறக் குறைய எல்லா மாநிலங்களுக்கும் பிரதி நிதித்துவம் கிடைத்தது. இந்த அரசில் இருந்த குறை, காங்கிரஸின் ஆதரவுடன் ஆட்சி அமைத்ததுதான். அதுவே அந்த அரசையும் வீழ்த்தியது.

மேற்கண்ட மாற்று அணிகளில் ஒரு விஷயம் முக்கியமானது. ஜனதா, தேசிய முன்னணி, ஐக்கிய முன்னணி ஆகியவற் றின் உறுப்பினர்கள் எல்லோருமே ஓரளவுக்கு ஒத்த கொள்கையும் ஒத்த சிந்தனையும் கொண்டவர்கள். ஆனால் அதிகாரப் போட்டி களும் ஆட்சிக்கு ஆதரவளித்த கட்சிகளின் சுயநல அரசியலுமே இந்த மூன்று அரசுகளை அற்ப ஆயுளில் வீழ்த்தின.

கடந்த கால கசப்பனுபவத்தின் காரணமாக, மாற்று அணி முயற்சியை முன்னெடுக்கும் இடதுசாரிகள், காங்கிர சுடன் கரம் கோக்க முடிவுசெய்தனர். அந்த இடத்தில்தான் மாற்று அணிக்கான முயற்சிகள் சுணக்கம் அடைந்தன. 2004இல் இடதுசாரிகளின் ஆதரவால் ஆட்சி அமைத்து, ஐந்தாண்டுகள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்ற பெயரில் திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட் டோரின் ஆதரவுடன் ஆட்சி நடத்தியது காங்கிரஸ். பின்னர் அதே ருசியில் அடுத்த ஐந்தாண்டு கால ஆட்சியை இடதுசாரிகள் இல்லாமலேயே முடித்துவிட்டது.

ஆக, பத்தாண்டு காலத்துக்குத் தொடர்ச்சியாக காங்கிரசே ஆட்சித்தலை மையில் இருந்தது. அதன் காரணமாக, மாற்று அணி என்ற பதம் அரசியல் களத்தில் வெறுமனே வார்த்தை அளவில்தான் இருந்தது; செயல்வடிவம் பெறவில்லை.

மாற்று அணி : இன்று

பதினாறாவது மக்களவைக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் மீண்டும் மாற்று அணி முயற்சிகள் தொடங்கின. பொதுவாக இடதுசாரிகள் தான் மாற்று அணிக்கான முதல் செங்கல்லை எடுத்துவைப்பார்கள். காங்கிரஸ், பாஜகவை விரும்பாத கட்சிகளை ஒருங்கிணைத்து அணியை நிர்மாணிப்பார்கள். ஆனால் இம்முறை அந்த முயற்சியை சற்றே வித்தியாசமாகத் தொடங்கிவைத்தது ஆம் ஆத்மி.

ஊழல் எதிர்ப்பு, ஜன் லோக்பால் என்று அன்னா ஹசாரேவின் நிழலில் வளரத் தொடங்கிய அரவிந்த் கெஜ்ரிவால் ஆரம்பித்த ஆம் ஆத்மி டெல்லி சட்ட மன்றத் தேர்தலில் வெற்றிபெற்றது நாடு தழுவிய அளவில் ஆச்சரிய அலைகளை உருவாக்கியது. காங்கிரஸ் மீது ஊழல் குற்றச்சாட்டுகளும் பாஜக மீது மதவாத விமரிசனங்களும் எழுந்த நிலையில், அந்த இரண்டு கட்சிகளுக்கும் மாற்றாக ஆம் ஆத்மியை ஊடகங்கள் தொடங்கிப் பலரும் முன்வைத்தனர். கருத்துக் கணிப்புகளில் எல்லாம் ஆம் ஆத்மியும் அரவிந்த் கெஜ்ரிவாலும் நீக்கமற நிறைந்தனர்.

அதுதான் இடதுசாரிகளை யோசிக்க வைத்தது. காங்கிரஸ் - பாஜகவின் மாற்றாக புதிய சக்தி உருவாவதை உணர்ந்த கையோடு களத்தில் இறங்கினர். சமாஜ்வாதி, அதிமுக, ஐக்கிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், பிஜூ ஜனதா தளம், அசாம் கனபரிஷத், ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா உள்ளிட்ட 11 கட்சி களைக் கொண்ட மாற்று அணியை உருவாக்கியிருப்பதாக அறிவித்தனர். ஆனால் அந்தக் கூட்டத்திலேயே ஐக்கிய ஜனதாதளமும் பிஜூ ஜனதாதளமும் கலந்துகொள்ளவில்லை.

ஏதோ நெருடல் இருப்பது போலத் தெரிந்தது. அது அடுத்த சில வாரங்களில் அம்பலமானது. தமிழ்நாட்டில் இடதுசாரி களைத் தனது கூட்டணியில் வைத்திருந்த ஜெயலலிதா, திடீரென அந்தக் கட்சிகளை வெளியேற்றினார். மாற்று அணியின் மையப் புள்ளியாகக் கருதப்பட்ட ஜெயலலிதாவின் இந்த முடிவு அந்த அணியில் அடித்தளத்தை அடித்து நொறுக்கியது.

அதே வேகத்துடன், ஃபெடரல் அணி என்ற பெயரில், இன்னொரு மாற்று அணியை உருவாக்கும் முயற்சிகள் ஜெயலலிதா, மமதா பானர்ஜி ஆகியோரால் முன்னெடுக் கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

அந்த அணியில் காங்கிரஸ் - பாஜக -இடதுசாரிகள் என்ற மூன்று கட்சி களையும் பிடிக்காத அல்லது அவற்றுடன் இணைய விரும்பாத கட்சிகளான அதிமுக, திரிணாமுல் காங்கிரஸ், மதச் சார்பற்ற ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெறக் கூடும் என்கி றார்கள்.

மாற்று அணி:

நாளை மாற்று அணி என ஒன்று தேர்தலுக்கு முன்பு வலுவாக உருப் பெறுவதற்கு வாய்ப்புகள் மிகமிக சொற்பம். காரணம், இந்த அணியில் இடம் பெற்றுள்ள/ இடம்பெறவுள்ள எந்தவொரு கட்சியும் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் பலமாக இல்லை. அது போலவே, அந்த அணியில் உள்ள இரண்டு கட்சிகள் ஒரே மாநிலத்தில் பலம் பொருந்தியவர்களாக இல்லை. மாறாக, எதிரெதிர் நிலைப்பாட்டில் இருப்பவர் கள். அதன் காரணமாக, மாற்று அணிக் கட்சிகள் தேர்தல் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதால் யாருக்கும் லாபமிருக் காது. ஆக, தேர்தலுக்கு முந்தைய மாற்று அணி பெயரளவில் மட்டுமே இயங்க முடியும்.

மாறாக, தேர்தலுக்குப் பிறகு அமையவிருக்கும் மாற்று அணியின் வீரியமும் தாக்கமும் மிக அதிகமாக இருக்கும். பாஜக, காங்கிரஸ் என்ற இருபெரும் கட்சிகளுக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது என்ற சூழ்நிலை வரும்போது, புதிய ஆட்சியை அமைப்பதில் மாற்று அணியில் உள்ள மாநிலக் கட்சிகள் பிரதான இடத்தை வகிக்கப்போவது உறுதி. காரணம், இந்தக் கட்சிகளின் வசம் முந்நூறுக்கும் மேற் பட்ட இடங்கள் இருக்கும். அந்த முந்நூறு இடங்களும் 30,25,20,18 என்று பத்துக்கும் மேற்பட்ட கட்சிகளிடம் பிரிந்துபிரிந்து கிடக்கும். அவற்றை ஒன்று சேர்ப்பதும் சல்லடையில் தண்ணீரைச் சேமிப்பதும் ஏறக்குறைய ஒன்றுதான்.

இந்த மாற்று அணிக்கு ஆபத்து நிரம்பிய முக்கியமான பலவீனம் ஒன்று இருப்பதை புறந்தள்ளிவிட முடியாது. அது, மாநிலக் கட்சிகளின் தலைவர்களுக் குள் புதைந்துகிடக்கும் பிரதமர் கனவு.

சொந்த மாநிலத்தில் எண்பது தொகுதிகளை வைத்திருக்கும் முலாயம் சிங் யாதவ், மாயாவதி தொடங்கி நாற்பத்து சொச்ச தொகுதிகளை மட்டுமே வைத்திருக்கும் நிதீஷ் குமார், ஜெயலலிதா, மமதா பானர்ஜி வரை பலருக்கும் பிரதமர் பதவியின் மீது தீராத வேட்கை வந்திருக்கிறது. அதுதான் மாற்று அணியின் முதன் மையான பலவீனம்.

இந்தத் தலைவர்களில் அதிக இடத்தைப் பிடிப்பவர் பிரதமராகக் கூடும். ஆனால் அந்த இடங்கள் மட்டுமே ஆட்சியை அமைக்கப் போதுமானதல்ல. அறுதிப்பெரும்பான்மையைத் திரட்டுவது என்பது ஆகப்பெரிய சவால். அதைத் திறமையாகக் கையாளத் தெரிந்தவருக்கே பிரதமர் பதவி வசப்படும். அந்தத் திறமை யாருக்கு இருக்கிறது என்பதுதான் ஆதாரக் கேள்வி.

இந்த இடத்தில் ஒரு வரலாற்றுக் குறிப்பு:

கடந்த காலங்களில் உருவான மாற்று அணிகளில் ஏதோவொரு தேசியக் கட்சி (77ல் ஜனதா, 89, 96களில் ஜனதா தளம்) மூன்று இலக்க இடங்களைப் பெற்று, ஆட்சிக்குத் தலைமையேற்றது. ஆனால் இன்று எந்தவொரு மாநிலக் கட்சியும் மூன்றிலக்க எண்ணிக்கையைத் தொடமுடியாது. நாற்பது இடங்களைத் தொடுவதே குதிரைக்கொம்பு. இதுதான் இன்றைய யதார்த்தம். அதைப் புரிந்து கொள்ளாத தலைவர்களே நாளைய பிரதமர் நானே என்று வானத்துக்கும் பூமிக்கும் துள்ளிக் குதிக்கிறார்கள்.

அடுத்து, ஒரே நபர் தொடர்ந்து பிரதமர் நாற்காலியில் அமர்வதற்கு மற்ற தலைவர்கள் அனுமதிப்பார்களா என்பது அடுத்த முக்கியமான கேள்வி. குறைந்தபட்சம் ஒரு நாளேனும் பிரதமர் நாற்காலியில் அமர்ந்துவிடவேண்டும் என்ற வேட்கை கொண்ட பலரும் அங்கம் வகிக்கும் கூட்டணிக்கு அரசை நடத்து வதைக் காட்டிலும் தலைவர்களுக்குள் பொங்கிப் பிரவாகமெடுக்கும் உள்ளரசியலைச் சமாளிப்பதற்குத்தான் அதிக நேரம் செலவிட வேண்டியிருக்கும். ஆக, உதிரிகளின் உறைவிடமான மாற்று அணியால் நல்லரசு, வல்லரசு, நிலை யான அரசு என்ற மூன்றில் எந்தவொன் றையும் தருவது சாத்தியமில்லை.

மாற்று அணியை ஆறு குதிரைகள் பூட்டிய ரதம் அல்லது பத்து குதிரைகள் பூட்டிய தேர் என்றெல்லாம் அலங்கார வார்த்தைகளால் வர்ணிக்கலாம். ஆனால் அந்தக் குதிரைகள் ஒவ்வொன் றும் ஒவ்வொரு திசையில் நகரக்கூடியவை; எதிரெதிர் திசையில் ஓட விரும்புபவை; சில குதிரைகள் ரதத்துடன் இணைக்கப் படவில்லை. தவிரவும், ரதத்துக் கான சாரதி யார் என்பதும் தெரிய வில்லை. ஆனாலும் ரதத்தை நகர்த்திச் செல்வோம் என்கிறார்கள். அய்யோ பாவம், மக்கள்!